அத்தியாயம்-13
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாரதி அழைத்து சென்ற ஹோட்டலில் நெளிந்தபடி சரவணன் அமர்ந்திருந்தான்.
ஏசி ஹோட்டலில் பக்கத்து இருக்கைகளை பார்த்து பாரதியை கவனித்தான்.
“இந்த மாதிரி ஹோட்டல்னா டிரஸ்ஸாவது நல்லதா போட்டுட்டு வந்திருப்பேன். ஒரு மாதிரி இருக்குங்க” என்றான்.
“டிரஸ்ல என்னங்க இருக்கு. என்ன சாப்பிடறிங்க?” என்றாள். இதே கொஞ்ச நாட்களுக்கு முன்னே என்றால் இதுபோன்ற ஹோட்டலில் சரவணனை பார்த்திருந்தால், இங்கிருக்கும் மற்றவர் பார்வை சரவணன் மீது படிந்து கிசுகிசுக்கப்படுவது போல அவளுமே கிசுகிசுத்திருப்பாள்.
இன்று அனைத்தையும் புரிந்துக்கொண்டாள். தனக்கு ஆபத்து நேரும் போது சந்திக்கும் மனிதர்களையும், அவர்களின் பொருளாதார நிலைகளையும் வைத்து முடிவெடுக்கப் போவதில்லை. அவளுக்கு தேவைப்பட்ட நேரத்தில் வந்தவன் சரவணன். அந்த கோட்பாட்டில் மட்டும் சாப்பாட்டை ஆர்டர் தர கூறி கை அலம்ப சென்றாள்.
வெயிட்டர் பிரான் ப்ரைட் ரைஸ் முதலில் கொண்டு வந்து பாரதியிடம் கொடுக்கவும், “இவருக்கு?” என்று கேட்டாள்.
“வந்துட்டுயிருக்கு மேடம்” என்றார்.
மட்டன் பிரியாணி மீன் வறுவல், ஆம்லேட், என்று வந்தது, அதை பார்த்து சரவணன் வேகமாக அள்ளி சாப்பிட்டான்.
பிரான் பிரைட் ரைஸ் ஸ்பூனில் அள்ளி விழுங்கியவள், சரவணன் மட்டனை அள்ளி விழுங்கவும், சிரிப்புடன் வேடிக்கை பார்த்தவள் நினைவு வந்தவளாக, “சரவணன் உங்க போன் நம்பர் சொல்லுங்க நெய்பர்ஸா இருக்கோம் போன் நம்பர் கூட தெரியலை” என்று கேட்க, “நெய்பர்ஸ்னா?” என்று புரியாமல் கேட்டான்.
“பக்கத்து வீடுங்க” என்றதும், “ஓ.. 98*** ***** என்றதும் தன் அலைப்பேசியில் பதிவு செய்தாள்.
“நேத்தே கேட்கணும்னு நினைச்சேன்… அனிதா ஒரு மூனு நாலு நாளா ஒரு மாதிரி அமைதியா இருக்கா? ஏன்… ஏதாவது மார்க் கம்மியா வாங்கிட்டாளா?” என்று பாரதி கேட்டதும் சரவணன் யோசிப்பது போல இரண்டு நொடி செய்துவிட்டு, “இல்லையேங்க. அது தான் கிளாஸ்லயே நல்லா மார்க் வாங்கும்.” என்றான்.
“அப்பறம் ஏன் உம்முனு இருக்கா” என்று கேட்க “அம்மா ஏதாவது திட்டியிருக்கும்ங்க. நோட்டு புக்கு, பேனானு கேட்டுயிருக்கும். அத்தாண்ட துட்டு இருக்காது. உடனே வாயுக்கு வந்த மாதிரி கத்திருக்கும்.” என்றவன் தண்ணீரை குடிக்க, “சார் மூளை வறுவல்” என்று கொடுக்க பாரதியோ ‘ஆஹ்.. மூளையா?’ என்று எட்டி பார்த்தாள்.
இதுவரை மூளைவறுவலை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் ருசித்ததில்லை.
பெரும்பாலும் பாரதி நல்ல வேலை சம்பளம் என்று பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தாலும், அவளது குட்டி வயிற்றுக்கு ஒரு பிரைட் ரைஸ் அல்லது ஒரு ப்ரியாணியே வயிற்றை நிறைத்துவிடும். அதனால் மற்றவை வாங்க தயங்குவாள். தோழிகளோடு செல்லும் போது மட்டும் ஸ்டார்ட்டட் ஆர்டர் செய்வாள். அதிலும் சரவணன் முன்னே இருக்கின்ற ஒரே மீன் வறுவலை போல இருக்காது. பிஷ் பிங்கர் என்று ஆறு பீஸ் கொண்டதாக இருக்கும். அதனால் அதில் இரண்டு எடுப்பாள்.
அல்லது சிக்கன் லாலிபாப் அதுலும் ஆறு இருந்தாலும் இரண்டு பீஸ் எடுப்பாள். அதற்கே வயிறு நிறைந்திடும். இதில் ஐஸ்கிரீம் மட்டும் கூடீதலாக எடுத்துப்பாள்.
மூளை வறுவலையும் அசால்டாக வாயில் போட்டதும்,
“என் போன்ல இருந்து கால் பண்ணறேன். சேவ் பண்ணிக்கோங்க” என்று கூறினாள்.
சரவணன் சரியென்று கூறினான். “உங்களுக்கு வேற வேலை பார்க்க ஆசையில்லையா?” என்று கேட்டதும் சரவணனோ வாயில் சோற்றை அதக்கியபடி, “இந்த வேலைக்கு என்னங்க குறை? கவர்மெண்டு உத்யோகம், இப்ப வேற ஊதிய உயர்வு தந்திருக்காங்க.
எங்களுக்கு இலவசமா காலையில உணவு கொடுக்கறாங்க.
அனிதாவுக்கு எல்லாம் பீஸ் கம்மி தெரியுமா? பச் ஆனாலும் நடுவுல நடுவுல ஏதாவது கேட்டா கொஞ்சம் காசு கொடுக்க முடியாம நாக்கு தள்ளுது.
ஆனாங்க… அரசு அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்களின் கீழ் பாதுகாப்பு மற்றும் நலன்கள் எல்லாம் எங்களுக்கும் இருக்கு. பகுதிகளில் பி.எஃப். (PF) மற்றும் ஈ.எஸ்.ஐ (ESI) இதெல்லாம் கூட இருக்குங்க” என்றான்.
“இல்லை.. கொஞ்ச நாளைக்கு முன்ன ஏதோ பிரச்சனைனு கேள்விப்பட்டேன்” என்று கூறியபடி டிசு பேப்பரால் சாப்பிட்டு முடித்து ஒற்றி எடுத்து தண்ணீரை அருந்தினாள்.
“இருந்ததுங்க… எங்க அம்மா கூட அந்த கூட்டத்துல போய் பேசுச்சு.” என்றவன், குலத்தொழில் மாதிரி ஆகிடுச்சு. மாத்திக்க முடியலைங்க. அதோட… மாறவும் முடியலை.
எனக்கு இந்த குப்பையை அள்ளி சேகரிச்சு பெரிய லாரில கொட்டிட்டு வர்றது எல்லாம் கஷ்டமாவே இருக்காதுங்க. ஆனா ஜனங்க ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க. அதான் மனசுக்கு கஸ்டமாயிருந்தது.
என்னவோ குப்பைத்தொட்டிகிட்ட போறப்ப முகத்தை சுளிக்கும், சில அதிகப்பிடிச்சதுங்க கர்ச்சீப்பை மூக்குல வச்சிட்டு அந்த இடத்தை கடந்து போகும்.
ஏன்… அத்த அள்ளி கொட்டறோமே எங்களுக்கு நாறாது? இரண்டு நிமிஷம் ஆகுமா.. அந்த இடத்தை கடந்து போக? மூக்கை மூடாம தான் போனா என்ன?
இந்படியெல்லாம் யோசிச்சிருக்கேன். ஆனா மனுஷனோட உணர்வுனு ஒன்னு இருக்குங்க. குமட்டறப்ப தன்னால மூக்கை மூட தானே செய்யணும். எனக்கு இது தொழிலுனு ஆகிடுச்சு. நான் சகிச்சிக்கறேன். மத்தவங்களும் அப்படின் தான் இருக்கணும்னு சொல்ல முடியாதே. நான் என்ன கலெக்டரா?” என்று கூறியவன் முன் சிக்கன் பிரியாணியும், சிக்கன் சிக்ஸ்டிபையும் வைத்தார் பேரர்.
பாரதி டேபிள் மாறி வந்திருக்குமென மறுக்க பார்த்திட, சரவணனிடம், “வேற ஏதாவது வேண்டுமா?” என்று கேட்க, “ஏங்க… சிக்கன் பிரியாணியோட எனக்கு போதுங்க. உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? சோறு தம்மாதுண்டு சாப்பிட்டிங்க” என்று கேட்டான்.
“இ..இல்ல.. எனக்கு அதுவே வயிறு ஃபுல். எனக்கு ஒரு லெமன் ஜூஸ் போதும். உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்க, “அது ஒன்னுங்க” என்று பக்கத்து டேபிளை காட்டினான்.
“ஃபலூடா வா சார்?” என்றதும் “ஃபலூடா ஒன்னு லெமன் ஜூஸ் ஒன்னு” என்றாள்.
பேரர் சென்றதும் “இந்த ஹோட்டலுக்கு திரும்ப வருவோமோ மாட்டோமோ எதுக்கும் சிக்கன் மட்டன் இரண்டும் டேஸ்ட் பண்ணிட்டேங்க” என்று சாப்பிட்டான்.
பாரதியோ மென்னகைக்க, “ஏங்க கண்ணு வைக்கறிங்களா? என்னடா இவன் இவ்ளோ திங்கறானேனு? காலையில உங்க கூட வரணும்னு வேக வேகமா சாப்பிடாம பார்க்க வந்தேங்க. செம பசி. எப்பவும் வீட்ல கொஞ்சம் ஏதாவது சாப்பிடுவேன். இன்னிக்கு அதுவும் இல்லை. பேய் பசி பசிச்சிடுச்சு. நீங்க வேற சோகமா இருந்திங்க. அப்ப பசியே தெரியலை. ஹோட்டலுக்கு வந்ததும் தான் காலையில் சாப்பிடாதது நினைவு வந்தது, இதுல பிரியாணி வாசம் வேற பசியை அதிகரிச்சிடுச்சு.” என்றான்.
தனக்காக காலையில் உணவை கூட சாப்பிடாமல், மறந்து வந்திருப்பதால் சாப்பிட்டுள்ளானென அறிந்து, “சரவணன் இன்னொன்னு கூட வாங்கிக்கோங்க கூச்சப்படாதிங்க” என்றாள்.
“அய்யோ வேண்டாமுங்க இதுவே அதிகம்” என்றான்.
“அட ஏதாவது வேண்டுமின்னா வாங்கிக்கோங்க” என்றதும், தயங்கியபடி, “மட்டன் பிரியாணி ஒன்னு பார்சல் கிடைக்குமாங்க. இல்லை… அனிதாவுக்கும் அம்மாவுக்கும் தரலாம்னு” என்றான்.
பேரரிடம் இரண்டு பிரியாணி பார்சலும் ஆர்டர் தந்தாள்.
“இல்லைங்க ஒன்னு போதும்” என்றான்.
“இரண்டா வாங்கிக்கோங்களேன்.. நீங்க இரண்டே தாங்க.” என்றாள்.
“அய்யோ… வேண்டாங்க. இரண்டா வாங்கினா எங்கம்மா சந்தேகப்படும். ஒன்னுன்னா, ஒருத்தங்க கொடுத்தாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுவேன். அடிக்கடி யாராவது சாப்பாடு, ஏதாவது வாங்கி தருவாங்க. நானும் வாங்கிப்பேன். சில நேரம் டிரஸ் தருவாங்க.” என்று கூறிவிட்டு சிக்கன் சிக்ஸ்டிபைவ் சுவைத்தான்.
பாரதிக்கு மனம் ஏதோ பிசைந்தது. “அ…அது கஷ்டமாயிருக்காதா?” என்றாள்.
“இதுல என்னங்க கஷ்டம். அவங்களுக்கு வேண்டாம்னு கொடுப்பாங்க. எங்களுக்கு அது வேணும்னு இருக்கும். சொல்லப்போனா இந்த சட்டை கூட ஒருத்தங்க தந்தது.
சட்டைனு இல்லை… அவங்களுக்கு தேவையில்லாததுனு யார் எது கொடுத்து, உனக்கு வேண்டுமா தரட்டானு கேட்டா யோசிக்காம வாங்கிப்போம். சொன்னா நம்ப மாட்டிங்க… அது ஒரு வருஷம் இரண்டு வருஷம் உழைக்கும்னா பார்த்துக்கோங்க.
சில நேரம் ஷூ, ரெயின்கோட், தேவையில்லாத மரச்சாமான், சேர், சோபா இப்படி கூட தருவாங்க.” என்று கூறியவன் கையை கழுவிட்டு வந்துடறேங்க” என்று எழுந்தான்.
பாரதிக்கு சரவணன் பேச பேச பாவமாக இருந்தது. தனக்கு வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இல்லை. ரஞ்சித் செய்த எச்சை செயலை தவிர. ஒருவேளை வீட்டிலேயே முடங்கி போயிருந்தால் தன்னிலை தான் மோசமானதாக ஊரார் எல்லாம் பேசப்பட்டிருப்பார்கள்.
சரவணன் வாழ்வாதரம் எல்லாம் எதார்த்தமாக கேட்ட பாரதிக்கு மனம் தாளயியலவில்லை.
ஃபலூடா ஐஸ்கிரீம் வரவும், பார்சலும் கொண்டு வந்தனர். கூடவோ சாப்பிட்டதற்கான பில் பே செய்துவிட்டு, ஐஸ்ஸை சாப்பிட ஆரம்பித்தாள்.
“பார்சல் வந்துடுச்சா?” என்று வாங்கிக்கொண்டவன், பில் பே செய்ததை பார்த்து, “ரொம்ப செலவு வச்சிட்டேனா?” என்று கேட்டான்.
“சே சே… சாப்பிட தான் இங்க வந்தது. விலையெல்லாம் பார்த்து பயப்பட வேண்டாம்” என்றாள்.
“இந்தாங்க அனிதாவுக்கும் உங்க அம்மாவுக்கும் தாங்க” என்று நீட்டினாள்.
“முத முறை துட்டு அதிகமான ஹோட்டல்ல, அதுவும் தானமா இல்லாம, மிச்ச மீதி இல்லாம, புதுசா அவங்களுக்காகவே வாங்கி தந்திருக்கிங்க” என்றவன் வாங்கிக்கொண்டான்.
அதை சொன்னவனுக்கு வலிக்கவில்லையோ என்னவோ, பாரதியின் மென்னிதயம் வலித்தது.
இருவரம் ஹோட்டலில் இருந்து வெளிவர, “ஏங்க ஏங்க.. பஸ்ஸுங்க.” என்று கூற, “என்னங்க பார்க்கறிங்க. நம்ம வீட்டுக்கு பக்கத்தில நிற்கும்” என்று கூற காலியாக இருக்கவும் பாரதியும் ஏறினாள். இந்த பேருந்து எப்பவாது தான் வரும். ஆனால் வீட்டருகே போகும்.
காலி இருக்கை இருக்க பாரதி அமர்ந்தாள். சரவணனோ வேறுபக்கம் நின்றான்.
பாரதி அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டாள்.
சரவணனுக்கு ஏன் இந்த பொண்ணு திரும்பி பார்க்குத’ என்று குழம்ப, பாரதியிடமிருந்து அழைப்பு வந்தது.
“சரவணன் எனக்கு எங்க இறங்கணும்னு தெரியாது. புது ரூட்டா வேற இருக்கு” என்றாள்.
“ஓ… சாரிங்க.. நீங்க ஆட்டோவிலயே போய் பழகினவங்க. நான் தான் அவசரப்பட்டு…” என்று மன்னிப்பு வேண்டியவனிடம், “அய்யோ சரவணா… ஆபிஸுக்கு நான் தினமும் பஸ்ல தான் போறேன். அனிதா ஏறுற பஸ் ஸ்டாப்ல. பெர்சனலா என்பதால தான் கேப் ஆட்டோ. இந்த பஸ்ல இதுவரை ஏறினது இல்லை. அதான் எங்க இறங்கணும்னு கேட்டேன்.” என்றதும் இறங்காம் இடத்தை தெரிவித்தான்.
“ஓகே ஓகே. என் நம்பர் சேவ் பண்ணிக்கோங்க” என்று கூறி அணைத்தாள்.
சரவணன் அவனது போனில் ‘பாரதி’ என்று அவள் எண்ணை சேமித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi 👌👍😍
Super really a wonderful narration. U explained the common pain and discussing life style in very heart touching manner. While reading it is paining sis. Intresting sis.
Super super super super super super super super super super super super
Interesting
nice . avan saravana pesurathu ellam nijathula nadakurathu than avanga nilamai apadi atha keta namaku kastama irukum
Nice going
சூப்பர் எபி கா😍
💕💕💕💕💕💕