அத்தியாயம்-14
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஜெகனிடம் “கண்டிப்பா வந்துடுடா.” என்று கூற, “ஏன்டா கல்யாணமாகி விருந்துக்குக் கூப்பிட்டா வரலை. இப்ப சிஸ்டர் கன்சீவா இருக்காங்க. நாங்க தான்டா பலகாரம், சோறு செய்து வந்து பார்க்கணும். நீயென்ன ஆனிவர்சரி கொண்டாடப் போறேன் வீட்டுக்கு குடும்பத்தோட வாடான்னு வந்து நிற்குற?” என்று கேட்டான்.
“பாரும்மா… ஒரு பங்ஷன்னு கூப்பிட்டா வந்து கறிச்சோறை சாப்பிட்டு நண்பேன்டான்னு கட்டி பிடிச்சி போட்டோ எடுக்காம தொனதொனன்னு பேசறான்.” என்று ஜெகனின் துணைவி செல்வியிடம் புகார் வாசித்தான் யுகேந்திரன்.
இரண்டு வயது குழந்தையைத் தோளில் தூங்க வைத்த செல்வியோ, “அதெல்லாம் வராதடானு அடிச்சி துரத்தினாலும் நீங்க கூப்பிட்டா வருவார் அண்ணா.” என்று கூறினாள்.
யுகேந்திரனின் பள்ளி, கல்லூரி கால நண்பன் என்றால் அது ஜெகன் மட்டுமே. அப்படியிருக்க ஜெகனின் துணைவி தங்கையாகவும் அவர்கள் குழந்தைக்கு மாமாவாகவும் உரிமையாய், உறவாய், நட்பாய் இன்றுவரை தொடர்கின்றான்.
யுகேந்திரனோ, “அடிச்சி துரத்தினாலும் நீ தான் வேண்டும்னு சொல்லி விரும்பி வர்ற நட்பு ரேர்மா. அந்த விஷயத்துல ஜெகன் என் ஆருயிர் நண்பன்மா” என்று கூறினான்.
“டேய் டேய் நீ தங்கச்சியை நிஜமாவே இரண்டு தடவை அடிச்சிருக்க. அந்தபுள்ள அப்பயும் உன் கூடவே இருக்கு. ஆருயிர் நண்பன் மட்டுமில்லைடா. ஆருயிர் காதலியா மனைவியுமா ஜீவிதா கிடைச்சிட்டா. அதுக்குத் தானே குதியாட்டம் போடுற” என்றான் ஜெகன்.
“இப்படித் தான்மா எது பேசினாலும் என்னை ஜீவியோட கனெக்ட் பண்ணிடறான். அப்பறம் சிரிச்சா வெட்கப்படறேன்னு அதுக்கும் ஓட்டறான்” என்று ஜெகனை புகார் வாசித்தே வாசல் வரை வந்துவிட்டான் யுகேந்திரன்.
“உங்க பிரெண்ட் தானே அண்ணா. உங்களை ஓட்ட முடியும். வேறயாராவது உங்களை ஒன்னு சொல்ல முடியுமா? இல்லை சொல்ல தான் விடுவாரா?” என்று செல்வியும் பதில் தர, “அப்படிச் சொல்லுடி” என்று ஜெகன் தன் குழந்தையை வாங்கித் தோளில் மாற்றிக்கொண்டான்.
யுகேந்திரன் ஜெகனின் கையில் அவன் குழந்தை ஆல்யா பாப்பா இருக்க, இன்னும் ஐந்து மாதம் முடிவடைய, தன் கையிலும் தன் குழந்தை தவழும் என்று மகிழ்ச்சியாக “நேரத்துக்கு வந்துடுங்கம்மா” என்று கிளம்பினான்.
இருசக்கர வாகனம் அங்கிருந்து கிளம்பி, மாமனார் வீட்டுக்குப் பயணித்தான். மாமனார் வீட்டுக்கு போகும் வழியில் தான் ஜெகன் வீடு, அதனால் நண்பனிடம் நேரிலேயே குடும்பத்தோடு தன் முதல் வருட திருமண விழாவிற்கு அழைத்தான்.
மாமனாரிடமும் தங்கள் திருமண நாளுக்கு வந்துவிடக் கூற நினைத்தான்.
ஜீவிதாவுக்குத் தெரியாமல் ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக அத்தை மாமாவை வரச்சொல்வதற்குப் பைக்கை வாசலில் நிறுத்தினான்.
அங்கே ஏற்கனவே ஒரு வண்டியும் இரண்டு காலணிகளும் இருந்தது.
“யாருக்கு மக? எனக்கு ஒரு மக மட்டும் தான். மத்த எந்த நாயும் எனக்குப் பொண்ணு கிடையாது. எவனை நம்பி ஓடிப்போனியோ அவனைக் கூட்டிட்டு இந்த வீட்டை விட்டுக் கிளம்பு” என்று மாமனார் கதிரவன் குரல் உச்சஸ்தாதியில் கேட்டது.
“அப்பா.” என்று வினிதா குரல் கமறலாய் கேட்டது.
வினிதா… தனக்குப் பெண் பார்த்துப் பத்திரிக்கை வரை சென்று, அவள் காதலுடன் கரம் பற்றியவள் என்று எண்ணும் மனம். இன்றோ மாமாவின் மூத்த மகள். அவள் அவர்கள் அப்பா வீட்டிற்கு வந்திருக்கின்றாள்.
எதுவென்றாலும் யாரென்றாலும் இருந்து தொலையட்டுமெனத் தான் வந்த விஷயத்தைக் கூறிவிட்டு செல்ல முடிவெடுத்தான். “ஆங்… அத்தை… மாமா?” என்று வாசலில் கேட் திறக்கும் நேரம் குரல் கொடுத்து உள்ளே வந்தான் யுகேந்திரன்.
“அச்சோ.. மாப்பிள்ளை” என்று கதிரவன் பதறினார். ரேகாவும் “போச்சு போச்சு இப்ப தான் சின்னவ உண்டாயிருக்கா. கோபமெல்லாம் தணிந்து சுமூகமாக ஜீவிதாவை கவனிச்சார். இன்னிக்கு உன்னைப் பார்த்துட்டு அவளிடம் சண்டை வரப்போகுது. உன்னை யாரு இங்க வரச்சொன்னது.” என்று பயந்தார்.
வினிதா சந்திரனை பார்த்துவிட்டு மாமனாரிடம் திரும்பினான் யுகேந்திரன். அந்தப் பார்வையில் கோபமோ, பழிவெறியெல்லாம் இல்லை.
“என்ன மாப்பிள்ளை தனியா? பார்க்கணும்னு சொல்லிருந்தி வீட்டுக்கே வந்திருப்போமே” என்று வீட்டு ஹாலில் உட்கார கூறினார்.
ரேகா உடனடியாகப் பம்பரமாய்ச் சுழன்று குடிக்க எலுமிச்சை பழச்சாறை போட சென்றார்.
யுகேந்திரனுக்கே சங்கடமாக இருந்தது. இந்த வீட்டு பெரிய மாப்பிள்ளை சந்திரன் மகள் வினிதாவை, வாசல் திண்டில் நிற்க வைத்து இருக்கின்றனர்.
இங்க சின்ன மாப்பிள்ளையான தனக்கு வந்ததும் ஹாலில் அமர வைத்துப் பேனை போட்ட மாமனார், மாமியார் பழச்சாற்றைப் போட அடுப்படியில் சென்றுவிட்டார்.
கதிரவன் ரேகாவிற்கவோ வயிற்றில் புளியை கரைத்தது.
யுகேந்திரன் யோசனையைக் கலைக்கும் விதமாக, “‘த..தனியா வந்திருக்கிங்க, ஏதாவது…” என்று இழுத்தார். கதிரவனுக்குப் பயம் யுகேந்திரனுக்கு வினிதா இங்கு வந்துவிட்டது ஏற்கனவே தெரியும். வினிதாவிடம் சின்ன மகள் பேசியதற்குச் சண்டை பிடித்ததாக ஜீவிதா மனைவி ரேகாவிடம் உரைத்ததும் இவர் அறிவாரே.
“ஒன்னுமில்லை மாமா… சும்மா இந்தப்பக்கம் என் பிரெண்ட் ஜெகன் வீட்டுக்கு வந்தேன். நம்ம வீட்ல ஒரு விழா வைக்கலாம்னு. அதுக்கு அவனை நேர்ல கூப்பிட்டுட்டு அப்படியே உங்களை நேர்ல பார்க்க வந்தேன்” என்று கூறினான்.
ரேகா எலுமிச்சை சாறு பிழிந்து நன்னாரி சர்பத் கலந்து குளிர்ந்த நீரில் கலக்கி கொடுத்தார்.
அதனை மறுக்காமல் வாங்கிப் பருகினான் யுகேந்திரன்.
ரேகா பயத்தில் கையைப் பிசைந்து நின்றார்.
கதிரவனோ, “என்ன விழா? ஜீவிதாவுக்கு ஐந்தாம் மாதம் வளையல் போட்டு ஐந்து வகைச் சாதம் செய்திட்டோமே. அடுத்து ஏழாம் மாதம் வளைகாப்பு வைக்கணும். இப்ப என்ன விழா?” என்று மலங்க மலங்க விழித்தார்.
ஒருபக்கம் திண்டில் சந்திரன் வினிதா, வீட்டுக்குள் யுகேந்திரன் இருதலை கொல்லியாக மாமனார் கதிரவன்.
“அதுவொன்னுமில்லை மாமா. எனக்கும் ஜீவிதாவுக்கும் கல்யாணமாகி நாளை மறுநாள் பிறந்தா ஒரு வருடமாகப் போகுது.
பொதுவா கல்யாண நாளுக்கு, கோவிலுக்குப் போய்ச் சாமிக்கு கும்பிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டாடுவாங்க, கேக் கட் பண்ணாவாங்க, எங்கயாவது வெளியே சுத்தி பார்த்துக் கொண்டாட்டம் நடக்கும். ஜீவிதா பெட்ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காங்க இல்லையா. அதனால் வீட்ல விழாவா நடத்தலாம்னு இருக்கேன். அவளுக்குச் சர்பிரைஸா இருக்கட்டும். நீங்க அன்னைக்கு வீட்டுக்கு வந்துடுங்க. அங்க கறிச்சோறு சமைச்சிடுவோம். அதைச் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன். வேறொன்றுமில்லை மாமா.” என்று எலுமிச்சை பழச்சாறு குடித்த காலிடம்ளரை கீழே வைத்து எழுந்தான்.
“வந்ததும் போறிங்க. சாப்பிட்டு போகலாமே.” என்று ரேகா கேட்டார்.
“இன்னொரு நாள் பொறுமையான சூழ்நிலை அமையறப்ப வர்றேன் அத்தை” என்று நடையைக் கட்ட பார்த்தான்.
“மாப்பிள்ளை..” என்று குரல் தழுக்கக் கூப்பிட்டார்.
“சொல்லுங்க மாமா” என்று திரும்ப, “அவங்க வந்ததுக்கு எங்க மேல தப்பில்லை. நாங்க ஏதோ… ஏத்துக்கிட்டதா நினைச்சு ஜீவிதாவை கஷ்டப்படுத்தாதிங்க. அவ குழந்தையுண்டாகி இருக்கா” என்று பயத்துடன் பேசினார்.
யுகேந்திரன் தேள் போலப் பேச்சை இவர்களிடமே வீசியவன் தானோ?
“மாமா… ஜீவிதாவை நான் பேசியது கஷ்டப்படுத்தியதுக்கு முக்கியக் காரணம் வெளியே நிற்கறவங்க கிடையாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.
நான் நடந்துக்கிட்டதுக்கு ஜீவிதா மட்டும் தான் காரணம். ஆனா இப்ப ஜீவிதா மேல எந்தக் கோபமும் இல்லை. இனியும் வராது. அவளைக் கஷ்டப்படுத்த மாட்டேன். நீங்க என்னை நம்பலாம். பொண்ணைப் பெத்தவரா பதறாதிங்க.
இப்ப நீங்க வெளியே நிற்க வச்சது உங்க பொண்ணு. நீங்க எடுக்கற முடிவு நீங்க அனுபவிச்ச வலிக்கானது. அதுல என் தலையீடல் நிச்சயம் இருக்காது.
இவர்களாலால ஜீவிதாவையே உங்களையோ நான் ஏசமாட்டேன். வர்றேன் மாமா வர்றேன் அத்தை. பங்ஷனுக்கு வந்துடுங்க. ஜீவிதாவிடம் சொல்லாம வாங்க” என்று புறப்பட்டான்.
வெளியே வினிதா சந்திரனை கடந்து செல்லும் போது, போனை எடுத்து நம்பரை அழுத்தி காதில் பேசியபடி சென்றான். அங்கு இருவர் நிற்பதையே கவனிக்காதது போல நடந்து கொண்டான்.
வினிதாவும் குறுக்கே வரவில்லை. பேசவும் முயற்சிக்கவில்லை. சந்திரனோ மாமனாரிடம் பேச வர, கதிரவன் கதவை தாழிட்டவராக மூடினார்.
கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு வினிதா சந்திரன் கிளம்பினார்கள். அவர்களும் கல்யாண நாள் வருவதால் தாய் தந்தையரிடம் மன்னிப்பு கேட்டு பேசிவிட மாட்டார்களா என்ற எண்ணத்தில் வந்தார்கள். ஆனால் கதிரவன் கதவை திறக்கவேயில்லை. அவர்கள் ஊரில் அடைந்த அவமானம் அப்படி. எங்கு சென்றாலும் உங்க பெரிய மக காதல் கல்யாணமாமே என்ற வார்த்தை தான் முதலில் வருகின்றது. இதில் தங்கள் இருப்பது தெரிந்தே, மகள் ஓடி சென்ற கதையைக் கதைகதையாகப் பேசுவது வலியின் உச்சம். இதை அனுபவித்தவர்களுக்கே புரியும்.
—
யுகேந்திரன் வீட்டில் தாய் தந்தையிடம் முதல் வருட திருமண நாளை கொண்டாடுவதைப் பற்றிக் கூறினான்.
“எப்பவும் நாம அங்க போவோம். இப்ப அவங்க நம்ம வீட்டுக்கு வந்து விழாவா கொண்டாடினா நல்லா தான் இருக்கும்.” என்று தட்சிணாமூர்த்திக் கூறவும், ”அத்தை மாமா வீட்டுக்குப் போய்ச் சொல்லிட்டேன். ஜெகன் ஃபேமிலி வருவாங்கப்பா. மத்தபடி விழாவுக்கு வர்றவங்களுக்கான சாப்பாடு எல்லாம் நம்ம வீட்ல தான்.
உப்பு புளி காரம் எல்லாம் குறைச்சலா, அதே நேரம் ருசியா பார்த்துப் பக்குவமா பண்ணுங்கம்மா” என்று உமாதேவியிடம் கூறினான் யுகேந்திரன்.
“எனக்குத் தெரியாதா ” என்று மகனை நொடித்துச் சென்றார்.
அன்னை தலை மறையவும், மாமா வீட்ல வினிதா சந்திரன் வாசல் திண்டுல இருந்தாங்க. மாமா வீட்டுக்குள்ள சேர்க்கலை.” என்று அங்கு அவரிடம் பேசியதையும் உரைத்தான்.
“நீ சின்னப் பொண்ணு ஜீவிதாவை கட்டி கொடுக்கக் கதிரவனிடம் வாயை திறந்து கேட்டப்பவே நினைச்சேன். அந்தப் பொண்ணை எங்கயாவது பார்த்து பிடிச்சிருக்குமோனு. இப்படி விளையாட்டுக்கு பேசியதை எல்லாம் மனசுல வச்சிட்டு அவளைக் கஷ்டப்படுத்தியிருக்க? கொஞ்சம் கூட முதிர்ச்சியே இல்லையே… இந்த லட்சணத்துல உனக்குக் குழந்தை வரப்போகுது.” என்று தட்சிணாமூர்த்தி உச்சிக்கொட்டினார்.
“அப்பா… அந்த நேரம் வினிதா எழுதி வச்ச லெட்டரால் கல்யாணம் தடையாகவும், என் பக்கத்துல இருந்து யோசிங்க. எனக்கு அது அவமானம், அசிங்கம், பெரிய அடி.
இரண்டும் சேர்ந்து மனசுல வலி தர, கொஞ்சம் சில்லறை தனமாக மூனு நாள் நடந்துட்டேன். அம்மா அடிச்சுச் சொன்னதும் அப்படியே ஜீவிதாவிடம் குத்தி பேசறதை நிறுத்திட்டேன்ல.
ஜீவிதா சின்னப் பிள்ளை, என்னவோ சொல்லிட்டு போச்சுன்னு கடந்துட்டு தானே இருக்கேன். நீங்களே தாத்தா ஏதோ வார்த்தைக்குச் சொன்னதைப் பிடிச்சிட்டு அத்தையிடம் பேசாம எத்தனை வருஷம் வீம்பா இருந்திங்க.
அதுவும் சின்னப்பிள்ளை தனமா தானே இருந்தது. நீங்க தாத்தா இறந்தப்பிறகு எப்பயோ பேசி உங்க தங்கையிடம் பாசத்தைக் கொட்டியிருந்தா இந்த நிலையே இல்லை. அப்படிப் பார்த்தா நீங்களும் மெச்சூரிட்டியில்லாம நடந்திங்க” என்று வாறினான்.
“ஏலேய்… அப்பனுக்கே அறிவில்லைன்னு சொல்லறல? இரு என் பேரன் வந்ததும் உன் முகத்துல ஒன்னுக்கு அடிக்க வைக்கிறேன்.” என்றார். அதில் யுகேந்திரன் சிரிப்பை உதிர்த்து, “ஆங்..பேரனா… இல்லைவே இல்லை. உங்க பேத்தி வருவா… உங்க நரைச்ச மீசையைப் பிடுங்கி காத்துல ஊதி விளையாடுவா.” என்று பேசினார்.
“முதல்ல பையன் வரணும்ல” என்று கூறவும் “முதல்ல பொண்ணுப்பா” என்று வீம்பு பிடித்தான் யுகேந்திரன்.
அப்பாவும் மகனும் செய்த அலைப்பறையில் உமாதேவி தன் மருமகளிடம் வந்து, உரைத்தார்.
கணவரும் மாமாவும் இப்படிப் பேசுவது எல்லாம் பார்த்ததில்லை. பெரும்பாலும் தட்சிணாமூர்த்திக் கெஸ்ட் ரோல். நாட்டாமை படத்தில் வரும் பெரிய சரத்குமாரை போல வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அந்த நேரம் அமைதியும் பவ்வியமாக வீடு காட்சியளிக்கும்.
“என் பையனுக்குப் பொண்ணு தான் வேண்டும்னு வாய் திறந்து சொல்லிட்டான். உனக்கு எந்தக் குழந்தை பிடிக்கும் என்று உமாதேவி கேட்க, வயிற்றில் கையை வைத்து, “பையன் வேண்டும் இவரை மாதிரியே கண்ணை உருட்டி நெஞ்சை நிமிர்த்தி, குரல் உசத்தி, அதட்டி, என் பையன் உங்க பையனை அடக்கி வைக்கணும்” என்று கூற உமாதேவியோ வாயை பிளந்தார்.
“என் பையனை அடக்கி வைக்க, உன் குழந்தையைத் தயார் படுத்துற? அதுசரி.. இந்த விஷயம் என் பையனுக்குத் தெரியுமா? ம்ம்கூம் தெரியாம பார்த்துக்கோ” என்று சிரித்தார்.
-தொடரும்.

Wow super super. Intresting
உயிரில் உறைந்தவள் நீயடி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 14)
சூப்பர், யுகேந்திரனை அடக்க யுகேந்திரனுக்கு எதிரா ஆளை படைக்கப் போறாளா..
அதான் சரி.
பெத்தவங்க மனசு பித்து, பிள்ளைங்க மனசு கல்லுங்கிற மாதிரி தான் இந்த காலத்து பிள்ளைங்க அரைகுறையா காதல் கல்யாணம் பண்ணி, அதற்கப்புறம் அம்மா அப்பா காலடியை சரணடையறாங்க. நல்லா தெரிஞ்சு வைச்சிட்டிருக்காங்க, ஏமாந்த இளிச்சவாய் அவங்கத்தான்னு. பொறுமை என்கிறதே சுத்தமா கிடையாது போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting
Apdi podu
Interesting ah pothu bore ae adikala