Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-3

58 / 100 SEO Score

அத்தியாயம்-3

 

இன்று இந்த நேரம் சாரா அழுதால், வெளியே இருக்கும் தன் பெற்றவர்கள் கூட தன்னை தான் திட்டுவார்கள். ஏதோ பழைய காதலை மனதில் வைத்து சாராவை அழவைப்பதாக கூறுவார்கள். ஏற்கனவே தாய் தந்தைக்கு துகிரா வந்து சென்றது பிடிக்கவில்லை.

இதில் மெர்ஸி வேறு, என்னை உண்டில்லை என்று கத்துவாள். போதாத குறைக்கு, மேத்யூ அவன் தங்கை அழுதால் அவன் மனம் தாங்குமா?

 

இந்த இரண்டு கல்யாணமும் ஒருவரை ஒருவர் பாதிக்கும் என்பதால் சாராவை அழுகையை நிறுத்தி உறங்க கூறினான்.

 

அவளும் பயத்தில் இருந்தது போல தெரிய உடனடியாக உடலை குறுக்கி படுத்துக்கொண்டாள்.

 

சாரா படுத்தது அமைதியாகவும், சார்லஸ் நிம்மதியானான்.

 

‘உண்மையிலேயே காலையில நல்லா பேசி அரட்டை அடிச்சி, ஜாலியா இருந்தா. இப்ப என்னாச்சு? ஒருவேளை முதலிரவு என்றதும் பயமா? சில பெண்களுக்கு முதலிரவில் ஆண்களிடம் தன்னை இழப்பதையோ, அல்லது அவனிடம் உடைகள் களைந்து நிற்கவோ அருவருப்பாக இருக்க, நெருக்கத்தை விரும்பமாட்டார்கள்.

 

ஆனால் சாராவை கண்டால் அதற்கு அழும் குழந்தை போலவும் தெரியவில்லை. தன்னை அந்தளவு நேசிப்பதை வெளிப்படையாகவே காட்டியிருந்தாள்.

ஏதோவொரு புதிர் ஒளிந்திருப்பதை சந்தேகிக்க முடிந்தது.

 

மெர்ஸி மேத்யூ குடும்பத்தை பற்றி தெரிவிக்க வருவாள். அப்பொழுது எல்லாம் க்ளினிக்கில் பிஸியாக உள்ளதாக உலாத்தியது தவறோ?!

 

இன்று சாராவின் வீட்டு சூழலே தெரியாமால், சாராவை பற்றி தெரியாமல் திருமண பந்தத்தில் இணைந்து மணந்து, இரவில் விழித்திருக்கின்றேன்.

 

ஒருவிதத்தில் சாராவிடம் பேசி பழகி மனதை திறந்தப்பின், மற்ற இந்த முதலிரவுக்கு அணுகுவது சரியாக இருக்கும். இன்று உறங்குவதே நல்லது. காலையில் பேசிப்போமென பஞ்சு மெத்தையில் உறங்க முயன்றான்.

 

நாளெல்லாம் ஓடியாடி நடந்ததில் உறக்கம் எளிதானது.

 

இரவில் ஒரு முறை உறக்கம் களையும். ஆனால் இன்றோ அப்படிக்கூட ஆகவில்லை.

 

ஆழ்ந்த உறக்கம்.

 

சாரா தான் நள்ளிரவில் எழுந்து, இடத்தை கவனித்தாள்.

அங்கிருந்த பால் ஆறியிருந்தது.

சார்லஸும் பாலை அருந்தாமல் இருப்பதை கவனித்தாள்.

 

தண்ணீர் தாகமெடுக்க, பாலை வீணாக்காமல் குடித்தாள்.

அதன்பின் சார்லஸை பார்த்தாள். அவனோ நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பதை கண்டாள்.

 

அவனாக பேச வந்து, தான் பயந்து நின்றது நினைவில் வந்தது.

சாராவுக்கு தான் நடந்துக்கொண்ட முறை தவறென புரிந்தது.

 

‘சார்லஸிடம் அழுது அசிங்கமா நின்றுட்டேன். பச் நிதானமா பேசியிருக்கலாம். ஆனா அவரிடம் பேச பயமாயிருக்கு?’ என்று மனதோடு உரைத்திட, ‘உனக்கா பயம் என்றது மனசாட்சி.

 

சீரான மூச்சு காற்றால், நெஞ்சு மேலொழும்பி சார்லஸ் சுவாசிப்பதை கண்டவள், இரண்டு நொடி ரசித்து பார்த்தாள். தானாக அவளுமே உறங்கி வழிய, சார்லஸ் அருகே கட்டிக்கொண்டாள்.

 

அதிகாலை எழுந்தப்பொழுது சார்லஸ் அங்கிருந்த சோபாவில் படுத்திருந்தான்.

 

சாராவுக்கு வந்ததே கோபம், அங்கே குடிக்க வைத்த தண்ணீர் ஜக்கை எடுத்து அவன் மீது ஊற்றினாள்.

விழுந்தடித்து சார்லஸ் எழுந்து பார்வையிட்டான்.

சாத்தான் புகுந்த உடலாக, சாரா புஸுபுஸுவென கோபத்துடன் தண்ணீரை ஊற்றி நின்ற கோலம் கண்டான்.

 

“எதுக்கு இப்படி தண்ணி ஊத்தின?” என்றான்.

 

“எங்கிள் நான் இவ்வட கட்டிலில் கிடந்துறங்க ஆலம் எல்லாம் அலங்கரிச்சு. டாக்டர் சாரே பன்னா சோபாவில் கிடந்துறங்கில்? யான் இப்படி தான் செய்யும்” என்றாள்.

 

சார்லஸ் முகத்தில் வழிந்த நீரை துண்டால் துடைத்து, “ஓ…. இந்த கட்டில் அலங்காரம் எல்லாம் உன் கண்ணுக்கு இப்ப தான் தெரியுதா? நேத்து உன்கிட்ட பேசலாம்னு வந்தா அழுதுட்டே தூங்க ஓடிட்ட.

நேத்து காலையிலயிருந்து என்னை முழுங்கறாப்ள பார்த்துட்டு, சடனா நைட்டு மட்டும் மேடத்தோட உடம்புல சாத்தான் புகுந்துடுச்சா. என்னவோ பதறிட்டு படுத்த. நீ அழுதுட்டு இருந்த நான் அப்ப கூட இதே மெத்தையில தான் தூங்கினேன்.

எங்க சோபாவுல படுத்தா முன்னால் காதலி, பின்னால் காதலினு பேசுவனு அமைதியா காலையில பார்த்துக்கலாம்னு தூங்கினேன்.

நீ தான் நடுராத்திரி பக்கத்துல படுத்து உன் காலை வேற மேலை போட்டு, கட்டிப்பிடிச்சு படுத்த.

எனக்கு…. எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி சிலிர்த்திடுச்சு. அதான் சோபாவுல படுத்தேன்.

நீ பாட்டுக்கு இப்ப தண்ணி ஊத்தினா என்ன அர்த்தம்? ஆமா… எதுக்கு நைட்டு அழுத?” என்று கேட்டான்.

 

சாரா சிலையாக நின்றிட, பார்வையை அங்கும் இங்கும் உருட்டினாள். ”எனிக்கு பல்லு தேய்ச்சு சாயா குடிக்கணும்.” என்று இடத்தை விட்டு நழுவினாள்.

 

சார்லஸ் சாராவை நிறுத்தி எந்த கேள்வியும் கேட்கவில்லை. எழுந்ததும் நிற்க வைத்து கேள்வியில் வதைக்க, இதற்கான நாளில்லை என்று அவனுமே காலை கடமைகளை கவனிக்க சென்றான்.‌

 

டூத்பேஸ்ட் பிரஷ் என்று தன்னை கேள்வி கேட்காமல் சென்றவனை வாயில் பிரஷை வைத்து எட்டிப் பார்த்தாள்‌ சாரா. சார்லஸின் இந்த அமைதி கூட பிடித்திருக்க சந்தோஷமாக குளித்து முடித்து தயாரானாள்.

 

சாரா வெளியே வந்ததும் அவள் தாயார், மரியா மகளிடம் வந்து நின்றார்.

காதில் கிசுகிசுக்க, சாரா சலித்துக் கொண்டு நழுவ முயன்றாள்.

 

மெர்ஸியும் குளித்து முடித்து வந்து நிற்க, முகெல்லாம் ஒருவிதமலர்ச்சி.

 

சாப்பிட அமரும் போது உணவுமேஜையில் இறைவனுக்கு வேண்டிவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.

மேத்யூ மெர்ஸி இருவருமே அன்னியோன்யமா ஜோடியாக பரிமாறிக் கொண்டார்கள். மரியா அந்தோனி கூட சாராவை பார்த்து பார்த்து விழித்து, சாப்பிட்டார்கள்.

 

சார்லஸ் சாப்பிடும் பொழுது சாராவை காண நேற்றைய குறும்புத்தனத்துடன் இருந்தாள்.

 

மரியா தான் பயந்தது போல இருந்தார். நிர்மலாவிடம் “பரோட்டா இறைச்சி வேண்டுமென்று சார்லஸ் விரும்பி கேட்டு சாப்பிட்டான்.

 

“கிரேஸுக்கும் பரோட்டா இறைச்சின்னா இஷ்டமானு நிங்களுக்கும் அது இஷ்டமோ?” என்று சாரா கேட்டாள்.

 

மரியாவோ “சாரா கிரேஸை கீறிச்சு சம்சாரிக்கிறது சரியல்லோனு நின்னோட நான் பறைஞ்சது.

நீ வரேனோடு நீ எந்தனு சம்சாரிக்கன்? நின்ட பக்ஷனை கழிச்சு” என்று அதட்டினார்.

 

மேத்யூவோ மெர்ஸியை பார்த்து, ‘சொன்னேன்ல?’ என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.

 

சாரா அமைதியாக முகத்தை வைத்து சாப்பிட, சார்லஸ் அவளது வாடிய முகத்தை கண்டு, “கிரேஸ் யாரு?” என்றான்.

 

சாரா உடனடியாக, “கிரேஸும் நானும் இரட்ட சகோதரியானோ” என்றாள்.

 

சார்லஸோ சாப்பிட்டவன், கையை அப்படியே வைத்து, “மேத்யூ மட்டும் தான் சிப்ளிங்னு சொன்னாங்க?” என்று மேத்யூவையும் அந்தோனி மரியாவையும் கண்டான்.

 

அந்தோனி மரியா வாய் திறக்கும் நேரம், மேத்யூவோ “கிரேஸுக்கு பத்து வயசு ஆகறப்ப, ஒரு விபத்துல இறந்துட்டா.

கிரேஸும் சாராவும் ரொம்ப க்ளோஸ். அதனால சாராவுக்கு கிரேஸ்னா ரொம்ப இஷ்டம். சில நேரம் கிரேஸ் பத்தியே நிறைய பேசுவா. நீங்க அதை மைண்ட் பண்ணிக்காதிங்க” என்றார்.

 

சார்லஸோ சாராவை காண அவளோ உணவை துழாவினாள். முகமும் சோகத்தில் வீழ்ந்திருக்க, மரியா வேறு மகளை அதட்டி உருட்டி சாப்பிட சொல்வதை கண்டான்.

 

“மேத்யூ பத்து வயசு வரை அப்ப சாரா கூட கிரேஸ் இருந்திருக்காங்களா?” என்று கேட்க, “ஒட்டி பிறக்காத இரட்டையர்கள். எப்பவும் இரண்டு பேரா தான் இருப்பாங்க, விளையாடுவாங்க.” என்று மேத்யூ கூறிவிட்டு மெர்ஸியை பார்த்தான்.

 

மெர்ஸியோ “சார்லஸ்.. இருக்கறவங்களை பத்தி பேசு. சாப்பிடு” என்று கூறவும், “சாரி” என்று பரோட்டாவை சுவைத்தான்.

 

சாரா சோகமாய் விழுங்குவதை கண்டான். நிர்மலாவோ மரியத்திடம் வேறு விஷயம் பேசினார்கள். கல்யாண சீர்வரிசை எல்லாம் பிடித்ததா என்று மாறி மாறி கேட்டுக்கொண்டார்கள். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு குறையில்லையே என்று இருதரப்பிலும் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

 

பொதுவாக ஒரு திருமண வைபோகத்திற்கே உறவுகளில் சிலர் என்னை கவனிக்கவில்லை உன்னை கவனிக்கவில்லை என்று சண்டை வந்து பேச்சு நிற்கும். இங்கே இரண்டு திருமணம் என்பதால் நிலவரத்தை இருதரப்பிலும் கேட்டுக் கொண்டார்கள்.

மேத்யூ நண்பர்களுக்கு மட்டும் மதுபான பார்ட்டி இல்லாது போனது வருத்தமென்று பேச்சு ஓடியது.

 

சாரா சத்தமின்றி சாப்பிட்டு அறைக்கு செல்ல, சார்லஸும் புது மனைவியை தேடி ஓடினான்.

 

மெர்ஸியோ அண்ணனாக சாராவை தேடி போனதில் சந்தோஷம் அடைந்தாள்.

 

அறைக்கு வந்த சார்லஸோ “ஏ.. ஹாய்.. என்ன சிஸ்டர் நினைவா?” என்று கேட்க, சாரா அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்து விழியை தாழ்த்திக் கொண்டாள்.

 

“ரியலி சாரி… நீயா கிரேஸ் என்றதும் யாரு என்னனு தெரிந்துக்க நினைச்சேன்.

அதர்வைஸ்… எனக்கு உங்க குடும்பத்துல உன்னை உங்க அப்பா அம்மாவை மேத்யூவை  தவிர யாரையும் தெரியாது. தெரிந்துக்கவும் முன்ன ஆசைப்படலை.

இப்ப…. நினைச்சா… முதல்லயே பேசியிருக்கணுமோனு லேசா கில்டி பீல்லாகுது.

பார்றேன்…. நீ மலையாளம் பேசற. நான் தமிழ் பேசறேன். உனக்கு நான் பேசறது புரிதானு தெரியலை. எனக்கு நீ பேசறது கொஞ்சம் கொஞ்சம் புரிது. ஆனா… லைப் லாங்… எப்படி ஹாண்டில் பண்ணுவேன்னு மலைப்பா இருக்கு.” என்று பேசினான்.

 

சாராவோ ‘இதுக்கே கில்டி பீலிங்கா? நான் எல்லாம் அப்ப எதுவும் சொல்லாம கமுக்குனிமா இருக்கேனே’ என்பதை மலையாளத்தில் நினைத்தாள்.

 

“சாரா… நான்.‌‌ பேசறது புரிதா?” என்றான்.

 

சாராவோ நினைவிலிருந்து  கலைந்து, தலையை ஆட்டினாள்.

 

“எனக்கு நிங்கள் சம்சாரிப்பது விளங்கும். உங்களுக்கு தான்… என்னோட சம்சாரிப்பது கஷ்டமாயி” என்றாள்.

 

லேசாக முறுவலித்து, “பழகிக்க வேண்டியது தான்.” என்றான்.

 

சாரா கையை பிசைந்து நிற்க, “நேத்து ஏன் அப்சட் ஆன? இல்லை… ஆக்சுவலி… இந்த கல்யாணத்துல என்னை விட நீ ரொம்ப ஆர்வமா இருந்த. ஆனா நைட்டு சடனா உம்முனு மாறின. பிசிக்கலா ஏதாவது மூவ் பண்ணிடுவேன்னு பயந்துட்டியா?” என்று கேட்க, இல்லை என்று கூற வந்தாள். ஆனால் இல்லைன்னா வேற காரணம் என்று சார்லஸ் கேட்டால்…

அதற்கு சார்லஸ் கூறியதற்கே பயந்ததாக கூறிவிட்டால் தன்னிடம் கேள்வித்துளைகள் வராதென எண்ணி ஆமென்று தலையாட்டினாள்.

 

“அதெல்லாம் மனசு விட்டு பழகினப்பிறகு மத்ததை பார்த்துக்கலாம். சோ அந்த பயம் உனக்கு வேண்டாம்.” என்று கூறியவன், அப்பாடா என்ற தப்பித்த உணர்வை சாராவால் கணிக்க முடிந்தது.

 

‘என்னிவிட டாக்டர் சாருக்கு முதலிரவுன்ன பயமுன்டோ?’ என்று சாரா கமுக்கமாய் சார்லஸை ஏறிட்டாள்.

 

சார்லஸ் ஓரளவு நல்ல உயரம், நிறமும் கூட, ஆளும் அதிகம் சதைப்போடாத உடல். அடிக்கடி தவிர்க்கமுடியாத இத்திருமணத்தால், இன்னமும் தள்ளி செல்ல முயல்கின்றார். பாவம், கர்த்தர் முன்னே மணமக்களாய் ஆசிர்வதிக்கப்பட்டப்பின், இனி எங்கும் ஓடமுடியாததை இந்த டாக்டருக்கு எப்படி புரியவைப்பது? சில நேரம் சார்லஸ் தப்பித்தோம் பிழைத்தோமென நழுவுவதை காண நன்றாக இருக்கவும் புன்னகை பூத்தாள் சாரா.

 

-தொடரும்.

 

 

 

1 thought on “பிரியமானவரே என் தேவதூதனே-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!