அத்தியாயம்-5
அந்தோனியோ “மாப்பிள்ளை முதலில் வயிறு நிரம்ப சாப்பிட வாங்க. பின்னர் புத்தகம் பார்க்கலாம்” என்று அழைக்க, சார்லஸ் எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு மரியாதைக்கு வருவதாக கூறினான்.
அதனால் சாரா விழித்தது, தடுமாறி நின்ற கோலமெல்லாம், சார்லஸ் கவனத்தில் பதியவில்லை.
சாரா வீட்டுக்குள்ளே ஒரு விதமான மணக்கும் சமையல் வாசனை.
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, மசாலா… கேரள கிறிஸ்டியன் விருந்தென தேங்காய் மணமே அவ்விடத்தில் மெஜாரிட்டி கூறியது.
நீண்ட டைனிங் மேசையில் தலை வாழை இலை நீளமாக போடப்பட்டிருந்தது. சார்லஸ் அமர்ந்ததும்,
மரியம் அவராக வந்து பரிமாற ஆரம்பித்தார்.
கேரள மட்ட ரைஸ், அதன் பக்கத்தில் நெய் ஒரு சொட்டு,
மீன் மொய்லி மற்றும் தேங்காய் பால் வாசனை கிளம்பியது
சிக்கன் ஸ்ட்யூவின் மிளகு, கிராம்பு மணம், பீஃப் உலர்த்தியது. கருமையாக வறுத்துஅவியல்
தோரன், அச்சார் பக்கத்தில்
அப்பம் கப்ப (மரவள்ளி) என்று வரிசையிட்டு இருந்தது. கடைசியாக பால், நெய், முந்திரி மணம் வந்த பாயசம் வேறு.
வீட்டில் இருந்தவர் அனைவரும் அமர்ந்ததும், அந்தோனி மெதுவாக பிரேயர் செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களும் அவருடன் இணைந்து பிரேயர் செய்ய தலை குனிந்தனர்.
“கத்தரே… இன்று இந்த சந்தோஷ நாளில், இரண்டு குடும்பங்களையும் ஒன்றாக்கினதற்கு நன்றி.
இந்த உணவை ஆசீர்வதித்து,
இவர்கள் வாழ்கையை உமது கையிலே ஒப்படைக்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமேன்.” என்று சிறுவுரையோடு முடித்தார். மற்றவர்களும்
“ஆமேன்” என்று ஒரே குரலில் உரைத்தார்கள்.
உணவின் நடுவில்
சார்லஸ் சாப்பிடும் விதத்தை கவனித்தார் மரியம்மா.
“மாப்பிள்ளே… இன்னும் கொஞ்சம்” என்று தட்டில் மீண்டும் பரிமாறினார். சார்லஸிற்கு மேத்யூ வீட்டில் சாராவை தவிர மற்றவர்கள் தமிழிலும் பேசுவதை கவனித்தான்.
“இந்த வீட்ல சாராவுக்கு மட்டும் தான் தமிழ் தகராறா?” என்று கேட்க, மரியம் ஆமென்றாள்ர். சாரா பதிலேதும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள். சார்லஸ் அவளை பார்த்தான். அவள் சாப்பிடும் போது கூட, அவள் மனம் வேறு எங்கோ இருந்தது.
ஒருவேளை தங்களுக்குள் இந்த மொழி பிரச்சனை வேறு, மனம் விட்டு பேசாமல் தடுக்கின்றதோ என்று நினைத்தான்.
மேத்யூவும் மெர்ஸியும்
சின்ன சின்ன சிரிப்போடு ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டார்கள்.
அதை பார்த்த சார்லஸ்
மீண்டும் சாராவை பார்த்தான்.
‘இவளுக்கும் இப்படியொரு நெருக்கம் வேண்டாமா…?’
என்று மனசுக்குள் தோன்றியது.
உணவு முடிந்ததும், மெர்ஸியை மேத்யூ வீட்டில் விட்டு நிர்மலா அறிவுரையை அள்ளி தெளித்து எல்லோரும் கிளம்பினார்கள்
காரில் இருந்து ஏறும் முன்
மெர்ஸி தன் அண்ணன் சார்லஸை அழைத்தாள்.
“அண்ணா” சார்லஸ் திரும்பி பார்த்தான்.
அவள் கண்களில் நீர் மிதந்தது.
“நீ ஹேப்பியா இருக்கணும்.
சாராவை நல்லா பார்த்துக்கணும். நிறைய அட்வைஸ் உனக்கு பண்ணணும்னு மனசுல ஓடுது. ஆனா எங்கண்ணா புத்திசாலி டாக்டர். நீயாவே எதையும் புரிந்து நடந்துப்பனு நினைக்கறேன்.” என்றாள் மெர்ஸி. சார்லஸ் துகிராவிற்கே தேவையான அட்வைஸ் கூறிய ஆள். அதனால் சாராவை புரிந்து நடக்க, பேசுவதாக எண்ணி சிரித்தான்.
மெர்ஸி அப்பொழுதும் தடுமாறி நின்று, மெல்ல சொன்னாள்.
“பைபிள்ல சொல்லியிருக்கு Love is patient, love is kind. -1 Corinthians 13:4)
அதுபோல.. நீங்க இருவரும் பொறுமையா, அன்பா வாழணும் அண்ணா” என்றாள்.
அதற்கும் சார்லஸ் சிரித்தான். அவள் தலையை தடவி, “நீ முதல்ல உன் வாழ்க்கையை பார்த்துக்கோ. நான் பார்த்துக்கறேன்” என்றபடி வாக்கு தந்தான்.
மெர்ஸி சாராவை பார்த்தாள். “ஏய் சாரா… கர்த்தர் உங்க வாழ்க்கையை ஆசீர்வதிப்பார் Therefore what God has joined together, let no one separate. (Matthew 19:6) நீங்க இருவரும் நல்லா வாழணும்” என்று கூற
சாரா மெதுவாக தலையசைத்தாள்.
அந்த வார்த்தைகள் அவள் மனதில் பதிந்தது.
மேத்யூ மெர்ஸியின் கையை பிடித்தான். சார்லஸ் மெர்ஸியை போல எதுவும் அறிவுரை பேச்சு இல்லை. மாறாக ஏற்கனவே உனக்கு எல்லாம் அம்மா அப்பா நான் சொல்லியிருக்கோம். உன் வாழ்க்கையை நீயா சிக்கலாக்கிக்காத’ என்ற மறைமுக பேச்சு மட்டும் இருந்தது.
மர்யம் அந்தோனி கூட கட்டிப்பிடித்து நின்றனரே தவிர வெளிப்படையாக எதையும் உரைக்கவில்லை.
சார்லஸ் காரில் ஏறும்போது,
ஒரு முறை திரும்பி பார்த்தான். தங்கை மெர்ஸி சிரித்துக்கொண்டே கையை அசைத்தாள். அவளுக்காக தான் தனது திருமணமும். ஆனால் இன்று சாராவிற்காக யோசிக்கும் அளவிற்கு மனம் பண்பட்டதை கண்டு வியந்தான்.
கார் நகரவும் சாரா ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
அவள் முகம் அமைதியாக இருந்தாலும், அந்த God has joined together என்ற வார்த்தை அவள் உள்ளே ஏதோ ஒன்றை கிளறியது.
வரும் போது தன்னருகே மெர்ஸி மேத்யூ வந்திருக்க, செல்லும் பொழுது சார்லஸ் நிர்மலா அத்தை இருப்பதை கூட புத்திக்கு உதிக்கவில்லை.
சார்லஸோ அன்னை இடது புறமிருக்க, வலது புறமுள்ள சாராவை அடிக்கடி கவனித்தான்.
சாராவோ எங்கும் பசுமையாக ஓங்கி வளர்ந்த மரத்தையும் செடி கொடிகளையும் வேடிக்கை பார்த்து வந்தாள்.
ஆங்காங்கோ நீரோட்டம் அருவி என்றதை கண்டு முகம் மலர்ந்து வேடிக்கை பார்த்தாள்.
சார்லஸ் வீட்டுக்கு வந்ததும் நிர்மலா மோஸஸ் இறங்கி வீட்டிற்குள் செல்ல, சாரா எதையோ சிந்தித்து இறங்குமிடம் வந்ததை கூட கவனிக்காமல் இருந்தாள்.
சார்லஸ் மெதுவாக வலது கையை சாரா தோளில் போடவும், அன்னிச்சையாக அதிர்ந்தாள். சட்டென விலகும் பொருட்டு திரும்ப, சார்லஸ் கள்ளச்சிரிப்புடன், “இறங்கற இடம் வந்துடுச்சு. இன்னும் என்ன சிந்தனை. ஒரு வேளை இந்த மலையாள பெண்குட்டிக்கு புருஷன் கையால தூக்கிட்டு போகணும்னு ஏதாவது ஆசை இருக்கா?” என்று விளையாடினான்.
சாராவோ சார்லஸ் என்றதுமே இயல்பானாள். இதில் சார்லஸ் பேசியதை கேட்டு புன்னகை அரும்ப, “ஓ டாக்டர் சாருக்கு இவ்விட ஆசை மொட்டு விட்டுல்லே. அதை எங்கிள் ஆசைனு பறைஞ்சு பிளேட்டை திருப்பிள்லே.” என்று கிலுக்கி சிரிக்க, சார்லஸோ அசடு வழிந்து, “நோ..நோ.. அப்படியில்லை” என்று நொடியில் இயல்பான குணம் தலைத்தூக்க மறுத்தான்.
“டாக்டர் சாரு…. கள்ளம் பறையுது. கள்ளம் பறைஞ்சேள்…நின்ன கர்த்தர் மன்னிக்க மாட்டார்.” என்று கூற, “ம்கூம்… கர்த்தர் எல்லாவற்றையும் மன்னிப்பார். கடவுளோட குணமே அது தான்.” என்றான்.
உடனடியாக சாராவோ “பின்னே… டாக்டர் சார் கள்ளம் பரஞ்சி?” என்று கேட்க, “ஆங்.. அதெல்லாம் இல்லை. நான் கள்ளமும் பறையலை, ஏன் எதுவும் பேசலை. ஆளை விடு தாயி” என்று இறங்கி ஓடினான்.
சாரா அதற்கு மனம் விட்டு சிரித்தாள். சாரா சார்லஸ் இருவரும் வீட்டுக்குள் நுழையும் நேரம் நிர்மலா நிறைவாக உணர்ந்தார்.
தன் மகன் சார்லஸ் ஒரு குழந்தையுடன் இருக்கும் துகிராவை விருப்பியதை அறிந்து, மிகவும் கோபப்பட்டார். பின்னர் மெர்ஸி சார்லஸ் ஏதேதோ பேசி மணக்க சம்மதம் கேட்டதும், அரை மனதாய் ஒப்புக் கொண்டவர். பிறகு துகிரா மணமாகாதவள், அந்த குழந்தை துகிராவின் அக்கா துர்காவுக்கும் இஷானுக்கும் பிறந்த குழந்தை என்று தெரியவும், துகிராவை மணக்க எவ்வித தடங்கலும் செய்யவில்லை. ஆனால் குழந்தையை அவள் அப்பாவிடம் சென்றிடுமென நினைக்க, சார்லஸே துகிராவை இஷானுக்கு மணக்க அறிவுறுத்தி வந்துவிட்டதாகவும், துகிரா அவளது அக்கா கணவரையே மணந்துவிட்டாள் என்றதையும் கோள்விப்பட்டு மகனுக்காக ஒரு பெண்ணை அவசரமாக தேடினார்.
காதலித்தவளுக்காக ஒரு குழந்தை உள்ள பொண்ணை மணக்க தயாரானவன், எங்கே அவளுக்காக தனிமரமாக மாறி நிற்பானென்ற பயம். அதனால் மெர்ஸிக்கு வந்த சம்பந்தம் மேத்யூவின் தங்கையையே சார்லஸுக்கு மணந்தால் என்ன? என்ற எண்ணம் உதிக்க, நிர்மலாவே தான் பெண் கேட்டார்.
மர்யம் முதலில் தயங்கினார், பின்னர் இரண்டு திருமணமும் ஒரே நேரத்தில் முடிந்தால் சரியென்று மடமடவென வேலைகளை இரு வீட்டு பெற்றவர்களும் தயார்படுத்தினார்கள்.
இன்று மைந்தன் ஓரளவு சாராவை புரிந்து வாழ்வானென நம்பினார்.
காரணம் தாங்கள் இறங்கி வந்ததும் உடனே வரவில்லை. சாராவோடு ஏதோ பேசி சிரித்து அல்லவா வந்து சேர்ந்தான். அந்த நம்பிக்கை.
உடனடியாக உடலில் சிலுவையிட்டு கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.
“கர்த்தரே… என் மகன் வாழ்க்கை உன் காலடியில் கிடத்திட்டேன் ஐயா. இனி அவன் வாழ்வு உன் கையில்” என்று இன்ஸ்டன்ட் வேண்டுதலும் இருந்தது.
சாரா அறைக்குள் வரவும், அவளது உடமைகளை பார்த்தாள். இன்னமும் அவளது சீர்வரிசை பொருட்கள் பிரித்து கூட பார்க்கவில்லை. எல்லாமே பேக் செய்தபடி அப்படியே இருந்தது.
அதை எடுத்து வைக்க நேரம் ஒதுக்க வேண்டும். ஏனோ அசதியும் ஆர்வமும் இல்லாமல் அதை அப்படியே ஒரமாகவே இருந்தது.
சார்லஸ் சற்று நேரம் தங்கள் வீட்டிலும் திருமணற்திற்கு என்று போடப்பட்ட பந்தல் பாத்திரம், இடத்தில் இருந்த பேனர் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி அதற்கான ஆட்களிடம் பணம் தந்து எடுத்திட வைத்தான்.
இதெல்லாம் ஆர்வத்தில் வழக்கத்தில் செய்ததில்லை. திருமணம் வீடு என்று தனித்து காட்டவும், நண்பர்களும் சொந்தமும் செய்த அலப்பறை. அத்துடன் நிர்மலாவின் பேராசை. மகனுக்கு கிராண்டாக செய்ய வேண்டுமென்று மெனக்கெட்டது.
சார்லஸ் அறைக்கு வந்து பார்க்கும் நேரம் சாரா உறங்கியிருந்தாள்.
“அம்மா… அவ சாப்பிட்டாளா?” என்று கேட்டு ஹாலுக்கு வந்தான்.
“பசிக்கலைனு சொன்னா. இரண்டு வாழைப்பழம் மட்டுமாவது சாப்பிட சொன்னேன். சாப்பிட்டா. உன்னை எட்டியெட்டி பார்த்தா சார்லஸ். நீ மரத்துக்கு பக்கத்தில போன் பேசவும், உறங்கறதுக்குமுன்ன கர்த்தர் முன்ன மண்டியிட்டு ஜெபம் பண்ணிட்டு உள்ள போயிட்டா.” என்றார் நிர்மலா.
சார்லஸ் கொஞ்சம் போல இரண்டு பரோட்டா பிய்த்து சாப்பிட்டு படுக்க சென்றான். வீட்டில் மெர்ஸி இல்லாமல் சாரா உறங்குவதால் தாய் தந்தையுடன் கர்த்தரை கூட்டுப்பிரார்த்தனையுடன் ஜெபித்துவிட்டு படுக்க சென்றான்.
சட்டென்று உறக்கம் வரமறுத்தது. சார்லஸும் புரண்டு புரண்டு படுத்து பார்த்தான். உறக்கம் சிறிதளவு இல்லை என்றதும், சாராவை எட்டிப் பார்த்து அவளருகே நெருங்கி வந்தான்.
இரண்டு மூன்று முறை அவளை பார்க்க தவிர்த்தான். சாரா உறக்கத்தில் அவன் மீது காலை தூக்கி போட சார்லஸ் அதிர்ந்தவனாக எழுந்து சோபாவில் படுக்க நினைத்தான். ஆனால் இன்று காலையில் முகத்தில் நீரை ஊற்றியதை எண்ணிப்பார்த்தவன், மீண்டும் அதோ காட்சியை நாளை வந்திடக் கூடாதென நினைத்து, உறக்கத்தில் இருந்தவளின் காலை எடுக்கவும் செய்யாது ரசிக்க ஆரம்பித்தான்
இமை கொட்டாமல் ‘நான் இவளுக்கு புது மனுஷன். ஆனா எந்தவித சங்கோஜமும் இல்லாம ஹாய்யா தூங்கறா. எந்த நம்பிக்கையில நிம்மதியா தூங்கறா? நான் இவளை நல்லா பார்த்துப்பேனானு கூட தெரியாது.
ஆச்சரியமா இருக்கு. மனோதத்துவ டாக்டர்னு தான் பெயரு. இதுக்கெல்லாம் அர்த்தமே புரியலை. பெண்கள் மர்மமானவர்கள் எ
ன்று முறுவலிட்டான்.
இந்த சந்தோஷம் இன்றைய நாளை புதுப்பித்ததால் சார்லஸ் நிறைவாக உணர்ந்தான்.
-தொடரும்.

Wow awesome narration sis. Kerala lunch super sis. Its mouth watering while reading it. Very intresting sis.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 sara oru puriyadha pudhir ah eruka🤔 enimey dhan therium parpom 🧐