அத்தியாயம்-11
அடுத்த நாள் காலை… வீடு வழக்கம்போல இயல்பாக இருந்தது.
சார்லஸ் எதுவும் நடக்காதது போலவே ரெடியாகிக் கொண்டு, தனது வேலைக்குச் செல்லத் தயாரானான். தான் அழுதுயிருப்பதை பார்த்தும் தன்னிடம் பேசி கேள்விக் கேட்காமல் செல்வதால் சாராவும் அமைதியாகவே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேற்று இரவு அவள் மனதில் எழுந்த புயல்… இன்னும் அடங்கவில்லை.
“நான் கிளினிக்குப் போயிட்டு வர்றேன் சாரா” என்றான் சார்லஸ்.
“ம்ம்” என்று மட்டும் தலையசைத்தாள் சாரா.
அவள் குரல் சுருங்கியிருந்தது.
ஆனால் அதை கவனிக்காமல்… அல்லது கவனிக்காமல் நடித்து… சார்லஸ் வெளியேறிவிட்டான்.
விரைவில் ஹனிமூன் செல்வதற்கான மற்ற விவரத்துடன் தான் சாராவை சந்திக்க வேண்டுமென சார்லஸ் சர்பிரைஸ் செய்ய ஆசைப்பட்டான்.
சார்லஸ் சென்றதும் சாரா அவள் மட்டும் அவர்களது அறையில் நடமாடினாள். பெரும்பாலும் மனம் சோர்வாக தெரிய படுத்துறங்கினாள்.
வீட்டில் நிர்மலாவும், மோஸஸும் ஹாலில் இருந்தனர். மோஸஸ் தேங்காய் மரத்திலிருந்து விழுந்த காயிலிருந்து நாறை உறித்து, அடுக்கும் வேலையில் இருக்க, நிர்மலா போன் ஒலித்தது.
“ஹலோ…” என்று நிர்மலா எடுத்தார்.
அந்த பக்கம் இருந்து ஒரு பெண்ணின் குரல்.
“நிர்மலா.. நான் டாக்டர் ரிச்சர்டோட மனைவி ஸ்டெல்லா பேசறேன்.” என்றார்.
“வாவ்… சொல்லுங்க ஸ்டெல்லா. எப்படியிருக்கிங்க? உங்களை மேரேஜ்ல எதிர்பார்த்தேன். நிங்களும் டாக்டரும் ஏதோ மீட்டிங் என்று லண்டன் போனதா கேள்விப்பட்டேன். இங்க வந்துட்டிங்களா” என்று நலம் விசாரித்தார் நிர்மலா.
“லண்டனிலிருந்து வந்துட்டோம் நிர்மலா. நீங்க என்ன சார்லஸுக்கு நல்ல பெண்ணை பார்க்கலாயா?” என்று கேட்டார்.
நிர்மலாவுக்கு புரியாமல் விழித்து, “ஸ்டெல்லா… நாங்க துகிராவை சார்லஸுக்கு கட்டி வைக்கலை. அவ அவளோட அக்கா வீட்டுக்காரரையே விவாகம் செய்து அவ அக்கா குழந்தைக்கு அம்மாவா நிரந்தரமா போயிட்டா. இப்ப சார்லஸ் மேரேஜ் பண்ணியது மேத்யூவோட தங்கை மெர்ஸியை தான்.” என்று விலாவரியாக உரைத்தார்.
ஏனெனில் ரிச்சார்ட் சார்லஸின் மாணவன். அத்துடன் தூரத்தில் உறவினரும் ஆவார். சார்லஸ் மனோதத்துவ டாக்டராக படிக்க முன் வந்த போது, நிர்மலா தடையிட, ரிச்சார்ட் தான் நிர்மலாவுக்கு இதுவும் டாக்டர் தானேம்மா. இதில்லென்ன குறையை கண்டிங்க என்று மனோதத்துவ டாக்டரின் சாதக பாதக விஷயத்தை முன்னிருத்தி சார்லஸை படிக்க கூறி ஊக்கம் தந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தால் சார்லஸுக்கு தந்திருப்போம் என்னுமளவிற்கு ஸ்டெல்லா நிர்மலா நல்ல நெருக்கம்
ஸ்டெல்லாவுக்கு இதற்கு முன் துகிராவை பற்றி தான் நிர்மலா தெரிவித்திருந்தார்.
துகிரா சென்றதால் அடுத்து மெர்ஸிக்கு மணம் செய்ய வரன் தேடவும் மேத்யூ அமைந்தார்.
மேத்யூவுக்கு தங்கை இருக்கவும், அதுவும் நல்ல நிறமும் சுருட்டையான முடியும், வடிவான முக அழகும் இருக்க, நிர்மலாவாகவே மரியத்திடம் பொண்ணு கேட்டார்.
அத்துடன் இரண்டு விவாகம் ஒரே நேரத்தில் முடிய கண் படுமென்றே போட்டோவை யாருக்கும் அனுப்பவில்லை. அதில் ஸ்டெல்லாவும் சேர்த்தி.
திருமணமன்று பார்க்க கூறியிருந்தார்.
அதற்கேற்றவாறு வேலையும் கழுத்துவரை இருந்தது. ஸ்டெல்லா வந்ததும் சார்லஸ் சாரா இருவரை அழைத்து விருந்து வைத்து ஜமாய்க்கலாமென எண்ணினார்.
சார்லஸுக்கு அழைத்தால் அவன் ஜோசப் கேஸால் போனை சைலண்டில் போட்டிருந்தான்.
டிபி மட்டும் பார்க்க நேர்ந்திட, ரிச்சார்ட் சார்லஸ் மணந்த பெண்ணான சாராவை பற்றி கூறினார்.
சாரா ரிச்சார்டிடம் அவளது மனபாதிப்புக்கு கவுன்சீலிங் வந்ததை அவர் தெரிவிக்க, ஸ்டெல்லா அதை எல்லாம் கேட்டு, சாராவை பற்றி நிர்மலாவிடம் உரைத்தார்.
“இல்லை நிர்மலா… நான் சாராவை பத்தி தான் சொல்லறேன். அவ ரிச்சார்டிடம் கவுன்சிலிங் வந்தா. அவளோட ட்வின் சிஸ்டர் கிரேஸ் இறப்புக்கு அவ தான் காரணம்னு சொல்லிட்டு பைத்தியமாதிரி சொன்னதையே சொல்லி அழுவா. அது நடந்து பல வருஷமிருக்கும். அப்ப் அவ சின்ன பெண்குட்டி.
ரிச்சர்ட் அது விபத்தும்மானு புரிய வைச்சும் சோகமா தலையாட்டி போனா. அவளுக்கு மனபாதிப்பு இருக்கு. உடனே அழுவா. எல்லாம் இரண்டு இரண்டா வாங்கிட்டு வந்து நிற்பா.
சின்ன வயசில் பார்த்ததில் சட்டுனு சாரா முகம் தெரியில்லா. பட்சே.. இன்னிக்கு மர்யம் அந்தோனி குடும்ப சகிதம் நீங்க அனுப்பிய போட்டேவில் கண்டு, ரிச்சார்ட் சந்தேகம் வந்து தெளிவுப்படுத்தினோம். இந்த சாரா அந்த பெண்ணாயி. சார்லஸுக்கு அவசரப்பட்டு இப்படியொரு பொண்ணை முடிச்சிட்டியே நிர்மலா. இவ இங்கயிருந்தா அவ பிராந்து தெரியும்னு மங்களூரில் படிக்க மர்யம் திட்டம் போட்டு அனுப்பியது. இரண்டு வருடம் ரிச்சார்ட் சாராவுக்கு வைத்தியம் பார்த்தது. இப்ப சரியானதானு தெரிந்தவங்களிடம் விசாரித்தார் ரிச்சர்ட். ஆனா காலேஜ் செகண்ட் இயர் வரை சாரா இதுக்காக டாக்டர் கன்சல்டிங் போயிருக்கா. அவளுடைய மனசு இன்னமும் தெளியலை.
இதுக்கு பேசாம துகிராவையே கட்டி வச்சியிருக்கலாம்.
என்னவோ போ… நான் ரொம்ப டிஸ்அப்பாயிண்ட் ஆகிட்டேன்.
சார்லஸ் ரிச்சர்டோட நெருக்கமான ஸ்டுடண்ட். அத்தோட நம்ம உறவுக்கார பையனாச்சேனு கஷ்டப்பட்டார்.” என்றதற்கு நிர்மலாவுக்கு கோபம் உண்டானது.
“சரி நிர்மலா… சார்லஸ் வந்தா இவரை வந்து பார்க்க சொல்லு. கர்த்தர் உன்னை ரட்சிக்கட்டும்” என்று வைத்திட, நிர்மலாவுக்கு புஸுபுஸுவென கோபம் உண்டானது.
அந்த நேரம் நிர்மலாவை நோக்கி சாரா நடந்து வந்தாள்.
“ஏ நில்லு? உனக்கு டாக்டர் ரிச்சர்ட் தெரியுமா?” என்று கேட்க சாரா நெஞ்சில் கையை இறுக வைத்து தலையாட்டினாள்.
“எப்படி தெரியும்?” என்று கேட்க, “கிரேஸ் மரிச்சு போயி.. பின்னர் நான் கொஞ்சம் புத்தி ஸ்வாதினமில்லா பிணாத்தவும், அம்மே அச்சன் அழைச்சிட்டு போயி. டாக்டர் ரிச்சர்டிடம் இரண்டு மூன்று வருஷம் நான் ட்ரீட்மென்ட் போயி.” என்றாள்.
“அய்யோ அய்யோ… அப்ப ஸ்டெல்லா சொன்னது மாதிரி நீ பைத்தியமா? நான் தான் புத்தியில்லாம சார்லஸுக்கு உன்னை கல்யாணம் பண்ண பேசியது. அச்சோ… புத்தியில்லாதவளை தான் உங்கம்மா வீட்டோட வச்சிக்க நினைச்சு பையனுக்கு முதல்ல கல்யாணம் செய்ய மெர்ஸியை கேட்டாங்களா. நானா தான் உன்னை சார்லஸுக்கு கட்டி வைக்க கேட்டேன்.
அய்யோ.. உங்கம்மா உனக்கு பைத்தியம்னு சொல்லி தொலைக்க வேண்டியது தானே? என்ன மறைச்சு இந்த வீட்டுக்குள் வந்த?” என்று வார்த்தைக்கு வார்த்தை பைத்தியம் என்றும், ஏதோ மறைத்து கட்டி வைத்த கல்யாணம் என்று பேச சாரா அதிர்ந்தாள்.
“ஆன்ட்டி… நான் எதுவும் ஏமாத்தலை. நான் பைத்தியம் இல்லா. நான் மனசு கஷ்டத்தில் போனது.” என்று கூறினாள்.
“பேஷண்ட்டா இருந்ததை மறைச்சு… என் பையனை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்ட, இது என்ன ஊரு நியாயம். என்னங்க.. இங்க வாங்க” என்று மோஸஸை கூப்பிட்டார்.
மோஸஸும் நிர்மலா கணீரென்ற வார்த்தை தடித்து பேசவுமே வந்து நின்றார்.
மோஸஸிடம் ஸ்டெல்லா சொன்னதை எல்லாம் சொல்லவும், மோஸஸ் கேட்டு நின்றார்.
“பைத்தியமா இருந்தவ… என் பையனுக்கு மாப்பிள்ளையா?” என்று கடிந்திட, மோஸஸ் எழுந்தார்.
“நிர்மலா… சும்மா இரு…” என்றார்.
“ஆன்ட்டி.. நான் பிராந்து இல்லா?” என்றாள்.
“நீயும் அமைதியா இரும்மா சார்லஸ் வரட்டும்.” என்றதும் சாராவுக்கு குரல் நடுங்கியது.
“அவனை என்னத்த கேட்கறது. நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்க. முதல்ல இவ இங்க இருக்க கூடாது. இந்த ஊர்ல இந்த விஷயம் தெரிந்தா என் பையன் நிலைமை என்னாகறது. டாக்டருக்கு ஒரு பைத்தியத்தை கட்டி வச்சிட்டேன்னு என்னை கேட்க மாட்டாங்க.” என்று புலம்பினார்.
சாராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “அம்மா… நான் பிராந்து இல்லா” என்றாள்.
“எந்த பைத்தியம் தன்னை பைத்தியம்னு சொல்லுக்கும். வெளியே போடி” என்று வார்த்தையை கடித்து துப்பினார்.
அந்த ஒரு வார்த்தை சாராவுக்கு உலகமே உடைந்தது போல தோன்ற நடுங்கினாள்.
“இந்த வீட்டுல உனக்கு இடமில்லை. நீ போ.” என்று வாசலில் வந்து தள்ளி விட, சாரா அழுகையுடன் மோஸஸை கண்டாள்.
மோஸஸோ “ஏய் நிர்மலா… சார்லஸ் இல்லாதப்ப என்ன செய்யற.” என்றார்.
“அட சும்மாயிருங்க. அவனுக்கு இந்த பொண்ணு மேல விருப்பமில்லாம தானே கல்யாணம் செய்தான்.
இப்ப இவளை அனுப்பிட்டா நல்லது. இல்லை… இப்பவரை கைப்படாம பழகறான். நாளைப்பின்ன பைத்தியத்திடம் வாழ்ந்துட்டு குழந்தை குட்டின்னா சார்லஸ் நிலைமை கஷ்டமாயிடும். அதுக்கு இவளை இப்பவே அனுப்பிட்டா மனசை தேற்றிப்பான்” என்றார்.
”விளையாடறியா.. நம்ம பொண்ணு மெர்ஸி வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்கு” என்றார் மோஸஸ்.
“அட.. இவளை போல என் மக மெர்ஸி ஒன்னும் பைத்தியமில்லை. இவ தான் சரியில்லை.” என்று கூற, சார்லஸின் வாழ்வில் தன்னால் கஷ்டமாகுமோ? தன்னை பிடிக்காமல் மணந்தவன், தனக்கு பைத்தியம் என்று நிர்மலா அத்தை கூறியது போல நினைத்து ஒதுக்கினால்?
சார்லஸ் ஏற்கனவே ஜோசப் கேஸ் மூலமாக தன்னிலை எப்படி எடுத்துக் கொள்வானென அன்று கேட்டதற்கு ‘முட்டாள்’ என்றானே. அதையே தான் இன்று நிர்மலா ஆன்ட்டி மனதை உடைக்கும் விதமாக உரைக்கின்றார்.
சாரா அழுகையுடன் ஒரு நொடி கூட நின்று கொள்ளவில்லை.
அவள் உள்ளே ஓடி…
ஒரு பர்ஸை எடுத்தாள்.
எதுவும் சொல்லவில்லை.
அவள் கண்களில் மட்டும்
வலியிருக்க அங்கிருந்து தனது வீட்டிற்கு பயணமானாள்.
மோஸஸ் தடுக்க முயன்றார். அவரால் முடியுமா? இரு பெண்களின் வாதத்தில் ஆண்கள் நடுவே சென்றிட முடியாது. அதிலும் மனைவி நிர்மலாவிடம் வார்த்தையை பார்த்து பேச வேண்டுமே.
“அம்மா.. சாரா.. எங்கே போற?” என்று கேட்டார்.
சாராவோ “என்ட அச்சன் வீட்டை தவிர்த்து எனிக்கு யாருமில்லா அங்கிள்.” என்றவள் குரல் உடைந்தது.
போட்டில் முதல் முறை தனது இல்லத்திற்கு பயணம் செய்கின்றாள் சாரா. அதுவும் தனித்து கணவர் சாண்லஸ் இல்லாமல்..
சத்தமில்லாமல் அழுது பயணித்து சாரா தன் அம்மா அப்பா வீட்டிற்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தாள்.
மரியம் தான் கதவைத் திறந்தார்.
“சாரா” அவள் உள்ளே வந்ததும் மகிழ்ந்தவர் மகள் தனித்து வந்து நிற்பதும், கண்ணில் கண்ணீரை கண்டும், சாராவை பார்த்து “என்னாச்சு?” என்றார்.
சாரா எதுவும் பேசவில்லை.
அவள் நேராக அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
அந்த அழுகை தடை இல்லாமல் தேம்பவும், மரியம் பதறினார்.
“என்னாச்சு மோலே?” என்று அந்தோனியும் வந்தார்.
“சாரா… என்னம்மா?” என்று மரியம் உலுக்கினார்.
சாரா அழுகையுடன், நிர்மலா அத்தைக்கு தனது மெடிக்கல் இஸ்ஸு தெரிந்துவிட்டதாக கூறினாள். அத்துடன் வீட்டை விட்டு வெளியே துரத்தியதாக கூறிடவும் மரியம் கைகளைத் தலையில் வைத்துக்கொண்டார்.
“அய்யோ…” என்று மரியம் கதற, அந்தோனி அமைதியாக நின்றார்.
“சார்லஸ் ஏதாவது சொன்னாராம்மா?” என்று கேட்க, “அவர் க்ளினிக்ல பேஷட்டை காண போயி. அவரில்லா.” என்றாள்.
மரியம் உடனடியாக “மேத்யூவுக்கு போன் போட்டு சொல்லறேன்.” என்று போனை எடுக்க, சாராவோ அன்னையை தடுத்தாள்.
“சேட்டனிடம் பறைஞ்சு.? என்ட கஷ்டம் என்னோட போகட்டும். சேட்டன் ஹனிமூன் போயி. அவரை அவட கஷ்டப்படுத்தில்லா. உங்களோட கள்ளம் நிர்மலா ஆன்ட்டி அறிந்ததும் துரத்தினதே.
நான் முன்ன படிச்சி படிச்சி பறைஞ்சேன். இந்த விவாகம் எனிக்கு வேண்டாம்னு. நிங்கள் தான் ஆனந்தமாய் நினைச்சி செய்து முடிச்சேர். இன்னிக்கு கன்னுல வெல்லம் வச்சி நிற்கறிர். அட்லீஸ்ட் மேத்யூ லைப் சந்தோஷமாயி” என்று தடுக்க மரியம் செய்வதறியாது நின்றார்.
மோஸஸோ ”சார்லஸுக்கு எதுவும் தெரியாதே. அவர் நாளை வந்தா பார்ப்போம். என்ன மோலை எதுவும் திட்ட வேண்டா. இங்கன இருக்கட்டும்.” என்று கூறிவிட்டார்.
அதன் காரணமாக மரியம் அமைதியானார்.
மாலை பொழுதும் மங்கி இரவும் வந்தது.
சார்லஸ் வீட்டிற்கு வந்தான்.
“அம்மா… அம்மா.. சாரா எங்க?” என்று வீட்டில் நுழைந்து அறையில் சாரா இல்லாமல் போகவும் நிர்மலாவிடம் கேட்டான்.
நிர்மலா அமைதியாக இருந்தார்.
“அம்மா… உங்களிடம் தான் கேட்கறேன்.” என்றதற்கு மோஸஸ் தயங்க, “அவ… போயிட்டா.” என்றார் நிர்மலா.
சார்லஸோ அன்னையின் பேச்சில் கூர்ந்து, “போயிட்டான்னா எங்கே?” என்றான்.
நிர்மலா ஆக்ரோஷமாக “எங்கன்னா… அவ வீட்டுக்கு.” என்றார்.
சார்லஸ் புரியாமல் பார்த்தான்.
“அப்பா.. என்னாச்சு?” என்று தந்தையிடம் கேட்க, நிர்மலா குரல் கடினமானது.
“நீ கல்யாணம் பண்ணியவ ஒரு பைத்தியக்காரி.” என்றார்.
“அம்மா.” என்று சார்லஸ் கத்த, “ஆமாடா.. டாக்டர் ரிச்சார்டோட பேஷண்ட் இந்த சாரா. அவ ட்வின் சிஸ்டர் கிரேஸ் இறந்ததும் இரண்டு மூன்று வருஷம் கவுன்சிலிங் எல்லாம் போயிருக்கா அவ பைத்தியம் டா. அதனால தான் இங்க கேரளாவில படிக்க வைக்காம மங்களூரில் படிக்க அனுப்பியிருக்காங்க. அது தெரியாம முட்டாளா இருந்துட்டேன்.” என்று கூற, சார்லஸ் கண்கள் விரிந்தது.
“அம்மா என்ன சொல்லறிங்க?” என்று கேட்க, “நம்மளை ஏமாத்திட்டாங்க.. அவ பைத்தியம்!” என்று அதையே கூற, சார்லஸிற்கு கோபம் வெடித்தது.
“அம்மா!” அவன் குரல் முழங்கியது.
“என் மனைவியை அப்படி பேசாதிங்க!” என்றான்
மோஸஸ் இடைஞ்சல் செய்தார்.
“நிதானமா பேசலாம்… சார்லஸ். ” என்றார்.
“என்ன நிதானம் வேண்டும் அப்பா? அம்மா எப்படி பேசறாங்க பார்த்திங்களா? இப்படி தான் யார் மனசையும் யோசிக்காம பேசறாங்க. முன்ன துகிராவை அவளோட அக்கா குழந்தையை சாத்தான்னு சொன்னாங்க. இப்ப என் மனைவி சாராவை பைத்தியம்னு சொல்லறாங்க.” என்றவனுக்கு மூச்சு வேகமாயிற்று.
மோஸஸுக்கு மனைவியின் வார்த்தை வீரியம் தவறென தோன்ற, அமைதியாகிடவும், சார்லஸ் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அவ்விடம் விட்டு கிளம்பினான்.
“எங்கே போற?” என்று கேட்டார் நிர்மலா.
“என் மனைவி சாராவை தேடி” என்றவன் அங்கிருந்த
தனி போட்டில் துடுப்பை போட்டு துழாவ ஆரம்பித்தான்.
சாராவை பார்க்கும் வரை அன்னை மீது கோபம் கொப்பளிக்க அங்கிருந்த தனி போட்டில் சாரா வீட்டுக்கு பயணமானான்.
-தொடரும்.
