Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-15

55 / 100 SEO Score

அத்தியாயம்-15

சார்லஸின் நெருக்கமான அந்த முத்தம், சாராவின் மூச்சையே நின்று போக வைத்தது.

அவன் இதழ்கள் அவள் இதழ்களை தீண்டிய அந்த நொடியில்… அவள் இதுவரை கட்டி வைத்திருந்த பயம், குற்றவுணர்வு எல்லாமே ஒரு கணம் பின்னோக்கி நிற்க வைத்தது.

சார்லஸ் மெதுவாக விலகினான், சாராவை பார்க்க, அவள் கண்கள் இன்னும் மூடியபடி இருந்தது.

“சாரா” என்று மெதுவாக கிறக்கத்தில் அழைத்தான்.
அவள் மெதுவாக கண்களைத் திறந்தாள்.
அந்த பார்வையில் கலக்கம், பயம்… ஆனந்தம்… எல்லாம் கலந்திருந்தது.

“இப்பயும் நான் உன்னை பாவம்னு தான் பார்க்கறேன்னு தோணுதா?” என்றான் மெதுவாக.

சாரா உடனே தலை அசைத்தாள்.
“இல்லா” என்றவள் குரல் முழுசாக வரவில்லை.

சார்லஸ் கள்வனாக சிரித்தான்.
“அப்போ” என்று அவன் அவளது கையை பிடித்து தன் மார்பில் வைத்தான்.

“இங்க துடிக்கறதை கேளு. என்னோட இதயம் என்ன சொல்லுது?” என்றதும் சாரா நடுங்கினாள்.

அவள் கையை அவன் மார்பிலிருந்து எடுக்கவில்லை.
இதயம் துடிக்கும் சத்தம்… அவள் காதுகளுக்குள் முழங்கியது.

“சொல்லு சாரா.. இது உன்னை பார்த்து பாவப்பட்டு துடிக்குதா? இல்ல… உண்மையான நேசத்துக்காக துடிக்கா?” என்றான்.

சாராவின் கண்களில் மீண்டும் கண்ணீர் தேங்கியது. இந்த முறை… அது வலியால் உண்டான கண்ணீர் இல்லை. ஆனந்தத்தில் உருவானது, மெதுவாக அவன் அருகே வந்து நின்றாள்.

அவன் ஒரு நொடி கூட அவளை தடுக்கவில்லை. அவள் தலையை அவன் மார்பில் சாய்த்தாள்.

இருவருக்கும் இடையில் இருந்த எல்லா தூரமும் பாகாய் கரைந்தது.

அந்த நேரம்… வாசலுக்கு வெளியே ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் சப்தமாய் கேட்டது.

இருவரும் சற்று விலகினார்கள். அதிலும் சாராவின் முகம் உடனே அச்சத்தில் மாறியது.
“அத்தை” என்றாள் மெதுவாக.
அவள் முகத்தில் மீண்டும் அந்த பழைய பயம்.

சார்லஸ் அதை கவனித்தான். அவன் சற்றே சிரித்தான்.
“நான் இருக்கேன் உனக்கென்ன பயம்” என்றான்.
சார்லஸ் அவ்வளவு கூறியும், சாராவுக்கு நம்பிக்கை முழுசாக வரவில்லை.

அன்றைய மதிய உணவு தயாரிக்க சாரா சமையலறைக்குள் செல்ல தயங்கினாள்.
நிர்மலா மட்டுமே கிச்சனில் உள்ளே இருந்தார். எத்தனை நேரம் சார்லஸுடன் அறையில் இருப்பது. ஆனாலும் சாரா ஒரு அடியும் முன்னே போகவில்லை.

அதை பார்த்த சார்லஸ்… எதுவும் சொல்லாமல் கிச்சனில் சென்றான். நிர்மலா செய்து வைத்த உணவை எடுக்க வந்தான்.

”அம்மா… நான் சாப்பாடு எடுத்துக்கறேன்” என்றான்.

நிர்மலா அவனை பார்த்தார்.
“ஏன்டா..  அவ வரமாட்டாளா? நானும் பார்த்துட்டு இருக்கேன். நேத்திலயிருந்து அவளுக்கு நீ சேகவகம் செய்துட்டு இருக்க”  என்றார் கடுகடுப்பாக.

“வரக்கூடாதுனு இல்லைம்மா.. அவ வந்தா நீ பாத்திரத்தை உருட்டி, முனங்குவ. எனக்கு தெரியாதா? நீங்க காம்டவுன் ஆகுங்க. அவளா வருவா. அதுவரை அவ வர வேண்டிய அவசியமில்லை” என்றான் அமைதியாக.

சார்லஸ் இப்படி கூறியதும், நிர்மலாவுக்கு இன்னும் எரிச்சலானது.

மகனை நன்றாக தான் மயக்கி வைத்திருக்கின்றாள்‌ என்று நிர்மலா அதற்கும் பேசினார்.

இதற்கிடையே மெர்ஸி அவள் பங்கிற்கு நிர்மலாவிற்கு அட்வைஸ் செய்தும் அது செவிடன் காதில் விழுந்த வார்த்தையாக தான் மாறியது.

அறைக்குள்… சாரா அமைதியாக இருந்தாள். நிர்மலா பேசியதும், சார்லஸ் பதிலுக்கு உரைத்த பேச்சும் கேட்டிருந்தாள். சார்லஸ் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
தயங்கி தயங்கி சாரா உணவை விழுங்க, சார்லஸும் சாப்பாட்டை சுவைத்தான்.

தட்டை வெளியே எடுத்து செல்லக் கூட சாரா பயப்பட, “நீ இன்னும் பயப்படற” என்றான்.

சாரா பயத்தை மறைக்க முயன்றாள்‌. “இல்லா” என்று மழுப்பினாள்.

“சாரா.. நீ என்கிட்ட பேசறப்ப, நான் உன்னை நெருங்குறப்ப, உனக்கு பயம் இல்ல. ஆனா… அம்மா சத்தமிட்டாலோ , அவங்க முன்னாடி நீ வேற ஒருத்தியா மாறி பயப்படற.” என்றதும் சாரா அமைதியாகிவிட்டாள்.

அதென்னவோ உண்மை.
“நான் ஒரு விஷயம் யோசிக்கிறேன்” என்றான். சாரா அவனை என்னவென பார்த்தாள்.

“நாம வேண்டுமின்னா தனியா போயிரலாமா?” என்றான்.
அப்படி கேட்டதும் அவ்வார்த்தை சாராவை அதிர்ச்சியடைய வைத்தது.

“இது நிங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டல்லோ… அப்பறம் எங்கனம் தனியா போயி?” என்று குழப்பமாய் கேட்டாள்.
“ஆமா இது நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு தான். ஆனா நீ இங்க சுதந்திரமா இல்ல. நீ நிம்மதியா சிரிக்க கூட யோசிக்கற” என்று சாராவை நன்றாக கவனித்தை வைத்து சரியாக கூறினான்.
அவன் தன்னை இத்தனை நுணுக்கமாக கண்டதில், சாராவின் கண்கள் நனைந்தது.

“அத்தை” என்று ஏதோ சொல்ல முயன்றாள்.
“அம்மா என் அம்மா தான்… அதுக்காக அவங்க ரொம்ப நல்லவங்க. அதுயிதுனு சப்போர்ட் பண்ண முடியாது. ஏன்னா அவங்க எதார்த்தத்தில ஊறிய மாமியார். அவங்க பேசறதை தடுக்க முடியாது‌. நான் இல்லாதப்ப இதை விட அதிகமா உன்னை காயப்படுத்த முனையலாம். அதெல்லாம் எனக்கு தெரியவந்து நான் அப்செட் ஆகறதுக்கு முதலிலேயே தனியா போறது பெட்டர். ஆல்ரெடி நான் க்ளினிக்கை வேற இடத்துல மாத்தலாமானு யோசிச்சேன். இப்ப வீடும் தனியா பார்த்துட்டா இரண்டு இடமும் புதுயிடமா பார்த்துடலாம்.
எனக்கு நீ முக்கியம் சாரா. நீ தான் என் வாழ்க்கை. உன்னை காயப்படுத்துவதை என்னால தாங்கிக்க முடியாது‌.” என்றான் தெளிவாக.

சாராவுக்காக சார்லஸ் யோசிப்பதை எண்ணி அவள் உள்ளத்தை உருக வைத்தது.

சாரா தயக்கமாய் கேட்டாள்.
“நீங்க… நிஜமாவே… என்னோட இருக்கணும்னு நினைக்கிறிங்களா? என்னைக்காவது என் மேல கோபம் வந்துட்டா. எரிச்சலாகிட்டா.. நான் சில நேரம் பிராந்து போல செய்தாள்.” என்று அச்சத்தில் கேட்டாள். சார்லஸ் அவளை பார்த்தான். இந்த முறை அவன் பதில் தரவில்லை.
அவன் மெதுவாக அவளை தன்னருகே இழுத்தான்.
சாரா சார்லஸின் இழுப்புக்கு எவ்வித எதிர்ப்பு காட்டவில்லை.

அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். “நான் முடிவு பண்ணிட்டேன் சாரா. நீயும் அதே முடிவுக்கு வரணும். இப்ப இதை பத்தி அம்மாவிடம் பேச வேண்டாம். ஆனா நான் வேறயிடம் பார்த்துடறேன்.” என்றான்.

சாராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மாலை நடைபயின்று அருகேயுள்ள தோட்டத்தை சுற்றி பார்த்து பேசி திரிந்தனர்.
நிர்மலா தூரத்தில் பார்த்து பொரிந்து தள்ளியது ஒரு புறம் என்றால், மோஸஸ் காதில் சாராவை பற்றி பேசி காதை தீய வைத்துவிட்டார்.

மரியத்திடம் ஏதாவது பேசி சாராவை அழைத்து போக கூறலாமென நினைத்தால், மெர்ஸியோ, “மேத்யூ பிறகு அவர் தங்கச்சிக்காக என்னை நம்ம வீட்டுக்கு அனுப்பிடுவார். உங்களுக்கு அது இஷ்டமா இருந்தா சாராவை அனுப்புறதில் குறியா இருங்கம்மா” என்று வாயை அடைத்துவிட்டாள்.

அதனால் சாரா சார்லஸ் நெருக்கமாய் பேசி திரிந்தால் கடுகடுவென இருந்தார். இதே நிர்மலா தான் முன்பு மகனும் மருமகளும் பேசி சிரிக்க மாட்டார்களா, தங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தையை பெற்று தரமாட்டாரா? சார்லஸ் வாழ்க்கை இனிதாக அமைய வேண்டினார். இன்று எல்லாம் தலைகீழாக மாறியது.
சார்லஸ் சாராவிடம் பேசினாலே, “என் பையனை மயக்கிட்டா… இத்தனைக்கு புத்தி கெட்ட சிறுக்கி. அவ” என்று நொடிக்கொரு முறை புலம்பினார்.
சாரா சார்லஸ் இரவு உணவை விழங்கும் போது கூட நிர்மலாவை அசட்டையாக கடந்தான்.

மோஸஸ் மட்டும் ‘அம்மாவிடம் பேலன்ஸா இருந்துக்கோ சார்லஸ்.’ என்று கூறியிருந்தார்.

இரவு கூட்டு பிரார்த்தனை செய்ய நிர்மலாவை அழைக்க, சார்லஸ் தன் கைகளை சாராவுடன் பிணைத்தான்.

“பிரார்த்தனை பண்ணலாமா” என்றதும் அவ்விடம் அமைதியானது.
எப்பொழுதும் கர்த்தரை வேண்டுதலில் நிர்மலா குறை வைக்க மாட்டார். அதனால் இந்த பிரார்த்தனையில் எவ்வித தடையும் இல்லாமல் மகனின் மறு கையை பிடித்து மண்டியிட்டார்.

சாராவின் கையை சார்லஸ் பிடித்து நிறுத்தியதில், சாரா இதயம் பூவாக மலர்ந்தது.

அவளும் மெதுவாக புன்னகை பூத்தாள்.
“கர்த்தரே… எங்களது வாழ்வில் அடிப்படை வசதிக்கு குறைவில்லாமல் வழிநடத்துவதற்கு நன்றி.
எங்கள் வீட்டு பெண் மெர்ஸிக்கு நல்ல துணைவனை தந்து அவளது மகிழ்ச்சிக்கு காரணமானவரே… நன்றி ஆண்டவரே…
எங்கள் குடும்பத்திற்கு நல்ல பெண்ணை எனக்கு மணமகளாக கொடுத்தமைக்கு நன்றி.” என்றதும் சாராவின் கண்கள் மெதுவாக நீர்த்தது.

“என் மனைவி சாராவின் மனதில் இன்னும் நிறைய காயங்கள் இருக்கு ஆண்டவரே…
அதை நானும் எனது குடும்பமும்  புரிந்துக்கொண்டு அவளை  ஆற்றுப்படுத்த வேண்டும் ஆண்டவரே.
அதுக்கு எனக்கு பொறுமையும் ஞானமும் தாருங்கள்.
என் அம்மாவும்… என் மனைவியும்… எனக்கு இரு கண்கள் போன்றவர். அவர்கள் இருவரும் எனக்கு சமமானவர்கள் ஆண்டவரே… அவர்களது உறவு நல்லுறவாக மலர வேண்டுகின்றேன் கர்த்தாவே.
அவர்களுக்குள்ள இருக்குற தூரம்… அவர்களுக்கு வலி தருகின்றது. அந்த வலியை எல்லாம் நீங்கள் தூக்கி எறிந்து, இன்பத்தை தாருமையா.
அந்த தூரத்தை குறைத்து தாயும் மகளை போல அவர்கள் மாற வேண்டும் ஆண்டவரே.
என் அம்மாவின் மனதை மென்மையாக்குங்கள்
அவர்கள் கோபங்கள் குறையட்டும்…
அவர்கள் பார்வையில் என் மனைவி ஒரு அந்நியமா இல்லாது தோழியாக பாவிக்கணும்” என்று பிரார்த்தனை செய்ய செய்ய, சாராவின் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
‌”என் சாராவுக்கு, தைரியம் தாருமையா…
ஆண்டவரே…
அவள் தன்னையே குறை சொல்லி தாழ்த்தும் மனசை எடுத்துட்டு செல்லுங்கள். அவள் தனியாக இல்லை. அவளுடன் நானும் எனது குடும்பமும் இருப்பதை உணர்த்துங்கள் .
உங்கள் வல்லமையை அவளுக்கு வழங்குங்கள்.
நாங்க இருவரும்… ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க…
இந்த வாழ்க்கையை நல்லபடியா நடத்த…
உங்க ஆசீர்வாதம் தேவை ஆண்டவரே…
எல்லாவற்றிக்கும் மேலாக
எங்கள் குடும்பம் ஒருவருக்கொருவர் காயம் இல்லாமல், அன்பா வாழ உதவி பண்ணுங்கள் ஆண்டவரே.. ஆமேன்” என்று  சார்லஸ் மெதுவாக கண்களைத் திறந்தான்.

மற்றவர்களும் “ஆமென்” என்று சிலுவையிட்டு முடித்தனர்.

சாரா இன்னும் கண்களை மூடியபடி இருந்தாள்.
அவள் கண்ணீர் நின்றிருக்கவில்லை.
“சாரா” என்றான் மெதுவாக.
அவள் கண்களைத் திறந்தாள்.
அவள் பார்வையோ முந்தைய பயம் இல்லாமல்… சிறு நிம்மதியோடு இருந்தது.

“இப்பயாவது கொஞ்சம் லைட்டா சிரியேன்” என்றான்.
சாரா மெதுவாக தலையசைத்து புன்னகைத்தாள்.
நிர்மலாவோ வேகமாக பிரேயர் முடியவும் அவரது அறைக்கு சென்றார். மோஸஸும் மனைவியோடு சென்றார்.

அந்த இரவு சாரா சார்லஸ் இருவரும் ஒவ்வொரு அடியாய் முன்னே வந்தார்கள்.
சாரா இருவருக்கும் இருக்கும் தூரத்தை துரத்தி அடித்து நெஞ்சமதில் சாய்ந்தாள்.

சார்லஸ் மெதுவாக அவளது கன்னத்தை தொட்டான்.
சாரா கண்களை மூடினாள்.
அந்த தொடுதல் சாரா மனதை இதமாக தழுவியது.
சார்லஸ் மெதுவாக சாரா நெற்றியில் முத்தமிட்டான்.

அதன் பின்…
அவள் கண் ஓரத்தில்… அவள் கன்னத்தில், அவள் இதழ்களில்… இந்த முறை… சாரா விலகவில்லை.
அவள் உடலும் அவனுக்கான தேடுதலுக்கு பதிலளித்தாள்.
முழு மனதோடு சாரா விரல்கள் அவன் சட்டையை பிடித்துக் கொண்டது.

அது பயத்தின் பிடியாக இல்லாமல், அவளுக்காக தாங்கி பிடித்து, நிற்க வேண்டிய ஒரே மனிதன் கிடைத்த மகிழ்ச்சியின் மற்றொரு உணர்ச்சி.

சார்லஸ் அவளை இறுக அணைத்தான். அந்த அணைப்பு உடலுக்காக இல்லை. அவள் உடைந்து போகாமல் தாங்கிக்கொள்ள. ‘நான் இருக்கேன்’ என்றவிதமாக  கூற முற்ப்பட்டான்.

அவள் முகம் அவன் மார்பில் மறைந்தது. மெதுவாக…
அவசரமின்றி… ஒருவரை ஒருவர் உணர்ந்து அடுத்த கட்டத்திற்குள் நுழைந்தார்கள்.
இருவருக்கும் அதுவொரு புதிய அனுபவம் என்றாலும் சாரா பயப்படவில்லை. அவளை தொடும் கைகள், அவளை காயப்படுத்த வரவில்லை.

சார்லஸ் ஒவ்வொரு நொடியும் கவனமாக இருந்தான்.
அவள் தயக்கம் காட்டும் இடங்களில் நின்றான்.

அவள் நெருங்கும் இடங்களில் மட்டுமே முன்னேறினான்.

சார்லஸால் சாராவுக்கு ஒரு உறவு மட்டும் இல்லை, நம்பிக்கையும உருவானது.

சாரா கண்களை மூடியபடி…
அவனருகே சாய்ந்து கிடந்தாள்.
இருவர் மூச்சு வேகமெடுத்து மெதுவாக அமைதியானது.

-தொடரும்

 

1 thought on “பிரியமானவரே என் தேவதூதனே-15”

  1. Super sis nice epi 👌😍❤️ charles saravukaga pray pannadhu semma sis avanga ammavum seekirama purinji nadandhukanum🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!