அத்தியாயம்-10
சிலை போல எண்ணி பூரிப்பில் கிடந்த ஐஸ்வர்யாவை “தள்ளி நில்லு” என்று கடந்து ”உன்னை யாரு இங்கே வர சொன்னாங்க…” என இலாவை பிடித்து அமர வைத்தான்.
”அம்மா பிரியாணி செய்தாங்க உங்களுக்கு நைட் சாப்பிட” என நீட்ட
”அக்கா செய்ய சொன்னாங்களா இல்லை நீ செய்ய சொன்னியா?” என ரித்தீஷ் கேட்டான்.
”நான் தான் செய்ய சொன்னேன் போதுமா” என்ற சிரிப்பில்
”ரித்தீஷ் அப்பா கேட்டா சொல்லுவல அப்பறம் கல்யாணம் ஆகிடுச்சு நான் எதுக்குனு சப்போர்ட் பண்ணாம இருப்பியா?” என்றாள்.
”அறிவு முதலில் உங்க அப்பா கேட்கட்டும்.. இதுவரை அவர் என்னிடம் கேட்கலை” என பேசிட கீழேயிருந்து இலாவின் அன்னை அழைக்க
”ஒகே டா பாய் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என இலா கிளம்ப அதன் பின்னே ரியாவை கண்டான்.
இவ எதுக்கு மறுபடியும் கோபமா இருக்கா ஒன்னும் புரியலையே என சாப்பிட அமர்ந்தான்.
”இந்தா ரியா சாப்பிடு” என்று கொடுக்க அவளோ அதனை தட்டி விட எண்ண அவனோ அவள் அதை செய்ய தான் கையை தூக்குகின்றாள் என்பதை நொடியில் யூகித்து தட்டை மறைத்து கொண்டான்.
”என்னாச்சு உனக்கு மட்டன் பிடிக்கலை என்றால் சொல்லு உனக்கு வேற வாங்கிடலாம்” என்றாள்.
”அவ எதுக்கு இங்க வர்றா? எதுக்கு சாப்பாடு கொடுக்கறா?” என ரியா கேட்க இலா ரித்தீஷை விட வயதில், மாதத்தில், பெரியவள் என்றிருக்க, ரியா சிறிய பெண் அப்படியிருக்க இலாவை ‘அவள்’ என்று பேசியது ரித்தீஷ்க்கு பிடிக்கவில்லை.
”ரியா முதலில் மரியாதை கொடுத்து பேசு அவள் உன்னை விட பெரியவள்” என்றான்.
”எனக்கு அதை பற்றி கவலையில்லை… அவயெதுக்கு உனக்கு கொண்டு வரணும்? இதுல அவங்க அம்மா உனக்கு அக்காவா?”
”இங்க பாரு நீ தணிகாசலம் பொண்ணா இருக்கும் பொழுது யாரையும் மதிக்காமல் இருக்கலாம் ஆனா இங்க என் வீட்டில் நான் மதிக்கும் நபர்களுக்கு நீயும் மதிப்பு கொடுக்கணும். அதோட அக்கா என்பது பொதுவா சொல்றது தான்… பெண்கள் நீங்க அண்ணா என்று சொல்வதில்லையா?” என்று கிளிபிள்ளைக்கு சொல்வது போல எடுத்துரைத்தான்.
”என்னது.. இது உன் வீடு என்று நீ தான் சொல்லிக்கனும்… சரியான குருவி கூடு என் ரூமை விட அளவுல சின்னது? அவங்ளை அக்கா சொல்ற அப்போ அந்த பொண்ணு என்ன உன் அக்கா பொண்ணா?” என மூக்கு சிவக்க கேட்பவளை பார்த்தவன் மனதில் ஐஸ்வர்யா சிறு வயதில் ‘எனக்கு நீ வாங்கி தர்றேன் சொல்லி கடைசியில் ஐஸ்கிரீம் வாங்கி தரவே இல்லை’ என்று இதே போல நின்ற நினைவிற்கு போனவன் புன்னகைத்தவன்
”அவங்க அக்கா தான் ஆனா எல்லோரும் உன்னை போல அக்கா பொண்ணா இருக்க மாட்டாங்க எனக்கு நீ மட்டும் தான் அக்கா பொண்ணு அந்த இடம் யாருக்குமே இல்லை போதுமா” என்றதும் மலங்க மலங்க விழித்தாள்.
”முதலில் சூடா சாப்பிடு…” என தட்டில் பரிமாற மூக்கை உறிந்தபடி
”இந்த பொண்ணை தான் விரும்பறிங்களா? அவங்களை கட்டிக்க முடியாம அப்பா சொன்னதுக்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டிங்க? இல்லை என்னை கட்டிக்கிட்டா பணம் வரும் என்று அவளை விட்டுட்டீங்களா? அப்படினா அந்த பொண்ணு உங்களை பார்த்து திட்ட தானே செய்திருக்கணும் உங்களுக்கு பிரியானி எல்லாம் கொண்டு வருது… அவங்க அப்பா எதுக்கு அவர்களை அடிக்கணும்… உங்களை விரும்பறதை அவரிடம் சொல்லி இருப்பார்களா? அதான் அடித்து விட்டார்களா?” என கேள்வி மேலே கேள்வி கேட்கும் ஐஸூவை கண்டு நிறுத்தும்படி கையை அசைத்தான்.
”அன்னிக்கு நான் என் லவ்வர் சொன்னது சும்மா தான். நான் யாரையும் விரும்பலை…. அப்பறம் இலா என்னை விட இரு மாதம் பெரியவ.. அதனால அவ இவ சொல்லாதே… அவங்க அப்பாவிடம் தான் நான் வாடகை ஆட்டோ எடுத்து ஒட்டிட்டு இருந்தேன். அதனால கொஞ்சம் மரியாதை கொடு. மரியாதை கொடுக்கற அளவுக்கு அவங்க நல்லவங்க தான்” என கூற உண்டு முடித்தாள்.
“அந்த பொண்ணு உன்னை விரும்புதா மாமா?” என்று தன்னை அறியாமல் தான் கேள்வி கேட்டாள்.
”இல்லை….” என்று ரித்தீஷ் சொல்லி முடிக்க அங்கே கீழே இலக்கியா ”ஆமா ஆமா… எனக்கு அவனை புடிக்கும்… கல்யாணம் ஆனா என்ன? அவனுக்கு புடிக்கமா தானே கல்யாணம் நடந்தது… அதனால எனக்கு அந்த கல்யாணம் பற்றி அக்கறை இல்லை… அவனை மறுபடியும் எனக்கு கல்யாணம் செய்து வைங்க…” என இலா அவளின் அப்பாவிடம் புலம்ப ஆரம்பித்தாள்.
”அவ சொல்றதும் சரி தானே… அந்த பையன் தான் சொக்க தங்கம் ஆச்சே.. அவனுக்கு அப்படி ஆனதால் மட்டும் நீங்க பொண்ணு கொடுக்க யோசிக்கறது தப்புங்க… அவனும் இவளை விரும்பி தானே இருக்கான்.. எனக்கு என்னவோ நீங்க கட்டி கொடுக்க அந்த பையனிடம் பேசி பாருங்க… நீங்களா ஆரம்பிக்கமா இருந்தா அவன் இந்த மறுகல்யாணம் எல்லாம் ஒப்புக்க மாட்டான் சொன்னா என்ன அர்த்தம்?” என மகாலட்சுமி கெஞ்சினார்.
எதுவும் பேசாமல் இலக்கியா தந்தை நகர்ந்தார்.
மெத்தைக்கு கவரை எடுத்து புதிய மெத்தை விரிப்பை மாட்டி விட்டான்.
”ரியா…தூங்கு” என்று சொல்ல இதுவரை இவனிடம் ஒரே அறையில் இல்லாத தயக்கம் இருக்க இன்று எப்படி உறங்க என்று புரியாமல் பார்த்தாள். அவனோ அங்கே இருக்கும் அவளின் ஆடையை எடுத்து பீரோவில் அடுக்கி வைத்தான்.
அவளுக்கு அவன் தனது ஆடையை எல்லாம் அடுக்குகின்றான் என்றது எல்லாம் கருத்தில் பதியவில்லை இவரோடு எப்படி இங்கே? என்றதிலே சிந்தனை ஓட நேற்று இல்லையா? என்று மனம் சொல்ல ‘அது என் ரூம்… அம்மா அப்பா வீட்ல இருந்தாங்க எதுனா உடனே வருவாங்க இங்க? இவர் நேற்று மட்டும் நிம்மதியா படுத்து தூங்கினார் என்னால இங்க நிம்மதியா தூங்கவே முடியாது’ என்பதாக நினைத்தாள். அது தனக்கு உண்டான பெண்மையின் மனம் என்பதை அறியாவில்லை.
கொஞ்ச நேரம் அவனையே பார்த்தவள் அவளை அறியாமல் உறங்க, ரித்தீஷ் அவளின் புத்தகம் ஆடை எல்லாம் கச்சிதமாக அடுக்கி முடித்தான்.
அவனோ மடக்கு கட்டிலில் எடுத்து விரித்து அதில் உறங்க ஆரம்பித்தான்.
அதிகாலை எழுந்த ஐஸூவிற்கு கட்டிலில் புதிய இடத்தில் இருக்க கண்டவள் அதே கட்டிலில் தானே ரித்தீஷ் மாமா உறங்கி இருக்க வேண்டும் என திரும்பி பார்க்க அவனோ மடக்கு கட்டிலில் உறங்க கண்டவள் நிம்மதியுற்றாள்.
மெல்ல எழுந்தவள் அங்கே அறையை சுற்றி பார்த்தாள். நேற்றைய விட இன்று அழகாக தோன்றியது அவ்வறை… எல்லாம் ஒதுக்கி வைத்து தனது புத்தகங்கள் முதல் ஆடைகள் இருக்க சுவரை பார்க்க அங்கே ரித்தீஷ் ஐயர்ன் செய்த ஆடையுடன் நிமிர்ந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் புகைபடம் ஒன்று கண்ணில் தெரிந்தது. சிறுகண்ணாடி அளவு கொண்ட அந்த புகைப்படத்தில் இருப்பது அவன் தானா என புரியாமல் பார்த்தாள்.
நாம பார்த்த வரை ரித்தீஷ் மாமா டிரஸ் இன் செய்யாதே.. ஷூ போடாதே… இப்படி அழகா ஹேர்ஸ்டைல் கூட இல்லையே….சும்மா அப்படியே பாண்ட் ஷர்ட் போட்டு மேல ஒரு காக்கி டிரஸ் போட்டுக்கும் அதுவும் பாதி தான் பட்டன் போட்டு இருக்கும்… சப்பல் தானே போட்டுகிட்டு இருக்கும்… இது எப்போ எடுத்தது? என ஆர்வமாய் பார்க்க காபி நறுமணம் நாசியில் வருடியது.
அங்கே குளித்து முடித்து ரித்தீஷ் இன்டெக்ஸ் ஸ்டவ்வில் காபி கலந்து அவளிடம் நீட்ட அதிசயமாக வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.
காபியின் சூட்டில் உதடு சுட ”ஆஆ … என அலற
”மெதுவா குடி ரியா” என்றான் மெல்ல அப்பொழுது தான் அவன் ரியா என்று அழைப்பது புரிய திருதிருவென விழித்தவள்.
”என்னனு கூப்பிடீங்க?” என்று கேட்டாள்.
”ரி…யா… என்று… உனக்கு தான் நான் ஐஸூ சொன்னா கோவம் வருமே அதான்… ரியாவாது கூப்பிடலாம் தானே? ஏன்னா உன்னை வேற எப்படி கூப்பிட தெரிலை மா” என்றதும்
”ரியா’னே கூப்பிடுங்க மாமா” என்றவளுக்கு மாயத்தில் சிக்கிய உணர்வு.
”உனக்கு மாமா சொல்றது பிடிக்கலை என்றால் எப்பவும் போல மொட்டையா கூப்பிடு.. எனக்கு பிரச்சனை இல்லை…” என்றவன் பேச்சில் திடுக்கிட்டாள்.
”எதுக்கு இப்படி சொல்லறீங்க?” என்றால் உள்ளுக்குள் சென்ற குரலில்
”இல்லை நீ 11த் படிக்கும் பொழுது மாமா சொல்ல பிடிக்கமா ரித்தீஷ் அப்படி சொல்லி அதுக்கு அக்காகிட்ட அடிவாங்கி அப்பறம் உனக்கு என்னை கொஞ்சம் பிடிக்காது.. அதுல அக்காகிட்ட ‘உங்க தம்பியை அப்படி தான் சொல்லுவேன்’ நீ மறுபடியும் சொல்லி அதுக்காக முழங்காலில் அக்கா கரண்டியால் சூடு வைத்தது இருந்தாங்க’அதுல இருந்து அக்கா முன்னாடி நீ ரித்தீஷ் சொன்னதும் இல்லை மாமா சொன்னதும் இல்லை என்னை மொட்டையா தானே கூப்பிடுவா?! அதே பழகி இருக்கும் நீ அப்படியே பேசு எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்றான.
”ஈஸ்வர்…ஈஸ்வர்…” என அவனை இலா அழைக்க இவர்கள் பேச்சு முடிந்தது போல வெளியே போனான்.
‘வந்துட்டா… சும்மா… ஈஸ்வர் ஈஸ்வர் சொல்லிக்கிட்டு… மாமா இவளை விரும்பலை இவ மாமாவை விரும்புறாளா? எனக்குனு வில்லியா கிளம்புவாளா?’ என்று அவள் மாமா மீது ஏற்பட்டிருக்கும் அன்பை பங்கு போட வந்தவள் என்று கூட தோன்றவில்லை ரியாவுக்கு.
”என்னடா நைட் புல்லா தூங்கலையா…?” என்ற குறுஞ்சிரிப்பில் தான் அவளின் பேச்சு ஐஸூ மனதில் என்ன விதைக்குமோ என்று பயந்து போனான். திரும்பி பார்க்க ஐஸூ புலம்பியபடி செல்வது மட்டும் தோன்றியது.
‘சே காலையிலே வந்துட்டா.. எப்ப பாரு.. அட்டை போல ஒட்டிக்கிட்டு இருப்பா போல’ என திட்டி கொண்டே இருந்தாள்.
”இலா என்ன பேச்சு பேசற… அவ குழந்தை.. அவளை போயி எனக்கு கட்டி கொடுத்துட்டாங்கனு தவிக்கின்றேன் நீ வேற..” என்றான்.
”டேய் குழந்தை அது இது சொன்னா உன்னை கொன்றுடுவேன்… தேர்டு இயர் படிக்கிறா உனக்கு குழந்தையா? மனசை தொட்டு சொல்லு… அவ உன்னை பார்க்கும் பொழுது எல்லாம் நீ என்னிடம் பேசற பேச்சுக்கு அவளுக்கு புகை வருது… அவ மேட்சூர்ட் தான்….” என்றாள் இலா.
”நம்ம வீட்ல வளர்ந்த குழந்தை நமக்கு எப்பவும் அதே போல தான் கண்ணுக்கு தெரிவார்கள் இலா உனக்கு புரியாது… அவ என்னை கழுத்தை கட்டிக்கிட்டு மாமா மாமா பேசிய வார்த்தை தான் என் கண்ணுக்கு தெரியுது… அதை மீறி அவளை குமரியா பார்க்க முடியலை…” என்றான்.
”ரித்தீஷ்… ரித்தீஷ்…ரிது..” என்ற ரியா அழைப்பில் என்னவோ ஏதோ என்றே ஓடி வர அதே நேரம் டவல் கட்டி கொண்டு வெளியே வந்தவளை ரித்தீஷ் அதிர்ச்சியோடு பார்த்தான்.
”ரித்தீஷ் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என் டிரஸ் என் புக் எல்லாம் பார்த்து பார்த்து எடுத்து வைத்த இந்த டவ் சோப் எடுத்து பாத்ரூமில் வைச்சியா? எத்தனை முறை கூப்பிடறது….” என்று அவளது பெட்டியில் இருந்து எடுக்க ரித்தீஷ் அவளை தழுவி இருந்த டவல் கண்டு புரியாமல் திரும்பியவன் டோர் திறந்து இருக்க முதலில் அதனை மூடினான்.
இங்க பாரு எனக்கு இந்த பேஸ்ட் பிடிக்காது காரமா இருக்கும். குளோஸ்அப் பேஸ்ட் ஜெல் வாங்கு எனக்கு அது தான் பிடிக்கும் அப்பறம்…” என்று சொல்ல வந்தவள் ரித்தீஷ் தன்னை பார்ப்பதை தவிர்க்க, அவளை ஆராய டவல் மட்டும் அணிந்து வந்த தன்னையே கண்டு வேகமாக குளியல் அறைக்கு ஓடினாள்.
குளியல் அறைக்குள் ‘முட்டாள் முட்டாள் அங்க என் ரூமில் இருக்கற மாதிரியே வந்து நின்றுட்டேன்… அங்க அம்மா தான் இருப்பாங்க… இங்க ரித்தீஷ் மாமா…ஐயயோ.” என புலம்பி ஒரு மணி நேரம் கழித்தே வெளியே வந்தாள்.
அறையில் ரித்தீஷ் இல்லாமல் நிம்மதியடைந்தாலும் இனி அவனை எப்படி எதிர்க்கொள்வது என தவித்தாள்.
தொடரும்.
