Skip to content

தாரமே தாரமே வா-23

58 / 100 SEO Score

அத்தியாயம்-23

ஐஸ்வர்யா அவள் பாட்டிற்கு சென்று அறைக்குள் புகுந்தாள்.

ரித்தீஷ் எப்படியும் சமாதானம் செய்திடும் முடிவில் தான் அவளோடு அருகே வர அவளோ எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள்.

ரித்தீஷ் தான் அவள் அருகே சென்று அவளுக்கென வாங்கிய கட்டில் உறங்க வர ரியா அமைதியாகவே இருந்தாள். ரித்தீஷ் உறங்கியதும் மடக்கு கட்டில் எடுத்து விரித்து அதில் உறங்கினாள்.

அதிகாலை தான் ரித்தீஷ் எழுந்தபொழுது அவள் கட்டிலில் இல்லை என்றதும் வேகமாக எழ, அவளோ அவன் முன்பு படுத்திருப்பது போல அந்த கட்டிலில் படுக்க கண்டு நிம்மதியுற்றான்.

‘இவ எப்ப மலை ஏறங்குவானு தெரிலையே… ஆன ரித்தீஷ் நீ பேசியது தான் டா தப்பு… அவள் இலாவை என்ன ரீஸன்காக கையை உதறினாலும் அவள் திமிரை மட்டும் பேசி இருக்கணும் அவளை இப்படி அடிச்சிருக்க கூடாது. மாமா அக்காவே அவளை அடிக்கமா வளர்த்திருக்காங்க அதை நீ பார்த்திருக்க, வெங்கட் விஷயம் ஆரம்பிச்சப்ப மாமா அடிச்சார். அப்ப எல்லாம் மாமாவை திட்டின, இப்ப நீயே அடிச்சிருக்க’ என மனசாட்சி அதட்டியது.

‘ஆமா இப்போ வந்து பேசி புரிய வை நேற்றே நான் அடிக்கும் முன்ன வந்து பேசி எனக்கு முதலில் புரிய வச்சி இருக்கலாம்ல.’

‘அடேய் நீ எப்படி அடிச்சேனு உனக்கே தெரிலையா ரீப்ளே பண்ணி பாரு அவ வலிக்குது மா அடிக்காத என்று‌ சொல்லியும் திரும்ப திரும்ப அடிச்ச. பாவம் அவ நீ அடிக்கடி சொல்ற மாதிரி பால் நிறம் இப்போ ரோஸ் கலரில் இருக்கா அவ கன்னம்’ என்றெடுத்துரைக்க அவளோ எழுந்தவள் அவனை பார்க்காமல் குளிக்க சென்றாள்.

தனது காலர் இருக்கும் முழு கை ஆடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றவள் சிறிது நேரத்திற்குள் வர அவனோ காபி முன் நீட்டி இருக்க அவனை பார்த்து

”பால் அங்க தானே இருக்கு? சர்க்கரை அங்க இருக்கு, காபி பொடி இருக்கு எல்லாம் எனக்கு தெரியும் வேணுமின்னா நானே போட்டு குடிச்சுப்பேன்” என்று அவனை கடந்து அவள் ஆடையை உலர்த்த சென்றாள்.

தோசை சுட்டு வைக்க அதனை அவள் முன் மறுபடியும் நீட்டினான்.

”ஹலோ மாவு இருக்கு, சட்னி இருக்கு, எனக்கு கையும் இருக்கு, நானே சுட்டு சாப்பிட்டுப்பேன்.. சுட தெரிலை என்றால் யுட்டூப் பார்த்து கூட பார்த்து சுட்டுக்கறேன்… ” என்றாள்.

”ரியா அது ஏதோ கோவத்தில்…” என்று முடிக்கும் முன் கையை எடுத்து கும்பிட்டவள்

”தயவு செய்து என்னை விட்டுடுங்க.. எனக்கு காலேஜிக்கு நேரமாச்சு நேற்றே லீவு போட்டிருக்கேன்… காலேஜ் போகணும், அதையாவது ஒழுக்கா செய்யறேன்”

”உன் மு..முகம் எல்லாம் ரெட் காலரா அடிச்ச சுவடு இருக்கு ரியா” என்றான் விழுங்கிய குரலில் ஒரு ஷாலை எடுத்து முகத்தில் பைக் ஓட்டும் பொழுது அணிந்து கொள்வதை போல செய்தவள்

”இது போதுமா இனி என் மூஞ்சியை யாரும் பார்த்து உன்னை யாரு அடிச்சதுனு கேட்க மாட்டாங்க… அப்படியே கேட்டா இரும்பல்னு சொல்லிக்கறேன்… அதையும் மீறி கேட்டா என் ஸ்டைல்ல சொல்லி கொள்ளறேன். முகம் மூடி கிளாஸ் கவனிக்க கூடாதுனு எந்த சட்டமும் இல்லை” என்றாள்.

”எதுக்கு அப்படி கஷ்டப்படணும் பொ..ய்” என்று வாயை மூடிக்கொண்டான்.

”என்ன செய்ய நான் தான் பொய் பேசி நடிக்கின்றேன் எல்லாரும் சொல்லறிங்கலே, அதுக்கு பிறகும் எதுக்கு உங்களிடம் நடிக்க… விடுங்க… நான் உங்க அளவுக்கு படிப்பில் சுர புலி இல்லை… ஏதோ காலேஜ் போய் படிச்சு இருக்கற சிங்கள் டிகிரியாவது முடிக்கிறேன்… இல்லை அங்க அந்த மூணு நாயுங்க சுற்றுது அது கூட…சுற்றறேனு உங்களுக்…” என்றதும் ரித்தீஷ் அவள் வாயை கைகளால் மூடினான்.

”கொல்லாதடி… நான் வார்த்தையால உன்னை கொன்றதுக்கு திரும்ப அதே பேசி கொல்லாத…” என்றான்.

”நான் எங்க பேசினேன்.. பெற்ற அப்பவே அப்படி தானே பேசினார்… என்ன அப்போ நீங்க என் மனைவியை பேசாதிங்கனு சொல்லி எனக்குள் ஒரு காதலை அதிகப்படுத்திட்டிங்க…. என்ன பார்க்கறிங்க.. நானும் உங்க அக்கா வைதேகியும் பேசியதை நீங்க எப்படி கேட்டீங்களோ அதே போல தான் நீங்களும் உங்க மாமாவும் பேசியதை கேட்டேன்… ஓட்டு கேட்கணும் என்று எல்லாம் வரலை… உங்களை பார்த்து அப்பா பின்னாடியே வந்ததும் என்னை அம்மாவிடம் பேசாம இருக்க பண்ணினாரே அது பற்றி பேசுவிங்க உங்களோட சேர்ந்து அப்பாவை எதிர்த்து பேச தான் வந்தேன் ஆனா அன்னிக்கு அப்பா மனசை உடைச்சுட்டார்..” என்று அழுதபடி டவல் எடுத்து துடைத்தவள் கண்ணீரால் கன்னம் எரிய முகம் கழுவினாள்.

”இப்போ வர முடியுமா இல்லை நானே போகட்டுமா” என்று கேட்க ரித்தீஷ் அவளையே பார்த்தான். காதல் உடல் கவர்ச்சியால் வந்தது என்று அல்லவா நினைத்தான். தன்னை போலவே ரியாவும் அவனது செய்கையை கவனித்து தன் மீது காதல் பிறக்க உரைத்திட எண்ணி எல்லாம் தவறாக எண்ணி கொண்டேன். இவன் பார்வையை அகற்றாமல் இருக்க,

”நான் திமிர் புடிச்சவ… பணக்கார திமிர்… பொய் பேசறேன்… ஒழுக்கம் கெட்டவள் .” என்று முடிக்கும் முன்

”ரியா…. நிறுத்து கிளம்பு காலேஜ் போகலாம்.” என்றதும் அமைதியாகி விட்டாள். கண்ணில் கருப்பு கண்ணாடி அணிந்தவள் ”ஹலோ இது ஸ்டைலுக்கு இல்லை மெட்ராஸ் ஐ சொல்லிப்பேன்”. என்றவள், கொஞ்ச தூரம் சென்று திரும்ப வந்து ”இதுவும் பொய் தான்” என விருவிருவென்று கிளம்பினாள்.

‘இவளை அடிச்சு எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேனோ.’ என்று கிளம்பினான்.

எதிரில் யாரையோ மோத ”சாரி” என ரித்தீஷ் சொல்ல

”டேய் ஈஸ்வர் என்னை தெரிலையா டா… நான் தான் யுகேந்திரன்.. டா” என அறிமுகபடுத்தி கொண்டான்.

”சாரி டா…ஸ்கூல் டேஸ் பார்த்ததும் இப்படி ஆளே அடையாளம் தெரியாம இருக்க எப்படி இருக்க?” என்று ரித்தீஷ் கேட்ட பின்னர்

”ஹ்ம் நல்லா இருக்கேன் டா… நீ…”

”ஹ்ம்”

”பாரு உன்னை பார்த்து காபி அடிச்சு இப்போ இந்த காலேஜ் பிரோபஸ்சரா வந்து சேர்ந்து இருக்கேன்… ஆமா நீ எங்க இங்க?” என கேட்டதும்,

”ஒய்ப் ரியாவை ட்ராப் பண்ண வந்தேன் டா.. ஆட்டோ ஒட்டறேன்” என்றான். யுகேந்திரனோ பெயரை எல்லாம் கவனிக்காமல்,

”என்னது ஆட்டோவா? டேய் நீ எடுத்த மார்க்குக்கு எல்லாம் நீ எங்கயோ வர வேண்டியது. ஏன் டா” என்றான்.

”அதெல்லாம் வருவேன்… என்ன கொஞ்சநாள் ஆகும்… எம்‌.பி‌.ஏ முடிச்சு இருக்கேன் டா ஜாப் தேடிட்டு இருக்கேன். ஆமா இங்க எப்படி?”

”அப்பா மூலமா வந்தேன் டா… எனக்கு இந்த வாத்தியார் உத்தியோகமே பிடிக்கலை… ஏதோ பொண்ணு பார்க்கும் வரை ஒரு வேலை செய் டானு அப்பா ஒரே தொல்லை.” என்றான் யுகேந்திரன்.

”சாரி டா இன்னிக்கு தான் எனக்கு முதல் நாள், இன்னிக்கே லேட் ஆக கூடாது” என யுகேந்திரன் கூற, ரித்தீஷ் கை கொடுத்து சென்றான்.

ரித்தீஷ் ரியா பற்றி எல்லாம் மறந்து பணியில் சிரத்தையாக ஓட்டினான். மாலை கல்லூரி வந்து நிற்க ‘பூர்வீயோ ரித்தீஷ் ரியாவை தேடுவதை அறிந்து

”அவ அப்பவே வேற ஆட்டோல வீட்டுக்கு கிளம்பிட்டா அண்ணா” என்றதும்,

”தாங்க்ஸ் மா” என கிளம்பினான்.

எல்லாம் முடிந்தது என்றெண்ணி இருக்க, இவ என்ன நான் வரும் வரை கூட நிற்காம வந்துட்டா? என்று அவளுக்கு எக் பப்ஸ், ஆரஞ்சு வாங்கி கொண்டு நுழைய, அவளோ வீட்டுக்கு வெளியே தரையில் உட்கார்ந்து போனில் டெம்பிள் ரன் விளையாடி கொண்டிருந்தாள்.

”போனில் நீயா வந்துடுவனு சொல்லி இருக்கலாம்ல…” என்று கதவை திறந்து சொல்ல அவளோ வேகமாக பாத்ரூம் சென்றாள்.

வெளியே வந்தவளை கண்டு பப்ஸ் எடுத்து நீட்ட… அவளோ அந்த பையை தட்டி விட்டாள். ஆரஞ்சு எல்லாம் மூலைக்கு ஒன்றாக ஓடி சிதறியது.

”ரியா.” என்ற கோவமாக கத்த துவங்கியவன் நேற்று போல அடித்திடுவோமோ என்று பயந்து வெளியேறினான்.

அவனின் ரியாவோ கண்ணீர் வர ‘ஆமா மதியம் இவ எப்படி சாப்பிட்டானு ஒரு வார்த்தை கேட்க மாட்டார்.. இவரா ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்து கொடுத்தா நான் அதை வாங்கி திங்கனுமா? என்று அழுதாள். அவளுக்கு படிக்கும் ஆர்வம் விட ரித்தீஷ் பேச்சே மீண்டும் ஒலிக்க அப்படியே புத்தக பையில் சாய்ந்து உறங்கினாள்.

இரவு ஒன்பது அளவுக்கு வந்தவன் வீடு இருட்டாக இருக்க கண்டு லைட் போட இருளில் ஒரு ஓரத்தில் ரியா புத்தக பையில் மேலே படுத்துறங்க கண்டான்.

சத்தமில்லாமல் பூரி உருளை கிழங்கு செய்து அவளை எழுப்ப அவளோ கண்ணை கசக்கி எழுந்தவள் அவனை பார்த்து நேரத்தை பார்த்தாள்.

”வா நேரமாச்சு சாப்பிடலாம்” என தோளை தொட, தட்டி விட்டவள் ”பசிச்சா எனக்கு சாப்பிட தெரியும் போங்க” என்று வீம்பு செய்தாள்.

”ரியா சின்ன பிள்ளைத்தனமா பண்ணாத… உன்னை அடிச்சேன் தப்பு தான்.. வேணுமின்னா திருப்பி அடிச்சுக்கோ” என முன் வந்து நின்றான்.

”என்கிட்ட எல்லாம் இப்படி சொல்லாதிங்க ஒரு நேரம் இல்லை ஒரு நேரம் அடிச்சுடுவேன்” என்றாள்.

”சரி சாப்பிட வா… கெஞ்ச வைக்காதே…” என்றவனை முறைத்தபடி திரும்ப,

”சாப்பிட வர மாட்ட, என் கூட ஆட்டோவிலும் வராம வேற ஆட்டோ பிடிச்சு வந்திருக்க, நான் மன்னிப்பு கேட்டுட்டேன். என்ன தான் கோவம்?” என்றான் ரித்தீஷ்.

“நான் வேற ஆட்டோ வந்தது மட்டும் தான் தெரியும். ஆனா மதியம் சாப்பிட்டேனா இல்லையா என்று உங்களுக்கு தெரியுமா? நான் போனில் சொல்ல வேண்டியது தானே கேட்டீங்களே, நீங்க ஒரு போன் செய்து, ஒரு வார்த்தை கேட்டீங்களா?

இங்க சாப்பிட சொல்ல கெஞ்ச வச்சேன்.? மதியம் நான் சாப்பிடலை ஏதாவது போனில் கெஞ்சுங்கனு சொன்னேன்.

நான் சாப்பிட்டேன இல்லையா அந்த கவலையே உங்களுக்கு மறந்து போச்சு அப்போ எப்படி என்னை அழைத்து வர வருவீங்க என்று நம்பி அங்கயே இருக்க? இந்த முகம் வேற ஷாலில் உரசி எரிச்சலா இருந்துச்சு தெரியுமா?” என விசும்பினாள்.

”போங்க நான் எது வாங்கி கொடுத்தாலும் தின்னுடுவேன் தீனி மூட்டை நினைச்சுடிங்களா?” என அவள் பேச பேச ரித்தீஷ் இன்று தான் சாப்பாடு செய்யாமல் கொடுத்து விடாததும் அவள் இந்நேரம் வரை சாப்பிடாமல் இருக்கின்றாளா? என தவித்துப் போனான்.

”ரியா சாரி… நான்..” என சக்தி இழந்தவன் போல உட்கார்ந்து விட்டான்.

”இப்போ சாப்பிட வா மா” என்றான்.

”ஒன்னும் வேணாம்…” என படுத்து கொண்டாள்.

”ப்ளீஸ் டி… நான் பண்ணியது தப்பு தான் எல்லாமே தப்பு தான். அதுக்காக உனக்கு தண்டனை கொடுத்துக்காதே… வந்து சாப்பிடு…” என கெஞ்சினான்.

அவன் கெஞ்சுவதை தாளாமல், அவளாக எழுந்து பூரி உருட்டினாள்.

அவள் அதையாவது சாப்பிடட்டும் என அமைதியாக இருந்தான்.

ரியா உருட்டும் பூரியோ வட்டம் தவிர்த்து எல்லா வித பாகங்களில் வந்து நின்றது. அதனை உதடு பிரியாமல் பார்த்து சிரித்தான். சத்தமின்றியே… எண்ணெய்யில் போட அவளுக்கு அப்படி போட்டு பழக்கம் இல்லாது போக எண்ணெய் வெளியே தெளித்தது…. கையிலும் சில துளிகள் பட்டு எரிச்சல் வர

”ரியா பார்த்து எண்ணெய் தெளிக்கு தள்ளு ரியா நான் சுடறேன்” என ரித்தீஷ் வர,

”ஒன்னும் வேணாம்… போங்க இந்த சூடு எல்லாம் பொருத்துக்கற மாதிரி தான் இருக்கு… நீங்க பேசியதை விட… ” என்று சாட, அவனோ மெல்ல இடம் விட்டு நகர்ந்தான். அவள் கொஞ்சம் தீய்ந்து ஒரு வழியாக எடுத்து நாலு பூரி உண்ணவும் தான் ரித்தீஷ் உண்ண ஆரம்பித்தான்.

நேற்று போலவே அவன் கட்டில் அருகே வர புத்தகம் இருக்கும் இடத்திலே படுத்து கொண்டாள்.

”ஏன் ரியா இப்படி பன்ற…? ஒன்னு உன் கட்டிலில் படு, இல்லை அந்த மடக்கு கட்டிலில் படு எதுக்கு இப்படி தரையில் புத்தகப்பையை பிலோ வச்சிக்கிட்டு தூங்கற?” என்றான்.

”எதுக்கு கட்டிலில்? நீங்க அதுக்கும் ஏதாவது சொல்லுவிங்க… சாப்பாடு கூட பரவாயில்லை…. ஆனா இனி இதுல ஒன்னா தூங்க மாட்டேன் போதுமா” என போர்வையில் மூடிக்கொண்டாள்.

ரித்தீஷ் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான். அவள் அன்று தன்னோட தலையணை வைத்தது எண்ணி தான் தவறாக எண்ணி விட்டோமோ என பயந்து இப்படி செய்கின்றாளெனபுரிந்தது. ஆனால் அதை இப்பொழுது சொல்லி அவளுக்கு விளக்கி மன்னிப்பு கேட்டும் அவள் விடமாட்டாள். அவனும் மடக்கு கட்டில் சென்று உறங்கினான்.

நேரம் போக அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதி செய்து அவளை பூப்போல தூக்கி கட்டிலில் கிடத்தினான். நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான். அவளையே பார்த்து அவனும் உறங்க அன்றைய இரவு கழிந்தன.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!