The leader-15
அத்தியாயம்-15
துப்பாக்கி சத்தம் காதை கிழித்தது.
ஷ்ரத்தாவின் கைகள் இன்னும் துப்பாக்கியை பிடித்தபடியே உறைந்து போனது.
அவள் மூச்சு நின்றது. அவள் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து தோட்டா தெறிக்க, அது
முன்னே நின்றிருந்த சத்ரியனை உரசி அருகேயிருந்த கண்ணாடியை துளைத்தது.
சத்ரியன் அசராமல் அங்கேயே இருந்தான். ஒரு சொட்டு ரத்தமும் இல்லை. பின்னால் இருந்த கண்ணாடி தடுப்பு உடைந்து தூளாகிய சத்தம் கேட்டது.
சத்ரியன்ஆங்காரமாய் சிரித்தான்.
அந்த சிரிப்பு… பொதுவான சிரிப்பே இல்லை. எதிரே இருப்பவர்களின் மனதை பதை பதைக்கும் சிரிப்பு.
ஷ்ரத்தாவின் கண்கள் பெரிதாகத் திறந்தன. “இது… என்ன… இவனை சுட்டு பொசுக்க நினைத்தாலும் இயலாமல் போனதே’ என்று அவள் உதடு துடித்தது.
அவள் கீழே பார்த்தாள். அவள் கையில் இருந்த துப்பாக்கியில் சூட்டில் லேசான புகை வரக் கையை உதறினாள். சத்ரியன் மெதுவாக அருகே வந்தான்.
“பரவாயில்லையே… என்னை ஷூட் பண்ணிட்ட. பொதுவா என் எதிர்ல யாரும் என்னை அழிக்க நினைச்சதில்லை. ஏன்னா அழிக்க நினைச்சா அவங்களை சர்வ நாசம் செய்துடுவேன். ஆனா நீ சுட்டும் என் முன்ன உயிரோட இருக்க. காரணம்… நான் உன்னை விளையாட விட்டு வேடிக்கை பார்க்கறேன் ஷ்ரத்தா. நீயா துப்பாக்கியை ஏந்தி சுட்டு. அந்த தோட்டா ஏதோவொரு மூலைக்கு போய் சேர்ந்திட, உன் கை நடுக்கமும் உதறலுமா பார்க்க எனக்கு பிடிச்சிருக்கு.
ஒன்னு என்னையே சுட ஒருத்தி வந்து நின்னுட்டா.
இன்னொன்னு என்னை சுட வந்தவளை நான் ரசிக்கறேன். அது ஏன்னு தெரியுதா?” என்று மெதுவாக கிசுகிசுப்பாய் கேட்டான்.
அந்த குரலில் கேலி இல்லை…
ஆனால் அதைவிட மோசமான ஒரு தகிப்பு இருந்தது.
ஷ்ரத்தா பின்னோக்கி ஒரு அடியெடுத்தாள்.
“நீ.… நீ என்னை ஏமாத்திட்ட. நீ என்னை அலட்சியமா நடத்தி, என்னால சுட முடியாதுனு தெரிந்தே துப்பாக்கியை நீட்டியிருக்க” என்று அவள் குரல் உடைந்தது.
“ஏமாற்றிட்டேனா? நானா?” சத்ரியன் தலையை அழகாய் சாய்த்தான்.
“நெவர் ஷ்ரத்தா.. நெவர்… உன்னை டெஸ்ட் பண்ணினேன். என்னை கொல்ல வேகமிருக்கானு டெஸ்ட் பண்ணினேன். நாட் பேட்… யோசிக்காம என் உயிரை எடுக்க தைரியமா இருக்க” என்று பாராட்டினான்.
அவள் அருகே இன்னும் நெருங்கினான்.
”நான் சாகலைனு பீல் பண்ணறியா ஷ்ரத்தா. நீ என்னை அனுஅனுவா கொல்ல முடியும் ஷ்ரத்தா?” என்று
அவன் குரல் மார்க்கமாய் கிசுகிசுப்பாய் இறங்கியது.
அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் அவளது கண்களை நேராக பார்த்தான்.
“நான் சொல்ல வர்ற அர்த்தம் இப்ப புரியுதா ஷ்ரத்தா?” என்றான்.
“நீ என்னை வெறுக்கிற அளவுக்கு… கொல்ல ரெடி. ஆனா உன் எண்ணம் ஈடேறாது. ஒரு நாள் உன் உடம்பில் தோட்டாக்கள் நுழைந்து இரத்தம் பீறிட்டு, வெளிய தெறிக்கும். அப்ப நீ இப்படி சரசமா பேசி கிசுகிசுப்பா சீண்ட மாட்ட” என்று கூறவும் சத்ரியன் உதடு சற்று ஏளனமாய் வளைந்தது.
“உன்னை ஏன் பிடிக்குது தெரியுமா? என் எதிர்ல என்னை கொல்வேன்னு தைரியமா பேசற பாரு. அதான் எனக்கு பிடிச்சிருக்கு. அத்தோட இன்னொன்னு ஆச்சரியமா இருக்கு. காலேஜ் பஸ்ட் இயர் படிக்கிற பாப்பாவுக்கு ஒன்னும் தொரியாதுனு நினைச்சேன். நீ மெடிக்கல் ஸ்டூடண்ட் ஆச்சே. எல்லாம் ஓரளவு பேசறது புரியுதுன்னு தெரியுறப்ப. தலையை சுத்தி மூக்கை தொட வேண்டாம்.” என்று சத்ரியன் ஆனந்தப்பட்டான்.
ஷ்ரத்தா அதிர்ச்சியில் அவனை பார்த்தாள்.
“நீ என்ன பைத்தியமா?” என்று கத்தினாள்.
“இதுவரை இல்லை. ஆனா இதுக்கு மேல… உன் மேல பைத்தியமாகிடுவேனோனு பயமா தான் இருக்கு. ஆன்… நீ பாப்பா கிடையாது இனி தைரியமா என்னவேண்ணா பேசலாம்” என்று யோசிக்காமல் உடனடியாக சொன்னான்.
அந்த வேகமான பதில் அவளை மேலும் பயமுறுத்தியது.
ஷ்ரத்தா உடனே விலகினாள்.
இம்முறை அவன் சிரிக்கவில்லை.
”நீ என்னை பார்த்து பயப்படுற. ஷ்ரத்தா?” அவன் அமைதியாக கேட்டான். “எனக்கென்ன பயம். பயமில்லையே” என்று அவள் உடனே எதிர்த்தாள்.
“அப்போ ஏன் இப்பவும் கை நடுக்குது? உடல் நடுங்குது.
அவள் கையை பார்த்தாள்.
அது உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் பற்களைனால் உதட்டை கடித்தாள்.
“நீ என்ன பண்ணுற? அதை விட்டுடு. பாவம்… உன் பற்களால் வதைப்படுது. அட்லீஸ்ட் என் உதட்டால் காயப்பட்டாவாது மோட்சம் பிறக்கும்” என்றவன் பேச்சில் சினமுற்றாள்.
“என்னோட லைஃப்ல என்னையே கட்டுப்படுத்த பார்க்கறியா?” என்றாள்.
சத்ரியன் மறுப்பாய் சிரித்தான்.
“இல்ல…. நான் கட்டுப்படுத்த மாட்டேன். ஆனா நீயாவே என்னோட கட்டுப்பாட்டுக்குள் தானா வருவ. வரவைப்பேன்.” என்றான். சத்ரியனின் அழுத்தமான பேச்சால் ஷ்ரத்தா மனம் உள்ளே உடைத்தது.
“நெவர் இந்த உடலில் உயிர் இருக்கறவரை நான் நானா யாரோட கட்டுப்பாட்டுக்குள்ளயும் வரமாட்டேன்.” என்று கத்தினாள்.
சத்ரியன் அமைதியாக அவளை பார்த்தான்.
“உங்கப்பா திவாகரும் முதலில் என் கேஸை வாதாடி தர சொல்லி நின்றப்ப, இந்படி தான் முடியவே முடியாதுனு கர்ஜித்தார். நீதி நேர்மை நியாயம் நிறைய பேசினார். ஆனா கடைசியில என் பேச்சை கேட்டு நடந்தார். காரணம்… பணம் இல்லை ஷ்ரத்தா. இங்க சத்ரியன் நினைச்சா நினைச்சதை நடத்தி காட்டுவான்.” என்றான்.
ஷ்ரத்தாவுக்குள் ஒரு புயலே உருவாகியது.
“நீயும் உங்கப்பா மாதிரி திரும்பி வருவ. நான் நினைச்சதை நடத்தி காட்டுவேன். அப்ப நான் போடாற கட்டத்தில் நீ வட்டமிட்டு நிற்ப” என்றவன், தன் கைகடிகாரத்தை பார்த்து, செல்வதற்கான நேரம் வந்துவிட்டதை அறிந்து “எனக்கு நேரமாச்சு. பை டியர் நீயா தேடி வருவ. அப்ப சேர்ந்து இதே போல ஒரு டின்னர் சாப்பிடுவோம். டின்னர் முடிச்சி ஒன்னா கூட ஸ்டே பண்ண நேரலாம்.” என்றான் கண்சிமிட்டி.
அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். சத்ரியன் பேசியதில்
ஷ்ரத்தா உறைந்து நின்றாள்.
வெளியே செல்லும் முன் அவன் நின்றபடி, திரும்பாமல் சொன்னான். “நீ போட்டிருக்கற வெள்ளை டிரஸ்… நல்லா இருக்கு. புது டிரஸ் போடலையா ஷ்ரத்தா. ஓ… இது உங்கப்பா போன பிறந்த நாளுக்கு வாங்கி தந்ததா?
ஓகே ஓகே.. நான் தந்ததும் வெள்ளை உடை தான். உனக்கான சம்மதம் சொல்வதும் வெள்ளை டிரஸ் தான்” என்று பேச அவள் இதயம் தடுக்கிப் போனது.
“நீ அதை சும்மா போடல. எனக்கு தெரியும் ஷ்ரத்தா. நீ ஒரு முடிவு எடுத்துட்ட போலயே.” என்று மெதுவாகச் சிரித்தான் சத்ரியன்.
“வெல்கம் டு த கேம், ஷ்ரத்தா.” என்றவன், சென்றுவிட்டான்.
அவள் அங்கேயே நின்றாள்.
அவளது கைகள் நடுங்கியது. மனம் உடைந்து கொண்டே இருந்தது.
‘சத்ரியன் எதிரியா…?’
‘அல்ல காப்பாத்துறவனா…?’ கொல்ல வந்ததாக எண்ணினால் கூட தன்னை வீழ்த்திவிட்டு அவன் வேலையை பார்த்திடலாம். ஆனால் இதென்ன… தொடரும் போட்டு வால் போல நீள்கின்றதே.
ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது. இனிமேல் தன் வாழ்வு சாதாரணமானதல்ல. தினமெரு போராட்டம் உண்டு. அதுவும் மனதில் போராடி வெல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டதென்று. வினோத் கூறியது போல தேவையற்று சத்ரியன் முன்னே வந்து என்னை நானே காட்சிப்படுத்திக் கொண்டேன். இது இப்போது புலி வால் பிடித்த கதையாக செல்கின்றது.
ஷ்ரத்தாவுக்கு புலியை விரட்டிய பெண்ணை நினைத்து கொண்டாள். அந்த தைரியமெல்லாம் தனக்கு உண்டா?
சுற்றி முற்றி பார்வையிட, அங்கிருந்தவ வெயிட்டர் பில் போடும் முதலாளி முதல் டேபிள் துடைக்கும் ஆட்கள் வரை அவளை தான் வேடிக்கை பார்த்தனர். அதுவும், உடைந்த கண்ணாடி தடுப்பை சுத்தம் செய்தபடி நின்றனர்.
தான் சாப்பிட்ட உணவிற்கு பணத்தை நீட்ட, மறுத்துவிட்டனர்.
ஆனாலும் கையிலிருந்த பணத்தை வைத்துவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள்.
சத்ரியன் சென்றுவிட்டதாக வரிசையாக இருந்த கார் மறைந்திருந்தது. யோகேஷ் மட்டும் இருந்தான்.
அவனும் இவள் ஆட்டோவில் ஏறவும் பின்னால் தொடர்ந்து வந்தான்.
ஷ்ரத்தா ஹாஸ்டல் வரவும் கார் திரும்பி சென்றது.
அறைக்கு சோர்ந்து வந்து சேர, கதவை திறக்கும் முன் அங்கே ஒரு கவர் இருந்தது. அதை எடுத்தபடி சுற்றிமுற்றி கொண்டு வந்தவரை தேடினாள்.
இம்முறையும் யாரும் இல்லை. கவரை எடுத்து அறைக்குள் சென்று பிரித்தாள்.
“வாழ்த்துகள்… சத்ரியனை நேருக்கு நேராக சுட முயன்றதற்கு. இன்று பிறந்தநாள் கொண்டாடிய பெண்ணே… பரிசு என்னவோ எனக்கு தந்துவிட்டாய்.
என்ன… வானத்தில் உச்சத்தில் சென்று பேரஷூட் தந்து குதிக்க வைத்த உணர்வு.
இதுவே சத்ரியன் தந்த தோட்டாவால் அவனை துளைத்தெடுத்து முடித்தால் இன்று உன் பிறந்தநாளோடு, எனக்கும் கொண்டாடப்பட வேண்டிய நாளாக மாறியிருக்கும். ஜஸ்ட் மிஸ்.
ஆனாலும் அந்த துப்பாக்கி ஏந்திய கைகளுக்கு, வைர மகுடம் சூட்ட இந்த வைர மோதிரம் பரிசாக தருகின்றேன்.
அத்துடன் வெள்ளை உடையை அணிந்து வந்த காரணத்தால், ஷ்ரத்தா சத்ரியனை அழிக்க கைகோர்த்து கொண்டதாக முடிவெடுத்து கொள்கின்றேன்.
விரைவில் சந்திப்போம்’ என்று எழுதியிருந்தது.
இந்த முறை நலம்விரும்பி என்ற வார்த்தை கூட இல்லை. தன்னை தொடர்ந்து வந்து, சத்ரியனுடனான சந்திப்பை கண்டு, சொல்லப்போனால் துப்பாக்கி ஏந்தி நான் சுடுவதை கண்ணாற பார்த்து மகிழ்ந்து, இங்கு வருவதை யூகித்து தனக்கு முன் இந்த கவரை வைப்பதற்காக அவசரமாக எழுதியதை யூகித்தாள்.
சிசிடிவி மூலமாக யார் வந்தார் என்று பார்க்க் முடியும். ஆனால் அதை கேட்டால் பார்வையிட முடியுமா? நகத்தை கடித்தபடி, கையில் உள்ள வைர மோதிரத்தை கவனித்தாள். பிரகாசமாக ஒளியை உமிழ்ந்த மோதிரத்தை கண்டு, அதிருப்தியே உருவானது.
சத்ரியன் வேறு உடையை பரிசளித்ததாக கூறினானே என்று அந்த கவரை வேறு பிரித்தாள்.
இவள் மீது அக்கறை இல்லாத புது நலம் விரும்பியே வைரத்தை வாங்கி இறைத்திருக்க, ஏதோ தன்னையே சுற்றும் அவன் என்ன தந்தான் என்ற ஆர்வத்துடன் திறந்தாள்.
‘தேவதைகள் வெண்ணிற உடையில் சஞ்சரிக்குமாம்.’ என்று எழுதியிருக்க அந்த வெள்ளை உடையை கசக்கி தூரயெறிய முற்பட, அதில் ஸ்டதஸ்கோப்பும் இருந்தது.
டாக்டர் ஆனதும் ஸ்டதஸ்கோப் வாங்க வேண்டுமென்றும் அதுவும் தந்தையை அழைத்து சென்று தன் பிறந்த நாளுக்கு வாங்கி தருமாறு முன்கூட்டியே ஷ்ரத்தா கேட்டு வைத்தது. இன்று அதை சத்ரியன் பரிசளித்திருக்க ஆச்சர்யமாய் யோசித்தாள்.
இவனிடம் அப்பா ஏதாவது சொல்லியிருப்பாரா? இவன் நல்லவனா? ஒரே குழப்பமாக இருந்தது.
தந்தை இறப்புக்கு சத்ரியன் காரணமாக இருக்குமென்று ஒரு ஐயம் துளிரிட, இதில் சத்ரியன் விரோதி யாரோ தன்னிடம் உதவி கேட்டு மர்மமாய் கவரும் பரிசும் தந்து கைகோர்த்திட முனைய, இதில் தந்தையிடம் தான் கேட்ட ஸ்டதஸ்கோப் சத்ரியன் பரிசாக வழங்குகின்றான்.
தன் மீது மோகம் கொண்டவன் அளிக்கும் பரிசா இது? குழப்பத்தில் தலையை தாங்கி வைர மோதிரத்தையும், ஸ்டதஸ்கோப்பையும் மாறி மாறி பார்த்தாள்.
-தொடரும்.
