Skip to content
64 / 100 SEO Score

The leader-20

அத்தியாயம்-20

 

ஷ்ரத்தா பாதி குடித்த டீ கோப்பையை அப்படியே வைத்து விட்டு அவசரமாக தனது அறைக்கு ஓடிவந்தாள்‌.

 

தனதறைக்குள் யார் வந்திருப்பார்கள்? அவளது புகைப்படத்திற்கு நேராக சிகரேட் துண்டு, அதை போலவே சத்ரியன் வீட்டில் சத்ரியன் புகைத்து பார்த்திருக்கின்றாள் ஷ்ரத்தா.

அப்படியென்றால் வந்தது சத்ரியனா? எதற்கு? அவன் ஏன் இங்கு வரவேண்டும்? என்று வேர்த்துவிட்டது.

 

இரவு எப்பொழுது வந்தான்? காலையில் சென்றதாக சீனியர் கூறியதாக பேச்சு கசிந்திருக்க, தன்னை ஏதேனும்  செய்துவிட்டானா? தூக்கத்தில் தனக்கு எதுவும் தெரியவில்லையா?  என்றெல்லாம் அஞ்சினாள்.

இதில் அவள் சத்ரியன் என்று கிறுக்கி வட்டமிட்டு அவனது பெயரை அழித்து குத்தி வைத்த நோட்டின் தடம் வேறு வேறிடம் இடம் பெயர்ந்து இருந்தது. அதையும் அவன் கவனித்து சென்றியிருக்க வேண்டும். சேர் தன் மெத்தை அருகே இருந்தது இப்பொழுது நினைவில் வந்து போனது.

 

ஷ்ரத்தாவுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. வந்தவன் தன்னை ஏதாவது செய்து தனக்கு அது உறக்கத்தில் அறியாமல் இருந்தோமா? இதே தான் ஷ்ரத்தாவை கொண்றது.

 

அதே நேரம் அவளது அலைப்பேசி அடித்தது. சத்ரியன் தான் என்று மின்னி ஒளிரும் ட்ரூ காலரில் இருந்த பெயரில் கண்டறிந்துவிட்டாள்.

 

நடுக்கத்துடன் அதை எடுத்து செவியில் வைத்திட, “ஏ.. ஹாய்.. குட்மார்னிங் ஷ்ரத்தா. என்ன எந்திரிச்சு காலேஜிக்கு கிளம்பறியா? இல்லை ரூம்லயே உட்கார்ந்து என் பெயரை நோட்ல எழுதி எழுதி கிறுக்கி அடிச்சி குத்தி, நேரத்தை ஓட்டப்போறியா?” என்றான்.

 

“நீ.. நீ… என் ரூமுக்கு வந்திருக்க.” என்று அதே நடுக்கம் மாறாமல் கேட்டாள்.

 

“ஷ்ரத்தா அங்க என்னை பார்த்தவங்க யாராவது சொல்லியிருப்பாங்களே. பிறகு கேள்வி கேட்கிற” என்று சிரிப்பது ஷ்ரத்தாவுக்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும்.

 

“யூ… யூ இடியட்.. என் ரூமுக்கு ஏன் வந்த? எதுக்குடா வந்த?” என்று கத்த, சத்ரியன் காதை தேய்த்து, “உன்னை அள்ளிக்கலாம்னு வந்தேன். பச்… தூங்கறப்ப உன்னை தொட்டு என்ன யூஸ் சொல்லு. முழிச்சிருக்கும் போது உன்னை தீண்டணும். அப்ப உன்னோட அழகான கண்ணு என்னை பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணுதுனு யோசிக்கவும் வந்துட்டேன். ஒன்னும் பண்ணாம வந்துட்டேன்.” என்றான்.

 

இன்னமும் சத்ரியன் சிரிப்பதை கேட்டு கோபத்தை அடக்க மாட்டாமல் ஷ்ரத்தாவே, “அறிவேயில்லைடா உனக்கு” என்றாள்.

 

சத்ரியனோ “ஓ.. சோ ஸ்வீட்… உன்னை ஒன்னும் பண்ணாம வந்தது உனக்கு ஏமாற்றமா இருக்கா. எனக்கும் சேம் ஃபீலிங். டோண்ட் வொர்ரி… விரைவில் அறிவோட உன்னை உன்னை..” என்று சிரிக்க சிரிக்க, ஷ்ரத்தா துண்டித்து விட்டு எரிச்சலுடன் அமர்ந்தாள்.

 

இத்தனை நாள் ஏதோ தன்னை மறந்துவிட்டிருப்பானென எண்ணியதற்கு மாறாக அறைக்கு வந்து விட்டானே. எங்கே போனான் இந்த எக்ஸ். இப்படி அர்த்த ராத்திரி வெளியே வந்தவனை போட்டு தள்ள வேண்டியது தானே. நெருங்கி போக தான் வேண்டுமா?” என்று தலையை தாங்கினாள். எக்ஸ் தந்த போன் மறைத்து வைத்திருக்க அதை சத்ரியன் பார்த்தானா என்று வேகமாக பார்த்தாள். அது நேற்று வைத்த அதே மறைவிடத்தில் இருந்தது.

 

நேரம் வேறு நகர்ந்தவாறு இருக்க, அவசரமாய் கல்லூரிக்கு ஓடினாள். அங்கேயும் ஹாஸ்டல் பெண் ஒருத்தியால் சத்ரியன் வந்து சென்ற விஷயம் கல்லூரியில் கசிந்தது.

 

இம்முறை மோசமானதாக தான் விஷயம் பரவியது. ஏதோ ஷ்ரத்தா சத்ரியன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவன் அடிக்கடி அவளை தேடி வந்து இளமை தாகத்தை தீர்த்து செல்வதாக கிசுகிசுக்கப்பட்டது.

 

கனிமொழி கூட “என்னடி கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?” என்றதும் ஒட்டு மொத்த கோபத்தை தோழியிடம் இறக்கினாள்.

 

“என்னை தெரியாதவங்க தான் உளறுறாங்க நீயுமா கனி. அந்த கிறுக்கன் ஏன் வந்தான் எதுக்கு வந்தான்னு தெரியலை. ஆனா வந்துட்டு போயிருக்கான். அவன் வந்தா அவனுக்கு தோதாக நான் நடப்பேனா? அவனை கொன்னுயிருக்க மாட்டேன்.” என்று சத்ரியன் வந்து சென்ற போது தான் உறங்கியதை தெரிவித்தாள். கூடுதலாக காலையில் அலைப்பேசியில் பேசிய விஷயத்தையும் பகிர்ந்தாள்.

 

கனிமொழியும் அனைத்தையும் கேட்டுவிட்டு, “நீ என்னிடம் விலாவரியா சொல்லிட்ட. ஒவ்வொருத்தரிடமும் சொல்ல முடியுமா? இல்லை சொன்னா தான் நம்புவாங்களா? ஆனாலும் சத்ரியன் சார் இந்த ரூமரை அவாய்ட் பண்ணிருக்கலாம். இப்ப அவனவன் பார்க்கற பார்வையே சரியில்லை.

ஒன்னை கவனிச்சியா? நீ சத்ரியன் ஆளுனு என்றதால நிறைய பேர் மதிப்பும் மரியாதையும் கூடவே ஒதுக்கமும் வருது.” என்றாள்.

 

“அது அவன் மேல இருக்கற பயத்துல வந்தது. உள்ளார்ந்து யாரும் செய்ய மாட்டாங்க.” என்றாள் ஷ்ரத்தா.

 

கனிமொழியும், “எஸ்… ஏதோ ஒன்னு. முன்ன ஆளாளுக்கு வந்து சீண்டிட்டு இருந்தாங்க. இப்ப அப்படியில்லையே. நிம்மதியா படிக்கற‌. அதோட டவுட்னா மேடமிடம் கேட்டா சேர் போட்டு தனியா கூட உனக்கு டீச் பண்ணறாங்க. இதெல்லாம் சூப்பர் தானே” என்றாள்.

 

ஷ்ரத்தாவோ தலையை மறுப்பாய் ஆட்டி, “அவன் என்னை சுத்தி இன்வசிபலா ஒரு சிறையை உருவாக்கறான். அந்த சிறையில் தான் நான் சுதந்திரமா இருக்கேன். அவன் என்னை சாதாரணமா சந்தோஷமா இருந்த என்னை, சிறையில் தள்ளி மக்களை நண்பர்களை, பிரித்து தனிமையா உணர வைக்கறான்.” என்றாள்.

 

கனிமொழி எதுக்காம்’ என்பது போல சிந்தித்தாள்.

 

ஷ்ரத்தாவோ மனதிற்குள், என்னை பிரித்து தனிமைப்படுத்தி அவனை தேடி வரவைக்கற திட்டம். அவனை நெருங்க விடற திட்டம்.’ என்றவளுக்கு எக்ஸ் கூறியதும் காணோளியும் நினைவு வர, ‘நெருங்கி வரட்டும் எனக்கும் அவனோட மைண்ட் கேம் விளையாடி அவனை வீழ்த்தணும்.’ என்று திட்டமிட்டாள்.

 

சலசலப்பை தாண்டி, வகுப்பில் ஷ்ரத்தா அவளை தைரியமானவளாக காட்டிக் கொண்டாள்.

நாம் ஒன்றை உருவாக்க மனதில் தயாராகும் போது தானாக அந்த விஷயம் நிஜமாகவே வலுப்பெற்றிடும். அது போல தைரியம் தானாக கூடியது போல தான் உணர்ந்தாள். இல்லையென்றால் கிங்பின்னாக இருப்பவனையே எதிர்த்து பேசி நடமாட முடியுமா?

 

கனிமொழியும் ஷ்ரத்தாவும் மாலை ரெயின்போ மாலிற்கு வந்து சேர்ந்தனர்.

 

மூன்றாம் தளத்தில் உள்ள காபி ஷாப்பில் இரண்டு காபியை ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தார்கள்.

 

“இன்னிக்கு கிளாஸ்ல பாடத்தை கவனிச்சாங்களோ இல்லையோ. உன்னை தான் ஆளாளுக்கு ஊடுருவி பார்த்தாங்க.” என்று கனிமொழி பேச, “இரிட்டேட் பண்ணாத கனி.” என்று பருகினாள்.

 

ஆமா… வாக்காளர் ஐடி வந்துட்டதா சொன்ன. யாருக்கு ஓட்டு போடுவ?” என்றாள்‌.

 

“ஊருக்கே தெரியும்‌.. யார் ஜெயிப்பானு. நான் அவருக்கு தான் போடுவேன்.” என்றாள்.

 

“ம்ம்ம். டேக் கேர். எனக்கும் இதான் முதல் முறை தேர்தலில் வாக்களிப்பது. நானும் ஆர்வமா இருக்கேன்.” என்றாள் கனி.

 

“சரி… நான் அப்ப கிளம்பறேன்.” என்று பிரிந்தார்கள்.

 

பள்ளி படிப்பை முடித்த ஷ்ரத்தாவே தற்போது இல்லை. முற்றிலும் மாறியிருந்தாள். அல்லது திவாகர் இறப்பும் சமீபகாலமாக சந்தித்த இன்னல்கள் அவளை மாற்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் சத்ரியன் போல் ஒருவன் வந்து சென்றதை, அவனோடு இணைத்து பேசுவதை ஒரு நடிகைக்கு வரும் கிசுகிசுவை போல ஞாதாரணமாய் கடக்க முடியுமா?

 

எல்லாம் காலம் தந்த தைரியமாக நினைத்தாள்.

 

அறைக்கு வந்ததும் எக்ஸிடமிருந்து சரியாக அழைப்பு வந்திருந்தது.

தினமும் வந்ததும் மறைவிடத்திலிருந்து எக்ஸ் தந்த போனை எடுத்துப் பார்க்கும் வழக்கமென்பதால் எடுத்ததும் அலைப்பேசி சத்தமின்றி அழைப்பதை அறிந்து கதவை மூடி ஏற்றாள்.

 

“வாழ்த்துகள்.. ஷ்ரத்தா. சத்ரியன் உன் வலையில் விழுந்திருக்கான் போலயே. நேற்று எந்தவொரு பாதுகாப்பும் இல்லாம தனியா உன்னை பார்க்க வந்து சென்றதா கேள்விப்பட்டேன்” என்று ஆரம்பித்தான்.

 

“நீ என்ன லூசா. அதான் பாதுகாப்பு இல்லாம வந்தான் தெரியுதுல்ல. அப்ப என்ன பண்ணிட்டு இருந்த. குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தியா..? நீ சத்ரியனுக்கு நிகரான எதிரியா இருந்தா கண்ல பொட்டு தூக்கமில்லாம கண்கானிச்சு நீயே அவனை சாகடித்திருக்கலாம். இதுல அவன் என் வலையில விழுந்தானா? அவனுக்கு தலைக்கு மேல கிறுக்கு ஏறியிருக்கு. அதான் லூசுத்தனமா வந்துட்டான்” என்று பேசினாள்.

 

“உன்னை போய் ஏன் சத்ரியன் தேடி வர்றான்னு நான் கூட யோசித்திருக்கேன். ஏன்னா சத்ரியன் கண் அசைத்தா அழகிகள் வரிசையில் வந்து நிற்க தயார். ஆனா நீ தெரிந்து பேசறியா இல்லையானு தெரியலை. நீ பேசறது சிலது வேடிக்கையாகவும், சரியாகவும் இருக்கு. அதனால தான் சத்ரியன் உன்னை தேடி வந்திருக்கான்.” என்று பாராட்டினான்.

 

“ஆஹ்.. எதுக்கு கால் பண்ணின?” என்றாள்.

 

“அதை சொல்ல தான் அழைச்சேன். அடுத்து சத்ரியன் பேச வந்தா அவனோட இணக்கமா பேசு. பழகு.. அவனோட நம்பிக்கையானவளா மாறு. முதுகுல குத்த அது தான் வசதி.” என்றான்.

 

“எனக்கு துரோகியா மாற பிடிக்காது. வேண்டுமின்னா கத்தியை கொண்டு போய் கொல்ல முயற்சிப்பேன். அதுல அகப்பட்டு இறந்தாலும் எனக்கு ஓகே. ஆனா துரோகம்” என்று இழுத்தாள்.

 

எக்ஸோ “உன் அப்பா அவனை காப்பாற்றிய பின்னரும் அவன் தான் கொன்னுயிருக்கான் ஷ்ரத்தா. அது துரோகம் இல்லையா? இல்லை.. அவனால தான் உங்கப்பா இறப்பு நிகழ்ந்ததுனு இன்னும் பெரிய ஆதாரம் வேண்டுமா?” என்று கேட்டான்.

 

“எங்கப்பா அடிக்கடி சொல்வார். ஆதாரம் இல்லாம யாரையும் குற்றவாளினு சொல்ல முடியாது. எனக்கு நூறு சதம் குற்றவாளி என்ற ஆதாரம் வேண்டும்.” என்றாள்.

 

எக்ஸோ தலையிலடித்து “விரைவில் அதற்கான முயற்சில தான் இருக்கேன். அது கிடைக்கற வரை, ஒரு எல்லைக் கோட்டுக்குள் அவனை நிற்க வைப்ப தானே. நம்பிக்கைகுரியவளா மாறு. மத்ததை தர்றேன் வைக்கறேன்” என்று துண்டித்தான்.

 

ஷ்ரத்தாவோ ‘என்னை வச்சி இந்த எக்ஸ் சத்ரியனை சாகடிக்க திட்டமிடுவது தெரியுது. அட்த சேம் அப்பா இறப்புக்கு சத்ரியன் தான் காரணம்னு சொன்னா சத்ரியனை கொல்ல நான் தயங்கக்கூடாது. ஒருவேளை இந்த எக்ஸே அப்பாவை கொன்றிருந்தாலும் வாய்ப்பு இருக்கு. நான் இவனை மொத்தமா நிராகரிச்சா இவன் யாருனும் எனக்கு தெரியாம போகலாம். யாராயிருந்தாலும் இந்த ஆட்டத்தில் விலகாம கண்டறியணும்.’ என்று முடிவெடுத்தாள் ஷ்ரத்தா.

 

இரண்டு நாளில் பெரிதாக சம்பவம் நிகழவில்லை. மாறாக அரசியல் தான் பேச்சாக இருந்தது.

 

நாளை கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வந்திருந்தாள்.

ஓட்டு போட்டுவிட்டு அங்கேயே தங்கி இளைப்பாற நினைத்தாள். வீடு கொஞ்ச நாளில் தூசி படிந்திருந்தது. அதனால் வீட்டை சுத்தப்படுத்தினாள்.

பெரும்பாலும் கண்ணாடி கதவெல்லாம் போட்டு ஷெல்ப் மூடப்பட்டதால் ஒட்டடை, தூசி தட்டி வீட்டை பெருக்கி, மாஃப் போட்டு துடைத்தாள்.

அதற்கே இடுப்பு உடைந்தது.

தந்தையும் அவளும் தான் இதெல்லாம் ஞாயிறு விடுமுறை அப்பொழுது செய்வார்கள்‌. பாடலை இசைக்க விட்டுவிட்டு, இருவரும் பேசிக்கொண்டே செய்ததை நினைத்துக் கொண்டு அழுதாள். கண்ணில் தூசி வேறு அவளை உறுத்தியது.

 

அடுத்த நாள் பொழுது புலரவும், காலையிலேயே தயாராகி ஓட்டு போட வந்து நின்றாள்.

அத்தனை ஆர்வம். பதினெட்டு அடியெடுத்து வைத்து முதல் முறை ஓட்டு போடுவது, அதுவும் அவளுக்கு பிடித்த சினிமா பிரபலம்.

அதை தாண்டி இந்த இளசுகளுக்கு வேறொரு அவசியமில்லை எனலாம். அதில் ஷ்ரத்தாவும் சேர்த்தி.

 

வரிசையில் நின்ற பொழுது, குடும்பத்துடன் வந்து நின்றவரை கண்டு ஏங்கினாள். இன்று தந்தையும் அவளும் பேசிக்கொண்டே இங்கே நிற்க வேண்டியது.

 

“லைன் மூவ் ஆகுது. முன்ன போங்க” என்ற போலீஸின் குரலில் முன் நகர்ந்தாள்.

 

“போன் இங்க வச்சிட்டு போங்கம்மா. டோக்கன் வாங்கிக்கோங்க” என்றார்.

 

ஷ்ரத்தாவோ போனில் ஓட்டு போடும் பொழுது செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டாள். அதை செய்ய இயலாது போனை தந்துவிட்டு, பெயர் கூறி சென்றாள். இடது கையில் ஆள்காட்டி விரலில் மையை போடவும், அதை பார்த்தாள். தனியறை போன்றதில், வாக்கு எந்திரத்தில் அவளுக்கான சின்னத்தில் அழுத்தினாள்.

 

சத்தமிட்டதும் வெளியே வந்து, போனை டோக்கன் தந்து பெற்றுக் கொண்டாள்.

 

தன் ஜனநாயக கடமையை ஆற்றியதும், தந்தையிடம் கூறுவது போல, ஸ்டேடஸ் வைத்தாள்.

 

‘அப்பா… உங்க பொண்ணு ஓட்டு போட்டுட்டு வந்துட்டா’ என்று கூறிவிட்டு கீழே ‘ஐ மிஸ் யூ டேடி.’ என்றும் போட்டிருந்தாள்.

 

வீட்டுக்கு வரும் வழியில், தனியாக நடந்துவந்தாள். அவளது தெருவுக்கு செல்ல இன்னும் இரண்டு தெரு தாண்டும் நேரம், ஒரு காரிலிருந்து ஒருவன் இறங்கினான்.

கையில் துப்பாக்கி இருக்க, ஷ்ரத்தாவை சுடுவதற்கு குறிப்பார்க்கப்பட்டது.

 

ஷ்ரத்தா கண்ணை முடி அதிர்ச்சியில் உறைய, எதிரேயிருந்தவன் சுட்டு முடிக்க, அந்த குறி ஷ்ரத்தாவை தாண்டி பின்னால் வந்த சத்ரியனை பதம் பார்த்தது. அதை அங்கிருந்த அலங்கார கண்ணாடியை விற்கும் ஒவ்வொரு கண்ணாடி துகளிலும் சத்ரியன் பிம்பம் தெரிந்தது. அதன்பின்னரே தனக்கு பின்னால் சத்ரியன் வந்ததை ஷ்ரத்தா அறிந்தாள்.

 

நொடியில் சத்ரியன் தன் பாதுகாப்புக்கு வைத்ததை வைத்து சுடவும், காரில் ஏறி தப்பித்தான் வந்தவன்.

 

ஷ்ரத்தா பயத்தில் நடுங்க, சத்ரியனோ உதட்டை கடித்து தன்  கையை பார்வையிட்டான். அங்கே செங்குருதி வழிந்திருந்தது.

 

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

 

 

 

 

 

 

1 thought on “The leader-20”

  1. Super sis nice epi 👍👌 chathriyan kita yetho reason eruku nu nenaikuran 🤔🧐 ennava erukum parpom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!