அத்தியாயம்-36
ஏற்கனவே யுகன் கொஞ்சம் குழம்பி இருக்க ரியா சொல்லும் பெண் யார்? திலீப் யாரை விரும்புகின்றான் என்றவனுக்குள் அதற்கு மேல் யோசிக்க முடியாது ஐஸூவிடமே கேட்டு விட்டான்.
”அம்பு திலீப் யாரை விரும்பினான்?” என அச்சத்துடன் கேட்டான்.
”அவன் எங்க விரும்பினான்.. அவ தான் விரும்பினா. கடைசியில் திலீப் உண்மை முகம் தெரிந்ததும் உடைஞ்சு போயிட்டா” என்று தொளைக்குலுக்கினாள்
”யாரு?” என்று இதயத்தை தாங்கி கேட்டான்.
”வேற யாரு பூர்வீ தான்” என்றதும் காரினை நிறுத்தி ஐஸூவிடம்
”நிஜமா பூர்வீ திலீப் விரும்பினவங்களா?” என்று மீண்டும் கேட்டான்.
”ஹ்ம்ம… திலீப் எப்படியோ பூர்வீ உண்மையா விரும்பினா? எதுக்கு அறுவை இதையே கேட்கற? ரித்தீஷ் பாவம் என்ன யோசிச்சுட்டு இருக்காரோ வண்டியை எடு” என்றதும் முதலில் ரித்திஷை பார்க்க கிளம்பினான்.
ரித்தீஷ் தான் நேற்றைய மனநிலையில் கொஞ்சம் திரும்பியிருந்தான். திலீப் மேலே கூட கையை வைத்தது தவறோ என்று வருத்தமுற்றான்.
வெங்கட் தான் தன்னிடம் வம்பு இழுப்பது. திலீப் எல்லாம் யுகன்தன் நண்பன், ஐஸூ உறவுக்கார பெண் என தெரிந்த முதலே கொஞ்சம் ஒதுங்கி தான் இருக்கின்றான்.
யுகன் ஐஸூ வர ரித்தீஷ் அவர்களை தாண்டி பார்க்க அங்கே அவர்கள் இருவரையும் தாண்டி சந்தோஷ் வந்தான்.
ரித்தீஷின் மற்றுமொரு தோழன் தான் சந்தோஷ் ”வாடா எப்படி இருக்க? அதிசயமா இருக்கு ஸ்கூல் டேஸ் ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஒவ்வொருத்தர் அறிமுகமா கிடைக்குது” என அவனுக்குள் பின்னால் இருக்கும் நபரை காண அங்கே வெங்கட் உதடு வீங்கி கண்கள் மன்னிப்பை வேண்டி நின்றது.
”ரித்தீஷ் சாரி டா… இவன் செய்த எல்லாத்துக்கும்…. இவனை நீ இன்னும் இரண்டு அடி போடு, அப்போ கூட எனக்கு கவலை இல்லை.. இவனை எல்லாம்..” என வெங்கட்டை பார்த்து பல்லை கடித்தான் சந்தோஷ்.
”சாரி டா என் தம்பி தான்.. உன்கிட்ட கூட சொல்லியிருப்பேன்… ஆனா இந்த மாதிரி சூழ்நிலையில் இவனை அறிமுகப்படுத்துவேன் என்று நினைச்சு பார்க்கலை… இவனும் நீயும் பேசியதை ஆபீஸ் சிசிடிவில பார்த்தேன் டா.. இவனாளா எதுக்கு டா நீ உன் வேலையை விடணும்… அது ஒண்ணும் இவன் ஆபீஸ் இல்லை.. நீ இன்டர்வியூ வந்தப்ப அப்பா உன்னை ஃப்ரெண்ட் என்று தெரியாதப்ப எவ்ளோ புகழ்ந்தார் தெரியுமா ரொம்ப பிரில்லியண் ட் சொன்னார் டா. நான் என் ஃப்ரெண்ட் அப்பானு பெருமையா சொன்னேன். இப்ப இவனால..?” என வெங்கட்டினை முறைத்தான்.
”சந்தோஷ் அவனை முறைக்காதே… அவனுக்கு என்ன தெரியும்? உட்கார்.. உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. யுகன் இப்போ தான் கொஞ்ச நாள் முன்ன மீட் பண்னினேன்… இருங்க முதலில் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என நகர்ந்தான்.
”இல்லை டா.. இவன் உன்கிட்ட சாரி கேட்க வைக்க தான் வந்தேன்… முதலில் இவன் ஸாரி கேட்டு நீ மன்னிக்கனும்” என்றதும் வெங்கட் முன் வந்து
”அண்ணா என்னை மன்னிச்சூடுங்க… நான் இனி ஐஸூக்கு உங்களுக்கும் கெடுதல் செய்ய என்ன மாட்டேன்.. இதுவரை செய்ததற்கு எல்லாம் சாரி” என்று விசும்பி உரைத்தான்.
”முதலில் உட்காரு” என்றவன் ஐஸூவிடம், ஜூஸ் எடுத்து வர சொல்ல பாட்டில் ஜூஸ் எடுத்து ஊற்றி கொடுக்க வாங்கி பருகினார்கள்.
”டேய்… அப்பா உன்னை அந்த ஆபீஸூக்கே வர சொல்லிட்டார்.. நீ நடந்ததை மறந்துட்டு நாளைக்கு ஆபீஸ் வர்ற” என்று சந்தோஷ் கூறினான்.
”இல்லை சந்தோஷ் நாளைக்கு லோன் அப்பளை பண்ணி இருக்கேன் சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிக்க, சோ நெக்ஸ்ட் அதுல என்னோட முழு கவனம் போகனும், யாரிடமும் கைகட்டி நிற்க என்னால முடியாதுனு எனக்கு புரியுது.” என்றதும் தான் வெங்கடால் எதுவோ நடந்து ரித்தீஷ் கொஞ்சம் மனப்பாரத்திலே சுழன்று இருக்கின்றான் என ரியா அறிந்தாள்.
கொஞ்ச நேரம் பள்ளி நாட்களை பேசி கொண்டிருந்தார்கள். சந்தோஷ் ஒரு முறை பந்து ஒன்றால் நெஞ்சில் தாக்கி மூச்சு திணறல் வர தற்காப்புக்கு சொல்லி தந்த மூச்சு பயிற்சியால், சந்தோஷுக்கு மூச்சு திணறலை சரி செய்து உயிர் பிழைத்து இன்று நடமாட அதுவே காரணம்.
அன்றைய நாட்கள் தீவிரமாக சொல்ல யுகனும் மற்றதை மறந்தே போனான். வெங்கட் அங்கே இருக்கும் வரை ஐஸூ பக்கம் கூட திரும்பாது நின்றான்.
ஐஸூக்கு தான் ரித்தீஷ் எப்போ என்னிடம் பேசுவான், இவங்க எப்போ போவாங்க என்றிருக்க, அவர்கள் கிளம்பவும் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசத்தோடு வழி அனுப்பினாள். அடுத்து யுகனும் கிளம்ப ஐசுவோ ரித்தீஷ் நெஞ்சில் அடியெடி அடிக்க அனைத்தும் முறுவலோடு வாங்கி சிரித்தான்.
”அடிக்கிறேனே.. எதுக்கு என்று கேட்கறியா?” என்றாள்.
”நான் தப்பு செய்துட்டேன் அதனால நீ அடிக்கற பொறுமையா வாங்கிக்கறேன்.. உன்னை உங்க அப்பா அம்மா வீட்ல ஆடிக்கு விட்டதுக்கே உன் முகம் சொல்லிடுச்சு… இதுல நான் இல்லாமல் யுகன் கூட அனுப்பியதில் மேடம் ரொம்ப கோபமா இருப்பிங்க. அதான் நீ அடிக்கும் வரை வாங்கிக்கறேன்” என்றான்.
ரியாவோ அவனின் நெஞ்சில் சாய்ந்து அழத்துவங்கினாள்.
”ஏய் எதுக்கு அழுவுற..?” என்றான் ரித்தீஷ்.
”ஏன் மாமா நீ ஆபீஸ் போயிட்டு நேரம் முடியறதுக்குள்ள வந்ததும் நான் அப்பவே யோசிச்சு கேட்டிருக்கணும்.. ஏதோ சரியில்லைனு ஆனா நான் உன்கிட்ட நீ வைத்திருந்த பாங்க் புக் எல்லாம் தூக்கி எறிந்து, உன்னை இன்னும் கோபமாகிட்டேன்… உன்னை நான் புரிந்து கொள்ளவேயில்லை.”
”அதான் டி எனக்கு வேணும்.. நீ எதையும் எப்பவும் யோசிக்க கூடாது.. கவலைபடக்கூடாது. உன் சந்தோஷம் தூக்கம் எல்லாமே நான் மட்டும் பார்த்துப்பேன். அக்கா வீட்ல எப்படி கவலையே இல்லாம என் ரியா இருக்கணும்” என்றான்.
மாமா.. நீ ஏதோ பிஸ்னஸ் ஆரம்பிக்கறதா சொன்ன?”
”ஆமா பிஸ்னஸூக்கு லோன் போட்டிருக்கேன். தணிகாசலம் மாமா தான் எனக்கு கையெழுத்து போட்டுயிருக்கார்.. இங்க இனி யாரிடமும் நான் ஆபீஸ் போக போறது இல்லை.. ஆட்டோ பைக் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கி சேல்ஸ் பண்ண போறேன். ஆல்ரெடி தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க அதனால கொஞ்சம் இந்த வேலை உடனடியா நமக்கு கை கொடுக்கும்… நம்பறேன்.. என்ன ஆட்டோ போனதில்ல கொஞ்சம் யோசிக்க முடியாம தவிச்சேன் ஆனா எல்லாத்துக்கும் ஒரு தீர்வு இருக்குமே அதான்.. யோசிச்சு.. இந்த முடிவு.” என்று அவளை தனது கை வளைவில் நிறுத்தியவன் இவ்வளவு நேரம் பேசிய இதழுக்கு அவளின் இதழ்நீர் பருகி சுவைத்தான்.
—
இங்கு யுகனோ அந்த எண்ணிற்கு அழைப்பை தொடுத்தவன்.
”உன்னை இன்னிக்கு பார்க்கணும்.. இவளோ நாள் நேரில் வேண்டாமென்று தான் இருந்தேன் ஆனா இப்போ உன்னிடம் கொஞ்சம் பேசணும்.. உங்க வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கற நியூ பஸ் ஸ்டாப் பக்கத்தில இருக்கற காஃபி ஷாப் வந்துடு” என்று கூற, அந்தப்பக்கம் எப்பொழுதும் போல ‘ஹ்ம்” என பதில் மட்டுமே தந்தது.
‘இவர் எப்பவும் சாஃப்ட்டா பேசுவார் இன்னிக்கு என்ன நேர்ல சந்திக்கணும் சட்டமா ஒரு மாதிரி சொல்றார்?’ என்று கிளம்பினாள் அவள்.
மணி ஆறு முப்பது பேருந்து நிலையம் இருக்கும் காஃபி ஷாப் சென்றதும் யுகனுக்கு சொல்ல இயலா, வருத்தமும் கோவமும் சேர அவளின் வருகைக்கு காத்திருந்த அவளும் அமைதியின் மொத்தமாக வந்து சேர்ந்தாள்.
யுகனுக்கு பூர்வீயை தெரியும் ஆனால் பூர்வீக்கு யாரவன் என்று குழம்பி தவித்து போன் செய்ய இடம் சொல்லி அவளை அழைக்க, அந்த இடம் நோக்கி வந்தவள் யுகனை கண்டு நம்ப முடியாமல் மறுபடியும் போன் செய்தாள்.
அவள் எதிரில் போனை எடுத்து காட்டி
”நான் தான் அது.. உட்கார்” என்றதும் பூர்வீ அமர்ந்தாள்.
”சாரி உனக்கு இன்னும் படிப்பு முடியலை… அந்த ஒரு காரணத்தில் தான் நான் இதுவரை நேரில் பார்க்க சொல்லலை.. ஏன் என் போட்டோ கூட உனக்கு கொடுக்காம விட்டுட்டேன்… ஆனா இப்போ அதுவே தப்போனு தோணுது” என்று நிமிர்ந்தவன்.
அவளின் அதே அமைதியில் ”நீ லவ் பெயிலியறா?” என நேரிடையாக கேட்டான்.
”ஹ்ம்” என்றாள் அவளும்.
”நீ யாரை லவ் பண்ணியிருக்க என்றாவது தெரியுமா?” என்று கேட்டான்.
”இதுவரை தெரியாது… ஆனா உங்களை இப்போ நேரில் பார்த்ததும் ரொம்ப தெளிவா புரியுது” என்று பூர்வீ அதே அமைதியோடு பதிலளித்தாள்.
”எப்படி? உன் லவ்வர் சொன்னானா?” என்று கேட்க, பூர்வீயோ உச்ச கட்ட கோபத்தில் முறைத்து ”என் ஃப்ரெண்ட் ஐசு சொன்னா.. நீங்க அவளுக்கு அண்ணா முறைனு, அதோட அவனும் அவளுக்கு அத்தை பையன் முறை என்றும் சொன்னா… அதனால இப்போ நீங்க தான் என்றதும் எல்லாம் புரிந்துடுச்சு…” என்றதும் யுகனோ அவளின் ‘ஹ்ம்’ என்ற பதிலே இதுவரை கேட்டு பழகியவனுக்கு இந்த அதிகமாக பேச்சே ஆச்சரியம் கொடுத்தது.
பூர்வீ முன்பு எப்படியோ…. திலீப் தன்னை உண்மையாக விரும்பவில்லை என்று தெரிந்தது முதலாக, அவனின் முழு பண்பு அறிந்தப்பின் மிகவும் பாதிக்கப்பட்டு, பேச்சை கூட குறைத்துக் கொண்டாள். யுகன் வந்து பாடம் நடத்தும் போது கூட பூர்வீயை அவள் அறியாமல் பார்ப்பான். ஆனால் அவளோ அதிகம் பேசி இவன் கண்டதில்லை. அம்பு தான் அவளிடம் இவனை பற்றி என்னவோ ஒழுங்கு காட்டி பேசுவதை பார்ப்பான்.
”உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையென்று என்ன காரணம் சொன்னாலும் எனக்கு சம்மதம். நீங்க உங்க முடிவை எடுங்க” என்று சொல்லி போனை வெறித்தாள்.
யுகேந்திரனோ ”இப்பவும் அவனை விரும்பறியா? நான் வேணுமின்னா செல்வா அத்தையிடம் பேசி உங்களுக்கு கல்யாணம்.. ஏற்பாடு..” என்று பேசிக்கொண்டே செல்ல,
”நிறுத்தறிங்களா… நான் இப்போ சொன்னேனா? அவனை நான் லவ் பண்றேன்னு? காதல் என்றாலே நம்பிக்கை இருக்கணும்.. அந்த நம்பிக்கையை எல்லாம் அழிச்சுட்டான்… அதுக்கு மேல அவனை கல்யாணம் செய்துப்பேன்னு எப்படி முடிவு செய்திங்க? நீங்க விலகி போனாலும் நான் அவனை என் வாழ்க்கையில் திரும்ப கொண்டு வர மாட்டேன். என்னை பொறுத்தவரை என் நம்பிக்கை அழிச்சுட்டான். இனி அவன் மேல செத்து போன காதல் எல்லாம் திரும்ப வராது… உங்களுக்கு இஷ்டமில்லை என்றால் நீங்க விலகி போங்க. வேற பொண்ணை கட்டிக்குங்க. நான் முன்ன சொன்னதை போல தான். எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்னு உங்களிடம் சொல்லி இருந்தேன்.. இப்போ வரை அந்த டைம் முழுதா முடியலை… நீங்க வேண்டாம் என்றாலும் எனக்கு இன்னும் நேரம் கிடைக்கும் என்று நிம்மதியா இருப்பேனே தவிர.. அவன் எல்லாம் கல்யாணம் பண்ண முடியவே முடியாது. உங்க முடிவை நீங்க அப்பா அம்மாவிடம் சொல்லிடுங்க” என்று பூர்வீ வேகமாக எழுந்தாள்.
”அம்மா அப்பாவிடம் நானே சொல்லவா?” என்று பார்வை பார்க்க, அவள் அவனை கண்டு நெகிழ்ந்தாள்.
“அவனோ எனக்கு நாளை வரை நேரம் கொடு.. கொஞ்சம் யோசிக்கணும்” என்று யுகன் அவளை பார்த்து சொல்ல, அந்த பார்வையில் என்ன தெரிந்ததோ பூர்வீ மெல்ல திரும்பி திரும்பி பார்த்து சென்றாள்.
யுகனுக்கோ அவள் செல்வதையே பார்த்தவன் பின்னர் வீட்டுக்கு கிளம்பினான்.
யுகேந்திரனின் தாய் பெண் பார்க்க போவதாக சொல்ல, அவன் அப்பா தர்மாவும் இவனும் ‘என்னமோ உங்க கூட சண்டை போட ஆள் தேடறீங்க ஆள் த பெஸ்ட் பட் மாம் என்னை கேட்காமல் என் போட்டோ யாரிடமும் கொடுக்காதீங்க’ என்று அறிவுறுத்தியிருந்தான்.
அதன் விளைவு தான் பூர்வீ யுகனின் புகைப்படம் பாராமல் இருந்தது.
சௌபாக்கியா மட்டுமே பூர்வீயை பார்க்க சென்றார். அது கூட கோவிலுக்கு வந்ததாக சொல்லி பார்த்தார். தர்மாவோ ‘பையனுக்கு பிடிக்குதா கேளு.. அதுக்கு பிறகு பேசு.. அந்த பொண்ணு படிக்குது… அதுவும் நாங்க ஒர்க் பண்ற இடம் வேற, அதனால பார்த்து முடிவு எடு’ என்று விட்டு விட்டார்.
யுகனுக்கும் அவளுக்கு தான் யாரென்று தெரிந்தால் சங்கடமாக இருக்குமோ என்று அவன் புகைப்படத்தை கொடுக்கவில்லை. பூர்வீ போன் எண் மட்டும் பகிர்ந்து கொண்டு யுகன் தான் போன் செய்வான்.
பூர்வீ உன் படிப்பு முடியற வரை நாம பார்க்க வேண்டாம் என்று சொல்லி இந்திரன் என்ற பெயரை சொல்லி அறிமுகம் ஆகியிருந்தான். சௌபாக்கியா கூட பையன் விருப்பமான பணி புகைப்படம் எடுப்பது என்பதாக கூறியிருந்தார்.
அவளோ யுகனிடம் எனக்கு இப்ப திருமணத்தில் ஆர்வம் இல்லை… எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்… படிப்பு முடிவடையும் வரை நேரம் கொடுத்தா கூட போதும் என்றாள்.
யுகனுக்கு அவள் எதற்கு அவகாசம் கேட்டு இருப்பாள் என்று எல்லாம் தோன்றாது அவளை கல்லூரியில் அவள் அறியாது பார்க்க வசதியாக போனது.
போனில் அவளுடன் 7 மணிக்கு பேசுவான் 7:15 வைத்து விடுவான்.
பூர்வி ஐசு தோழி என்றதும் அதை சொல்ல அத்தனை ஆர்வம். ஆனால் சொல்லாமல் தான் இருந்தான். ஐஸூ பற்றி யாரிடமும் அவளாக சொல்வது சரி என்று பட்டது. ஏனெனில் ஐஸூவின் அப்பா பற்றி கூறுவது சரியில்லையே.
இப்படி நடுவில் பூர்வி திலீப் காதல் இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை.
யோசனைகள் தன்னை துரத்த தலையை தாங்கி பிடித்தான். முடிவு எடுக்க முடியாது.
—
இங்கு ஐசுவோ ரித்திஷ் லோன் ஒரு வாரத்தில் வர அதனை வாங்கி கடை திறந்தான். அவன் எதிர்ப்பார்ப்பு பொய்யாகாது பிசினஸ் பெருகியது.
நடுவில் மிக எளிமையாக மஸ்தான் இலக்கியா திருமணம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்தேறியது.
அன்று இரவே வரவேற்பு நடைபெற்றது. ரித்திஷ் ரியா கிளம்பி கொண்டிருந்தார்கள்.
ரியா புடவை அணிய 5 மணிக்கு உதவிய ரித்திஷ் 7 மணிக்கு தான் கிளம்பி முடிக்க ரியா முகமெங்கும் சிவந்த வதனமாக காணப்பட்டாள்.
இலா கூட “என்ன டா இது விழாவுக்கு இவ்ளோ லேட்டா வருவது?” என்பதற்கு
“நானாவது லேட்டா வந்தேன் நீ எங்க விழாவுக்கு வரவே இல்லை இலா” என்று குறைப்பட்டான்.
“டேய் அப்ப என் நிலைமை உனக்கு தெரியும் தானே? அப்பவும் இப்படி பேசற?” என்றதும் மஸ்தான் “ஈஸ்வர் என்ன இது?” என்றதும்
“அய்யோ மஸ்தான் கிளம்பும் போது லேட்டா ஆகிடுச்சு… இவ தான் கிளம்ப லேட் பண்ணிட்டா” என்றதும் சும்மா இருந்த ரியாவோ
“மாமா நீ தான் சேரி கட்டி விடறேனு லேட் பண்ணிட்ட” என்று உண்மை விளம்பியாக உரைத்தாள்.
இலா மஸ்தான் இருவரும் “இனி ஏன் லேட் என்று கேட்கலை போடா ” என்றதும் ரித்திஷ் ரியாவை அழைத்து கீழே வந்தான்.
“ஓட்ட வாய் ஓட்ட வாய்..” என்ற படி அவளை விழுங்கும் பார்வையோடு தான் சொன்னான்.
அதன் பிறகு பரீட்சை ஆரம்பித்தது.
—-
இதற்கு இடையில் பூர்வீ யுகன் வருகையில் தடுமாற்றம் கொண்டாள்.
அவனின் பார்வை தன்னை தீண்டவில்லை என்பதை உணர்ந்தாள்.
திலீப் கூட முன்பு விரும்பிய உணர்வு இருந்தும் இந்தளவு தான் அவன் பார்க்காமல் அவன் பேசாமல் இருந்த பொழுது தான் வருந்தவில்லை என்று உணர்ந்தாள். யுகன் சொல்லும் பதிலுக்காய் காத்திருந்து ஒரு மாதம் முடியும் தருவாயில் தான் இனியும் யுகனின் பதிலுக்கு காத்திருக்காமல் அவளாக போன் செய்தாள்.
போனை எடுத்த யுகன் “சொல்லு வீகா… ” என்றதும் அவன் அவளை எப்படி அழைத்தான் என்று கூட யோசிக்காது
“நீங்க இன்னும் பதில் சொல்லலை…” என்று மெல்லிய குரலில் கேட்க போனில் அந்த பக்கம் யுகேந்திரனோ சத்தமில்லாமல் சிரித்தான்.
“என்ன பதில் தெளிவாக லேசன் எடுத்து தானே வந்தேன்” என்றதும் பூர்வியோ ஐஸூ தோழியாக
“ஆமா நடத்தின பாடம் ஒன்னும் விளங்கலை.. இதுல அறுவைக்கு என்ன கேட்க வர்றேனு தெரியலை வையுங்க போனை” என்று சலிப்படைந்தாள்.
“ஏய்…… நீ கேட்பதற்கு முன்னையே பதில் சொல்லிட்டேன்… யோசி” என்று வைத்து விட்டான்.
‘என்ன கேட்க செய்யறதுக்கு முன்ன பதில் சொல்லிட்டாரா..? என்ன சொன்னார்… போனை எடுத்து சொல்லு பூர்வி…னு….இல்லை விகா சொல்லு விகா என்று சொன்னார் அப்படின்னா பூர்விகாவை ‘வீகா’னு என்றவளின் மனம் பதில் அறிந்த சந்தோஷத்தில் மிதக்க, மீண்டும் யுகேந்திரனுக்கு போன் செய்தாள்.
“நிஜமாவா…?” என்று மட்டும் கேட்க
“என்ன சொன்னா நம்புவ? எங்க வீட்டு குட்டி சாத்தான் மேல சத்தியம் செய்யவா” என்ற படி வீட்டின் படியில் அமர்ந்தான்.
“சொல்லு… உன் மனசு என்னை தேட ஒரு மாதம் 2 நாள் ஆகியிருக்கு…. அப்படி தானே..?” என்றவன் குரல் இயல்பு நிலையில் மாறியது.
பூர்வீயோ “ம்… யுகா… நமக்கு கல்யாணம் நடக்குமா இல்லை நடுவில் ஏதாவது பிரச்சினை வருமா?” என்று பயத்துடன் கேட்டாள்.
“எதுக்கு இந்த தேவையற்ற கேள்வி.. அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை ஆகாது… நீ நினைக்கற எந்த வில்லங்கமும் நமக்கு நடுவில் இல்லை… என் பெரியப்பா பொண்ணு ஐஸூ என்ற அம்புஜம் நாத்தனார் கொடுமை பண்ண காத்திருக்கு… தவிர எங்க அத்தை பொண்ணு துர்கா 12 தான் படிக்கிற… அத்தை பையன் திலீப் மேல் படிப்புக்கு லண்டன் போறான் அதனால் நீயும் அந்த குட்டி சாத்தான் தான் கலக்குங்க….” என்று திலீப் இங்கு இருக்க போவதில்லை என்பதை நாசுக்காய் சொல்ல, நிம்மதி அடைந்தாள் பூர்வீ.
கொஞ்ச நேரம் கூடுதல் பேச்சில் என்ன பேசினோம் என்றே அறியாது பேசி முடித்து வைத்தனர்.
—
இங்கு ஐசுவோ ரித்திஷ் ரியா இருவரும் வைதேகி வீட்டில் சென்று தங்க, அங்கே வைதேகி சமையல் கற்று கொடுக்க, ரியா சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று துடிப்பது புரிந்தது.
இரவு அறைக்குள் நுழைந்த ரியாவை இமைக்காமல் பார்க்க ரியா தான் புதிதாக நெளிந்தாள்.
”ஐயோ மாமா என்ன பார்க்குற எனக்கு சரியா வெட்கம் எல்லாம் வராது… என்னிடம் அதெல்லாம் எதிர்பார்க்காதே” என்று குங்குமமாய் சிவந்த முகத்தோடு உரைத்தாள்.
”இதுக்கு மேல சிவக்கணும்மா.?” என்று அணைத்தவாறு “நெக்ஸ்ட் என்ன பண்ண போற?”
”நாளைக்கு பால் பணியாரம் செய்து பார்க்கணும் ரித்தீஷ் உனக்கு பிடிக்கும் தானே?” என்றதும் சிரித்தான்.
”எதுக்கு சிரிக்கிற?”
”இல்லை முழுசா சமையலில் முழுகிடுவ போல” என்றே கேட்க
“சரி வேற… என்ன செய்ய? நீயே சொல்லு”
“வேற…. வேற என்ன குழந்தை கனவு பற்றி பேசுவோமா இல்லை அரியர் வைக்காம பாஸ் பண்ண படிக்க போறியா? நீ தான் சொல்லனும்” என்று சிரிக்க, அவன் தன்னை படிக்காமல் இருப்பதை சுட்டி காட்டுகின்றான் என்று புரிந்தது.
“படிக்க போறேன் போதுமா… உங்களை போலவே முடிக்கிறேன்” என்று திருப்பி கொள்ள அவனோ மெல்ல சிரித்தபடி
”புக் நம்ம வீட்ல இருக்குடா ரியா, அந்த தைரியத்தில் தானே சொல்ற?” என்று மேலும் சிரிக்க அவளோ எழுந்து அவனை கைகளால் மெல்ல அடித்து “போடா… எனக்கு நிஜமாவே படிக்க முடியலை… போதுமா… உன்கூடவே இருக்கணும்” என்r நெஞ்சில் சாய்ந்தாள்.
”எதுக்கு இப்படி எறும்பு கடி மாதிரி அடிச்சுட்டு நீயா அழுவுற…. இங்க பாரு ரியா படிப்பு முக்கியம் அதை கம்ப்ளீட் பண்ணு போதும்.” என்று கட்டளையாக சொல்ல தலையை தலையை ஆட்டினாள்.
பரீட்சை முன்னே ஆண்டு விழா நடக்க எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் நன்றியும் மகிழ்ச்சியும் இன்பம் துன்பம் எல்லாம் கலந்து பேசி பகிர ஒவ்வொருத்தரும் அவர்களின் நினைவை பகிர்ந்தனர்.
அப்பொழுது பூர்வீ ஐஸூ பற்றியும், ஐஸூ பூர்வீ பற்றியும் நல்ல தோழி கிடைத்ததாக பேசி மகிழ, வெங்கட் அவன் முறைக்கும் வந்தான்.
”நான் நிறைய பேரை ஹர்ட் பண்ற மாதிரி நடந்திருக்கேன் அதுக்கு எல்லாம் சேர்த்து என்னை மன்னிச்சுடுங்க” என் முடிவில் ஐஸூவை தான் பார்த்தான். ஐஸூ அவன் பேச பேச எங்கோ பார்வையை பதித்தாள்.
அடுத்து திலீப் தான் வந்தான். ”நானும் மன்னிப்பு தான் கேட்க வந்தேன்.. எனக்கு முன்ன வெங்கட் கேட்டுட்டான். இருந்தாலும் நான் செய்தவை உங்களை எல்லாம் வருந்தபபட வச்சியிருக்கணும்… அப்பறம் காலேஜ் எல்லாம் காதல் வருவது போவது சகஜம்.. அது சில பேருக்கு வெற்றியை தரும் சிலருக்கு நினைச்சு பார்க்க கூட பிடிக்காத நிகழ்வா மாறும். அப்படியிருந்தா தூக்கி எறிந்துட்டு உங்களுக்கு வருகின்ற வாழ்க்கையை நீங்க வாழணும். எனக்கு லண்டன்ல மேற்படிப்புக்கு போட்டிருக்கேன். திரும்ப யாரையும் பார்க்க வாய்ப்பு இருக்கா இல்லையா என்றெல்லாம் தெரியாது. அதனால இப்பவே இந்த மேடையிலே மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்ற பார்வை தரையில் பார்த்து சொல்லி இறங்கினான்.
ஆசிரியரும் சிலர் மாணவர்களின் கேலி பேச்சில், தன்னிலை அடைந்து, அவர்களும் சில நிகழ்வுகளை பேசி கிளம்பினார்கள். திலீப் பேசிவிட்டு போக அங்கு இருந்த ஆசிரியரின் ஒருவனாக யுகன் இருக்க தான் செய்தான்.
ஆசிரியர்கள் சென்றதும் மாணவர்கள் அங்கே கொட்டம் அடிக்க திலீப் பூர்வீ கை அலம்ப செல்ல அவள் பின்னால் சென்றான்.
கைகளை அலம்பி திரும்ப திலீப் இருக்க கண்டவள் நகர்ந்து நடந்தாள்.
”ஒரு நிமிஷம் பூர்வீகா… நான்.. உன்கிட்ட…”
”இங்க பாரு இந்த மன்னிப்பு மண்ணாங்கட்டி என்று என்னிடம் தனியா கேட்க வந்த என்றால் இப்படியே ஓடிடு… உன்னிடம் எனக்கு பேச ஒரு வெங்காயமும் இல்லை…” என்று திரும்ப பார்க்க அவளின் கையினை பிடித்தான்.
”உனக்கும் யுகன் அத்தானுக்கும்.. கல்யாணம்…?” என்று பேசி கொண்டே போக ‘நிறுத்து’ என்று செய்கை செய்த பூர்வீயோ. ”யுகா என்னிடம் எல்லாம் கேட்டுட்டார்… அவருக்கு தெளிவா என்னுடைய பழைய காதல் எல்லாம் தெரியும்.. நான் உன்னை விரும்பி இருந்தேன் என்பது முதல் இப்போ உன்னை வெறுத்து ஒதுக்கறேன் என்பது வரை…. எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. நீ நடுவில் வாராமல் இருக்கும் வரை. உன் வேலையை பார்த்துட்டு போ” என்றாள்.
திலிப் யுகனுக்கு தான் விரும்பிய பெண் பூர்வீ என்று தெரியுமா? இதை சொல்லாதே என்று தானே சொல்ல வந்ததே.’ என்று திரும்ப அங்கே யுகன் கைகளை கட்டி கொண்டு நின்று இருந்தான்.
யுகன் இருக்கும் நேரம் பேசினான் என்ற எரிச்சல் தான்.. அப்படியிருக்க யுகன் எதிரில் நிற்கவும்,
”கையை விடரியா?” என்று யுகன் சொல்வும், திலீப் ”அத்தான் நான்…” என்று பயந்து விடுவித்தான்.
”ஒரு வெங்காயமும் சொல்ல வேணாம்… எல்லாம் எங்களுக்கு தெரியும்… போ… முதலில் படிச்சு முடி… அங்க சின்ன மாமா லண்டனின் சீட் வாங்கி இருப்பது, எங்களை எல்லாம் விட நீ பெரியவனா வரணும் என்று தான். இங்க இருந்து சிறியவனா மாறிடாதே போ…” என்றே சொல்ல திலீப் மெல்ல நகர ”நீ துர்காகிட்ட பேசறதே அபூர்வம் அதே போல பூர்வீயிடம் இருந்தா போதும்… சில உறவுகள் எட்டியிருந்தா தான் நல்லது ” என்று கூறவும் திலீப் பேசாமல் சென்று விட்டான்.
பூர்வீயிடம் திரும்பிய யுகேந்திரன் ”அவனை நினைச்சு எல்லாம் பயந்துடாதே… அவன் இங்க தான் வீர புலி.. வீட்ல எல்லாம் நான் ஏதாவது சொல்லிடுவேனு தான் கொஞ்சம் அடக்கி வாசிப்பான்.. பிளாக் மெயில் எல்லாம் பண்ணமாட்டான். அவனுக்கு லண்டன் போனதும் நம்மளை நினைச்சு பார்க்க கூட நேரம் இருக்காது. 4 இயர்ஸ் ஆகும் அதுக்குள்ள நிறைய மாற்றம் இருக்கும் அவனும் முதிர்ச்சி ஆவான்.” என்றவன் பேச்சில், பூர்வீ ஆம் என்பது போல தலையசைத்தாள்.
”இப்போ சொல்றது தப்பு தான் ஆனா… சொல்லணும் தோணுச்சு.. சேலை ரொம்ப நல்லாயிருக்கு… பச்சை பட்டு.. வெள்ளை மல்லி ரோஸ் கலர் ஃபேஸ் எல்லாம்…. என்ன வாட்ச்க்கு பதிலா இரெண்டு பக்கமும் வளையல் போட்டு இருக்கலாம்.. ஒரே கையில் இவ்ளோ வளையல்.. நல்லா இல்லை.” என்று சிரிப்புடன் செல்ல, பூர்வீயோ வாட்ச்சை கழற்றி வளையலை இங்கே பத்து அதில் பத்து என்று போட்டு முடித்தாள்.
யுகனோ மெசேஜில் ”என்ன மாற்றிட்ட போல என்று அனுப்ப
”ஹ்ம் நீங்க சொல்லி மாற்றாமலா?” என்றே இவளும் அனுப்ப
அங்கு திலீப் தனியாக நிற்க ஐஸூ வந்தாள். ”என்ன திரும்ப பூர்வீ பின்னாடி போற அவளுக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை.. இந்த லட்சணத்துல யுகனை வேற சப்போர்ட்டுக்கு அனுப்பியிருக்க” என்று கேட்டாள்.
”ஐயோ ஐஸூ யுகன் அத்தான் எனக்கு சப்போர்ட் பண்ண போகலை. யுகன் அத்தனுக்கு பூர்வீயை தான் பேசி வச்சியிருக்காங்க அத்தை. யுகன் அத்தானும் பூர்வீயும் ஆல்ரெடி நல்லா பழக ஆரம்பிச்சுட்டாங்க… அவர் சொல்ற ஒரு வெங்காயமும் வேணாம் என்ற் வார்த்தை பூர்வீயும் சொல்றா. அந்த அளவு அவர்களுக்குள் பேசி பழகியச்சு.. நான் என்னை விரும்பியதை அவரிடம் சொல்லாதநு சொல்ல போனேன்.. ஆனா யுகன் அத்தானுக்கு அதுவும் தெரியும் போல.. என்னை விரட்டிட்டார்” என்றான்.
”என்ன சொல்லற? அப்போ யுகன் அண்ணாவுக்கு பூர்வீயை தான் அன்னிக்கு அத்தை நிச்சயம் பேசி முடிக்கணும் சொல்லிட்டு போனதா?” என்று கேட்க திலீப் மண்டையை மண்டையை ஆட்டினான்.
”ஆள் தி பெஸ்ட் லண்டன் போயி ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு… நான் பூர்வீயை பார்த்துட்டு வர்றேன்” என்று நழுவினாள்.
”தேங்க்ஸ் ஐஸூ” என்று திலீப் நகர்ந்தான்.
பூர்வீயிடம் முதலில் கேட்க பூர்வீ ”உங்க அண்ணா சொல்லலை அதான் நான் எப்படி? என்று? என்று நழுவ பார்த்தாள்.
”அவன் சொல்லை நீ சொல்லி இருக்கணும் தானே? நான் சொல்லலை அவங்க வீட்டு பொண்ணு அப்பா அம்மா தான் என்னை வளர்த்தாங்க, யுகன் அண்ணா முறை என்று எல்லாம் சொல்லலை?” என்று கோபத்தில் ஆரம்பித்து கேட்க
”நீ கூட தான் உங்க மாமாவை கட்டிக்கிட்டு வந்து நின்றப்ப, தாலி பார்த்து கேட்ட பிறகு தான் சொன்ன?” என்று சொல்லியதும் சமாதானத்தில் ஐஸூ வந்தாள்.
”அந்த அறுவைகிட்ட எனக்கு தெரிந்துடுச்சு சொல்லிடாதே ஈவினிங் வீட்டுக்கு வருவதா சொல்லிச்சு பார்த்துக்கறேன்” என்று கிளம்பினார்கள்.
பூர்வீக்கு வாழ்த்தும் மறக்காமல் சொல்லி மகிழ்ந்தாள்.
ரித்தீஷ் பைக் வந்ததும் அதில் ஏறியதும் ஐசு யோசனையில் திளைக்க ரித்தீஷ் தான் கண்ணாடியில் அவளை கண்டு பித்தம் கொண்டிருந்தான்.
ஐஸூ சேலை கட்டினாலே அவனுக்குள் ஒரு பித்தம் உச்சம் கொள்ளும் அதுவும் இன்று அவள் ஏதோ சிந்தித்து கண்களை உருட்டி யோசித்து செய்வதில் தன்னை தொலைத்து கொண்டிருந்தான். நேராக வீட்டுக்கு வந்து அவளிடை பற்றி இழுக்க, ரித்தீஷ் பார்வை தன்னுள் மட்டுமே இருக்க கண்டாள்.
”மக்கு மாமா… எனன் பண்ற விடு…” என்றாள்.
”ஏய் வெள்ளை பூனை உன் இடுப்பு தான் டி, தானா என் கையில் அகப்படுது.” என்று அவளை அப்படியே தன்னோடு அணைத்து நின்றான்.
”இன்னும் 15 நாள் இருக்கு அப்பறம் எக்ஸாம் முடிஞ்சிடும்…” என்று அவளின் கூந்தலில் கையை நுழைத்து அவள் சங்கு கழுத்தில் வாசம் நுகர்ந்தான்.
”ஹ்ம்…” என்று இமைகள் சொருக நின்றவளிடம் காதில் ”ரியா என் பழைய ஆட்டோ திரும்ப வாங்கிட்டேன்… எனக்கு சென்டிமெண்ட்டா அது வாங்கணும் தோணுச்சு” என்று சொல்ல கண்களை சட்டென திறந்தவள்
”மாமு… எனக்கு கூட நீ அதை திரும்ப வாங்க சொல்லணும் தோணுச்சு டா… எனக்கும் உன் ஆட்டோ விற்றதில் விருப்பமே இல்லை” என்று கூறினாள்.
”ஹ்ம்ம.. உனக்கே அப்படினா எனக்கு எப்படி இருக்கும்?” என்று வாசம் நுகர்ந்தவன் இதழில் துவங்கி இனிதாய் முடித்தான்.
ஐஸூ முடிவில் ரித்தீஷின் காதில் ”ரித்தீஷ்..” என்றாள் கிசுகிசுப்பாய் ”சொல்லு டி” என்று அவன் அவள் கேசத்தில் இமை மூடியபடி லயித்தான்.
”ரித்தீஷ் இந்த இரண்டு மாசமா நான் தலைக்கு குளிக்கலை… வைதேகிகிட்ட சொல்லிடு… அப்படியே உங்க அக்கா கணவர் நான் வாந்தி மயக்கம் எடுத்தா புட் பாய்சன் இல்லை, நீ அப்பா ஆகப்போவதால் நான் அம்மா ஆகறேன்னு சொல்லிடு” என்றாள் வெட்கத்துடன்.
அவனோ ”ஹ்ம்ம… சொல்லிடறேன்” என்று சொன்னவன் அதன் அர்த்தம் புரிந்து அவளை அள்ளி எடுத்தான். கன்னம் இதழ் என்று கிடைக்குமிடத்தில் முத்தமிட்டான்.
”ரித்தீஷ் இந்த முத்தம் எனக்கா? குழந்தைக்கா?” என்று ரியா கேட்க தனது அன்பு அவளுக்கு முதலில் வேண்டும் என்ற அவளின் குழந்தை மனதை ரசித்தவன்.
”என் அன்பு இந்த முதல் குழந்தைக்கு தான்… அப்பறம் தான் இந்த குழந்தைக்கு..” என்று சொல்ல, ”லவ் யூ டா ரித்தீஷ்” என்று இம்முறை அவளின் முத்தம் அவனின் முகமெங்கும் அள்ளி வழங்க, கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் யாரென்று பார்க்க அங்கே யுகன் நிற்க கண்டு ரியாவோ ‘ஆஹா இவனை எப்படி மறந்தேன்… இரு டா.. உன் வாயை திறக்க வைக்கறேன்” என்று மனதில் கணக்கை போட்டாள்.
”வாங்க அண்ணா சார்…” என்று இழுக்க ரித்தீஷ் மனதிலே ‘இந்த சார் என்றதே ஏதோ வில்லங்கம்’ என்றெண்ணியவன் திருதிருவென விழித்தாலும் ”வா யுகன்… கூட்டிட்டு போக நீ வரணுமா டா அதான் நானே வர்றேனு சொன்னேனே…” என்று உள்ளே அழைத்து அமர வைத்தான்.
”அது இல்லை டா இந்த குட்டி சாத்தான் இன்னிக்கு காலேஜ் ஆண்டுவிழா இருந்தது அதுயிது என்று சாக்கு சொல்லிடுமோனு வந்தேன்.. ஏய் குட்டி சாத்தான்… கிளம்பமா அதே சேலையில் இருக்க?” என்று கேட்டான்.
”ஹிம் நீ வந்ததும் உன்னிடம் டீல் பேசணும் இருந்தேன்… அதுக்கு பிறகு தான் அங்க வரணுமா வேணாமா யோசிக்கணும்” என்றாள்.
”குட்டி சாத்தான்… அங்க பெரிப்பா நீ வருவதுக்கு காத்திருக்கார் தெரியுமா? உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல எல்லாரும் காத்திருக்கறோம்.” என்றான் வெட்க புன்னகை சிந்தி.
”காத்திருங்க காத்திருங்க… நான் ஒண்ணு சொன்னா நீ கேட்பியா அண்ணா?” என்று தலை சாய்த்து கேட்க யுகனுக்கோ ரித்தீஷ் போலவே சிறுவயதில் ‘எனக்கு இந்த பந்து விளையாட தருவியா’ என்று கேட்ட நினைவில் மனமெங்கும் மகிழ்வு பொங்கியது.
”நீ என்ன கேட்டாலும் செய்வேன் டா” என்று பாசத்தில் பேசினான்.
”அது ஒண்ணுமில்லை.. எங்க வீட்ல என் அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கா.. அவளை நீ கல்யாணம் செய்து கொள்ளறியா? எனக்கும் அம்மா அப்பா நீங்க பிரிக்கற மாதிரி தோணாது… நம்ம எல்லாம் ஒரே குடும்பமா ஆகவும் ஒரு வாய்ப்பு இருக்கும்.. அதுக்கு பிறகு உங்க பெரிப்பா கூட நான் இயல்பா பேசி பழகறேன்… எப்படி?” என்று கேட்டு முடிக்க ரித்திஷிற்கோ ‘இவ யாரை அத்தை பொண்ணுனு சொல்லற?’ என்று முழிக்க யுகனுக்கோ வேர்த்து விட்டது.
ஏற்கனவே ‘பூர்வீ அவநம்பிக்கையில் தான் திலீப்பை மறந்து எந்தன் அன்பில் காதலை உணர்ந்து இப்போ நாங்க விரும்பி கல்யாணம் வரை வந்தது. இவளிடம் பெரிப்பா பேச வரவழைக்க என்னை அனுப்பி இருக்கார். இங்க இவள் இப்படி கேட்கறா? நான் இப்போ என்ன செய்ய? ஐஸூ அண்ணா சொல்லி கேட்பதும் முதல் முறையா இருக்கு. இப்ப நான் என்ன முடிவில் இருப்பேன்? கடவுளே…. என் மனசில் பூர்வீ இருக்காளே.’ என்று பயந்தான்
”என்ன அண்ணா…. வீட்டுக்கு கிளம்பலாமா? நம்ம பெரிப்பாகிட்ட நானே சொல்லறேன்” என்று கண் சிமிட்ட யுகனுக்கோ இவள் அங்கு வந்தால் பெரிப்பா இவளிடம் சொல்லட்டும் ஏற்கனவே எனக்கு பெண் பார்த்து முடித்ததை’ என்று யோசித்தவன்
”அம்பு.. நீ வீட்டுக்கு வா.. அங்க சொல்றேன்” என்று அமைதியாக தாமதிக்காமல் வெளியேறிவிட்டான்.
”ரியா என்ன பேசின உனக்கு யார் அத்தை பொண்ணு இருக்கா?” என்றே ரித்தீஷ் கேட்க ஐஸூ பூர்வீ பற்றி யுகனை பற்றியும் சொன்னாள்.
”ஏய் அவன் பேயறைந்தது போல போறான் மா.. சொல்லிடு.. விளையாடாதே.” என்று ரித்தீஷ் நண்பனுக்காக பாவம் பார்த்தான்.
”மாமா அங்க தானே போறோம் எல்லாதையும் சொல்லலாம் கிளம்பு” என்று ரியா சொல்ல
”எல்லாத்திலும் விளையாட்டு ரியா உனக்கு” என்று பைக் சாவி எடுக்க ரியாவோ ”ஆட்டோல போகலாம் ரித்தீஷ் மாமா” என்றாள்.
”அங்க எப்படி மா? அக்கா வீட்டுக்கு என்றால் பரவாயில்லை” என்றாள்.
”அதெல்லாம் போகலாம்.. எனக்கு ஆட்டோல போகணும்” என்று பிடிவாதம் பிடிக்க, அவள் கருவுண்டான நேரம் வேறு என்று ரித்தீஷ் ஆட்டோ கீயை எடுத்தான்.
”பாவம் டி அவன் முகம் போன போக்கை பார்க்கணுமே… உன்னிடம் எப்படி மறுப்பது என பயந்து போயிட்டான்” என்று ஆட்டோ ஒட்டி கொண்டே பேசினான்.
”ஆமா இவர் என்னை பார்க்கின்ற மாதிரி என் ப்ரெண்ட்டை இவளோ நாள் சைட் அடிச்சிருக்கார். நான் கூட தங்கச்சி பாசமானு வியந்துட்டேன். இன்னிக்கு இப்படி கேட்டதும் யுகன் அண்ணா ஃபேஸ் பார்த்ததும் தான் அவர் நிஜமாவே என் மேல எவ்ளோ அன்பில் இருக்கார் என்று தெரியுது, இருந்தாலும் ரித்தீஷ் அண்ணாவை கொஞ்சம் நேரம் அழ வைப்போம்” என்று சொல்லி சிரித்தாள்.
அங்கே தண்ணீர் லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் வேகமாக தறிக்கெட்டு வேகமாக இவர்களை நோக்கி வர, ரித்தீஷ் எப்பொழுதும் போல தாரம் ரியாவின் அழகை கண்ணாடியில் ரசித்தவன் பின்னால் வந்த லாரியை அதன் பின்னே பார்க்க அதற்குள் லாரி இவர்கள் ஆட்டோவில் மோதியது
