அத்தியாயம்-42
The leader-42
சத்ரியன் நீண்ட நேரம் அமைதியாக நின்றான். ஷ்ரத்தாவின் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது. அதை பார்த்தவன் எரிச்சலுடன் தலையை கோதினான்.
“இப்ப எதுக்கு அழற?” என்றான். “ஹரிணிக்காகவா? அது நடந்து இரண்டு வருஷத்துக்கு மேலாகுது ஷ்ரத்தா. வினோத்துக்கே ரீசண்டா தான் தெரிய வந்து பழிவாங்க முயன்றான். ஒருவேளை அவனுக்கு அந்த விஷயம் தெரியலைன்னா இன்னமும் எனக்கு விசுவாசியா இருந்திருப்பான். பச்… ஹரிணியே மூவ் ஆன் ஆகிட்டா.
இல்ல.. அபார்ஷனுக்காகவா? ஒரு குழந்தை அழிந்துடுச்சுனு யோசிக்காத. உனக்கென்ன வயசு.. பார்த்துக்கலாம். முதல்ல படிக்கற வழியை பாரு.” என்றான். என்னவோ அவள் படிக்க விரும்பியதாகவும், இவன் அவளிடம் நெருங்காமல் நகர்ந்ததாகவும் பேச்சை மாற்ற முயன்றான். படிக்கின்ற பெண்ணை ஆசை ஏற்படும் நேரமெல்லாம் தூக்கி வந்தவன் தானே என்றதை அந்நேரம் மறந்தான்.
தாலி கட்டாமல், திருமணம் ஆகாமல், ஊர் உலகத்திற்கு, சத்ரியன் ஆசைக்கு இவள் நாயகி என்ற அவப்பெயரில் சஞ்சரிப்போமென்ற எண்ணமின்றி தங்கள் உதிரத்தில் உருவான உயிர் வயிற்றில் இருந்து சென்றதற்காக இருவருமே கவலைக் கொண்டனர்.
ஷ்ரத்தா வெறித்த நிலையில் இருக்க அசைந்தபாடில்லை, சத்ரியனோ “இல்ல என்னை பார்த்தா அருவருப்பா இருக்குதா?” என்றதும் ஷ்ரத்தா எதுவும் பேசவில்லை. சத்ரியன் கொலை செய்வதை கண்டாயிற்று, பல பெண்களோடு உறவாடியவனாகவும் அவளறிவாள். அதனால் அப்படி கேட்டான்.
சத்ரியனோ திடீரென எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றான். ஷ்ரத்தா மனதில் ஊமைப்பெண்ணான ஹரிணியிடம் தான் நடந்துக்கொண்ட விதம், செய்த தவறுக்கு தண்டனையாக தனது குழந்தை இல்லாமல் போனதும் தான் பாதிப்பை தருவதென்று அறிந்தான். பின்னே மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி தனக்கு என்றால் ரத்தமா? அதெல்லாம் தெரியாதவன் அல்ல.
ஷ்ரத்தாவை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் “ஹரிணி உயிரோட இருக்காடி. வினோத் சொன்னதை சரியா கேட்டியா. அவ வாழ்க்கையை மலேசியாவில் நல்லபடியா திரும்ப அமைச்சிக்கிட்டா. அவ அவளோட பெயிண்டிங் கலையில் மனதை செலுத்திக்கிட்டா.
பயத்தினாலையோ.. இல்ல தனக்கு நடந்தததை மறந்து மீண்டு வரணும் என்ற வைரக்கியமோ.. கிட்டதட்ட இந்த வீட்ல நடந்த சம்பவத்திலயிருந்து மீண்டுட்டா.
புரியுதா… மொத்தமா மூவ் ஆன் ஆகிட்டா. வினோத் கூட வேண்டாம்னு தான் தனியா வாழறா. முடிந்ததை வச்சி இப்ப என்னை பார்க்கற.” என்றான். ஷ்ரத்தா மாறாத கோலத்தில் நின்றாள்.
சத்ரியன் பல்லை கடித்தபடி “வினோத்தும் செத்துட்டான். இந்த தொழிலில் கொல்ல வந்தவங்களை மன்னிக்க முடியாது ஷ்ர்ததா. நான் என்னடி செய்ய?” என்று அவன் திரும்பி பார்த்தான்.
“நீ மட்டும் ஏன் இன்னும் அந்த விஷயத்தை பிடிச்சிக்கிட்டு என்னை தண்டிக்கற?” என்றதும் ஷ்ரத்தா அதிர்ந்து பார்த்தாள்.
அவள் அழுது வேதனைப்படுவது அவளது வலியால். கொலையே செய்தாலும் தான் நேசித்த சத்ரியன் இப்படியானவனா என்ற வேதனை. இவனுக்கு ஏன் நான் இந்த கோலத்தில் இருப்பது, அவனுக்கு தண்டனையாக தெரிகின்றது? என்பது போல பார்த்தாள்.
சத்ரியன் சிரித்தான். அந்த சிரிப்பில் வேதனை இருந்தது.
“நான் இப்படி இருந்ததில்லைடி. யார்கிட்டயும் விளக்கம் கொடுத்ததில்லை டி. யாருக்காகவும் நின்னு யோசிச்சதில்லை. யாரோட அபிப்பிராயத்துக்காகவும் கவலைப்பட்டதில்லை. நான் நானா வாழறவன்.
தொழில் சாம்ராஜியத்தில நான் கிங். எனக்குனு குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லை. காட்டு மரமா என் கிளைகள் பல இடத்தை ஆக்கிரமிச்சு அசைக்க முடியாதவனா இருக்கேன்.” என்றவன் மெதுவாக அவளருகே வந்தான்.
“உன்னை பார்த்த பிறகு தான் உன் மேல நேசம் பிறந்தது. ஆசை யார் மேலயும் வரும். நேசம்.. ஒருத்தி மேல தான் வந்தது.” ஷ்ரத்தாவின் மூச்சு நின்றது. “முதல் முறை நீ என் அறையில் நின்னப்ப… எனக்கு சின்ன பொண்ணா தான் தெரிஞ்ச. எனக்காக வாதாடிய லாயர் திவாகர் பொண்ணு. உன் மேல காமம் இருந்தது. அதை தாண்டி உன்னை அனுபவிக்க எல்லை மீற எதுவும் தோணலை.
அதான் உன்னை உயிரோட போக விட்டேன். இல்லன்னா அன்னிக்கே உன் கதை முடிஞ்சிருக்கும்.” ஷ்ரத்தா அமைதியாக கேட்டாள்.
“அடுத்த தடவை பார்ல வந்து காப்பாத்துங்கன்னு சொன்ன. நான் மட்டும் அன்னிக்கே காப்பாத்தினேன்னா.. என்னை கொல்ல துடிக்கற கூட்டம் உன்னை கொல்ல முடிவெடுக்கும். அதனால தான் ‘போனா போடி செத்து தொலை’னு அனுப்பினேன். அதுக்கப்புறம் என்னாச்சு? ஒருத்தனும் உன்னை துரத்தலை.
காலேஜ்ல உன்னை ராகிங் பண்ணினாங்கன்னு கேள்விப்பட்டேன். அதுவும் வினோத் தான் வந்து சொன்னான். கார்டியன்னு உங்க பேர போட்டுட்டு இந்த பொண்ணு இப்படி கஷ்டப்படறா பாஸ்?’னு தூண்டினான். நானும் அதை சாக்கா வச்சிட்டு வந்தேன்.
அன்னிக்கு உன்னை கேலி செய்தவனை பார்த்ததும் கோபம் வந்தது. உன்னை ராகிங் பண்ணினவங்களை அடிச்சி துவைச்சேன்.”
ஷ்ரத்தாவிற்கு அந்த நாள் நினைவு வந்தது. அன்று ஜானை எப்படியெல்லாம் அடித்து துவைத்தான். ஷ்ரத்தாவே விட்டுடு என்று கதறினாள். சத்ரியனை ‘இவனெல்லாம் மிருகமா’ என்ற ரீதியில் சபித்தாள்.
சத்ரியன் மெதுவாக தலையசைத்தான். “அதுக்கப்புறம் நீ என் கூட வந்த. ரொம்ப ரொம்ப பேசின. வாயாடின.. திமிரா தெரிந்த.. என் ஈகோவை கிளறின. ‘உன் கட்டில்ல படுக்கற பொண்ணுங்க எல்லாம் பணத்துக்காக வர்றவங்க’ன்னு சொன்ன. அதான்… அப்ப இருந்து உன்னை என் மடியில விழ வைக்கணும்னு நினைச்சேன்.” அவன் நேராக அவளை பார்த்தான்.
“ஆமா. அது என்னோட ஈகோவை சீண்டிடுச்சு. ஒத்துக்கறேன்..
அதோட… என்னை கொல்ல வர்றவங்க யாருனு கண்டுபிடிக்க கூடவே வச்சிக்கிட்டேன். ஆனா கொஞ்சம் கொஞ்சமா…” அவன் வார்த்தையை முடிக்கவில்லை.
ஷ்ரத்தா அவனை பார்த்தாள்.
சத்ரியன் பார்வையை திருப்பினான். “உன்னை ரசிக்க பிடிச்சிருச்சு. அது தான் உண்மை. பதினெட்டு வயசு கூட ஆகலை. எனக்கே சின்ன பொண்ணுக்கிட்ட என்ன ஃபீலிங்னு அவாய்ட் பண்ணினேன். ஆனாலும்… என்னவோ பண்ணிட்ட.” அவன் சிரித்தான்.
“உனக்கும் பதினெட்டு பிறந்தது. நீ வேற ரொம்ப பேசினியா… உன்னை பார்க்கறப்ப மெச்சூரிட்டியான லுக் வந்தது. பெர்த்டேவுக்கு உன்னை சீண்ட தோணுச்சு. நீ கோபப்படறப்ப நான் என்ஜாய் பண்ணினேன். அந்த பீல் வித்தியாசமா இருந்தது.
ஒருபக்கம் என்னை கொல்ல ஆட்கள் சுத்திக்கிட்டு இருந்தாங்க. அதை தெரிஞ்சும்… உன்னை பார்க்க தனியா இரண்டு முறை வந்தேன். முதல் முறை ஹாஸ்டல்ல வந்தப்ப நீ தூங்கிட்டு இருந்த. என் பெயரை எழுதி கிறுக்கி என்னை கொல்லணும்னு அதுல வட்டமிட்டு வச்சியிருந்த. அதெல்லாம் எனக்கு.. எனக்கு சைல்டிஷா இருந்தது. தூங்கும் பொழுது குழந்தை மாதிரி.. தேவதை மாதிரி இருக்காலே.. என்னை கொல்லணும்னு துடிக்கறானு ரசித்தேன்.
நான் நினைச்சா.. மயக்க ஸ்பிரேவை வச்சி உன்னை மயக்கப்படுத்தி அன்னிக்கு உன்னை என்ன வேண்டுமின்னா செய்துட்டு, வந்ததே தெரியாம, திருட்டு தனமா திரும்பி வந்திருந்தாலும் உனக்கு தெரிந்திருக்காது.” என்ற பொழுது, ‘என் தேவை காமவெறி இல்லை. அப்படியிருந்தால் ஊமையான ஹரிணியை தவறாக அணுகுவதாக செல்லும். நான் உன்னையே அப்படி செய்யாத பொழுது, ஹரிணியை பற்றி அறிந்திருந்தால் விட்டு விலகியிருப்பேன்’ என்ற பொருள் பதிந்திருந்தது.
“செகண்ட் டைம் ஓட்டு போடற வயசு வந்துடுச்சுனு நெருங்கினேன்.
அப்படி வந்தப்ப தான்…”
அவன் வயிற்று பகுதியை தொட்டான். “நிர்மல் கையால தோட்டா இறங்குச்சு.” அறை மீண்டும் அமைதியானது.
“யார் என்னை கொல்ல துடிக்கறாங்க? உங்கப்பா ஏன் கொல்லப்பட்டார்? என் எதிரியோட வேலையா? வேற யாரா? இல்லை நிஜமாவே உன்னை யாராவது கொல்ல முயற்சிக்கறாங்களா?
எல்லாத்தையும் தேடினேன். என் பக்கம் இருந்து உன்னை யாரும் நோண்டலைன்னு தெளிவா தெரிஞ்சதும்… உன்னை பாதுகாக்க முயற்சி பண்ணேன். ஆனா நீ?” அவன் எரிச்சலுடன் சிரித்தான்.
“காலேஜ் போவேன்னு ஒத்த காலில் நின்ன. தேங்க் காட்.. உனக்கு வந்ததை நிரோஷ் வாங்கி அனுபவிச்சான்.
நல்லது தான் இல்லைன்னா உன் பக்கம் திரும்பறான்னு அவனுக்கு ஒரு தண்டனை என் கையால விழுந்திருக்கும்.
அப்பவும் நீயா பிரச்சனை செய்த. ஹாஸ்பிடல் போவேன்னு அடம்.
அதுவும் நல்லதுக்கு தான். உங்கப்பா இறப்பு விஷயம்.. அங்கிருந்த அந்த நர்ஸ் ஸ்டெல்லா தான் சொன்னாங்க. உங்கப்பா கடைசியாக பேசினப்ப கூடவே இருந்தது அவங்க தான். அப்பவே சொல்லியிருக்கலாம். அப்ப அவங்க என்னை நேர்ல சந்திக்கலை. அவங்களுக்கும் பயம் இருந்ததாம். அப்பவே சொல்லியிருந்தாலும் நான் காது கொடுத்திருப்பேனா என்பதும் சந்தேகம் தான்.
இப்ப தான் சொன்னாங்க. சொன்னதும் ஆதிகேசவை நிர்மலை கொண்ணுட்டேன். உனக்காக..” என்றதும் ஷ்ரத்தாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.
சத்ரியன் கெட்டவன் கொலையாளி. அது தனிப்பட்ட மனிதனின் பக்கம். இவளுக்காக பாதுகாத்திருக்கின்றான். இவளை கொல்ல முயற்றவர்களை கொன்று புதைத்திருக்கின்றான். தந்தைக்காக தந்தையை கொன்றவர்களை கொல்ல நினைத்தும் முடியாத மனிதநேயத்தை, அவன் அதெல்லாம் யோசிக்காமல் கொன்றுவிட்டான். மனிதநேயமென்று ஆதிகேசவை உயிர் பிழைக்க வைத்திருந்தால் கூட ஷ்ரத்தா நிம்மதியாகி இருக்கமாட்டாள். அதே சமயத்தில் அவளாலும் கொல்ல இயலாது. அப்ப ஒரு இறப்புக்கு நியாயம் இல்லையா? என்ற எண்ணத்தில் நடமாடியிருப்பாள்.
ஒருவேளை இதெல்லாம் தானே அவனிடம் சென்று தன்னை இழந்த காரணத்திற்காகவா? என்று எண்ணினாள்.
சத்ரியன் அதையும் யூகித்தவனாக மெதுவாக அவளருகே அமர்ந்தான். “நீ என்னிடம் உன்னை இழந்துட்டேன்னு நினைக்கறியா? அதுக்காக இதெல்லாம் நான் உதவறேன்னு நினைக்கறியா? நெவர்.” அவள் அவனை புரியாதபடியே பார்த்தாள்.
சத்ரியன் முதல் முறையாக நேராக அவள் கண்களை பார்த்தான்.
“நான் தான் உன்னிடம் என்னை இழந்துட்டேன். நம்ம குழந்தையையும்.” என்ற பொழுது அவன் உதடுகள் இறுகின.
அவனுக்கு இவ்வாறு தான் ஒருத்தியிடம் கலந்து பேசி உருகுவோமென நினைத்ததில்லை. இன்று அனைத்தையும் கொட்டி தீர்த்ததில், ஷ்ரத்தா குழப்பத்துடன் சத்ரியனை பார்த்தாள். “அப்போ… வினோத் அண்ணா என் கழுத்துல கத்தி வச்சப்ப…” அவள் குரல் லேசாக உடைந்தது. “சாகட்டும்னு சொன்னீங்களே?” சத்ரியன் பெருமூச்சு விட்டான்.
“அதுவும் நான் யூஸ் பண்ணுற டெக்னிக் தான்.” என்றான். “என்ன?” என்று கேட்க, “எதிரிக்கு நான் எதுல வீக்குனு தெரியக்கூடாது.” அவன் அமைதியாக சொன்னான்.
“நான் உனக்காக எமோஷனல் ஆகுறேன்னு தெரிஞ்சா… அடுத்த நாள் பத்து பேரு உன்னை வச்சி என்னை மிரட்ட வருவாங்க. என் மனசுக்குள்ள என்ன இருக்குனு யாருக்கும் தெரிய நான் விடமாட்டேன்.” ஷ்ரத்தா அமைதியாக பார்த்தாள்.
“அதனால தான் அப்படி பேசினேன்.” பிறகு அவன் மெதுவாக சிரித்தான். “உள்ளுக்குள்ள துடிச்சது எனக்கும் உனக்கும் தானே தெரியும்.” அந்த வார்த்தையில் ஷ்ரத்தாவின் கண்கள் லேசாக நனைந்தது.
உண்மைதான். அவன் கை முறுக்கேறியது. தாடை இறுகியது. அவன் கண்களில் இருந்த பதற்றம். எல்லாம் அவள் பார்த்திருந்தாள்.
“ஓகே.. லீவ் இட். என்னை பிடிச்சிருக்குனு நீயும் சொல்லிட்ட. உன்னை பிடிச்சதை நானும் சொல்லிட்டேன். மனசுல அந்த உணர்வுக்கு பெயரையும் நீயே வச்சிக்கோ.
பட்… ஹரிணியை நான் ரேப் பண்ற நோக்கத்துல தொடலை. அவளைன்னு இல்லை. யாரையும் அந்த நோக்கத்தில் தொடவும் மாட்டேன்.” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு இவ்வளவு பேசி தன்னிலை விளக்கியவனிடம் வாதம் நிகழ்த்த பிடிக்கவில்லை.
ஆனால் மனதின் ஓரத்தில், ‘என்னயிருந்தாலும்.. குழந்தை போயிடுச்சு. சத்ரியன் ஹரிணியை கெடுத்ததாக தானே பேசப்படும். வினோத் அண்ணாவை சாகடிச்சிட்டார்’ என்று உறுத்தியது.
-தொடரும்.

Ninachen ivlo panum pothu ava kitta mattum porumaiya irukum pothum ivan avala love pana aarambichitanu athe mari Iruku ena irunthalum avanum manushan thana avanukum feelings irukum la
Interesting 👌👌👌👌👌👌