Skip to content
Home »  அனுவும்👧 டினுவும்🐻

 அனுவும்👧 டினுவும்🐻

சங்கமம் என்னும் தளத்தில் “தனிமை” என்ற தலைப்பின் கீழ் எழுதி பரிசு பெற்ற கதை. 

                      அனுவும்👧 டினுவும்🐻

    சுற்றிலும் இருட்டு எங்கோ தவளை எழுப்பும் சத்தம் அந்த அறையில் தெரிந்த நிழல்கள் வேறு அச்சத்தை பரவச் செய்தது.

   அங்கே அதை தவிர்த்து நிசப்தம் இருக்க அந்த ஜோடிக் கண்கள் இங்கும் அங்கும் மருண்டு பார்த்து பயத்தில் இருந்தன அந்த தளிரான மொட்டுக் கண்கள்.

    வெளியே தவளை சத்தம் கேட்டு வானில் இடி ஓசையெழுப்பி அதற்கு தாளம் சேர்த்தது. இம்முறை அந்த சின்னச்சிறு கண்கள் படபடத்தது. பயத்தின் காரணமாக தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கியது.

         பற்றாதக் குறையாக இதுவரை மெல்லிய வெளிச்சம் கொடுத்த அந்த இரவு நேரம் ஒளிர்விடும் விளக்கு மின்சார நிறுத்தத்தினால் ஒளியிழந்தது. 

     அந்த சின்னச் சிறு கண்கள் பயத்தில் விரிந்தது. சட்டென ஜன்னல் புறத்தில் இருந்து வந்த மின்னல் வெட்டில் அந்த கண்கள் அஞ்சி ஒடுங்குவது அங்கிருந்த பல்லி அறிந்து இருக்கலாம்.

       கண்களில் அச்சம் தவிர்த்து வேறு காணாத இமைகள் மெல்ல மெல்ல இருட்டினை சற்றே காண செய்ய தைரியத்தை மனதின் ஆழத்தில் இருந்து தோண்டி எடுத்துக் கண்களை விரித்து காண அறையில் சில பொருட்களின் உருவங்கள் பூதமாக கற்பனையில் வடிந்தன. பாவம் அது அந்த அறையின் பொருட்கள் என்று இன்னமும் அறிந்திறாத உள்ளம் தான் அது.

  அவ்வுள்ளம் பேயாக இருக்குமோ அல்லது தன்னை அச்சுறுத்த சொல்லப்படும் பூச்சாண்டியாக இருக்குமோ என்று அந்த சின்ன இதயம் தறிக்கெட்டு கற்பனையில் விழுந்தது.

      ஏனோ அந்த கற்பனை உருவத்தில் வித்தியாசமான உருவங்களை பேயாக கற்பனை செய்து தன்னை வதைத்தாலும் கண்கள் சிமிட்ட சிமிட்டி அந்த நிழல் உருவங்களை அக்கண்கள் பழகிக் கொண்டு இருந்தது. அந்த உள்ளம் அறியாமலே சிறு பயம் கலைந்து கொண்டு இருந்தது.

   இருட்டில் காணும் நிழல் உருவம் தன்னை எதுவும் செய்யவில்லை என்று நாழிகை சில நகர அறிந்திட அச்சமின்றி அக்கண்கள் நாலாபுறமும் மெல்ல மெல்ல உற்று நோக்கியது.

   பயம் என்பது சற்றே தனிய… சில வினாடிகளில்….

       எதிர்பாராத விதமாக சடசடவென மழை கொட்டியது. மேலே ஓட்டு வீட்டில் மழை அதிரக் கொட்டியது. அது மழையென்றே அறியா அந்த சிறு உருவம் திருடர்களாக இருக்குமோ என்று அஞ்சி தன் தலையணையின் அடியில் இருந்த சின்ன (டினு)டெடிபர் திருட வந்திருப்பார்களோ என்று அஞ்சி பொம்மையையும் தன் கைகளையும் இணைத்த படி தன் உடலை மேலும் குறுக்கியது. 

     எங்கோ பனித்துளி போல முகம் ஈரம் ஆவதை உணர்ந்து விழிகள் படபடக்க அதிர்ந்து பின்னர் ஜன்னலில் வழியே வரும் மழை என்று புரிந்தது அந்த உருவத்திற்கு.

      மழை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் சிறு தூரலாக பண்ணீர் துளிப் போல் பொழிய அதில் நனைவதற்கு ஆறில் இருந்து அறுபது வரை ஏக்கம் இல்லாமல் போகுமா? தற்போது தன் மேல் விழும் சாரல் துளி மழை என்று அந்த ஐந்து வயது கொண்ட உருவத்திற்கு புரிய துவங்கியது. இருந்தும் அதை இரசிக்க முடியவில்லை. எழுந்து செல்ல இந்த கும்மிருட்டு தடுக்கின்றது. ஏதோவொரு அச்சம் தன்னுள் அழுத்தியது.

        அதிலும் படபடவென தற்சமயம் பலத்த ஓசையோடு ஜன்னல் கதவு ஒசையெழுப்பிய விதம் சற்றே அவளை போலவே துளிர்த்த தைரியத்தை அடியோடு அடக்கியது.

        இதுவரை மின்சாரமின்றி புழுக்கம் செய்த அறையில் சில்லென்ற குளிர் காற்று இதமாக வருடி அவளை தழுவி ஆறுதல் படுத்தியது. என்னவோ அதில் சற்று இதம் உணர்ந்து மகிழ்ந்து போனாள்.

   அக்கணம் அந்த இருட்டு, நிழல் உருவ பேய் கற்பனை, தவளையின் கத்தல், பொம்மையை திருட வந்ததாக எண்ணிய பொம்மை திருடர்கள் என்பதை எல்லாம் மறந்து போனாள்.

   இதமாக உறங்கலாம் என்று எண்ணிய கணம் மழையின் வருகையாலும் குளிர் காற்றாலும் தன் அடிவயிற்றில் இயற்கை உபாதை செல்ல வேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்தது.

 போன முறை உறக்கத்தில் சிறுநீர் கழிந்திட அதற்கு அடுத்த நாள் முதுகில் வாங்கிய அடிகளை எண்ணி இன்று எப்படியோ அடக்கிட பழகி கொண்டாள்.

 ஆம் அடி தான் முதுகில் இன்றும் எண்ணி பார்த்தால் அதன் வலி உணரும் வயது தானே. அந்த அடிகளை வழங்கிய கைகள் கண்ணாடி வளையல் அணிந்து இருக்க ஒரு முறை தன் முதுகில் உடைப்பட்டு வளையலின் கண்ணாடியின் பகுதி கிழித்து இரத்தம் வந்து தண்ணீர் பட்டால் எரிச்சலை கிளப்பியது இன்றும் எண்ணி பார்த்தது அந்த ஐந்து வயது சிறு இதயம். அவர்களை அன்னை என்று அறிமுகப்படுத்திய பொழுது இருந்த கனிவு அதன் பின் காணமல் இருந்ததை அறிமுகப்படுத்திய தந்தை அறியவில்லை. 

 கண்கள் இம்முறை பயத்திற்கு பதிலாக ஒருவித சோகத்தை தத்து எடுத்துக் கொண்டது. அன்றைய நிகழ்வின் பாதிப்பில் நெஞ்சு கூடு ஒரு முறை விம்மி துடித்தது.

    அதன் பிறகு அந்த அழுகைக்கு சமாதான முயற்சியாக அப்பா வாங்கி தந்த டெடிபியர் தான் இது. அவளின் டெடிபியரை கண்டு இருட்டில் முத்தமிட்டாள். அந்த நாளில் இருந்து தானே அனுவும் டினுவும்(Tinu) நெருங்கிய நட்பாக மாறி போனார்கள். என்ன செய்ய சிறிது காலமாக மேல் நாட்டு பாணியில் குழந்தையை தனியே படுக்க வைப்பது தனியறை என்று பழக்கப்படுத்தி ஹைபை வாழ்கை என்று மகளுக்காக சலுகை என்ற பெயரில் தனிமை படுத்திய வளையல் கையின் மகிமை இது.

 இதோ அனு உறங்கும் பொழுதும் கூடவே வைத்து கொண்டாள் டினுவை.

   திருடன் என்றதும் முதலில் தனது டினு தானே நினைவு வந்தது. அதன் பிறகு தனது மிதிவண்டி, பிக்கி பேங்க், பார்பி பொம்மை, ரிமோட் கார் எல்லாம் இரண்டாம் பட்சமாக யோசித்தது அக்குழந்தை மனம்.

  நினைவுகளை எண்ணி பார்த்து முறுவளித்தவளின் அடிவயிறு இம்முறை அவசரம் என்று அடம் பிடித்தது.

   அச்சங்களை தாண்டி இயற்கை உபாதை அடக்கப் பாடுபட்டு தவிக்க செய்தாள்.

 கழிவறை ஒன்றும் அதீத தூரமில்லை இதே அறையில் ஸ்விட்ச் பாக்ஸ் அருகே இருக்கும் கதவு தான் என்ன இருட்டில் தனித்து செல்ல அஞ்சி…. எதற்கெடுத்தாலும் பயமா…? என்று கேட்கலாம் ஆனால் வயது ஐந்தில் அப்படிதான் பயம் இருக்கும் போல யார் கண்டார்கள் இதே உருவம் நாளை ஜான்சிராணி போல அஞ்சா நெஞ்சமாக இருக்க வாய்ப்பு உண்டு.

       முன்பு எல்லாம் இப்படியா? ஒரு பக்கம் அப்பா மறுபக்கம் அம்மா என்று மிகவும் பாதுகாப்பாக இருந்தது நினைவு வர கண்ணீர் சுரந்தது. அன்று இது போன்ற தனிமை இல்லை. இது போல தனிமை படுத்தப்படலாம் என்று அனுவின் அன்னையை பறித்து விதி  மாற்றி விட்டதோ?!

       தனிமை அதற்கு இந்த வயதில்  அர்த்தம் புரியுமா? விதியின் விளையாட்டில் எத்தனையோ தனிமை இருக்கின்றன. காலத்தின் மாற்றத்தில் பிள்ளைகளை பிரிந்து பெற்றவர்கள் தனிமை. ஜோடிகளில்  துணையை இழந்த தனிமை. காதல் தனிமை, நட்பில் தனிமை என்று முதுமையில் தனிமை என்று பல தனிமை இருந்தும் தனிமைக்கு அர்த்தம் அறியா வயதில் மிரட்சியோடு இவ்வறையில் அனு.

      கொஞ்சம் கொஞ்சமாக அழுகை வந்தது. இயற்கை உபாதையை அடக்க முடியாது தவித்து கண்ணீராக கலங்கி நிற்க ஏதோ ஒரு உருவம் அசைந்து வருவதை கண்டு கண்களும் மேலும் விரிந்து யாரது என பார்க்க அவ்வுருவம் தனக்கு பழகிய உருவமாக தோன்ற அதுவும் தந்தையாக மின்னல் கீற்றில் தெரியவர டெடிபியரை விடுத்து ஓடியது அப்பிஞ்சு கால்கள்.

     “அப்பா…” என்று காலை கட்டி  கொள்ள

       “என்னச்சுடா குட்டி பயந்திட்டீங்களா? என்று ஜன்னல் கதவை சாற்ற கை செல்ல

   “அப்பா.. பாத்ரூம் போகணும்” என்றதும்

     “சரி போ அப்பா இங்க இருக்கேன்” என்று கூறிய வார்த்தையில் திரும்பி பார்த்தபடி யானை பலம் வந்த மிதப்பில் பாத்ரூம் சென்று திரும்ப தந்தை உருவம் இருப்பதை எண்ணி வெளியே வந்து காலை பிடித்திட ஜன்னல் சாற்றியதும் மின்சாரம் வந்ததின் அறிகுறியாக சின்ன ஒளி விளக்கு மிளிர

     “கரண்ட் வந்திடுச்சு தூங்குங்க.” என்று தலையில் முத்தமிட்டு உறங்க வைத்து கிளம்ப தந்தை கூடவே இருக்கும் நிம்மதியில் இமை தழுவி நித்திரை சென்றாள்.

     சிறிது நேரம் கடக்க மீண்டும் பலத்த இடி சப்தம் கேட்டதும் கைகள் தானாக நடுங்கி தந்தையை தேட அவர் அங்கு இல்லை.

    கண்கள் விசும்பி டெடிபியரை தேடி பிடித்து மீண்டும் இருட்டை துழாவ இம்முறை தனிமை இனி நிரந்தரம் என்ற நிதர்சனம் அப்பிஞ்சு மனதில் பதிந்தது.

      எழுந்து அமர்ந்து தளிர் நடையில் ஜன்னல் அருகே வந்து கதவை திறக்க இவள் வந்ததை இயற்கை அன்னை அறிந்தாளோ என்னவோ இதமாக முன்பு போல பூச்சாரலாக தூவி தாமரை முகத்தில் பதிந்து முத்தமிட்டது.

     டெடிபியரை பார்த்து “டினு மழை தான் பயப்பிடாதே. நான் இருக்கேன்” என்று ஆதரவாக பேசி முடித்தாள்.

      “உனக்கு சின்ட்ரெல்லா கதை தெரியுமா டினு. நான் சொல்லறேன் நீ தூங்கு” என்று பழக்கப்பட்ட இருட்டுக்கு அஞ்சாமல் தனது டினுவிற்கு ஆங்கில கதையை அவளுக்கு தெரிந்தவரை சொல்ல ஆரம்பித்தாள். அவள் அறியாதவொன்று அவள் நிலமையே அதுதான்யென்று பாதி சொல்லி முடிக்க தாகம் எடுக்க துவங்கியது.

    தந்தையை எதிர்பார்க்கவில்லை. தானாக தனது அருகே இருந்த டேபிளிள் இருப்பதை அறிந்து நடந்து சென்று நீரை பருகி முடித்து டினு பக்கத்தில் உறங்க போர்வையை எடுத்தாள்.

    மின்சாரம் மீண்டும் ஒளியை இழந்த போதும் ஏனோ தனதறையில் இருந்த பொருளின் உருவங்கள் தான் அதே இடத்தில் உள்ளது என்று அறிந்தபடி அனு அந்த தனிமைக்கு தன்னை பழகிக் கொண்டாள்.

 இருட்டை கண்டு அஞ்சி தனிமையை தவிர்க்க மெல்ல நிழல் உருவங்களை ஏற்று இடி மின்னல் இயற்கையை தாயை எல்லாம் தன்னை விட்டு சென்ற அன்னையாக பாவிக்க ஆரம்பித்து இருந்தாள். என்ன அது முதிர்ந்த பக்குவநிலை என்று அறியாது தனது விளையாட்டில் வரும் கற்பனைகளாக அதையும் பாவித்து ஏற்று கொண்டாள் அனு.

    தனிமை ஐந்து வயதில் அனுவின் வாழ்வில் மையமாக அமையலாம். ஆனால் அவளை சின்ட்ரெல்லா கதை போல ஒரு இளவரசன் வருங்காலத்தில் வரலாம்.

     விதி என்றும் துன்பத்தினை மட்டும் கொடுக்குமா என்ன? இன்பத்தினை கலந்து தானே கொடுக்கும்.

                👧🐻-முற்றும்-👧🐻

                                  -பிரவீணா தங்கராஜ்.

1 thought on “ அனுவும்👧 டினுவும்🐻”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *