Skip to content
Home » உவகை கொள்(ல்)

உவகை கொள்(ல்)

உவகை கொள்(ல்)

       ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து வளைந்து சென்று லொகேஷன் காட்டிய அந்த வீட்டின் முன் நின்றது. 

    பேசியபடி பணத்தை நீட்ட ஆட்டோக்காரன் பெற்று கொண்டு சென்றான். 

      “இந்த வீடானு செக் பண்ணு ஷாலினி” என்றான் தீபக். 

      “இரண்டு பக்கம் வாழை மரம் இருக்கு. புது வீடு… இதுக்கு மேல என்ன செக்கிங் தீபக்” என்று தன் மேடிட்ட வயிற்றை பிடித்தபடி கூறினாள். 

     “எல்லா வீடும் புதுசா தான் இருக்கு மா.” என்றதும் சின்ன முறைப்பை பனிசளித்து பரிசுப்பொருளை எடுத்து நுழைந்தாள். 

     “ஏ…  ஷாலு… வா வா. காலையிலேயே வருவனு பார்த்தேன். வாங்க அண்ணா” என்று அழைக்க தன் மாமன் மகள் நதியா வாங்கிய புதுமன புகுவிழாவிற்குள் அடியெடுத்து நுழைந்தாள் ஷாலினி. 

     “வீடு ரொம்ப அழகாயிருக்கு” என்று ஷாலினி கூறவும் “தேங்க்ஸ் எ லாட் மா. இந்தா வெல்கம் டிரிங்க். செக்கப் எல்லாம் போறியா. இது எத்தனாவது மாதம்” என்று நதியா கேட்டு பழச்சாற கொடுத்தாள்.

     “போர் மந்த்ஸ் நதி.” என்று கூறினாள். மேலும் இருவரும் பேசிக்கொள்ள தீபக் கண்கள் நதியாவின் கணவரை தேடியது வாழ்த்து சொல்ல. ஆனால் சுரேஷோ யாரிடமோ போனில் எதற்கோ பேசிக்கொண்டு டென்ஷனில் அலைவது புரிந்தது. 

      “ஏய் சுரேஷோட அக்கா வர்றாங்க மா. நான் இன்வெயிட் பண்ணிட்டு வர்றேன். அம்மா மாடில ரூம்ல இருக்காங்க. இதோ வந்திடறேன் அண்ணா.” என்று தீபக்கிடமும் கூறிவிட்டு அடுத்த விருந்தினரை பார்க்க சென்றவளின் கையை பிடித்து நிறுத்தி “கிப்ட் வாங்கிட்டு போயிடு” என்று ஒரு பெட்டியை நீட்டினாள்.

    “தேங்க்யூ மா. மாடில டிபன் அரேஞ்ச்மெண்ட் சாப்பிட்டு வாங்க பேசலாம். அத்தை மாமா வருவாங்க தானே.” என்று கேட்க ஷாலினி தலையசைப்பில் பரிசை வாங்கி அனுப்பி வைத்தாள் நதியா. 

    ஷாலினி மாடியேறும் போது நதியாவின் அண்ணன் ரவியும் அவன் மனைவி ப்ரியாவும் கீழே இறங்கினார்கள். 

     “வா ஷாலினி. வாங்க தீபக் எப்படி இருக்கிங்க.” என்றவன் பார்வையில் ஷாலினியின் மேடிட்ட வயிறு படவும் தவறவில்லை. 

    “ரொம்ப நல்லாயிருக்கோம். நீங்க நம்ம ஏரியால தான் இருக்கறதா ஷாலினி சொல்வா. ஒரெட்டு வாங்க.” என்றான் தீபக். 

      “எங்க வர்ற. உங்களுக்கே தெரியாதா வீடு விட்டா ஆபிஸ் ஆபிஸ் விட்டா வீடு இதுலயே லைப் போயிடுது.” என்று ரவி கூற தீபக் ஆம் என்பதாய் ஒப்புக்கொண்டான். 

     “சாப்பிட்டியா ஷாலு.” என்றான் ரவி. 

     “இல்லை மாமா. இனிமே தான்.” என்றதும் முதல்ல சாப்பிடுங்க வாயும் வயிறுமா இருந்துட்டு” என்று அனுப்பி வைத்தான். 

   ப்ரியாவோ சாஸ்திரத்திற்காக சிரிக்க மாடிக்கு ஏறினார்கள் ஷாலினியும்-தீபக்கும். 

    வீட்டின் மாடி வளைவு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே மின் விளக்குகள் அலங்காரத்திற்கு ஒளிவுப் பெற இருந்தது. 

      “டபுள் பெட்ரும் நல்லாயிருக்கு.” என்று ஷாலினி நதியாவின் தாய் தந்தையாரை கண்டு பேச நின்றாள். 

     “ஓ… ஷாலினி வா வா. எப்படியிருக்க? வாங்க தம்பி எப்படியிருக்கிங்க” என்று கேட்டு “இது எங்க ஒன்று விட்ட அண்ணன் தனஞ்செயன் பொண்ணு. உங்ககிட்ட சொல்லிருப்பேனே” என்று ஒரு வித குரலில் மொழிந்தார். 

     “ஓ… ரவிக்கு பார்த்து அப்பறம் வேண்டாம்னு முடிவெடுத்திங்களே” என்று கேட்டதும் நதியா தாய் ரமாதேவிக்கு பகீரென ஆனது. 

     “சொந்தத்தில் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுப்பது நல்லது தானே ஆன்டி.” என்றதும் ரமாதேவி “ஆமா ஆமா” என்று அசடாய் சிரித்து வழிந்தார். 

    “நீ சாப்பிட்டியா. முதல்ல சாப்பிடு. அண்ணா அண்ணி வரலை.” என்றார். 

     “ஆன் தி வே அத்தை” என்றதும் சாப்பிட கூற மாடிக்கு சென்றனர். 

      மொட்டை மாடியில் பந்தலிட்டு உணவை பரிமாறினார்கள். அதற்காக நியமிக்கப்பட்டவர்கள் பரிமாறுவதில் தீவிரமாக இருவரையும் அமர வைத்தனர். 

      சாப்பிட அமர்ந்ததும் “வீடு நல்லாயிருக்குல தீபக். என்ன ரோட்டுக்கும் வீட்டுக்கும் ரொம்ப தொலைவா இருக்கு.” என்றாள். 

      “கார் வச்சிருக்கறவங்களுக்கு தொலைவு கவலை இல்லைமா. நீ காலையில சாப்பிட்டதும் மாத்திரை போட எடுத்து வந்தியா?” கேட்டான். 

     “ம்ம். அம்மா வீட்டுக்கு வேற போகணுமே நாளைக்கு வரை எடுத்து வந்துட்டேன்” என்றாள். 

      “டபுள் பெட்ரூம் அட்டாச் பாத்ரூம். செமையா இருக்கு. அதுவும் கண்ணாடி வைத்த கப்போர்ட் அட்டாச்சுடு கிளோஸ் டோர் எவர்திங் சூப்பர்” என்றாள். 

     “ம்ம்.” என்றவன் போனை எடுத்து அத்தை தான் கால் பண்ணறாங்க.” எடுத்து பேசியவன் “வந்துட்டோம் அத்தை மாடில இருக்கோம். ஆஹ். வாங்க.” என்று வைத்தான். 

     “உங்கம்மா வந்துட்டாங்க.” என்று பேசியவன் அவள் இலையிலிருந்த ஜீராவோடு இருந்த ஜாமூனை தனியாக ஒதுக்கி வைத்தான். 

   ஷாலினிக்கு தீபக்கை எண்ணி வியப்பாய் இருந்தது. 

     சுகரை குறைவாகவே பார்த்துக்க சொன்னதிலிருந்து தானே மறந்தாலும் குறிப்பறிந்து நடப்பவனை வியக்காமல் இருக்க முடியவில்லை. 

     ஷாலினி தந்தை தாய் வந்ததும் ஷாலினி இன்னமும் மகிழ்ச்சியாய் கலந்து பேச தீபக் அளவாய் அவளின் பேச்சில் கலந்திட்டாலும் மகிழ்ச்சியாய் முகமலர்ந்து கேட்டதற்கு பதில் தந்தான். 

      ஷாலினி தந்தை வந்ததிலிருந்தே ஒர் அமைதியை தத்தெடுத்து நின்றார். 

     சாப்பிட்டு கீழே வரவும் கூட்டம் தற்போது நிரம்பி வழிந்தது. வந்தவரில் ஷாலினி வீட்டு ஆட்கள் என்றதால் தீபக் வேடிக்கை பார்க்க ஷாலினியிடம் தற்போது “அடுத்து நீங்க எப்போ வீடு வாங்க போறிங்க.” என்ற கேள்விக்குள் தள்ளி வறுத்தெடுக்க வாங்கிடுவோம் அது இது என்று பதில் தந்து நின்றாள். 

      சற்று நேரம் இருந்துவிட்டு கிளம்புவதற்குள் ஷாலினி தந்தை தனஞ்செயன் வீட்டிற்கு புறப்பட்டனர். 

     உபர்(uber) ஏற்பாடு செய்து தீபக் தனஞ்செயன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தனஞ்செயன் தீபக் இருவரும் வெளியே மாடியில் சிறிது நேரம் இருந்து விட்டு கீழிறினங்கினார்கள். 

      சாத்துகுடி பிழிந்து ஷாலினிக்கு கொடுத்தப்பின் சவகாசமாக பேச துவங்கினார் ஷாலினி அம்மா மீனா. 

    வந்தவங்க எல்லாரும் கேட்டாச்சு. நீ எப்போ வீடு வாங்க போற ஷாலினி. நாங்க தான் சொந்த வீடு இல்லாம அப்படியே காலத்தை தள்ளிட்டோம். நீயாவது நல்லபடியா வாழ்வனு பார்த்தா. பச் நீயும் வாடகை வீட்ல கஷ்டப்படற” என்று தாய் கூறியதும் “மா நிறுத்தறியா. நான் கஷ்டப்படறேனு நீ எப்படி நினைத்த. நல்ல வேளை அவர் இருக்கறப்ப கேட்டு தொலைக்கலை.” என்று பாதி பழச்சாறை குடித்து முடித்தாள். 

    “நீங்க கேட்டாளும் நான் கவலைப்படமாட்டேன் அத்தை.  நாங்க கஷ்டப்பட்டா தானே அத்தை. இப்ப தான் மாமா அங்க ஏதாவது பேசினா கவலைப்படாதிங்கனு சொல்லி அவங்களுக்குக்காக  மன்னிப்பு கேட்டு வந்தார். நான் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.” என்று கூறினான். 

     “அய்யோ.. மாப்பிள்ளை தப்பா சொல்லலை. அது வந்து… எல்லோரும் வீடு காருனு இருக்காங்க. அதனால நீங்களும் அப்படி வாழ தான் ஆசைப்பட்டோமே தவிர தப்பா இல்லை. உங்களுக்கு ஆசையிருந்தா சொல்லுங்க எங்க நிலத்தை விற்று லோன் வாங்கி…” என்று மீனா அடுக்கிக்கொண்டு செல்ல “ஸ்டாப் ஸ்டாப் அத்தை. லிஸ்ட் போயிட்டே இருக்கு” என்றான் தீபக். 

      “அத்தை ஆக்சுவலி நீங்க சொல்லறது மாதிரி எல்லாம் செய்யலாம். அது எப்போ தெரியுமா. தேவைக்கு மீறி பணம் வர்றப்ப சேர்த்து வைத்து அழகா ஒரு இடத்தை வாங்கிடலாம். இல்லையா நிலத்தை வாங்கி வீடு கட்டலாம். 

    அது இல்லாதப்ப நாமளா நம்மளோட கௌரவம் அது இதுனு யோசித்து, மற்றவங்களோட எண்ணங்களுக்கும் வாய் சொல்லுக்கும் வீடு காருனு வாங்க கூடாது. வீட்டுக்கு லோன், வண்டிக்கு லோன், மேற் படிப்புக்கு லோன், பொண்ணுக்கு கல்யாணம் லோன்னு நாம லோனை வாங்கி லோ லோன்னு அலைய முடியுமா.

    இன்னிக்கு போனோமே புதுமனபுகுவிழா சுரேஷ்-நதியா வீட்டுக்கு… அங்க சுரேஷ் பாதிக்கு மேல டென்ஷனில் தான் சுத்திட்டு இருந்தார். நீங்க கவனிக்கலை… அவருக்கு ஜாப்ல இருந்து எடுத்துட்டாங்க. அந்த டென்ஷன் அடுத்து வீட்டுக்கு லோன் பணம் தேவையென்றதிலேயே இன்னிக்கு புது வீட்டுக்கு பால் காய்ச்சிய சந்தோஷம் கூட அவர் முகத்தில இல்லை. 

     நதியாவோட அண்ணா..ரவி. என் ஷாலினி மேல ஆசைப்பட்டு அவங்க அப்பா அம்மா பேச்சை கேட்டு ப்ரியாவை திருமணம் செய்து இப்ப பாருங்க முகத்துல சந்தோஷமே இல்லை. இதுல அவர் குழந்தைக்கு ஆசைப்படறார். அதுவும் கிடைக்கலை. ப்ரியா ஏழு வருடத்துக்கு கான்ட்ராக்ட் போட்டு இருக்காங்க. நடுவுல பிரகனன்ஸி லீவு எடுக்க கூடாதுனு பேபி கூட வேண்டாம்னு இருக்காங்க. 

    ஓவர் டென்ஷன், கழுத்தை நெறுக்கிற லோன், பணம் ஈட்டல்னு வாழ்க்கை எதையோ நோக்கி ஓடறாங்க. உட்கார்ந்து இரண்டு நிமிடம் தனக்காக வாழ்ந்திங்களானு கேட்டா சத்தியமா அவங்களுக்கு அவங்க விரும்பற வாழ்க்கை வாழ்ந்தேனு ஆணித்தரமா சொல்ல முடியாத அளவுக்கு தான் இருப்பாங்க. 

    ஆளாளுக்கு கடன் தொகையா, பேங்க்ல லோனாகவும் வட்டி காசாகவும் வாழ்ந்து இருக்காங்க. பெயருக்கு தான் வீடு. ஆனா இந்த லோன் அது இதுனு கட்டறதும், வாடகைக்கு இருக்கறதும் ஒன்று தான்.” என்றான். 

     “என்ன இருந்தாலும் ஒரு கட்டத்தில வீடு நமக்கே நமக்கா இருக்குமே” என்றார் மீனா. 

   “கண்டிப்பா நமக்கே நமக்கான வீடு இருக்கும் அத்தை. ஆனா அது எதிர் காலத்தில். வாழ்ந்து முடிக்கிறப்ப. 

    இப்ப நிகழ்காலத்துல நிம்மதியா சந்தோஷமா இருக்கோமானு கேட்டா பாதி பேரிடம் பதில் இருக்காது. மீதி பாதி பேர் வருமானம் வந்து சேர்த்து வைக்கிறாங்க. அது நல்லது. 

    இந்த வருமானமே தொங்கலில் இருக்கறப்ப கண்ட லோனும் வாங்கி, முகத்துல சின்ன சின்ன சந்தோஷத்தை இழந்து இருக்காங்க. 

     எனக்கு இந்த எந்த கஷ்டமும் வேண்டாம். எனக்கு ஷாலினியோட அன்பும் பாசமும் கலந்த அமைதியான டென்ஷன் இல்லாத லைப் போதும். நடுவுல நடுவுல குருவி சேர்க்கிறாப்ப எதிர்காலத்துக்கு என் சக்திக்கு ஏற்றார் போல சேமிப்பா எதையாவது  வாங்கறேன். அது எனக்காக என் ஷாலினிக்காக மட்டும் இருக்கணும்.

   மற்றவர்கள் வாழறதை பார்த்து நான் பொறாமைபட்டு வாழறதா இருக்க கூடாது. 

   இப்ப யாராவது என்னை பார்த்தோ இல்லை உங்களை பார்த்தோ எவ்ளோ கடன் என்று கேட்டா, நான் தலை நிமிர்ந்து கர்வமா சொல்வேன். எனக்கு சின்ன கடன் கூட இல்லைனு. கடன் இல்லாத வாழ்க்கை தானே அத்தை நிம்மதியான வாழ்க்கை.” என்றதும் மீனா ஒரளவு நிம்மதியாக இருந்தாலும் மகளை காண அவள் கழுத்திலும் கையிலும் தாங்கள் வாங்கி தந்த நகைகளை தாண்டி மின்னிக் கொண்டிருப்பது புரிய துவங்கியது.

      அக்கணம் தீபக்கிற்கு தாங்கள் அறிவுரை கூற வேண்டியதில்லை. லோன் போட்டு கஷ்டப்பட்டு தங்கள் வாழ்வை சூன்யமாக்கி இன்பத்தை தொலைத்து வாழ்வதை விட சின்ன சின்ன சேமிப்பாய் இடம் பெற்றாலும் உவகை கொள்கின்ற வாழ்வு போதுமென புரிப்பட்டது. 

    “என்ன மா மகிழ்ச்சியை கொள்ளும் வாழ்வா… இல்லை மகிழ்ச்சியை கொல்லும் வாழ்வானு மனசுல பட்டிமன்றம் வைக்கிறியா. அது புரியறவங்க வாழட்டும். இப்ப எனக்கு பசிக்குது. போய் ஏதாவது செய்து எடுத்துட்டு வா பார்க்கலாம்.” என்று விரட்ட மீனா செல்லமாக மகளின் கன்னத்தை கிள்ளி சென்றார். 

   தனஞ்செயனும் ஏதோ முறுக்கு பிழிய பரனிலிருந்து எடுத்து கொடுக்க செல்ல, தீபக் தன் மனைவியின் தோள் பற்றி “பொறுமையா முன்னேறுவோம் உன்னோட இந்த தாய்மையை காதலை, குழந்தையோட வருகையை, அதோட சின்ன சின்ன வளர்ச்சியோட, நம்மளோட வளர்ச்சியா ஆரம்பிப்போம். இந்த லோன் வட்டி கடன் எதுவும் யாரிடமும் வேண்டாம்.” என்றதும் ஷாலினியும் “எனக்கும் வேண்டாம். இந்த மனழுத்தத்தோட வீட்டுக்கு வந்து எரிச்சலா பேசி கத்தறதை விட ரிலாக்ஸா வந்து என்னோட சேர்ந்து காபி போட்டு இரண்டு பேரும் பால்கனி போய் காபி குடிக்கிற அந்த ரிலாக்ஸ் வேண்டும்” என்று கொஞ்சினாள். 

-முற்றும்.

-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “உவகை கொள்(ல்)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *