Skip to content
Home » யாரென்று யார் அறியும் முன்

யாரென்று யார் அறியும் முன்

யாரென்று யார் அறியும் முன்

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

          இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார்.

    தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு, பக்கத்து இருக்கையில் பெண்மணியை நோட்டமிட்டார். ஈஸ்வரிக்கு 56 வயது இருக்கலாம். அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல தோள்பை கண்ணாடி என்று இருந்தார். முகத்தில் தோள் சுருக்கம் மட்டும் சற்று குறைவாக இருந்தது.

    இரயில் சிநேகிதம் என்பாரே அப்படி பார்த்ததும் சிரித்து முடிக்க, இருவரும் பரஸ்பரமாக முறுவல் புரிந்தனர்.

    ”இந்த டிரையின் இன்னிக்கு காலியா இருக்கு. இப்ப தான் ஒரு டிரையின் போனதால ஏதோ இந்த டிரையின் காலி.. நமக்கு கொஞ்சம் நெருக்கடியில்லாம இருக்கு.” என்று ஈஸ்வரி பேசவும், ஆமோதிப்பதாய் முன்பு போலவே புன்னகைத்தாள் பக்கத்து இருக்கை பெண்மணி.

    “நீ வேலைக்கு போறியா மா?” என்று கேட்க, “இல்லிங்க ஹவுஸ் ஒய்ப்” என்று பேச்சை துவங்கினார்கள்.

     “ஓ அப்படியா… நல்லது. நானும் வேலைக்கு போகலை. பகவதி பாபாவை பார்க்க போனேன்.” என்றார் ஈஸ்வரி.
தோள் பையும் கண்ணாடி என்று தோற்றத்தில் வேலைக்கு செல்லும் பெண் என்று எண்ணிவிட்டாளோ என விளக்கினார்.

   “மனசு சரியில்லாதப்ப பகவதி பாபாவை பார்க்க போய் இப்ப தான் நிம்மதியா இருக்கேன்.

  அதுக்கு முன்ன எல்லாம் ரொம்ப கஷ்டம் கழுத்துவரை இருந்ததுமா. இப்ப தான் நிம்மதி வருது.

  முன்ன எல்லாம் தூக்கமே வராது.” என்று சில நொடிக்கு மேல் சிரித்த பெண்மணியோடு தத்துவங்கள் பல விளக்கினார்.

     அப்படியா என்பது போல பார்த்து திரும்பினாள். தற்போது பேசவும் இவர்களும் பேச முடியுமா.

   “குழந்தை இருக்காமா?” என்று கேட்டார்.

    “ஒரு ஆண் குழந்தை இருக்கு. அம்மா வீட்ல விட்டுட்டு வர்றேன்.” என்று கூறி திரும்ப முயன்றாள்.

    “கணவர் என்ன பண்ணறார்?” என்று கேட்க, “ஐடி ஜாப்” என்று திரும்பிக்கொள்ள முயன்றாள்.

   சிலருக்கு சகஜமாக பேச பிடிக்கும். எல்லா நேரமும் எல்லாரிடமும் பேச தயக்கம் வரும். அப்படி தான் காயத்ரிக்கு தோன்றியது.

     பக்கத்திலிருக்கும் பெண் பெயர் காயத்ரி.

    “என்னடா இந்த கிளவி ரொம்ப பேசுதேனு நினைக்கிறியா மா. பகவதி பாபா புகழ் பாடவே பிறப்பு எடுத்திருக்கறதா நான் நம்பறேன்.” என்றதும் காயத்ரி ‘ஒ’ என்று நழுவ பார்த்தாள்.

   காயத்ரி பக்தி எல்லாம் ஒரு லெவலில் மட்டுமே. இப்படி இறைவனின் பெருமையை ஆண்டாள் போல பாடி அம்பலப்படுத்தும் அளவிற்கு இல்லை. அது அவளின் உடல்மொழியில் தெரிய ஈஸ்வரி கண்டறிந்து விட்டார்.

    “உனக்கு கஷ்டம் என்பது இல்லாததால கடவுளை நம்பலைனு தோனுது.

   நீங்க ப்ரீயா இருந்தா இந்த இடத்துக்கு வந்து பாருமா. பகவதி பாபாவோட பராக்கிரமமும் அனுகிரகமும் கிடைக்கும்.

   நீ இப்ப இருக்கற வாழ்க்கையை விட பெரிய அளவு நன்மை நடக்கும்.” என்று பகவதி பாபாவின் புகழை பேப்பரில் பதிவிட்டு இருந்ததை எடுத்து காயத்ரி கையில் திணித்தார் ஈஸ்வரி.

    காயத்ரிக்கு இதென்ன பஸ்ல டிரெயின்ல வெளியே தான் கொடுப்பாங்க. இப்ப தனிதனியா பக்கத்துல உட்கார்ந்து பேசி கொடுக்கறாங்க’ என்று மலைத்தாள்.

    இதே டிரெயினில் கர்த்தரின் அனுகிரகம் கிடைக்க வழிபடுங்கள் என்று கூறி பேப்பரை திணிக்கும் நபர்களையும் கண்டதால் இது போன்ற எந்தவித பேப்பரும் மதசார்பும் அவளுக்கு பிடிப்பதில்லை.

    காயத்ரிக்கு இது எரிச்சலை தந்தது. தவிர்க்க எண்ணி பேப்பரை வாங்கிவிட்டு, திரும்ப முயன்றாள்.

    ஈஸ்வரி மீண்டும் பேச்சு தொடுக்க போனில் யாரிடமோ பேசுவதாக காயத்ரி நழுவி காதில் ஹெட் செட் வைத்து தன் தூரத்து உறவு அக்காவிற்கு கால் செய்துவிட்டாள்.

     இறங்கும் வரை இந்த பக்கம் திரும்பவில்லை. அப்பாடி என்று இருந்தது காயத்ரிக்கு. சில நேரம் ரயில் சிநேகிதம், பேருந்தில் பக்கத்து இருக்கை, சுவாரசியம் இருக்கும். வாழ்வில் மறக்கமுடியாத அளவிற்கு இன்றோ தப்பிக்கும் உணர்வு.

    அதன் பின் ஒருநாள் பகவதி பாபாவின் புகழ் டிவி தொலைக்காட்சி என்று மிகவும் பிரசித்தமாக பரவியது.

   காயத்ரி கூட, ரொம்ப பவர்ஃபுல் ஆளாக இருக்கும் சாமியோ என்று நினைக்கவும் ஆரம்பித்தார்.

   திடீரென ஒரு நாள் பகவதி பாபாவின் ஸ்தலமோ கேஸ் வெடித்து சிதறியது. அதில் பகவதி பாபா கொடுரமாய் இறந்து கிடந்தார்.

    சிசிடிவி கேமிரா மூலமாக சந்தேகிக்கும் ஆட்களை ஒருபக்கம் தனியாக வரவழைத்து விசாரணை நடந்துக் கொண்டிருந்தது.

    டிவியில் நொடிக்கொருமுறை இவரை பற்றி அறிந்தவர்கள் தகவல் கூறுங்கள் என்று வரவும் ஈஸ்வரியின் பேப்பர் கொடுத்து அறிமுகமான ஆட்களில் நிறைய விழுதுகள் வந்து பகவதி பாபாவின் உண்மை விசுவாசி என்று பறைச்சாற்றவும் ஈஸ்வரி விடுவித்தார்கள்.

    காயத்ரியோ டிவியை காட்டி “இவங்களை நான் டிரெயின்ல பார்த்திருக்கேங்க. இந்த பகவதி பாபாவோட நேரடி விசுவாசியா பேசினாங்க. பாருங்க… இப்ப அந்த பகவதி பாபாவோட இறப்புக்கு இவங்களை கூட சந்தேகப்பட்டு விசாரணையில் வெளியே அனுப்பிட்டாங்க.” என்று கூறினாள்.

   “அவங்களைனு இல்லைடி. அங்கிருந்த எல்லாருமே விசாரணை முடிஞ்சி அனுப்பிட்டாங்க.” என்று காயத்ரி கணவன் சௌந்தர்யன் கூறினான்.

   டிவியில் பகவதி பாபாவின் சிலையை மிகவும் அலட்சியமாய் கடந்தார் ஈஸ்வரி. தன் ஒரே பேத்தி பகவதி பாபாவின் உண்மை சுயரூபத்தை அம்பலப்படுத்த முனைந்து அதில் தோல்வியடைந்து இறந்து போனதால், அதற்கு பழிவாங்க தனது வயதையும் தாண்டி, பகவதி பாபாவின் புகழை பாடி பாடி, அங்கு வந்த செல்லும் ஆட்களுக்கு உணவை சமைத்து பரிமாறும் பொறுப்பை ஏற்று பகவதி பாபா வரும் நேரத்தை கணக்கிட்டு கேஸை வெடிக்க வைத்து லாவகமாக தப்பித்தும் முடித்தார் ஈஸ்வரி.

    யாரென்று யார் அறியும் முன் யாரோ ஒருவராக மாயமாய் போனார் ஈஸ்வரி.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *