ஒரு பக்க கதை-கோழையின் மரணம்
சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது.
”போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்” என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு ‘இனி பேச வேண்டாம்’ என அன்பு கட்டளை விடுத்தாள்.
”என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி” என பெரு மூச்சு விட்டு வெளியே கிளம்பினார்.
அம்பிகையும் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு தெளிவுப் பிறக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.
‘சே! யாருமே என்னை புரிஞ்சுக்கலை . என்னை யாருக்கும் பிடிக்கலையோ?’ என்ற அவனது தாழ்வு எண்ணம் அவனை வாட்டியது.
இனி உலகத்தில் இருந்து கூனி கூறுகி வாழும் வாழ்வு எதற்கு என்று சாடியது.
அப்பொழுது தான் அவன் அருகே இருந்த மேஜையில்அவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக மாத இதழ் ஒன்று தாள்கள் பறக்க சப்தமிட்டது.
அதை எடுத்து துற எறிய நினைத்தவன் அட்டை முகப்பில் இருந்த தலைப்பு படிக்கச் செய்தது. ‘மரணத்தை அதிர வைத்த மனிதர்கள் ‘ என்ற தலைப்பு ஆவல் பொங்க படித்தான்.
அதில் பெரும்பாலும் புற்றுநோய் கண்ட மனிதர்கள் , மாற்று திறனாளிகள், திருநங்கைகள் , ஆசிட் தாக்கிய பெண்களின் வாழ்கை வரலாறுகளும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களையும், அதை அவர்கள் கையாண்டு விதமும், வாழ்வில் அவர்கள் பெயரினை சிறிது சரித்திரமாக மாற்றிய பாங்கும் படித்தான்.
அப்பொழுது தான் அவனுக்கு உயிரின் முக்கியத்துவம் உணர்ந்தான் . மனிதராய் பிறந்த மகத்துவம் உணர்ந்தான். சின்ன சின்ன தோல்விகள் வாழ்வின் முடிவு அல்ல என்று தெளிந்தான்.
அவனுள் இருந்த கோழையினை மரணிக்க வைத்தான். நம்பிக்கை எனும் பிறப்பை மனதினுள் வளர்த்தான்.
‘நம்பிக்கையின் பிறப்பில் கோழையின் மரணம்’ என்பதை உணர்ந்து தெளிவான சிந்தனையுடன் அடுத்த தேர்வுக்கு படிக்கச் செய்தான்.
– பிரவீணா தங்கராஜ்.