இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று பாடல் அதிர மகள் உதடு தானாக பாடல் கூடவே இணைந்தது.
வித்யுத் வருகையில் ரிமோட் கை மாற அடுத்து ‘இசையருவி’யில் மெல்லிய கீதமாக பாடல் ஒலிக்க அதில் அதிதி வித்யுத் பார்வை பரிமாற்றம் இதழோரத்தில் புன்னகை அரும்ப அவர்களின் 90 கிட்ஸ் வரிசையில் இதுவும் ஒன்று.
மறக்க இயலாத நிலை. சினிமாவின் பாடல் இசையில் அந்நாளை எண்ணி பார்த்தது. இப்பொழுது போல பாடல் ஒளிபரப்பி கொண்டு இருக்க மாட்டார்கள். வாரம் ஒரு முறை அரை மணி நேரம் பாடல்.
வித்யுத் எட்டு வயதில் ஒளியும் ஒலியும் பார்க்க ஆர்வமாக அமர ஆறு வயது அதிதி அவனோடு விளையாட கூப்பிட்டபடி அழுதாள்.
சின்னசிறு அழுகை கொண்ட அந்த தளிரான அதிதியின் அழுகையில் பெரியவர்கள் “வித்யுத் பாப்பா அழறா வேடிக்கை பார்க்கற என்ன?” என்று வித்யுத் கேட்டதும் தாமதம்.
“அப்பா அவ விளையாட கூப்பிடறா எனக்கு ஒளியும் ஒலியும் பார்க்கனும்” என்று வாரத்தில் ஒரு முறை வரும் வண்ணமயமான ஆடல் பாடலை இரசிக்க அமர அதிதி அதனை உணரும் வயதா என்ன?
வித்யுத் சிகையை தன் பிஞ்சு விரலால் இழுத்து விளையாட அதிதி அழுகையில் இருந்து வன்முறையில் அடம் பிடிக்க இம்முறை வித்யுத் அலறினான்.
“அப்பா… மாமா… இவளை பாருங்க. முடி பிடிச்சு இழுக்கறா” என்று கத்த துவங்க பெற்றோர் வந்து அதிதி விரலில் இருந்து பிரித்தெடுத்து வித்யுத் தந்தை
“பாப்பா உன் கூட விளையாட விரும்பறா போய் விளையாடு கண்ணா. அப்ப தான் அவளுக்கு உன்னை பிடிக்கும்” என்று சொல்ல வித்யுத் சில கணம் யோசித்தவன். சரி என்று கிளம்பினான்.
பொம்மை வைத்து விளையாடிய கணம் இடையே இடையே பாடலை இரசித்தவன் அதிதி நான் உன்னோட விளையாடினா பிடிக்கும் தானே என்று 90 கிட்ஸாக அவளை தனக்கு பிடிக்க வைக்க ஒளியும் ஒலியும் தியாகம் செய்து விளையாட ஆரம்பித்து இதோ அவளையே திருமணம் செய்து இருக்கின்றான். 90 இல் சில விஷயம் மாறவே மாறாது. அதில் ஒன்று இந்த ஒளியும் ஒலியும்.
-பிரவீணா தங்கராஜ்