Skip to content
Home » தீரா காதலே – 1

தீரா காதலே – 1

தீரா காதலே 1

வட சென்னையின் பரபரப்பான நகரம், கனவுகளின் நகரம், ‘குட்டித் தொழில் நகரம்’ என இன்னும் பல அடையாளங்களை கொண்ட ராயபுரம், அதன் ஒரு பகுதியான ‘ஆடைகளின் சொர்க்கபுரி’ வண்ணாரப்பேட்டை விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் கடைகள் எல்லாம் அடைக்க பட்டுயிருந்ததால் வெறிச்சோடி அமைதியாக இருந்தது.

பார்த்தசாரதி நகரின் மையத்தில் ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கினாள் நவீன யுவதி. முகம் கொள்ளா சந்தோஷத்துடன் தன்னவனை காணும் ஆவலில் எட்டி நடை போட்டவள் வீட்டை திறந்து பூனை நடை போட்டு படுக்கையறை பக்கம் சென்றாள்.

கதவை திறந்தவள் தான் கண்ட காட்சியில் ஓர் நொடி உறைந்து தான் போனாள். அவளவன் உயிருக்கு உயிரானவன், படுக்கையில் மல்லாந்து கிடந்திருந்தான்.

வலது கை கத்தியை பிடித்துக்கொண்டு அவர்களின் திருமண புகைப்பட சட்டத்தை தன் நெஞ்சோடு அணைத்தபடி இருந்தது.

இடது கை மணிக்கட்டு வெட்டப்பட்டு குருதி வெளியேறி படுக்கை நனைந்து இரத்த வெள்ளத்தில் உறைந்திருந்தது.

” நோஓஓஓஓஓஓ தீபக்”

அந்த வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம் யாருக்கு என்னவோ என்று தான் அனைவரையும் பதட்டமடைய செய்தது.

“ஏன்டா இப்படி பண்ண? நீ இல்லாமல் நான் மட்டும் எப்படிடா வாழ்வேன்? ஏன்டா என்ன விட்டுப் போன? என்ன ஆச்சு? நேத்து நைட் கூட நல்லா தானே பேசிட்டு வச்ச. சொல்லுடா என்ன ஆச்சு “
என்று நின்ற இடத்திலேயே மெர்ஸி, மடங்கி அமர்ந்து தன் முகத்திலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறினாள்.

மெர்ஸி❤️தீபக்

திருமணம் முடிந்து இரண்டு வருடம் முடிந்திருந்த நிலையில், முன்தினம் மெர்ஸி தன் அலுவல் விஷயமாக, அலுவலகப் பணியாளர்களுடன் பெங்களூர் மீட்டிங் சென்று விட்டு இன்று காலை தான் வீட்டிற்கு வந்தாள்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே காவல் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த ஏரியாவின் காவல் அதிகாரியும், துணை அதிகாரியும் அங்கு வரவே விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

காவலதிகாரி பிரியதர்ஷன் தீபக்கின் படுக்கையறையை சுற்றிப் பார்வையிட்டார்.
இடது கை மணிக்கட்டில் வெட்டப்பட்டிருந்தது. வலது கையில் கத்தியை பிடித்தவாறு தன் நெஞ்சத்தில் ஒரு புகைப்பட சட்டத்தை வைத்து அதன் மீது கையை வைத்திருந்தான். கண்களில் இருந்து கண்ணீர் கோடாக காய்ந்திருந்தன.

‘தற்கொலை தான். ஆனால் அதனை செய்துக்க விரும்பாமல் செய்திருக்கிறான்’ என்று மனதிற்குள் நினைத்தவாறு துணை காவலதிகாரி நிகிலை அழைத்தார்.

” நிகில் ஃபாரன்சிக் டீமுக்கு தகவல் சொல்லிட்டீங்களா? எப்ப வருவாங்க?” என்றான் பிரியதர்ஷன்.

” எஸ் சார் சொல்லியாச்சு. வந்துட்டே இருக்காங்க” என்று மேலதிகாரிக்கு பதில் தந்தார் நிகில்.

” வீட்டை சுற்றி கூட்டம் போடமால் அப்புறபடுத்துங்க” என்று கூற, தங்களுடன் வந்த மற்ற காவலர்கள் அப்புறப்படுத்தும் பணியை ஆரம்பித்தார்கள்.

தடைசெய்யப்பட்ட பகுதியாக அவ்விடம் மாற்றப்பட்டது.

பிரியதர்ஷன் மெதுவாக மெர்ஸியின் அருகில் வந்தவர்
” மேடம் ஆர் யூ ஓகே ? உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்று தயங்கி கேட்டார். இந்த நிலையில் விசாரணை செய்வதெல்லாம் கொடுமையே. ஆனால்‌ செய்தாக வேண்டுமே.

“நோ அம் நாட் ஓகே ” என்று உணர்ச்சியின் பிடியில் கத்தினாள்.

” உங்க சிட்டுவேஷன் எங்களுக்கு புரியுது மேம். பட் நாங்களும் எங்க டியூட்டிய பார்க்கனுமே. சில கேள்விகள் தான். கோஆப்ரேட் செய்தா போதும்.” என்றதும் மெர்ஸி பிரியதர்ஷனை நிமிர்ந்து பார்த்தாள்‌. சட்டென கேளுங்கள் என்ற பார்வை அது.

“உங்க ஹஸ்பெண்ட் இப்படி பண்ற அளவுக்கு உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை இருந்ததா? நீங்க எப்ப பார்த்தீங்க? எங்கே போயிருந்தீங்க என்ன நடந்ததுனு சொன்னீங்கனா எங்க வேலை ஈஸியா இருக்கும்”

மெலிதாக தலையை அசைத்தவள் தான் பெங்களூர் சென்று திரும்பி வந்து பார்த்தது வரை சொன்னாள்.

“நானும் தீபக்கும் லவ் பண்ணி மேரேஜ் செய்தவங்க சார். இதுவரை எங்களுக்குள்ள பிரச்சனைனு ஏதும் வந்தது இல்லை. நாங்க வீட்டை எதிர்த்து தான் மேரேஜ் பண்ணோம். அப்ப கூட இனி உனக்கு எல்லாமா நான் இருப்பேன், உன்னை மகாராணி மாதிரி வச்சிருப்பேன் சொன்னான். ஆனால் இப்படி பாதியிலேயே விட்டு போவான்னு சொல்லலையே” என்று கண்கலங்கினாள்.

” உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? ஐ மீன் மிரட்டி தற்கொலை பண்ண வச்சிருக்கலாமோ அப்படின்னு” என்று கேட்டதும் எதையும் யோசிக்காமல் ” இல்ல சார் அப்படி ஏதும் இல்லை ” என்றாள்.

” உங்க பேரன்ட்ஸ் தீபக் பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?”

” அவங்க ஊரில் தான் இருக்காங்க. இங்க வர மாட்டாங்க “

” ம்ம் ஓகே ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் வேணும்னா என்ன காண்டாக்ட் பண்ணுங்க” என்று அங்கிருந்த காலண்டரில் எண்ணை எழுதினான்.

” ஓகே சார்” என்றவள் மீண்டும் அழுதாள்.

சிறிது நேரத்தில் தடவியல் குழு ஆட்களும் புகைப்பட நிபுணரும் வந்தார்கள். அவர்கள் தங்களுக்கான வேலையை செவ்வனே செய்தார்கள். புகைப்பட நிபுணர் தீபக்கையும் அவன் கை காயங்கள், படுத்திருந்த நிலை, கண்ணீர் வழிந்த விழிகள், நெஞ்சில் வைத்திருந்த அவர்களது திருமண புகைப்பட சட்டம் என்று அனைத்தையும் கவனமாக புகைப்படம் எடுத்தார்கள்.

தடவியல் நிபுணர் நந்தன் “இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷன் இது தற்கொலைதான் வேற எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. அழுது அழுது கண் வீங்கி இருக்கு சோ ஏதோ சொல்ல முடியாத பாரத்தை உள்ளுக்குள் மறைத்து நிறைய கஷ்டப்பட்டு இறுதியில் தான் இந்த முடிவை எடுத்து இருக்கனும்” என்று கூறினார்

” ஓகே மிஸ்டர் நந்தன் தேங்க்யூ” என ப்ரியதர்ஷன் கூற, அவர்கள் பேசியதை ஓரமாய் வீற்றிருந்த மெர்ஸி கேட்டு அதிர்ந்தாள்.

அடுத்ததாக தீபக்கின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை வண்டியில் ஏற்றப்பட்டது. அடுத்தடுத்த பணிகள் அதன் போக்கில் நடந்தேறின.

காவல் அதிகாரி பிரியதர்ஷன் யோசனையுடன் வெளியே வந்து ஆராய்ச்சியாக வீட்டையும் வீட்டை சுற்றியும் பார்த்து அப்படியே நிற்க அவரை யாரோ பார்ப்பது போல் உறுத்தவே திரும்பிப் பார்த்தார் யாருமில்லை.

வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு சிறிய பூக்கடை இருந்தது. அங்கு சென்று சாதாரணமாக பேச்சு கொடுத்தார். அந்த பூக்கார பெண்மணி ” நல்ல தம்பி சார் அந்த பொண்ணை அப்படி தாங்குவாப்ல. டெய்லி என்னாண்ட தான் பூ வாங்கிட்டு போவும். இப்படி செய்யும்னு நினைக்கல. ஆனா இந்த கொஞ்ச நாளா போன்ல யாருகிட்டயோ பயந்து பயந்து பேசினத நான் பார்த்தேன் சார். அதுக்காக தப்பான பையன்லாம் இல்ல அந்த பொண்ணு மேல உசுரையே வச்சிருக்கு அந்த தம்பி. ஆனா ஏன் இப்படி பண்ணுச்சுன்னு தான் தெரியல சார் எல்லாம் விதி சார் ” என்று புலம்பினார்.

அந்த பெண்மணி பேசுவதை மனதில் பதிவு செய்து கொண்டே சுற்றமும் ஆராய்ச்சியாக பார்வையை சுழற்ற மீண்டும் தன்னை யாரோ கவனிப்பது போல் தோன்றவும் சடாரென திரும்பிப் பார்த்தார். தீபக்கின் மேல் வீட்டு பால்கனியில் இருந்து யாரோ மறைவது தெரிந்தது. பிரியதர்ஷன் யோசித்த வண்ணம் ஜீப் அருகே வந்து ” நிகில் கிளம்பலாம்டா” என்று கிளம்பி விட்டார்கள்.


மெர்ஸி ரொம்ப உடைந்து போயிருந்தாள். எவ்வித காரணமும் அவளுக்கு புலப்படவில்லை. இந்த இரண்டு வருட காலத்தில் திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்களும் பூசல்களும், வந்தபோதிலும் அன்றிரவே வெளியே சென்று இலகுவாக பேசி தீர்த்து விடுவார்கள். அவள் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்தது இதுதான்
‘ சொல்ல முடியாத பாரத்தை உள்ளுக்குள் மறைத்து நிறைய கஷ்டப்பட்டு இறுதியில் தான் இந்த முடிவை எடுத்து இருக்கனும் ‘
அப்படி தன்னிடம் மறைக்கும் அளவுக்கு எந்த விஷயமும் இல்லையே என்று தான் யோசித்து யோசித்து அழுதவள், தான் இருக்கும் நிலையை மறந்து உண்ண கூட தோன்றாமல் தன்னையறியாமல் உறங்கி போனாள்.

மறுநாள் விஷயம் கேள்விப்பட்டு தீபக்கின் நண்பர்களும் அலுவலக சகபணியாளர்களும் வந்து பேசிவிட்டு சென்றனர். அது எதனையும் கேட்கும் நிலையிலோ பேசும் நிலையிலோ மெர்ஸி இல்லை. மேல் வீட்டுப் பெண் பிரபா தான் பேசி அனுப்பி வைத்தாள். அவள் தான் நேற்றிலிருந்து கூடவே இருந்தது.

மெர்ஸிக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விட்டத்தை வெறித்து பார்த்திருந்தாள். அழைப்பு வந்ததற்கான அழைப்பு கானம் அலைபேசியில் வரவும் நிஜத்திற்கு வந்தவள் மேஜையில் இருந்த தீபக்கின் அலைபேசியை எடுப்பதற்குள் அது தன்னை நிறுத்தி கொண்டது. எடுத்து தொடர்பு பட்டியலை பார்த்தாள். சொல்லிக் கொள்ளும்படி சந்தேகிக்க எந்த எண்களும் இல்லை. ஆனால் பல தடவை வெறும் எண்களிலிலிருந்து தவறிய அழைப்புகளாக வந்திருந்தது. அலுவலக அழைப்பாக இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

தீபக் இல்லாமல் மூன்று நாட்கள் அந்த வீட்டில் இருந்ததே அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.


மேல் வீட்டு பிரபா தான் பழச்சாறு தேனீர் போட்டு வந்து வற்புறுத்தி புகட்டுவாள். உணவு இன்னும் ஒரு வாய் தொண்டையில் இறங்கவில்லை.

இதற்கிடையில ஒரு நாள் துணை காவல் அதிகாரி நிகில் வந்து பார்த்துவிட்டு போனார். நிலைமை சரியானால் விசாரிக்கலாம் என்று வர மெர்ஸி இருந்த நிலை பரிதாபமாக இருந்தது.


காவல் ஆய்வாளர் அறை

” எனக்கு என்னவோ சந்தேகமாவே இருக்குடா. அந்த தீபக்கை யாராவது சூசைட்க்கு தூண்டி இருப்பாங்களோன்னு எனக்கு தோணுது ” என்றான் பிரியதர்ஷன்.

” மே பி சார் ” என ஆமோதித்தான் நிகில்.

” அடேய் இங்கதான் யாரும் இல்லையே அப்புறம் என்ன சாறு மோர்ன்னுட்டு இருக்க?” என்று கடிந்தான்.

இருவரும் படித்து கொண்டிருந்த போதே நண்பர்கள், வேலைக்கு சேர்ந்த பின்னும் நட்பை தொடர்கிறார்கள்.

” டியூட்டி டைம்ல கரெக்டா இருக்கனும்னு எங்க மேலதிகாரி சொல்லி இருக்காங்க சார். டியூட்டி டைம்ல பேமிலி ப்ரெண்ட்ஸ் லவ்ஸ்னு எந்த கமிட்மெண்டும் இருக்க கூடாதுன்னும் சொல்லி இருக்காரு சார்ர்ர்ர்” என்று பிரியதர்ஷன் முன்பு கூறியதை அவனுக்கே நினைவுப்படுத்தினான்.

” வெளக்கமாறு பிஞ்சிடும் வாடா இங்க” என்று உரிமையாக நண்பனை அழைத்தான்.

” விளக்குமாறு எடுத்துட்டு வரவா சார் ” என்று நிகில் கேலியாகவே கேட்டான்.

” டேய்” என்று அறுக்காத என்ற பாவத்தோடு பார்த்தான்.

” சரி சரி சொல்லுடா…
எனக்கு அப்படி எந்த டவுட்டும் இல்ல. அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இருக்க மாதிரி தெரியல. லவ் மேரேஜ் வேற, பாவம் அந்த பொண்ணு அன்னைக்கு எப்படி பார்த்தோமோ இன்னும் அப்படியே தான் இருக்கா, எழுந்துக்கவே இல்ல சாப்பிட கூட இல்லைன்னு தான் அந்த மேல் வீட்டு பொண்ணு சொல்லுச்சு”

” எனக்கு அந்த பொண்ணு மேல தான் மைல்டா டவுட் “

“என்னடா சொல்ற ? அந்த பொண்ணு கன்சீவா இருக்காங்க. தெரியுதா இல்லையா உனக்கு”

” குற்றம் பண்றவங்க யாரா வேணாலும் இருக்கலாம்”

“அந்த பொண்ணா இருக்க முடியாது “

“ஏன் அப்படி சொல்ற? எத வச்சு சொல்ற நீ ?”

” அந்த நிலைமையிலும் மேல் வீட்டில் இருந்து கீழ இறங்கி வந்து அந்த பொண்ணுக்கு ஜீஸ் ஊட்டி விடுறாங்க. சொந்த தங்கச்சிய பாத்துக்குற போல பாத்துகிட்டாங்க”

” நீ அதை பார்த்ததும் உருகிட்டியோ? போடா நிகில்”

“சரி நீ சொல்லு நீ ஏன் அந்த பொண்ணு மேல சந்தேகப்படுற?”

” நான் அன்னைக்கு விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கும்போது யாரோ என்னை பார்ப்பது போல் இருந்தது டக்குனு திரும்பி பார்த்தா அந்த பொண்ணோட வீட்டு பால்கனில் இருந்து யாரோ மறைஞ்சு நின்ன போல இருந்தது. நான் பார்க்கவும் உள்ள போய்ட்டாங்க.”

“எதேச்சையாக கூட நின்றிருக்கலாமேடா”

“பட் எனக்கு அப்படி தோணலை ஏதோவொன்று அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கு அல்லது ஏதோ தப்பு இருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லுது”

” சரிடா இப்ப என்ன பண்ணலாம் “

” நேரா போய் பாத்துட்டு வரலாம் கிளம்பு “

மறுநாள் காலை மெர்ஸி அலறிய அலறலில் பிரபா ஓடி வந்து பார்க்க அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு துடித்து அழுது கொண்டிருந்தாள். என்ன என்று கேட்டும் பதிலில்லாமல் அழுதுதழுது மயங்கி சரிந்தாள்.
மூன்று நாட்கள் உண்ணாமல் இருந்ததன் உபயம் மயங்காமல் இருப்பாளா? அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் பிரபா. சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அந்த நிலையிலும் கையில் அலைபேசியை இறுக்கமாக பிடித்திருந்தாள் மெர்ஸி.

இருவரும் கிளம்பி, மெர்ஸியின் வீட்டுக்கு வர வீடு பூட்டி இருந்தது.



🌷
✍️தற்கொலையர்கள் கோழைகள் அல்ல..

உயிரை மாய்த்து கொள்வது தற்கொலையா..?

துக்கங்களும் ஏமாற்றங்களும்
தற்கொலைக்கு தூண்டபடுகின்றன..

கோழைகளாக சித்தரிக்க படுகின்றன..

பாரமா இருக்கிறேனா..?
வாழவே பிடிக்கலயே..
நானில்லாமல் இருப்பதே நலம்..

எவரேனும் சொன்னால்
உதாசீனபடுத்தாதீர்..

மாறாக புன்னகையுங்கள்..
கைகளால் அழுத்தம் கொடுங்கள்..

செவிகளால் கேளீர்..

அழுதால் சாய்வதற்கு தோள்கள் தாரீர்..

கைபேசிகளையும் கணிணிகளையும் புறக்கணீர்..

மனிதத்தை நேசீர்..

தற்கொலைகள் தவுடுபொடியாக்கப்படும் ✍️

🌷

தீரா தேடலுடன்…

Pages: 1 2

7 thoughts on “தீரா காதலே – 1”

  1. CRVS2797

    எனக்கென்னவோ.. அந்த பிரபா மேலத்தான் சந்தேகமா இருக்கு. ஒருவேளை, அவ கன்சீவ்வா இருக்கிறதுக்கும்
    தீபக்குக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *