Skip to content
Home » அகலாதே ஆருயிரே -9-10

அகலாதே ஆருயிரே -9-10

��அகலாதே ஆருயிரே��
��9��

காலை அந்த நேரம் எப்படி இருக்கும் என்றே தெரியாத ஹர்ஷா, அபியை பார்க்க மிகுந்த
சிரமத்துடன் எழுந்து, அப்படியே கிளம்பி டியூஷன் சென்டர் வாசலில் நிற்க,  குளித்து அழகாக
விபூதி அணிந்து பளிச்சென்று வந்த அபிக்கு ஹர்ஷாவை பார்த்ததும் ஆச்சர்யத்துடன் சிரிப்பும்
வந்தது.

“என்ன டா அர்த்த ராத்திரில வெளில வந்திருக்க?”, என்று நக்கலடிக்க,

“ஏன் சொல்லமாட்ட எருமை.. நீ பாட்டுக்கு மூணு நாளா என்னை பார்க்காம இருந்துட்ட.. பிசாசு..
“,என்று அபியை ஹர்ஷா அடிக்க,

“டேய்.. விடு டா தடி மாடு.. வலிக்கிது டா வெள்ளை பன்னி.. “,என்று அவன் முன்னால் ஓட,
டியூஷனுக்கு வந்து கொண்டிருந்த சிலர் அவர்களை விசித்திரமாக பார்த்து விட்டு சென்றனர்.

“என்ன அபி நீ, வேலைக்கு போகலாம்னு நினைக்கிறேன்னு தானே சொன்ன? ஒரே நாள்ள
எல்லாத்தயும் மாத்திட்டு நீ போய்ட்டா நான் என்ன டா பண்ணுவேன்.”

“ஏன் எருமை, இத்தனை வருஷம் நான் உன்னோடவேவா இருந்தேன். இந்த ரெண்டு வருஷமா
தானே அதுவும் டியூஷன்ல பார்க்கிறோம்??”

“அதுக்கு.. டேய்.. என்ன டா இப்படி பேசுற..? மத்தவங்களை போலவா நாம.. உன்னை பார்க்காம
இந்த ரெண்டு மூணு நாள் எப்படி இருந்துச்சு தெரியுமா?”

“சரி டா செல்லக்குட்டி”, என்று அபி ஹர்ஷாவை அணைத்துக்கொள்ள, அவன் சிறுப்பிள்ளையாக
முகம் தூக்கி வைத்துக்கொண்டு நின்றான். அவனை சில சேஷ்டைக்கள் செய்து சிரிக்க வைத்து,
அவனோடு பேச அன்றைய டியூஷன் நேரமே முடிந்து விட்டது. அபியை மட்டம் போட வைத்து
விட்டான் இந்த ஹர்ஷா..

“எப்படி டா உன்னை பார்ப்பேன்..”, என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க,

“வாரம் ஒரு தரம் பார்க்கலாம்டா. சண்டே..”, என்று அபி சமாதானம் செய்து அனுப்பி
வைத்துவிட்டு, அவன் இன்று டியூஷனில் கேட்க நினைத்த சந்தேகங்களை மட்டும் சாரிடம்
சென்று கேட்டு விட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

அன்றும் ரிதுவின் உடல்நிலை தேறாமல் போக, அவள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆருஷி தான்
தவித்துப்போனாள். ஆனால் முதல் நாள் நிதிஷ் சொன்னது நினைவு வர, பாட வேளையில்
கவனம் செலுத்தி, ரிதுவிற்காகவும் சேர்த்து கவனித்தாள்.

உணவு இடைவேளையில் அவள் நிதீஷை தேடிச் செல்ல, அவளை பின்னால் தொடர்ந்து வந்தாள்
அவள் வகுப்பு மாணவி சுமனா. ஆரூ நிதீஷை தூரத்தில் இருந்து அடையாளம் கண்டு, “அண்ணா”
என்று அழைக்க, வந்தவன்,

“என்ன டா உன் பிரென்ட் வந்துட்டாளா?”

“இல்ல அண்ணா அவளுக்கு காய்ச்சல்.  நேத்து போய் பார்த்துட்டு தான் வீட்டுக்கு போனேன்.
இன்னிக்கு நீங்க சொன்ன மாதிரி கிளாஸ் கவனிச்சேன். “,என்று சொல்ல, அவன் இயல்பான
புன்னகையுடன், “இப்போ தான் முகம் தெளிவா இருக்கு. நேத்தும் தான் இருந்துச்சே..”, என்று
கிண்டலடிக்க,

“ஏன் என் மூஞ்சிக்கு என்ன.. நல்லா தான் இருக்கும்.”, என்று முறுக்கிக்கொள்ள,

அவனோ, சிரித்து விட்டு, “சரி போய் சாப்பிடு என் பிரெண்ட்ஸ் என்னை தேடுவாங்க. நான்
போறேன். தனியா எல்லாம் உக்காரக் கூடாது சரியா? கிளாஸ் கேள்ஸ் யாரோடயாவது சேர்ந்து
சாப்பிடு. “

“சரி அண்ணா.. பை..”

“பை மா.. “,என்று அவன் விடைபெற, இந்த சம்பாஷணைகளை ஒளிந்து நின்று கேட்ட சுமனா
ஒரு ஆசிரியையை பார்த்து, அவர்கள் இருவரும் சிரித்து சிரித்து நெடு நேரம் பேசியதாக
சொல்லிவிட்டு சாப்பிடச்சென்றாள்.

அந்த ஆசிரியை அவள் சொன்னதை யோசனையோடு கேட்டுவிட்டு, முதல்வர் அறைக்கு சென்று
அவரிடம் பேச  வேண்டும் என்று சொல்ல, அவரோ,

“நான் அவசரமா பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் வரை போறேன் மா. அப்பறம் பேசலாம்”,
என்று அனுப்பி வைத்தார்.

அடுத்த இரு நாட்களும் ரிது வராமல் போக, ஆருஷி இடைவேளையில் நிதீஷுடன் பேசுவது
வாடிக்கை ஆனது. இது எல்லாமே மாலை ரிதுவை சந்திக்கும்போது ஆரூ ரிதுவிடம் சொல்லி
விடுவாள்.

அன்று காலை குஷியுடன் கிளம்பிக்கொண்டு இருந்தாள் ஆருஷி, அவள் வீட்டை தாண்டி
வரும்போதே சுமனா அவள் சைக்கிளோடு நின்றிருந்தாள்.

“என்ன இங்க இருக்க?”, என்று ஆருஷி கேட்க,

“இல்ல ஆருஷி, அந்த பிளஸ் டூ பையனோட நீ பேசுறது எனக்கு தெரியும். உனக்கும்
அவங்களுக்கும் என்ன?”

“இதை கேட்கவா காலைல கிளம்பி வந்த?”,கடுப்புடன் கேட்டாள் ஆரூ.

“ஆமா ஸ்கூல்ல கேட்டா பிரச்சனை வரும். அதான். சொல்லேன்.”

“ஏன் உனக்கென்ன அவ்ளோ ஆர்வம்?”

“இல்ல அவங்க அழகா ஸ்டைலா இருக்காங்க. நீயும் தான். அதான் ஜோடி சூப்பரா இருக்குன்னு
தோணுச்சு.. “,அவள் இழுத்து இழுத்து சொல்லி முடிக்க,

ஆருஷி அவளை வேற்றுலக ஜந்துவாக பார்த்துவிட்டு, “லூசு மாதிரி உளராம பள்ளிக்கூடத்துக்கு
போம்மா.. போ.. “, என்று அனுப்பிவைத்தாள்.

ஆனால் அவளோ, “நீ வரலையா? அவரை மீட் பண்ண போறியா? “,என்றாள்.

‘இவள் என்னடா பெருந்தொல்லையா இருக்கா’, என்று ஆருஷி எரிச்சல் கொண்டு, “எனக்கு வேற
வேலை இருக்கு, கிளம்பு ப்ளீஸ்..”

சுமனா சென்று விட, ஆருஷி சிந்தனையில் நிதிஷ் வந்து போனான்.

‘ஆமாம் அழகா தான் இருக்காங்க.’ என்று நினைத்தவள், நேராக ரிது வீட்டுக்கு சென்று
அவளையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வரும் வழியில் அனைத்தையும் சொல்ல,
இடையிடமல் கேட்ட ரிது அமைதியாகவே வந்தாள்.

பள்ளியின் நுழைவு வாயிலில் நிதீஷுடன் ஒருவன் பேசிக்கொண்டு இருக்க, “அதோ அவர் தான்
ரிது அந்த அண்ணா.. “,என்று நிதீஷை காட்டியதும், ரிது முகம் சற்று சுணங்கினாலும், சமாளித்து
அவன் இருக்கும் பக்கம் வந்தனர்.

“அண்ணா”, என்று ஆருஷி அழைக்க, அவள் குரல் அறிந்து திரும்பிய நிதிஷ், அங்கே அவள்
அருகில் கைகளை கட்டிக்கொண்டு நின்ற ரிதுவை பார்த்து என்ன சொல்வது என்று முழித்தான்.

“இவ தான் அண்ணா என் பிரென்ட் ரிது.” என்று அவள் அறிமுகப்படுத்த,

“ஆருக்கு இந்த நாலு நாளா ரொம்ப சப்போர்ட்டா இருந்திங்களாம். ரொம்ப நன்றி “,என்று
நிதானமாக சொல்ல,

இந்த விதமான பதிலை எதிர்பாராத நிதிஷ், “இங்க பாரு மா. நிஜமாவே இவ உன் பிரென்ட்னு
எனக்கு தெரியாது. நான் உன்னோட பேச இவ மூலமா ட்ரை பண்றதா நினைக்காத. நான்
இப்போலாம் உன் பக்கம்  வர்றதே இல்லை.”

“நான் ஒன்னும் சொல்லலேயே..”, என்றாள் ரிது.

“இல்லம்மா, அன்னைக்கு கூட இருந்த பசங்க ஏத்தி விட்டுட்டாங்க. அதான் லவ் அது இதுன்னு
கொஞ்சம் லூசுத்தனம் பண்ணிட்டேன். சாரி..”

“அது பரவால்ல.. அதான் நீங்களே லூசுத்தனம்னு சொல்லிட்டீங்களே..”,என்று ரிது சிரிக்க,

“உண்மை தான் மா. நீ அழகா இருக்கன்னு மட்டும் தான் நான் நெனச்சேன். பக்கத்துல இருந்த
பக்கிங்க தான் அதை காதல் அது இதுன்னு சொல்லி, நானும் யோசிக்காம உடனே வந்து…”,
என்று அவன் பேசிக்கொண்டே போக கடுப்பான ஆரூ..

“நிறுத்துங்க.. என்ன நடக்குது இங்க.. உங்களுக்கு ரிதுவை ஏற்கனவே தெரியுமா??”

“இவங்க பேர் ரிதுன்னு நீ சொல்லித்தான் மா தெரியும். அன்னைக்கு ஒரு நாள்,அதான்
சொன்னேனே, அழகா இருக்காங்கனு சொன்னதுக்கு கூட இருந்த பசங்க உசுப்பேத்தி, உடனே
லவ் சொன்னாதான் கெத்து அது இதுன்னு… சாரிம்மா.. எனக்கு அந்த நிமிஷம் புரியல.  ஏதோ
பேசிட்டேன்.. மன்னிச்சுக்கோ..”

“பரவால்ல.. நானும் இப்போ உங்களை அண்ணான்னு கூப்பிடலாம் இல்லையா??”,
பொறுமையாக கேட்ட ரிதுவை உண்மையில் அவனுக்கு நிரம்பவே பிடித்துவிட்டது.

“இவ்ளோ அழகான தங்கச்சியை யார் வேண்டாம் னு சொல்லுவாங்க.. கூப்பிடும்மா..”

“அண்ணா.. கூட இருக்கிறவங்க ஆயிரம் சொன்னாலும், நாம யார்ன்னு நமக்கு தெரியணும்.
எடுப்பார் கைபிள்ளை மாதிரி அவங்க சொன்னதுக்கு நம்ம மனசை மாத்திக்க கூடாது.
உண்மையிலேயே உங்களுக்கு என் மேல அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தா, என்
பின்னாலேயே வந்திருப்பிங்க. அன்னைக்கு அப்படி சொன்னதோட சரி. அதுல இருந்தே உங்க
மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னு எனக்கு புரிஞ்சுபோச்சு. ஆருவை நீங்க கைட்
பண்ணின விதம் ரொம்ப பிடிச்சது அண்ணா எனக்கு. அவ நான் இல்லாம ஒழுங்கா சாப்பிடவோ,
படிக்கவோ மாட்டா.. ஆனா இந்த நாலு நாள் ஒழுங்கா இருந்திருக்கான்னா அது உங்களால தான்
நன்றி அண்ணா..”

“ஓ.. அண்ணாவுக்கு நன்றி சொல்லலாமா..”

ஆருஷியும் ரிதுவும் சிரிக்க, அந்த ஆசிரியை மூவரையும் பள்ளி முதல்வர் அழைப்பதாக வந்து
அழைத்துச் சென்றாள்.
**
அபி அன்று ஒரு டேபிளுக்கு உணவு வழங்கிக்கொண்டு இருக்க, அதில் ஒரு பெண் அவனை,

“ஏய், இந்தாப்பா.. சர்வர்.. இங்க வா.. இந்த டேபிளை துடை..”

அவன் அதற்கென்று இருக்கும் பணியாளிடம் சொல்ல,

“ஓ.. சார் பெரிய வேலைக்காரரோ.. டேபிள் துடைக்க மாட்டீங்களா.. அப்பறம் ஏண்டா இந்த
வேலைக்கு வர”, என்று வாயை விட,

அபி சிரித்தபடி,” நான் பரிமாற்ற வேலைக்கு வந்திருக்கேன். பரிமாறுவேன்.” என்று 
சொல்லிவிட்டு செல்ல,

அவன் மரியாதை குறைவாக பேசுவதாக முதலாளிக்கு புகார் சொன்னாள் அவள். அவர்
அமைதியாக, “என்ன நடந்துச்சு”, என்று அபியை கேட்க, அவனும் சொன்னான்.

“சரி நீ வேற டேபிள் பாரு. அந்த டேபிள் பையனை இங்க மாத்தி விடு.”, என்று சொல்லிவிட்டு,
கல்லாவில் கவனமானார்.

அந்த பெண் அவள் கணவனுடன் வந்திருப்பாள் போல, சாப்பிட்டு பணம் வைக்கும் போது, அவர்
அவள் கணவனிடன் கேட்காமல் அவளிடம் கேட்டார்.

அவளோ ,”அவர் தான் பணம் வச்சிருக்காரு. தருவாரு. வாங்கிக்கோங்க.”, என்றாள்.

“நீங்களும் தானே சாப்பிட வந்திங்க.. பணம் எடுத்துட்டு வரலையா..  நீங்க தான் தரணும். “,என்று
சொல்ல, அவள் கணவன் இவளின் செய்கைக்கான பதிலை ஹோட்டல்க்காரர் தருகிறார் என்று
அமைதியானார்.

அவள்,” என்ன இப்படி சொல்றிங்க. யார் தந்தா என்ன?”, என்று கத்த,

“கத்தாதீங்க மேடம், இன்ன வேலைக்கு இன்ன ஆள்னு  வச்சுத்தானே ஹோட்டல் நடத்துறோம்.
அந்த பையன் சர்வ் பண்ண வந்தா அதைத்தான் செய்வான். அவனை டேபிள் துடைக்க சொன்னா
எப்படி, அதுக்குன்னு ஆள் இருக்காங்க. அவன் தான் அவங்களை விட்டு துடைக்க
சொல்லிட்டான் இல்ல.. அப்பறம் ஏன் அவனை மரியாதை குறைவா நடத்துறீங்க.. அதுவும்
இல்லாம, அவனைப் பற்றி புகார் சொல்றிங்க? உங்க சொல் கேட்டு அவனை நான் கோவத்தோட
வேலையை விட்டு நிறுத்திட்டா, அவன் குடும்பத்தை நீங்க காப்பாத்துவிங்களா?? நீங்க என்
கஸ்டமர் தான். முக்கியம் தான். அதே போல எங்கிட்ட வேலை செய்யற பசங்களோட
சுயமரியாதையும் முக்கியம் மா. பார்த்து நடந்துக்கோங்க. ஒரு அண்ணன் மாதிரி சொல்றேன்.
“,என்றார் கடை முதலாளி.

அவள் தலையை குனித்துக்கொண்டு போக, அபி அமைதியாக அவரிடம் வந்து நின்று,”நன்றி சார்.
அவங்க சொன்னதும் திட்டுவிங்க கத்துவிங்கனு நெனச்சேன்.”

“உண்மை என்னன்னு நானும் பார்த்து தான் தம்பி பேசுவேன். பயப்படாத.. “,என்று அவன்
தோளில் தட்டி வேலையை தொடரச் சொன்னார்.

அபி நிம்மதியாக உணர்ந்தான்.

சோமு இருநாட்களாக மகன் வாடி இருக்கக்கண்டவர்,” என்னாச்சு ஹர்ஷா? உன் பிரென்டைப்
பார்த்தியா இல்லையா?”.

“பார்த்தேன் பா “,என்றான் சுரத்தே இல்லாமல்.

“அப்பறம் என்ன?”

“இல்ல அவனும் நானும் ரெண்டு வருஷமா டியூஷன் பிரெண்ட்ஸ்.. இப்போ அவன் டியூஷன்
டயம்ல வேலைக்கு போறான். அதனால காலைல டியூஷன் வர்றான். என்னால அவனைப் பார்க்க
முடியல. என்ன செய்யறதுன்னு தெரியல..”

“ஆமா பெரிய ஔவையார் அதியமான் நட்பு. போடா இவனே.. இதுக்கு தான் மூணு நாளா
மூஞ்சியை தூக்கிட்டு திரிஞ்சியா?”, என்று சமயலறையில் இருந்து வந்து கத்திவிட்டு போனாள்
லதா.

ஆனால் சோமு, மகன் அருகில் அமர்ந்து, “அவனை அவ்வளவு பிடிக்குமா உனக்கு?”, என்றார்.

“ஆமாம். ரொம்ப நல்லவன்.”, என்று ஏக்கமாக ஹர்ஷா சொல்ல, சிரித்த சோமு,

“மனமிருந்தால் மார்க்கமுண்டு. உன் நண்பனை நீ சந்திக்க நினைச்சா அதுக்கு தடைக்கல்லா
இருக்கறத தகர்த்து எறியற புத்திசாலித்தனம் உனக்கு இருந்துட்டா, பிரச்சனை முடிஞ்சது..”
என்றார்.

ஹர்ஷா புரியாமல் பார்க்க, கண்சிமிட்டிய சோமு, “யோசி”, என்று சொல்லி விட்டு சென்றார்.

தந்தை வார்த்தைகளை மனதில் உரு போட்ட ஹர்ஷாவுக்கு கிடைத்த பதில் உவப்பானதாக
இல்லாவிட்டாலும் தன் நண்பன் என்ற ஒற்றை மந்திரச் சொல் அவனை கட்டி இழுத்தது.
��அகலாதே ஆருயிரே��
��10��

மறுநாள் காலை டியூஷனுக்கு சென்ற அபிக்கு ஆச்சர்யம். அழகாக பள்ளிச்சீருடையில் அவன்
அமரும் இடத்திற்கு அருகில் அமர்ந்து இருந்தான் ஹர்ஷா.

“டேய் பங்கு.. என்ன டா உலகம் தலைகீழா சுத்துதா? நீ இவ்ளோ சீக்கிரம் எழுந்து, குளிச்சு..
என்று இழுத்துவிட்டு, குளிச்சுட்ட தானே.. “,என்று நக்கலடிக்க,

“ஏன் டா.. உன்னை பார்க்க ஓடோடி வந்த என்னை நீ இப்படி பேசலாமா? என் மனம் ஆறுமா?”

“என்ன டா ஆறு ஏழு ன்னு கணக்கு சொல்ற?”

“டேய் பங்கு. உன்னை பார்க்காம இருக்க முடியல டா. வாரம் ஒரு நாள் பாக்கற அளவுக்கு நான்
இன்னும் உன்னை தூரமா நினைக்கல..”

“பங்கு.. என் மேல அவ்ளோ பாசமா டா? “,என்று அபி கேலியாக கேட்டான்.

“நான் உன்னை பார்க்க தான் பங்கு வந்தேன் . நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் பங்கு”,
என்று ஹர்ஷா மீண்டும் நாடக வசனம் பேச,

“அடேய், சும்மா சொல்லாத டா”, என்று மீண்டும் அபி ஓட்டினான்.

“உன்னை பார்க்காம பின்ன இந்த கெமிஸ்ட்ரி வாத்தியாரை பாக்கவா பங்கு வந்தேன்??”,
காரமாக கேட்க முயன்றான் ஹர்ஷா.

“நீ அப்படியே வந்தாலும் அவருக்கும் உனக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது பங்கு”, என்று
கலாய்த்த அபி, வாய் மூடி சிரிக்க,

“ஏன் பங்கு சொல்ல மாட்ட, உன்னை பார்க்க கஷ்டப்பட்டு அலாரம் வச்சு, எழுந்து வந்தேன்ல..”

“ஏன் டா கஷ்டப்பட்ட,ஆண்ட்ராய்ட் போன்ல அலாரம் வைக்கிறது ரொம்ப ஈசி டா.. “,என்று
சீரியசாக சொல்ல,

“வேணாம் பங்கு. காலைல நான் இன்னும் சரியா கூட முழிக்கல்ல.. குத்து மதிப்பா தான் பேசிட்டு
இருக்கேன். காண்டுல கடுச்சுற போறேன்.”

இவர்கள் சம்பாஷணைகளை கண்டபடி நின்றிருந்த கெமிஸ்ட்ரி சார், ஹர்ஷாவிடம், “அபி
படிப்பை கெடுக்கவே இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்தியா டா”, என்று கேட்க,

“இல்லை சார்.. எனக்கு ஒரு சந்தேகம் அதான்.”

“என்ன”, என்றார்.

அவர் வரைந்து வைத்திருந்த அறுகோணத்தை காட்டி அதில் இருந்த சமன்பாட்டை பற்றி
ஏதேதோ கேட்டபடி இருந்தான். சில நேரத்திற்கு பின் தான் அவன் வேண்டும் என்று
செய்கிறானோ என்ற சந்தேகம் அவருக்கு எழ, அவனை முறைத்தார்.

“இப்போ சொல்லுங்க சார் நான் அபி படிப்பை கெடுக்கவா வந்தேன்.”

“இல்ல டா மொத்த டியூஷனையும் நாசம் பண்ண வந்த.. உன்னை ஒன்னும் சொல்லல, உக்காந்து
தொலை..”, என்று கத்தி விட்டு, கரும்பலகையில் இருந்த அறுகோணத்தை பார்க்க, அதில்
அவருக்கு ஹர்ஷாவின் முகமே தெரிந்தது.

ரிது தன் தாயிடம் ஏதோ சமையல் பயின்று கொண்டு இருந்தாள். அவளிடம் வந்த நாராயணன்,

“ரிது நாளைக்கு காலைல எத்தனை மணிக்கு நான் ப்ரின்சிபாலை பார்க்க வர?”

“இப்போ எதுக்கு அவரை பார்க்கணுமாம்”, என்று சசி கேட்க,

ரிது உதட்டை பிதுக்கினாள்.

‘எதுவும் செய்யாம கூப்பிட்டு விட மாட்டாங்களே ரிது. உனக்கே தெரியாம ஒருவேளை ஏதும்
மிஸ்டேக் பண்ணிடியா? யோசிச்சு பாரு டா.”

“என்ன சசி நம்ம ரிது தப்பு செய்வாளா??”

“நான் தெரியாமன்னு சொன்னேன். எர் இஸ் ஹியூமன். மனுஷனா பிறந்தவனால தப்பு செய்யாம
இருக்க முடியாது நம்ம யாருமே அதுக்கு விதிவிலக்கு இல்ல நரேன்.”

சசி நாராயணனை மிகவும் ஆழ்ந்து பேசும் தருணங்களில் மட்டுமே நரேன் என்று அழைப்பார்.
அப்படி அழைக்கிறார் என்றால்  அவர் மனம் எங்கோ காயப்பட்டு அமைதிக்கு அலைகிறது என்று
நாராயணன் உணர்வார்.

ரிதுவை கண்ணை காட்டி வெளியில் அனுப்பியவர், சசியை தன் பக்கம் திருப்பி,

“என்ன ஆச்சு சசி உனக்கு?”

“இல்ல நம்ம பொண்ணு நல்ல பிள்ளை தான். ஆனா அவ வயசு. அதான் என்னால என் மனசை
அந்த வயசுல அடக்க தெரியல தானே,வீட்டை விட்டு,படிப்பை விட்டு உங்க கூட வந்துட்டேன்
தானே. இத்தனைக்கும் என் வீட்ல என் மேல எவ்ளோ பிரியம்னு உங்களுக்கு தெரியுமே.. அதான்
எனக்கு ப்ரின்சிபால் கூப்பிட்டதும்..”

“கூப்பிட்டதும்..”, என்று நாராயணன் சொன்ன குரலில் நீ பேசியது எனக்கு பிடித்தம் இல்லை
என்பதை பொட்டில் அறைந்தது போல சொன்னார்.

“ஐயோ நான் ரிதுவை சந்தேகப்படல, அவ குணம் எனக்கு தெரியும். நமக்கு நடந்தது போல
எதுவும்.. “,என்று இழுக்க..

“எனக்கு புரியுது சசி. ஆனா இது தேவை இல்லாத பயம். நமக்கு நடந்தது எல்லாருக்கும் நடக்காது.
முக்கியமா ரிதுக்கு. நமக்கு நடக்க காரணம் நம்மளை சுத்தி இருந்த உறவுகள். ஆனா நாம நம்ம
ரிதுவை அப்படி விட்டுடுட மாட்டோம் இல்லையா.. உனக்கே உன் மேல நம்பிக்கை இல்லயா
சசி?”

“அப்படி இல்லைங்க. என்னவோ மனசுக்கு பாரமா இருந்ததால பேசிட்டேன்.”

“புரியுது சசி. நீ வேணும்னா போய் உன் அம்மா அப்பாவை பார்த்துட்டு வரியா?”

‘இருக்காங்களோ இல்லயோ?”, என்றாள் வலியுடன்.

“சசி நல்லா இருக்காங்க. நீ கவலைப்படாத.”

“உங்களுக்கு தெரியுமா நரேன்?”

“நான் அவங்களை கவனிச்சிட்டு தான் இருக்கேன் சசி. அவங்களுக்கு தேவைப்படும் நேரத்துல
எனக்கு தெரிஞ்சவங்க மூலமா உதவியும் செய்யறேன்.”

“ஏன் இதை சொல்லல நரேன் என் கிட்ட??”

“நானா அவங்களை பற்றி பேசி உன்னை வருத்தப்படுத்த விரும்பல சசி. என்னோட சசி எப்பவும்
சிரிச்சு, விளையாடி சந்தோசமா இருக்கணும். “,என்று மனைவியை அணைத்து அவள் தலையில்
தன் தாடையை பதிக்க, உள்ளே நுழைந்த ரிஷி,

“இதெல்லாம் நல்லவா இருக்கு நைனா?”

“ஏன் டா அவ என் பொண்டாட்டி நான் கட்டிப்பேன். உனக்கென்ன டா தடியா?”

“அதை யாரு கேட்டா? ரொம்ப நேரமா நானும் பேசி முடிச்சிட்டு செஞ்ச சோத்தை
போடுவிங்கன்னு காத்துட்டு இருக்கேன். நீங்க இங்க ஒரு மெகா சீரியல் ஓட்டிட்டு இருக்கீங்க?
ஐயோ பாவம் பிள்ளைன்னு ஏதாச்சும் எண்ணம் இருக்கா? என்ன அப்பா அம்மாவோ? “,என்று
நக்கலடித்த படி,

ரிது செய்த சமையலை தட்டில் போட்டுகொண்டு சமயலறையை விட்டு வெளியேறும் சமயம்,”
நீங்க கண்டின்யூ பண்ணுங்க பேரெண்ட்ஸ்..”, என்று சொல்லி செல்ல,

“தடிப்பய.. இவனை..”, என்று அவன் பின்னால் போனார் நாராயணன்.

“இதோ பாரு நைனா.. எதா இருந்தாலும் சோத்துக்கு அப்பறம் தான். “

“என்ன டா இப்படி சொல்லிட்ட..”, என்று அவனை வம்பு செய்ய வந்த உற்சாகம் வடிய அவர்
கேட்டதும்,

“நமக்கு சோறு முக்கியம் அமைச்சரே.. “, என்று டைனிங் டேபிளில் அவன் அமர, தலையில்
அடித்துக்கொண்டு, சரியான சாப்பாட்டு ராமன் என்று வெளியேறினார்.

அபிக்கு ஹர்ஷா அவனுக்காகவே காலை டியூஷன் வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. இரவு வீடு
திரும்பியதும் அதை அவன் அம்மாவிடம் ஆசையாக பகிர்ந்து கொண்டான். அதைக்கேட்ட சங்கரி,

“சந்தோசம் அபி. அன்னைக்கே அந்த பையன் கண்ணுல உன்னைப் பார்க்கலன்னு ஒரு ஏக்கம்
தெரிஞ்சுச்சு. அது மட்டும் இல்ல, அவன் வந்த அன்னைக்கே எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. நீ
என்ன சொல்லுவியோன்னு தான் நான் ஒன்னும் சொல்லாம இருந்தேன்.”

“என்னமா என்கிட்ட பேச என்ன தயக்கம் உங்களுக்கு?”

“தயக்கம் இல்லப்பா. யோசனை. சரி வருமா எப்படின்னு..”

“நீங்க சொல்லுங்கம்மா.”

“அபி” என்ற குரல் உள்ளிருந்து வர, எழுந்த அபி “என்னப்பா “, என்று கேட்டான்.

ராகவேந்தர், “என்ன அபி கொஞ்ச நாளா சாயங்காலம் வீட்ல இருக்கறது இல்ல. நேரம் கழிச்சு வர,
இதெல்லாம் நல்லா இல்ல. ஆம்பள பையன் பொறுப்பா இருக்க வேண்டாமா?”

“அப்பா இவன் எதோ தப்பு பண்றான் அப்பா. நேத்து வீட்டுக்கு வரும்போது பிரியாணி வாங்கிட்டு
வந்தான். பெரிய ஹோட்டல் சாப்பாடு போல இருந்துச்சுப்பா. இவனால் அவ்வளவு காசு போட்டு
வாங்க முடியுமா? அவ்ளோ காசு இருக்குன்னா, இவான் ஏதோ தப்பு பண்றான் அப்பா. “, என்று
ரேகா தந்தையின் பக்கத்தில் நின்றபடி சொல்ல,

தந்தையால் மகனை சந்தேகிக்க முடியவில்லை, இருப்பினும் சொல்வது மகளல்லவா? அதனால்,
“என்ன அபி இதெல்லாம்”, என்றார்.

அபி கையை பின்னால் கட்டிக்கொண்டு, ரேகாவை பார்த்து, “நேத்து பார்சல் வாங்கிட்டு போனது,
சாப்பிட மட்டும் இல்ல, என்னை போட்டுக்கொடுக்கவும் தான் இல்லையா? “, என்று
கேட்டுவிட்டு,

தந்தையை நோக்கி, “நான் வேலைக்கு போறேன்ப்பா, அந்த ஹோட்டல்ல ராத்திரி சாப்பிட்டு,
வீட்டுக்கும் எடுத்துட்டு போகலாம். முதலாளி ரொம்ப நல்லவர். நீங்க வேணும்ன்னா நேர்ல வந்து
அவரோட பேசிக்கோங்க. ஆனா யாராலயும் நான் வேலைக்கு போறத தடுக்க முடியாது.”, என்று
அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

ரேகா எதற்கோ வாயை திறக்க, “உன்னை கட்டிக்கொடுத்து அனுப்பியும் பாதி நாள் இங்க தான்
இருக்க, உன் வீட்டுக்காரர் கிட்ட நான் இதை பற்றி பேசவா? இல்ல நீ வாயை மூடிட்டு இந்த
வீட்ல இருக்கியா? நீயே முடிவு பண்ணிக்கோ. நான் அப்பா மாதிரி கிடையாது. என் விஷயத்துல
நீ தலையிட்டா என்ன செய்யனும்ன்னு எனக்கு நல்லா தெரியும். என் அம்மா தனி ஆளா ரொம்ப
கஷ்டப்படறாங்க. நான் அவங்களுக்கு தோள் கொடுக்கிறேன். ஒரு மகனா என்னோட கடமை
அது. அப்பா அம்மா காசுல தின்னு, படிச்சு அவங்களையே அட்டையா உறிஞ்சி வாழ எனக்கு
பிடிக்கல. இதுக்கு மேல பேச எனக்கு விருப்பம் இல்ல. நீ என் முன்னாடி வராம இருக்கறது
உனக்கு நல்லது. “,என்று எச்சரித்து விட்டு அபி உள்ளே சென்றான்.

ரேகா மீண்டும் வாயை திறக்க, “போதும் போய் படு “,என்று அவளை உள்ளே அனுப்பிய சங்கரி,
“நீங்களும் ஆஃபீஸ் முடிஞ்சு கடைக்கு போற விஷயம் அவனுக்கு தெரிஞ்சு போச்சு. நானும்
தையல், பொடி,அப்பளம்னு செஞ்சு கஷ்டப்படறேனாம். அதான் நானும் வேலைக்கு போறேன்.
படிப்பு கெடாமா பார்த்துக்கறேன்னு சொல்றான். “

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சங்கரி. என்னவோ பண்ணட்டும். “,என்று ஏதோ
யோசித்தபடி அங்கிருந்து நகரந்தார். ஆயிரம் தான் மகன் நல்லவனாக இருந்தாலும் மகள்களை
விட்டுதர மனம் வரவில்லை அவருக்கு. சில தந்தையர் அப்படித்தான்.

ஆருஷி அன்று பாட்டு பாடியபடி கிளம்ப, அவளை நிறுத்திய வேணி, “ஏதோ பேசணும்னு
சொன்னியாம் சண்டே. இப்போவே சொல்லிட்டு போ “,என்றார்.

“இல்ல நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பொதுவா பேசணும். எனக்கு சண்டே தான் செட்
ஆகும். நீங்க பிளான் பண்ணிக்கோங்க. சண்டே பார்க்கலாம். “,என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஆமாம் எதுக்கு ஸ்கூல்ல வர சொன்னாங்க.”

“ஒரு அண்ணா கூட பேசினேன். அதான்.”

“பசங்க கூட என்ன பேச்சு உனக்கு. “,என்று வேணி எகிற,

“ஏய், அவ தெளிவா அண்ணானு சொல்றால்ல.. அப்பறம் என்ன? நான் வரேன் ஆரூ. நீ போ”,
என்று அனுப்பினார் கேசவன்.

3 thoughts on “அகலாதே ஆருயிரே -9-10”

  1. CRVS2797

    அட… ்வங்க என்ன அம்மாவோ…? எதையும் கேட்கறது இல்லை, விசாரிக்கிறது இல்லை..
    குத்தம் மட்டும் கண்டு பிடிக்கிறாங்கப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *