Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான் -16

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -16


சந்திராவை விடுவதற்கு மாயா வந்தாள் . இருவரும் நடந்து வரும்போது இருவருக்குள்ளும் ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவியது.
“மாயா நீதான் அவங்க ரெண்டு போரையும் பத்திரமா பாத்துக்கணும்”
“உங்களுக்கு இவ்ளோ அக்கறை அவங்க மேல இருக்கு. அப்புறம் ஏன் மேடம் அய்யாவை வேண்டாம்னு சொன்னீங்க? மனதின் வார்த்தைகள் அடங்காமல் வாயில் இருந்து கொட்டி விட்டன.
“எல்லாம் என்னோட தலை எழுத்து மாயா . ஆனா என்னோட வாழ்க்கைல இன்னொரு சந்தர்ப்பம் கிடைச்சா அவரை என்னோட கண்ணுக்குள்ள வச்சுப்பேன்” இவளுக்கும் மனதின் வார்த்தைகள் வாயில் இருந்து கொட்டி விட்டன. சூர்யாவைப் பற்றிய கவலைதான் பிரதானமாக இருந்தது இருவருக்குமே.
ஆட்டோ வந்தது.
“வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணுங்க மேடம்”
“சரி! மாயா “. அக்கறையோடு சொன்னவள் கையை பிடித்துக் கொண்டு பதிலுரைத்தாள் சந்திரா.
“பாத்து பத்திரமா மெதுவா கூட்டிட்டுப் போங்க” ராஜூவை அதிகாரமாய் மிரட்டினாள் மாயா . சந்திராவிடம் இருந்த தோனியே மாறி இருந்தது மாயாவுக்கு.
” முதல் தடவ பேசும்போதே இவ்ளோ அதிகாரமா பேசுதே ?” மனதிற்குள் பயந்துதான் போனான். பிறகு வந்த நாட்களில் மாயாவுக்கும் ராஜூவுக்கும் சந்திப்புகள் நடந்தன . ஒருநாள் மார்க்கெட் சென்று வந்த மாயாவை வழியில் ஏற்றிக் கொண்டு வந்தான். அதற்கு பிறகு இவள் மேற்படிப்பு தபால் மூலம் படிக்க அடிக்கடி தொலைதூர கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் சூர்யா ராஜூவையே ஏற்பாடு செய்திருந்தான். இவர்களுக்குள் பெரிய அளவில் பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பேச ஆரம்பித்திருந்தனர். ராஜுவுக்கு மாயா மீது இருந்தது ஈர்ப்பா? காதலா? அவனுக்குத் தெரியாது. ஆனால் வாழ்க்கை முழுவதும் அவள்தான் என்பது மட்டும் தெரிந்தது.அப்போது ஒரு நாள் இவள் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருந்தாள். அப்போது எதிரில் நிலை இல்லாமல் வந்த லாரியில் இருந்து சட்டென பிடித்து இழுத்து ராஜுதான் காப்பாற்றினான். வண்டியில் அமர்ந்த படிதான் அவளை இழுத்தான். ஆனால் அந்த நொடி அவனுக்கு அவளே முக்கியம். தனக்கு ஒரு கால் இல்லை என்பதெல்லாம் நினைவில் இல்லை. அது மாயாவாக இல்லாது வேறு யாராக இருந்தாலும் அவன் அப்படித்தான் செய்திருப்பான். இருந்தாலும் இதற்காக அவன் கேட்கப் போகும் விலை?
“ராஜு! நீங்க எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சுருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது. கிட்டத்தட்ட என்னோட உயிர். அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா போலீசு கேசு எல்லாத்துக்கும் மேல என்னோட மனசு.ப்ச்! சொல்ல தெரியல.உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க”
“விடுங்க சார் அதெல்லாம் உங்களால முடியாது”
“முடிஞ்சா கண்டிப்பா தரேன்”
“சார்! அந்த பொண்ண எனக்கு கட்டி வைக்கறீங்களா ?”
“நான் முடிவை சொல்லறது அப்புறம் இருக்கட்டும். உங்களுக்கு அவளை பத்தி என்ன தெரியும் ?” அதிர்ச்சியை மறைத்து கொண்டான் சூர்யா.
“என்ன சார் தெரியனும் ? உங்க வீட்டுல வேலை செய்யறா . அப்பா அம்மா இல்ல. வேற?”
“அவளுக்கு அம்மா அண்ணா இருக்காங்க. ஆனா அங்க போக இஷ்டம் இல்ல. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷன் செத்துட்டான் . எல்லாத்துக்கும் மேல….. அவ ஒரு பி…மத்தவங்கள சந்தோச படுத்தறவளா … வார்த்தைகளை முடிக்க முடியாமல் நிறுத்தினான். நான் இதை எல்லாம் உங்க கிட்ட சொல்லி இருக்கக் கூடாது. ஏதோ ஒரு வேகத்துல.ப்ளீஸ் இனிமே அவளை பத்தி நினைக்காதீங்க. அவகிட்ட இதை பத்தி கேட்காதீங்க.”
“சார்! நீங்க சொன்னது எனக்குமே அதிர்ச்சிதான். அந்த பொண்ணு அப்படியே இருந்திருக்கலாம். அவங்க எத்தனையோ பேர் கிட்ட போயிட்டு வந்திருக்கலாம். அவங்க எல்லாருமே இவங்கள தப்பா பார்த்திருக்கலாம். பொண்டாட்டியா நினச்சுருக்கலாம். ஆனா அத்தனை பேரையும் புருஷனா இவங்க பார்த்திருக்க மாட்டாங்க. ஏன் அந்த மாதிரி இருக்கற பொண்ணுங்க வேற கல்யாணம் பண்ணறதில்லையா? எல்லாம் மனசுதான் சார் காரணம். இவங்களுக்கு புருஷனா நான் இருப்பேன். என்னோட அம்மாவுக்கு நல்ல மருமகளா , என் குழந்தைக்கு அம்மாவா அவங்க இருப்பாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அவங்களாலையும் மத்தவங்கள மாதிரி நல்ல வாழ்க்கை வாழ முடியும்.நீங்க எங்கேர்ந்தோ கூட்டிட்டு வந்த பொண்ணு. உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்”
“ராஜு நீங்க எடுக்கற முடிவு சரியான்னு எனக்கு தெரியல. நீங்க ரொம்ப ஸ்பீடா போறீங்க! “
“சார்! எவ்ளோ வேகமா போனாலும் எந்த விபத்தும் நடக்க விட மாட்டேன்”.
“ராஜு”
“சார்! நாம இதப்பத்தி பேச வேணாம். என்னைக்கு அவங்கள உங்க வீட்டுல பார்த்தேனோ அப்பவே எனக்கு அவங்கள பிடிச்சு போச்சு. நாள் ஆக ஆக அவங்கள என்னோட மனசுக்குள்ள வச்சு குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். கல்யாணம்னா அது அவங்கதான். வேற யாரையாவது நான் கல்யாணம் பண்ணா நானும் வேற மாதிரிதான்”
எத்தனை பெரிய விஷயம்? இத்தனை எளிதானதா? சூர்யாவால் நினைக்க கூட முடியவில்லை. ஒரு சராசரி ஆண் மகனாகத் தான் அவனால் யோசிக்க முடியும்.
“எதுக்கும் நீங்க உஙக குடும்பத்துல பேசிட்டு சொல்லுங்க” இருவருமே பரஸ்பரம் சொல்லிக் கொண்டார்கள்.
‘ஏழை. படிக்காதவன். அவனுக்கு எத்தனை தெளிவு?’ பிரமித்தான் சூர்யா.
மாயாவிடமும் அன்னையிடமும் இதை சொன்னான். சாரதாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மாயாவுக்கு அதிர்ச்சி.
மாயா இதை ராஜுவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இருவரும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக் கொண்டது கூட இல்லை . கண்டதும் காதலா ? இவள் பார்க்காத காதலா? காமமா?
பதினேழு வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவள். வீட்டின் எதிரில் தள்ளு வண்டியில் பனிக்கூழ் விற்க வந்தவன் இவளை இவள் மனதை திருடிக் கொண்டான். வெள்ளை தோல் மாயமா? அல்லது இளமையின் பசியா? புரியவும் இல்லை. யோசிக்கவும் முடியவில்லை . “வீட்டுக்கு வெளில நிக்காத. அங்க என்ன பார்வ?”அதட்டிய அன்னையும் அண்ணனும் துரோகி என்றது மனது. “இங்கையே இருந்தா அவங்க நம்மள வாழ விட மாட்டாங்க”. அவனின் மலையாள மொழி மயக்கியது. புதை குழியில் தள்ளியது.
வீட்டை விட்டு ஓடிப் போனாள்.அவன் இழுத்த இழுப்பிற்கு உடன் சென்றாள் . எங்கு போகிறோம் யாருடன் தங்கப் போகிறோம் எதுவும் தெரியாது. அவன் தோளில் சாய்ந்தால் உலகத்தை விலைக்கு வாங்கி விடலாம். திருமணம்? அதுதான் மஞ்சளில் ஒரு கயிறு கட்டினானே ? அப்போதே முதலிரவு. பிறகு பல …..
அவனுடைய வழக்கம்போல ஒரே வாரத்தில் இவள் அவனுக்கு அலுத்து விட்டாள் . அல்லது அலுத்து போகும் அளவுக்கு அவர்கள் ஒன்றாக இருந்தார்கள். ஊருக்கு சென்று வருவதாக கூறி சில நாட்களுக்கு வாடகைக்கு மனைவியை கொடுத்திருந்தான்.வீட்டை அல்ல. மனைவியைத்தான். சென்றவன், சென்றவன்தான். அவனுடன் இருந்த நாட்களை இன்பமாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவ்வப்போது யார் யாரோ வந்தார்கள். இவளின் அழுகையும் கெஞ்சலும் அவர்களுக்கு இன்னும் கொண்டாட்டமாகத்தான் இருந்தது. ஊர் பேர் தெரியாத இடம். தப்பிக்கவும் வழி இல்லை. சிலர் பணம் கொடுத்தார்கள். பலர் கொடுக்கவில்லை. அதற்குப்பிறகுதான் தெரிந்தது அவள் இருந்த பகுதியே அந்த மாதிரி இடம்தான் என்பது. கெட்டதிலும் நல்லதாக, அங்கு ப்ரோக்கர் யாரும் இல்லை. அதனால் எவரிடமும் இவள் மாட்டவில்லை . ஆனால் சில நேரம் போலீஸ் வரும். ரெய்டிற்கு அல்ல. மற்ற விஷயங்களுக்கு. ஒருவன் வந்தான். அவனுக்கு இவளை மிகவும் பிடித்திருந்தது. அதனால் அடிக்கடி வர ஆரம்பித்தான். போலீஸ்காரன்தான். அவனுக்கு மனதளவில் நிறைய உளவியல் பிரச்சனைகள் இருந்தன. அதற்கெல்லாம் வடிகாலாக இவள்தான் இருந்தாள் . பல நேரங்களில் வெறியில் இவளை பிடுங்கி குதறி விடுவான். அவனின் வெறியை இவளால் எல்லா நாட்களும் தாங்க முடியவில்லை. அப்படி அவன் செய்த போதெல்லாம் இவள் சூர்யாவிடம் தான் சொல்லுவாள். ஒருநாள் இவள் தற்கொலைக்குக் கூட முயன்றாள் . வழக்கம்போல நல்லது செய்வதாக அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். அதற்க்கு பிறகு மனதளவில் தற்கொலைக்கு கூட பயம் வந்து விட்டது. அவனிடமே சொல்லி ஒரு தள்ளு வண்டியை வாங்கி காலையில் நாஷ்டாவும் மாலையில் சாட்டும் போட ஆரம்பித்தாள். எது எப்படி இருந்தாலும் கஸ்டமர் கூப்பிடும்போது இவள் போய்தான் ஆக வேண்டும். அது மாதாந்திர சமயமாக இருந்தாலும். இல்லை என்றால், விபச்சார வழக்கு என்ற பெயரில் குதறி எடுத்து விடுவார்கள். அதை எல்லாம் பார்த்தவளுக்கு எப்படி மறு முறை திருமணம் செய்ய முடியும்? அவள் இரவில் தூங்குவது கூட இல்லையே ? எத்தனையோ நாட்கள் அவளின் புலம்பல்களை கேட்டு சாரதாவும் தூக்கம் தொலைத்திருக்கிறாள். சாரதாவிற்கு விஷயம் என்பது முழுவதுமாக தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும். அதுவேதான் சூர்யாவுக்கும். சில சமயங்களில் அவள் கடைக்கு உண்ண செல்லும்போது பழக்கம் ஆனதுதான். இவனும் தமிழ் என்பதாலோ இல்லை இவனின் நேர்மையான பார்வையினாலோ அவளே இவனிடம் பேச ஆரம்பித்தாள். யாரிடமும் பேசாமலே இருந்தவளுக்கு இவனிடம் மடை திறந்த வெள்ளமாய் பேச்சு வந்தது. பல நேரங்களில் இவனுக்கே அவள் பேச்சு சற்று அதிகப்படியாகத்தான் இருக்கும். ஆனால் அதில் எல்லாம் அவளின் உடல் வலியும் , மன வலியும் இருக்கும். தன்னையே ஒரு கவுன்சிலராக எண்ணி அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பான். அதில் தான் ஒரு நாள் பொறுக்க முடியாமல் அன்னையுடன் இருக்க அவளை அனுப்பி விட்டான்.
அது இருக்கட்டும். இவனுக்கும் சந்திராவுக்கும் என்ன நடந்தது?

தொடரும்………..

7 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான் -16”

  1. Kalidevi

    Oru ponna verum sathaiya mattume pakura niraya mirugangal irukanga inum. Ama chandra Kum surya Kum ena achi ethuku rendu perum pirinjanga atha sollunga but rendu per manasulaum kadhal iruku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *