Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17

பாகம்-17

சந்திராவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் தொடுவது கேலி பேசுவது என்பதையும் தாண்டி ஏதோ வந்திருந்தது. அவனுக்கு மனதில் அவள் இருந்தாள். அவள் உயிரில் அவன் கலந்திருந்தான். அது இருவருக்குமே தெரிந்தது. தன் மனதை அவளிடம் வெளிப் படுத்தாமல் இனி இருக்க முடியாது என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. அவளுக்கும்தான். ‘அவர் வந்து சொல்லுவார்? சொன்னா நான் என்ன சொல்லறது? டக்குன்னு ஓகே சொல்லிடணுமா? அத்தை என்ன நினைப்பாங்க? அவங்க பையன சைட் அடிக்கத்தான் அவங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதா நினச்சுருவாங்களோ?’

மனம் முழுவதும் எத்தனை எத்தனை கனவுகள் ! பூவாளியின் நீர் விழுந்ததும் பன்னீர் பூப்போலப் பூப்பாளா ? அவன் தன் மனதை சொன்னபோதே அவள் மனம் பூத்திருக்கலாம். வீட்டின் பிரச்சனைகள் அனைத்தையும் அவனிடம் கூறி இருந்திருக்கலாம். வெளியில் வர வழிதேடி இருந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று ராகவின் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்து நிற்க வேண்டிய அவலம் இருந்திருக்காது. அதே சமயம் அவளின் சூடு சொல் சூரியனை பழித்திருக்காவிட்டால் அவனும் தான் இத்தனை பெரிய ஆளாக வந்திருக்க முடியுமா? சந்தேகம் தான். இவன் சென்று சந்திராவிடம் தன் விருப்பத்தைச் சொன்னபோது, அவன் குரல் முழுவதும் அத்தனை பரவசம். முகம் முழுவதும் அத்தனை பிரகாசம். அந்த நொடியே அவனைத் தாவி அணைத்து முகம் முழுவதும் முத்தங்களை அள்ளி வழங்க வேண்டும் என்று சந்திராவுக்கும் தான் எத்தனை ஏக்கம்? அவளின் ஏக்கம் எப்போது வந்தது ? அவன் அவளை அணைத்து காப்பாற்றியபோதா? இல்லை ஸ்ரீதரின் தந்தையிடம் டீல் பேசியவனை உருவகப் படுத்தியபோதா ? இல்லை! அன்னைக்கு தேவையானதை உழைத்துச் சம்பாதித்து வாங்கி கொடுத்ததை இரவில் எண்ணிப் பார்த்தாளே அப்போதுதான் வந்திருக்க வேண்டும்.

எப்படி இருந்தாலும் இந்த நொடி அவளும் மனதில் கலங்கி அவனையும் அழ வைக்கிறாள். “உங்கள நான் கல்யாணம் பண்ணிக்க உங்க கிட்ட என்ன இருக்கு ?” அப்பா! சந்திராவுக்கு இப்படி பேசத் தெரியுமா? “என்ன வேணும் ?” இவன் குரலும் மாறியது. பார்வையும்தான். “பணம் வேணும். என்னோட பணத்தேவை ரொம்ப ஜாஸ்தி. உங்களால அதை நிறைவேத்தவே முடியாது. போங்க ஏதோ படிக்கறேன்னு சொன்னீங்களே? போய் இன்டெர்வியூல பாஸ் பண்ணற வழியப் பாருங்க” அவளா அப்படி பேசியது?. இவனால் மனதளவில் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் இவனுக்கு அதிகமான வெறி வந்தது. எப்படியாவது இந்த முறை நேர்முகத்தேர்வில் பாஸ் பண்ண வேண்டும் என்று வெறியோடு அதற்க்கு தயார் செய்ய ஆரம்பித்தான். வெற்றியும் கண்டான். சந்திராவின் பேச்சு அவனுக்கு வெற்றியா தோல்வியா அவனுக்குத் தெரியாது. அவள் ஏன் அப்படி பேசினாள் ? அதுவும் தெரியாது. ஆனால் அவள் முகத்தை எதிர்கொள்ளப் பிடிக்கவில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் பார்ப்பதை தவிர்த்தனர். சூரியனை நோக்கி விடியும் அவளின் வாழ்வு அப்போதே அஸ்தமனித்து விட்டது. இதே சமயம் சாரதாவின் பழைய தோழி ஒருவர் தனியாக வீடு எடுத்துத் தங்கி இருந்தார். இவனும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்தான். அதனால் அன்னை தனியாக இங்கிருக்க வேண்டாம் என்று சில காலம் அந்தத் தோழியுடனே இருக்க வைத்தான். இவன் கேரளாவிற்கு செல்லும்போதும் அன்னைக்கு ஏற்பாடு அங்குத் தான். பிறகு அவர் சில மாதங்கள் தன் மகனுடன் ஊரில் சென்று தங்கப்போவதாகச் சொல்ல அப்போதுதான் அவன் மாயாவை இங்கு அனுப்பியது. மாயா ஒரு தமிழ்ப் பெண் என்பதாலா அல்லது இயற்கையில் வந்த சகோதர பாசமா? தன் அன்னையுடன் உடன் இருக்க அனுப்பி விட்டான். மாயாவின் வார்த்தைகள் பல நாட்களுக்கு அவனின் உறக்கத்தை பறித்தன. என்னதான் அண்ணா மகனாக இருந்தாலும் அவன் மனது மிகவும் மென்மையானது. பட்ட கஷ்டங்கள் வேண்டுமானால் அவனின் தோற்றத்தை மாற்றி இருக்கலாம். ஆனால் அவன் அன்னை வளர்ப்பு எதையும் மாற்றவில்லை. அப்படியே நம்புவோம். பாதை மாறும்போது அடித்துத் திருத்த நாயகி இருக்கிறாளே ! சுருக்கெனச் சொல்ல வேண்டும். அவன் கோபத்தில் தன்னை விட்டு விலக வேண்டும். படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதையே நினைத்த சந்திரா சூர்யாவின் மனது எந்த அளவுக்குக் காயப்பட்டிருந்தது என்பதை அறிவாளா ? அல்லது தன்னுடைய வாழ்க்கை இத்தனை கொடூரமாக மாறும் என்பதை அறிவாளா ? கண் மூடித்தனமானப் பாசம் அவளின் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது. ============================================================================================== சில தினங்களுக்குப் பிறகு, அலுவலகத்தில் மதிய உணவு முடிந்ததும் வந்து அமர்ந்தாள் சந்திரா. ஆயா அன்று விடுமுறையில் இருந்தார். அடுத்த இரு தினங்கள் மட்டுமே சந்திரா வேலைக்கு வருவாள். அதற்குப் பின், என்ன என்பதை அவள் இன்னும் யோசிக்கவில்லை. அவளது விடுப்புக்கான அத்தனை விஷயங்களையும் சந்திரா சரி பார்த்தாள். அதை வீணாவிடமும் கொடுத்து விட்டாள். அவள்தான் சூர்யாவின் PA. ஏனோ வேலையை விட்டுப் போகும் முன் சூர்யாவுடன் சில நிமிடங்களாவது தனிமையில் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. ஏன் பிரசவத்தின் போதும் அவன் அவள் அருகிலேயே இருக்க வேண்டும் என்றும் மனம் ஏங்கியது. பிரசவத்தின்போது கணவன் அருகில் இருப்பான் தானே ? இவள் கணவன் அவன்தான். கழுத்தில் இருந்த அவன் கொடுத்த சங்கிலியை அவள் தொட்டு பார்த்துக் கொண்டாள். அவள் பிறந்த நாள் பரிசாக அவள் விளையாட்டாகக் கேட்டாள். மறுப்பு இல்லாமல் அவன் தந்தான். அவனுக்கு அவள் பதிலுக்குக் கொடுக்க விரும்பியது ஆசையாய் சில முத்தங்கள். பாவம் அது என்றுமே கொடுக்க முடிந்ததில்லை. அவன் பிறந்த நாளைக்கு அவள் கொடுத்தது கொடிய வார்த்தைகள் தான். ஆசை ஆசையாய் பிறந்த நாள் அன்றுதான் அவன் தன் மனதை திறந்து காதலைச் சொன்னான். அவன் பிறந்த நாளை அவனை விடவும் அதிகமாக எதிர்பார்த்தது அவள்தான். இறுதியில் விதி வென்று விட்டது. ‘சரி! இது ஆப்பிஸ் டைம்’கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். வேலையில் மூழ்கினாள். இல்லை. அவளால் முடியவில்லை. வயிற்றில் ஏதோ வலி. இதுவரை அவளுக்கு இதைப் பற்றித் தெரியவில்லை. பிரசவ வலியாக இருந்தால் முதுகிலிருந்து ஆரம்பிக்கும் என்று மருத்துவர் சொல்லி இருந்தார். இது அப்படி இல்லை. பால்ஸ் பெயினாக இருக்குமா? எட்டு இல்லை ஒன்பது மாதங்கள் …. இவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. சூர்யாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விடலாம். காத்திருந்தாள். உள்ளே சென்ற அரசியல் பிரமுகர் ஏதோ முக்கியமாகப் பேசிக்கொண்டிருந்தார். எல்லாத் தேவை இல்லாத பேச்சுக்களையும் பேசி அவர் சூர்யாவை பற்றி அவருக்குத் தேவையான சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார். இறுதியில் அவர் விஷயத்துக்கு வரும்போது வெகுநேரம் ஆகி இருந்தது. அவர் மகளுக்குச் சூர்யாவை மாப்பிள்ளையாக ஆக்கத்தான் அவர் வந்திருந்தார். “முடியாதுங்கறதையே ரொம்ப அழகா சொல்லீட்டிங்க தம்பி! எதுக்கும் வீட்டுல பேசிட்டு சொல்லுங்க”விடை பெற்றுக் கொண்டார்.

சந்திரா இல்லாமல் அவன் வேறு எந்தப் பெண்ணையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவளுக்குத் திருமணம் ஆகி இருந்தாலும் இவனால் வேறொரு பெண்ணை நினைக்கக் கூட முடியாது. தன் கட்டிலில் தன் இடத்தில், இதயத்தில் அவள் தான். அவள் மட்டும்தான். அவர் சென்றதும் சட்டைமேல் பட்டனை திறந்து சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டான். சில நிமிடங்களில் வீணா சந்திராவின் விடுப்புக்கான கோப்பு மற்றும் மற்ற கோப்புகளையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனாள். முதலில் சந்திராவின் விஷயத்தை முடிப்போம் என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சிலவற்றை பற்றிப் பேச வேண்டி இருந்தது. “சந்திரா! ப்ளீஸ் கம்” போனில் அழைத்தான். “சார்! நீங்க இங்க வாங்களேன்! ப்ளீஸ் உடனே” அவள் குரல் சரியில்லை, நடுங்கியது.

வேகமாக ஓடினான்.அவளுக்கு முகமெல்லாம் வியர்த்திருந்தது. “சந்திரா! ஆர் யூ ஓகே ? “நோ ! தலை ஆட்டினாள். டாக்டர்கிட்ட போகணும்” கண்களில் கண்ணீர் குளம் கட்டி இருந்தது. “வேகமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்டான். வீணா! கார் கீக்கொண்டு வா! அவளைத் தூக்கிக் கொண்டு காருக்கு ஓடினான். கார் சாவியுடன் வீணாவும் ஓடி வந்தாள். “ட்ரைவ் பண்ணுவியா?” “எஸ் சார்! சொல்லிக் கொண்டே காரைத் திறந்திருந்தாள். சந்திராவை மிக மெதுவாகக் காரில் கிடத்தியவன் சட்டையைப் பிடித்துக் கொண்டாள். வெகுநேரமாக உதட்டைக் கடித்திருப்பாள் போல. உதட்டிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. “ப்ளீடிங் ஆகற மாதிரி இருக்கு சூர்யா” அது ட்ரைவர் சீட்டில் அமர்ந்த வீணாவுக்கும் காதில் விழுந்தது. சந்திராவின் அருகிலேயே அமர்ந்து வீணாவுக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தான். மருத்துவமனையை அடைந்தனர். பரிசோதித்த மருத்துவர்,

“ஒன்னும் இல்லை. ஷி ஐஸ் நார்மல். வீட்டுல பெரியவங்க இருந்திருந்தா அவங்களே பார்த்திருப்பாங்க”. “டாக்டர் ப்ளீடிங்?” “அதெல்லாம் ஒன்னும் இல்லை “. எப்படியும் 36 வீக்ஸ் ஆகிடுச்சு. இனிமே எப்ப வேண்ணாலும் இவங்களுக்கு டெலிவரி எக்ஸ்பெக்ட் பண்ணலாம். பேபி இஸ் பர்பெக்ட்லி நார்மல். பட் இவங்களுக்கு பிபி பிராப்லம் இருக்கு. அது கண்டிப்பா சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயம். நீங்க இதை அலட்சியப்படுத்தினீங்கன்னா ரொம்ப பெரிய ப்ராப்லம். இது IVF சைல்ட் வேற. ஏதாவது ஒரு பிரச்சனைனா நாம இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்டும். நமக்குக் குழந்தை அம்மா ரெண்டு பேரையும் பத்திரமா காப்பாத்தற பொறுப்பு இருக்கு. ஆஸ் அ ஹஸ்பெண்டா நீங்கத் தான் அவங்கள பத்திரமா பார்த்துக்கணும். ரொம்ப டயர்டா இருக்காங்க. வீட்டுல நல்லா தூங்க சொல்லுங்க. போங்க போய்ப் பாருங்க”சொல்லி விட்டுப் போனார் டாக்டர். ” தங் யூ டாக்டர்” சந்திராவை உள்ளே அழைத்துச் சென்றதுமே, வீணாவுக்கு நன்றி உரைத்து அனுப்பி விட்டான். வீணாவிற்கு மனம் வேதனையாக இருந்தது. சந்திராவுக்கு அத்தனை அருகில் இருந்தும் அவளால் தன்னிடம் எதுவும் சொல்ல முடியாத படிக்கு மிகக் கேவலமாக நடந்துக் கொண்டோமே? மற்றவர்கள் என்ன சொன்னால் என்ன? என்னுடைய மனிதாபிமானம் எங்கே போயிற்று? நான் இனி சந்திராவின் முகத்தில் எப்படி விழிப்பது? இது வீணாவுக்கு மட்டுமான வார்த்தைகளா? நம்மில் பலர் மற்றவர்களுக்காகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

4 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *