பம்பரம் போல் வேகமாக சுழலும் பூமிக்கு ஈடாக மனிதனும் ஓடத்தொடங்கி விட்ட இக்காலத்தில் நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் அதில் வித்தியாசமானவள் இந்த பார்வதிதேவி பெண்களுக்கு தனியழகு சேர்க்கும் புடவையை மடிப்பு எடுத்து கட்டியிருந்தவளின் இடைவரை வளர்ந்து நின்ற கூந்தலை முல்லை மலர்கள் அழகாக அலங்கரித்துக்கொண்டிருந்தது பெண்ணவளின் கரங்களோ தன் முன் வீற்றிருக்கும் குருவான நடராஜரை வணங்கி கொண்டு இருந்தது சிறிது நேரத்திலே அவள் காதுகளை இன்பமாக குளிர வைத்தது சலங்கை சத்தமும், கிள்ளை மொழிகளும் அதில் புன்னகையுடன் திரும்பியவளின் முன்பு அவளின் மாணவ செல்வங்கள் பணிவாக கையெடுத்து வணங்க பதிலுக்கு தானும் வணங்கியவள் அந்த இடத்திற்கே குளுமையை பரப்பிக்கொண்டு நிமிர்ந்து நின்று கொண்டு இருந்த வேப்பமரத்தின் கீழ் வந்தவள் அன்றைய நாளுக்குரிய நடனப்பயிற்சிகளை என்றும் மாறாத புன்னகையுடன் பொறுமையாக கற்றுக்கொடுக்க நிதானமாக ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டனர் பிள்ளைகள்.
“பிரியா இந்த தாழம் வரும் போது சம்யுக்த ஹஸ்த முறையிலே கைகளை கொண்டு வரணும் புரிஞ்சதா திரும்ப பண்ணிக்காட்டு….” என்றபடி அவர்களின் நடனங்களை கவனித்துக் கொண்டு இருந்தவளிடம் வந்தாள் அவளின் தோழி மீரா.
பார்வதியின் முன்பு தன் ஃபோனை நீட்டியவள் “நீ ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தது இன்னும் நாலு மாசத்துல நடக்கப்போகுது பார்வதி…” என்றதை கேட்டு அவள் நீட்டிய ஃபோனை வாங்கி பார்த்தாள் இன்டர்நேஷனல் லெவலில் டான்ஸ் போட்டி நடக்க இருப்பதாக அறிவித்தல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வந்திருந்தது அதுவும் லண்டனில் அதற்கு கீழ் நிபந்தனைகளாக கலந்துக்கொள்ளும் டான்சர் அனைவரும் முக்கியமாக ஸ்டேட் லெவலில் பங்கு பெற்று வென்று இருக்க வேண்டும், வயது எல்லை கிடையாது, ஒரு குழுவில் குறைந்தது பத்து பேர்கள் மாத்திரமே கலந்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் வைக்கும் மூன்று சுற்றுக்களில் தேர்வானால் மட்டுமே இன்டர்நேஷனல்லெவலில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்… என்ற அனைத்தையும் படித்து பார்த்தவள் புன்னகையுடன் அதை தன் மாணவர்களிடமும் சொல்ல அனைவரும் ஆர்வமாகினர்.
“பல நாடுகளோட போட்டி போட முன்னாடி நாம இங்கே நிறைய பேரோட போட்டி போட்டு ஜெயிக்கனும் முடியுமா?…”
“ஜெயிக்கனும்னா முயற்சி பண்ணி தானே ஆகனும் எனக்கு என் பிள்ளைகள் மேல நம்பிக்கை இருக்கு என்ன ஸ்டுடன்ஸ் பண்ணலாமா? ரெடியா?….” என கேட்க அனைவரும் ஒரு சேர சரி என சொல்ல புன்னகைத்தவள் அன்றில் இருந்து போட்டியில் கலந்துகொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டாள் “ஸ்டூடன்ஸ் நான் கற்றுக்கொடுத்ததை ப்ராக்டிஸ் பண்ணுங்க போட்டி விதிகள் மாறும் போது என்னைக்குமே டென்ஷன் ஆகாம சூழ்நிலையை கையாளனும் அதுதான் முக்கியம் புரிஞ்சதா?…” என எப்போதும் போல் பயிற்சி கொடுத்தாள்.
அன்று மும்பையில் குழு தேர்வு நடக்க இருந்தது பத்து பேர் கொண்ட தனது குழுவுடன் மும்பை நோக்கி சென்றாள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து போட்டிக்கு வந்திருந்தார்கள் அதில் மும்பை டீம் மாஸ்டர் பார்வதியை பார்த்து விட்டு “ஸ்டேட் லெவல் செலக்ட் ஆகிட்டா போட்டி இன்டர்நேஷனல் லெவல்ல நடக்க போறது கூட தெரியாம வந்திட்டாங்க நாங்களும் ஒரு டீம்ன்னு…” என அவள் காதுபட பேசி சென்றவனை பார்த்து நக்கலாக சிரித்தவள் தன் முகத்தை மறைத்து இருந்த மாஸ்க்யை சரி செய்தாள்.
முதல் நாள் போட்டியிட்ட பத்து குழுக்களில் இவர்களின் குழுவும் அடங்கியது முதல் சுற்று இனிதாக இடம்பெற்றது அவர்களின் விருப்பப்படி முதல் பாடல் அவர்களே தெரிவு செய்து ஆடலாம் என்பதால் பெடிகூத்து என்ற பாரம்பரிய நடனத்தை தெரிவு செய்து அதற்கு ஏற்றது போல் ஆடிய தன் மாணவர்களின் மீது கவனத்தை வைத்திருந்தவள் அதே நேரம் பல மாணவர்களின் திறமையை பார்த்து ரசித்து பாராட்ட மறக்கவில்லை பெரியளவில் நடந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியை மொத்த இந்தியநாட்டு மக்களும் தொலைக்காட்சி, சோசியல்மீடியா வழியாக பார்த்துக்கொண்டு இருந்தனர் இரண்டு சுற்று நடுவர்கள் தீர்ப்பு என்பதால் அவர்கள் கலந்தாலோசித்து முதல் சுற்றில் ஆறு குழுக்களை தெரிவு செய்தனர் ரிசல்ட் நேரம் ஒவ்வொரு குழுக்களாக அறிவித்தப்படி வர பதட்டத்தில் பார்வதியின் கையை பற்றிக்கொண்டாள் மீரா.
கடைசி குழு யார்? என்ற அறிவித்தலில் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் திக் திக்கென்றது “சலங்கை ஒலி ப்ரொம் தமிழ்நாடு…” என்ற அறிவித்தலில் ஆறாவதாக தாங்கள் வென்று விட்டதை எண்ணி மாணவர்களோடு கலையரசியும் குதித்து கைகளை தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்அடுத்தச்சுற்று அவர்கள் கொடுத்த இசைக்கு பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நடனமாட வேண்டும்.
ஆறு குழுவிற்கும் வெவ்வேறான இசைகள் ஒலித்தது இவர்கள் முறை வந்தது முதலில் குத்து டான்ஸ்க்கு ஏற்ப இசை ஒலிக்க அதற்கேற்ப வேகம் கூட்டி ஆடிக்கொண்டிருக்க திடீரென மிதமான இசை ஒலித்தது ஆடிக்கொண்டு இருந்தபடியே நிமிர்ந்தவர்கள் கை கால்களை காற்றில் அசைத்து மெல்லிய இசைக்கு ஏற்ப ஆட அவர்களின் நடனத்தை கண்டு பிரமிப்பாக புருவம் உயர்த்தி ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டது நடுவர்கள் குழாம்.
இரண்டாவது சுற்றில் மூன்று குழு தேர்வாகியது அதில் இவர்களின் குழுவும் தேர்வானதில் நிம்மதியடைந்தாள் பார்வதி கடைசி சுற்று நாளை என்பதால் சிறிது ஒய்வுக்கு பின்னர் மற்ற இரு குழுவும் நடனப்பயிற்சியை தொடங்கி இருந்தனர் ஆனால் பார்வதி அவர்களை ரெஸ்ட் எடுக்க விட்டிருந்தாள் அந்த நேரத்தில் அவர்களுக்கான உடைகள் அதற்கு ஏற்ப அணிகலன்கள் என அனைத்திற்குமான ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டு இருந்தாள் அத்தோடு நாளை மக்களின் வோர்ட் படி செலக்சன் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்து இருந்தனர்.
மும்பை, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து வந்த மூன்று குழுக்களுக்கும் போட்டி நடக்கவிருந்தது ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை காட்டினார்கள் இரண்டாவதாக இவர்கள் குழு அழைக்கப்பட்டது இரண்டு பெண்களுக்கு மட்டும் இளவரசிகள் போல் உடையணிய வைத்து மற்றவர்களை சாதாரணமாக சிறிய அணிகலன்களுடன் தயார்ப்படுத்தி அனுப்பினர் பின்னணியில் “கண்ணா நீ தூங்கடா…” என பாடல் ஒலிக்க அதற்கு ஏற்றது போல இயல்பான தங்கள் முகபாவனையை காட்டி நிதானமாக நடனத்தை வெளிப்படுத்தி ஆடினர் மூன்று குழுவும் ஆடி முடிந்ததும் உடனே வோர்ட்டிங்கான நேரம் ஆரம்பித்தது மக்களின் ஓட்டு அனைவரையும் பதட்டத்திற்கு உள்ளாக்கி கடைசியில் சலங்கை ஒலி டீம் வெற்றி வாகை சூடியது மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடுகளோடு போட்டி போட தயாராகினர் அவளை கிண்டல் செய்த மாஸ்டரின் முகம் கருத்துப்போனது.
மூன்று மாதம் கழித்து அனைவரும் லண்டன் கிளம்பினார்கள் அங்கும் மூன்று சுற்றுகள் இடம்பெற்றது பதினைந்து நாடுகளில் இருந்து போட்டிக்கு பங்கேற்று இருந்தார்கள் முதல் இரண்டு சுற்றுக்களில் முதலில் அவர் அவர்களுக்குரிய பாரம்பரிய நடனத்தை ஆட வேண்டும் பார்வதி பரதநாட்டியத்தில் சொல்லிக்கொடுத்த பந்தநல்லூர் பாணி, தஞ்சாவூர் பாணி மற்றும் வழுவூர் பாணி என மூன்றையும் கலந்து ஆடியவர்கள் கடைசியாக சிவ தாண்டவ நடனத்தை ஆட அவர்களின் நயனங்கள், இசை, நடனத்தின் வேகம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த பார்வையாளர்களையே மெய்மறக்க வைத்து இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாவது சுற்றில் நாட்டுப்புற நடனங்களை தேர்வு செய்து கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என இசைக்கு ஏற்ப ஆடி கடைசி சுற்றுக்கும் தேர்வாகினர் அங்கு வந்து இருந்தவர்களின் நடனம், இசைக்கு முற்று முழுவதும் வேறுபட்ட இவர்களின் நடனம் அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்திருந்தது கடைசி சுற்றில் மூன்று நாடுகள் போட்டியிட காத்திருந்தது இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஆரம்பமானது அரங்கத்தை சுற்றிக்கூடிய கூட்டத்தை கண்டு பயந்து போனார்கள் பிள்ளைகள் அவர்களின் பயத்தை கண்டு அருகில் அழைத்து பேசினாள் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் மேடையேறினர்.
குமரிகளுக்கு அழகு சேர்க்கும் பாவடை தாவணியை அணிந்து இருந்தார்கள் “பிச்சிப்பூ மல காடாம் காடாம்…நா பித்தம் கண்ட…பூ காடாம் காடாம்…” என பாடல் தொடங்க அரங்கமே அமைதியாகியது அதை தொடர்ந்து “நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு…” என்ற பாடலுக்கு ஏற்ப பறையடித்து பத்து பேரும் நடனம் ஆட இசையின் தாளமும் அவர்களின் நடனத்தின் வேகமும் அங்கிருந்த வெள்ளையர்களை இசைக்கு ஏற்ப ஆட வைத்திருந்தது தங்கள் நடனத்தை ரசித்து ஆடுபவர்களை காணும் போது மீரா என்ன ஒட்டுமொத்த இந்தியர்களையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது பிள்ளைகளின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் அவர்களின் காதில் தங்கள் குருவின் வார்த்தைகள் எதிரொலித்தது.
“நம்ம நாட்டோட கலைகளை அடுத்த சந்ததிக்கு கடத்தனும்னா அதுக்கு இந்த இடம் ரொம்ப முக்கியம் உங்களை லட்சக்கணக்கான மக்கள் பார்த்திட்டு இருக்காங்க உங்களோட முயற்சிக்கு வர அந்த சத்தம் தான் நமக்கான வெற்றி நாளைக்கு உங்களை முன்மாதிரியா வைத்து பலர் வளரும் போது கூடவே நம்ம கலைகளும் வளரும் சலங்கை ஒலி சத்தம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கனும் அதுதான் என் ஆசை ஏன் என் சபதமும் கூட என்னால் முடியாததை என் மாணவர்களாக நீங்க நடத்திக்காட்டனும் போங்க…” என்றவளின் வார்த்தைக்கு பிறகு தான் மேடை ஏறினார்கள்.
ஆடி முடிந்தும் அரங்கத்தில் எதிரொலித்த இந்தியா… இந்தியா… என்ற குரலில் நடுவர்களும் கூட “எஸ் தே வின்னர்ஸ் டீம் இந்தியா…” என அனெளன்ஸ் பண்ண பட்டாசு வெடி சத்தம் அரங்கத்தை எதிரொலித்தது மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் குருவானவளை ஓடி வந்து கட்டிக்கொண்டனர் கேமரா அனைத்தும் அவர்கள் பக்கம் திரும்பியதில் பார்த்துக்கொண்டு இருந்த அத்தனை பேரும் அதிர்ந்தனர் காரணம் பார்வதிதேவி என்ற நர்த்தகியினால் நடக்க முடியாது அவளை டீவியில் பார்த்துக்கொண்டு இருந்த மும்பை டீம் உடைய மாஸ்டரின் உதடுகள் “க்ளாசிகல் குயின் தேவி…” என முனு முனுத்தது இன்டர்நேஷனல் அளவில் நடக்க இருந்த ஒரு டான்ஸ் போட்டியில் தெரிவாகி ஏர்போர்ட் செல்லும் வழியில் விபத்து ஏற்ப்பட்டு அதில் தனது இடது காலை இழந்தவள் தன்னால் முடியாமல் போனதை தன்னை நம்பி நடனம் பயின்ற மாணவர்கள் மூலம் நிகழ்த்தி காட்ட வேண்டும் என்று நர்த்தகி சபதமேற்று இன்று அகிலம் எங்கும் தன் நாட்டின் பாரம்பரியம் கொடி கட்டி பறக்க வித்திட்டு இருந்தாள் இந்திய நாட்டின் தமிழ் மகள் பார்வதிதேவி.
Superah irunthuchu story!
நன்றிமா♥️♥️
அருமை.. 😊😊
அருள் அக்கா😱 ரொம்ப நன்றிக்கா வாசித்து கமெண்ட் பண்ணதுக்கு
வாவ்…வெரி, வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங் & இன்ஸ்பெயரிங் ஸ்டோரி.
விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி..!
Superb story