அரசன் என்ற அழைப்பில் அருணாச்சலத்தின் விழிகள் ஆவலைக் காட்ட சக்தியின் குரலோ கோபத்தைக் காட்டியது.
“யார் அது அரசன்? என்னோட பேர் சக்தி…அது மட்டுமில்லாம நான் எங்க என்ன பண்ணாலும் உங்களுக்கு என்ன வந்தது?” என அமிழ்தாவிடம் எகிறினான்.
அவனுடைய கோபத்தில் அவள் திகைத்து நிற்க அமிழ்தாவின் பி.ஏ பிரதாப் வந்து “மேடம் ஹாஸ்பிட்டல் போறதுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ் பண்ணியாச்சு. இவங்களும் வந்தாங்கன்னா அனுப்பிரலாம் நமக்கும் டியூட்டிக்கு வேற டைம் ஆச்சு மேம்” எனக்கூறவே தலையசைப்பில் அனுமதி அளித்தவள் இறுக்கமான முகத்தோடு காரில் ஏறி அமர்ந்தாள்.
எதிர்ப்புறம் மருத்துவமனைக்குச் செல்வதற்காக அங்கிருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்த சக்தியையும் அருணாச்சலத்தையும் இவளுடைய பார்வை தொடர, அருணாச்சலத்தின் பார்வையும் சக்தி மேலும் அமிழ்தா மேலுமே இருந்தது. இவ்விருவரின் பார்வைக்கு இலக்கானவனோ இலக்கற்று வெளியே வெறித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய கண்களுக்குத் தென்படாமல் இம்மூவரையும் குழப்பத்தோடு பார்த்தபடி அருவமாக நின்றிருந்தான் அருளாளன்…
கார் அலுவலகத்தை எட்ட, சக்தியின் நினைவை மனதின் ஓரத்திற்கு அனுப்பிவிட்டு இன்முகத்துடன் பொறுப்பேற்றவள், ஆட்சியர்களின் எதிர்பாரா மரணங்களால் நின்றுபோய்க்கிடந்த பணிகளைத் தூசுதட்டி துரித கதியில் முடிக்க வழிவகை செய்தாள்.
பணியில் அவள் காட்டிய வேகமும் சிக்கல்களுக்கு அவள் கொடுத்த முடிவுகளும் பிரதாப்பை வியப்பில் ஆழ்த்த, கண்களில் பிரமிப்புடன் நின்றவரைப் பார்த்தவள் என்னவென கண்ணாலேயே வினவினாள்.
ஒரு சிறு அசட்டுப் புன்னகையுடன் தலையசைத்தவர் “அப்படியே அருள் சாரைப் பார்த்தமாதிரியே இருக்கு மேடம்” என்றார்.
இவள் அருள் யாரெனப் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள்.
“முதன்முதல்ல இந்த ஊரில் பலியான கலெக்டர் மேடம்” வார்த்தைகள் வருத்தத்தோடு வந்தன.
“ஓ…கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம குடிச்சுட்டு வண்டிய பள்ளத்தாக்குல விட்டுப் போய்ச் சேர்ந்த மகாத்மாவா?” அவளுடைய குரல் கோபத்திற்கும் கிண்டலுக்கும் நடுவில் இருந்தது.
பிரதாப்பின் அமைதி அவர் இதனை எதிர்பார்க்கவில்லை என்பதைப் பறைசாற்றியது.
அவர் ஒன்றும் பேசாமல் அமைதிகாக்க அவளே தொடர்ந்தாள்.
“என்ன இறந்துபோனவரைப் பத்தி இப்படி பேசுறேனேன்னு பாக்குறீங்களா? அன்னைக்கு அவர் மட்டும் கொஞ்சம் பொறுப்போட இருந்திருந்தா இன்னைக்கு இப்படி அவர் பெயரை வச்சு வதந்திகளைக் கிளப்பிவிட்டு இவ்வளவு குழப்பம் இந்த ஊரில் நடந்துருக்காது…
மக்களும் அதிகாரிகள் இல்லாம இவ்வளவு கஷ்டங்களை அனுபவிச்சுருக்கமாட்டாங்க” கொதித்தவள் அவளாகவே தணிவடைந்து “சரி அதை விடுங்க. அந்த அருணாச்சலத்தையும் சக்தியையும் எந்த ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க” எனப் பேச்சை மாற்றினாள்.
மருத்துவமனையின் பெயரைச் சொன்ன பிரதாப்பின் மனதிலோ, “ எங்க அருள் சாருக்கா பொறுப்பு இல்ல” என கசப்பும் விரக்தியும் இணைந்து படர்ந்தது.
அமிழ்தாவின் மனமும் வேறொன்றை நினைத்து கசப்பில் ஆழ அதிலிருந்து மீளும் விதமாய்த் தலையைக் குலுக்கியவளின் கண்களில் ஏழெனக் காட்டிய கடிகாரம் பட்டது.
‘ இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா’ என வியந்தவளால் பிரதாப்பின் பிரமிப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அவரை நோக்கி சிறுபுன்னகை புரிந்தவள் “கிளம்பலாம் சார்” என்றாள்.
அவர் முன்சென்று கார்க்கதவைத் திறக்க “இல்ல சார் நான் பர்சனலா வேறொரு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. நீங்க கிளம்புங்க.நான் வர்றேன்” என ஒரு ஆட்டோவைப் பிடித்துச் சென்றவளைப் பார்க்க மீண்டும் அருளாளனின் நினைவு வந்து போனது பிரதாப்பிற்கு.
மருத்துவமனையில் கர்ம சிரத்தையாக சாத்துக்குடிப்பழத்தைச் சாறெடுத்துக் கொண்டிருந்த அருணாச்சலத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தன பத்மினியின் கண்கள்.
கூடவே கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சக்தியைக் கூர்மையுடனும்.
“என்னங்க… ” பத்மினி ஏதோ சொல்லவர,
‘டக்…டக்…’ அறையின் கதவு தட்டப்பட்டது.
(தொடரும்….)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sissy next epi eppo post pannuvinga
Interesting