அடுமனை அருகே
நிச்சயம் உணவிருக்கும்
ஈன்ற குழந்தைக்கு
உணவைத் தேடி
ஓடித் தான் புறப்பட்டேன்
கண்டேன் கவலையுற்றேன்
ஒரு சிப்பம் அடங்கிய
ரொட்டித்துண்டுகள்
இருக்கவே செய்தன …
கூடவே ,
பிறந்த சில மணித்துளிகளான
குழந்தையும் தான் .
யாரோ யாருடனோ கூடலில்
பெற்ற குழந்தை தான்
அவ்வழி சென்றவர்கள் எல்லோரும்
‘எந்த நாய் ஜென்மங்கள் இப்படி
பெற்றெடுத்து குப்பையில்
போட்டனர்களோ ‘ வென
சொல்லாமல் இல்லை
சிறிது நாழிகையில்
இறந்த சிசுவை
அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்
கண்ணில் கண்ணீரோடு
சிப்பத்தை கவ்வியபடி நான்
ஈன்ற என் ஐந்து செல்வத்தின்
முன் போட்டேன்
சண்டை போட்டாலும் பகிர்ந்தே
உண்டு முடித்தனர்
எனக்கும் உணவு இருக்கத்தான் செய்தன
ஏதோவொன்று சாப்பிட தடுத்தது
மனித குழந்தை தான் – அது ஒன்றும்
நான் பெற்று எடுத்த நாய்குட்டிகள் அல்ல ..
இருப்பினும் ஏனோ …
ஏதோ… ரொட்டித்துண்டினை
சாப்பிட தடுத்தது .
— பிரவீணா தங்கராஜ் .
👌👌👏👏👏