Skip to content
Home » MM 8

MM 8

எனக்கு ட்ராவல் பண்ணுறது ரொம்ப பிடிக்கும்… அதுலயும் லாங் ட்ராவல்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்… யாருனே தெரியாத புது மனுசங்களைச் சந்திச்சு, நாளைக்கு என்ன சமைக்கணும்ங்கிற டென்சன், ஐயோ காலேஜ்ல குடுத்த அசைன்மெண்ட் முடிக்கலையேங்கிற கவலை, ஆபீஸ் மீட்டிங்கில கேள்வி கேப்பாங்களேங்கிற கடுப்புனு எதுவும் இல்லாம ரொம்ப ஜாலியா சந்தோசமா நாட்களைக் கழிக்குறதுல இருக்குற த்ரில் வேற எதுலயும் இருக்காது… ஆனா எல்லா குடும்பத்துலயும் ஒரு பிரச்சனை உண்டு… யங்ஸ்டர்ஸ் ஜாலியா போடுற ஃபேமிலி டூர் ப்ரோகிராம் எல்லாத்தையும் எல்டர்ஸ் கோவில் டூரா மாத்திருவாங்க… இது தமிழ்க்குடும்பங்களுக்கே உரித்தான டூர் ப்ராப்ளம்… வேற வழியில்ல… கோவில் டூர் போயிட்டு வர்ற வழில கொஞ்சூண்டு நேரம் நமக்குப் பிடிச்ச இடத்துல ஸ்பெண்ட் பண்ணி மனசைத் தேத்திக்க வேண்டியது தான்.

                                                                         -மேகா

முகிலன் மன அமைதிக்காக பாலி ஹவுசுக்குப் போனவன் வெகு நேரம் அங்கேயே செலவிட்டதால் வீட்டுக்குத் திரும்பியபோது வாயிலில் நின்ற மேகவர்ஷிணியைப் பார்த்ததும் அதிர்ந்தே போனான்.

தந்தை அடுத்து என்ன சொல்வாரோ என்று முகிலன் தவிப்பில் ஆழ்ந்த நேரத்தில் மேகவர்ஷிணி அவனிடம் விளையாட்டாகப் பேச பாரிவேந்தனின் கோபமோ எப்போது வெடிக்கலாமெனக் காத்திருந்தது.

முகிலனுக்கு என்ன செய்வதென புரியாத நிலை. திருதிருவென விழித்தவனைப் பார்க்க ரஞ்சனாவுக்குப் பரிதாபமாக இருந்தது.

மேகவர்ஷிணி அவனை நெருங்க அவனோ இரண்டடிகள் விலகி நின்றான்.

“அங்கிளே என்னை மருமகள்னு சொல்லிட்டார் முகில்… நீ ஏன் இன்னும் தயங்குற?” என்று அவள் அங்கலாய்க்க

“வாயைக் கொஞ்சம் மூடித் தொலைடி… நீ பேசுனதுக்குலாம் சேர்த்து வச்சு அவர் எனக்குப் பேய் ஓட்டுவார்” என்று மனதுக்குள் முகிலன் அவளைக் கழுவி ஊற்றினான்.

பாரிவேந்தன் கோபத்தை அடக்கி வலுக்கட்டாயப்புன்னகையோடு “அது ஒன்னுமில்லம்மா… துரை இப்பலாம் செலிப்ரிட்டி ரேஞ்சுக்கு ரொம்ப சீன் போடுறாரு… அதை உன் கிட்டவும் மெயிண்டெயின் பண்ணுறாரு… வேற ஒன்னுமில்ல” என்க

“ஐயோ அங்கிள்! முகில் ரொம்ப ஜோவியல்… நீங்க அவனோட இன்ஸ்டா கமெண்ட் எல்லாம் பாக்கணும்… அப்ப தான் அவன் எவ்ளோ ஜாலியான டைப்னு உங்களுக்குத் தெரியும்… எனக்கு அவன் செம ஃபன்னா ரிப்ளை பண்ணுன ஸ்க்ரீன்ஷாட்டை நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்… நீங்க பாக்குறிங்களா?” என்று அவள் மொபைலில் தேட ஆரம்பிக்கவும் முகிலனின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலானது.

“இவருக்குச் சலங்கை கட்டி விடுறதுக்குனு சென்னைல இருந்து ஊட்டிக்கு வந்திருக்கு இந்தக் குட்டி சாத்தான்” என்று மனதுக்குள் பற்களைக் கடித்துக்கொண்டான், சொன்னவளைக் கடிக்க முடியாத கோபம் வேறு!

“ஐயோ அதுல்லாம் பொறுமையா பாத்துக்கலாம்மா… நீ இங்க தானே இருக்கப்போற” என்று பாரிவேந்தன் சொல்லவும் மேகவர்ஷிணியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, முகிலனும் ரஞ்சனாவும் பியூஸ் போன பல்புகளாக ‘ஙே’ என்று விழித்தார்கள்.

“நீங்க நிஜமாவா சொல்லுறிங்க அங்கிள்?” கண்களில் ஆசை மின்ன கேட்டவள் பாரிவேந்தன் பதில் சொல்லும் முன்னர் “ப்பா! இன்னும் ஏன் கேட் கிட்டவே நிக்குற? அங்கிள் என்னை வீட்டுக்குள்ள கூப்பிடுறார்பா… நீயும் வா” என்று நுழைவுவாயிலைப் பார்த்து கத்தினாள்.

“அப்பாவா?” ரஞ்சனாவும் முகிலனும் ஒரே நேரத்தில் அதிர்ந்து வாயைப் பிளக்க பாரிவேந்தனோ காதில் புகை வராத குறையாக கடுப்போடு வீட்டின் நுழைவுவாயில் கேட்டைப் பார்த்தார்.

கடுகடுவென இருந்த அவரது முகம் மோகனரங்கம் தர்மசங்கடத்தோடு உள்ளே வர வர மென்மைக்குத் தாவியது. கண்களைச் சுருக்கி தனது ஞாபக அடுக்குகளில் சேமித்து வைக்கப்பட்ட முகங்களை அவசரமாக ஸ்கேன் செய்தவர் அதிலொருவரின் முகத்தோடு மோகனரங்கத்தின் முகம் பொருந்தியதும் “டேய் மோகன்” என்று உற்சாகமாகக் கூவியபடி அவரை நோக்கி சென்றார்.

மோகனரங்கத்துக்கோ திடுமென அவர் அவ்வாறு அழைத்தபடி தன்னை நோக்கி வரவும் திகைப்பு! மூக்குக்கண்ணாடியைச் சரி செய்து யாரென பார்த்துக்கொண்டே “உங்களுக்கு என்னைத் தெரியுமா சார்?” என்று ஐயமாகக் கேட்டார்.

பாரிவேந்தன் அவரது தோளில் பட்டென அடித்தவர் “நான் உன்னை எவ்ளோ அன்பா மோகன்னு கூப்பிடுறேன்… நீ என்னடா சார் மோர்னு கூப்பிடுற? ஓ! என்னைச் சார்னு கூப்பிட்டு உன் வயசைக் குறைச்சுக் காட்டுறியாக்கும்? டேய் உனக்கும் எனக்கும் ஆறு மாசம் தான் டிபரன்ஸ்… மறந்துடாத” என்று போலிக்கோபத்தோடு சொல்லவும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்.

பூரிப்போடு “பாரி” என்றபடி அவரை அணைத்துக்கொண்டார்.

சந்தோசத்தில் அவருக்குப் பேச்சு வரவில்லை.

எத்தனை ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்திருக்கிறார்கள்! கல்லூரிக்கால தோழர்கள் இருவரும்! பின்னர் வேலை, திருமணம், குழந்தை, குடும்பமென வெவ்வேறு திக்கில் வாழ்க்கையின் கையில் சிக்கிய பொம்மைகளாய் ஓடியவர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்திருக்கிறார்கள்!

“என்னால நம்பவே முடியல பாரி… நீ அப்பிடியே இருக்க இப்பவும்… நரை மட்டும் லைட்டா வந்திருக்கு” என்றார் மோகனரங்கம்.

“நீயும் தான்டா… ஒரு நிமிசம் அந்தப் பொண்ணு உன்னை அப்பானு கூப்பிட்டுச்சு… அப்ப…”

“அவ என் இளையபொண்ணு மேகா… மேகவர்ஷிணி” என்ற மோகனரங்கத்தின் முகம் அடுத்த நொடி இருளடைந்தது.

நண்பருக்கு ஏதோ பிரச்சனை என ஊகித்த பாரிவேந்தன் “சரி விடு! எல்லாத்தையும் இங்க வச்சே பேசணுமா என்ன? வா உள்ள போகலாம்… இது என் வீடு தான்… வாங்கி ரெண்டு வருசம் ஆகுது… அதுக்கு முன்னாடி இதே வீட்டுல தான் வாடகைக்கு இருந்தோம்” என்று பேசியபடி அவரை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றார்.

மற்ற மூவருக்கும் அங்கே நடந்த எதுவும் புரியவில்லை. அவர்களை நெருங்கியதும் “நானும் மோகனும் காலேஜ்மேட்ஸ்… ரொம்ப வருசம் கழிச்சு மறுபடி பாத்திருக்கோம்… மத்த எல்லாத்தையும் வீட்டுக்குள்ள போனதும் சொல்லுறேன்… மேகா வாடாம்மா” என்று சொல்லி அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் போனதும் “மோகனும் மேகாவும் களைப்பா இருப்பாங்க ரஞ்சி… வா நம்ம காபி ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்து வருவோம்” என்று மனைவியை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் அவர் போய்விட ஹால் சோபாவில் சுவாதீனமாக அமர்ந்த மேகவர்ஷிணியையும் மோகனரங்கத்தையும் எதுவும் புரியாமல் பார்த்தான் முகிலன்.

சில நிமிடங்களில் சுடச்சுட தேநீர் நிரம்பிய கெட்டில், கப் சாஷர், கண்ணாடி கிண்ணத்தில் வறுத்த முந்திரி, பிஸ்கட்டுகள் இவையெல்லாம் அடங்கிய ட்ரேவோடு வந்தார்கள் பாரிவேந்தனும் ரஞ்சனாவும்.

“டீ எடுத்துக்கோங்கண்ணா”

இருவருக்கும் தேநீரை கப்பில் ஊற்றி கொடுத்தார் ரஞ்சனா. விருந்துபச்சாரம் அழகாய் அரங்கேற தன்னை ஆர்வமாகப் பார்த்த மேகாவை அச்சத்தோடு பார்த்து வைத்தான் முகிலன்.

“யாரோ ஒருத்தியா இருந்தப்பவே அவ்ளோ உரிமையா பேசுனா… இப்ப ரெண்டு பேரோட அப்பாக்களும் ஃப்ரெண்ட்ஸ் வேற… என்ன பண்ண காத்திருக்காளோ?” என்று கதி கலங்கியபடி நின்றான் அவன்.

தேநீரைக் குடித்த மோகனரங்கத்திடம் அவரது குடும்பத்தினரைப் பற்றி பாரிவேந்தன் வினவ தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

பின்னர் “அம்மாவும் அக்காவும் நாங்க வைஷ்ணோதேவி தரிசனத்துக்குப் போறப்ப டெரரிஸ்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க அங்கிள்” என்றாள் மேகா.

தன்னைச் சாதாரணமாகக் காட்டிக்கொள்ள அவள் போராடுவதை ரஞ்சனா புரிந்துகொண்டார். மோகனரங்கத்தின் தோளை அழுத்திய பாரிவேந்தனின் முகத்தில் சோகம்,

கண்ணாடியைக் கழற்றி கண்ணை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டார் மோகனரங்கம்.

“நானும் மேகாவும் பொழைச்சது பெரிய விசயம் பாரி… என் பொண்ணும் நானும் மனசளவுல நொறுங்கி போனப்ப எங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்ல… ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருந்தோம்… கூடவே இன்னொரு ஆளோட வார்த்தைகள் எங்களுக்கு வாழ்க்கையில ரெண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்குறதுக்கான தைரியத்தைக் குடுத்துச்சுடா… அது வேற யாருமில்ல… உன் மகன் முகில்”

சொன்னவரின் குரலில் நன்றியுணர்ச்சி கொட்டிக் கிடந்தது. பாரிவேந்தனால் அதை நம்ப முடியவில்லை. மகனையும் நண்பரையும் மாறி மாறி பார்த்தார் அவர்.

“உன் மகன் முகில் இல்லனா என் பொண்ணு மேகா இன்னைக்கு உயிரோட இருந்திருக்க மாட்டா… செனாப் ஆத்துல விழுந்து சூசைட் பண்ணிக்க இருந்தவ முகிலோட வார்த்தை குடுத்த தைரியத்தால தான் அந்த எண்ணத்துல இருந்து மீண்டு வந்து என்னைச் சோகத்துல விழுந்துடாம மீட்டெடுத்தா… நானும் என் மகளும் முகிலுக்கு நன்றிக்கடன் பட்டுருக்கோம் மோகன்… எனக்கும் என் பொண்ணுக்கும் இது ரெண்டாவது ஜென்மம் மாதிரி… இந்தப் பிறவில என் பொண்ணு என்ன ஆசைப்பட்டாலும் அதைச் செஞ்சு குடுக்க நான் தயாரா இருக்கேன்… அவ ஆசைப்பட்ட வாழ்க்கை முதற்கொண்டு”

பாரிவேந்தனுக்கு மேகவர்ஷிணி – மோகனரங்கத்தின் வருகைக்கான காரணம் இப்போது பிடிபட்டது.

மேகவர்ஷிணி தான் முகிலனிடம் காதலைச் சொன்ன பெண் என்று தெரிந்ததும் மகனையும் அவளையும் மாறி மாறி பார்த்தார்.

மேகவர்ஷிணி மோகனரங்கத்தைச் சமாதானம் செய்வதைக் கவனித்தார். சற்று முன்னர் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றிய அவளது செய்கைக்கும் இப்போதைய முதிர்ச்சியான அணுகுமுறைக்கும் உள்ள வித்தியாசத்தைச் சீர்தூக்கிப் பார்க்கத் துவங்கியது அவரது மனம்.

அதே நேரம் மண்ணைக் கிளறுகிறான், ஊர் சுற்றுகிறான் என்று அவரால் அலட்சியம் செய்யப்பட்ட மைந்தன் இருவரின் வாழ்க்கை நல்ல முறையில் மாற மறைமுக உந்துசக்தியாக இருந்திருக்கிறான் என்ற உண்மை சமீபத்தில் அவனால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்தது.

அதே நேரம் மகனின் விளையாட்டுப்போக்கு தற்போது நின்றிருப்பது தற்காலிகம் என்பதுவும் அவருக்குப் புரிந்தது. அவனது இந்த விளையாட்டுப்போக்கு வேறு எதுவும் பெரிய பிரச்சனையில் அவனைச் சிக்க வைக்கும் முன்னர் திருமணம் செய்துவைத்துவிட்டால் பொறுப்பான இளைஞனாக மாறிவிடுவான் என்ற எண்ணத்தில்தான் குன்னூரிலிருந்த நண்பரின் மகளை அவனுக்காகப் பேசினார்.

ஆனால் முகிலனிடம் மேகவர்ஷிணி காதலைச் சொன்ன வீடியோ வைரல் ஆனதும் அதை வைத்து புதிய பிரச்சனை எழுந்து பேசி முடித்த பெண் முகிலனை மணக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள்.

மனம் சோர்வுற்ற நேரத்தில் கடவுளாகப் பார்த்து தான் நண்பன் மோகனரங்கத்தையும் அவளது மகளையும் கண்ணில் காட்டியிருக்கிறார் என்று கருதினார் பாரிவேந்தன்.

அவர் மனதுக்கு மேகவர்ஷிணியை மருமகளாக்குவதில் விருப்பமே! ஆனால் மனைவி மகனின் மனம் என்னவென அறிந்துகொள்ளாமல் முடிவெடுக்க விரும்பவில்லை இம்முறை.

“இங்க பாரு மோகன், இப்ப மேகாவுக்குச் செமஸ்டர் ஹாலிடே தானே? நீங்க ரெண்டு பேரும் ஒரு வாரம் நம்ம வீட்டுல தங்கிட்டுத் தான் போகணும்… முடியாது அது இதுனு சொன்னேன்னா எனக்குச் செம கோவம் வரும், பாத்துக்க”

அன்பாய் மிரட்டி இருவருக்கும் தங்குவதற்கான அறையைக் காட்டு என ரஞ்சனாவிடம் கண் காட்டினார். ரஞ்சனா அவர்களோடு நகர்ந்ததும் மகனை தோட்டத்திற்குத் தன்னோடு வரும்படி பணித்தார்.

முகிலனும் பூம்பூம் மாடு போல தலையாட்டியபடி தந்தையோடு சென்றான்.

அவன் வளர்த்த மலர்ச்செடிகளை முதல் முறை பார்ப்பது போல மெச்சுதலாகப் பார்த்தவர்

“மேகாவ பத்தி நீ என்ன நினைக்குற?” என்று ஆரம்பித்தபோதே முகிலனுக்குள் அபாயசங்கு ‘ஹை டெசிபலில்’ ஒலித்தது.

“கவனமா இரு முகிலு… உங்கப்பா அன்பா பேசுனாலே பின்னாடி ஏதோ வம்படியா பண்ணப்போறார்னு அர்த்தம்டா” என்று மனசாட்சி அவனை எச்சரித்தது.

மேகவர்ஷிணியால் மனதில் உண்டான கடுப்பை அப்படியே கொட்டினால் ஏட்டிக்குப் போட்டியாக தந்தை புகழ்வார். அதையே மாற்றி செய்தால்?

குறுக்கு புத்தி வேலை செய்யவும் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தவன் “ரொம்ப புத்திசாலியான பொண்ணுப்பா… ஜாலியான டைப்பும் கூட… மனசுல தோணுனதை தோணுன நிமிசத்துலயே கேக்குற தைரியம் இருக்கு… குழந்தை மாதிரிப்பா அவ” என்றான் அவன்.

தான் நல்லவிதமாகச் சொன்னால் தந்தைக்கு அவளைப் பிடிக்காமல் போகுமென அவன் ஒரு கணக்கு போட பாரிவேந்தனின் மனமோ வேறுவிதமாகக் கணக்கு போட்டது.

“வாழ்க்கையிலயே முதல் தடவை உன் ஒபீனியனும் என் ஒபீனியனும் ஒன்னு போல இருக்குடா முகில்… எனக்கும் மேகாவ பாத்ததும் அப்பிடி தான் தோணுச்சு… பாரேன் இந்தச் சின்னவயசுல மோகனுக்கே தைரியம் சொல்லுறா அவ… உன்னைத் தேடி வந்ததா சொன்னதும் குழந்தைத்தனமா தெரிஞ்சவ மோகன் கலங்குனதும் அவனுக்கு ஆறுதல் சொன்னப்ப தாய்மையோட ரூபமா தெரிஞ்சா… கிட்டத்தட்ட ரஞ்சனா மாதிரி”

இப்போது எதற்காக அன்னையை இழுக்கிறார் இவர் என அவன் யோசிக்கும்போதே “உனக்காக நான் என் ஃப்ரெண்ட் கிட்ட பேசுன அலையன்ஸ் முறிஞ்சது கூட நல்லதுனு தோணுது முகில்… கடவுள் உனக்காக படைச்சது மேகாவை தான்… அவரோட கணக்குக்கு முன்னாடி நம்ம போடுற கணக்கு எல்லாம் புஷ்வாணம் ஆகிடும்னு அனுபவப்பூர்வமா உணர்ந்துட்டேன் முகில்… உனக்கும் மேகாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்குறேன்டா… நீ என்ன சொல்லுற?” என அங்கே சுற்றி இங்கே சுற்றி முகிலனின் தலையில் இல்லையில்லை அவனது சுதந்திரமான ‘பேச்சிலர்’ வாழ்க்கையில் கை வைத்தார் பாரிவேந்தன்.

இதற்கு மேல் அமைதி காத்தால் அடுத்த முகூர்த்தத்தில் அவள் கழுத்தில் தாலி கட்டு என்று சொன்னாலும் சொல்வார் எனச் சுதாரித்தவன் “எனக்கு அவளைப் பிடிக்குதுப்பா… ஆனா கல்யாணம் எல்லாம் வேண்டாம்” என்றான் சற்றும் தாமதிக்காமல்.

இவ்வளவு நேரம் செம்பருத்தியாய் மலர்ந்திருந்த பாரிவேந்தனின் வதனம் குண்டூர் மிளகாயாய் சிவந்தது.

“துரைக்கு இப்ப கல்யாணம் வேண்டாமா? இல்ல மேகா கூட கல்யாணம் வேண்டாமா?”

“இன்னும் ஃபைவ் இயர்சுக்கு எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா… உலக அழகியையே நீங்க கொண்டு வந்து நிறுத்துனாலும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”

நெஞ்சை நிமிர்த்தி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தந்தையை நேருக்கு நேர் பார்த்து திக்காமல் திணறாமல் தன் மனதிலுள்ள எண்ணத்தைச் சொல்லி முடித்தான் முகிலன்.

21 thoughts on “MM 8”

  1. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 8)

    ஹ..ஹ..ஹ…! ஒரு சின்னப் பொண்ணை பார்த்து இந்தளவுக்கு பயப்படறான் அய்யோ பாவம் முகில்..!

    நினைச்சது ஒண்ணு….
    நடந்தது ஒண்ணு…. அதனால்
    முழிக்குது அம்மாக்கண்ணு..!
    கடைசியில திரும்பவும் பல்பு வாங்கிட்டானா….? மே கா விஷயத்துல மட்டும் முகில் போடுற எல்லா கணக்கும் தப்பாவே போகுதே…!!!
    அது என்ன ஃபைவ் இயர்ஸ் கணக்கு…? முகிலா, அதுக்கு மட்டும் கொஞ்சம் பதில் சொல்லிட்டு போயேன் ப்ளீஜ்ஜூ !
    😁😁😁
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    உனக்கு உலக அழகி யெல்லாம் கிடையாது, உள்ளூர் அழகி மேகா தான் உனக்கு ஜோடியாம் நித்தி மூலமா உங்கப்பா முடிவு பண்ணிட்டாங்களே😜😜😜😜😜😜

  3. Avatar
    Lalitha Ramakrishnan

    Very interesting. Very soon Mega weds Mukil .
    Mukil why this adamancy? Why you don’t want marriage now ? How great Mega you know ? Very soon you will realize

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *