புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-3

 நீயின்றி வாழ்வேது-3

விஷாகன் தந்தையிருக்கும் கதவை மெதுவாய் சாற்றிவிட்டு, வேகமாய்ப் படிக்கட்டு மறைவிலிருந்த பெண் சங்கீதாவை தேடி விறுவிறுவென வந்தான்.

“அறிவில்லை… தேன் கூட்டு மாதிரி ஒரு குடும்பத்துல வந்து கல்லெறிஞ்சு கெடுத்துட்டு எப்படி இங்க வர முடிந்தது.” என்று எறிந்து விழுந்தான்.

    சங்கீதா பயந்து பின்னால் நகர, அவளுக்கு பின்னாலிருந்து “அப்பா” என்று அபர்ணா குரல் கேட்டது. படியில் விழ பார்த்ததும் அனிச்சையாய் அப்பா அம்மா என்று கூறுவார்களே அப்படி அபர்ணாவுக்கு சட்டென வாயில் வந்த வார்த்தை ‘அப்பா’ என்று புரிந்தது.

சங்கீதாவை திட்டி தீர்த்த விஷாகனுக்குப் ஏழு வயது சிறுமியை கண்டதும் கோபம் அப்படியே மறைந்தது.

குழந்தை முன் திட்டவோ பேசவோ தயங்கினான்.

“இங்க எதுக்கு வந்திங்க” என்றான் குரலை சாந்தப்படுத்தி.

“அவரை அடிச்சி கூட்டிட்டு போனிங்க. ஆட்டோல ஏத்தும் போதே மயக்கத்துல இருந்தார். அதனால பயந்து ஒரெட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்று கைக்குட்டையால் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி பேசினாள் சங்கீதா.

இங்கு வரும் போதே மருத்துவமனை பெயரை ஆட்டோக்காரனிடம் கூறியதை கேட்டு வந்திருக்க வேண்டுமென யூகித்தான்.

“இங்க அம்மா தம்பி இருக்காங்க. உங்களைக் கல்யாணம் பண்ணியதை மட்டும் தான் சொல்லிருக்கேன்.” என்றவன் பார்வை அபர்ணாவை தழுவி மீண்டும் சங்கீதாவை வந்தடைந்தது.

சங்கீதாவோ அதனைப் புரிந்து கொண்டு, “அவருக்கு ஒன்னுமில்லையே” என்று கேட்டாள்.

“சாகலை… சாகற அளவுக்கு அடிக்கலை. பார்த்துப் பதமா தான் அடிச்சேன்.” என்றான் நக்கலாக.

சங்கீதாவோ இன்னமும் அங்கேயே நிற்க சுகிர்தன் வந்திடுவானோ என்று விஷாகன் படிக்கட்டு மற்றும் லிப்டில் கண்பதித்தான்.

“இங்க பாருங்க.. அவர் எங்கம்மாவுக்கும் தாலி கட்டியிருக்கார். அவங்களை விதவையா பார்க்கற தைரியம் எனக்கில்லை. உசுரோட தான் இருக்கார். எழுந்து நடமாட இரண்டு நாளாவது ஆகும். போய் வேலையைப் பாருங்க.” என்று அன்னை வந்து விடுவாரோ என்று அறைக்கதவையும் ஒரு கண் வைத்துக் கூறினான்.

சங்கீதா ஏதோ பேசவர, “தயவுசெய்து போறியா” என்று கும்பிடு போடவும் சங்கீதா குழந்தையை அழைத்துச் சென்றார்.

போகும் போது அறை கதவையையே பார்க்க, அபர்ணா விஷாகனையே ஏறிட்டு அன்னையை இறுக அணைத்து முன் நடந்தாள்.

விஷாகன் இருவரையும் அனுப்பிவிட்டு இருக்கையில் அமர்ந்தாலும் அந்தச் சிறுமி அபர்ணாவின் முகமே அவன் மனதை அலைக்கழித்தது.

தனக்குத் தங்கை இருந்தால் எப்படியிருப்பாளோ அதே முகசாடை. அச்சு வார்த்தது போலத் தந்தையை நகல் எடுத்திருக்க விஷாகன் அந்தச் சிறுமியை பார்த்ததை மனதிலிருந்து அகற்ற முயன்றான்.

தன்னை விடச் சங்கீதா என்ற அந்தப்பெண் ஏழெட்டு வயது பெரியவளாக இருக்க வேண்டும். அப்படியிருக்கப் ஏழு வயதில் அபர்ணா என்றால் தந்தை பலவருடமாக அன்னையை ஏமாற்றியிருக்கின்றார் என்ற வேதனை அவனை வாட்டியது. இத்தனைக்கும் தந்தை உதயகுமார் அன்னையைப் பார்த்துக்கொள்ளும் விதம் கண்டால் ஆத்மார்த்த தம்பதி போலப் பாவிக்கலாம். சுற்றுலா அழைத்துச் செல்வார், கேட்பதை வாங்கித் தருவார். அப்படியிருந்தும் எப்படி முடிந்தது அன்னைக்கு துரோகம் செய்வதற்கு’ என்று வேதனையடைந்தான்.

சுகிர்தன் வரவும் முகத்தைக் கடினப்பட்டு மாற்றினான்.

சுகிர்தன் உணவை வாங்கிக் கொண்டு வந்திருந்தான். சுகன்யாவுக்கு மசாலா தோசையும், விஷாகனுக்கு ஆனியன் ஊத்தப்பமும், சுகிர்தனுக்குப் பூரியும் அந்த நிலையிலும் வாங்கி வந்தான்.

தந்தைக்கு இட்லியை வாங்கி வந்து அன்னையிடம் தர, கையைத் தூக்க கடினப்படவும் சுகன்யாவே ஊட்டிவிட்டார்.

விஷாகனோ இந்தக் காட்சியை வேறு பார்த்து கடுப்பாகி வெளிவந்தான்.

மருத்துவமனையில் சுகன்யா மற்றும் விஷாகன் இருக்க, சுகிர்தனை வீட்டுக்கு செல்ல கூறினான்.

சுகிர்தனும் அன்னையைப் பார்த்து, ஆறுதல் உரைத்து வீட்டுச் சாவி வாங்கிக் கிளம்பினான்.
சுகன்யா உதயகுமாரின் மெத்தையில் தலை வைத்து அமர்ந்த நிலையில் உறங்கினார்.

விஷாகனோ அங்கிருந்த அட்டெண்டர் பெட்டில் நீட்டி நிமிர்ந்தான்.

அடிக்கடி சுகன்யா கண்ணீர் துடைத்து சத்தமில்லாது அழுதுவடிய, விஷாகன் இமை திறக்காமல் கவனித்தான்.

இனி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இரவு முடிந்தது.

அடுத்த நாள் காலை விடியல் வெறுப்பாய் விடிய, மருத்துவமனை கேண்டீனில் இரண்டு காபியை வாங்கி வந்தான். “அப்பாவுக்கு டா?” என்று சுகன்யா கேட்க, “இன்னமும் அந்தாளை எப்படிம்மா தாங்கற?” என்று முகம் சுழித்து நின்றான்.

“நான் சாதாரணப் பொம்பள டா. அதுவும் அந்தக் காலத்து பொம்பளை. சட்டுனு புருஷன் தப்பு செய்துட்டார்னு விவாகரத்து வாங்கிட்டு பெட்டி கட்டுற ஆளும் இல்லை. இந்த வயசுல தோளுக்கு மேல கல்யாண வயசுல இரண்டு பிள்ளைங்க இருக்கறப்ப விவாகரத்து கேட்டுக் கோர்ட் படியேறுற சிங்கப்பெண்ணும் கிடையாது.

ஏதோ சகிச்சிட்டு வாழறவள்” என்றாள்.

“இப்படி இடம் கொடுத்து தான் இந்தாளு இப்படிப் பண்ணி வச்சிருக்கான்.” என்று தந்தையைத் திட்டினான்.

“அவர் ஆசை என்னவோ. என்னைப் பாரு குட்டக்கத்திரிக்காய், மாநிறம், ஏதோ களையான முகம். அவரைப் பாரு உன்னை மாதிரி ஆறடி. உயரத்துக்கு ஏற்ற மாதிரி கச்சிதமான உடம்பு. ஆளும் நல்லநிறம் அவருக்கு என்னென்ன கனவு இருக்குமோ” என்று உருவத்தை வைத்து ஒப்பிட்டு பேசினார் சுகன்யா.

“ஏன் கல்யாணம் பண்ண சம்மதிச்சப்ப இவர் என்ன பால் குடிக்கிற பச்சக்குழந்தையா? விவரமா கொரியர் ஆபிஸ் ஓபன் பண்ணி, நீ தான் வேண்டுமின்னு கட்டியதா அப்பத்தா சொல்லும்.” என்று எரிந்து விழுந்தான்.

சுகன்யா எப்படிச் சொல்வார். வரதட்சனை பணத்தை வாங்கிக் கொண்டு வீடு கட்டியதால் இருக்குமோ என்று.

சுகன்யா சொல்லாமல் முழுங்கினாலும், நேற்றிலிருந்து தந்தை சறுக்கிய காரணத்தை அறிந்திடும் முனைப்பில் கண்டதையும் யோசித்தவனுக்கு இது மண்டையில் ஏறாதா?

“உன் புருஷன் வரதட்சனையா வந்த பணத்துல வீடு கட்டி வாடகைக்கு விட்டு, நானும் சென்னையில வீடு வாங்கிட்டேன்னு சீனை போட்டாரே அதுக்குத் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிருக்கார்.

அது புரியாம கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு புலம்பாதே மா” என்றான். மனதுக்குள் ‘செய்த தப்புக்கு கல்லை தூக்கி தலையில போட்டு சாகடிக்கலை. ஒப்பாரி வடிச்சி, அதுமேல என்ன தப்புனு யோசிக்குதே இந்த அம்மா’ என்று வருந்தினான்.

“இதுக்கு மேல என்ன தண்டனை கொடுக்க வேண்டும். பெத்த பையன் நீ அடிச்சிருக்க. இந்தத் தண்டனை போதாதா. காலத்துக்கும் மரியாதை கிடைக்குமா?” என்று கணவருக்குக் காபி பருக கொடுக்க, வேண்டாமென மறுத்தார்.

“மருந்து மாத்திரை போடணும். அப்பறம் வெறும் மாத்திரை போட்டா வயிறு புண்ணாகிடும். என் பையன் தான் அதுக்கும் செலவழிப்பான்” என்று கணவரிடம் உரைத்து காபியை பருக வைத்தார் சுகன்யா.

“நான் இப்படித் தான் டா. என் தலையெழுத்து என்னவோ. எனக்குக் கண்ணுக்கு லட்சணமா இரண்டு புள்ளைங்க. உங்களுக்கு ஒரு கல்யாணம் முடிச்சி கரை சேர்த்தா போதும்” என்றதும் தன் காபியை அன்னையிடம் கொடுத்துவிட்டு கேண்டீன் சென்றான்.

சுகிர்தன் போன் போட்டு அலுவலகம் செல்வதாகக் கூறினான்.
விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் முன் கூட்டியே தகவல் தரவேண்டும் என்று கூறவும், விஷாகனோ இதுக்கு எல்லாம் லீவு வேண்டாம். அம்மாவும் நானும் அந்தாளை பார்த்துக் கொள்தாக விஷாகன் உரைத்தான்.

வெளியே உணவை பார்த்துக் கொள்ளக் கூறிட, சுகிர்தன் அன்னையைக் காண வந்து ஆறுதல் உரைத்து, தந்தையைத் திரும்பியும் பாராமல் சென்றான்.

விஷாகனோ டிஸ்சார்ஜ் எப்பொழுது என்று கேட்டு வந்தான். நாளை காலை என்று கூறியதால் அன்னையைச் சமைத்து வரும்படி வீட்டுக்கு அனுப்ப முயன்றான்.

“இல்லை டா அவரை” என்று சுகன்யா மொழியவும், “அவரைப் பார்த்துப்பேன்மா. கவலைப்படாதே சாகடிக்க மாட்டேன்.” என்று எரிந்து விழ, சுகன்யா மனமின்றி வீட்டுக்கு புறப்படவும் கணவரிடம் விடைப்பெற வந்தார்.

“அம்மா… யாருக்காவது போன் போட்டு எதையும் உளறாதிங்க. ஆக்சிடெண்டில் வண்டி மோதியிருக்கும்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு இதான் யார் கேட்டாலும் சொல்லுங்க. வேற ஏதாவது சொல்லி இருக்குற நிலைமையை மோசமாக்காதிங்க. தாத்தா, அம்மாச்சி நிம்மதி முக்கியம்” என்று உரைத்தான்.

“நான் ஏன்டா என் புருஷனோட மதிப்புக்கு உலை வைக்கப் போறேன். அதெல்லாம் சொல்லமாட்டேன். அவர் இனி அங்க போக மாட்டார் தானே” என்று அதை மட்டும் தெளிவுப்படுத்திட கேட்டார் சுகன்யா.

“போகமாட்டார் போனா காலை உடைச்சி படுத்தபடுக்கையா போட்டு கஞ்சி ஊத்த மாட்டேன்” என்று உரைக்கவும் உதயகுமார் தலைக் கவிழ்ந்திருந்தார்.

சுகன்யா சென்றதும் அறையில் இருக்கப் பிடிக்காமல் இடியாப்பம் வாங்கி வந்து தந்துவிட்டு வெளியே நின்றான்.

உதயகுமாரால் உணவை எடுக்கவும் இயலாது கஷ்டப்பட்டார். சுகன்யா நேற்று ஊட்டி விட்டார். இன்று அதை எண்ணி கண்ணீர் சுரந்தது.
மனைவிக்குத் துரோகம் இழைத்த மனம், அதை அவள் பெரிதாக எடுத்து தன் மானத்தைக் கூறுப்போடாமல் சென்றதையும், தன் நடத்தையையும் எண்ணி நாணினார்.

விஷாகனோ கண்ணாடி தடுப்பில் ரோட்டை பார்த்து விட்டு திரும்ப, அங்கே சங்கீதா படிக்கட்டில் வந்தார்.

ஆத்திரம் கொண்ட விஷாகனோ, “நேத்தே வராதிங்கனு சொன்னா திரும்ப வர்றிங்க. வீடு வாசல் வித்து உங்களுக்கு மொத்தமா செட்டில் பண்ணிடறேன்.
தயவு செய்து வராதிங்க” என்றான் கையெடுத்து கும்பிட்டபடி.

சங்கீதாவோ அவன் காலில் விழுந்து “என்னை ஒருவாட்டி அவரைப் பார்க்க விடு. நான் பார்த்துட்டு போயிடறேன். எனக்கு வீடு வாசல் சொத்து எதுவும் வேண்டாம். ஏன் அவரைக் கூட இனி பார்க்க வரமாட்டேன்” என்று வேண்டினாள்.

மருத்துவமனையில் இப்படி விழவும் விஷாகன் மனம் லேசாய் ஆட்டம் கண்டது.

“அபர்ணா ஸ்கூலுக்கு அனுப்புறப்ப அக்கா வீட்டுக்கு போனதை பார்த்தேன். ப்ளிஸ் ஒரேமுறை பார்த்துட்டு போயிடறேன்” என்று கேட்டு நின்றாள் சங்கீதா.

‘போய்த் தொலைங்க’ என்பது போல விஷாகன் அனுப்பிவிட்டான். இங்கயே இருந்து அன்னை தம்பி இருக்கும் நேரம் வந்து தொல்லை தராமல் நாகரிகமாக யாருமில்லாத பொழுது கேட்டு யாசிப்பது அவனைப் பாடாய்ப் படுத்தியது.

அறைக்குள் வரவும் உதயகுமார் பயந்து எட்டி வாசலை கவனித்தார்.
“விஷாகனிடம் அனுமதி வாங்கித் தான் வந்தேன்.” என்று சங்கீதா அருகே வந்து விம்மி அழுதாள்.

உதயகுமாரோ எதுவும் வார்த்தை பேச முடியாது அமைதியாக இருக்க, “குழந்தை இருப்பது அக்காவுக்கு இன்னமும் தெரியாது. நான் இனி உங்க வாழ்க்கையில குறுக்கே வரமாட்டேன். அதை என் வாயால் சொல்ல தான் வந்தேன்.” என்று கூறி அங்கிருந்த இடியாப்பத்தைக் கண்டு “சாப்பிடலையா?” என்றாள்.

கையைக் காட்டி முடியவில்லையென்று கண்ணால் கூறினார்.

சங்கீதா இடியாப்பத்தை எடுத்து ஊட்டிவிட, விழுங்கினார். அவருக்கும் இந்தப் பாக்கியம்(?) மீண்டும் அமையாதென ஏற்றியிருப்பாரோ என்னவோ.

சங்கீதா ஊட்டிவிட்டுத் தண்ணீர் புகட்டி நான் கிளம்பறேன். உடம்பை கவனிச்சிக்கோங்க” என்று கண்ணீர் வழிய வெளியே வந்தாள்.

விஷாகன் இங்கே இருக்கப் பிடிக்காமல் கேண்டீன் சென்று சாப்பிட்டு அப்பொழுது தான் வந்தான்.

சங்கீதா கையெடுத்து நன்றி நவில்ந்து கிளம்ப, இறுக்கமாய்த் தலையாட்டினான்.

இதே போல ஒருத்தி தன் குடும்பத்தில் பாதிப்பு அடைந்திருந்தால் இப்படியா தான் கல் போல நிற்போம் என்று நியாயம் கொண்ட மனம் குத்தி கிழித்தது.

ஆனால் விஷாகன் ஒன்றும் சினிமாவில் வரும் நாயகனோ கதையில் வரும் நாயகனோ இல்லையே. சாதாரண மனிதன் அவனின் எண்ணம் அவனுக்கு நியாயமாக இருந்தது. அதையே செயல்படுத்தினான். எப்பொழுதும் போல மனசாட்சி மட்டும் குறுக்கே வந்து உன் தந்தை செய்த தவறுக்கு மற்றவரை எட்டி நிறுத்தி ஒதுங்க கூறுகின்றாயே இது நியாயமா என இடித்துரைத்தது.

அனைவரிடமும் கட்டளை பிறப்பித்து, அதிகாரம் செய்து வீட்டுக்கு பெரியவன் என்ற ரீதியில் தோரணையாய் வழிநடத்தியவன் மனசாட்சியிடம் பதில்தர இயலாது நின்றான்.

-தொடரும்.
Praveena Thangaraj 

13 thoughts on “நீயின்றி வாழ்வேது-3”

  1. Already naan indha story padichalum pudhusa padikura maadhri yae oru feel ka🥰…. Enna panradhu vichu yaarukku bathil sollalanaalum manasatchi ku bathil sollitan aganum 🥰…. Feel pannadha da…. Waiting for next ud ka ❤️❤️

    1. நீயின்றி வாழ்வேது…!
      (அத்தியாயம் – 3)

      அதானே..! எப்பவும் ஆண்கள் பண்ற தப்புக்கு சொஸைட்டி பெண்களுக்குத்தான் தண்டனை கொடுக்குது, வஞ்சனையும் பண்ணுது. ஆண்கள் தாலி கட்டின மனைவியைத் தவிர இன்னொரு பொண்ணோட இல்லீகள் ரிலேஷன்ஷிப் வைச்சிருப்பான். ஆனா, இந்த சமூகம் அந்த பொம்பளையைத் தான் தப்பா பேசும். கூத்தியா, வைப்பாட்டி, சக்காளத்தி, சின்னவீடு, செட்டப்புன்னு பொண்ணுங்களைத்தான் ப்ளேம் பண்ணும், நிந்திக்கும்.
      இவன் கொழுப்பெடுத்துப்போய்
      ஊருக்கொன்னு வைச்சிட்டு இருக்கிறதுக்கு அவங்க தான் பழியையும் ஏத்துக்கணும், பாரத்தையும் சுமக்கணும். என்ன கொடுமையடா கோபாலு…? ஆனா, அவ செட்டப்புங்கறதோ, இல்லை சின்னவீடுங்றதோ அந்த பொண்ணுக்கே தெரியுமோ, தெரியாதோ அது அவர்களுக்கு வெளிச்சம். இதுலயே செட்டப்பா வாழுற பொம்பளைங்களுக்கு சொஸைட்டியில மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை, மனைவிங்கிற பதவிக்கும், வாரிசுங்கிற தகுதிக்கும் உரிமையும் இல்லை. அதுலயே பாதி செத்துடும் அந்த பொம்பிளைன்னா, இதுல அவங்களுக்கு ஒரு குழந்தை வேற இருந்துட்டா, அவ்வளவுதான் சொஸைட்டி அந்த குழந்தையை வெறுப்பாவும், அருவருப்பாவும் தான் பார்க்கும். இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, அவங்களுக்கேத் தெரியாம இருக்கும் தான் இன்னொருத்தரோட கூத்தியாங்கற விஷயம். இதுல மூத்த தாரத்து சொந்தங்களோ, இல்லை பந்தங்களுக்கோ இந்த விஷயம் தெரிஞ்சுட்டா தர்ம அடியும், அவமானமும் கொடுத்து தெருவுக்கு இழுத்து நாறடிச்சிட்டு போயிடும்.

      ஆனா, இந்த விஷயத்துல விஷாகனை பாராட்டியே ஆகணும். எதுக்குன்னா சங்கீதாவுக்கு அப்படி எந்த பூஜையும் பண்ணாம, அவங்கப்பன்காரனையே நாலு மிதிமிதிச்சு, இழுத்துட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல கொண்டு வந்து போட்டான் பாருங்க… அதுல இருந்தே தெரியுது, விஷாகன் ஒரு சிறந்த நியாயவான்னு.
      வெல்டன் மிஸ்டர் விஷாகன்
      வெல்டன்… ஐ அப்ரிஸியேட்
      யுவர் நோபிள் சர்வீஸ்…!

      அது சரி, “நீயின்றி வாழ்வேது” இந்த டைட்டிலுக்கு சொந்தக்காரன்… அப்பன்காரனா…? மகன்காரனா…??? கன்ஃப்யூசன் வருதே..???
      😃😃😃
      CRVS (or) CRVS 2797

  2. Paravala vanthu pathutu ippadi sollitu poi iruka unamaiyava therila oru magana nee panathu crt tha aana avalukum oru ponnu iruku athuku pathil ena pana pora

  3. உதயகுமார் பண்ண தவறுக்கு இந்த பொண்ணு என்ன பண்ணும் … அந்த குழந்தைக்கு என்ன பதில்

  4. இந்த மனுஷன் செஞ்ச தப்புக்கு கடைசில அந்த சின்ன குழந்தையும் சுகன்யாவும் தான் பலிக்கெடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!