புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-4

நீயின்றி வாழ்வேது-4

    விஷாகன் தலையில் கைவைத்து எரிச்சலோடு அன்னை சுகன்யாவை ஏறிட்டான்.

      மருத்துவமனையிலிருந்து  அழுகையோடு சுகன்யா பேசிய பின் செல்லம்மா அம்மாச்சி உடனடியாகச் செந்தூரன் தாத்தாவை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் படையெடுத்தனர்.    

   மாப்பிள்ளை ஹாஸ்பிடலில் இருக்கார் போய்ப் பார்க்க வேண்டுமென்ற நாகரிகம் மற்றும் பாசம் காரணமாக வந்து விட்டார்கள்.

   இதில் உதயகுமாரின் அன்னையும் ஒரே ஊர் என்பதால் அவர்களும் சம்பந்தியோடு மகனை காண புறப்பட்டு விட்டார்கள். உதயகுமாரின் தந்தை அவர் திருமணத்திற்கு முன்பே இறைவனடி சேர்ந்திருந்தார்.

       வீட்டில் மூன்று பெரியவர்கள் கூடி கூடி பேசினார்கள்.

  அதிலும் உதயகுமாரின் அன்னை அன்னபூரணி பேசுவதைத் தான் விஷாகனால் செவியில் ஏற்க இயலவில்லை.

      தன் மகன் வல்லவன், நல்லவன் யாருக்கும் கேடு செய்யாதவன், அப்படியிப்படி என்று கூறி, யார் கண்பட்டதோ இப்படி விபத்து நேர்ந்துவிட்டதே என்று புலம்பி தள்ளினார்.

நகங்களைக் கடித்துக் கடித்துத் துப்பியவன் பொறுக்க மாட்டாது, “அப்பத்தா சும்மா வாயை மூடிட்டுயிரு. இல்லை வீட்டுக்கு போ. ஹாஸ்பிடல்ல இருந்து வந்து இரண்டு நாளாகுது. வீடு அமைதியா இருந்துச்சு. நீங்க மூன்று பேரும் வந்து அரை நாள் ஆகலை, வந்ததிலருந்து ஒப்பாரி வைக்கிறிங்க.” என்று அதட்டினான்.

   அவனின் அதட்டலுக்கு லேசாய் அமைதி காத்தனர்.

   “என்னயா பண்ணறது. இப்படிக் கெட்டது நடந்துடுச்சே. என் மகன் வீட்டுக்குள்ளயே இருக்க மாட்டான். இப்ப பாரு வீட்டுக்குள்ளேயே கிடக்கான். சோறு சாப்பிடவும், பாத்ரூம் போகவும், குளிக்கவும் உன் அம்மயோட தயவு தேவைப்படுது” என்று சலித்தார் அன்னபூரணி.

       ‘கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளயே இருக்கட்டும்னு தானே அடிச்சி வெளுத்தது. அம்மா தயவுல இருக்கணும்னு தானே கையை உடைச்சது’ என்று விஷாகன் மனதிற்குள் கவுண்டர் கொடுத்தவன் அப்பத்தாவிடம் “இங்க பாருங்க அப்பத்தா. நம்ம வீட்ல தானே படுத்து கிடக்கறாரு வேற வீட்லயில்லையே, அழாம வேலையைப் பாருங்க.

ஒன்னு இங்க வந்தாச்சுல ரெஸ்ட் எடுங்க. இல்லையா சினிமாவுக்கு டிக்கெட் போடறேன் படத்துக்குப் போறிங்களா?” என்று கேட்டான்
 
     “உன் கல்யாணத்தைப் பார்த்துட்டுக் கண் மூட வேண்டியது. இனி என்ன ரெஸ்ட் கேட்குது. சினிமா என்ன சினிமா” என்று நொடித்து அன்னபூரணி விஷாகன் திருமணத்திற்கு பிள்ளையார் சுழியிட்டு பேசினார்.

     “ஆமாங்க சம்பந்தி நம்ம விஷாகனுக்கு இருபத்தியொன்பது ஆகப்போகுது” என்று செல்லம்மா அம்மாச்சி வேறு பேசினார்.

     “இப்ப எதுக்கு இரண்டு பேரும் எனக்குப் புல் ஸ்டாப் போட பார்க்கறிங்க. உங்களுக்கு எல்லாம் பதிமூனு பதினாலுல கல்யாணம் பண்ணிட்டாங்க, என்ன நிம்மதியா விடுங்களேன்” என்று விஷாகன் டிவி சேனலை மாற்றிக்கொண்டே கூறினான். அந்தகாலத்தில் அப்படி தான் சடங்காகும் முன்னே கட்டி கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

    “எங்களுக்கும் வயசு ஆகுதுலயா.. இத்தனை காலம் உசுரோட இருப்பதே அதிசயம். கால காலத்துக்குப் பேரனோட கல்யாணம் பார்க்கற கொடுப்பினை இருந்தும் பார்க்காம போகக் கூடாது பாரு. உனக்குப் பொண்ணு பார்த்து முடிச்சா தானே அடுத்து இளையவன் சுகிர்தன் இருக்கான்” என்று செந்தூரன் தாத்தா அவர் பங்கிற்குத் துபாம் போட்டார்.

    “சும்மாயிரு தாத்தா நீ வேற.” என்று டிவியை அணைத்து விட்டு அமர்ந்தான்.

   அன்னபூரணியோ “நீ சும்மாயிரு.. சம்பந்தி சரியா சொல்லறார். உங்கப்பனுக்கு எல்லாம் இருபதுலயே கல்யாணம் முடிஞ்சிடுச்சு.
உங்கம்மா வயித்துல நீ உடனே தங்கிட்ட தெரியுமா?” என்று எட்டுகட்டையில் கூறிமுடித்தார்.

     விஷாகனோ இந்த நிலையில கல்யாணம் என்றவன் மனதை அழுத்தியது. ஹாலில் இருக்கப் பிடிக்காமல் அவன் அறைக்குச் செல்ல கடக்கும் போது, தந்தைக்குச் சூப் வைத்து ‘சூடாறியதும் குடிங்க’ என்று அன்னை தந்தையின் மெத்தையருகே இருந்த டீபாயின் மீது வைத்து சொல்லி செல்வதைக் கண்டான்.

சுகன்யா கடனேயென்று இதுவரை கேட்டுக் கொண்டிருந்தவர் மகன் திருமணப் பேச்சு என்றதும் ஹாலுக்கு வந்தார்.

அவர் வரவும் விஷாகன் தந்தையறைக்கு வந்து சூப்பை எடுத்து ஊதி குடிக்க ஆரம்பித்தான்.
உதயகுமார் அவனை ஒரவிழியில் காணவும், “இங்க தெம்பா சூப்பை குடிச்சிட்டு ஊர் மேயுற” என்று கூறவும் உதயகுமார் மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டார். மருந்துக்கும் விஷாகனிடமிருந்து மரியாதை கிடைக்காதென்று புரிய துவங்கியது.

பேரன் திருமணம் என்றதும் வெட்கப்பட்டுச் சென்றதாகப் பெரியவர்கள் முடிவெடுத்துத் திருமணப் பேச்சை தொடர்ந்தனர்.

பெரும்பாலும் சொந்தத்தில் முடிக்கும் எண்ணமிருக்கும் அன்னபூரணிக்குச் சட்டெனக் கருத்தில் வந்து போனது தனது தங்கையின் மகள் வயிற்று பேத்தியே.

விஷாகனுக்கு ஒன்று விட்ட அத்தை மகள் என்று நெருங்கிய உறவில் இருப்பது அவள் மட்டுமே.

மற்றவர் அத்தை மகள் மாமன் மகள் இருக்கின்றார்கள் ஆனால் அதில் வத்தலும் தொத்தலுமாக அன்னபூரணி கண்ணிற்குத் தெரிந்தார்கள். பளிச்சென முகவசீகரமும் விஷாகனுக்குப் பாந்தமாய்ப் பொருந்தும் பெண்ணாக விருஷாலி தோன்றவும் தன் ஆசையை வெளியிட்டார்.

விஷாகனோ அறைக்குள் இருந்து ‘இந்தாளு சொந்தமா, கோடி கும்பிடு தேவையேயில்லை’ என்று எண்ணிய அடுத்த நிமிடம், மனசாட்சியோ, ‘விஷாகா அப்பனோட வண்டவாளம் தண்டவாளம் தெரிந்தது. அவரை மாதிரியே இருக்கேன்னு உன் கழுத்து தான் நெறிப்பாங்க. நானும் அந்தாளு கணக்கா இருப்பேன்ற சந்தேகம் தான் மத்தவங்களுக்கு வரும். பொண்ணு தர யோசிப்பாங்க.

இந்தாளும் இனி சும்மாயிருக்கணும்னா எனக்குக் கல்யாணம் ஆகணும். கல்யாணமாகி இருந்தா இவர் இந்த ஆட்டம் ஆடுவாரா?’ என்ற சிந்தனைக்குள் மூழ்கினான்.

அதே சமயம் வெளியே ஹாலில், “பன்னிரண்டுல வயதுக்கு வந்துட்டா. மாமன் சீரா உதயகுமார் கூடக் கம்மல் செய்து போட்டான்.” என்று சீர் முறை முதல் கொண்டு நினைவுவைத்துக் கூறினார் அன்னப்பூரணி.

“யாரு நம்ம அன்னத்தோட மகளா? சங்கரன் சம்மதிப்பாரா? ஏதோ 12 படிச்சிட்டு ஒரு வருஷம் வீட்ல இருந்தவளை இப்ப படிக்க காலேஜி அனுப்பராரே. அப்படியிருக்க படிப்பை நிறுத்தி சென்னைக்குக் கட்டிக்கொடுப்பாரா?” என்று கேட்டார் செல்லம்மா அம்மாச்சி.

“விஷாகனுக்குனா ஏன் கட்டிக் கொடுக்கமாட்டான். என்ன இப்ப ஏதோ காலேஜி போயிட்டு இருக்கா. சுகன்யா மாதிரி குள்ளம் கிடையாது. சராசரி உசரத்துல, நல்லா எடுப்பா எலுமிச்சை கலர்ல லட்சணமா குத்துவிளக்காட்டும் இருப்பா.” என்று அன்னபூரணி மருமகளை மட்டம் தட்டி, வரப்போகும் பேத்தியை உயர்த்திக் கூறவும் விஷாகன் மனதில் ‘விருஷாலி’ என்ற பெயர் வந்து நின்றது.

   அன்னபூரணியின் தங்கை செம்பருத்தியின் மகள் வழி பேத்தியே விருஷாலி.

திருவிழாவுக்கும், ஊருக்கும் அறியாத போது சென்ற கணம் பார்த்திருக்கின்றான். ஓடிசலாய் மஞ்சள் நிறத்தில் அந்தப் பெண்ணை.
சமீபகாலமாகக் கிட்டதட்ட ஐந்து  வருடத்திற்கு மேலாக முற்றிலும் ஊருக்கு சென்றதில்லை. எப்பொழுது நிலையான பிசினஸ் என்று ஆரம்பித்தானோ அப்பொழுதிலிருந்து சுற்றுலா, ஊர்திருவிழா போன்றதை தவிர்த்துவிட்டான்.

தாய் தந்தை மட்டும் செல்வார்கள். சில சமயம் சுகிர்தன் செல்வான். தாத்தா, அம்மாச்சி, அப்பத்தா மூவரும் பெரிய பேரனை பார்க்க வேண்டுமென்றால் அவர்கள் ஓரெட்டு வந்து செல்வார்கள்.

இப்பொழுது அந்தப் பெண் எப்படியிருப்பாள் என்ற கற்பனைக்கு இரண்டெட்டு சென்று வந்தான்.

செந்தூரன் தாத்தாவுக்கு யாரை சொல்லுகின்றாரெனப் புரிந்தது. பேரனுக்கு அந்தப் பெண் பொருத்தம் என்று முடிவெடுத்தனர்.

உதயகுமாரின் ஊரிலிருந்து இரண்டு கிராமம் தள்ளி தான் விருஷாலியின் தாய் அன்னத்தைச் சங்கரனுக்குக் கட்டி கொடுத்தது.

சங்கரன்-அன்னம் தம்பதிக்கு விவேக் என்ற மகனும், விருஷாலி என்ற மகளும் உண்டு.

விருஷாலி இதுவரை டவுனை கூடத் தாண்டியது கிடையாது. அதனால் சென்னைக்கு மகளைக் கட்டிக் கொடுப்பார்களா என்று தான் பேச்சுத் தொடர்ந்தது.

இதுவரை எதுவும் வாய் திறக்காத சுகன்யா, “அத்த…. நீங்க ஊருக்கு போறிங்கள்ல அப்ப சங்கரன் அண்ணாவிடமும், மதினியிடமும் கேளுங்க. அவங்களுக்குச் சரின்னா பரிசம் போட நாங்க வர்றோம்.” என்று முதல் முறையாகக் கணவரிடம் ஒரு வார்த்தை கூடக் கேளாமல் மகன் வாழ்வில் முடிவெடுத்தார்.

“கண்டிப்பா இரண்டு நாள் என் மகனோட இருந்துட்டு அங்க போனதும் முதல் வேலையே இது தான்.” என்று அன்னபூரணி வாக்குத் தந்தார்.

பேரனுக்குத் திருமணம் என்று இந்த மூன்று முதியவர்களும் பேசி முடிக்க அன்னபூரணி மெதுவாய் மகன் அறைக்கு வந்து உதயகுமாரிடம் விஷயத்தைக் கூறி கேட்டார். ஏற்கனவே ஹாலில் பேசுவது அறைவரை கேட்டது தானே.

“விஷாகனுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யுங்க மா. விருஷாலி நல்லப்பொண்ணு” என்று மகனின் முடிவை கேட்டுக்கக் கூறினார்.

“அவனிடம் என்ன கேட்கறது, பாரு உனக்கு வச்ச சூப்பை சின்னப் பையனாட்டும் குடிச்சிட்டு இருக்கான். அவனுக்கு என்ன விவரம் தெரியும்.” என்று அன்னபூரணி பேசவும் விஷாகனோ ‘என்னது சின்னப் பையனாட்டுமா?’ என்று லேசாய் முறைத்தான்.

அன்னபூரணியோ அதே நாளில் மாலை நேரம் போனிலே சங்கரனை தொடர்பு கொண்டு விஷாகனுக்கு விருஷாலியையே பேசி சம்மதம் கேட்க, தாராளமாகக் கட்டி தருவதாகச் சங்கரன் பூரித்துக் கூறினார்.

சங்கரன் ஊர்திருவிழாவுக்கு வந்த விஷாகனை முன்பே பார்த்திருக்கிறார். அவனின் உயரமும் பண்பும் குணமும் ஈர்த்தது. கூடுதலாக உறவில் பெண்ணைக் கட்டி கொடுக்கவும், இனிக்காதா?

மகள் இதுவரை இந்த வட்டாரத்திலேயே வளர்ந்து விட்டாள். இனி வரும் காலம் பட்டணத்தில் வாக்கப்பட்டு வாழட்டும் என்று மகிழ்ந்தார். போனிலேயே அன்னத்தின் சந்தோஷம் இங்கே வரை பிரதிபலித்தது.

அன்னபூரணியின் தங்கை செம்பருத்திக்கும் பேத்தியை கட்டிக் கொடுக்க ஆசை பிறக்கவும் நிறைவாய் அடுத்தக் கட்டம் பேச்சுச் சென்றது. சங்கரனை கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் விவேக் இன்னமும் நல்ல நிலைக்கு வரவேண்டுமே.

ஊருக்கு அப்பத்தாவோடும், அம்மாச்சி தாத்தாவோடு தங்கள் குடும்பமும் பெண் பார்க்க வருவதாகக் கூறி முடித்தனர்.

அதன் பின் இரண்டு நாட்கள் அப்பத்தா, அம்மாச்சி, தாத்தா என்று வீட்டில் சுற்றி சுற்றி திருமணப் பேச்சு வாய் ஓயாமல் பேசினார்கள்.

சுகிர்தனோ போனில் தன் காதலி ஜெனிபரிடம் அனைத்தும் மொழிந்தான்.

அவளும் விஷாகன் திருமணம் முடிந்தால் அடுத்து சுகிர்தன் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாம். ஜெனிபருக்கும் சுகிர்தனுக்கும் ஒரே வயது அதனால் ஜெனிபர் வீட்டில் ஏற்கனவே திருமணம் செய்ய வரன்கள் பார்க்க திருமணம் வேண்டாமெனச் சுகிர்தனை மனதில் வைத்து தட்டி கழிக்கின்றாள்.
மதம் தாண்டி தங்கள் இணைய அவளுமே பேராவல் கொண்டு காத்திருக்கின்றாளே.

விஷாகனோ இதற்கிடையில் போன் மூலமாக விருஷாலியை பார்க்க கேட்க கூச்சப்பட்டான். நேரில் பார்க்கும் முன் அப்பத்தா அம்மாச்சி உரையாடலை கேட்டு ஏனோ அவளை இந்த நொடியை காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

யாரிடம் கேட்க என்ற தயக்கத்தால் தள்ளிப்போட்டான். அப்பொழுது தான் தந்தை நினைவு வந்தது.

நேராக உதயகுமார் அறைக்கு வந்தவன், தலையைச் சொறிந்து அவரை ஏறிட்டு, “எனக்கு உன் சொந்தத்துல பொண்ணு எடுக்கவே இஷ்டமில்லை. ஆனா பாரு என் கிரகம் இப்படித் தான் அமையும் போல.

என்ன பண்ணறது உன் விஷயம் ஊர்ல பரவி, அதுக்குப் பிறகு எனக்குப் பொண்ணு தேடினா, உன்னை வச்சி தான் எனக்கு மதிப்பு போடுவாங்க. அப்படியிருக்க என்னைக் கட்டிக்க வரப்போற பொண்ணு யோசிக்கும். அதோட உன் சொந்தத்துல பொண்ணைக் கட்டிக்கறது பரவாயில்லை.” என்றான் விஷாகன்.

உதயகுமாருக்கு மகன் முதலில் உதிர்த்த ‘உன் சொந்தத்துல பொண்ணு கட்டிக்கவே இஷ்டமில்லை’ என்றதும் அதிர்ந்தார். பின்னர் மகனின் முழுப் பேச்சில் நிம்மதி கொண்டார்.

மகன் மேலும் பேச தயங்க, “உன்னோட பிசினஸ் வளர்ச்சிக்கு வரதட்சனை கேட்கணுமா?” என்று கேட்டு விட விஷாகனோ அங்கிருந்த மேஜை விளக்கை எடுத்து அடிக்க வந்தான். பின்னர் அவனே தன்னைக் கட்டுப்படுத்தி, “திரும்ப அடிக்க ஆரம்பிச்சேன் உனக்குச் சாவு நிச்சயம், என்னையும் உன்ன மாதிரி வரதட்சனை வாங்கிட்டு விலை போறவன்னு நினைச்சியா. ஒத்த பைசா வரதட்சனைனு வாங்க கூடாது சொல்லிட்டேன்.” என்று ஆள்காட்டி விரலால் பத்திரம் காட்டினான்.

உதயகுமார் இப்பொழுது தான் எழுந்து நடமாடி இயல்பாக இருக்க முனைந்தார். எங்கே திரும்பச் ‘சனியனை தூக்கி பனியனில் போட்டுவிட்டோமோ’ என்று அஞ்சினார்.
ஏதோ நல்லநேரம் மகன் அடிக்க வந்ததை நிறுத்தவும் நிம்மதியடைந்தார்.

“எனக்கு அந்தப் பொண்ணோட ‘ரீசண்ட் பிக்சர்’ வேண்டும். உங்க போனுக்கு அனுப்ப சொல்லுங்க” என்று கட்டளையிட்டு மெத்தையில் ராஜாவாக அமர்ந்தான்.

உதயகுமாரும் சங்கரனுக்குப் போன் போட்டு புள்ளையோட போட்டோ அனுப்ப கூற சங்கரனோ தங்களிடம் கேமிரா போன் இல்லையென்று பதில் தந்தார்.

விஷாகனோ தனக்கு வரப்போகும் பெண்ணின் முகத்தை உடனே பார்க்க முடியாத வருத்தத்தில் தந்தையை உஷ்ணமாகப் பார்த்துக் கடந்தான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

ரீடர்ஸ் நிறைய வேலைகளை இழுத்து போட்டு வச்சியிரீக்கேன். சிலது நானே செய்யணும். அப்ப தான் திருப்தி என்றதும், சிலது மத்தவங்க செய்தா சரி வராது என்ற காரணத்திலும் சைட்ல கருத்துக்கு அப்ரூவல் கொடுக்குற முதல் கொண்டு போட்டி கதை லிங்க் ஷேரிங், என் கதை பிரதிலிமி ஆடியோ நாவல் சைட் அத்தியாயம் அமேசான்ல கதை போட ப்ரூப் ரீடிங், மேகஸினுக்கு கதை எழுதணும், இப்படி நிறைய….

  தனி தனியா கருத்துக்கு கமெண்ட்ஸ் போட ஆசை. ஆனா முடியலை… நேரம் வீட்டு வேலையும் செய்யணும். ஸ்கூலுக்கு பிக்கப் டிராம் சமையல், எக்ஸாம் இத்யாதி வந்துட்டே இருக்கு‌. யாரிடமும் நன்றியும் அன்பையும் தனி தனியா  பகிர முடியலை. என் வாசகர் நீங்க அதான் உங்களிடம் மொத்தமா சொல்லிடறேன்.

  உங்க அன்பும் ஆதரவும் தான் என்னை மேலும் உற்சாகம் கொடுக்குது. தேங்க்யூ 🫂❤️🫂❤️🫂 லவ் யூ ரீடர்ஸ்‌‌ . 

17 thoughts on “நீயின்றி வாழ்வேது-4”

  1. Dei ivlo ranagalathulayum oru kilukiluppu da unaku😂😂…. Ponnu photo paarkamudilanu kovama da…

    Super super ka….. Waiting for next ud….

  2. Yaruka irunthalum kalayanam is asai varum thane unga pannathu therinja unnaiym ippadi pesuvanga tha but atha samalika mudiyatha unnala ena photo la paka aasai pata athu mudilaya.

    It’s OK sisy unga kathai vasika epovum nanga ready ah irukom kandipa ivlo veetu velaikaluku nadula ithuvum pannitu tha irukinga 👌👏. Yaraium ethir pakama unagala pana mudiuratha panringa great for work . Best wishes

  3. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 4)

    அதானே… அந்தாளுக்கு சூப் ஒரு கேடான்னு…? எதுக்கு, நல்லா சூப்பு ஜூஸூன்னு குடிச்சு, உடம்பைத் தேத்திக்கிட்டு ஊருக்கொரு பொம்பளையை வைச்சுக்கவா…? நானே நினைச்சேன், விஷாகன் சொல்லிப்பூட்டான்.பொண்டாட்டிகிட்ட வரதட்சணை வாங்கி, பட்டினத்துல வீடு கட்டிட்டாரு. இனி சங்கீதா கிட்ட எதை வாங்கி, என்ன பண்ணப்போறாரோன்னு பக் பக்குங்கறது ஹார்ட் பீட்.

    விஷாகனுக்கு முதல்லயே பொண்ணு பார்த்திருந்தா இந்தாளுக்கு புத்தி மேயப் போயிருக்குமா…? இப்ப பாருங்க வயசு பொண்ணுக்கு காபந்து பண்ற மாதிரி, இவரை பொத்தி, பொத்தி வைக்க வேண்டியதாயிருக்குது.
    என்ன எழவுப் புடிச்ச வேலையடா இது..?ன்னு விஷாகன் வயித்தெரிச்சலோட
    புலம்பறது, இங்கே கேட்குது சத்தமாவே..!
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  4. 😂😂iyoo intha hero enna material ne therilaye 😂soft hero vum ila anti hero vum ilaa 🤔 puthusa iruku 😍😍 but nalla iruku ❤️ oohhh heroine enna solla poraga papom super epi sis waiting for next episode ❤️✨

  5. இது கதை மாதிரியே இல்லை நெசத்துல நடக்குற மாதிரியே இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!