Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 10

மனம் உன்னாலே பூப்பூக்குதே 10

பூ 10

அதிகாலையில் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் வரை கோகுல் பக்கமே ஆருத்ரா திரும்பவில்லை. இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு பயணத்தில் தூங்குவதாகவே காட்டிக் கொண்டாள்.

கோகுல் முதலில் மிகுந்த மன குழப்பத்திற்கு ஆளானான் திருமணம் ஆகிவிட்டது தன்னை பற்றி அவளிடம் சொல்லாமல் எப்படி இந்த வாழ்க்கையை துவங்குவது என்று தான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தான். இன்று அவனே வாய் திறந்து அதனை பேச விழையும் போது அதை அவள் தடுத்ததன் காரணம் புரிந்தாலும் நாளை வேறு பிரச்சனைகள் வரலாம் என தனக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தான்.

பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு செல்ல கால் டாக்ஸி புக் செய்தால் ஆருத்ரா முதல் பத்து நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன் ஜன்னல் வழியாக காரோடும் பாதையை கவனித்து தன் மனைவியிடம்,

“எங்க கடத்திக்கிட்டு போற?” என்று நிதானமாக வினவினான்.

அவளோ அதிர்ந்து போய் , “கடத்துறனா?” என்று விழிகளை விரிக்க,

“உன் பாட்டி வீட்டுக்கு ஏற்கனவே நான் வந்திருக்கேன். இது அவங்க வீட்டுக்கு போகற பாதை இல்ல. ஒழுங்கா சொல்லு. என்னை எங்க கூட்டிட்டு போற?” என்று சற்று அழுத்தமாகவே கேட்டாலும், வண்டியை நிறுத்தச் சொல்லவில்லை.

அதிலேயே நிம்மதி அடைந்தவள் “நான் கூட்டிட்டு போறேன் அங்க போய் பேசிக்கலாம் கார்ல வேண்டாம்” என்று தயக்கமாகக் கூறினாள்.

அவனும் பதில் ஏதும் கூறாது அமைதியாகவே இந்த பயணத்தை மேற்கொண்டான். அரை மணி நேரத்துக்கும் மேலான அந்தப் பயணம் அமைதியிலேயே கழிந்தது.

மெல்ல பொழுது புலரத் துவங்கிய நேரத்தில் ஒரு அக்ரகாரத்தினுள் நுழைந்தது அந்த மகிழுந்து.

பயணப் பைகளை இறக்கி விட்டு கால் டாக்ஸிக்கு பணம் கொடுக்க கோகுல் முனைந்த போது அவனை முந்திக்கொண்டு அவருக்கு பணத்தை கொடுத்தாள் ஆருத்ரா.

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்த கோகுலிடம் சிறுபிள்ளை போல மூக்கை சுருக்கி “ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அவள் சொன்னதும் அவனும் அமைதியாகி விட்டான்.

கார் அங்கிருந்து கிளம்பியதும் சுற்றி இருந்த இடத்தை பார்வையிட்டவனுக்கு அது ஒரு அக்ரஹாரம் என்பது மட்டுமே புரிந்தது. இங்கு எதற்கு தன்னை அழைத்து வந்திருக்கிறாள் என்று புரியாமல் அவன் சிந்தித்துக் கொண்டிருக்க, எதிரே இருந்த ஒரு பெரிய வீட்டில் கதவை தன்னிடம் இருந்த சாவி கொண்டு திறந்து விட்டிருந்தாள் ஆருத்ரா.

“கிருஷ்.. வாங்க” என்று அவள் சத்தமாக அழைக்க அவனும் பைகளைத் தூக்கிக்கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தான்.

“புது மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க ஆள் இல்லைன்னு கோச்சுக்க கூடாது. ஓகே?” என்று விளையாட்டாக பேசியபடி இடது பக்கம் இருந்த நீளமான மர பெஞ்சில் அவளுடைய கைப்பையை வைத்தவள் அவனிடம் இருந்த பைகளையும் பெற்று அதில் வரிசையாக வைத்தாள்.

“சரி வந்தாச்சு. ஆரத்தி எல்லாம் நான் எதிர்பார்க்கல. ஆனா எங்க வந்து இருக்கோம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாம் இல்லையா?” என்று பொறுமையாகவே வினவினான் கோகுலகிருஷ்ணன்.

“இதுதான் எங்க வீடு. எங்க பரம்பரை வீடு. எங்க அப்பாவோட தாத்தா காலத்துல இருந்து இந்த வீட்லதான் எல்லாரும் வாழ்ந்தாங்க. எங்க அப்பாவோட படிப்புக்காக என் பாட்டி திருச்சி டவுனுக்கு போயி அப்படியே மெயின் கார்ட்  கேட், திருவானைக்காவல்ன்னு கடைசில ஸ்ரீரங்கத்தில் செட்டில் ஆயிட்டாங்க. ஆனா எனக்கும் என் அப்பாவுக்கும் பிடிச்சது என்னவோ இந்த வீடுதான்.

சொல்லப்போனா எங்க அப்பா அம்மாக்கு கல்யாணம் ஆனதும் எங்க அப்பா எங்க அம்மாவ கூட்டிட்டு இந்த வீட்ல தான் வந்து இருந்தாரு. நான் இங்கதான் பிறந்தேன், வளர்ந்தேன். இங்கே இருந்து தான் என் பாட்டி என்ன கூட்டிட்டு போனாங்க.” என்று சொன்னபோது அவளது குரல் உடைய தயாராக இருந்தது.

அவனுக்கு அவள் அழுவதை பார்க்க விரும்பாமல் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

அந்த அணைப்பில் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னான் அவன்.

அவள் அவன் மார்புக்குள் முகம் புதைத்தபடி,

“அன்னைக்கு கல்யாணம் முடிஞ்சதும் உங்களை இங்க கூட்டிட்டு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா பாட்டி தான் கோவிலுக்கு போகணும், ட்ரவலிங் டைம் ஆகும்ன்னு சொல்லி தடுத்துட்டாங்க.” என்று முனங்கினாள்.

“அன்னைக்கே என்கிட்ட சொல்றதுக்கு என்ன?” என்று சலுகையாய் அவன் அவளிடம் கோபம் கொள்ள,

“ஆமா மூஞ்சியை மேகாலயா பக்கம் திருப்பி வச்சுட்டு நின்னுட்டு இருந்த உங்ககிட்ட வந்து எங்க வீட்டுக்கு போகணும்னு சொல்ல முடியுமா?” என்று அவளும் அவன் மார்பில் செல்லமாய் குத்த, முதல் நாள் மனதில் இருந்த தயக்கமெல்லாம் உடைந்து போயிருந்தது இருவருக்குள்ளும்.

அவளை அணைத்த அணைப்பு முதல் முறையாக அவனுள் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க, முற்றத்தின் திறந்த வெளியில் தெரிந்த வானமும், சில்லென்று வீசிய அதிகாலைக் காற்றும் இருவரையும் அந்நிலையில் இருந்து கலைந்து விடாமல் இருக்க வைத்தது.

அவனது விரல்கள் மெல்ல அவள் முதுகில் நகரத் துவங்கியதும் ஆருத்ராவின் இதயம் ரயில் தண்டவாளம் போல தடதடக்கத் துவங்கியது.

ஆருத்ரா ஆணுடன் பழகாதவள் என்று சொல்லி விட முடியாது. ஆனால் யாரையும் அருகில் வர விட்டதில்லை. சேஃப் டிஸ்டன்ஸ் என்று அவளுக்குள் வரையறுத்த தூரத்தை தாண்டி தோள் மீது கைப்போட்டு பேசும் உரிமையைக் கூட ஆண் நண்பர்களுக்கு அவள் கொடுத்ததில்லை.

கோகுல் தான் அவளை தீண்டும் முதல் ஆண் ஸ்பரிசம். உள்ளுக்குள் எழுந்த கூச்சமும் அதே நேரம் அவன் தன்னை இப்படி தீண்ட மாட்டானா என்று பத்து நாட்களாக உள்ளே எழுந்த ஆசையும் போட்டி போட்டு அவளை ஆட்டுவித்தது.

இன்னும் வாகாக அவன் நெஞ்சில் புதைந்தாள். அவளது இந்த செய்கை கோகுல் மனதில் இருந்த ஆயிரம் தயக்கங்களை தகர்க்க போதுமானதாக இருந்தது.

மெல்ல அவன் நாடியை பற்றி முகம் நோக்கியவன் அவளது பட்டு போன்ற அதரங்களை தன் விரல் கொண்டு தீண்டினான்.

அதுவரை அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் நாணத்தால் கண்கள் சொருகி இதழில் அவளுக்கே தெரியாமல் புன்னகையை சிந்தி விட,

இருவருக்கும் இடையில் இருந்த குழப்பங்கள் அந்த நொடி பற்றிக்கொண்ட மோகத்தீயில் கருகிக் போனது.

அவளது செவ்விதழ்கள் அவனது வசமானதும் பெண்ணவள் இதயத்தில் முதன்முறையாக மத்தாப்பு  மலர்கள் மலர்ந்தது.

நேரம் தெரியாமல் நீண்ட அம்முத்ததை  தொலைவில் கேட்ட கோவில் மணியோசை கலைத்தது.

அவள் முகம் செவ்வானமாக சிவந்து விட, அவன் எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வில் வெட்கம் வரப் பெற்றவனாக  வலது கையால் இடது தோளை பிடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

அவன் முன்னே நிற்க கூச்சம் கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள் உள்ளிருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து செல்லும் ஆர்வம் இருந்தாலும், அவள் தன் தாய் தந்தை வாழ்ந்த வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறாள். அவள் மனதில் இருப்பதை வெளிப்படுத்த நேரம் கொடுக்க வேண்டும் என்று நியாயம் பேசிய மனதை ஆசை கொண்ட மனம் சாடவே செய்தது.

வீட்டை பார்வையிட ஆரம்பித்தான்.

குட்டையான நிலை வைத்த அந்த காலத்து அக்ரஹார வீடு. நுழைந்ததும் சதுரமாக இருந்த ஹாலில் நடுவில் நிலா முற்றம். அதைச் சுற்றி அரையடிச் சுவர். அதில் அழகான வழு வழுப்பான மரத் தூண்கள். இடது ஓரத்தில் ஒரு அறை. வலது நேர் மூலையில் அடுத்த கட்டுக்கு செல்லும் கதவு.

வலது பக்க அறையில் இரண்டாக தடுப்பு வைத்து விஸ்தாரமான சமையலறை. வீடு முழுவதும் ஆங்காங்கே தூண்கள். இரண்டாம் கட்டில் நிலா முற்றம் ஒரு ஓரமாக அமைக்கப்ட்டிருக்க, மேல இரும்புக் கம்பிகள் வேயப்பட்டு அதில் அழகிய ஒற்றை இரும்பு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது.

அதே நேரம் அங்கிருந்த நடையிலும் உத்திரத்திலிருந்து இரட்டை நீள மர ஊஞ்சல் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கிலியில் முற்றம் நோக்கி தொங்கிக் கொண்டிருந்தது.

நடைக்கு அந்தப்பக்கம் சிறியதும் பெரியதுமாக மூன்று அறைகள். கடைசியில் குட்டை நிலை பின் கதவு குறுக்கு கம்பி போட்டு தாழிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துவிட்டு திரும்பியவன் பின்னால் நின்றிருந்த ஆருத்ரா மேல் மோதிக் கொண்டான்.

அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்திருப்பாள் போல, அவனருகில் வந்து நிற்க அவனும் திரும்ப சரியாக இருந்தது.

சட்டென்று அவனது கையை எட்டிப் பிடித்தவள்,

“திறந்து பின்னாடி போய் பார்க்க வேண்டியது தானே!” என்று அவன் தோள் பற்றி நிலையாக நிற்க உதவினாள்.

அவளைக் கண்டதும் கோகுல் மனதில் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் திணறினான்.

அவள் இயல்பாக பேசவும் அவனும் இயல்புக்கு வந்தான்.

“பூட்டு போட்டிருக்கு” என்று கை காட்டினான்.

“இல்ல கிருஷ். அந்த குறுக்கு கம்பி எடுத்தா போதும்.” என்று அவனைத் தாண்டி சென்றாள்.

அவள் மேலிருந்து வந்த சோப்பின் வாசனை அவனை கட்டி இழுத்தது.

‘இதென்ன காலைல இருந்து மனசு இப்படி இம்சை பண்ணுது. எத்தனையோ நாள் அங்க குளிச்சிட்டு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் அவ அலஞ்சிருக்கா. அப்பல்லாம் வராத உணர்வு இதென்ன புதுசா..’ மனம் அவனை குடைந்தாலும் கால்கள் என்னவோ மனையாள் பின்னால் சென்றது.

பின் கதவைத் திறந்ததும் வெட்டவெளி சற்று தள்ளி கல் தூண் நான்கு நிற்க அதற்கு மேல் சின்னதாக பழைய மூங்கில் கொட்டகை. மாடு கட்டி வளர்த்திருக்க வேண்டும். ஆங்காங்கே    பழ மரங்கள் இருக்க, தோட்டம் போன்ற அவ்விடம் சுத்தமாக இருந்தது.

சுற்றுச் சுவர் பத்து அடி உயரத்தில் இருக்க பின்னால் கடை நிலை கதவு இருந்தது

அவ்வளவு தான் என்று திரும்ப இருந்தவன் கையைப் பற்றியவள், “குளிக்க போறீங்களா?” என்றாள்.

“ஆமா”  என்று அவன் தலையசைக்க,

அப்ப இங்க குளிங்க என்று கதவைத் திறந்தாள்.

கண்ணுக்கெட்டும் தொலைவில் காவிரி ஆறு. முன்னால் கண்டிப்பாக கரை புரண்டு ஓடி இருக்க வேண்டும். ஆனால் இன்று சொல்லிக்கொள்ளும் படியாக ஓரளவு நீர் ஓடிக் கொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத கோகுல கிருஷ்ணன்

“ஹே என்னதிது.. இவ்வளவு கிட்ட ஆறா?” என்று குனிந்து வெளியே செல்ல,

“ஆமா.. வாங்க” என்று புள்ளிமானாய் துள்ளி ஓடினாள் ஆருத்ரா.

“சின்ன பிள்ளைல நானும் அப்பாவும் ஒரு தடவை வந்து ஆட்டம் போடுவோம். அம்மா துணி துவைக்க வரும்போது ஒன்னு. சாயங்காலம் வெயில் இறங்கும்போது ஒன்னு. தண்ணில தான் எப்பவும் இருப்பேன்.” என்று ‘சலக் சலக்’ என்று நீரில் அவள் ஸ்கர்ட் படாமல் தூக்கிப் பிடித்தபடி விளையாடினாள்.

சிறுபிள்ளையாக அவள் தள்ளி விளையாட, அதை அங்கிருந்த படித்துறை கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான் கோகுல்.

அவள் தன்னை மணந்து கொள்ள எப்படி சம்மதித்தாள் என்ற கேள்வி குடைந்தபோது, உன்னை பிடித்து தான் மணந்தேன் என்ற அவள் நேற்றைய கூற்று மனதை சமாதானம் செய்திருக்க, காலையிலிருந்து அவள் பால் எழும் எண்ணங்கள் எல்லாம் எங்கெங்கோ ஊர்வலம் செல்வதை புரிந்தும் புரியாமலும் அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்று யோசனையில் அமர்ந்திருக்க,

“ஹலோ ஆடிட்டர் சார். கொஞ்சம் இயற்கையையும் ரசிக்கிறது.. எப்பபாரு கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டே கணக்கு போட்டுட்டு இருப்பீங்க போல” என்று கேலி செய்து அவனருகில் வந்து அமர்ந்தாள்.
ஒவ்வொரு வீட்டின் பின்னும் காவிரிக்கு செல்ல இரண்டு இரண்டு கல் படிகள் பதிக்கப்படிருக்க, அதுவோ சிறியதாக இருந்ததால் அவனை உரசிக் கொண்டு தான் அவள் அமர்ந்தாள்.

காற்றில் அவள் குழல் அவன் கழுத்தில் வந்து உரச, அதை விலக்குவது போல அவளது கழுத்திலும் சுற்றிக் கொண்டிருந்தவற்றை நகர்த்தினான்.

நுனி விரல் அவளது கழுத்து வளைவில் தீண்டியதும் கூச்சமாய் பின் தலையை அவன் மார்பில் வைத்து படிக்கட்டின் பக்கவாட்டில் கால் நீட்டி அமர்ந்தாள்.

“அப்பா பக்கத்துல இப்படி தான் உட்கார்ந்திருப்பேன். நிறைய கதை சொல்வார் தெரியுமா?” என்று அவள் கண்களில் கதை பேச,

தன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் வஞ்சியின் அழகில் கிறங்கிப் போனான் அவன்.

இது சரிவராது. இவள் பேச்சையும் கவனிக்க முடியவில்லை. இவள் மேல் எழும் மோகத்தையும் மறைக்க முடியவில்லை என்று அவன் திணறும் போதே, திரும்பி அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் கிருஷ். எங்க சொல்லாம கூட்டிட்டு வந்ததுக்கு கோவப் படுவீங்களோன்னு நினைச்சேன். யூ ஆர் சச் ஏ ஸ்வீட் பர்சன்.” என்று கன்னம் கிள்ள,

அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாதவனாக அவளை அள்ளி தன் மடியில் சேர்த்து அவள் மலர் இதழ்களை கொய்யத் துவங்கினான்.

அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசி எத்தனை முறை அடித்து ஓய்ந்தது என்று அவர்கள் இருவருக்கும் தெரியாது. அவர்கள் வேறு உலகத்தில் சஞ்சரித்திருக்க,

இன்னும் பேத்தியும் அவளது மாப்பிள்ளையும் வீடு வந்து சேராத பயத்தில் சந்தானலஷ்மி சம்மந்திகளுக்கு போன் செய்து அவர்கள் தன் மகனுக்கு பல முறை அழைத்தது தனி கதை.

15 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 10”

  1. Kalidevi

    Intha mari oru manasula irukurathulam solla oru time kodutha ava kolanthai mari aeiduva la cute aaru . Ipp nee pesum pothu avalo alaga iruka apo wife nu nee pakathula irukapo eppadi gokul irupan intha movement enjoy pannanume

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 10)

    ஹவ் ஸூவீட்..! சின்ன சின்ன ஞாபகங்களையும் மறக்காம அவன் கிட்ட எத்தனை அழகா ஷேர் பண்ணிக்கிறா…! அவளைப் பொறுத்தவரைக்கும்
    அவனை பிடிச்சுத்தான் அவ இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்காங்கறது நல்லாவே புரியறது. ஆனா, அவன் தான் ஏதோ சொல்ல வந்தான் அதையும் அவ தடுத்துட்டா. இவங்க இப்படியே இந்த ஊருலேயே செட்டிலாகிட்டாக் கூட தேவலைன்னு தோணுது. ஏன்னா, அவங்க ரெண்டுபேரும் தனியா இருக்கும்பொழுது
    ரொம்ப அண்டர்ஸ்டேன்டிங்கா
    இருக்காங்க. பட், ஆருவோட
    மாமி & மாமான்னு வந்துட்டா
    ரெண்டு பேருமே தங்களோட
    நேச்சர் சுபாவத்தையே இழந்துடறாங்களோன்னு தோணுது.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    Gokul secret edho aaru ku already therinjuruku or Gokul ye already therinjurukanum adhan Ava Ivana pesavidala..ipdi oru alagana veedu lam fairy tales vara story la dhan varum nu nenachen paravala namma story la yum konduvandhutinga thanks…. story nalla move aagudhu

  4. Avatar

    Subscriber cannot be reach at the moment அப்படிங்கறத அந்த பாட்டிக்கு தெரியல போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *