நீயின்றி வாழ்வேது-10
பெண் பார்த்த அன்று விருஷாலி வீட்டுக்குள் சென்று பேசியது விஷாகன், சாப்பிடும் நேரமும் பேச்சை வளர்த்து அவளையும் பேச வைத்ததும் அவனே.
ஆனால் சின்ன அப்பத்தா ‘உன்னை யாரு ஜோடியா வெளியே வந்து சோத்துல கை வைக்கச் சொன்னது. இதுல ஆம்பளையிடம் என்ன பேச்சு’ என்று திட்டினார்.
‘அத்தை விஷாகனை தானே கட்டிக்கப் போறா, சேர்ந்து பேசி சாப்பிட்டா. இதுல என்ன குத்தம்?’ என்று சங்கரன் பதில் தந்தும், அவர் செவிக்கு விழுந்தபாடில்லை.
செம்பருத்தியைப் பொறுத்தவரை சங்கரன் நல்லவன் என்றாலும் சிறு கெட்ட பழக்கமும் இருந்தது.
சிலர் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பார்கள், சங்கரனோ தண்ணியில் செலவழிப்பவர். மது என்றால் மதியிழந்து மனதை தொலைப்பவர்.
‘விருஷாலி செம்பருத்தி அம்மாச்சி திட்டியதற்காக அழவும், அன்னம் அதற்கு ‘அவங்க ஆம்பளை அப்படித் தான் பேசுவாங்க. நீ தான் தவிர்த்து அடக்கவொடுக்கமா இருக்கணும். இப்ப பாரு அவங்க பெரியக்கா பேரன் மேல குத்தம் சொல்லலை. என்னோட வளர்ப்பை சுட்டி கட்டி எங்கம்மா பேசுது.
எல்லாம் உன்னைச் சொல்லக்கூடாது. உங்கப்பாவை சொல்லணும். குட்டிம்மாவை எதுக்கு ஜோடியா உட்கார சொன்னிங்க.
இங்க பாருங்க… என்ன தான் சொந்தமென்றாலும் அவங்க வசதிக்கு எதுவும் கேட்கலைனா கூட நம்மளால் முடிஞ்சதை செய்துடணும். நாளைப்பின்ன என் குழந்தையை யாரும் சீர்செனத்தில குறையா அனுப்பிட்டேன் சொல்லிடக்கூடாது. அதுக்கு நீங்க தான் பணத்தைச் சேர்க்கணும்.
அதென்னவோ அன்னபூரணி பெரியம்மா, எங்க அண்ணா உதயகுமார் எல்லாம் கல்யாணத்தை விரசா வச்சிட்டாங்க. கடன் வாங்கியாவது கல்யாணத்தை முடிக்கணும். எப்பபாரு சரக்கு கடையில போய்ப் பணத்தைக் கொட்டாதே.’ என்று அன்னம் தாய் செம்பருத்தியை முனங்கினாலும், கணவரை ஏசியும் மகளுக்குச் செய்ய வேண்டியதை செய்யச் சங்கரனை உந்தினார்.
அன்னதிற்கு அம்மா மீது கோபம். தன்னை ஒரு குடிக்காரனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டார். இதில் அன்னம் ‘ஏன் என்னை இப்படிக் குடிக்காரனோட தள்ளிவிட்டிங்க’ என்று வார்த்தையால் கேட்டால் கூட, அவரின் மாப்பிள்ளை தேர்வை தவறாக ஏசிடக்கூடாதெனச் ‘சங்கரன் ஆண்மகன் அப்படி இப்படி இருப்பான்’ என்று கூறியே பூசிமொழுகினார்.
அதென்னவோ பேச்சை போலவே நாளடைவில் செம்பருத்தி அம்மாச்சி மனதில் ஆண்கள் பக்கம் தவறேயிருந்தாலும், பெண்கள் பக்கம் சிறு குண்டுமணி அளவு தவறை மட்டும் பூதக்கரமாகச் சுட்டிக் காட்டி ஏசுவார். இன்றும் விருஷாலியை செம்பருத்தி அம்மாச்சி திட்டினார்.
அன்னமும் திருமண அனுபவத்தில் இப்படித் தானே ஆண்கள் இருப்பார்கள், பெண்கள் அடங்கி ஒடுங்க வேண்டும் என்று தானாக, தவறாய் புரிந்து கொண்டார்.
விருஷாலி எதிர்த்து பேசவில்லையே தவிர “என்னையே எல்லாரும் திட்டுங்க.” என்ற அழுகை மட்டும் விஷாகனின் செவிப்பறையில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
விஷாகன் போனை போட்டு எதையும் கூறி மீண்டும் விவேக்கை மாட்டிவிடவில்லை.
எல்லாம் உடனுக்குடன் நடப்பதில்லையென்ற உண்மை சுடவும் போனை வைத்தான்.
விஷாகன் வாட்டர் சப்ளை கடையில் ராஜன் வந்திருந்தான்.
“என்ன அண்ணா கல்யாணம் எப்போ” என்று கேட்க விஷாகன் பதில் கூறவும் ராஜன் மகிழ்வாய்ச் சென்றான்.
இவனுக்குத் தான் ராஜனை கண்டால் லேசாய் சங்கடம் இருந்தது. தன் தந்தை யோக்கியதை அறிந்தவன் ஆயிற்றே.
வீட்டுக்கு மாலை ஆறுமணிக்கு வருபவன் ஐந்து மணிக்கே வந்தான்.
ஆறுமணிக்குக் கந்தசஷ்டிகவசம் ஒலிக்கவில்லை. மாறாக வீடே நிசப்தமாக இருந்தது.
கல்யாண வீடு என்று சூடம் அணைத்து கூறினாலும் யாராயிருந்தாலும் நம்ப மாட்டார்கள்.
உதயகுமார் வெளியே செல்லாவிட்டாலும் வீட்டில் நன்றாகத் தெம்பாகத் தான் வலம் வந்தார்.
எப்பவும் போலச் சுகன்யா உருளை பஜ்ஜியை செய்து மணக்க மணக்க தேங்காய் சேர்த்த உடச்சகடலை சட்னி என்று முன் வந்து வைத்தார்.
விஷாகன் முகம் அலம்பி துண்டால் துடைத்தபடி வந்தவன், “என்ன வெட்டி முறிச்சிட்டாருனு அவருக்குப் பிடிச்ச பஜ்ஜி சட்னி மா. நீ திருந்த மாட்டியாமா. உங்க பெண்கள் இனம் எல்லாமே இப்படித் தானா?” என்று அன்னம் மற்றும் அம்மாச்சி பேசியதோடு தாயும் இப்படித் தவறு செய்தவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்கின்றனரே என்ற மனஉளைச்சலில் கேட்டான்.
“நான் உனக்காகச் செய்தேன் விஷாகா. உனக்கும் உருளை பஜ்ஜி உடைச்ச கடலை போட்ட தேங்காய் சட்னி பிடிக்குமே.
நான் புருஷன் என்றவரை பெயருக்கு பார்க்க ஆரம்பிச்சி ரொம்ப நாளாகுது டா. இது என் பையனுக்கு…” என்று அவன் முன் வைக்க, விஷாகனுக்குச் சட்டெனத் தனக்கும் இதெல்லாம் பிடித்தம் என்று தாமதமாய் மண்டையில் உறைத்தது.
சுகன்யா நின்று திரும்பி, “பெண்கள் இனம் எல்லாம் ஆண்கள் தவறு செய்தும் பேசறாங்க என்பதால அவங்க மன்னிச்சு அவங்களை ஏத்துக்கறதா அர்த்தம் இல்லை விஷாகா.
ஒரு பொண்ணு ஒரு தடவை மனசை கல்லாக்கிட்டா திரும்ப மனசை மாத்திட மாட்டா. அது தனியா கால்ல விழுந்து கதறினாலும் ஒதுக்கி தான் வைப்பா.
இதெல்லாம் என் பெரிய மகனுக்கும் சின்ன மகனுக்கும்” என்று சிற்றுண்டியை காட்டி செல்லவும் இதுவரை டிவியில் காலாட்டி அமர்ந்தவர் விஷாகன் வந்ததும் கால் நீட்ட மட்டும் செய்தவர். தற்போது காலை மடக்கி அமர்ந்தார், தவிரப் பஜ்ஜியை சாப்பிட மனமின்றி ஒதுக்கி வைத்தார்.
விஷாகன் அதன் பின் செத்தபாம்பை அடிக்கப் பிடிக்காமல் தன் வேலை என்னவோ அதை மட்டும் கவனித்தான்.
சுகிர்தன் லேட்டாக வந்தவன் பஜ்ஜியை விழுங்கிவிட்டு சாப்பாட்டிலும் கை வைத்து முடித்துத் தனியறைக்குச் சென்றான்.
—
அடுத்து வந்த நாட்களில் உதயகுமார் வீட்டோடு இருக்க, கொரியர் ஆபிஸில் விஷாகன் பார்த்துக்கப் போவதாகக் கூறினான்.
அதன் பின் வந்த நாட்கள் உதயகுமாருக்கே போரடிக்க ஆரம்பித்தது.
சுகன்யாவிடம் பேச முன்னே முன்னே வந்து இம்சை செய்ய, மகனிடம் ”அவரைக் கடைக்குப் போகச் சொல்லு டா. தினமும் இங்க நொய்நொய்னு மன்னிப்பை கேட்டு தலைவலி வருது.
அதுவும் இல்லாம கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு. என்னதான் ஊர்ல கல்யாணம் என்றாலும் இங்கிருந்து போக வண்டி புக் பண்ணணும். பொண்ணுக்கும் நம்ம சொந்தத்துக்கும் டிரஸ் எடுக்கணும்.
தாலி செய்யப் பொன் உருக்கணும்” என்று பேசியபடி செல்ல, “ம்மா.. அதென்ன பொண்ணை உருக்கணும்னா? விருஷாலி இங்க கூட்டிட்டு வந்து என்ன பண்ணணும்” என்றான்.
“டேய்… பொண்ணு உருக்கச் சொல்லலைடா. பொன்.. தங்கம் தங்கத்தை உருக்கணும். தாலி செய்யணும்ல?” என்று கேட்டதும் தான், ‘அச்சோ விஷாகா… ஏன்டா.’ என்று அசடு வழிந்தான்.
“பொன் உருக்கணும்னா என்ன பண்ணணும்மா? சொல்லுங்க வாங்கிட்டு வந்து வைக்கிறேன்.” என்றான்.
தாலிசெய்வதற்குரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்துப் பூசை செய்து, பிறகு நல்ல பாரம்பரிய பொற்கொல்லரை வீட்டுக்கு அழைச்சி தங்கத்தை உருக்கப்படுறது பொன்னுருக்கல் சொல்வாங்க டா.
நிலையான இடத்தில் பல தலைமுறை கண்ட பொற்கொல்லரை திருமாங்கல்யம் செய்தா மிகச் சிறந்த முறையில் வாழ்க்கை அமையும்னு நம்ம மூதாதையர் வாக்கு.
நம்ம வீட்டில் பொன்னுருக்கல் செய்யணும் விஷாகா.” என்றார் சுகன்யா.
“அப்போ விருஷாலி வருவாளா?” என்று ஆசையாகக் கேட்டான்.
“பேராசை அடையாதடா இந்தச் சுபநிகழ்ச்சில மணப்பெண்ணைத் தவிர இரண்டு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்துக்கலாம். விருஷாலி வரக்கூடாது டா.” என்று மகனின் ஆசையுணர்ந்து மகிழ்ந்து நிலமையை விவரித்தார்.
‘அவ வரலைனா என்ன யூஸ்.. ஓமைகாட். என் பீலிங்கை யாரும் புரிஞ்சுக்க மாட்டறாங்க’ என்று மனதில் புலம்பினான்.
“என்னடா ஆச்சாரியாரை போய்ப் பேசிடலாமா?” என்று கேட்டார்.
“பண்ணுங்க… தெரிந்தவர் யாராவது இருப்பாங்களே” என்று தனது பணிக்குச் செல்லும் நேரத்தை கணக்கிட்டுக் கைகடிகாரத்தை அணிந்தான்.
“விஷாகா… அது வந்து.. உங்கப்பாவுக்குத் தான் அதெல்லாம் யாரை பார்க்கணும்னு தெரியும். அவர் போகட்டும். இங்கயிருந்து உயிரை வாங்கறார்.
அங்க போகமாட்டார்னு கேட்டுட்டு அனுப்பு. எவ்ளோ நாள் தான் இங்க இருப்பார். அடுத்து கல்யாண வேலையை அவரும் பார்க்கணுமே.
பத்திரிக்கை அடிக்கணும்… அவர்வெளியே போனா தானே பொன்னுருக்க ஆள் பார்ப்பார்.” என்று இரண்டாவது முறையாக கூறவும் தந்தையை ஏறிட்டான்.
விஷாகனுக்கும் ”எத்தனை நாளுக்கு வீட்ல இருப்பார் என்று அம்மா சொன்னது கேட்டுச்சா. போய் என் கல்யாண வேலையை மட்டும் பாருங்க. வெளியே போய்த் தகடுதத்தம் பண்ண பார்த்திங்க. அவ்ளோ தான்.” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
தந்தை விரலை பிடித்து வளர்ந்தவனுக்குத் தந்தையையே விரல் நீட்டி எச்சரிப்பது கடினமாய் இருந்தது. ஆனால் நிச்சயம் சங்கீதா வீட்டுக்கு போகமாட்டாரென விஷாகன் எண்ணவில்லை. மாறாக நிச்சயம் அங்கே தலை காட்டுவாரென விஷாகன் அறிவான். அந்தச் சிறுமி அபர்ணாவால்….
திருமணம் வரை பொறுத்துக் கொள் என்ற மனதிடம் வேலையைப் பார்க்க நகர்ந்தான்.
வேண்டா வெறுப்பாய்ச் செல்லும் போது ‘சிம்கார்டை’ தந்துவிட்டுச் சென்றான்.
விஷாகன் வாட்டர் சப்ளை கடைக்கு வந்ததும் அங்கே புதிய ஆரோ மோட்டார்கள் வந்திறங்க, கடை ஆட்களை வைத்து இறக்க கூறினான்.
சில இடத்தில் ஆரோ மோட்டாரில் வாட்டர் பில்டரை மாற்ற சென்றான்.
அந்தக் கஸ்டமர் ஒரு மனோதத்துவ டாக்டர். அதனால் இரண்டு வாரம் கழித்துச் சென்று, மாற்ற வேண்டியதை இன்றே பார்க்க சென்றான்.
சின்னதாக இருக்கும் க்ளினிக், அதனால் தனது ஆரோ வாட்டர் பில்டரை அதற்குண்டான பையில் வைத்து எடுத்து இருசக்கர வாகனத்தில் அந்தக் கட்டிடத்திற்கு வந்து சேர்ந்தான்.
நாலைந்து கடைகள் மெடிக்கல் ஷாப் தாண்டி மாடியில் படிக்கட்டில் அமைந்திருந்தது.
படியில் ஏறும் போதே ‘ராஜனுக்குப் பிறகு இப்ப இந்தக் கஸ்டமரிடம் தந்தையைப் பற்றித் தெரிந்திடுமே. யாரோ ஒருவருக்கு இப்படி நேர்ந்தது என்ற ரீதியில் தந்தையைப் பற்றிக் கேட்கலாமா? என்று தோன்ற ரிசப்ஷன் பெண்ணிடம் வந்து ஆரோ வாட்டர் பில்டரை மாற்ற வந்ததாகக் கூறினான்.
தற்போது மனநலமருத்துவர் டாக்டர்.R.ராமகிருஷ்ணன் M.D. (Psychiatry) என்றிருக்க யோசனையோடு உள்நுழைந்தான்.
“டாக்டர் இரண்டு வாரத்துல பில்டர் மாத்தணும். இன்னிக்கு நேரம் இருந்தது வந்துட்டேன்” என்று கூறினான்.
“கொஞ்சம் குயிக்கா மாத்திடுங்க விஷாகன். பேஷண்ட் வர்ற டைம்” என்று கூறினார் டாக்டர்.
டாக்டர் வீடு இதே தெருவில் இருப்பதால் இன்று விரைவாக வந்துவிட்டார். அவர் இங்கே வந்ததைப் பார்த்தப்பின்பு தான் விஷாகனும் வந்தான்.
தயங்கி தயங்கி இரண்டு மூன்று முறை டாக்டரை பார்த்தான்.
மனநலமருத்துவராயிற்றே கவனிக்காமல் இருப்பாரா.?
“என்ன விஷாகன் ஏதோ பேச வந்து தயங்கறிங்க?” என்று கேட்டார்.
“ஒன்னுமில்லை டாக்டர்.. வந்து என் பிரெண்டுக்கு ஒரு பிரச்சனை.” என்று தயங்கினான்.
“அட சும்மா சொல்லுங்க. உங்களுக்கே ஒரு பிரச்சனை என்றாலும் பேசலாம். பிரெண்ட் என்று எதுக்கு வெட்கம். ஆமா உங்களுக்குக் கல்யாணம் பேசியிருக்காங்க தானே. கல்யாண வாழ்க்கைக்குத் தயக்கமா?” என்று அங்கிருந்த டெட்டால் ஹாண்ட் வாஷ் கொண்டு கைளில் அப்ளை செய்து முடிக்க, விஷாகன் திடுக்கிட்டான்.
‘கல்யாணம் செய்யப் போகும் வாலிபனுக்கு. திருமணத்திற்கு முன் மனநலமருத்துவரிடம் தயக்கமாகப் பேசுவது என்றதும் எண்ணங்கள் தரிக்கெட்டுப் போய்த் தாம்பத்திய வாழ்க்கை பற்றிக் கேட்க வந்தேன் என்று முடிவு கட்டிவிட்டாரோ என்று சுதாரித்தான்.
“டாக்டர்… நீங்க வேற.. அதெல்லாம் இல்லை. இது வேற.” என்று சிரித்தான்.
“அட பில்டரை மாத்திட்டே சொல்லுங்க. கொஞ்சம் நேரம் ஆக ஆகப் பேஷண்ட் வந்தா ப்ரியா பேச முடியாது” என்று டேபிளில் இருந்த சிறிய வடிவ காலெண்டரை திகதியை கிழித்தார்.
இதற்கு மேல் தயங்குவது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று “ஐம்பது வயசு ஆளு… நல்லா வாட்டசாட்டமா இருப்பார்.
அவருக்கு என் வயசுல பையன் இருக்கார். பட் அந்த ஆளுக்கு அஃபெர்(affair) இருந்தா என்ன பண்ணறது டாக்டர்? அந்தாளோட விவாகரத்து பண்ணி வைக்கலாமா? இல்லை… கண்டுக்காம அடிச்சி உதைச்சி அந்தப் பொண்ணைத் தேடி போக விடாம பண்ணலாமா? என் பிரெண்ட் என்னிடம் கேட்டான். பதில் சொல்ல முடியலை.” என்று பில்டரை மாற்றி அடிக்கடி தன் பொய்யை கண்டறிந்து விட்டாரா என்று நோட்டமிட்டு மாற்றினான்.
“ம்ம்… யார் அடிப்பா.?” என்று தாடை பிடித்துத் தடவி கேட்டார் டாக்டர்.
“என் பிரெண்ட் ஏற்கனவே அவங்க அப்பாவை அடிச்சிட்டான்.” என்று கூறவும், அமைதியாக யோசித்தார் டாக்டர்.
“அந்தப் பொண்ணுக்கு குழந்தை குட்டி இருக்கா?” என்றதும் பில்டரை மாற்றியவனின் நட்டுபோல்ட் நழுவியது.
“ஓ… இருக்கா?” என்றார் டாக்டர்.
“ஆமா டாக்டர்… ஏழு வயசுல பொண்ணு.” என்று ஏசியிலும் வேர்வை வழிய கூறினான்.
டாக்டர் சில துளி நேரம் மௌவுனத்தில் கழிய விஷாகனும் வேலையைக் கவனிப்பதாய் அமைதி காட்டினான்.
அவனுக்கும் அபர்ணா என்றவள் இருக்கும் காரணத்தில் தான் சரியான முடிவெடுக்க இயலாது தள்ளாடினான்.
இல்லையென்றால் தந்தையை அடித்து, படுத்தபடுக்கையில் கஞ்சி ஊற்றவும் தயங்காத கோபக்காரன்.
“அஃபெர்(affair) மட்டும்னா கல்யாண வயசுல பையன் இருக்கான்னு அட்வைஸ் பண்ணலாம். பட்… கூடக் குழந்தை இருக்குனா யோசிக்கணுமே விஷாகன்.
அவரோட குழந்தை என்ற பட்சத்தில் குழந்தையை விடமாட்டாரே. ம்ம்ம்… உங்க பிரெண்டுக்கு கூடப் பிறந்தவங்கள்ல பொண்ணு இருக்கா.” என்று கேட்டார் டாக்டர் ராமகிருஷ்ணன்.
“இல்லை சார் பையன் மட்டும் தான்” என்று மொத்தமாய்ப் பில்டரை மாற்றி விட்டு தன் உடைமையை எடுத்து வைத்தான்.
“ரொம்பக் கஷ்டம் விஷாகன். வாரிசா பையன் மட்டும் இருக்கற பட்சத்தில் பொண்ணு இருக்கறது ரொம்ப க்ரிடிக்கல். மனசு என்னதான் இரண்டு பசங்க வாரிசா இருந்தாலும், அப்பனுக்குப் பொண்ணு தான் பிடிக்கும் என்பது தியரி.
என்ன தான் நாம காவல் வச்சி அடிச்சாலும் மனசு அந்தப் பெண் குழந்தையைத் தான் நேசிக்கும்.
திரும்பப் போக வாய்ப்புண்டு. அந்தப் பெண்ணோட பின்புலம் எப்படி? யாரும் இல்லைனா இன்னும் கஷ்டம். உங்க பிரெண்ட் அப்பாவை அவங்களும் விடமாட்டாங்க. உங்க பிரெண்டோட அப்பாவும் அந்தப் பெண் குழந்தைக்காகத் திரும்பத் திரும்ப அந்த வீட்டை தான் நினைச்சி பார்க்க மனசு ஓடும்.
உங்க பிரெண்டோட அப்பா சபலத்தால் மட்டும் ஒரு பெண்ணைத் தேடினா முடிஞ்சிருக்கும். அவருக்கு ஒரு குடும்பமா பார்த்திருந்தா கடைசி வரை போக வர தான் மூளை யோசிக்கும் இது மருத்துவனா சொல்லலை ஒரு ஆம்பளையா மனசுக்கு பட்டதை சொல்லறேன்.” என்றதும் விஷாகன் முகம் செத்து விட்டது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super. Interesting sis.
Super sis nice epi 👌👍😍 eppdi yosichi enna pannalum avar andha veetuku poga than seyvaar edha maatha mudiyadhu🤷 doctor enna soldraru nu parpom🤔🙄
Super epi👍👍
Super super ka🥰🥰…. Waiting for next ud…
Doctor sonnathu ah kettu Vishagan motham ah galli avan enna pannathu nu theriyama avar kita suggestion ketathuku ipadi solluvaaru nu yosikala
Oru nalla appava irukaru na ok tha . Appadi inga illathathu ena iruku nu innoru life thedikittanga . Rendu pasanga athum nalla valantha pasangala vachitu ippadi pani vachi irukaru. Kandipa oru ponnu ninacha kadamaiku tha kuda irupa othuki vacha vachathu than athu unmai
Waiting for nxt epi😍😍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Superb epi interesting
Super
அருமை
Nice 👍