Skip to content
Home » தாமரையின் தழலவன் அத்தியாயம் 1

தாமரையின் தழலவன் அத்தியாயம் 1

அத்தியாயம் 1

தொலை தூரத்தில் தெரிந்த வானம் கடல் நீரோடு சங்கமித்து, வான நீலத்தை கடல் நீர் தத்தெடுத்ததோ இல்லாவிடில் கடல் நீலத்தை வானம் தத்தெடுத்துக் கொண்டதோ எனப் பட்டிமன்றம் ஒன்று நடாத்தி முடிவு காணும் அளவுக்கு, இரண்டுமே ஒரே நீலத்தில் இருந்த காட்சியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு, கடல் நீரில் கால் கடுக்க நின்றிருந்தாள் தாமரைச்செல்வி.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ தெரியவில்லை,
“செல்விம்மா..”
என்ற அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அவளையே பார்த்தபடி நிதானமாக அவளருகில் நடந்து வந்து கொண்டிருந்தார் அவளது தந்தையின் நெருங்கிய நண்பர் கவிவாணன்.

அவரைப் பார்த்ததும் தன்னிச்சையாகக் கவிழ்ந்து போன அவளது தலையைக் கனிவோடு பார்த்தவரோ, தானும் அவளருகில் வந்து நின்று கொண்டு தொடுவானையும் கடலையும் பார்க்கத் தொடங்கினார்.

சில நிமிடங்கள் அங்கே கடல் அலைகளின் ஓசை தவிர வெறெந்த ஓசையுமே கேட்கவில்லை.

கவிவாணன் தான் அந்தக் கனத்த மௌனத்தை உடைத்தார்.

“என்ன முடிவு செல்விம்மா..”

“அது..”

“உனக்கு நிறையக் கஷ்டத்தைக் கொடுக்கிறேனோ என்று தோணுகிறது எனக்கு..”

“அச்சோ அப்படி எல்லாம் இல்லை கவிப்பா.. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் என்னுடைய நல்லதுக்குத் தான் இத்தனை தூரம் யோசிக்கிறீர்கள்.. ஆனால்..”

“சொல்லும்மா.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லு.. நீ வாய் திறந்து சொன்னால் தான் எனக்கும் உன்னுடைய மனசு புரியும்..”

“அதில்லை கவிப்பா.. இது சரியாக வருமா என்பது தான் எனக்குக் கேள்வியாக இருக்கிறது..”

“அதெல்லாம் சரியாக வரும் அம்மாச்சி..”

“எதற்கும் உங்களோட பையன் கிட்டே ஒரு வார்த்தை..”

“அவன் கிடக்கிறான்மா புத்தி கெட்ட பயல்.. அவனுக்குத் தகரத்துக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை..”

“இதுல நான் தகரமா தங்கமா கவிப்பா..”

“என்னடாம்மா இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டாய்.. நீ சுத்தமான தங்கம்டா..”

“சுத்தமான தங்கம் தான் நான் என்பதை நிரூபிக்க.. ரொம்ப வேக வேண்டி இருக்கிறதே கவிப்பா..”

“செல்விம்மா.. ரொம்ப விரக்தியாகக் கதைப்பது போல இருக்கிறதே..”

“அதெல்லாம் ஒன்றுமில்லை கவிப்பா.. நீங்கள் சொல்லுங்கள் உங்களோட வேணிம்மாவுக்கு இதுல விருப்பமா.. எனக்கு என்னவோ விருப்பம் இல்லாத மாதிரித் தான் இருக்கிறது..”

“அவளும் கிடக்கிறாள் சிலுக்குச் சுந்தரி.. வயது ஏறுகிறதே தவிர கிளுகிளுப்புக்குக் கொஞ்சம் கூடக் குறைச்சல் இல்லை.. எவள் வீட்டுல என்ன வேகுதுனு பார்த்துப் பஞ்சாயத்து வைக்கிறது மட்டும் தான் அவளுக்குத் தெரிந்த தொழில்.. ஆனால் பாரேன் எங்களோட வீட்டுல என்ன கருகி மணக்குது என்பதை கண்டு கொள்கிறாளே இல்லையே.. இப்பவும் சோப்புச் சீப்புப் போட்டுச் சிலுக்கி மினுக்கிக் கொண்டு அலைவது தான் வேலை.. இதற்குள் அவளைப் போல என்னையும் மினுக்கிக் கொண்டு சுத்தட்டாம்.. இல்லாட்டிக்கு அவளோட கவுரம் கரைஞ்சு போயிடுமாம்.. என்னத்தைச் சொல்ல..”

“அச்சோ என்ன கவிப்பா நீங்கள்.. இப்படி எல்லாம் சொல்லலாமோ..”

“அடப் போம்மா நீ வேறை இப்படிச் சொல்லித் தான் என்னோட ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.. எல்லா இடத்துலயுமா சொல்கிறேன் உன்கிட்டே மட்டும் தானே சொல்கிறேன்..”

“சரி சரி.. எல்லாம் சரியாகும்..”

“என்னத்தைச் சரியாகிறது.. நானும் இன்று மாறுவாள் நாளை மாறுவாள் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்ததில் வயசு அறுபதுக்கு மேல போனது தான் மிச்சம்..”

“நிசமாவே உங்களுக்கு வயசு அறுபதுக்கு மேல தானா கவிப்பா..”

“ஏம்மா.. எண்பதுக்கு மேல மாதிரி இருக்கிறதோ..”

“இல்லையே இப்போ தான் நாற்பது மாதிரி இன்னும் ஜங்காத் தானே இருக்கிறீங்கள்..”

“அடப் போம்மா நீ வேறை பொல்லூண்டுற கிழவனைப் பாத்து நாலு வயசு நாற்பது வயசு என்று சொல்லிக் கொண்டு..”

“நிஜமாவே உங்களைப் பார்த்தால் அறுபதுக்கு மேல என்று சொல்லவே முடியாது கவிப்பா..”

“நீயாவது மனசு குளிர்ர போல இப்படி இரண்டு வார்த்தை பேசுறியே அதுவே போதும் செல்விம்மா.. சரி அதை விடு வந்த விசியத்தை விட்டுவிட்டு வேறு எங்கயோ போய் விட்டேன் நான்.. சொல்லும்மா என்ன முடிவு எடுத்திருக்கிறாய்.. மற்றவர்களுடைய கருத்துத் தேவையில்லை எனக்கு.. உன்னோட சம்மதம் தான் வேணும்..”

“எனக்குமே என்ன பதில் சொல்வது என்பதே தெரியவில்லை கவிப்பா.. இரண்டுங் கெட்டான் மனநிலையில இருக்கிறேன்.. ஒரு பக்கம் எல்லாவற்றையுமே தூக்கிப் போட்டு விட்டு சரி என்று சொல்லி விடலாமா என்று தோன்றுகிறது.. மறு பக்கம் ஏன்  இதற்குள் தலையைக் கொடுக்கப் பார்க்கிறாய் என்றும் தோன்றுகிறது கவிப்பா..”

“ம்ம்.. எனக்கும் உன்னோட மனநிலை புரிகிறது அம்மாச்சி.. ஆனால் நான் எப்போது இவ்வளவு சுயநலவாதியாகிப் போனேன் என்பது தான் தெரியவில்லை.. எனக்கு நீ மருமகளாக வந்தால் மட்டும் போதும் என்பது தான் பிரதானமாக இருக்கிறது..”

“எனக்குமே உங்களுக்காகத் தான் சம்மதம் சொல்லவோ என்றே தோன்றுகிறது கவிப்பா..”
என்று கொண்டு கைகளைப் பிசைந்த தாமரைச்செல்வி, ஒரு தடவை நிமிர்ந்து கவிவாணன் முகம் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை
கண்களை மூடி ஆழ மூச்செடுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு,
“எனக்குச் சம்மதம் கவிப்பா..”
என்று சொல்லியே விட்டாள்.

அவளது பதிலில் சந்தோஷம் அடைந்தவர் சிறு பிள்ளை போலக் குதித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்த, இறுகிப் போய் நின்றிருந்த தாமரையும் மெல்லப் புன்னகைத்துச் சிரித்தாள்.

“இப்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா செல்விம்மா.. நாளைக்கே முறைப்படி பொண்ணு கேட்டு உங்களோட வீட்டுக்கு நான் வருவேன்..”

“வேண்டாம் கவிப்பா..”

“ஏன்டா என்னாச்சு..”

“இல்லைக் கவிப்பா.. அங்கே இதெல்லாவற்றையும் எடுத்து நடத்த யாருமே இல்லையே.. பிறகு எதற்கு..”

“ஏன் யாரும் இல்லை அது தான் உன்னை மாதிரியே இரண்டு தங்கமான பட்டுக் குட்டிகள் இருக்கிறார்களே.. சின்னப் பொண்ணுங்க என்றாலும் பக்குவம் நிறையவே இருக்கிறது உன் தங்கச்சிகளுக்கு.. உன்னோட நல்ல விசியத்தை உன் தங்கச்சிமார் நடத்தட்டுமே..”

“யாரும் ஏதும் சொல்ல மாட்டார்களா..”

“யார் என்ன சொல்வது.. என்னை மீறி எவனாச்சும் வாயைத் திறப்பானா.. அப்படியே திறந்தாலும் சும்மா விட்டு விடுவேனா.. மனதைப் போட்டுக் குழப்பாமல் பொறுப்பாக என்னுடைய வீட்டுக்கு விளக்கேற்ற வரும் வழியைப் பாரு செல்விம்மா..”

“அப்படி இருட்டுலேயா இருக்கிறது உங்களோட வீடு..”

“ஹா ஹா ஹா.. நிஜமாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னோட வீடு ரொம்பக் காலமாக இருட்டுலே தான்டா இருக்கிறது.. எப்போது நீ என்னோட வீட்டுக்கு மருமகளாக வருகிறாயோ அப்போது தான் அங்கே வெளிச்சமே பரவும் புரிகிறதா..”
என்று கொண்டே தாமரையின் தலையை வருடி விட்டு
“சரிடாம்மா நாம நாளைக்குச் சந்திப்போம்.. நான் இன்று ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறேன்.. அதைக் கொண்டாடப் போகிறேன்.. நீ சீக்கிரமாக வீட்டுக்குப் புறப்படு..”
என்றவர் அவளை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி விட்டு, உல்லாசமாக விசில் அடித்தபடி ஐஸ்கிரீம் கடை ஒன்றை நோக்கி விரைந்தார்.

முச்சக்கர வண்டியில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தாமரைக்குத் தான் மனசே சரியில்லை. ஃபாரினில் இருந்து படித்த ஒரு பையனுக்கு, படிப்பை ஒழுங்காக முடிக்காத தான் எப்படிப் பொருத்தம் ஆவோம் என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

tobe continue …

3 thoughts on “தாமரையின் தழலவன் அத்தியாயம் 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *