அத்தியாயம் – 12
சந்திரன் பணிக்குத் திரும்பியதும் முதல் வேலையாக பணியாளர் குடியிருப்புக்கு விண்ணப்பித்தான். அலுவலகத்தில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகக் கூடும் என்று தெரிந்தது. சந்திரன் சத்யாவிடமும், தன் வீட்டினரிடமும் விஷயத்தைக் கூறினான்.
இடைபட்ட நாட்களில் சத்யா மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் பற்றி சந்திரனும் எதுவும் சொல்லவில்லை. காமாட்சியும் அவளை அழைக்கவில்லை. ஏன் சந்திரன் ஊருக்குச் சென்ற பிறகு, குழந்தைப் பற்றி கூட கேட்டுத் தெரிந்துக் கொள்ளவில்லை.
சத்யா அவ்வப்போது மாமனாரிடம் பேசி, அங்குள்ள நிலவரம் தெரிந்துக் கொள்வாள். இரண்டு நாத்தனார்களுக்கும் வாரம் ஒரு முறை பேசிவிடுவாள்.
குழந்தை ஸ்ரீகீர்த்தி அந்த அந்த பருவத்திற்கு தகுந்தார் போல வளர்ச்சி இருக்க, அதில் எல்லோருக்கும் சிறு நிம்மதி.
சத்யாவிற்கு சந்திரனின் வருமானம் எல்லாம் தெரியும். ஊருக்கு அனுப்பும் பணம் பற்றிய விவரங்களும் சொல்லியிருக்கிறான். சேமிப்பு பற்றி அதிகம் தெரியாவிட்டாலும், சேமிக்கிறான் என்ற அளவில் தெரியும் தான்.
சத்யா குழந்தை உண்டாகியிருக்கும் போதிலிருந்து மாதம் ஒரு தொகை அவள் பெயரில் அனுப்பி வைப்பான் சந்திரன். சத்யாவின் பெற்றோர்களுக்குப் பணம் பெரிதில்லைதான். ஆனால் சந்திரன் வீட்டிலும் தங்கைகளின் பிரசவ கால செலவுகள் எல்லாம் செய்திருக்கிறார்கள் தானே.
மருத்துவர், மருந்துகள் தவிர ஸ்கேன், டெஸ்ட் என்று எத்தனையோ செலவுகள் உண்டு. எல்லாவற்றையும் சத்யாவின் பெற்றோர் ஏற்றுக் கொள்வது கஷ்டம். அருகில் இல்லாவிட்டாலும் இவை எல்லாம் சந்திரனின் பொறுப்பு தானே. அதனைக் கொண்டு பணம் அனுப்ப ஆரம்பித்து இருந்தான்.
அத்தோடு சந்திரன் தன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணத்தையும் குறைக்கவில்லை. அவனின் செலவுகள் என்பது மிகவும் சொற்பமே. ஒரு பதவி உயர்வு கிடைத்து சம்பளமும் சிறிது கூடியிருந்தது. இருந்தும் இரண்டு செலவுகள் என்பதால் சந்திரனுக்கு இழுத்துப் பிடிக்கத் தான் வேண்டியிருந்தது.
தற்போது குழந்தை பிறந்த பின் செலவுகள் இன்னும் கூடியது. சந்திரன் தன் சேமிப்பில் இருந்து இரு மாதங்கள் எடுத்துக் கொடுத்தான்.
குழந்தை பிறந்து மூன்று அல்லது ஐந்து மாதங்கள் வரை என்றால் சரி. ஸ்ரீகீர்த்தி பிறந்து எட்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருந்தது.
பெற்று, வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த பின்னும், பெண் தன் வீட்டில் இருந்தால் மனதளவில் பெற்றவர்களுக்கும் கஷ்டம் தானே. அத்தோடு செலவும் கூட. குழந்தைக்கு உண்டான வேலைகள், சத்யாவிற்கான பத்திய சாப்பாடு என்று அவர்களுக்கு வேலையும் அதிகமாகிறதே.
சத்யாவால் இதை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவும் முடியாது. எல்லோரின் பக்கமும் ஒரு நியாயம் உண்டே.
சந்திரனுக்கு குவார்ட்டர்ஸ் கிடைக்கவும் நாளாக, சத்யாவிற்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. இந்த யோசனையில் குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பதும் குறையவே, டாக்டர் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க அறிவுறுத்தினார். அதன் பின்னே இனி குழந்தையின் செலவுகள் வேறு கூடுமே சத்யாவிற்கு என்ற கவலை வந்தது.
அந்த நேரத்தில் சத்யாவின் நாடக கம்பெனி தோழிகள் இருவர் குழந்தையைப் பார்க்க வந்துவிட்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க வருகிறாயா எனக் கேட்டனர். சத்யா சட்டென்று மறுத்து விட்டாள் தான். ஆனால் சத்யா தனக்கும் வருமானம் வந்தால் சந்திரனின் சுமை குறையுமே என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
இந்தக் காலகட்டத்தில் தெருவிற்கு ஒரு ஃபோன் என்று இருந்தது மாறி, அநேகமாக எல்லோர் வீட்டிலும் லாண்ட்லைன் ஃபோன் வந்தது. அதற்கு முன் எழுதிவைத்து இரண்டு வருடங்கள் வரை காத்திருந்த காலம் போய் ஒரு மாதத்தில் ஃபோன் கனெக்ஷன் கிடைக்க ஆரம்பித்து இருந்தது. சத்யாவின் வீட்டிலும் கனெக்ஷன் வாங்கியிருந்தார்கள்.
தற்போது ஒரே இடத்தில் கேம்ப் இருப்பதால் சந்திரனால் அவனின் வீட்டிற்கும், சத்யாவிற்கும் அடிக்கடி பேச முடிந்தது. அடுத்த கிரேடு பதவியில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் ஃபோன் செய்யலாம் என்பது போன்ற சில அதிகப்படி சலுகைகளும் கிடைத்தன.
சந்திரன் பேசும்போது சத்யா தனக்கு மீண்டும் நடிக்க கிடைக்கும் வாய்ப்புகள் பற்றிக் கூற, சந்திரன் சட்டென்று மறுத்தான். ஆனால் சத்யா விடாது சந்திரன் போனில் பேசுகையில் இதற்கு முன் நடித்த அனுபவங்கள், நாடகக் குழுக்கள் பற்றிய விவரம் எல்லாம் பேச்சுவாக்கில் கூறினாள்.
சத்யா நடித்த நாடக கம்பெனி ஓனர் ஒரு திரைப்படம் எடுத்தார். அது அவரது முதல் படம் வேறு. அதில் நடித்த ஹீரோயினுக்கு டப்பிங் பேசும் சமயத்தில் டைஃபாய்ட் ஜுரம் வந்திருக்க, அவர் மருத்துவமனையில் படுத்திருந்தார். படத்தை இன்னும் சில நாட்களில் திரையிட வேண்டியிருக்க ஹீரோயின் டப்பிங் பகுதி முடித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்ற சூழ்நிலை.
இந்த சமயத்தில் அந்த ஓனருக்கு சத்யாவின் நினைவு வர, அவரே நேரில் வந்து டப்பிங் மட்டும் முடித்துக் கொடுக்கக் கேட்டார். திரையில் தான் வரப்போவது இல்லையே என்ற எண்ணத்தில் சத்யவதிக்கும் சம்மதிக்கத் தோன்றியது. ஒருநாள் மட்டும் அவகாசம் கேட்டுப் பதில் கூறுவதாகச் சொன்னாள்.
அதன் பின் சந்திரனிடம் பேசிய சத்யா, டப்பிங் பற்றி எடுத்துக் கூறி சம்மதம் கேட்டாள். அதற்கும் சந்திரன் எளிதில் சம்மதிக்கவில்லை. ஆனால் சத்யாவின் பேச்சுத் திறமையால் முதலில் தன்னால் முடியுமா என்று பார்த்து வர சம்மதம் வாங்கிவிட்டாள்.
நாடகக் குழுவின் ஓனரிடம் சம்மதம் தெரிவித்ததும், அடுத்த நாளே சத்யாவை வரச் சொல்லி விட்டார். முதலில் ஹீரோயின் நடித்தக் காட்சிகள் அனைத்தும் திரையிட்டுக் காட்டி, பின் அவரின் வாயசைவுக்கு ஏற்றவாறு டயலாக் பேச வேண்டும்.
மற்ற ஆர்டிஸ்ட்களுக்கு டப்பிங் செய்யும் பெண்மணியிடம் கற்றுக் கொள்ளச் சொல்லி ஒருநாள் அவகாசமும் கொடுத்தார். இடைவெளி விட்டு விட்டு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அவர் டப்பிங் பேசி முடிக்க, சத்யாவும் அந்தப் பெண்மணியை அப்படியே அவதானித்தாள்.
குழந்தையைத் தாயிடம் விட்டுவிட்டு, குழந்தையின் உணவு நேரத்திற்கு மட்டும் சென்று கவனித்துக் கொண்டாள்.
அன்றைய தினம் சென்று வந்ததைப் பற்றி இரவே சந்திரன் போனில் கேட்க, சத்யா சொல்லவும், சந்திரனுக்குச் சங்கடமாகவே இருந்தது. ஆறு மணி நேரம் பேசினால் சத்யா தொண்டை என்னாகும். குழந்தை பசியில் வாடுமே என்று எல்லாம் சத்யாவிடம் கேட்டான்.
சத்யா எல்லாவற்றிற்கும் தீர்வு கூறினாள். அந்த கம்பெனி ஓனரே சத்யாவை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுத்துக் கொள்ளக் கூறியிருந்தார். அவர்கள் டப்பிங் ஸ்டுடியோ அலுவலக அறையில் குழந்தைக்குத் தேவையானதை சத்யா பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தார். இந்தப் படம் டப்பிங் வேலை தொடர்ந்து ஒரு வாரம் மட்டுமே என்றும், அதற்கு அவர் கொடுப்பதாகக் கூறிய தொகையும் அதிகமே என்று கூறினாள். சந்திரனால் மறுக்க முடியவில்லை.
பணத்திற்காக மட்டும் சந்திரன் சம்மதிக்கவில்லை. சத்யா தங்கள் வீட்டை விட்டுச் சென்று ஒரு வருடமே ஆகி விட்டது. இன்னும் காமாட்சிக்கு சத்யாவை தங்கள் வீட்டிற்கு கூப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. அமுதா, அகிலா எல்லோரும் கேட்டும் கூட சந்திரனோடு சத்யா இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.
ஒருமாதிரி விட்டேத்தியாகத் தான் சத்யா, சந்திரன் இருவரிடமும் காமாட்சியின் பேச்சுக்கள் இருந்தன. அதற்காக சந்திரன் அனுப்பும் பணம் வேண்டாம் என்று எல்லாம் கூறவில்லை. அது அவனது கடமை என்பது போல நடந்துக் கொண்டார். அதில் சந்திரனுக்கு மிகவும் வருத்தம் தான். ஆனால் அவனாலும் அவர்களை விட முடியாதே.
தான் இல்லாமல் சத்யா அங்கே செல்வதில் சந்திரனுக்கும் உடன்பாடில்லை. சத்யா அவளின் வீட்டிலே இருந்தால் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து வேதனை தான் மிச்சமாகும். அதற்கு வேலைக்குப் போவது நல்லதே என்றே நினைத்தான்.
சந்திரனுக்கு சத்யா டீச்சர் வேலை போல் சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் சத்யாவின் மனமோ கலைத் தொழிலின் மீதே இருக்க, அரைமனதோடு சம்மதித்தான்.
மேடை நாடகம் நடித்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு திரைத் துறையோடான சம்பந்தம் டப்பிங் பேசுவது மூலம் ஆரம்பித்து இருந்தது.
-தொடரும் –
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். தொடர்ந்த வேலைகளால் அத்தியாயம் தாமதமாகிவிட்டது நட்புகளே. நன்றி .
சத்யா மெல்ல மெல்ல திரைத்துறைக்கு வருவதற்கான காரணம் ரொம்பத் தெளிவா இருக்கு. அடுத்து என்ன நடக்கும்னு கொஞ்சம் பயமா இருக்கு. இதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமோ. கதை ஒரு பரபரப்பான இடத்தில வந்து நிற்கிறது. அடுத்து என்னவென அறியக் காத்திருக்கிறேன்
ஏற்கனவே காமாட்சி ஆடும், இப்போ சினிமால டப்பிங் பேச போவதை ஊதி பெருச்சாக்கி டைவர்ஸ் வரைக்கும் கொண்டு விட்டதோ
Good going ma
இருவரும் இந்த காமாட்சியால தான் பிரித்திருப்பாங்க
Nice epi.
Reasons clear a iruku. But avanga life?
பிரிவுக்கு காரணங்களை அழகாக அடுக்கிட்டிங்க பிரிவுக்கு பாதி காரணம் காமாட்சி அம்மா என்றால் சத்தியா சந்திரன் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வரும் சூழ்நிலைகளும் பாதி காரணமாகும்ன்னு தோணுது
Interesting😍