Skip to content
Home » மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

“அயின்வென்ன அயின்வென்ன. ஹெமோம அயின்வெலா இடதென்ன. (வழி விடுங்க வழி விடுங்க… எல்லாரும் தள்ளிப் போய் இடம் விடுங்க.)” என்றவாறு சுற்றியிருந்த காவலர்களின் உதவியுடன் விமானநிலைய நுழைவாயில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார் ராஜபக்ஷ.

அவரைப் பின் தொடர்ந்தவாறு காவல் உத்தியோகத்தர்கள் புடைசூழ மென் சிரிப்புடன் நடந்து வந்தனர் தென்னிந்திய நடிகர்கள், பாடகர்கள் எனத் திரைப்பிரபலங்கள் சிலர்.

இதுவரை தொலைக்காட்சியில் மாத்திரம் கண்டிருந்தவர்களை நேரடியாகக் காணக் கிடைக்கவும் மக்கள் ஆரவாரக் கூச்சலிட ஆரம்பிக்க, அவர்களைத் தாண்டி தம் பணியினை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது காவல்துறையினருக்கு.

விமானநிலையத்தில் இருந்த பயணிகளுக்கு வேறு பெரும் போராட்டத்துடன் தான் திரண்டிருந்த சனத்தைத் தாண்டி உட்பிரவேசித்துக் கொண்டும் வெளியேறிக் கொண்டும் இருந்தனர்.

போதாக்குறைக்கு பத்திரிகைகள் மற்றும் நியூஸ் சேனல்களில் இருந்து கூட வந்திருந்தவர்களைப் பேட்டி காண கையில் மைக் மற்றும் கேமராக்களுடன் நின்றிருந்தனர்.

இந்தியாவில் இருந்து வந்திருந்த பிரபலங்கள் அவர்களுக்கு மேலோட்டமாகப் பதில் கூறிக் கொண்டிருந்த அதேவேளை அதே விமானநிலையத்தில் சற்றுத் தள்ளி தன் நண்பன் முரளியுடன் பயணப் படைகளுடன் நின்றிருந்தான் நவீன்.

ஆம்… பல வருடங்களாக தாய் நாட்டை விட்டுப் பிரிந்து வேலைக்காக கட்டாரில் இருந்தவன் தாயின் வற்புறுத்தலாலும் தன் சொந்தங்களைக் காணும் ஆவலிலும் தாயிற்கு திடீர் அதிர்ச்சி கொடுப்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கி இருந்தான்.

ஏற்கனவே கட்டார் விமான நிலையத்தில் இருந்தவனுக்குத் தான் அவனின் தாய் மேகலை அழைத்து தன் மனக் குமுறலைக் கொட்டி இருக்க, தன் குடும்பத்தைக் காணப்போகும் மகிழ்ச்சியில் இருந்த நவீனுக்கு மேகலை திருமணப் பேச்சை எடுக்கவும் கடுப்பாகி விட்டது.

ஏனோ அவனுக்கு இன்றளவும் திருமணத்தில் நாட்டம் இருக்கவில்லை.

காரணம் அவனின் தலைக்கு மேல் குவிந்திருந்த குடும்பப் பொறுப்புக்கள்.

தங்கையின் திருமணத்திற்கு வேறு பல லட்சங்களில் கடன் வாங்கி இருக்க, அவற்றையே இன்னும் அடைத்து முடிக்கவில்லை.

இதில் மனைவி என வருபவளின் பொறுப்புகளையும் சுமக்க நவீன் தயாராக இருக்கவில்லை.

தம் முன்னே திரண்டிருந்த பயணிகள் கூட்டத்தை சலிப்பாகப் பார்த்த நவீன், “ப்ச்… என்ன பொக்க இது? இவ்வளவு வெலனயோட வந்தும் இப்படி சனமா இருக்குது. என்ன சரி விசேஷமா இன்டைக்கி? இங்கின இருந்து வெளிக்கிடவே மிச்சம் நேரம் ஆகும் போல. (பொக்க-நண்பா, வெலன-காலை, இன்டைக்கி-இன்று, இங்கின-இங்கிருந்து, வெளிக்கிடவே-வெளியேறவே, மிச்சம்- அதிகம்)” என்றான் நவீன்.

எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்ற கடுப்பில் நவீன் நின்றிருக்க, அவனின் நண்பன் முரளியோ நவீன் கூறியதைக் காதிலியே வாங்காமல் எங்கோ பார்த்து இளித்துக் கொண்டிருந்தான்.

அதனைக் கவனித்த நவீன், “டேய்… ஒனக்கிட்ட தான் டா கதைச்சிட்டு இருக்கேன். நீ எங்குட்டு பராக்கு பார்த்துட்டு இருக்க? (ஒனக்கிட்ட-உன் கிட்ட, கதைச்சிட்டு-பேசிட்டு, பராக்கு பார்த்தல்-ஏதோ ஒன்றில் கவனத்தை நிலைநிறுத்தி இருத்தல்)” எனக் கேட்டவாறு முரளியைப் போட்டு உலுக்கினான்.

“ரம்பா டா..‌. ரம்பா… தொடையழகி…” என்றான் முரளி முப்பத்திரண்டு பற்களையும் வெளியே காட்டி கண்கள் மின்ன.

“அட ச்சே… கருமம் கருமம். ஒன்ட புத்தி எப்படி போறன்டு பாரு. வடியுது… தொடலச்சிக்கோ. (ஒன்ட-உன்னோட)” என்றான் நவீன் தலையில் அடித்தபடி.

“டேய் டேய் நவீனு… யாழ்ப்பாணத்துல சிங்கர் ஹரிஹரனோட கோன்சர்ட் இருக்காம் டா. அதுக்குத் தான் டா எல்லாரும் வந்து இருக்காங்க. எங்கட ஊருலயே நடக்கப் போகுது பொக்க. கட்டாயம் போகவே வேணும்.” என முரளி கூறவும், “சரிடாப்பா… மொதல்ல அதுக்கு இங்கிருந்து வெளிக்கிட்டு ஊட்டுக்கு போகணும். (ஊட்டுக்கு-வீட்டுக்கு)” என்றான் நவீன் பதிலுக்கு.

“ஸ்டேஜ் முன்னாடி ஃபர்ஸ்ட் ரோல இருந்து பாக்கணும்டா. அப்ப தான் ரம்பா தெளிவா தெரியும். நான் உடனே டிக்கட் புக் பண்ணுறேன்.” என்ற முரளி உடனே கைப்பேசியில் டிக்கெட் புக் செய்ய, “இவன் ஒத்தன்… எதுக்கு டா வேஸ்ட்டா சல்லிய செலவழிக்கிற. அதான் ஃப்ரீ டிக்கெட் கெடைக்குமே. (ஒத்தன்-ஒருத்தன், சல்லி-காசு, கெடைக்கும்-கிடைக்கும்)” என்றான் நவீன்.

“ஃப்ரீ டிக்கட்ல போனா ஒரு தொங்கல்ல இருந்து சன நெரிசல்ல எட்டி பாக்கணும். அதெல்லாம் சரி வாரல்ல. நீ கொஞ்சம் நேரம் சும்மா இரியே. (தொங்கல்-மூலை, வாரல்ல-வராது/ வருதில்ல, இரியே-இரு)” என்றான் முரளி கடுப்பாக.

ஒருவாறு மக்கள் கூட்டம் சற்று அடங்கியதும் இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது பல மணி நேரங்கள் கடந்து இருந்தன.


“லேலி… எஹுனா நேத சாமின் வஹன்சே கிவ்வதே. மெயாகே கேந்தரே கெடலுவக். ஏஹிந்தா இக்மனட்ட மே வசரேம மெயாகே விவாஹய கன்ன ஓனே. ஹொந்த கொல்லெக் பலலா மெயாவ யெவ்வொத் தமய் அப்பிட்ட சன்சுன்வ ஹுஸ்மகன்ன புலுவன். (மருமகளே… பிக்கு சொன்னது கேட்டீங்க தானே. இவளோட ஜாதகத்துல பிரச்சினை. அதனால அவசரமாக இந்த வருஷமே கல்யாணத்த பண்ணி ஆகணும். நல்ல பையனா பார்த்து இவள கட்டி அனுப்பினா தான் எங்களால நிம்மதியா மூச்சு விட முடியும்.)” என்றார் அமாயாவின் பாட்டி வீட்டினுள் நுழைந்ததுமே.

“மட்ட பே தென்ம கசாத பந்தின்ன ஆச்சி. மம தவத் இகெனகன்ன ஓனே. ஒயாட சன்சுன்வ ஹுஸ்ம கன்ன ஓனெனம் ஹொந்த இன்ஹெலர் எகக் யூஸ் கரன்ன. மாவ மொக்கட்டத கெதரின் பண்ணன்ன ஹதன்னே? (எனக்கு கல்யாணம் பண்ணிக்க முடியாது பாட்டி. நான் இன்னும் படிக்கணும். உங்களுக்கு நிம்மதியா மூச்சு விட வேணும்னா நல்ல இன்ஹேலர் ஒன்னு யூஸ் பண்ணுங்க. என்னை எதுக்கு வீட்ட விட்டு விரட்ட பார்க்குறீங்க?)” எனக் கேட்டாள் அமாயா கோபமாக.

“கட்ட வஹப்பன் கெல்லே. வெடிஹிட்டியன்கே இஸ்ஸரஹா சத்த அடுகரலா கதாகரன்ன நுபகே அம்மா கியலா தீலா நெத்த? ஒக்கோம இகெனகத்து உடங்குகம. (வாயை மூடு பொண்ணே. பெரியவங்க முன்னாடி சத்தத்த குறைச்சி பேச உன்னோட அம்மா சொல்லித் தந்தது இல்லையா? எல்லாம் படிச்ச திமிர்.)” என்றார் பாட்டியும் பதிலுக்கு கோபமாக.

அமாயா மீண்டும் மறுத்துப் பேச வாயெடுக்க, “அமாயா… கட்ட வஹப்பன். மீட்ட வெடிய வச்சனயக் கதாகரன்ன பே. பலயன் காமரயட்ட. மொனவாத தாமத் பலாகென இன்னே? பலயன் கிவ்வே. (அமாயா… வாயை மூடு. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக் கூடாது. போடி ரூமுக்கு. இன்னும் என்ன பார்த்துட்டு இருக்க? போடின்னு சொன்னேன்.)” என இவ்வளவு நேரமும் மகளுக்கும் மாமியாருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த அமாயாவின் தாய் ருவினி நிலைமையை மாற்றும் பொருட்டு அமாயாவை அதட்டினார்.

உடனே அமாயா கோபமாகத் தன் அறைக்குச் சென்று விட, பாட்டியும் சற்று அமைதி அடைந்தார்.

“சமாவென்ன நெந்தம்மே. ஒயா இதின் தன்னவனே துவ கென. தாமத் எயாட்ட எச்சர லோக்கே கென தன்னேனே. (மன்னிச்சிடுங்க அத்தை‌. உங்களுக்கு தான் இனி தெரியுமே மகள் பத்தி. அவளுக்கு இன்னும் வெளியுலகம் பத்தி அவ்வளவா தெரியாது.)” என்றான் ருவினி சங்கடமாக.

“ஹ்ம்ம்… டிக்கக் ஹொந்த புருத்து கியலா தென்ன ஒய கெல்லட்ட. தவ கெதரக்கட்ட கிஹின் ஜீவத்வென்ன ஓனே. மெஹெம இந்தலா பே. ( கொஞ்சம் நல்ல பழக்கம் சொல்லிக் கொடு அந்தப் பொண்ணுக்கு. இன்னொரு வீட்டுக்கு போய் வாழணும். இப்படி இருந்து சரி வராது.) என்று விட்டு சென்றார் பாட்டி.

அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட அமாயாவிற்கு கோபம் தீரவில்லை.

அவளுக்கு ஏனோ இப்போதே திருமண வாழ்வில் காலடி எடுத்து வைக்க மனமில்லை.

மருத்துவத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவளது அவா.

“யாரு கேட்ட இவங்க கிட்ட இப்ப கலியாணம்? எப்பப் பாத்தாலும் அடுத்த ஆள்க்கள்ட கதைய கேட்டுட்டு எங்கள கரச்சல் பண்ணுற. சரியான விசர் புடிச்ச மனுஷங்க. இந்த ஆச்சியப் பத்தி தெரியாம இவட்டயே வாய குடுக்குற. (கரச்சல்-தொல்லை, விசர்-பைத்தியம்)” எனத் தன் பாட்டியை அர்ச்சித்தவாளு அறையில் நடை பயின்றாள் அமாயா‌.

அதே சமயம் அவளது கைப்பேசி ஒலி எழுப்பி தன் இருப்பை வெளிப்படுத்த, யார் என்று கூட பார்க்காமல் கோபத்துடன் அழைப்பை ஏற்று, “என்ன?” எனக் கத்தினாள்.

மறு முனையில் அழைப்பில் இருந்த அவளது தோழி சௌந்தர்யாவோ, “அம்மா… ஏன்ட காது. எதுக்கு டி இப்ப ஆன்சர் பண்ணதும் ஏன்ட மேல பாயுற? (ஏன்ட-என்னுடைய)” எனக் கேட்டாள் கோபமாக.

“ப்ச்ச்… சொரி டி. இந்த ஆச்சி வெலனயோட அவட பனய தொடங்கிட்டா. எதுக்கு கோல் பண்ண? (வெலனயோட-காலையிலே, பன-பிரசங்கம்)” எனக் கேட்டாள் அமாயா சற்று சமாதானமாக.

“நீ கத்தப் பெயிட்டு அதை மறந்துட்டேன் பாரு. ஒன்ட அப்பச்சி சொன்னாரா இந்தியால இருந்து சிங்கர்ஸ் அன்ட் அக்டர்ஸ் வந்து இருக்காங்கன்டு? நாளைக்கு ராவைக்கு முற்றவேலி ஸ்டேடியத்துல சிங்கர் ஹரிஹரனோட கோன்சர்ட் நடக்கப் போகுது. ஜாதியா இருக்கும் டி. (பெயிட்டு-போய்ட்டு, அப்பச்சி-அப்பா, ராவைக்கு-இரவுக்கு, ஜாதியா-செம்மயா)” என்றாள் சௌந்தர்யா ஆர்வமாக.

“எனக்கு ஏலா டி சௌந்து. நீ மத்த கூட்டாளிகளோட பெயிட்டு வா. ஒனக்கு தான் தெரியுமே எனக்கு இந்த இந்தியன் சினிமாவுல எல்லாம் விருப்பம் இல்ல. எங்கட நாட்டு சினிமா ஃபேன் நான்.” என அமாயா மறுக்கவும், “ப்ளீஸ் டி அமாயா. நீ தானே ஏன்ட பெஸ்ட்டி. ஹேமாலோட படம் ரிலீஸானா நான் ஒன்னோட படம் பார்க்க தியேட்டர் வாரேன் தானே. வா டி ப்ளீஸ். ஒரு நாளைக்கு தானே. நீ சும்மா எனக்கு கம்பனி மட்டும் குடு.” என்றாள் சௌந்தர்யா கெஞ்சலாக.

ஏதோ மறுத்துக் கூற அமாயா வாய் திறக்க முன் இடையிட்ட சௌந்தர்யா, “இங்கப் பாரு அமாயா. ஊட்டுல இருந்துட்டு ஓன்ட ஆச்சிட பனய கேக்குறதுக்கு என்னோட கோன்சர்ட் பார்க்க வர ஏலும் தானே. நல்ல ஜொலியா இருக்கும் டி. நீ இது வரைக்கும் ஹரிஹரன் சோங்ஸ் கேட்டில்லையே. நாளைக்கு வந்து பாரு. நீயே அடிக்ட் ஆகுவ. நான் நாளைக்கு அந்திக்கு அஞ்சி மணிக்கு போல வந்து ஒன்ன பிக்கப் பண்ணிக்குறேன். நீ ஊட்டுல பர்மிஷன் வாங்கி ரெடியாகி இரு. (அந்தி-மாலை, ஊட்டுல-வீட்டுல)” என்று விட்டு அமாயாவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பமே வழங்காது அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *