Skip to content
Home » கொல்லிப்பாவை அத்தியாயம் 5

கொல்லிப்பாவை அத்தியாயம் 5

அத்தியாயம் 5

“ஏன்டா அந்த பொண்ணே தான் உனக்கு வேணுமா? ஜாதகத்துல ஏதோ தோசம் இருக்கும் போல. ஆளும் அட்டைகரியாட்டம் இருக்கா… அவளை போயி லவ் பண்ணுறேன்னு சொல்லுறியேடா…!” என்று அங்கலாய்தார் தமயந்தி.

“ம்மா அப்படிலாம் பேசாத மா. கலர்லாம் முக்கியமா?” என்று கேட்டான் கார்த்திக்.

“என் பிள்ளைக்கு அவனுக்கு ஏத்தா போல அழகா ஒரு பொண்ணு வரணும்னு நான் எதிர்பார்க்க கூடாதா டா?” என விதண்டாவாதம் செய்தார் தமயந்தி.

“அதெல்லாம் தப்பு மா. இப்படிலாம் பேசினா நாலு பேர் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? கிட்டதட்ட ஆபிஸ்ல இருக்க எல்லாருக்குமே எங்களை பத்தி தெரியும். கல்யாணம் பண்ணிக்க போறோம்னு ப்ரெண்ட்ஸ்கிட்டலாம் சொல்லிட்டேன். இப்ப போயி பிரத்தியங்கரா வேண்டாம்னு சொன்னா என்னை பத்தி தப்பு தப்பா பேசுவாங்க மா…” என்றான் கார்த்திக்.

பிரத்தியங்கராவிடம் ஆரம்பத்தில் எதுவோ ஒன்று கார்த்திக்கை ஈர்த்தது உண்மை தான். ஆனால் நாளாக நாளாக, அவள் தனக்கு பொருத்தமான ஜோடி தானா என்பதில் அவனுக்குமே சந்தேகம் உண்டு தான். என்ன செய்வது நண்பர்களிடம் சொல்லியாகி விட்டது என்பதால் அந்த நினைவுகளை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு திருமணம் வரை வந்துவிட்டான். 

கார்த்திக்கிற்கு எப்பொழுதுமே தன் இமேஜ் மிக முக்கியமானது. அதற்கு சிறு களங்கம் வந்ததாலும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. 

“டேய் அந்த பொண்ணு ஜாதகத்துல எதுவோ தோசம் இருக்கு டா…” என்றார் தமயந்தி அயற்சியாக.

“தோஷத்துக்கு தான் பரிகாரம் இருக்குல்ல மா. அதை செஞ்சா சரியாகிடும்.” என கெஞ்சாத குறையாக பேசிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

எப்படியோ தமயந்தியிடம் கெஞ்சி கூத்தாடி பிரத்தியங்கரா தான் வேண்டும் என விடாபிடியாய் நின்றுவிட்டான் கார்த்திக்.

“போயி தொலை… யானை தன் தலையில மண்ணை வாரி போட்டுக்கற மாதிரி, நீயே உன் வாழ்க்கை கெடுத்துக்கறேன்னு நிக்கிற… நாங்க சொல்லியா கேக்க போற… நீ எல்லாம் பட்டா தான் திருந்தவ.” என கோபத்தில் குதித்த தமயந்தி,

“அந்த பொண்ணுக்கு ஜாதகத்துல இருக்க தோஷம்லாம் விலகிடுச்சுனு தெரிஞ்ச பின்னாடி தான் கல்யாணம் நடக்கனும் சொல்லிட்டேன். இல்லைனா இந்த தமயந்தியை வேற ஆளா பாப்ப நீ…” என மிரட்டிவிட்டு சென்றார்.

ஏதோ இந்த அளவிற்கு தமயந்தி இறங்கி வந்ததே பெரிய விசயமாய் கருதி, அதை பிரத்தியங்கராவிடம் பேச சென்றால், அவளோ இவனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்ன ஏதென விசாரித்தால் மூஞ்சில் அடித்தது போல பதில் பேசுகிறாள். எல்லாமே தவறாக பட்டது கார்த்திக்கிற்கு.

அந்த வாரம் இறுதிவரை பொறுமையாக பல்லை கடித்தபடியே ஓட்டினான் கார்த்திக். நேரில் பார்த்தால் கூட பிரத்தியங்கரா எதுவுமே பேசாமல் கடந்து போனாள். அதை கார்த்திக்கினால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பிரத்தியங்கராவை தனியே ஒரு கபேக்கு அழைத்திருந்தான் கார்த்திக். அவள் செய்த தவறை இத்தனை நாள்களில் உணர்ந்து மன்னிப்பு கேட்க தயங்கி கொண்டு தான் தன்னை தவிர்க்கிறாள் என்பது அவனது எண்ணம்.

எப்பொழுதும் போல அல்லாது ஆடி அசைந்து பொறுமையாகவே வந்தாள் பிரத்தியங்கரா. முன்பெல்லாம் கார்த்திக்கிற்காக இவள் தான் வந்து காத்து கிடப்பாள். இப்பொழுதோ நிலைமை தலைகீழ்.

“வர்றதுக்கு இவ்வளவு நேரமா? பங்க்சுவாலிட்டியே உனக்கு தெரியாதா?” எள்ளும் கொள்ளுமாக காய்ந்தான்.

“பங்க்சுவாலிட்டி பத்தி யார் பேசனும்னு இருக்கு கார்த்திக்.” என திருப்பி கொடுத்தாள் பிரத்தியங்கரா.

“அப்போ இத்தனை நாள் நான் உன்னை வெயிட் பண்ண வச்சி வேணும்னே லேட்டா வந்தேன்னு சொல்லுறியா?” என்று கேட்டான் கார்த்திக்.

“ஒரே ஒரு நாள் எனக்கு முன்னாடி நீ வந்து வெயிட் பண்ணேன்னு சொல்லு பாப்போம்?”

“ஓஓஓஓ… இப்ப என்னையே நீ குறை சொல்ல ஆரம்பிச்சிட்டியா? காதலிக்கற வரை இனிக்கும், கல்யாணம்னா மட்டும் கசக்கும்ல. கலட்டி விடலாம்னு தானே பாக்குற…” என கேட்டான் கார்த்திக்.

உண்மையில் அவன் ஆழ் மனதில் பிரத்தியங்கரா வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என ஆசைதான்; ஆனால் அவள் அப்படி சொல்லிவிட்டாள், மேல் மனதிற்கு கோபம் வரும். குய்யோ முய்யோவென குதிக்கும்‌. அவளையே பழி சொல்லி திட்டி தீர்க்கும்.

“ஸ்டாப் இட் கார்த்திக். எப்ப பார்த்தாலும் என்கிட்ட எதாவது சண்டை போட்டுட்டே இருக்க. ஒரு நாளாச்சும் ஃப்ரீயா விடுறியா என்னை? ஒரு நாள் சீக்கிரமா வந்துட்டு இந்த குதி குதிக்கற நீ… நான் எத்தனை நாள் சீக்கிரமா வந்துருப்பேன். இதுவரை ஒரு வார்த்தை சொல்லி காட்டிருப்பேனா? உனக்கு எல்லாமே நீ சொல்லுற படி, நீ நினைக்கிற படி தான் நடக்கனும் இல்லை? அப்படி நடக்கலைனா என்னை கடிச்சி குதறி என் நிம்மதியை ஸ்பாயில் பண்ணிடுவ…” என்று எண்ணையில் இட்ட கடுகாக பொறிந்தாள் பிரத்தியங்கரா.

“நீ பையன் கார்த்திக். உன்னை யாரும் எதுவும் கேள்வி கேக்குறது இல்லை. ஆனா நான் பொண்ணு. இதுவரைக்கும் எங்க வீட்டுல நான் எங்க போறேன் என்ன பண்ணுறேன்னு கேட்டதே இல்லை. ஆனா இப்போ தோண்டி துருவி கேள்வி கேக்குறாங்க. அவங்களைலாம் சமாளிச்சிட்டு வர்றதுக்குள்ள அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு.” மனதில் இருந்ததை கொட்டினாள்.

“அதான் கல்யாணம்னு முடிவு பண்ணியாச்சுல… அப்பறம் என்ன?”

“இன்னமும் கல்யாணம் ஆகல கார்த்திக். இப்ப தான் பேச்சு வார்த்தையே ஆரம்பிச்சிருக்காங்க.”

வந்ததும் பிரத்தியங்கரா மன்னிப்பு கேட்டிருந்தால், கார்த்திக் மன்னித்திருப்பான். அதை விட்டுவிட்டு அவள் தன்னையே எதிர்த்து பேசவும் அவனுக்கு கோபம் சுர்ரென ஏறியது. அதுவும் திருமணத்தை பற்றி பேசினாலாவது அவள் அடங்குவாள் என எதிர்பார்த்தால், அதற்கும் இங்கு வழியை காணம்.

“உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க பிரத்தியங்கரா?”

“நீ என்ன கார்த்திக் நினைச்சிட்டு இருக்க? என் ஜாதகத்துல பிரச்சனை இருக்குனு எங்கப்பா ஆறு மாசத்துக்கு அப்பறம் கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னாரு. அது கூட, என்னால உங்களுக்கு எந்த தொந்திரவும் வந்திட கூடாதுனு நினைச்சி தான் சொன்னாரு. ஆனா நீ ஏன் ஆறு மாசத்துக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லுறாங்கனு தொங்கிட்டு இருக்க. உனக்கு அவ்வளவு அவசரம்னா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ கார்த்திக்.”

கார்த்திக்கிற்கு தன் தாய் சொல்லியது நினைவில் வந்து போனது. பிரத்தியங்கராவின் தந்தையும் தங்களின் நல்லதை முன்னிட்டு தான் திருமணத்தை தள்ளி வைக்க சொல்லியிருக்கிறார் எனவும் கொஞ்சம் இறங்கி வந்தான்.

“சாரி சாரி பிரத்தியங்கரா… நான் இனிமே நம்ம கல்யாணத்தை பத்தி டென்ஷனாகி ஓவரா பேச மாட்டேன். கூல்.” என்றான் கார்த்திக்.

பேசி முடித்தவுடன் தான் என்ன பேசினோம் என்றே அவனுக்கு நினைவு வந்தது. எப்பொழுதுமே பிரத்தியங்கரா தான் மன்னிப்பு கேட்பாள்; இன்று எப்படி தன் வாயில் இருந்து மன்னிப்பு என்ற சொல் வந்தது? அதையே மண்டைக்குள் யோசித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். பிரத்தியங்கரா பேசிய எதுவுமே அவன் மண்டைக்குள் ஏறவில்லை.

தன் சூழ்நிலை பற்றி தெளிவாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்த பிரத்தியங்கரா, கார்த்திக் தான் பேசுவதை கவனிக்கவில்லை என்ற கடுப்பில், சத்தமாக, “சீ கார்த்திக் இதான் உன் பிரச்சனை. நீ என்ன உளறினாலும் அதை புல் அட்டென்சனோட நான் கேட்பேன். ஆனா நீ, நம்ம லைஃப் பத்தி முக்கியமான விசயம் பேசும்போது கூட வேற என்னமோ நினைச்சிட்டு இருக்க. தயவு செஞ்சி உன் கூட வாழ்க்கையை ஷேர் பண்ணிக்க முடிவெடுத்ததுக்காக என்னை ரொம்பவே ரெக்ரெட் பண்ண வச்சிடாத கார்த்திக். நான் கிளம்பறேன்.” என்றவள், கோபத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாள்.

பிரத்தியங்கரா பேசிய முடிக்கும் வரை அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். இத்தனை நாட்கள் அவன் பேசினான்; அவள் கேட்டு கொண்டிருந்தாள். இன்று அவள் பேசும் பொழுது ஐந்து நிமிடம் கூட கார்த்திக்கால் பொறுமையாக கேட்க முடியவில்லை. ஆண் எனும் ஈகோ அவனை தடுத்தது.

கார்த்திக்கின் கடுப்பான நடவடிக்கைகள், அடிக்கடி கேட்கும் அம்மாவின் குத்தல் வார்த்தைகள், எதையுமே கண்டும் காணாமல் இருக்கும் தந்தை எல்லாம் கல்யாண பேச்சு ஆரம்பித்த பின்பு தான். தவறு செய்துவிட்டோமோ என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தாள் பிரத்தியங்கரா. மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பார்கள் என இன்னமும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

“பிரத்து உக்காரு மா உன்கிட்ட கொஞ்ச பேசனும்.” என அழைத்தார் மணியரசு. அவருக்கு எதிர் சோஃபாவில் அமர்ந்தாள் பிரத்தியங்கரா.

“ஏன் டா முகம் வரவர ரொம்ப டல்லடிக்குது?” என கவலையோடு கேட்டார் மணியரசு.

இதுவரை சந்தோசம் மட்டுமே வாழ்வென வாழ்ந்தவள், வரும் சின்ன சின்ன இடர்களை கண்டு அரண்டு போனதன் விளைவு தான், முகம் இருளடைந்து கிடந்தது.

தந்தை குறிப்பிட்டு கேட்கவும், முகத்தை சரி செய்து கொண்டவள், “ஆபிஸ்ல நிறைய வேலை அப்பா. லாஸ்ட் மினிட் கிளையண்ட் கால் அது இதுன்னு…” மெல்லிய புன்னகையும் சேர்த்து சொல்ல, மணியரசுக்கு நம்பும்படியாக இருந்தது.

‘வரவர நல்லா பொய் சொல்ல கத்துக்கிட்ட பிரத்து நீ…’ என அவளின் மனசாட்சி சொன்னது.

“நம்ம கிட்ட இல்லாத காசாடா? நீ தான் வேலைக்கு போறேன்னு அடம்பிடிச்சி போன… இப்ப பாரு உன் முகம் வாடற அளவுக்கு வேலை தர்றாங்க. பேசாம நீ வேலையை ரிசைன் பண்ணிடும்மா. கல்யாணம் பண்ணனும்னு முடிவாகிடுச்சு. ஜோசியர் வேற பரிகாரம் பண்ணனும்னு சொல்லிட்டாரு. கால காலத்துல எல்லாத்தையும் செஞ்சா தான் டா அது அதுக்கு மதிப்பு இருக்கும்.” என்றார் மணியரசு நீளமாக.

பிரத்தியங்கராவிற்கு ஆமோதித்து பேச கூட மனம் வரவில்லை. எப்படியாவது இங்கிருந்து தப்பித்தால் போதுமென நினைத்தவள், சரியென தலையாட்டிவிட்டாள்.

கார்த்திக்கிடம் வேலையை விட்டு நிற்பது பற்றி சொன்னதும் தாம்தூம் என குதிப்பான் என பிரத்தியங்கரா எதிர்பார்த்தாள். அவனோ வேலை விடுவது நல்ல முடிவு தான் என முடித்துக் கொண்டான். 

பிரத்தியங்கராவும் கார்த்திக்கும் காதலிப்பதாக நம்பி ஒற்றுமையாய் இருந்தனர். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவிலும் உறுதியாகவே இருந்தனர். ஆனால், திருமணம் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பித்த பின்னால், இருவரது நம்பிக்கையும் உறுதியும் சிறிது சிறிதாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

ஒரு மாலை வேளையில் மார்த்தாண்டம் ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னாடி பூபதியும் நடந்து வந்து கொண்டிருந்தான். 

காட்டு வேலை முடித்துவிட்டு கிளம்பி கொண்டிருந்த ஆட்கள், மார்த்தாண்டத்திற்கு வணக்கம் வைத்துவிட்டு சென்றனர். எந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு முடியவில்லை என்று தூக்கி கொண்டு ஓடினாலும், முகம் சுளிக்காது மந்திரித்து தாயத்து கட்டிவிடுவார். பிள்ளைகளும் கண் இமைக்கும் நேரத்தில் சரியாகிவிடுவார்கள்.

“பூபதி அன்னைக்கு மயங்கி விழுந்தியே… அப்போ என்ன நடந்துச்சுனு உனக்கு நியாபகம் இருக்கா?” என கேட்க ஆரம்பித்தார் மார்த்தாண்டம்.

“இல்லையே பெரியப்பா…” என்றான் பூபதி.

தெருவில் தன் வயது ஒத்த பையன்களோடு பேசிக் கொண்டு இருந்தது தான் கடைசியாக அவனுக்கு நினைவில் இருந்தது. பிறகு எப்படி கூடத்தில் வந்து சேர்ந்தான் என்பது நினைவில் இல்லை. மயக்கம் தெளிந்து எழுந்த பொழுது உடல் அசாதித்தியமாய் வலித்தது. அழுகையே வந்துவிட்டது அவனுக்கு.

“நம்ம குல தெய்வம் வனபத்ரகாளி பத்தி உனக்கு தெரியும்ல?” என வினவினார் மார்த்தாண்டம்.

பூபதிக்கு இந்த மந்திரம் தந்திரம் எல்லாம் பிடிப்பதில்லை. அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். 

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, “தெரியும் பெரியப்பா‌.‌..” என்றான்.

“எனக்கு அடுத்து சாமி சொல்லறது நீயா இருக்கனும்னு நான் ஆசைப்பட்டேன் பூபதி. அது தான் இனி நடக்கவும் போவுது. அதுக்கு அறிகுறியா தான் அன்னைக்கு வனபத்ரகாளி தாயி உன் உடம்புல வந்து இறங்கி இருக்கா…!” என்றார் மார்த்தாண்டம்.

வீசும் காற்றுக்கா இல்லை மார்த்தாண்டம் சொன்ன செய்திக்கா என தெரியவில்லை; பூபதியின் உடல் முழுவதும் சிலிர்த்துக் கொண்டது.

3 thoughts on “கொல்லிப்பாவை அத்தியாயம் 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *