Skip to content
Home » தாமரையின் தழலவன் அத்தியாயம் 18

தாமரையின் தழலவன் அத்தியாயம் 18

அத்தியாயம் 18

தாமரை சொன்ன செய்தியில் கோபத்தில் முகம் சிவக்க, அழைப்பைத் துண்டித்து விட்டு ரூபனைத் தேடிக் கொண்டு போனான் தமிழ்.

நேரம் பதினொரு மணியைத் தொட்டுக் கொண்டிருந்ததால் கடற்கரையோரமாக, பீர் அடித்துக் கொண்டிருந்தார்கள் ரூபனும் இன்னும் மூவரும், வேண்டா வெறுப்பாக அவர்களுக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தான் நஸ்ரூல்.

அப்போது தான் ருத்ரமூர்த்தியாக அங்கே வந்த தமிழை நஸ்ரூல் பார்த்தான்.

“டேய் என்னடா.. முகம் எல்லாம் சிவந்து கிடக்கு ஏதும் பிரச்சனையா..”

“இந்த ராஸ்கல் எம் பொண்டாட்டி மேல கை வைச்சிருக்கான்டா.. அவன் கையை உடைக்காமல் எனக்கு தூக்கம் வராது..”

“புரியலை..”

“என்னடா உனக்கு புரியலை..”

“யாரு உம் பொண்டாட்டி மேல கையை வைச்சது ரூபனா..”

“ஆமான்டா.. கையைப் புடிச்சு இழுத்து இருக்கான் ராஸ்கல்..”

“அப்புடீனு உனக்கு யாரு சொன்னது..”

“அவ தான்டா.. பாவம்டா அழுறாடா..”

“தமிழ்.. இப்புடி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தானே நீ அவனை உம் பொண்டாட்டி பக்கம் அனுப்பி வைச்சே.. இப்போ வந்து குதிச்சால் என்ன அர்த்தம்..”

“எதுவா இருந்தாலும் அவ மேல ஒரு தூசி கூடப் படாமல் நடிக்கச் சொல்லு அவனை..”

“பார்ரா.. பொண்டாட்டி எண்டதும் துரைக்கு கோபம் வருதோ.. அது சரி அவனைப் பத்தடி தள்ளி நிண்டே நடிக்கச் சொல்லுவம்..”
என்ற நஸ்ரூலுக்கு தன் நண்பன் தாமரை மீது காட்டும் அந்த அக்கறை மிகவும் பிடித்துக் கொண்டு விட்டது.

இனிமேல் இவனைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை, தாமரையும் அவனும் நல்ல கணவன் மனைவியராகச் சேர்ந்து வாழும் காலம் தூரம் இல்லை என்பது அவனுக்குப் புரிந்து போனது.

அதன் பின்னர் நண்பனை ஒரு வழியாகச் சமாதானம் செய்து விட்டு, அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தவன், மெல்ல ரூபனையும் எச்சரித்து வைத்தான்.

இதற்கு நடுவில் அன்று தான் வரலக்சுமிக்கும் அவனுக்குமான நாடக பந்தத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருந்தான் நஸ்ரூல்.

“வரலக்சுமி..”

“சொல்லுங்க டார்லிங்..”

“என்னைய அப்புடி இனிமேல் கூப்பிடாதே.. இதோ பாரு இந்த ஃபோட்டோவுல இருக்கிறவ தான் என்னோட வருங்கால மனைவி..”

“என்னது.. அப்போ நானு.. எனக்கு நீங்கள் துரோகம் செய்ய போறீங்களா..”

“நீ செய்தது உனக்குத் திருப்பி வரத் தானே வேணும்..”

“நான் என்ன செய்தேன்..”

“நீ என்ன செய்தீயா..”
என்று கொண்டே தமிழரசனும் அவளும் சேர்ந்து ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவளுக்கு காட்டினான் நஸ்ரூல்.

அதோடு தமிழ் உன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தான் என்றும், அதை தன் தந்தையிடம் நிரூபிக்க அவன் என் மூலம் உனக்கு டெஸ்ட் வைத்தான் என்றும், நீ தான் பணத்துக்காக அவனது நம்பிக்கையை உடைத்து அவனுக்குத் துரோகம் செய்து விட்டாய் என்றும் சொன்னான்.

அதைக் கேட்டவளால் வாய் திறந்து எதையும் பேச முடியவில்லை. ஆனாலும் தமிழைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறி மட்டும் அவளுக்குக் கூடிக் கொண்டு போனது.

அதற்கு பிறகு வந்த நாட்களில் கடைசியாக தமிழைச் சந்தித்தாள் வரலக்சுமி.

“என்ன தமிழு.. எனக்கு டெஸ்ட் வைச்ச மாதிரி உன்னோட மிடில்கிளாஸ் பொண்டாட்டிக்கும் வைக்க வேண்டியது தானே.. நானே உன்னைய விட்டிட்டு இன்னொருத்தன் பின்னாடி போகும் போது.. அவ எத்தினை பேர் கூடப் போவாளோ தெரியலியே..”
என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளது கழுத்தைப் பிடித்திருந்தான் தமிழ்.

“அவ என்ன உன்னை மாதிரியா.. அவ நெருப்புடி அவ பக்கத்துல எவனும் நெருங்க முடியாது..”

“பார்ரா.. அவ்வளவு பெரிய பத்தினியா உம் பொண்டாட்டி..”

“அவ பத்தினியோ சித்தினியோ.. ஆனா நெருப்பு.. கிட்ட வார்ரவன் எவனா இருந்தாலும் சுட்டுப் பொசுக்கீட்டு போய்க் கிட்டே இருப்பா..”

“பார்க்க தானே போறேன்.. வேணுண்ணா நாம ஒரு சாலஞ் பண்ணிக்கலாமா.. அவளுக்கு டெஸ்ட் வைக்க நான் ஆளை இறக்கவா..”

“நீயெல்லாம் டெஸ்ட் வைச்சு பார்க்கிற அளவுக்கு அவ ஒண்ணும் தரந்தாழ்ந்து போயிடலை..”

“பொண்டாட்டி மேல அதுக்குள்ள அவ்வளவு காதலா.. காவியக் காதல் தான் போல..”

“எம் பொண்டாட்டி மேல நான் காவியக் காதலும் வைப்பேன் ஓவியக் காதலும் வைப்பேன்.. நீ கருகாமல் உன்னோட வேலையை பாரு.. லுக் நீ செய்த காரியத்துக்கு உன்னைத் தடம் தெரியாமல் அழிச்சு இருப்பேன்.. என்ன இருந்தாலும் ஒரு பொண்ணாப் போயிட்டே என்றதால மன்னிச்சு விட்டுருக்கேன்.. இனிமேல் நான் உன்னைப் பார்க்கவே கூடாது..”
என்ற தமிழின் கண்களில் கனல் கக்கும் கோபத்தைப் பார்த்த வரலக்சுமி அந்த நிமிடத்தோடு தலைமறைவானாள்.

“இவன் செய்யக் கூடியவன் தான்.. இவனும் இவன் பொண்டாட்டியும் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன.. இங்கேருந்து போனால் காணும் என்பது போல..”
அவள் போய் விட, தமிழ் மனைவியைத் தேடி அவள் பிறந்த வீட்டுக்கு சென்றான்.

அங்கே அவனுக்கு முன்பாக அவன் தந்தை வீற்றிருந்தார்.

“இங்கே என்ன பண்றீங்க..”

“நான் என்னோட மருமக கையால ஒரு டீ வாங்கி குடிக்க வந்தேன்..”

“ஏன் அதை உங்க பொண்டாட்டி கையால போடச் சொல்லிக் குடிக்க வேண்டியது தானே..”

“அவளைத் தேடிப் பிடிச்சு டீ போடும்மா தாயேனு கேட்க முதல்.. நானே போடுவோமேனு தான் கிச்சன் போனேன்.. வயசாயிட்டுது இல்லையா டீத் தூளுக்கு பதிலா வேறை எதையோ தூக்கி கொட்டீட்டன்.. அந்தக் கருமம் பிடிச்சது நாக்கை விட்டுப் போகவே மாட்டேனு நாக்குலயே நிண்டு நர்த்தனம் ஆடுது.. அது தான் தாமரை கையால ஒரு டீ குடிச்சா சரி ஆயிடுமேனு ஓடோடி வந்திட்டேன்..”

“அவ எம் பொண்டாட்டி.. அவ எனக்கு மட்டும் தான் டீ போடணும்..”

“டேய் அடங்குடா.. அவ நானாப் பார்த்து வீட்டுக்கு கூட்டீட்டு வந்த மகாலட்சுமிடா.. அவ முதல்ல என்னோட மருமக.. அதுக்கு பிறகு தான் உன்னோட பொண்டாட்டி..”
எனக் கவிவாணன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தந்தைக்கும் மகனுக்கும் டீயைக் கொண்டு வந்து வைத்து விட்டு உள்ளே போய் விட்டாள் தாமரை.

அவள் உள்ளே போனதும் மகனிடம் திரும்பினார் கவிவாணன்.

“தமிழ்.. நீயாவது சொல்லி அந்த ரெண்டு பிள்ளைகளையும் கூட்டீட்டு தாமரையை வீட்டுக்கு வரச் சொல்லக் கூடாதாடா.. அன்னிக்கு என்னவோ இந்தா கூட்டீட்டு வாரேன்னு கிளம்பினே.. பார்த்தா ஆளையும் காணோம் அட்ரஸையும் காணோம்..”
என அவர் சொன்ன போது தான், மனைவியையும் அவள் தங்கைகளைமும் வீட்டுக்கு நிரந்தரமாக அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று, அன்றொரு நாள் தான் வந்ததே அவனுக்கு நினைவு வந்தது.

உடனே மனைவியைத் தேடிக் கொண்டு அவன் உள்ளே போக, கவிவாணனோ இனி மகன் பார்த்துக் கொள்ளட்டும் என்பது போல, தேநீர்க் கோப்பையைத் தூக்கிக் கொண்டு வெளியே போனார்.

3 thoughts on “தாமரையின் தழலவன் அத்தியாயம் 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *