அத்தியாயம் 10
“என்னோடு வா…” என அந்த பெண் சொல்ல, மனதில் அதீத பயம் இருந்தாலும் அவளின் பின்னே செல்ல தயங்கவில்லை பிரத்தியங்கரா.
வந்திருந்த பருவப்பெண் தன்னை தெரிகிறதா என்று கேட்டதும் நடுநடுங்கி போய்விட்டாள் பிரத்தியங்கரா. அதை கண்டதும் புன்னகைத்த அந்த பெண்ணோ, பிரத்தியங்கராவை தன்னோடு வர சொன்னாள்.
“நீ இங்க எப்படி வந்தாய்?” என பருவப்பெண் கேட்க,
“நான் போன் பேசிட்டே வந்தேன் பாப்பா. அப்ப ஒரு நாய் என்னை பார்த்து கடிக்க வந்துச்சு. அதுக்கு பயந்து ஓடி வந்தேன். வந்த வழிய மறந்துட்டேன்.” என சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தட்டு தடுமாறி நடந்தபடியே சொன்னாள் பிரத்தியங்கரா.
கால்கள் இரண்டும் மிகவும் வலித்தது அவளுக்கு. குனிந்து பாதங்களை பார்த்தாள். ஆங்காங்கே முட்கள் கீறி ரத்தம் வந்தது. அப்பொழுது தான் தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த பெண்ணின் பாதங்களை கண்டாள். செருப்பு அணியாமலே நடந்து கொண்டிருந்தாள் அவள். அதுவும் அழுத்தம் திருத்தமாக நடையில் எவ்வித தள்ளாட்டமும் இல்லாமல் ஒரே சீராக நடந்து கொண்டிருந்தாள்.
“ஏன் பாப்பா செருப்பு போடாம நடக்கறியே உனக்கு கால் வலிக்கலையா?” என்று கேட்டாள் பிரத்தியங்கரா.
அந்த நேரம் அந்தகாரத்தை கடக்க ஒரு துணை வேண்டும் அவளுக்கு. எதிரே இருக்கும் பெண்ணை விட்டால் அவளுக்கு வேறு வலியும் இல்லை. பேசிக் கொண்டே வந்தால் கொஞ்சம் பயமாய் இருக்காது போல இருந்தது அவளுக்கு.
அந்த பெண்ணோ நின்று அவளை நொடி திரும்பி பார்த்தாள். உடல் எல்லாம் சிலிர்த்து கொண்டது பிரத்தியங்கராவிற்கு.
எதுவும் பேசாமல் அந்த பெண் தொடர்ந்து நடக்க, பிரத்தியங்கராவால் அப்படியே நடக்க முடியவில்லை. வந்த கதை போன கதை எல்லாம் பேசினாள்.
பாதை நன்றாக இருக்கும் இடம் வந்ததும், “இப்படியே நேராக நீ நடந்து சென்றால் உன் உறைவிடம் வந்துவிடும். மீண்டும் தொலைந்து போய்விடாதே…” என்று அந்த பெண் சொல்ல, அதில் கிண்டல் இருந்ததோ என தோன்றியது பிரத்தியங்கராவிற்கு.
“நீயும் வா பாப்பா. நீ எங்க போற? இருட்டிருச்சே…” என அந்த நிலையிலும் யாரென்றே தெரியாத அந்த பெண்ணிற்காக கரிசனப்பட்டாள் பிரத்தியங்கரா.
“உன் பாதையை மாற்றாமல் நீ செல்.” என அந்த பெண் சொல்ல, மந்திரத்திற்கு கட்டுண்டது போல நடக்க ஆரம்பித்தாள் பிரத்தியங்கரா.
கண்கள் இரண்டு பாதையின் மீது மட்டுமே இருந்தது. எப்படி நடந்தால் என்று அவளுக்கே
தெரியவில்லை. ரிசார்டின் வாசலுக்கு வந்து பின்பே எப்படி நடந்து வந்தோம் என யோசித்து பார்த்தாள் பிரத்தியங்கரா. கடைசியாய் அந்த பெண்ணின் கண்களை கண்டது தான் நினைவில் உள்ளது. அனிச்சையாய் குத்திட்ட மயிர் கால்களை தேய்த்து விட்டுக் கொண்டாள் பிரத்தியங்கரா.
‘யார் அந்த பெண்? அவளின் பெயர் என்ன? எப்படி அவள் சொன்னதும் தான் எதுவும் கேட்காமல் நடந்து வந்தோம்?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள் பிரத்தியங்கரா. எதற்குமே பதில் இல்லை.
பிரத்தியங்கரா நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த பெண். அப்பொழுது அவளுக்கு பின்னே யாரோ நிற்பது போல் இருந்தது. அவள் இதழ்களில் யாரென தெரிந்தது அடையாளமாக புன்னகை வந்தது.
“வணங்குகிறேன் சித்தரே…!” என திரும்பி எதிரே இருந்த போகருக்கு வணக்கத்தினை வைத்தாள் கொல்லிப்பாவை.
“வணக்கம் கொல்லி…” என பதிலுக்கு வணக்கம் வைத்தார் போகர்.
போகரிடம் எதுவும் கேட்காமல் நின்றாள் கொல்லி. எதுவாயினும் அவர் வாய் மொழியே!
“என்ன கொல்லி… நான் வந்ததன் காரணத்தை நீ அறிய வேண்டவோ?” எனக் கேட்டார் போகர்.
“காரணத்தை தாங்களே உரைப்பீர்கள் என்றறிவேன் சித்தரே…” என்றாள் கொல்லி.
“காலம் வந்துவிட்டது கொல்லி! உன் கடமையை நீ ஒரு முறை கடினப்பட்டு செய்ய வேண்டி வர வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது!”
“என் கடமையை நான் என்றுமே சரிவர தான் செய்து கொண்டிருக்கிறேன் சித்தரே!”
“உண்மை தான் கொல்லி! உன்னால் தான் இந்த மலையில் நாங்கள் அமைதியான முறையில் தவம் புரிய முடிகிறது. நித்தமும் அந்த ஆண்டவனை தொழ முடிகிறது! நீ இல்லை என்றால் மானிடர்கள் என்றோ இந்த மலையின் புனிதத்தினை சிதைத்திருப்பார்கள்!”
கொல்லி புன்னைகையை மட்டும் பதிலாக தந்தாள்.
“கொல்லி உன்னை அடைய மீண்டும் சூழ்ச்சிகள் நடைபெறும்.” என்றார் போகர்.
“அது எப்பொழுதும் நடை பெறுவது தானே சித்தரே…!”
இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் கொல்லிக்கு எல்லாமுமே பழக்கம் தான்.
“முன்பு போல அல்ல கொல்லி! வரப்போகிறவன் வனபத்திரகாளியின் அருளை பெற்றவன்! அவள் உறைந்திருக்கும் உடலுக்கு சொந்தகாரன்! அவனை வெல்வது கடினமே உனக்கு!” என எச்சரித்தார் போகர்.
“எத்தனையோ ஆயிரம் பேர் என்னை அவர்களின் வசப்படுத்த முயன்று போய் தோற்று போயிள்ளனர் சித்தரே.” என்றாள் கொல்லி சற்றே அலட்சியமாக.
அவளுக்கு மனிதர்களின் அழுக்கான மனங்களை கண்டு சலிப்பு வந்திருந்தது. பேராசை இல்லாத ஒரு மனிதனை கூட அவளால் காண முடியவில்லை.
“இந்த முறை வரும் சூரிய கிரகணம் மிகவும் சக்தி வாய்ந்தது கொல்லி. உலகமே முழுக்க முழுக்க இருளின் பிடியில் செல்ல போகிறது. தெய்வங்கள் யாவும் தங்களின் நிலையை விட்டு சற்றே இறங்கி இருக்கும் தருணம் அது. அது தான் உனக்கு பலகீனமான தருணமும் கூட. உன்னை தேடி உன் ஆலயத்திற்கு வரும் பெண்ணை என்றும் உன் பாதுகாவலிலே வைத்து கொள்ள கொல்லி! ஏனெனில் அவள் உன் அம்சத்திலே பிறந்தவள்!” என்ற போகர் சொல்லியவுடன் அங்கிருந்து காற்றில் கரைந்து போனார்.
போகர் சொல்லாமலே சென்றதும் கூட கொல்லிக்கு புரிந்தது. உக்கிர தெய்வமான அவளை அது மேலும் உக்கிரபடுத்தியது.
பேராசைகளும் நயவஞ்சகங்களுடனுமே ஒவ்வொரு முறையும் மலையேறி வரும் மனிதர்களை காணுகையில் அவர்களை எல்லாம் அழித்து விடும் எண்ணம் தோன்றினாலும், கீழ்மையான குணம் கொண்ட அவர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என தன்னை தானே சாந்தப்படுத்திக் கொள்ளுவாள் கொல்லி.
கொல்லியின் வேலை இந்த மலையை காப்பதும், இங்கே தவம் புரியும் சித்தர்களுக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை வதைப்பதும் தான். அதைவிட்டு வெற்று ஆசைகளின் மீது கோட்டை கட்டி வாழும் மனிதர்களை கொன்று அவள் என்ன செய்ய போகிறாள்?
பிரத்தியங்கராவினால் விட்ட இடத்தில் இருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தால் கொல்லி. ஏனெனில், காடு முழுவதும் நடந்து காட்டை பாதுகாப்பது தான் கொல்லியின் வேலையே.
பிரத்தியங்கராவின் நினைவும் நடுநடுவே வந்தது.
‘எப்படி அந்த பெண்ணால் தன்னை காண முடிந்தது?’ என கொல்லி யோசித்து கொண்டிருக்கும் பொழுதே, போகர் சொல்லி சென்றது நினைவிற்கு வந்தது. அவள் உடல் இறுகியது. அதற்கு ஏற்ப காற்றும் வேக வேகமாக வீசியது.
தனது அறைக்கு வந்த பிரத்தியங்கரா, வரவேற்பு அறைக்கு அழைத்து, முதலுதவி பெட்டியையும், வலி நிவாரணி மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டாள். தனக்கு தெரிந்த முறையில் கால்களுக்கு கட்டு போட்டுக் கொண்டவள், வலி நிவாரணி களை முழுங்கி விட்டு படுத்துக் கொண்டாள்.
காலையில் எழும் பொழுதே காய்ச்சல் தான் அவளுக்கு. சுத்தமாக முடியவில்லை. சக்திவேல் அழைத்த பொழுது சரியாக அவளால் பதிலை கூட சொல்ல முடியவில்லை. பிறகு சக்திவேல் வந்து கதவை தட்டி அவளை அழைத்துக் கொண்டு மருத்தவமனைக்கு சென்றார்.
காய்ச்சல் இறங்க மதியத்திற்கு மேலானது. கால்களுக்கு சுத்தமாக மருத்துவமனையில் கட்டு கட்டி விட்டனர்.
“என்னாச்சா பாப்பா? எப்படி கால் எல்லாம் சிராய்ப்பா இருக்கு?” என பிரத்தியங்கரா ஓரளவிற்கு பழைய நிலைமைக்கு திரும்பியதும் கேட்டார் சக்திவேல்.
“போன் பேசிக்கிட்டே நேத்து ஈவ்னிங் காட்டுக்குள்ள தெரியாம போயிட்டேன் அண்ணா. அங்க ஒரு நாயி தொறத்த ஆரம்பிச்சிடுச்சு. அதுக்கு பயந்து ஓடும் போது தான் கால்ல கிழிச்சிடுக்கும் போல…” என்றாள் பிரத்தியங்கரா.
“சாயங்காலம் ஒத்தையிலையா காட்டுக்குள்ள போனீங்க?” என அதிசயித்து கேட்டார் சக்திவேல்.
ஆமாம் என்பது போல பார்த்து வைத்தாள் பிரத்தியங்கரா.
“இந்த மலையிலையே பொறந்து வளந்த எங்களுக்கே சில நேரம் கருக்கலாச்சுனா (பொழுது சாய்ந்து விடும் நேரம்) காட்டுக்குள்ள போக வர பயமா இருக்கும். நீங்க ஏன்மா போனீங்க?” என கேட்டார் சக்திவேல்.
எல்லாத்திற்கும் காரணம் அந்த படுபாவி கார்த்திக் தானே! அவனை பற்றியா சொல்ல முடியும்.
மனதிற்குள்ளே பல்லை நறநறத்தவள், “அம்மா கூட பேசிட்டு இருந்தேன் அண்ணா. சிக்னல் கிடைக்கலைனு அப்படியே தேடிட்டு போனேன்.” என்றாள்.
“இனிமே சிக்னல் கிடைக்கலனா கூட பரவாயில்லைனு ரூமுக்குள்ளையே இருங்க பாப்பா. தொலைஞ்சி போயிட்டீங்கனா இங்கன கண்டு பிடிக்கறது ரொம்ப கஷ்டம்!” என்றார் சக்திவேல்.
என்னமோ அந்த நேரம் பிரத்தியங்கரா எப்படி திரும்பி வந்தாள் என சக்திவேலுக்கும் கேட்க தோன்றவில்லை, அவளுக்கும் நடந்ததை முழுதாக விவரிக்கும் எண்ணம் இல்லை.
அன்று முழுவதும் மருத்தவமனையிலே கழிந்தது பிரத்தியங்கராவிற்கு. அவளுக்கு துணையாக தன் மனைவியை வந்து இருக்க சொல்லிவிட்டு, பிரத்தியங்கராவிற்கு பதிலாக, விளக்கு போட சென்றிருந்தார் சக்திவேல்.
“அம்மா தாயே எட்டுக்கை அம்மா… உன்னை நம்பி அந்த பொண்ணு சொந்தபந்தம் அப்பா அம்மா எல்லாம் விட்டுட்டு இந்த மலையே கதின்னு வந்து தங்கியிருக்கு. அதுக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு தாயே…!” என வேண்டுதல் வைத்தபடியே விளக்கு போட்டார் சக்திவேல்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள் கொல்லி. அபூர்வத்திலும் அபூர்வமாக இப்படி ஒன்றிரண்டு மனிதர்கள் மற்றவர்களுக்காக வேண்டிக் கொண்டு தன் சன்னதிக்கு வரவதை அவள் கண்டதுண்டு. அவர்களின் மீதெல்லாம் தனி கரிசனம் உண்டு கொல்லிக்கு.
வழக்கம் போல சாயங்காலம் சௌந்தர்யா அழைத்து பேச, எதையுமே சொல்லவில்லை பிரத்தியங்கரா. வழக்கம் போல கோவிலுக்கு சென்றுவிட்டு வந்ததாக மட்டும் சொல்லி போனை வைத்துவிட்டாள். உண்மையை சொன்னாள் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பாரா சௌந்தர்யா. உடனே திருமணத்தை நிறுத்த வேண்டுமென தாட்பூட் என குதிப்பார். அது ஒரு தேவை இல்லாத தலைவலி பிரத்தியங்கராவிற்கு.
கால்கள் எல்லாம் நடக்கும் அளவிற்கு குணமாக இரண்டு மூன்று நாள்கள் பிடித்தது. அதன் பின்பு தான் கோவிலுக்கு சென்றாள் பிரத்தியங்கரா. அதுவும் மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டே தான்.
கோவில் நுழைந்தது முதல் விசித்திரமாக யாரோ தன்னை உற்று பார்ப்பது போல உணர்ந்தாள் பிரத்தியங்கரா. யாரென அவளும் துளாவி பார்க்க அங்கோ, இவளுக்கு உதவி செய்ய சிவப்பு சேலை அணிந்த பருவ வயது பெண் நின்றுக் கொண்டிருந்தாள்.
Super super👍👍 interesting😍
சூப்பர்
SUPERB EPI interesting thrilling