Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா-16

     கதிர் விதுரனை கண்டு “சார் கைக்கு என்னாச்சு?” என்றதும் “நத்திங் கதிர்… ஒரு ராட்ஷஸி கண்ணாடி தூக்க முடியாம பேலன்ஸ் விட்டு என் மேல போட்டுட்டா” என்று கூறினான். அதற்கு மேல் கதிர் பாதையில் கவனிக்க ஆரம்பித்தான்.

     “தர்மாவை அடிச்ச மாதிரி என்னை அடிக்கணும்னு கை துறுதுறுனு இருக்கா? ஆனா அடிக்க முடியலைல” என்றான்.

     “ஏன் முடியாது. பொறுமையை சோதிச்சா அடிப்பேன்.” என்று ஜம்பமாய் கூறினாள்.

     “பயங்கர பொறுமைசாலி தான். நான் இத்தனை பண்ணியும் இன்னும் பொறுமை இருக்குனு சொல்லற.” என்று சிரித்தான். கதிர் கண்ணாடி வழியே விதுரனை இமைக்காது பார்த்து சுதாரித்தான்.

      “எங்கம்மா உன்னோட பிடியில் இல்லாம இருந்தா… வந்த அன்னைக்கே நாலரை அறைந்திருப்பேன். என் அம்மாவை கால் இல்லாம பார்த்து கலங்கிட்டேன். ஒரு நிமிஷம் நீ மனிஷனா அரக்கனானு என் வசம் இல்லாம செயல் இழுந்துட்டேன்.

     இப்ப நார்மல் ஆகிட்டேன். ரொம்ப பேசின அப்பறம் கொன்னுடுவேன்” என்றவளின் பேச்சை கேட்டு வயிற்றை பிடித்து சிரித்தான்.

     “ஏய் டெவில் குயின் நீ என்ன சாகடிப்பியா… வாட் ஏ ஜோக்… நைஸ்… அடிக்கடி இந்த ஜோக்கடி மைண்ட் ரிலாக்ஸா இருக்கு. உன்னை வெறுப்பேற்றினா செமையா இருக்கு.” என்றான்.

    பிரகதிக்கு அவன் பேச்சு வெறுப்பை தர, அவன் பக்கம் இருந்த கார் கதவை டோர் அன்லாக் செய்து அவனை தள்ள முயன்றாள். நொடியில் பிரகதி செய்தவை விதுரனே எதிர்பார்க்கவில்லை… அதுவும் அவள் அவனை தள்ள முயன்று அவனின் எடையும், சீட் பெல்ட் வேறு அணிந்திருந்தவனையும் இம்மியும் அசையாது போக,  எழுந்தவள் தான் பாதி வெளியே குதிப்பது போல பட்டது.

     கதிர் உடனே காரை நிறுத்தி திரும்ப, பிரகதியை அவள் சீட்டிற்கு தள்ளி கையை ஓங்கியிருந்தான். 

     ஏற்கனவே கதவு திறந்து ரோட்டில் விழும் அளவிற்கு போன அதிர்வில் விழிகள் பெரிதாக மிரண்டிருக்க அந்த அதிர்விலேயே அவள் மீளவில்லை.. விதுரன் கை ஓங்கியதை அவள் உணரவேயில்லை.

    ஓங்கிய கையை அப்படியே அவளருகே கொண்டு சென்று சீட் பெல்டை போட்டு விட்டான்.

     “இதென்ன சைக்கிள்னு நினைச்சியா… ஒரு கால் வச்சி பேலன்ஸ் பண்ணி விழாம உட்கார… போற ஸ்பீடுல இந்நேரம் ரோட்ல விழுந்து செத்து போயிருப்ப…

    டெவில் டெவில்னு கொஞ்சிட்டு ஹெல்லுக்கு(hell) போயிருப்ப.” என்றான். அவன் திண்மார்ப்புகள் ஏறயிறங்க மூச்சு வாங்கியது.

     “நான் ஹெல்லுக்கு போயிருக்க மாட்டேன். (Heaven)ஹெவன்-கு போயிருப்பேன்.” என்றாள் பிரகதி.

     “அடிச்சி மூஞ்சி முகறையை பேத்திடுவேன். சொர்க்கம் நரகம் போய் பார்த்துட்டு வந்தவ” என்று கத்த, “உன்னோட இருந்தா அது நரகம். எங்க அம்மாவோட இருந்தா அது சொர்க்கம்” என்று பிரித்தறிந்து சுட்டி காட்டினாள். 

     விதுரனோ “பேசாதே… பேசின… நான் இப்ப உன்னை தள்ளி விட்டுடுவேன்.” என்று கோபமாக மொழிந்தான்.

   கதிர் இருவரின் சண்டையை பயத்துடன் கடந்து மருத்துவமனை முன் நிறுத்தினார்.

     பின்னால் தொடர்ந்து வந்த காரும் தூரயிருந்தே விதுரனை கண்கானித்தது.

    “நீ போ… நான் சுதனை பார்த்துட்டு வர்றேன்.” என்று அனுப்பினான்.

    பின் தொடர்ந்த காரில் இருந்த நபரோ விதுரனையே கண்கானிக்க செய்ய, சுதனின் அறைக்கு சென்றான்.

     அந்த கண்கானிக்கும் நபரும் விதுரன் வெளிவரும் வரை காத்திருந்தது.

    எப்பொழுதும் சென்ற அறையில் ஏற்கனவே பத்மாவதி இருக்க, ஓடி சென்று அணைத்து கொண்டாள்.

     “எப்ப இந்த நேரக்கணக்கை தாண்டி ஒரே வீட்ல இருப்போம்னு ஆசையா இருக்கு மா. சாப்பிட்டிங்களா…?” என்றாள்.

    “ஆச்சு டா… இங்க என்னை யாரும் கொடுமைப்படுத்தலை. பட்டு நேரத்துக்கு வந்து கவனிச்சிக்கிறா. அவள் இல்லாத நேரம் இப்ப என்னை கொண்டு வந்த நர்ஸ் பார்த்துக்கறாங்க. என்னை பற்றி கவலைப்படாதே. நீ நிம்மதியா இருக்கியா?

    என்னை பற்றி யோசிக்காம நீ எங்கயாவது போயிடுடா… நீ எங்கயாவது நிம்மதியா இருக்கனு நானும் சந்தோஷமா இருப்பேன்” என்றார் பத்மாவதி.

    “ஹய்யோ அம்மா… அவன் என்னையும் கொடுமை எல்லாம் படுத்தலை. ஆனா உன்னை வச்சி மிரட்டறான். உன்னை பார்க்கவோ பேசவோ விடாம பண்ணறான். எனக்கு அதான் கவலை. நீ இங்க இருக்கன்னா நான் கூட்டிட்டு போவேன். உன்னால நடமாட முடியாம… மா… உடம்பை கவனிச்சுக்க கூடாதா? காலையே இழந்துட்டியே” என்றாள் இன்னமும் தாங்கி கொள்ளும் மனநிலை இல்லாமல். 

    “அங்க சின்னதா செப்டிக் ஆச்சு டா. நான் கவனிக்கலை. அதோட பாதிப்பு… இப்ப காலை இழந்துட்டேன்.

     இங்க வந்ததும் உன்னை உஷாதேவி பையனுக்கு கட்டி வச்சி கண் குளிர சந்தோஷப்படணும்னு இருந்தேன். என்னவென்னவோ நடந்துடுச்சு.” என்றார்.

    “உஷாதேவி… யாருமா… போன்ல சொன்னியே… அவங்களா?” என்று கேட்டாள்.

    “ஆமா… போனதும் போன் பண்ண சொன்னாங்க. நம்பர் கூட என் பர்ஸில் வச்சிருந்தேன். மாத்திர பெட்டியை எடு.. அதுல அவங்க கார்டு இருக்கு.” என்று கூறவும் பிரகதி எடுத்து காட்டினாள்.

     “அவங்க இன்னொரு பையன் போலிஸ் தான். நீ வேண்டுமின்னா உதவி கேட்டு பாரு.” என்றார்.

     “என்ன உதவி மா கேட்க? கமிஷனர் நெல்சனை கைக்குள் வச்சிட்டு இருக்கான். அவன் ஒரு பிராடு. கட்டாய திருமணம் என்று எப்படி சொல்ல நானே ரிசப்ஷன்ல அவன் கையை இழுக்க நடந்து போனேன். பார்க்க என்னவோ மனமுவந்த திருமணமா தான் தோற்றமளித்திருக்கும்.

    உன்னை கட்டாயப்படுத்தி இருக்க வச்சிருக்கானும் சொல்ல முடியாது. இந்த மருத்துவமனை, வழிநடத்தற டீன் உனக்கு மருத்துவம் பார்க்கற டாக்டர் எல்லாம் அவனோட ஆளு. பற்றாததற்கு உங்க மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கு.

     அப்படியே உன்னை கூட்டிட்டு போகவும் மாட்டேன் மா. இவனுக்கு எதிரி வெளியே இல்ல. வீட்ல தான் அதுவும் கட்டின பொண்டாட்டினு புரித வைக்கணும். அதுவும் இவளை ஏன்டா பிளாக்மெயில் செய்து கல்யாணம் செய்தோம்னு பீல் பண்ணணும்.

     முதல்ல உன்னை என்னோட அழைச்சிட்டு போகணும் மா. நீ கூட இருந்தாலே எனக்கு யானை பலம் வந்திடும்மா.

     தனியா இங்க விட தான் பயமா இருக்கு. ஏதாவது ஊசிப்போட்டு உன்னை எதுவும் பண்ணிடுவான்னு தான் பயத்துல இருக்கேன்.

    நேற்று கூட என் உயரத்துக்கு இருக்கற கண்ணாடியை அவன் மேல வீசி எறிந்துட்டேன். கை எல்லாம் காயம். பேட் லக் மண்டையில போட முடியலை.
    இப்ப கூட கார்ல இருந்து தள்ளினா அசையாம கல்லு மாதிரி இருந்தான்.

   அந்த வீட்ல ஆதித்யா தாத்தா மட்டும் ரொம்ப நல்லவர். பேரனே தப்பு பண்ணறான்னு தெரிந்தும் எனக்கு சப்போர்ட் செய்தார்.  என் பேர்ல 40% சொத்து எழுதியிருக்கார்.” என்று கூற விதுரன் வந்து சேர்ந்தான்.

     கூடவே பணியாட்களான ஒருத்தி விதுரனின் உணவு கேரியரை கொண்டு வந்தான். ஏற்கனவே நேரத்திற்கு உணவு பத்மாவதிக்கு கொடுங்க என்ற சுதனின் கட்டளைக்கு இங்கு வரும் முன்னே பத்மாவதி உணவை சாப்பிட்டு விட்டார்.

      விதுரன் பிரகதி பத்மாவதியை கவனிக்காமல் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

    “எங்கம்மாவை எப்ப கூட்டிட்டு போக. வீட்ல தான் ஏழு ரூம் இருக்குல்ல…. ஒவ்வொரு ரூம்லயும் இரண்டு ரூம் அளவுக்கு தாராளமா இருக்கு. எஅகம்மாவை ஏன் இங்க அடைச்சி வச்சியிருக்க.” என்றாள்.

    “விரைவில் கூட்டிட்டு போகலாம். என்ன அவசரம்… இதுவும் ரூம் மாதிரி வசதியா தானே இருக்கு. என்றான். அதற்குள் நர்ஸ் வீலில் பத்மாவதியை அழைத்து செல்ல பரிதவிப்பாய்… மகளை பார்த்தார்.

   கதவு மூடியதும் “என்னோட எங்கம்மா இருந்தா தான் எனக்கு வசதி. ஏன் என்னை இப்படி படுத்தற. நீ நனைச்ச மாதிரி கல்யாணம் பண்ணி வீட்ல அடைச்சி, ஊர்ல தம்பட்டம் பண்ணிட்டல. இன்னும் என்ன?” என்றாள்.

    “நாளை மறுநாளுக்கு பிளஸிங் வாங்கு. அது முடியவும் உங்கம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணறேன் ஐ மீன் ரிலிஸ் பண்ணறேன். போ… அவங்க லிப்ட்ல ஏறிட்டா பிளஸிங் வாங்க முடியாது.” என்றான்.

     “யூ யூ.” என்றவள் அவனை அடிக்க, அதனை தூசி போல வாங்கி கொண்டவன்.

     “கை வலிச்சா… பொறுமையா கூட அடி.” என்றவனை கோபமாக பார்த்து அறையை விட்டு வெளியே சென்றாள்.

     கையில் அன்னை தந்த கார்டு இருக்க அதனை பத்திரப்படுத்தி கொண்டாள்.

    இருவரும் வீட்டுக்கு வரும் வரை பிரகதி பேசவில்லை. விதுரனும் பேச்செடுக்கவில்லை.

      விதுரன் வந்ததும் மாலை நேரத்திலேயே  எல்லா பணியாட்களும் வெளியே செல்வதை கண்டு நொந்து விட்டாள்.

       அவனுமே அவனறைக்கு சென்றிக்க, போனை சுழற்றினாள்.

    அந்தபக்கம் உஷாதேவியாக தான் இருக்கும். அன்னை குரல் போல முதியவரின் குரலே.

     “ஆன்டி… நான் பத்மாவதியோட பொண்ணு பிரகதி பேசறேன்.” என்றாள்.

     உஷாதேவியோ “அட பிரகதியா… எப்படி இருக்க மா. அம்மா எப்படி இருக்காங்க. போனதும் போன் பண்ணறேன்னு சொன்னாங்க. என்னாச்சு போடலை.” என்றார்.
 
     அன்னையின் உடல் நிலையை கூறினாள். தற்போது சுகரால் காலை வெட்டி மருத்துவமனையில் இருப்பதாக கூறினாள்.

     “அப்படியா… அச்சச்சோ.. எந்த ஹாஸ்பிடல். நான் வந்து பார்க்கலாமா? இப்ப எப்படி இருக்காங்க?” என்று கேட்டார்.

    “இப்ப பரவாயில்லை ஆன்டி. அம்மா தான் கார்டு கொடுத்து உங்களிடம் பேச சொன்னாங்க.” என்று கூறினாள்.

      “ஓ… அப்படியா… எங்க சின்ன பையன் அபிமன்யுக்கு உன்னை கல்யாணம் பண்ணறதா பேசினோம். அம்மா சொல்லிருப்பாங்க.. உன்  வாட்ஸப் நம்பருக்கு அபியோட நம்பரை அனுப்பவா. அவனை உனக்கு கண்டிப்பா பிடிக்கும். பார்க்க வெளிநாட்டு மாப்பிள்ளை கணக்கா நல்ல கலரா இருப்பான்.

     நீங்க இப்ப அம்மா கொடுத்த அட்ரஸில் இருக்கிங்களா… நாளைக்கு வரவா? இல்லை ஹாஸ்பிடலில் இருப்பிங்களா.?”  என்று கேட்டதும் பிரகதிக்கு பதில் கூறவே தயங்கினாள்.

     ‘யாருனு தெரியாதப்பவே எட்வின் எனக்கு பிரப்போஸ் பண்ணியதுக்கு கையை உடைச்சான். இதுல இப்ப நான் அவன் ஓய்ப். ஒத்துக்கலைனாலும் தாலியே கழட்டி வச்சாலும் ஊரறிய அவன் மனைவி. இப்ப அபிநந்தன்னு ஒருத்தன் என்னை பார்க்க வந்தா அவன் நிலைமை?’ என்று தலை சுற்றியது.

    “ஆன்டி ஒரு விஷயம் சொல்லணும்… கொஞ்சம் நிதானமா கேளுங்க” என்று தீபிகா-இன்பா திருமணம் முதல் இவளின் திருமணம் வரை கூறி முடித்தாள்.

     “அய்யோ இது என்ன மா. சினிமா மாதிரி சொல்லற. இப்ப அங்க தான் இருக்கியா. பத்மாவதி ஹாஸ்பிடலில் அடைச்சி வச்சிருக்கானா?” என்று கேட்டார்.

      “ஆமா ஆன்டி. அம்மா இன்னிக்கு தான் என்னோட நிம்மதியா பேசினாங்க. உங்க பையன் ஒருத்தர் போலிஸா இருக்காராம். ஏதாவது ஐடியா சொல்லி இதுக்கு சொல்லுஷன் கண்டுபிடிக்க சொன்னாங்க. ஆக்சுவலி அம்மாவை என்னை தனியா விட்டுட்டா போதும். நாங்க திரும்ப எங்க வீட்டுக்கு போயிடுவோம். அம்மாவை விடாம இம்சை பண்ணறான். டெய்லி ஒரு மணி நேரம் தான் பார்க்க அலோவ் பண்ணறான்.” என்று உதவி கேட்டாள்.

     “நான் விஷால் வந்ததும் சொல்லறேன் மா. இப்ப அபிமன்யு இருக்கான்.” என்றார்.

     “கொஞ்சம் சீக்கிரமா அவரை என் நம்பருக்கு கான்டெக் பண்ண சொல்லுங்க ஆன்டி. வைக்கிறேன்.” என்று நிம்மதியானாள்.

     விதுரனோ மாடிப்படியில் ஒவ்வொரு அடியாக அடியெடுத்து வைத்தான்.

       “உங்கம்மாவிடம் பிளஸிங் வாங்கிட்டியா? நாளை மறுநாள் வரை காத்திருக்கணுமானு அடிக்கடி மைண்ட் டிஸ்டர்ப் பண்ணுது. நீ ஏதோ காவலித்தனம் பண்ணற பீலாவே தெரியுது.” என்றான் விதுரன்.

        “தான் திருடன் பிறரை நம்பாதவன் சொலல்வாங்க. நீ காவாலியா இருந்துட்டு என்னை சொல்லறியா?” என்றாள்.

     “ஆமா… நான் யாரையும் நம்ப மாட்டேன். ஆனா எனக்கு திருட்டு தனம் தெரியாது. எல்லாம் நேரிடை டீலிங் தான். இப்ப கூட பாரு… ஆல்ரெடி டீல் பேசியாச்சு. நாளை மறுநாள் நம்ம நைட்…  அடுத்த நாள் காலை உங்கம்மா இங்க வந்திடுவாங்க. இங்க எங்க வேண்டுமென்றாலும் தங்க வை. பட் என் ரூம்ல நீ மட்டும் எப்பவும் இருக்கணும்.” என்றவன் உணவை அள்ளி போட்டு சாப்பிட்டு மாடிக்கு தாவினான்.

  பிரகதி அதேயிடத்தில் அமர்ந்தாள். அவள் அஞ்சும் இருட்டு கூட அந்த நேரம் பெரிதாய் தெரியாமல் அசைவற்று இரவு முழுவதும் யோசித்தாள்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *