Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா-17

மென்னிதயம் கொண்டோர் வாசிக்க வேண்டாம்.

அடுத்த நாள் காலை விதுரன் எழுந்த போது தன்னறையில் சோபாவில் பிரகதி இல்லாமல் வேகமாக வெளியே வந்தான். மேலிருந்தே எட்டி பார்த்தான். ஹாலில் நேற்றிருந்த அதேயிடத்தில் பிரகதி அசைவற்று அமர்ந்திருந்தாள்.

விதுரன் வேகமாக படிக்கட்டில் இறங்கி வந்து, “நைட் முழுக்க இங்கயா இருந்த. தூங்கலையா… அறிவில்லையா டி உனக்கு.” என்று அருகே வரவும், பிரகதி என்னும் சிலை வாய் திறந்தது.

“நாளைக்கு நைட் எதுக்கு. இப்பவே இந்த நேரமே என்னை யூஸ் பண்ணிக்கோ. அதுக்கு பிறகு எங்கம்மாவை என்னிடம் கொடுத்திடு. தயவு செய்து இப்படி துன்புறுத்தாதே.

எங்கப்பா இறந்த பிறகு எங்களோட உலகம் சின்னது. அதுல நானும் அவங்களும் தான். என்னை ராணி மாதிரி வாழ வச்சவங்க. என்னோட எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து வழிநடத்தினவங்க. என் ஆசை தான் அவங்க ஆசைனு வாழறவங்க.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாம காலை இழந்து இருக்காங்க. மனமும் துவண்டிட கூடாது. என்னோட இருந்தாலே அவங்களுக்கு நிம்மதி.

உனக்கு வேண்டியது என்ன என் கற்பா… அதுவும் நானா உன்னிடம் அடிபணியணுமா அதான் ஓகே சொல்லிட்டேன். தினம் தினம் சாகடிக்காதே.” என்றாள்.

பிரகதிக்கு நேற்று விஷால் போன் பேச, அவனோ “அச்சோ விதுரன் சாரா… லுக் மிஸஸ் பிரகதி. இரண்டு முறை அவரை யாரோ கொல்ல வந்தாங்க. அவர் பாதுகாப்புக்கு ஏற்பாட நானே இரண்டு முறை அவருக்கு ஒன் ஆப் தி பாடிகார்டா போயிருக்கேன். ஆக்டிவிட்டிஸ் தூரத்துல இருந்து கவனிச்சிருக்கேன். கொல்ல வந்தவனை பிடிச்சி இரக்கமே இல்லாமே அவனோட பாடிகார்ட்டை வச்சி நாக்கை துண்டிச்சிட்டார்.

என்ன ஏதுனு கேட்கவோ அவனை புகாரளிக்க அந்த ஆளே எதுவும் செய்யலை. அவன் உங்களை பொண்ணுனு மெதுவா ஹான்டில் பண்ணறார்.

பேசாம அவரோடவே மனைவியா இருங்க. அவர் அதுக்காக பாவப்பட்டோ வாழ்க்கையில உங்களை நல்லா பார்த்துப்பார்.” என்று பயமுறுத்தி பேசி வைத்தான்.

பிரகதிக்கு பலமாக தன்னை உணரும் நொடிகள் எல்லாம் பலமற்றவளாக மாற்றியது சூழ்நிலை.

வந்ததும் திருமணம், தாயின் காலை இழந்த அதிர்ச்சி, ரெஜிஸ்டர் மேரேஜ், பிறகு ஊரறிய ரிசப்ஷன், அவனோடு தனியாக ஒரறை, தாயை காண முடியாத மற்றும் எங்கே வைத்திருப்பானென அறியாத நிலை, மேலும் தர்மா மூலம் விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் கூறிய வார்த்தைகள், அதுவும் பணி செய்யும் பெண்ணின் கர்ப்பத்தை கலக்க கூறியதாகவும், தீபிகா அன்னை கூறிய வயிற்றில் கத்தி வைத்ததும், என்று தன் பலமும் தைரியமும் இந்த இடைப்பட்ட காலத்தில் தகர்த்தி கொண்டிருந்தான்.

ஒரு வேளை ஒருவராது நான் இருக்கேன் என்று ஆதரவாக வாய் வார்த்தையில் கொடுத்திருந்தாலும் பலம் இழந்திருக்க மாட்டாள்.

பிரகதியும் வந்ததிலிருந்து அவனை மூக்குடைக்கும் பேச்சும் கண்ணாடியை அவன் மேல அடித்தும், காரிலிருந்து தள்ளியும் என்று செய்தாலுமே தன்னை போன்று முகத்தில் சின்ன பயம் கூட அவன் காட்டாமல் உதறி தள்ளுவது பிரகதிக்கு மனவலிமையை இழந்தாள்.

அதன் பொருட்டே இப்படி பேச, விதுரன் அவளை சுற்றி வந்து கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்து நீட்டினான். வாங்காமல் அப்படியே நின்றாள்.

அதற்குள் பணியாட்கள் கிச்சன் பக்கம் வழியாக டோர் எண்ணை அழுத்தி வந்து சேர “இரண்டு காபி” என்று ஆணையிட்டு “உட்கார்” என்றான்.

எதுவும் பேசவில்லை. காபி வந்து சேர “முதல்ல இதை குடி. வயிறு காலியா இருந்தா முட்டாள் தனமா முடிவெடுக்க தோன்றும்.” என்றான்.

“நான் முட்டாளா… நான் முட்டாளா… நீ தான் டா… முட்டாளா மாற்ற முயற்சிக்கிற. எங்கம்மா இடத்துல உன்னோட அம்மாவோ அப்பாவோ மாட்டிக்கிட்டு முழிச்சா. அப்ப தெரியும் என்னோட மனசு படுகின்ற பாட்டை.” என்று காபியை தட்டி விட்டாள்.

இரண்டு வேலைக்காரர்களின் தலை எட்டி பார்த்து பணியை கவனிக்கவும், அவளை இழுத்து தனதறைக்கு கூட்டிக் கொண்டு சென்றான்.

விதுரன் படியில் இழுத்து செல்ல பார்க்கும் மற்றவர்களுக்கு பதறியது.

பிரகதியோ “கையை விடு… இதுக்கு நான் செத்து போறேன். எங்கம்மாவையும் கொன்னுடு. நீ தாராளமா சந்தோஷமா வாழு” என்று கத்த, அவளை குனிந்து தூக்கினான்.

அவன் கையில் திமிரியவளை சட்டை செய்யாமல் அறையை காலால் எட்டி உதைத்தான்.

மெத்தையில் அவளை தூக்கி போட, அவளை தாங்கி பாதுகாத்தது.

ஒரு கணம் தான் பேசியதற்கு இன்றே தன்னை தீண்டியிடுவானோ என்ற அச்சமும் படர்ந்தது. வாய் வார்த்தையில் வீம்புக்காக ஏதோ குழம்பி சம்மதம் கொடுத்தவளுக்கு அவன் தொடும் பொழுதே அமிலம் ஊறியதாக தோற்றுவித்தது.

“லுக்… எனக்கு வேலை செய்யறவங்க முன்ன வீட்டு விஷயம் தெரிய கூடாது.
எப்ப எனக்கு உன்னிடம் என்ன தேவையோ அப்போ நீ பேசியதை நடத்தி காட்டுவேன்.
சும்மா அம்மா வேண்டும் அம்மா வேண்டும்னு சொல்லற… நான் தான் அடுத்த நாள் காலையில் இங்க வருவாங்கனு சொன்னேன்ல. அப்பறமும் என்ன?
பேசணும்னு இஷ்டத்துக்கு பேசாதே. சாகறதுனா செத்துப் போ. என் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது.
வீம்பு பேசின… எங்க போச்சு உன்னோட கெத்து. என்னை பழிவாங்க பேச தான் முடியும். பழி வாங்க முடியாது. ஏன்னா…. நான் விதுரன். எனக்குனு சில நீதி நானே எழுதியிருக்கேன். அதை நானா மாற்ற கூட முடியாது.” என்றவன் அலுவலகம் செல்ல புறப்பட தாயாராகினான்.

பிரகதிக்கு கை சற்று வலித்தது. அவன் பிடித்தயிடம் கன்றியிருந்தது. சாப்பாட்டை தவிர்த்து தலையனையை கட்டி கொண்டு, மாதர் சங்கத்திடம் உதவி கேட்கலாமா என்றே யோசனையில் தாவினாள்.

ஆனால் போலிஸ் மட்டுமில்லை அவர்களுக்கும் என்னவோ செய்து தொலைத்திருப்பானோ என்னவோ அவன் கையால் ஏதோ பெறுவதாய் புகைப்படத்தை கீழே கண்டிருந்தாள்.

இன்று மருத்துவமனை சென்றால் தாயோடு சென்று ஒட்டிக் கொள்ள வேண்டும். அங்கேயே இருப்பதாக அடம் பிடித்திட வேண்டும். அடுத்தவர் முன் வீட்டு சண்டையை தெரிய கூடாதென எண்ணுபவன் நிச்சயம் அங்கே கத்தி அன்னையை கூட்டிக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றிட வேண்டும். பட்டுவுக்கு கூப்பிட்டு அந்த நேரத்தில் தனக்கு அழைத்து செல்ல அவ்வறைக்கு வெளியே வந்து நிற்க சொன்னாள்.

அப்படியும் தடுத்தால்? என்ற எண்ணம் எழ, முதன் முதலாய் இங்கு வந்த பொழுது வாங்கிய கத்தியை தனது கைப்பையில் வைத்து கொண்டாள்.

அவன் மறுத்தாலோ பிரச்சனை ஆனாலோ அவனை சாகடித்து தாயை பட்டுவின் பராமரிப்பில் விட்டு விட வேண்டும். தான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்ற திடமனதுடன் எழுந்தாள்.

அனிலிகாவுக்கு போன் போட தொடர்பு செல்லவில்லை. வாட்ஸப்பில் தன் திட்டத்தை கூறி எண்ணத்தை பகிர்ந்து கொண்டாள்.

நேரமும் நெருங்க மருத்துவமனைக்கு கிளம்பினாள். விதுரனுக்கு நேற்றைய மீட்டிங் தள்ளி போக அது இன்று நடைப்பெற்றது கூடவே மதியஉணவு அவர்களோடு என்ற கட்டாயத்திற்கு கொறித்து வைத்தான்.

தனக்கு உணவு கொண்டு வரும் பெண்ணிடம், “நான் ஆல்ரெடி லஞ்ச் முடிச்சிட்டேன். அதனால அண்ணாச்சி ஜூஸ் மட்டும் கொண்டு போங்க வர்றேன்.” என்று பருக மெனு கூறிவிட்டு, சுதன் அறைக்கு சென்று நெடுநேரம் பேசிவிட்டு வெளியே வந்தவன் அறைக்கு சென்றான்.

என்றுமில்லாமல் பத்மாவதியின் வீல் சேரை ஒரு கம்பியில் கட்டி வைத்திருக்க, பிரகதி அம்மாவை அழைத்து போக முடியாமல் கோபத்தில் அமர்ந்திருந்தாள்.

விதுரன் சிரித்து கொண்டே வந்தவன். “பிளான் பண்ணினா தெளிவா பண்ணணும். என் வீட்ல உட்கார்ந்து எனக்கெதிரா பிளான் போடற செல்லம். தப்புமா…” என்றான்.

“என்ன பார்க்கிற நம்ம ரூம்ல சிசிடிவி இருக்கு டியர். மருத்துவமனைல வைக்கலை. பட் என் பிரைவேட் ரூம்ல இருக்கு. ஏன் உன்னோட ஆப் ஏதோ சொன்னியே அதை வச்சி செக் பண்ணலையா?” என்று சிரித்தான்.

“செக் செய்தப்பொழுது காட்டலையா.. சோ சேட் அது நான் வேண்டாமின்னா ஆப் பண்ணிட்டு வருவேன். நீ செக் செய்தப்ப ஆப்ல இருந்திருக்கும். அதனால உன் கருத்துக்கு படாம போச்சு. எனிவே சாப்பிடு” என்றார்.

“எனக்கு உன் சாப்பாடு வேண்டாம்.” என்று பிரகதி அதே நிலையில் இருந்தாள்.

“சார்… பத்மாவதி அம்மாவும் சரியா சாப்பிடலை. மறுத்திட்டாங்க.” என்று நர்ஸ் எடுத்துரைக்க, “டேப்லெட் டைம்… சாப்பிடுங்க” என்றான்.

பத்மாவதியும் பிரகதி கையை பற்றி கொண்டு விதுரனின் பேச்சை கேட்காது தவிர்த்தனர்.

“விக்னேஷ்… சுதனை அழைச்சிட்டு வா. தர்மா… நீ அந்த அண்ணாச்சி ஜூஸை அவங்களுக்கு எடுத்து கொடு. எப்படி குடிக்காம போறாங்கனு பார்க்கறேன்.” என்றவன் கண் ஜாடை காட்டினான்.

பிரகதி கைப்பையை கட்டி பிடித்தாள். மகளின் பிடி இல்லையென்றதும் பத்மாவதி நடுங்கியவாறு பழசாறை வாங்கினார்.

அதேநேரம் விதுரனுக்கு போன் வர, எடுத்து காதில் வைக்க, “சார்… யாரோ உங்களை கொல்ல வந்திருக்காங்க. கேர்புல்லா இருங்க சார். ஜூஸில் ஏதோ கலந்திருக்காங்க” என்று விக்னேஷ் கூறி முடித்தான்.

ஆனால் அதற்குமுன் பத்மாவதி ஜூஸை பருக “அம்மா..” என்று அலறி கண்ணாடி டம்ளரை கீழே தவற விட கைகளில் ஜூஸ் கொட்டியது.

கையும் சிந்திய இடமும் அமிலம் ஊற்றிய சுவடாக தெரிய விதுரன் தலையிலடித்தான். பிரகதி அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தவள் அன்னையை உலுக்கி பதறினாள்.

பிரகதியோ தாயுக்கு என்னவானதென அறியாமல் குழம்ப, சுதனும் விக்னேஷும் ஓடிவரவும், சரியாக இருந்தது.

“எமர்ஜென்ஸில நம்ம ENT டாக்டரை கூப்பிடுங்க. விதுரன் யாரோ ஜூஸ்ல ஆசிட் கலந்துயிருக்காங்க.” என்றதும் பிரகதி தன் கத்தியை விதுரன் வயிற்றில் சொறுகவும், டாக்டர் சொன்னதை கேட்டு திரும்பியவள் மீண்டும் சொறுக போனவளை தடுத்தவன் அவளை அவள் அணிந்திருந்த சுடிதார் ஷாலால் வலியோடு கையை கட்டி முடித்தான்.

“விதுரன்….. ஓ மை காட்.. எமர்ஜென்ஸினு மேக்னா டாக்டரை வந்து விதுரனை பார்க்க சொல்லுங்க” என்று பத்மாவதியை அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

“நான் என்னடி பண்ணினேன். என்னை குத்தி….” என்றவன் பேச்சு தடையாக அவளை ஏரெடுத்து பார்த்தான்.

“அன்னிக்கே விட்டுட்டு இருக்கலாம்ல… ஏன்.. ஏன்.. இப்படி பண்ணின. எங்கம்மாவுக்கு என்ன கொடுத்த… நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். நேத்தே உன்னோட போராட முடியாம தானே இருந்தேன்.” என்று அழுதாள்.

“சார்… மேக்னா வந்துட்டாங்க. இதுல உட்காருங்க.. சிகிச்சை பண்ணணும்” என்றான் விக்னேஷ்.

“என்னை கொல்ல வந்தவங்க. எனக்கு வச்சிருந்த ஜூஸ்ல ஆசிட் கலந்திருக்காங்க. நான் என்ன செய்தேன்.” என்றவன் கையை எடுக்க வயிற்றில் இருந்து இரத்தம் வழிய துவங்கியது.

“முதல் அட்டம்ட்… என்னோட மனைவியே… என்னை குத்திருக்கா. ஐ லைக் இட் பிரகதி.” என்றவன் விக்னேஷ் பிரகதி இங்கயே இருக்கட்டும் வெளியே விடாதே.” என்றவன் ஸ்டக்சரில் படுக்க, தர்மா மற்றும் செவிலியர்கள் விதுரனை மற்றொரு ஆப்ரேஷன் அறைக்கு அழைத்து சென்றார்கள்.

ஒரு பக்கம் பத்மாவதி ஆசிட் அருந்தியதால் ஆபத்திலும், விதுரன் மறுபக்கம் பிரகதி கத்தியால் குத்தியதாலும் சிகிச்சை நடைப்பெற்றது.

ஆசிட் கலந்த ஆளோ விதுரன் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லவும், அதை செய்ய சொல்லிய ஆட்களுக்கு போன் போட்டு வெற்றியை பறைச்சாற்றினான்.

இனியும் இருந்தால் மாட்டிக் கொள்வோமென தப்பித்து சென்றானவன்.

பிரகதியோ அன்னைக்கு என்னவானதோ என்று தன் ஷாலை கழட்ட போராடினாள்.

இந்த விஷயம் எல்லாம் விக்னேஷ் பிரகதியின் எதிரே இருந்தவாறு ஆதித்யாவுக்கு போனிலேயே கூறி முடித்தான்.

பிரகதி வீட்டில் வேலை செய்யும் பட்டுவோ எட்டி எட்டி பார்த்து பிரகதியின் அழுகுரல் என்றதும் அறைக்குள் வர தர்மாவின் அதட்டலில் பிரகதியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.



1 thought on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *