Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

துஷ்யந்தா-18

     ஒரு பக்கம் அனஸ்தியா கொடுத்து விதுரனுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்க, பத்மாவதிக்கு சிகிச்சை நடைப்பெற விதுரனின் எண்ணிற்கு சசிதரன் அழைப்பு தொடுத்திருந்தான்

    விக்னேஷிற்கு என்ன செய்ய என்று புரியாது வேறு வழியின்றி தன் போனிலிருந்து சசிக்கு அழைத்து என்ன விஷயம் சார். விதுரன் சாரிடம் இப்ப பேச முடியாது. என்னிடம் சொல்லுங்க” என்றான்.

     “தீ…தீபி..கா கு..குழந்தை”

     “போனை கொடு டா.” என்று கோமதி வாங்கி “தம்பி தீபிகாவுக்கு லேபெர் பெயின் வந்துடுச்சு. ஹாஸ்பிடலுக்கு போறோம். விதுரனுக்கு சொல்ல தான் அழைச்சோம்.” என்றார் கோமதி.

    “அம்மா… விதுரன் சாரும் ஹாஸ்பிடலில் தான் இருக்கார். நீங்க வாங்க.” என்று கத்தரித்து விட்டான்.

      தீபிகா மூச்சு வாங்க அவளும் வந்து சேர்ந்தாள்.

     கோமதி சசிதரன் அருகே லேபர் வார்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார்கள்.

  கோமதி தான் சற்று முகமலம்பி வருவதாக பிரகதி இருக்குமிடம் வந்து சேர, தர்மாவின் மேற்பார்வையில் ஷாலால் கட்டு போட்டு அழுதவளை கண்டு திகைத்தார்.

    “அட பிரகதி என்னாச்சு. தர்மா என்னயிது.” என்று கட்டை அவிழ்க்க போக, “மேம் மேம். விதுரன் சார் இவங்களை இங்கயே இருக்க சொல்லி பாதுகாக்க சொன்னாங்க. அவங்க கையை கட்டியது விதுரன் சார் தான்.” என்றான்.

    கை கட்டை அவிழ்த்து கொண்டே., “இருக்கட்டும்.. எதுவானாலும் இப்படியா?” என்று அவிழ்த்து முடிய, தர்மாவோ முழித்து கொண்டு, “மேம் விதுரன் சாரை கத்தியால குத்திட்டாங்க. விதுரன் சார் ஆப்ரேஷன் தியேட்டரில் இருக்கார்.” என்றதும் கோமதி அதிர்ந்து போனார்.

    “குத்திட்டேன்னு சொல்லற… என் அம்மாவுக்கு என்னாச்சுனு சொல்லு. எங்கம்மா எங்க… நான் போகணும். எங்க அம்மாவை பார்க்கணும்” என்று அழ விக்னேஷ் வந்து சேர்ந்தான்.

    இம்முறை விக்னேஷை பிடித்து எங்க அம்மா எங்க..  நீங்க தவிக்கறது உங்க பாஸ் விதுரனுக்கு. அதுக்கே வலிக்குதே. நான் துடிக்கறது எங்க அம்மாவுக்கு… எங்க அம்மா… எங்கடா.” என்று சட்டை பிடித்து உலுக்க, கோமதி என்ன ஆச்சு என்பதாய் விக்னேஷை பார்த்தார்.

    “மேம்… பிரகதி மேமை சார் டிமாண்ட் பண்ணி தான் மேரேஜ் பண்ணினாங்க. அன்பார்ட்சனிட்லி பத்மாவதி அம்மாவுக்கு சுகரால் செப்டிக் ஆகி காலை வெட்டி எடுத்துட்டோம். அது அவங்க உயிரை காப்பாற்ற தான். இந்த தர்மா பிரகதி மேமிடம் அது தெரியாம வர லேட்டானதால தான் வெட்டியதா சித்தரிச்சுட்டான்.

   ரிஜிஸ்டர் மேரேஜ் ரிசப்ஷன் போனப் பிறகும் பத்மாவதி அம்மாவை கூட வச்சிக்கணும் பிரகதி மேம் கேட்க, சார் விடலை. ஆப்ரேஷன் முடிந்து சுதன் சார் ஒரு மாதம் இருக்கட்டும்னு சொன்னார். இரண்டு வாரத்தில் இப்படி போக முடியாதே… பிரகதி மேம் போர்ஸ் பண்ணியதால நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு இருந்தாங்க. பட் சார் அதை சொல்லலை.

    இங்க சாரை கொல்ல முயற்சி பண்ணினவங்க சார் குடிக்கறதில் ஆசிட் கலந்திருக்காங்க. அது தெரியாம பத்மாவதி அவங்களை சார் குடிக்க சொல்ல.. அவங்க ஆசிட் குடிச்சிட்டாங்க.” என்று விக்னேஷ் கூற “அச்சச்சோ…” என்ற கோமதி குரல் பதறியது.

    “என்ன பிரச்சனையோ மேம் விதுரன் சாரை கத்தியால குத்திட்டாங்க. சாதத்திலும் விஷம் கலந்திருக்கு.” என்று மற்றொரு தகவல் அளித்திருந்தான்.

பிரகதி நிமிர “எஸ் மேம்… விதுரன் சார் போகறப்பவும் நர்ஸிடம் சொல்லி அதையும் டெஸ்ட் பண்ண அனுப்ப சொன்னார்.” என்று முடித்தான்.

    “ம்ம்… யார் யாருக்கு என்ன துரோகம் செய்தாரோ… தீபிகா கழுத்துல கட்டிய இன்பா தாலியை அறுத்து தானே சசிக்கு கட்டினார். அப்படியெல்லாம் பண்ணினா எந்த பக்கத்துலயிருந்தோ யாராவது சாவடிக்க வர தான் செய்வாங்க. அவனோட இருந்ததுக்கு பாவமா என்னோட அம்மா பலன் அனுபவிக்கணுமா. எங்க அம்மாவை பார்க்கணும்” என்று கத்தினாள்.

    கோமதிக்கோ சங்கடமாய் போக, “எங்க இருக்காங்க?” என்றதும் விக்னேஷ் கூற, “நீங்க ரெண்டு பேரும் போங்கப்பா… நீ வாமா. நான் கூட்டிட்டு போறேன்.” என்று அழைத்தார். பட்டு கூடவே எழுந்திருக்க இவயாரு என்று கோமதி பார்க்க, “பத்மாவதி அம்மாவை பார்த்துக்கிறவ மா.” என்றதும் “நீயும் வா. பிரகதிக்கு துணையா இரு” என்றார்.
   
     முதலில் பத்மாவதி சிகிச்சை நடைப்பெறும் இடம் வந்து விட்டார்.

     “விதுரன் இங்கிருந்து 302 ரூமுக்கு பக்கத்துல ஒரு ஆப்ரேஷன் தியேட்டர் இருக்கு அங்க இருக்கானாம்” என்றதும் பிரகதி யாருக்கோ சொல்வதாக தாயின் அறையை மட்டும் பார்வையிட்டாள்.

     “நான் கொஞ்ச நேரத்தில வர்றேன் மா. தீபிகா லேபர் வார்டுல விட்டுட்டு வந்திருக்கேன். வர்றேன் மா” என்றதும் பிரகதி இம்முறை திரும்பி பார்த்தாள். ஆனால் வரயியலாத சூழ்நிலையென்று புரியவும் தலையசைத்தாள்.

     விக்னேஷும் விதுரன் வருகைக்கு காத்திருந்தான்.

   ஆதித்யா வந்து சேர, விக்னேஷ் நடந்தவையை விவரித்தான். ஆதித்யா விதுரனை கண்ணாடி திரை வழியாக எட்டி பார்த்துவிட்டு, “பிரகதி?” என்று கேட்டதும்.

    “அவங்க பத்மாவதி அம்மா சிகிச்சை நடைப்பெறுகின்ற இடத்துல இருக்காங்க. கூட தர்மா இருக்கான்.” என்றான் விக்னேஷ்.

    “நான் அவளை பார்த்துட்டு வந்திடறேன்.” என்று நடந்தார்.
   
     பிரகதியோ சேரில் அமராமல் கதவின் வழியே எட்டி பார்த்து கண்ணீர் வடிய நின்றாள்.

    மருத்துவர் எப்பொழுது வந்து என்ன சொல்வார்களோ என்று காத்திருந்தாள்.

    ஆதித்யா வரவும் பிரகதி அவரை பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனாலும் அவர் அங்கே அமர்ந்து இருந்தார். தர்மா அருகே வந்து “நீங்க வேண்டும்னா விதுரன் சாரை பாருங்க ஐயா. விதுரன் சார் என்னை இங்க பிரகதி மேம் கூட இருக்க சொன்னார். அவர் சொல்ல தட்ட முடியலை.” என்றான்.

     “பரவாயில்லை பா. பிரகதி தனியா இருக்கா. பேசினா தான் ஆறுதலா…? கூடயிருந்தாலே போதும். சின்ன தெம்பு வரும். நமக்கு இவங்க இருக்காங்கனு நிம்மதி வரும்.” என்றார். பிரகதி காதில் விழுந்தாலும் மனம் அவரிடம் பேச முரண்டியது.

   தீபிகா வலியில் துடித்தவள் “ஆப்ரேஷன் பண்ணி அதை வெளியில் எடுங்க. எனக்கு வலி தாங்க முடியலை” என்று கத்தினாள்.

   அப்பொழுது தான் கீதா பரமகுரு இருவரும் வந்திருந்தார்கள்.

   கீதாவோ முதலில் தேனாய் பேசியவர் தற்போது சசிதரனையும் கோமதியும் மதிக்காமல் வந்து காத்திருந்தார். பரமகுரு மட்டும் கோமதிக்கும் சசிதரனுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையை தந்தார்.

      “அவ வலி தாங்க மாட்டா. அப்ரேஷனே பண்ணுங்க” என்று டாக்டரிடம் சசிதரன் எழுதி காட்ட, “சார் இந்த வலியை பொருத்துக்கிட்டா நல்லது. ஆப்ரேஷன்னா காலம் முழுக்க கஷ்டம் வரலாம். பனிக்குடம் உடையலை. நாலு மணி நேரம் வரை வெயிட் பண்ணறோம் அப்பவும் குழந்தை பிறப்பு தள்ளிப்போனா பார்க்கிறோம்.” என்று பதில் தந்தார்.

    சசிதரன் அதற்கு மேல் எதையும் கருத்து தெரிவிக்காமல் நின்றான்.

    நேரம் போக மருந்தின் வீரியத்தில் ஆண் மகனை ஈன்றெடுத்தாள் தீபிகா.

   சோர்வாய் ஐந்து மணி அளவில் நார்மல் அறைக்கு மாற்றம் பெற்றதும் சசியும் கோமதியும் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர்.

    கீதாவோ மகளை கவனித்து கொள்ள பரமகுரு சசியிடம் வாழ்த்து கூறி பேசினார். அதன் பின்னே அவர்களுக்கு விதுரன் நிலை தெரிய நேர்ந்தது.

    பேச்சு வாக்கில் பத்மாவதி ஆசிட் குடித்ததும், விதுரனை பிரகதி குத்தினால் என்றதும் தீபிகா அறிந்தாள்.

     “உங்க தம்பியோட நிலை இப்ப என்ன?” என்று கேட்டாள்.

     “அவனுக்கு ஒன்..ஒன்னும்.. ஆகா..து.” என்றான். தீபிகாவுக்கோ ஏமாற்றமானது. எந்த சூழ்நிலையாவது அவன் அழிவை கூறாதா என்று ஏங்கினாள்.

    பிரகதியை காண ஆவல் பிறந்தது. ஆனால் உடல்நிலை போகவிடாமல் தடுத்தது.

      தீபிகாவை சுற்றி கீதா-பரமகுரு என அவளின் தாய் தந்தையரும் சசிதரன் கோமதி என்றுமிருக்க, பத்மாவதியின் உடல்நிலையை அறிய பிரகதி வேலைக்கார பட்டு மற்றும் ஆதித்யா என்று இருக்க, விதுரனை அறிய விக்னேஷ் மட்டும் நின்றிருந்தான்.

   விதுரன் நிலையானது ஆப்ரேஷன் முடிந்து கண் விழிக்கும் நேரம் நர்ஸ் வந்து வெளியே கூற வரவும், நர்ஸ் பின்னாலேயே வந்த விதுரன் வேர் இஸ் பிரகதி” என்றான்.

    விக்னேஷோ “சார் ரெஸ்ட் எடுங்க. எழுந்துக்க வேண்டாம்” என்றான். சுதன் வரவும் அதையே கூற, “ஐ நோ மேன். அவளை பார்த்துட்டு வந்திடறேன்.” என்று கத்த கத்தி குத்திய இடம் வலித்தது.

     மேற்சட்டையின்றி நடந்து வந்தவனை ஆதித்யா பார்த்ததும் “என்னடா… ரெஸ்ட் எடுக்கலையா… சுதன் உன் பிரெண்ட்க்கு சொல்ல மாட்டியா?” என்று அதட்டினார்.

     “எங்க தாத்தா.. ஐ நோ மேன்னு கத்தறான்.” என்றதும் பிரகதி விதுரனை பார்க்காமல் தவிர்த்தாள்.

    “ஏன் தாத்ரு… அங்க நான் ஐசியூல இருக்கேன். நீ என்னடானா நேத்து வந்த உன் பேத்தி தனியா இருப்பானு வந்து ஆதரவு தர்றியோ…” என்றான்.

    “டேய் சின்ன பிள்ளைடா. பாவமில்லை… நமக்கு பழகிடுச்சு. அவளுக்கு மனசுக்கு அடிச்சிக்கும்.” என்றார்.

      “சுதன் அவங்க நிலைமை?” என்றதும் பிரகதி திரும்பினாள்.

    மேலாடை இல்லாத விதுரன் வயிற்றில் கட்டு போட்டு ஆப்ரேஷன் முடித்து வந்துள்ளானென காட்டியது. அடுத்த நிமிடம் சுதனை கண்டு தாயின் நிலையை கேட்டாள்.

     சற்று நேர அமைதிக்கு பின், “அவங்க ஒரு மடக்கு குடிச்சிருக்காங்க. என்ன வேகமா அருந்தியதில் தொண்டை முழுவதும் படர்ந்து இருக்கு. அதோட எரிச்சலில் கையை விட, கையில் கொட்டியிருக்கு. நல்ல வேளை சாப்பிட உபயோகித்த மெட்டல் எடுக்காம இருக்க உடலில் படலை. பட்… கையில பட்டதால் அதுவும் ஆசிட்டோட பாதிப்புக்கு ஆளாகியிருக்கு.
 
    ENT டாக்டர் கண் முழிச்சப்பிறகு ஒரு டெஸ்ட் எடுக்கணும் சொல்லிருக்காங்க. அப்படி பார்த்த பிறகு தான் அவங்களோட குரல் மற்ற உள் பாகம் எந்தளவு திரும்ப பெற முடியும்னு உறுதியா சொல்வாங்க. தொண்ணுறு சதம் பேச முடியாதுனு சொல்லிட்டாங்க.” என்றதும் பிரகதி மயங்கி சரிந்தாள்.
 
     “ஏய்…” என்று விதுரன் வந்து பிடித்ததும் துணைக்கு பட்டுவும் தாங்கினாள்.

      உடனடியாக கன்னம் தட்டி நீரை தர, “பத்து சதம் குரலை திரும்ப பெறுகின்ற முயற்சில இருக்காங்க. அவங்க உயிருக்கு ஆபத்தில்லை.” என்றார்.

     “முதல்ல காலு.. இப்ப குரல்… எங்கம்மா உனக்கு என்னடா பாவம் பண்ணினாங்க. உன் வீம்புக்கு தாலிகட்டி என்னை பழி வாங்கறதா நினைச்சி எங்கம்மாவை சித்ரவதை செய்யறியே. நீ எல்லாம் ஏன் டா இன்னும் உயிரோட வந்து நிற்கற. சீ என்னை தொடதே…” என்று தள்ளி நகர்ந்து சென்றாள்.

    ஆதித்யாவுக்கு பிரகதி பேச்சு கஷ்டமாக இருந்தது. தனது ஒற்றை வாரிசு… சாபத்தினை பெறுகின்றானே என்று. அதுவும் கட்டிய மனைவியிடமே.. என்ற தவிப்பு அவரை வாட்டியது.

      “விக்னேஷ் ஷர்ட்?” என்றதும் விக்னேஷ் எடுத்து கொடுக்க, ஆசிட் கலந்தது யாருனு கண்டு பிடிச்சாங்களா… அவனை கொண்டுட்டு வா… இங்கயே அவன் குரவளைய நெறுக்கறேன்.” என்று கத்தினான்.
    
    விக்னேஷோ “சார் உங்களை பத்மாவதி அம்மாவை என்று பார்க்கவே எங்க நேரம் போச்சு. நாங்க சிசிடிவி இன்னமும் செக் பண்ணலை சார்.” என்றான் பவ்யமாக.
  
     “சுதன் நான் சிசிடிவி ரூமுக்கு போறேன்.” என்று புறப்பட, “விதுரா.. முதல்ல பிரகதி கூட இருடா. பிறகு பழி பாவத்தை பார்ப்ப. சசிக்கு ஆம்பள பிள்ளை பிறந்திருக்கு. தீபிகாவும் இங்க தான் இருக்கா. புது உசிர் நம்ம குடும்பத்துல வந்திருக்கிற நேரத்துல மற்றதை தூரப்போடு டா.” என்றார்.

    விதுரன் நடை அப்படியே நின்றது. “விக்னேஷ் நான் அங்க போயிட்டு வர்றேன். தர்மா நீ சிசிடிவில நம்ம வந்த டைம்மை என்னோட லஞ்ச் வந்த டைம்ல இருந்து கண்காணி வந்திடறேன்.” என்றதும் தர்மா ஓடினான்.

   “அம்மாடி… பத்மாவதி வலி தெரியாம இருக்க மயக்கம் கொடுத்திருப்பாங்க. இதோட நாளைக்கு தான் கண் திறப்பதா சுதன் சொன்னான். போய் உன் பிரெண்ட் தீபிகாவை ஓரெட்டு பார்த்துடு. கோமதி அங்க தான் இருப்பா. விதுரனோட போயிட்டு வாமா.” என்றார் ஆதித்யா.
    
    பிரகதி சில நொடி யோசனையில் நடந்தாள்.
  
     “விக்னேஷ் நீயும் போ. அதான் துணைக்கு என் ஓய்ப் வர்றாளே. நான் பார்த்துக்கறேன்” என்று கூற விக்னேஷ் அதிர்ந்தவனாய் பிரகதியை ஏறிட்டான்.

  கத்தி குத்தினவங்களோடவே போறாறே… கடவுளே… என்று விதுரன் மொழிந்தவைக்காக சிசிடிவி அறைக்கு அவனுமே சென்றான்.

       “பொசுக்குனு குத்திட்ட… ஸப்பா.. ரியல் டெவில் குயின் நீ.” என்றான்.

   பிரகதி எதுவும் பேசாது தொடர, தீபிகா அறையில் நுழைந்தாள்.

    “பிரகதி… விதுரனை குத்திட்டியாமே… இப்ப எப்..ப..” என்று பேச்சு ஸ்தம்பித்தது.

   கூடவே பின்னால் வந்த விதுரன் வருகையால்…

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *