5
அவள் அருகில் ஒருவன் அவளுடைய கணவன் போலும் தலையை படிய வாரி கண்களில் கண்ணாடி அணிந்து இந்த கால நாகரீகத்திற்கு சற்றும் பொருந்தாமல் நல்ல கிராமத்தான் போல இருந்தான். கிட்டத்தட்ட தொம்மை போல என்றால் சரியாக இருக்கும். கையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அவன் கவனத்தை கலைத்து கொண்டிருந்தது. ஆனால் அதையும் மீறி நிவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
“என்னம்மா, இப்போது தான் வேலையிலிருந்து வருகிறாயா?” பேச்சை ஆரம்பித்தவள் அம்மாகாரி. மீதி பேர் கண்களில் அந்த கேள்வி இருந்தது.
“ஆ…ஆமாம்”
“பாவம் களைப்பாக இருப்பாய். நாங்கள் வேறு உன்னை தொந்திரவு செய்யும்படி ஆயிற்று.”
“இல்லை, பரவாயில்லை.”
“இன்று நாள் நன்றாக இருக்கிறது. இதை விட்டால் அடுத்து பதினைந்து நாட்களுக்கு நல்ல நாள் இல்லை.”
“ஆமாம், அம்மா சொன்னார்கள்”
“நீ வேலையில் இருந்து வந்ததும் நாங்களும் பின்னாடியே வந்து விட்டோம்” என்றாள்.
செய்வதையும் செய்து விட்டு சால்ஜாப்பு வேற. என்ன சொல்வாள் அவள்? “ம்.!” என்று முனகினாள்.
“பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம். நீ போய் வேறு உடுத்தி வாம்மா.”
வாய் என்ன தான் இனிமையாக பேசினாலும் நீ இந்த உடையில் இருப்பது சரி தான், ஆனால் உன்னை நாங்கள் சம்பிரதாயமாக புடவையில் பார்க்க நினைக்கிறோம் என்ற உறுதி இருந்தது அந்த தாயின் நோக்கில். கிராமதார்களுக்கே உரிய நினைத்ததை சாதிக்கும் மனோபாவம்.
உள்ளுக்குள் கறுவிக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அப்போதும் அவளை பார்த்து மிக மென்மையாக புன்னகைத்தான். மனது ஆறியது அவளுக்கு. போகட்டும். அவனும் விரும்புகிறான். அவனுக்காக என்றேனும் உடை மாற்றி வரலாம் என்று நினைத்து திரும்பியவள் கண்களில் மற்றவன் குறுகுறு பார்வை படவும் சற்றே எரிச்சல் உற்றாள். ச்சை. என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?
அதற்குள் சீனியம்மாள் அவர்களுக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்து உபசரித்தாள். மாடியேறி போகும் போது ஸ்லாண்டிங்கில் நின்று கொண்டு இங்கே பார்த்து கொண்டிருந்த நம்ரூ இவள் மேலே ஏறி வருவதை பார்த்து வலது கை கட்டைவிரலை நிமிர்த்தி நன்றாக இருக்கிறான் என்று ஜாடை காட்டினாள்.
மெல்லிய நீலவண்ண நிறத்தில் சின்னதாக தங்க சரிகை இட்ட புடவையும் தங்க நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து கைகளில் வளையல், கூடுதலாக ஒரு செயின் அணிந்து தேவதையாக இறங்கி வந்தவளை கண்ட போது எல்லோருமே மிகுந்த திருப்தி அடைந்தார்கள். அந்த தாய் கையோடு கொண்டு வந்திருந்த மல்லிசரத்தை தலையில் சூட்டினாள்.
அதற்குள் மேல்கொண்டு பேச முடியாதவாறு அந்த கைக்குழந்தை அவர்களை பாடாய் படுத்தி கொண்டிருந்தது. நசநசவென்று ஒரே அழுகை வேறு.
“சரி போய் வருகிறோம்” எழுந்து கொண்டவர்கள் விடை பெற்று கொண்டு கிளம்பினார்கள். பெரியவர் மடியில் வைத்திருந்த வீபூதி பையை எடுத்து அவளுக்கு நெற்றியில் இட்டு விட்டார்.
“உனக்கு ஏதாவது கேட்க வேண்டுமா?’” சம்பிரதாயமான கேள்வியில் நீ என்ன கேட்டு விடப் போகிறாய் என்ற பொருள் இருந்தது.
பையன் எங்கே வேலையாக இருக்கிறான்? என்ன படித்துக் கொண்டிருக்கிறான்? என்ன சம்பளம் வாங்குகின்றான்? என்றெல்லாம் கேட்க வேண்டியது நிறையவே இருக்கிறது.
ஆனால்… என்ன கேட்டு என்ன? தான் கேட்கும் கேள்விகளுக்கான அவனுடைய பதிலில் ஒன்று சரியில்லை என்றாலும் தான் என்ன செய்து விட முடியும்? நடக்க போவதை யாராலும் தடுக்க முடியாதே.
ஆனாலும் பரவாயில்லை. ஒன்றை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. ஆம். இத்தனை நாட்கள் வந்த மாப்பிள்ளைகளில் இவன் தேவலை.
“இல்லை ஒன்றும் இல்லை. என்னுடைய அப்பா அம்மா கேட்டு கொள்வார்கள்”.
அவளுடைய பார்வை அந்த குழந்தையின் மீதே இருந்தது. வந்த இடத்தில் இது விழுந்து வைத்து கைகால் அடிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேர்ந்தால் வீண் அலைச்சல் ஒருபுறம் என்றால் தன்னைப் பார்க்க வந்த இடத்தில் இந்த குழந்தைக்கு ஏதேனும் ஒன்று என்றால் ராசியில்லாதவள் என்று தன் தலையல்லவா தேவையில்லாமல் உருளும். இவர்களும் தான் ஆகட்டும். இப்படி இம்சைகளை தவிர்த்து இருந்திருக்கலாம். நாமும் நிம்மதியாக ரெண்டு வார்த்தை பேசியிருந்திருக்கலாம்.
அந்த குழந்தை அவனுடைய கையிலிருந்து கீழே விழுந்து விட முயன்றது. அதை பாய்ந்து பிடித்தாள் நிவி.
கை நீட்டி குழந்தையைப் பெற்றுக் கொண்ட அந்த தாய் சொன்னாள். “சரி. நாங்கள் போய் வருகிறோம்”
அவன் அவளை பார்த்து தலையை ஆட்டி விட்டு சென்றான். அந்த பெண்ணும் நிவியின் அருகில் வந்து கையை பிடித்து கொண்டு போய் வருகிறேன் என்றது.
ஆனால் அந்த மற்றவனின் பார்வையின் அர்த்தம் தான் அவளுக்கு புரியவில்லை. புரியாத ஒன்று எரிச்சலை கொடுக்கும் அல்லவா! ஆமாம். நிவேதிதாவிற்கும் எரிச்சலாகத் தான் இருந்தது.
Interesting😍😍