“கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ல இருந்து கவுந்து, பள்ளத்தில விழுந்திருந்தது. பக்கத்துல சுத்திலும் யாருமே இல்ல; வீடு, கடைன்னு ஒண்ணும் கிடையாது. ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருந்த சர்ச்ல, பிரார்த்தனை கூட்டம் முடிச்சு திரும்பப் போனவிக யாரோ தான் பாத்து ஆம்புலன்சை கூப்பிட்டிருக்காக. நாங்க போயிப் பாத்தப்போ மூணு பேருமே உயிரோட இல்லை. வேற எந்த வண்டியும் பக்கத்துல இல்ல.
ஹைவேஸ்ல கார் ஆக்ஸிடெண்ட் எல்லாம் அடிக்கடி நடக்கறது தான்மா. இந்த மாசத்துக்கு இது முப்பத்தி மூணாவது கேசு. ஆக்ஸிடெண்ட்னு நேத்தே கேசை மூடியாச்சு. செக்சன் 304. அப்டின்னா சாலை விபத்தில் மரணம்னு அர்த்தம். அரசு தர்ற நிவாரண நிதி மூணு லட்சம் கிடைக்கும். காருக்கும் மனுசங்களுக்கும் இன்சூரன்ஸ் இருந்தா, அதுவும் கிடைக்கும். எல்லாத்தையும் கணக்கில வச்சுதான் டெத் சர்ட்டிபிகேட் அடிச்சுக் குடுத்தோம்.
நீங்க கஷ்டப்படக் கூடாதுன்னு கவனமா செஞ்சு தந்தா, வேதாசலம் ஐயாவைக் கூட்டிட்டு பஞ்சாயத்துக்கு வந்திருக்கீங்களே?”
விபத்து நடந்த பகுதியின் கட்டுப்பாட்டுக் காவல் கோட்டமான பனையூர் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தனர் வேதாசலம், வானதி மற்றும் திவாகர். வானதி கேட்டதற்காக மட்டுமே உடன்வந்த வேதாசலம், சார்-ஆய்வாளர் பேசியதைக் கேட்டதும் கேள்வியாக வானதியிடம் திரும்பினார்.
அவள் நிதானமாக, “இது ஏன் ஹிட் அண்ட் ரன் கேசா இருக்கக் கூடாது சார்?” என வினவ, ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்தார் அந்தக் காவலர்.
“நெறய சினிமாப் படம் பாப்பீகளோ? Hit and runன்னா என்னன்னு தெரியுமாம்மா? இடிச்சிட்டு, நிக்காமப் போறது. இந்தக் காரை இடிச்ச எந்தக் காரா இருந்தாலும், அதேயளவு அடிவாங்கியிருக்கும். அதுக்கு மேல ஓடியிருக்காது.
என்னதான் கவனமா கார் ஓட்டுனாலும், இந்த மாதிரி விபத்துகள் நடக்கத் தான் செய்யுது. எல்லாரும் எல்லா சமயத்துலயும் சரியா இருக்க முடியாதுல்ல?
எனக்குப் புரியுது சார், அய்யனை, ஆத்தாளை இழந்ததுல புள்ளை கஷ்டப்பட்டு போயிருக்கு… நீங்க தான் பாத்துக்கணும்ங்க ஐயா. பொண்ணு அழுகறான்னு கேசை மாத்த முடியுமா?”
வேதாசலத்திடமே அவர் மீண்டும் திரும்ப, திவாகருக்கு அவமானமாக இருந்தது. ஒரு சின்னப் பெண்ணின், கவலையில் இருக்கும் பெண்ணின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தன் தந்தை வந்து காவலர்களிடம் வாதிடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் வேதாசலம் யாரையும் லட்சியம் செய்யாமல் அவளை நோக்கி, “என்னம்மா செய்யணும்ங்கற?” எனக் கேட்க, அவளும் கொஞ்சமும் தடுமாறாமல், “சிவகங்கை ஸ்டேஷனுக்குக் கேசை மாத்தணும் மாமா. இப்போதைக்கு இதை செக்சன் 279- HIT AND RUNனு பதிவுபண்ணனும்.” என்றாள் தீர்க்கமாக.
காவலர் நகைப்பாக அவளைப் பார்க்க, திவாகரும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தான்.
வானதியின் உறுதியை உணர்ந்த வேதாசலமோ, சப் இன்ஸ்பெக்டரிடம் திரும்பி, “கேசை மாத்துங்க. சந்தேகத்துக்குரிய விபத்துன்னு எழுதி, சிவகங்கை மெயின் ஸ்டேஷனுக்குக் குடுங்க. நாங்க அங்க பாத்துக்கறோம்” என ஆணையிட்டார்.
அவரது அதிகாரத் தொனிக்கு உடனே கட்டுப்பட்டார் அந்த ஆய்வாளரும். மறுபேச்சின்றி அவர் கூறியதைச் செய்ய விழைந்தார். வானதியின் முகத்தில் ஒரு கணம் தோன்றி மறைந்த வெற்றிப் புன்னகையை கவனித்துத் திருப்திப் பட்டுக்கொண்டார் வேதாசலம்.
திவாகர் தன் தந்தையின் செயலால் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் தத்தளித்தான்.
வீடு திரும்பும் வரை, வானதியும் வேதாசலமும் வழக்கை சிவகங்கைக்கு மாற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்களையும், அதைத் தீர்க்கும் முறைகளையும் விவாதித்துக் கொண்டே வந்தனர்.
மதிய உணவுக்குப் பின்னர், வானதி தனது மடிக்கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்தபோது, திவாகர் அறைக்குள் நுழையவும் பட்டென அதை மூடினாள்.
அவளை வினோதமாகப் பார்த்துவிட்டுத் தனது கைபேசியில் மூழ்கினான் அவன். ஆனால் சிறிது நேரம் கழித்து மீனாட்சி அழைக்க, வானதி வெளியே சென்றதும், சந்தேகத்தோடு மடிக்கணினியைத் திறத்தான்.. தன்னிடம் என்னத்தை மறைக்க விரும்புகிறாள் எனப் பார்க்க நினைத்தான் அவன். கடைசியாக மூடப்பட்ட ஃபைலைத் திறந்தான்.
“The Incidences of Traumatic Dissociative disorders”
என்னவோ மருத்துவப் புத்தகம் போல இருந்தது. எதுவும் தெளிவாகப் புரியவில்லை அவனுக்கு. அதை மூடிவிட்டு, கூகுள் செயலியைத் திறந்தான்.
அதில் அம்னீசியா பற்றியெல்லாம் தேடியிருந்தாள் அவள்.
‘இதையெல்லாம் எதற்காகத் தேடுகிறாள்’ எனக் குழம்பியபடியே அவன் மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்துகொள்ள, சில நிமிடத்தில் அறைக்குள் வந்த வானதி, “சிவகங்கை ஸ்டேஷனுக்குப் போகணும். கேசை விசாரிக்கறதுக்கு கூப்பிட்டிருக்காங்க. மாமா தூங்கிட்டு இருக்கார்” என்றிட, தேமே என முழித்தவனுக்கு இருகணங்களுக்குப் பிறகே அவள் தன்னை உடன் வருமாறு அழைக்கிறாள் என்பது புரிய, எழுந்து அவளுடன் சென்றான்.
சிவகங்கை தலைமைக் காவல் நிலையம் மாநகர ஆணையர் அலுவலகத்துடன் ஒன்றியிருந்தது. நகரின் நடுவில் செந்நிறத்தில் நின்ற அக்கட்டிடத்தின் வாசலில் வந்து இறங்கினர் இருவரும். முகப்பிலிருந்த கான்ஸ்டபிளிடம் இவர்கள் சென்று விபரம் கூறியதும், அரை மணி நேரத்தில் ஆய்வாளரைச் சந்திக்க முடிந்தது.
“சொல்லுங்க மேடம்… ரெகமன்டேஷன்ல வந்த கேசுங்கறதைத் தவிர, இதுல வேற ஒண்ணுமே இல்ல. ஏற்கனவே ஒரு ஸ்டேஷன் மூடிவச்ச கேஸ் இது. என்னை என்ன பண்ண சொல்றீங்க?”
சற்றே வேண்டா வெறுப்பாக அவர் கேட்பது புரிந்தது இருவருக்கும்.
மௌனமாக அவர் மேசையின்மீது வைத்திருந்த கேஸ் ஃபைலை எடுத்துப் பிரித்தாள் அவள். அதிலிருந்த புகைப்படங்கள் சிலவற்றை எடுத்தாள். சிதிலமடைந்த காரும், சுற்றியுள்ள உடைந்த பாகங்களும் இருந்தன அதில். அதையே சிலகணங்கள் உற்றுப் பார்த்தபடி இருந்தாள் அவள்.
“ஹிட் அண்ட் ரன்னா இருக்கும்னு சந்தேகம்தான் பட்டேன். ஆனா, நிச்சயமாவே இது வேற ஏதோன்னு இப்போ புரியுது.. ஏன் சார், எந்த ஊருல, தானா கவுந்து விழுந்த காருல, முன்பக்கத்தில மட்டும் நசுங்கி இருக்கு?”
அவள் நியாயமான கோபத்துடன் கேட்க, திகைத்த இன்ஸ்பெக்டர் அப்புகைப்படங்களை வாங்கிப் பார்த்தார்.
“பேனட்டோட இடதுபக்கத்தில இருக்க சிதிலத்தைப் பார்த்தா, வேகமா வந்த ஏதோ ஒரு பெரிய வெஹிகில்… ஒரு டெம்போ வேன், இல்லைன்னா லாரி தான் இடிச்சிருக்கணும், இல்லையா?”
அவள் கூறியதை ஆமோதிக்கும்படி அந்த இன்ஸ்பெக்டர் தலையாட்ட, திவாகர் வாய்பிளந்து நின்றான்.
“இடிச்ச இம்பேக்ட்டை பார்க்கும்போது, ப்ரேக் பிடிக்காம இடிச்ச விபத்து மாதிரி தெரியலையே… சைடுல இருக்க டெண்ட்(dent) பாருங்க. நேரா இடிச்சிட்டு நிறுத்தாமப் போயிருந்தா, எப்படி சைட்ல இந்தமாதிரி ஆகும்?”
“ம்ம்.. ஆமா மேடம்.. நான் அதை யோசிக்கவே இல்ல பாருங்க..”
இன்ஸ்பெக்டர் அசடுவழிய, திவாகருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஒருவேளை தூக்கி வீசினதுனால இந்த சேதாரம்லாம் ஆகியிருக்கலாம்ல?”
திவாகர் இடையிட்டுக் கேட்க, இருவருமே கேவலமான பார்வை பார்த்தனர் அவனை.
பின் வானதியே விளக்கினாள், அவன் முகத்தைப் பாராமல்.
“கார் ஒரு டைம் உருண்டிருக்கு. அதனோட அடையாளமா காரை சுத்திலுமே காயங்கள் இருக்கு. ஆனா, இந்த இடப்பகுதியில, அதாவது இடிச்ச வண்டி போன திசையில, இவ்வளவு பெரிய பள்ளம் மாதிரி ஆகியிருக்கு வண்டியில. அப்போ, மறுபடி வந்து இடிச்சிருக்காங்கனு தான் அர்த்தம்.”
பேசியவாறே இன்ஸ்பெக்டரிடம் திரும்பினாள் அவள்.
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி, மூணு பேரோட உடலிலுமே, க்ரஷ் இன்ஜுரி, அதாவது, அதீத அழுத்தத்தினாலான காயங்கள் காணப்பட்டிருக்கு. நிச்சயமா இது multiple hits தான்.
சோ, விபத்துன்னு இருக்கற கேசை மாத்திட்டு, இதை திட்டமிட்ட படுகொலைன்னு ஃபைல் பண்ணணும்.”
அவள் கூறியதை அப்படியே இன்ஸ்பெக்டர் ஆமோதிக்க, இத்தனை கிரிமினல் மூளை கொண்டவளா இவள் என்று மனதினுள் அரண்டுபோனான் திவாகர்.
‘டேய் திவா.. இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்டா..’
மேலும் பல புகைப்படங்களையும், ரிப்போர்ட்களையும் பார்த்துவிட்டு, அதிலும் தனது கருத்துக்களையும் திருத்தங்களையும் கூறினாள் அவள். விபத்தில் எடுக்கப்பட்டிருந்த பெற்றோரின் புகைப்படங்களைப் பார்த்ததும் பொங்கிவந்த கண்ணீரைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஆனால் பேசும்போது, குரலில் தொனித்த நடுக்கத்தைக் கவனித்து வருந்தினான் அவன்.
ஆதரவாக அவள் கையைப் பற்ற முயன்றான் திவாகர். ஆனால் அவன் தொட்டதுமே வெடுக்கென விலகிக்கொண்டாள் அவள்.
ஆய்வாளர், தங்களது குற்றப்பதிவுக் குறிப்பேட்டில் செக்சன் 279 எனக் குறிப்பிட்டிருந்ததை மாற்றிவிட்டு, திட்டமிட்ட படுகொலைக்கான தண்டனைப்பிரிவான, செக்சன் 299இன் கீழ் வழக்குப்பதிவைச் செய்தார். அதை ஒரு தீர்மானமான முகத்துடன் பார்த்திருந்தாள் வானதி.
“மேடம், ஆக்சிடெண்ட் கேஸ் இப்ப கொலைக் கேஸ் ஆகிருக்கு. அதனால கூடிய சீக்கரம் இதை க்ரைம் ப்ராஞ்ச்சுக்கு மாத்திடுவாங்க”
“இன்ஸ்பெக்டர்… எப்போ வேணாலும் விசாரணைக்கு வர்றதுக்கு நான் தயார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ட்ரை பண்ணீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும்..”
“கண்டிப்பா மேடம்… நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க. எங்களால எந்தளவுக்கு முடியுமோ அவ்ளோ வேகமா இதை செஞ்சவனை பிடிக்கப் பாக்குறோம்”
அவரிடம் நன்றி கூறிவிட்டு அவள் கிளம்ப, குறையாத பிரம்மிப்புடன் நின்றிருந்தான் அவன்.
💜💜💜💜💜 rocking vanathiiiii
Very interesting sis.,.👌👌👌
Interesting vanathi thairiyam alaga iruku