கண்ணுக்குச் சற்றுக் கீழே இருந்த தசையை இழுத்துப்பிடித்தபடி கண்ணாடியில் பார்த்து கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டிருந்தாள் வனபத்ரா. இரண்டுகண்களுக்கும் மையெழுதிய பிறகு பார்க்க, அழகாக இருந்தது. மீண்டும் ஒருமுறை பார்த்தவளுக்கு, எப்பொழுது பார்த்தாலும் “உன் கண்ணு பார்க்க, நல்லா அழகா துறுதுறுன்னு இருக்க கருவண்டு மாதிரி இருக்கு…” என்று அடிக்கடி சொல்பவன் நினைவுக்குவந்தான்.
ஒரு பெருமூச்சு விட்டவள், “உங்களுக்கு வேற உவமையே கிடைக்கலயா ஜீவி?” என மனதிற்குள் அவனைச் செல்லமாகத் திட்டியபடியே மீண்டும் ஒருமுறை முதுகளவு இருந்த தன் கூந்தலை அழகாகப் பின்னியிருந்த ப்ரெஞ்ச் ப்ரெய்டை அங்கங்கே இழுத்து சரிசெய்தாள். வழக்கமாக அவ்வளவாக அணியாத உடையான சேலையை இன்று கட்டியிருந்தாள்.
இருபது நிமிடம் நின்று என்னைச் சுற்றிக் கொண்டதற்கு மதிப்புண்டு என்பது போல அடர்வெந்தய நிறத்தில் வெள்ளிநிற வரையுருவங்களோடு இருந்த அந்தச் சேலை அவளுக்கு அழகாகவும் இருந்தது. முகத்தில் ஒரு புன்னகை வந்தது. முதல்முறை அவனைப் பார்ப்பதற்குச் சென்றதன்பிறகு, இப்போதுதான் இத்தனை நேரம் எடுத்திருக்கிறாள்.
அன்று ஏதோ சர்ப்பரைஸ் என்றவன், அதைச் சொல்லும்முன், வேறொரு முக்கியமான அழைப்பு என இவளது அழைப்பைத் துண்டித்திருந்தான். அதன்பின் வேலைவிஷயமாக வெளியூர் போகிறேன், தொடர்பு கிடைக்காது என்று மட்டும் சொல்லியிருந்தான், அதன்பின் மைசூரு வந்திருக்கிறேன் என்றவன் நேரில் பேசவேண்டும் என இந்தக் கோவிலுக்கு வரச் சொன்னான்.
அழகாக வெளியே கிளம்பி வந்த மகளை, ரசனையும் மெச்சுதலும் ஆச்சரியமுமாகக் கலந்து பார்த்தார் அஞ்சனா. அவளிடம் என்ன சேலை எனக் கேட்கப் போகையில், வெளியே “பூவு…” எனச் சத்தம் கொடுக்க, “இரு…” என்றவர் நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த மல்லிகைப்பூவை வாங்கிவந்தார். “திரும்பு…” என அவள் தலையில் வைத்துவிடப் போக, “அம்மா… ஒரு நிமிஷம்…” என்றவள் வேகமாகச் சமையலறைக்குள் சென்றாள்.
கையில் ஒரு பாத்திரமும் இடுக்கியுமாக வந்தவளை அஞ்சனா தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகப் பார்க்க, “இதுக்குள்ள போடுங்கம்மா…” என்று பாத்திரலிருந்த தண்ணீரைக் காட்டினாள்.
“பத்ரா…”
“ம்மா.. மல்லிகைப்பூக்குள்ள புழு இருந்தாலும் இருக்கும்…”
“அடியே… என் வாழ்நாள்ல நான் மல்லிகைப்பூக்குள்ள புழுவைப் பார்த்தது ரெண்டே ரெண்டு தடவைதான்… அதுல ஒருதடவை நீ என்கூட இருந்ததுதான் தப்பாகிப் போச்சு…” என்றவர் தண்ணீருக்குள் மலரைப்போட, அவள் கையில் வைத்திருந்த இடுக்கியால் அதை நன்றாக அலசினாள். ஒன்றுமில்லை என்று உறுதிப்படுத்திய பின்னரே, வெளியே எடுத்தவள் ஒரு துணியால் அதிலிருந்த தண்ணீரை ஒற்றி எடுத்துவிட்டு அன்னையிடம் வந்தாள். ஒரு பூ வைப்பதற்கு இவ்வளவு செய்பவளைக் கண்டு அயர்ச்சியுடன் சோபாவில் அமர்ந்து விட்டிருந்த அஞ்சனா தன் முன்னால் அமர்ந்த மகளின் தலையில் அந்தப் பூவை மென்மையாகக் குத்திவிட்டார்.
“ஆமா… என்ன சேல கட்டிருக்க?”
ஒருகணம் இதழைக் கடித்துவிட்டு நிமிர்ந்தாள் வனபத்ரா. அன்னையிடம் இன்னும் சொல்லாமலிருப்பது என்னவோ போல் இருந்தது. ஆனால், ஜீவிதனிடமே இன்னும் சொல்லவில்லையே? ஜீவிதனுமே இன்னும் சொல்லவில்லையே. லேசாகத் தயங்கியவள், “அம்மா…” என்று இழுத்தாள்.
வெறும் அன்னையின் கண்களே பிள்ளைகள் என்று வருகையில் ஆயிரம் ஸ்கேன் செய்யும். காவல்துறை ஆய்வாளர்? கேட்கவா வேண்டும்? அஞ்சனாவின் கண்களிலிருந்து மகள் தப்பவில்லைதான். முதலில் மலர்ச்சியுடன் இருக்கும் மகளது முகத்தைப் பார்த்து ஏதோ கொரியன் சீரிஸ் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தார்தான். ஆனால், அப்படியில்லை என்பது கொஞ்சம்கொஞ்சமாக அவருக்குப் புரிந்திருந்தது. விசாரித்தறிய நேரமாகாது. ஆனால், மகளாகச் சொல்லட்டுமே என்பது எண்ணம்.
விலங்குகள் என்று வந்தால்தான் அவருடைய மகள் ஏகத்துக்கும் குளறுபடி செய்வாள், மனிதர்களை எடைபோடுவதில் கில்லாடிதான். நல்லவனாகத்தான் இருப்பான், இருந்தாலும் அவள் சொன்னபிறகு தானும் விசாரித்துவிடலாம் என்று எண்ணியபடி காத்திருந்தார். கணவரது காதிலும் போட்டு வைத்திருந்தார். ஆனால், அவள் சொல்லாமலே சுற்றிக் கொண்டிருந்தாள். இப்போது வேறு ஒன்று தோன்ற சட்டென நிமிர்ந்து அமர்ந்தார்.
“ஏய், ரிஜிஸ்டர் மேரெஜ் எதுவும் பண்ணப்போறியாடி?”
“ம்மா…” என்றாள் வனபத்ரா அதிர்ச்சியாக. மகளது முகபாவத்தைப் பார்த்து அவருக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. அவளாகச் சொல்லமாட்டாள் போலேயே. அப்படியெனில் சொல்ல வைத்துவிட்டால் போயிற்று என்று நினைத்தபடிதான் அப்படி கேட்டார்.
“அதெல்லாம் இல்லம்மா… ஆனா…”
“ஆனா?”
“எனக்கு ஒருத்தரப் பிடிக்கும்…” அவள் தயக்கமாகச் சொன்னாள். அஞ்சனா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“ம்ம்.. பையன் யாரு? என்ன பண்றாங்க? எல்லாம் சொல்லு…” என்றார் எந்த உணர்வுகளையும் காட்டாமல்.
“பேரு ஜீவிதன்…” எனவும் அஞ்சனாவுக்கு அந்தப் பெயரை எங்கோ கேட்டது போல் இருந்தது. இருந்தாலும் துல்லியமாக நினைவு வராமல் இருக்க, மகள் தொடர்ந்தாள். ” ஸ்போர்ட்ஸ் ஷுட்டர்… எவ்வளவு சம்பளம் ன்னுலாம் தெரியல… ஒருவேள கம்மியா இருந்தா நான் சேர்த்துச் சம்பாதிச்சுக்கறேன். சொந்த ஊர் நாகர்கோவில், அப்பா அம்மா ரெண்டுபேருமே பேங்க் மேனெஜர்ஸ்… கூடப்பிறந்தவங்க யாரும் கிடையாது. என்ன ஜாதின்னுலாம் தெரியாது. என்ன ஜாதியா இருந்தாலும் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்…”
உறுதியாகச் சொன்ன மகளை அஞ்சனா யோசனையாகப் பார்த்தார். காரணம், அவள் சொன்ன தகவல்கள் எல்லாவற்றையுமே அவர் எங்கேயோ கேட்டதுபோல இருந்தது. அந்தத் தகவலில் ஒன்று விடுபடுவது போலவும் இருந்தது. அந்தத் தகவலுக்கு உரியவன் யார் என அவருக்குத் தெரிவது போலவும் இருந்தது. ஆனால்… ஆனால்? இது எப்படி சாத்தியம்? மகளது முகத்தில் ஏற்கனவே இருந்த மலர்ச்சியும் அன்னையிடம் சொல்லிவிட்ட நிம்மதியும், அவனைத் தான் மணப்பேன் என்கிற உறுதியும் இணைந்து தெரிய, மறைமுகமாக ஒரு பெருமூச்சு விட்டவர், “போட்டா ஏதாவது இருக்கா?” என்று கேட்டார்.
“போட்டா எதுவும் அனுப்பலம்மா அவங்க…”
“வாட்சப் டீபில இருக்கான்னு பாரு…” என்றார்.
“அது தெரியாதும்மா… நான் அவர் நம்பரை இன்னும் சேவ் பண்ணல…” என்றாள்.
“ஏன்டி? ஏதாவது எமர்ஜென்சின்னா? லூசு…”
“அது மனப்பாடமா தெரியும்…”
அஞ்சனா மகளை என்ன சொல்வதென்று தெரியாமல் பார்க்க, அவளோ குரலில் உறுதியுடன் பேசத் தொடங்கியிருந்தாள். மகளது குரல் அந்தத் தொனியில் தொனிக்கத் தொடங்க, அஞ்சனாவுக்குத் திக்கென்றிருந்தது. அவரது மகளைப் பொறுத்தவரையில் நல்லபெண். அவளுக்கு இருந்த ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், அந்த மிருகபயம்தான். அதுகூட, தங்கள் மகன் சொல்லுமளவு அவ்வளவு பெரிய பிரச்சினை எல்லாம் இல்லை என்று அஞ்சனாவுக்குத் தெரியும். எவன் அவருடைய அருமை மகளை ஏதோ நாய்க்காகவோ பூனைக்காகவோ வேண்டாம் என்று சொல்வான்? என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது.
அதை விட்டுவிட்டுப் பார்த்தால் அவள் நிஜமாகவே நல்லபெண்தான். அம்மா, அப்பா, தம்பி என எல்லாரையும் புரிந்துநடந்துகொள்வாள். தேவையற்று இவர்கள் மூவரில் யாராவது கோபப்பட்டால் கூட அவள் கோபப்படமாட்டாள். வீட்டில் அந்த வேலை செய்ய மாட்டேன், இந்த வேலை செய்ய மாட்டேன் என்றெல்லாம் அவள் சொல்லியது கிடையாது. பிறருக்கு உதவி புரியும் எண்ணமுமுண்டு. மொத்தமாகப் பார்த்தால் கொஞ்சம் மென்மையான குணமாகக் கூடத் தெரியும்.
ஆனால், மகள் ஒன்றைப் பிடிவாதம் என்று பிடித்தால், என்ன பிடியாகப் பிடித்துத் தொங்குவாள் என்று பெற்ற தாய் அவருக்குத்தானே தெரியும்? நல்ல விஷயம் என்னவென்றால், எல்லாவற்றுக்கும் பிடிவாதம் பிடித்துத் தொலையமாட்டாள். அவள் அப்படி அடம்பண்ணி செய்கின்ற விஷயங்கள் நன்மை பயப்பதாகத்தான் இருக்கும். அந்தப் பிடிவாதத்தொனி மகளது குரலில் தெரியத் தொடங்க, அஞ்சனாவுக்குக் கொஞ்சம் பக்கென்றுதான் இருந்தது. மகள் பிடிவாதம் பிடிக்கிறாள் என்றால், அந்த விஷயம் அவளுக்கு மிகமிகப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியிருக்க, அது தங்களுக்குப் பிடிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால், அவளுக்கே பிடிக்காமல் போனால்? தான் நினைப்பவனாக மகள் சொல்பவன் இருந்துவிட்டால் மகளது மனம் உடைந்துபோகுமே என்று தாய்மனம் பதறத் தொடங்கியது.
“ம்மா… நான் அவர் நம்பரை மேரெஜ்க்கு அப்பறம், அல்லது மேரெஜ் டிசைட் ஆன பிறகுதான் சேவ் பண்ணனும்ன்னு வச்சுருக்கேன்…அவர் நம்பர நான் சேவ் பண்ணலன்னு அவருக்கும் தெரியும். “
அஞ்சனாவுக்கு மகள் உறுதியாகப் பேசப்பேச உள்ளிருந்த பயம் மிகுதியாவதுபோல இருந்தது. அவளோ, கொஞ்சம் தயங்கிவிட்டு, தான் வரைந்து வைத்திருந்த அவனுடைய படத்தையே அன்னையிடம் காட்டினாள். தத்ரூபமாக இருக்க, அஞ்சனாவுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. அலைபேசியை வாங்கி அந்தப்படத்தை வாங்கிப் பார்த்தவர் மகளையும் படத்தையுமே மாறிமாறிப் பார்த்தார். அவர் மெதுவாக வாய்திறக்க, அதற்குள் அவளது அலைபேசி அடித்தது.
அவரிடமிருந்து அலைபேசியை எடுத்துக் கொண்டவள், “அம்மா.. அவங்கதான் மா.. வந்துட்டாங்க போல… உங்க கோவிலுக்குத்தான் போறேன்… சும்மா பார்க்கத்தான் போறேன்… கல்யாணம்லாம் நீங்க பண்ணிவைக்கறப்பதான் பண்ணிப்பேன்… போயிட்டு வரேன்.. டாட்டா…” என்று அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவந்துவிட்டாள். அவளுக்கு அன்னை ஏதாவது மறுப்பாகச் சொல்லிவிடுவாரோ என்ற பயம்.
ஜீவிதன் அவளுக்காகக் கோவில் வாசலிலேயே நின்றான். அவனும் அவள் அணிந்திருந்த அதே வெந்தய நிறத்தில் ஒரு முழுக்கைச்சட்டை, வேட்டி என்ற சகிதம் நிற்க, ஒருகணம் அவனைக் கண்களுக்குள் உள்வாங்கிவிட்டுத்தான் வண்டியை அமர்த்தினாள். சொல்லிக்கொள்ளாமலே சொல்லிவைத்தது போன்று அணிந்திருந்த ஆடையைக் காண்கையில் இருவர் முகமும் மலர்ந்து விரிந்திருந்தது.
இருவரும் அமைதியாகக் கோவிலுக்குள் சென்றனர். அதே ஒரு நிம்மதி விரவிய அமைதியுடன் வணங்கிவந்து அமர, ஜீவிதன் என்ன சொல்லவேண்டும் என வரிசையாக மனதிற்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். சற்றுநேரம் அமைதிலேயே கழிய, “சேம் பின்ச்…” என்றாள் அவள் ஆடையைக் காட்டி. அவன் அழகாகப் புன்னகைத்தான்.
அவனுடைய புன்னகையை உள்வாங்கியவள், “நமக்குள்ள எவ்ளோ விஷயம் ஒத்துப் போகுது தெரியுமா ஜீவி?” என்றாள் அமைதியாக.
என்னென்னவோ சொல்ல வேண்டும் என்று நினைத்தவன், என்ன தோன்றியதோ, சட்டென “வீட்ல பேசுவோமா வனா?” என்றிருந்தான்.அவனுடைய அமைதியான குரலில் அவள் என்ன சொல்வாளோ என்ற கொஞ்சம் பதற்றம் கூடத் தொனித்தது. இருவரில் ஒருவர் கூட இதுவரை காதல் என்ற சொல்லையோ திருமணம் என்ற கனவையோ மற்றவரிடம் உச்சரித்ததில்லை. ஆனால், இருவருக்குமே தன்மேல் அடுத்தவருக்கு இருப்பது வெறும் நட்பல்ல என்பது புரிந்தும் இருந்தது. இதை எப்படி அணுகுவது என யோசித்து யோசித்துப் பார்த்தவன், நேரடியாகக் கேட்டுவிட்டான்.
அவள் அவன் சொன்னதைச் சரியாகத்தான் புரிந்துகொண்டோமா? என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பேசும் தமிழ் அவளுக்கு மதுரந்தமிழ்தான். ஆனால், அவ்வபோது முழுதாகப் புரியாது. அதே உணர்வில் அவனைப் பார்க்க, “வீட்டுல பேசுவோமா வனா?” என்றான் அவன் மீண்டும். படபடக்கத் தொடங்கிய மனது எங்கோ பறக்கப்போகிறேன் என்பதைப் போல மாறியிருக்க, அவளுடைய முகம் அவளையறியாமல் சிவந்தது. இருவரும் ஒரு ஆழ்மூச்சை எடுத்துவிட, “சரி…” என்றாள் வனபத்ரா அமைதியாக.
ஒரு பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவனின் முகம், அவள் முகம் காட்டிய உணர்வுகளில் வர்ணஜாலத்திற்கு மாறத் தொடங்கியது. இப்போது அவனுடைய முகம் திகைப்பு, வெட்கம் என்று ஆர்டரில் போக, “பசங்க வெட்கப்பட்டா அழகுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இவ்ளோ அழகுன்னு தெரியாது…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், வெளியே வாய்திறவாமல் அமர்ந்திருந்தாள்.
இருவரும் மீண்டும் ஒரு ஆழ்மூச்சை எடுத்துவிட, தன் நெஞ்சில் லேசாகக் கைவைத்து அழுத்தியவன், “யப்பா…” என்றபடி தான் பின்னால் இருந்த தூணில் சாய்ந்தான். பின் முகமலர்ச்சியுடன் பட்டென எழுந்து அமர்ந்தவன், “எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா?” என்றான்.
“எதுக்கு?”
“எங்க என்ன பேசணும்? அதை எதுக்குப் பேசணும்? ன்னு கேட்டுருவியோன்னுதான்…” என்றவன் புன்னகைத்தான். அவன் புன்னகையைப் பிரதிபலித்தவள், “ஆமா, அதென்ன நேரா வீட்ல பேசணும்ங்கறீங்க? முதல்ல என்ட்ட பேசவேணாமா?” என்று கேட்டாள்.
“முதல்ல வீட்ல சம்சாரிக்காம். வனபத்ரெயுடெ வனபத்ரெ என்டெ சம்சாரமான பின்னே சம்சாரிச்சுக்கலாம்…” அதிலேயே அவள் கேட்டதற்கான பதிலை அவள் கொடுத்துவிட, அவள் முகம் மீண்டும் அழகாய்ச் சிவந்தது.
அதை இரசித்தவன், கேட்கவேண்டிய விஷயங்கள் நினைவு வர, “வனா…”என்றான்.
“ம்ம்?”
“உனக்கு வேலை அங்க இருந்தே பண்ணிக்கலாம்தானே? இல்ல எதுவும் பிரச்சினை வருமா?”
“அதெல்லாம் இல்ல. நான் ப்ரீலான்சிங்தானே பண்ணிட்டு இருக்கேன். லேப்டாப்பும் பென் டேப்லட்டும் நெட்டும் இருந்தா என் வேலையை எங்கனாலும் செய்யலாம். தேவைப்பட்டா, நான் அப்பப்ப வந்துக்கலாம்.” என்றாள்.
“பிரச்சன இல்லதானெ? ஏன் ன்னா, எனக்கு என்னோட வேல ரொம்பப் பிடிக்கும். அதை விடச் சொன்னா, என்னால தாங்க முடியாது. அதுபோலத்தான உனக்கும். அதுக்குத்தான் கேக்கன்…”
அவன் கேட்கவும் அவள் இன்னும் சற்று யோசித்துப் பின், “நீங்களும் அப்பப்ப வெளியூர் போக வேண்டிவரும்தானே?” என்று கேட்டாள்.
“ஆமா…” பின்னே, வனவிலங்குகள் என்ன அவன் இருக்கும் பகுதியில் மட்டுமா எல்லை வகுத்து இறங்கிக் கொண்டிருக்கும்? அவன் வேலை பற்றாக்குறையுடையது. தேவைப்படும் ஊர்களுக்கு அவன் சென்றுதானே ஆகவேண்டும்?.
“அப்ப நான் இங்க வந்து பார்க்கவேண்டிய வேலைகளை முடிச்சுக்கறேன்.” அவள் சொல்லவும் அவன் புன்னகைத்தான். பின் மெல்ல தயங்கியவன், ” என் வேலல உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லதானே?” என்றான். மனதுக்குள் ஒரு பட்சி அவள் ஆட்சேபணை என்றால் என்ன செய்வாய் என்று கேள்வி எழுப்பியது. அதை அடக்கிவிட்டுப் பயத்துடன் அவள்முகம் பார்த்திருந்தான்.
“உங்க வேலல எனக்கு என்ன ஆட்சேபணை வரப்போகுது?” அவள் சொல்லவும் அவன் முகம் அப்படியே மலர்ந்து விரிந்தது.
“இல்ல… என் வேல கொஞ்சம் ஆபத்தானதுதான்… அதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லதானே?” என்றான் மீண்டும்.
அவனுடைய வேலையில் என்ன ஆபத்து? என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. வழக்கம்போல, அவன் பேசுவது தனக்குப் புரியவில்லையோ என்றபடி அவள் பார்த்திருக்க, அவன் தன் அலைபேசியை எடுத்தான்.
“வனா… ஒரு செல்பி?” இதுவரை இருவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. இன்று இருவரும் ஒரே நிற ஆடை, முதன்முதலில் சந்தித்த இடம், மனதைத் தெரிவித்த தருணம் என எல்லாம் இணைந்திருக்க, கேட்டிருந்தான்.
அவளுக்கு அது இருவரும் ஒரே ஆடை என்னும்போதே தோன்றியிருந்தது. இப்போது அவனும் கேட்க, மற்ற குழப்பங்களை ஒத்திவைத்துவிட்டுப் புன்னகைத்தாள். அவன் “சீஸ்…” என “இட்ட்லிஇஇ…” என்றவளது தொனியில் அவன் நன்றாகச் சிரித்தபடி படபடவென அலைபேசித் தொடுதிரையைத் தட்டினான். அழகான ஒளிப்படங்களாக விழுந்திருந்தன.
அதை அவளுக்கு அனுப்பியவன் மீண்டும் கேலரிக்குள் வர, இருந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு அவளிடம் அலைபேசியைக் காட்டினான். “இது ஷமீரா…” என்றபடி அவன் நீட்ட, “யாரது ஷமீரா? ஏதோ தோழி? ஒன்றுவிட்ட தங்கை? பக்கத்துவீட்டுக்குழந்தை? ஆனால் எல்லாரைப் பற்றியும் அவன் சொல்லியிருக்கிறானே? இது யார் புதிதாக” என்று நினைத்தபடியே வாங்கியவள், அந்த ஒளிப்படத்தில் முறைத்தபடி இருந்த புலியைப் பார்த்துவிட்டு அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“வேலை விஷயமா மைசூர் போயிருந்தேன் ன்னு சொன்னேன்ல… மேடமைப் பார்க்கத்தான்… ” சொல்லிக் கொண்டு போனவன், அவளுடைய முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு நிறுத்தினான்.
“வனா?”
(வருவான்…)