19
கூட்டம் தொடங்கும் முன்பு ஒரு சிறிய பிரி ஆம்ப் கொடுத்து விட்டு நேரடியாக நிவியை பார்த்து கேட்டார் ரீஜனல் மேனேஜர். “நிவேதிதா, இந்த வருட ரிபோர்ட் வந்தது. நீ எவ்வளவு பொருளுக்கு ஆர்டர் வாங்கி இருந்தே?”
செக் பண்ணாமலே சொன்னாள். மனப்பாடம் அவளுக்கு. “ஐம்பத்தி ஓராயிரம் ஆர்டர் ஆகி இருக்கு சார்”
“சரி தானே, மீண்டும் ஒரு முறை சரி பார்த்து விட்டு சொல்”
“சரி தான் சார்.” அவள் குரலில் திடம் இருந்தது. அவளுடைய வேலையில் அவளுக்கு மிகவும் தன்னம்பிக்கை.
ஆனால் அவளருகில் உட்கார்ந்திருந்த ராம் மனோகர் அடிக்குரலில் சீறினான்.“சரியாக பார்.”
“சரியாக தான்…..பார்த்து ….”
அடடா..! என்ன இது? எப்படி நேர்ந்தது? அவளுடைய எல்லா ரிபோர்டிலும் ஐம்பத்தி ஓராயிரம் என்பதற்கு பதிலாக ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் என்று கொடுத்திருந்தாள். செய்வது அறியாது திகைத்து அவனை ஏறிட்டவளை அவன் உறுத்து விழித்தான்.
“நேற்று முழுவதும் எனக்கு சரியான மண்டை இடி. இவ்வளவு ஆர்டர் இருந்தும் நாம் ஏன் சரியான படி சப்ளை செய்யவில்லை என்று காரணம் சொல்ல தெரியாமல் டாலி ஆகாமல் பழைய கணக்கை எல்லாம் புரட்டி பார்த்து கடைசியில் தான் கண்டு பிடித்தேன் இது முற்றும் முடிய உன் தவறு என்று. மேனுவல் ஏறற்.”
சிவரட்சகன் குறுக்கிட்டு “இத்தனைக்கு உண்டான பணம் வசூலாகவில்லை.”
மீண்டும் ராமே தொடர்ந்தான். “இது நிச்சயமாக உன் தவறு என்று புரிந்து விட்டது. சரி அதை கேட்டு தெளிவு பெறலாம் என்றால் நீ போனை எடுத்தால் தானே ஆகும்?”
“பழைய கணக்கை கொண்டு இன்றைய கணக்கை போட்டு அதற்கான விளக்கத்தை தயார் செய்தேன். எனக்கு இரட்டிப்பு வேலை.”
மிகவும் உற்சாகமாகவும் அதிக திறமையுடனும் அளவிற்கு மீறிய உடல் உழைப்புடனும் அவள் வேலை செய்பவள். என்ன இருந்து என்ன? இன்று இந்த தவறில் அவளுடைய அத்தனை உழைப்பும் வீணாக போய் விட்டதே. அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியவில்லை. அவர்கள் எல்லோரும் கூடி தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்பது புரிந்தும் அது என்ன என்பது புரியாமல் பதில் சொல்ல வகை அற்று இருந்தாள்.
“ஆகையினால் நிவேதிதாவை ஒரு படி கீழ் இறக்கியும், இந்த வருட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தும் உத்தரவிடுகிறேன்”
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழையை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்த இந்த உத்திரவு அவளை நிலை குலைய வைத்து விட்டது.
ஒரு படி கீழிறக்கம் ஐந்தாயிரம் இந்த வருட ஊதிய உயர்வு ஐந்தாயிரம் ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் நஷ்டம். தலை இறக்கம். அவமானம். அவளுடைய வாழ்க்கை தான் இப்படி ஆயிற்று என்றால் வேலையுமா இது போல் ஆக வேண்டும்.
எப்படி இறங்கினாளோ நாலு மாடியையும் படிவழியாக கடந்து இறங்கி வந்தவள் மெயின் ரோட்
வரை நடந்தே வந்தாள். பின் ஞாபகம் வந்தவளாக திரும்ப சென்று வண்டியை எடுத்து எப்படி வீடு வந்து சேர்ந்தாளோ பாவம்.
அவள் வீடு வந்து சேரவும், அது நேரம் வரை லேசாக தூற தொடங்கி இருந்த மழை அப்போது தான் வேகமெடுக்க தொடங்கிருந்தது. சாவியை போட்டு கதவை திறக்க முற்பட்டவளை தேக்கியது மூடியிருந்த கதவு. உள் தாழ்ப்பாழ் போடப்பட்டிருந்தது. அருள் வந்து விட்டான் போலும்.
அழைப்பு மணியை மீண்டும் மீண்டும் அழுத்தியும் அவன் கதவை திறந்தபாடு இல்லை. கைப்பேசியில் அழைத்தும் அதை அவன் எடுக்கவும் இல்லை. பசி வேறு. ஏதாவது சாப்பிடலாம் என்றால் இந்த மழையில் மெயின் ரோடிற்கு போவது இந்த இருட்டில் சாத்தியம் இல்லாதது. செய்வது அறியாது மலைத்து வாசலில் உட்கார்ந்து விட்டாள்.
பசி, இருட்டு, மழை, பயம். யோசிக்கவும் சிந்தனை அற்று படிக்கட்டில் அம்போ என்று உட்கார்ந்து இருந்தாள்.
நம்ரூவிற்கு போன் பண்ணவும் அவள் அந்த மழையில் அருகாமையில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து கொண்டு துணைக்கு மணியையும் அழைத்து கொண்டு வந்து இவளை கூட்டி சென்றாள்.
காலையில் அம்மா போன் பண்ணினாள். இவள் பேசும் மனநிலையில் இல்லை. அம்மா அவளாகவே நேற்று அருள் வீட்டில் நடந்ததை சொல்லி கொண்டிருந்தாள்.
“பாப்பா, ரொம்ப பேசிட்டாங்க அவங்க வீட்டில். ஒரு நாள் கூட அதுவும் ஞாயிற்று கிழமை அன்று கூட வர முடியவில்லை. கட்டிய புருஷனிடம் கொஞ்சம் கூட ஓட்டும் உறவும் இல்லை. எதுக்கு கல்யாணம் செய்து வைப்பது? கல்யாணம் கட்டி ஆறு மாதம் ஆகிறது. இன்னும் என்ன ஒன்னும் விசேஷம் காணோமேன்னு பையனிடம் கேட்டால் கதை கதையா சொல்றான் என் மகன். சரியா சமைச்சி போடுவது இல்லை. பையன் பாதியாக போய் விட்டான். சரி புருஷன் பொண்டாட்டிக்குள்ளே எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். நாம தலை இட வேண்டாம் என்று சும்மா விட்டு விட்டேன். நாம கூப்பிட்டால் வர வேண்டாமா?. கூப்பிடுவது மாமியார் ஆச்சே என்று துளி கூட மரியாதை இல்லை.”
அவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
“எனக்கே மனசு விட்டு போச்சு. சரியான நாட்டுபுரத்தாள். என்ன பேச்சு பேசுகிறாள்?”
“அம்மா இதுக்கே இப்படி அலமலந்து போறியே. இந்த இரண்டு நாளில் என்ன நடந்தது தெரியுமா?”
சொன்னாள். ரிபோர்ட்டை தவறாக போட்டது. இன்க்ரிமென்ட் இன்சென்டிவ எல்லாம் கிடைக்காமல் போனது. அழுகையுடன் இருட்டில் வந்தது. முன்னமே வந்து விட்டிருந்த அருள் கதவை திறக்காதது. அவள் பசியுடன் படியில் அம்போ என்று அமர்ந்திருந்தது, இறுதியில் நம்ரூவை வரவழைத்து விடுதிக்கு வந்து இரவு தங்கினது என்று எல்லாம் சொன்னாள். நடு நடுவில் ஆங், ஆம்,அப்படியா என்று கேட்டு கொண்டே வந்தவள் ஆவேசமாகி போனாள்.
“நீ சொல்வதை போல ஒரு தொம்மையை பெற்று வைத்து கொண்டு என் ராஜாத்தி உன்னை, என்ன பேச்சு பேசி விட்டாள் அந்த கிராதகி. பாப்பா, நான் இப்போது ரொம்ப வருத்த படுகிறேன். கிளியை வளர்த்து பூனையிடம், இல்லை இல்லை, பூனை கூட்டத்திடம் கொடுத்து விட்டேனே. என்னை மன்னிச்சிரு. நீ என்ன செய்தாலும் சரி. நீ நிம்மதியாக இருக்கணும். எனக்கு வேண்டியது அவ்வளவு தான்.”
ellathaium ketutu intha varthaiya solliduvanga
💜💜💜💜💜
Nice epi👍