அத்தியாயம்-17
ஹாஸ்டல் வந்ததும் தனதறையில் நகம் கடித்தபடி வருணிகா தீவிரமாய் யோசித்தாள்.
வநீஷா-சாஹிர்-மகிழ் அத்தான் இம்மூவரையும் தற்போது காணவில்லை. இவங்க யார் யாரோட காதலிச்சி மணந்தாங்க? இல்லை இப்ப எங்க இருக்காங்க? இதுல ரஞ்சித் என்னை பின் தொடர்வது எதார்த்தமானதா தெரியலை. என்னை பத்தி வநீஷா பத்தி தெரிந்து வந்து பேசற மாதிரி இருக்கு. நான் வநீஷா செக்ஸ் ஓர்க்கர் என்று சொல்லும் போது, ‘எனக்கு ஏற்கனவே தெரியும்’ என்பது போல ஒரு ரியாக்ஷன்.
என்னை சுத்தி என்னவோ நடக்கு’ என்று புரிந்தே ரஞ்சித்திடம் பழகினாள்.
—-
இங்கு மறுபுறம் கைரவ் சமித் இருவரும் மகேஸ்வரன் வீட்டில் விசாரணை துவங்கினார்கள்.
“இங்க பாருங்க மிஸ்டர் மகேஸ்வரன். எங்களுக்கு வேலை வெட்டி இல்லாம நாங்க மும்பையிலிருந்து இங்க வரலை. ஒரு கேஸ் விஷயமா க்ளூ கிடைக்க வந்தோம். இங்க என்னடான்னா இரண்டு பேர் காணாம போகலை. மூன்றுனு எண்ணிக்கையை கூட்டறிங்க.
மூன்று பேர் மிஸ்ஸிங். இதுல சாஹிர் எவனோ ஒருத்தன் விட்டு தள்ளுங்க. ஆனா மத்த இரண்டு பேர் உங்க பிளட் ரிலேட்டிவ். ஒன்னு உங்க பெரிய பொண்ணு. இன்னொன்னு உங்க மனைவியோட அண்ணன் நடராஜனோட பையன்.
அதோட ஷீலாவும் உங்களுக்கு தங்கை. அப்படியிருக்க மகிழன் தங்கை மகனும். இதுல சின்ன பொண்ணு வருணிக்கு மாப்பிள்ளையாக மகிழனை பேசியிருந்திங்க. இந்தளவு உறவுகள் இருந்தும் போலீஸ்ல அவங்க இரண்டு பேரையும் தேட சொல்லி ப்ரஷர் பண்ணலை.
முன்னே வநீஷா தொலைந்து இப்ப திரும்ப வந்தாலும் உங்க முகத்துல சந்தோஷம் இல்லையே.
இதெல்லாம் சொல்லலைன்னா உங்க சின்ன பொண்ணை விடமாட்டோம். இப்ப அவ எங்களோட கஷ்டடியில் ஊட்டில இருக்கா” என்று கொளுத்தி போட்டனர்.
உண்மையில் அப்படியில்லை. வருணி தான் ரஞ்சித் சாஹிரோடு பேசி அரட்டை அடிக்கின்றாளே. கைரவிற்கு மகேஸ்வரன் மீது எழுந்த சந்தேகத்தால் சின்ன மகளை வைத்து உண்மையை வாங்க முடிவெடுத்தார்.
மகேஸ்வரனோ இடிந்து போனவராக, “சார் என் மகளை விட்டுடுங்க. அவளை எந்த தொந்தரவும் பண்ணிடாதிங்க. உலகம் தெரியாத பொண்ணு சார்.” என்று துடித்தார்.
சமித் கைரவ்வை பார்த்து, அவர்கள் மொழியில், ‘பெரிய பொண்ணுக்கு சொட்டு தண்ணி கண்ணுலயிருந்து இறங்கலை. சின்ன பொண்ணுக்கு என்ன சார் இப்படி குடம் குடமா கண்ணீர் விட்டு துடிக்கறார்” என்று கேட்டார்.
ரவியோ ஹிந்தியில் பேசுவதை என்னவென்று கேட்க அவரிடம் தமிழில் உரைத்தார்.
அதை கேட்ட ரேணுகாவோ ஏளனமாய் சிரித்து “ஏன்னா வநீஷா அவரோட பொண்ணு இல்லை. வநீஷா என் பொண்ணு. எனக்கும் என் முதல் கணவருக்கும் பிறந்த பொண்ணு.” என்று உண்மையை பேசினார்.
மூன்று போலீஸ் அதிகாரியும், “என்ன? வநீஷா மகேஸ்வரன் பொண்ணு இல்லையா? உங்களுக்கு உங்க முதல் கணவருக்கும் பிறந்த பொண்ணா?
மேடம் கொஞ்சம் டீட்டெயிலா சொல்லுங்க. அப்ப தான் எங்களுக்கு தெளிவு கிடைக்கும்” என்றார்.
இத்தனை நாள் வாய் திறக்காமல் ஊமையாக அழுத ரேணுகாவோ, கண்ணீரை துடைத்து ஆதியிலிருந்து கூறத் துவங்கினார்.
“எனக்கு பதினெழு வயசுல கல்யாணமாகிடுச்சு. அந்த வயசுல கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு யாரும் தடுக்கலை. ஏன் எனக்குமே அறிவில்லை பெத்தவங்க இல்லாததால எங்கண்ணா நடராஜன் என்னை சொந்தத்துல எழிலன் என்பவருக்கு கல்யாணம் செய்து வச்சார்.
அவரோட வாழ்ந்தப்ப தான் எங்க அண்ணா நடராஜனுக்கு ஷீலா அண்ணிக்கும் கல்யாணம் நடந்துச்சு.
மகிழன் பிறந்த கொஞ்ச நாள்ல நான் கர்ப்பமானேன். அவ தான் வநீஷா.
ஆனா வநீஷா வயிற்றுல உதிச்ச கொஞ்ச நாளிலேயே பாம்பு கடிச்சி எழிலன் இறந்துட்டார்.
நான் புள்ளத்தாச்சியா அண்ணன் வீட்ல இருந்தேன். ரேணுகா அண்ணியை பார்க்க அப்ப தான் மகேஸ்வரன் வந்தார்.
இந்த சின்ன வயசுல, அதுவும் இந்த நிலைமையில் தங்கச்சி முண்டச்சி கோலத்தில் இருப்பதா எங்கண்ணா புலம்ப, மகேஸ்வரனோ ‘நான் உன் தங்கச்சிக்கு தாலி கட்டி கல்யாணம் செய்துக்கவானு கேட்டார்.
அந்த காலத்துல மறுமணம் சாத்தியம் இல்லை. எங்கயாவது ஒருத்தர் தான் மறுமணமே செய்வாங்க. எங்கண்ணா எனக்கும் மகேஸ்வரனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சார். இவரும் வநீஷாவை மகளா பார்த்தார். அப்ப எல்லாம் இவருக்கு தொழிலிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதனால ஷீலா அண்ணிக்கு முதல்ல அதிருப்தி. ஆனா வநீஷா பிறந்தப் பிறகு நானும் இவரும் வாழ ஆரம்பிச்சப்ப ஷீலா அண்ணி என்னை மனசார ஏத்துக்கிட்டாங்க. என்னை மட்டும் தான் மனசார ஏத்துக்கிட்டாங்க. ஆனா வநீஷாவை ஷீலா அண்ணி எங்க மகளா ஏத்துக்கலை.
அதுவும் வருணிகா பிறந்ததும் வநீஷாவை சுத்தமா பிடிக்காம போச்சு.
இப்படி இருந்த நேரத்துல தான், பொண்ணுங்க மளமளனு வளர்ந்துட்டாங்க.
வநீஷா சடங்கானப்ப குச்சி கட்டவோ, பட்டு சேலை கட்டவோ ஷீலா அண்ணி பெருசா ஆர்வம் காட்டலை. எங்க அண்ணாவையும் செய்ய விடலை. எங்கண்ணாவுக்கும் அப்ப கொஞ்சம் கடன் இருந்தது.
ஆனா வருணிகா சடங்கானப்ப ஷீலா அண்ணி மோதிரம் எல்லாம் போட்டாங்க.
இத்தனை நாள் பாராபட்சம் இல்லாம வளர்ந்த வநீஷாவுக்கு ‘நான் என்ன தவிட்டுக்கு வாங்கின பொண்ணானு’ கேட்டுட்டா.
அப்ப தான் எனக்கே பிள்ளைங்க பாகுபாட்டோட வளர்ந்திருந்தது தெரிய வந்தது.
அதுவரை ஒரே மாதிரி வளர்த்த மாதிரி இருந்த விஷயம் வேறுபட்டதை உணர்ந்தேன்.
இதை ஒரு நாள் அண்ணன் அண்ணியிடம் கேட்டப்ப வநீஷா ஒட்டு கேட்டுட்டா.
அதே நேரத்துல எங்க வீட்ல சில அசம்பாவிதம். எங்கண்ணா மகள் மணிமொழி இறந்துட்டா. அதுவும் வநீஷா ஒளிந்த கட்டிலுக்கு கீழே இருந்த கப்போர்ட்ல ஒளிந்து மூச்சு திணறி இறந்துட்டா.
ஷீலா அண்ணிக்கு அதுலயிருந்து வநீஷாவை சுத்தமா பிடிக்காது. அதை வெளிப்படையா காட்டினாங்க. வநீஷாவுக்கும் மகேஸ்வரன் தன்னுடைய அப்பா இல்லை என்றது தெரிந்திடவும் தனியா ஒதுங்கினா.
இப்ப மாதிரி தான். ஊட்டில போர்டிங் ஸ்கூல்ல போட்டுட்டு கொஞ்ச நாள் பிரிஞ்சி இருக்கட்டும்னு நினைச்சோம்.
ஆனா வநீஷா மொத்தமா எங்களை விட்டுட்டு போயிட்டா… தொலைஞ்சு போயிட்டா. இவரும் போலீஸ்ல புகார் கொடுத்ததோட சரி.
இப்ப வரை வநீஷாவை வீட்டுக்கு திரும்ப அழைக்க மனசில்லை. அவளுக்குமே இங்க திரும்ப வர பிடிக்கலையோ என்னவோ.” என்று கண்ணீரை வழிய விட்டார்.
எல்லாம் கேட்ட போலீஸோ, “அப்ப ஷீலாவை பழிவாங்க மகிழனை காதலிச்சு இழுத்துட்டு ஓடிட்டா? தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை என்று தெரிந்தும், சொந்த தங்கை இல்லையே என்ற எண்ணம். அப்படி தானே?” என்று சமித் கேட்க, “இருக்கலாம் சார்” என்று ரேணுகா. சேலையால் கண்ணீரை துடைத்து கூறினார்.
மகேஸ்வரனோ ரேணுகா கூறியதில் எதிலும் மறுத்து வாதிடவில்லை. ஆனால் இன்னும் ஏன் சிலதை விட்டுவிட்டாய் என்பது போல மனைவியை பார்த்து வைத்தார்.
அதில் உன் மகளின் பெருமை மட்டும் பேசினாய். ஏன் அவள் செய்ததும் எடுத்து கூற வேண்டியது தானே? என்ற இகழ்ச்சியான பார்வை வெளிப்பட்டது.
வநீஷா-மகிழனை காதலித்து மணந்து ஓடியதாக இருக்கும் பட்சத்தில் நான் ஏன் மற்றவையை கிண்டி கிளற வேண்டும் என்பது போல நின்றார் ரேணுகா. மகேஸ்வரனுக்கு அதுவும் புரிந்தது. இத்தனை ஆண்டு காலமாக துணைவியாக வாழ்ந்த பெண்ணின் மனதை படிக்காதவரா?
ரேணுகா இத்தனை காலம் வநீஷாவுக்காக ஊமையாக அழுததை கண்டு வருந்தினாரே.
தன்னை திடப்படுத்தி கொண்டு, ”சார் என் மக வருணிகாவை விட்டுடுங்க. அவளுக்கு வநீஷா பத்தி எதுவும் தெரியாது. பாவம் சார்” என்று கூறவும் கைரவோ, “சார் வருணிகா எங்க கஷ்டடில இல்லை. அவ காலேஜ் போயிட்டு ஹாஸ்டல்ல போயிருப்பா. வேண்டுமின்னா வார்டனுக்கு போன் போட்டு கேட்டுக்கோங்க.” என்று பதில் தந்தார்.
அதோடு கைரவ், சமித் மற்றும் ரவி மூவரும் விடைப்பெறுவதாக வாசலை தாண்டினார்கள்.
சமித் கைரவிடம் “சார் இப்ப கேஸ் என்ன ரூட்ல போகுது. அங்க டாக்டர் கிரண் இறப்பு தற்செயலானதா? வநீஷா சாஹிருக்கு தொடர்பில்லைனு எழுதிடலாமா?” என்று கேட்டதும், கைரவோ “வேற என்ன செய்யறது சமித். டாக்டர் அதுல் கொடுத்த புகார்ல அவர் அப்பா டாக்டர் கிரண் இறப்புக்கு இவங்க காரணமாக இருக்க வாய்ப்பில்லை. வநீஷா அழகுக்காக ட்ரீட்மெண்ட் பார்த்திருக்கா. சாஹிர் நடுவுல வந்து கத்தியிருக்கான்.
வநீஷா இங்க வந்து மகிழனை கூட்டிட்டு ஓடியிருக்கா. இது வநீஷாவோட பழிவாங்கும் படலம்.
நம்ம கேஸ் கிரண் இறப்புல வநீஷா சாஹிர் காரணமில்லைன்னு ஸ்டேட்மெண்ட் தந்துட வேண்டியது தான்.” என்று கூறினார்.
ரவியோ “சார் அப்ப இந்த மூன்று பேர்? சாஹிர் வநீஷாவை விரும்பினான். வநீஷா மகிழனை விரும்பினா. மகிழனை வநீஷா விரும்பினா சாஹிர் விடுவானா? இதுல மூன்று பேரையும் யாரும் பார்க்கலை.ஒருவேளை சாஹிர் வநீஷா மகிழனை கொன்றுயிருந்தா?” என்றதும் கைரவும் சமித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.
“இந்த கேஸ் எங்க டிபார்ட்மெண்ட்ல வராது. காணாம போன கேஸ் பதிவானது உங்க ஸ்டேஷன்ல.” என்று கடமையை தள்ளி வைத்து பறந்திட துடித்தனர்.
எத்தனை நாள் மும்பை விட்டு, தன் மனைவி குழந்தை, குட்டி, சொந்தயிடம் விட்டு இங்கே இருப்பது? அவர்களும் தங்கள் ஊரை பார்க்க சென்றாக வேண்டுமே.
ரவியோ கதவை தாழிடும் மகேஸ்வரனை காண, “எனக்கு யார் உயிரோட இருக்கா. உயிரோட இல்லை என்ற தகவல் கூட வேண்டாம் சார். எனக்கு என் மக வருணிகா மட்டும் தான் முக்கியம்.” என்று கதவை தாழிட்டார்.
அவர் சாதாரண மனிதர். அவர் மனநிலையை அவர் உரைத்து விட்டார்.
அதோடு வருணிகா நலமாக இருக்கின்றாளா என்று அறிய, ஜனார்த்தனன் மகனான ஷங்கரிடம் போன் போட்டு மகளை நேரில் ஒருமுறை சந்தித்து வர கூறினார்.
அவனுமே வருணிகாவை காணும் ஆசையோடு ‘ஓகே அங்கிள் நான் ஹாஸ்டல் போய் பர்மிஷன் லெட்டர் எழுதி கொடுத்து பார்த்துட்டு வர்றேன்.” என்று வாக்கு தந்தான்.
சொன்னது போல பைக் சாவி எடுத்து புறப்பட்டான்.
ஷங்கருக்கு வருணிகாவிடம் இன்று பேசிட, சந்தர்ப்பம் அமைய மகிழ்ச்சியாக கிளம்பினான்.
ஹாஸ்டலில் உள்ளூர் கார்டியனாக இந்த அட்ரஸ் போட்டுயிருந்தார் மகேஸ்வரன். அதனால் தெரிந்தவர் என்ற முறையில் இருபது நிமிடம் பேச நேரம் தந்தனர்.
வருணிகாவுக்கு ஷங்கர் என்றதும் ‘இவன் எதுக்கு இப்ப’ என்று சலிப்பாய் வந்தாள்.
கையில் பரோட்டா பார்சலோடு வருணிகாவை பார்த்து முகமலர்ந்து, “அங்கிள் உன்னை பார்த்துட்டு வர சொன்னார். ஏதோ போலீஸ் வந்து இன்வஸ்டிகேஸன் நடந்ததால் நீ சரியா சாப்பிடலையாம். அதான் பரோட்டா தந்துட்டு உன்னை பார்க்க வந்தேன்.” என்றான்.
“தேங்க்ஸ்.. ஐ அம் ஆல்ரைட்” என்று வாங்கும் நேரம், “யாரவன்? ஈவினிங் ‘ஹில்ஸ் சில்ஸ் ஹோட்டல்’ல சூப் குடிச்சிட்டு சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருந்த” என்று கேட்டான்.
“அப்பாவிடம் சொல்லிட்டிங்களா?” என்றாள். அதில் அவசரம் எட்டிப்பார்த்தது.
“இல்லை.. உன்னிடம் நானே கேட்டுக்கலாம்னு நினைச்சேன்.
ஆக்சுவலி அங்கிள் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிதர விரும்பினார். நீ என்னடான்னா இன்னிக்கு, யாரோடவோ பேசி சிரிக்கவும் நான் கேட்க நினைச்சேன். அதுக்கு ஏற்றார் போல அங்கிளும் உன்னை பார்த்துட்டு எப்படியிருக்கன்னு விசாரிக்க சொன்னார். அதான் பரோட்டா வாங்கிட்டு பேச வந்தேன்.” என்று போட்டு உடைத்தான்.
”ஷங்கர் நான் ஒருத்தரை லவ் பண்ணறேன்” என்று பட்டென கூறினாள் வருணிகா. இத்தனை காலம் இப்படி தேங்காய் உடைத்த பேச்சு வருணிகாவுக்கு இல்லை. இன்று அதிசயமாக வார்த்தையும் ரயில் வண்டியாக வந்து சேர்ந்தது.
-தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
interesting
💜💜💜💜
It’s interesting
Nice epi👍