அவள் உள்ளே நுழைந்தபோது அரவிந்த் கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி ஏதோ ஃபைலை புரட்டிக் கொண்டு அதில் கையெழுத்திட்டு கொண்டிருந்தான்.
அவள் தயங்கியபடியே அவனருகில் செல்ல, அவன் அவளை பார்க்க கூட இல்லை.
” ஏன் நிக்கிற.உக்காரு.” என அருகில் இருந்த இடத்தைக் காட்ட அவன் அமர்ந்திருந்த சோபாவின் மறுமுனையில் அமர்ந்தாள்.
இன்னும் அவளை அவன் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.
‘ ஒருவேளை தப்பிச்சு போனதால கோவமா இருப்பானோ….’ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த ஆட்டோ காரனை பார்த்து முறைத்தாள்.
அவள் முறைப்பை கலைக்கும் விதமாக, ‘சேகர்’ என கத்தினான், அரவிந்த்.
சேகர் வேறு யாருமில்லை. காலையில் ஆனந்திக்கு மயிலம்மாவிடம் பரிமாற சொன்னவனும் சிறிது நேரத்திற்கு முன் ஆட்டோவிலிருந்து இறங்கியவளை கலாய்த்தவனும் தான்.
“வா வெற்றி. வாழ்க்கை எப்படி போகுது.” என அக்கறையாய் ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தான்.
” நீங்க இருக்கும் போது என்ன கவலை அண்ணே. நல்லா போகுது.” என்றான்.
அதற்கு தலையசைத்தவன், ஆனந்தியின் புறம் திரும்பி அவளின் இடது கையை எடுத்து தன் வலக்கையில் ஏந்தினான்.
‘ இவன் எதுக்கு என் கைய பிடிக்கிறான்’ என அவன் பிடியில் இருந்து கையை உறுவ நினைத்தவள், அவன் முறைப்பதை கண்டு அமைதியானாள்.
சேகர் முதலுதவி பெட்டியுடன் வர அதிலிருந்த மருந்தை பஞ்சில் நனைத்து அவன் அவள் கை முட்டியில் இருந்த சிராய்ப்பில் தடவினான்.
‘ இந்த காயம் எப்படி வந்தது. நமக்கே தெரியாம.’ என யோசித்தவளின் கை மருந்தின் வீரியத்தால் எரிய தொடங்கியது.
“ஸ்ஆஆஆ….” என கத்த அரவிந்த் மெதுவாக இதமாக அவள் காயத்தின் மேல் தன் மூச்சுக்காற்றை ஊதினான்.
அவன் கண்களை பார்த்தவளுக்கு அவனின் தாய் பாசம் தெரிந்தது.
ஏன் என்னை இவ்வாறு பார்த்துக் கொள்கிறான் என வியந்தாள். அவளையும் மீறி அவனிடம் உள்ள ஏதோ ஒன்று தன்னை ஈர்ப்பதை உணர்ந்தாள்.
‘ நீ ரவுடியா இல்லாம இருந்திருக்கலாம். எனக்கே தெரியாம என் கழுத்துல தாலி கட்டாம இருந்திருக்கலாம்.’ என நினைக்கும் போதே அவளுடைய கண்ணீர் அவனுடைய கைகளில் தஞ்சம் அடைந்தது.
தன் கையில் இருந்த அவளுடைய கையில் நீர் துளியை பார்த்ததும் அவன் இதயம் வலிக்க அவள் கண்களை ஏறிட்டான்.
” ரொம்ப எரியுதா…” என அவன் அக்கறையாய் கேட்ட விதம் அவளின் உணர்ச்சியை ஏதோ செய்தது.
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
” ஏன் ஆனந்தி யோசிக்காம இப்படி எல்லாம் பண்ற….” எனக்கேட்க அமைதியாகவே இருந்தாள்.
” கரெக்டா சொன்னீங்க அண்ணா. அண்ணி கொஞ்சம் கூட யோசிக்காம மேலிருந்து கீழ இறங்கிட்டாங்க.
சுவத்துல எப்படி ஏறுறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தாங்க.
அப்புறம் நான் தான் ஸ்டூல் எடுத்து அவங்க கண்ணுல படுற மாதிரி வச்சேன்.
அதுக்கு அப்புறம் கூட யோசிக்கவே இல்ல. இந்த பக்கம் சுவர் உயரமா இருந்தா அந்த பக்கமும் உயரமா இருக்கும்ன்னு.
ஏதோ நீங்க அண்ணி இப்படிதான் பண்ணுவாங்க ன்னு தெரிஞ்சு முன்னாடியே என்னை மணல கொட்ட சொன்னதால தப்பிச்சாங்க.
இல்ல. கை கால் தான் தேவையில்லாம உடஞ்சுருக்கும்.”
சேகர் கூற எல்லோரும் சிரித்தனர்.
((நான் சொன்ன மேல் இடம் இப்போ யார்ன்னு தெருஞ்சுருக்கும். அது நம்ம அரவிந்த் தான்….))
” அடப்பாவிங்களா …. அப்போ நான் தப்பிச்சு போகலையா. நீங்க தான் என்னை தப்பிச்சிப் போக வச்சீங்களா….” என பொறுமியவள் வாய் திறந்தே கேட்டு விட்டாள்.
” இதெல்லாம் தெரிஞ்சி தான் என்னை தப்பிக்க விட்டீங்களா.” என வெட்டி கோபத்தோடு கேட்க, அங்கிருந்த எல்லோரும் சிரித்தனர்.
அரவிந்த் கூட அழகாக சிரித்தான்.
” அப்போ இந்த ஆட்டோகாரன் கூட உங்க பிளான் தானா…?” என கோபமாக அரவிந்தை கேட்க,
அவன் ‘இல்லை’ என்பது போல் தலையை அசைத்தான்.
அவள் அவனை சந்தேகமாக பார்க்க, வெற்றியே சந்தேகத்தை தீர்த்தான்.
” இல்லை அண்ணி. இங்க யாரும் என்கிட்ட சொல்லல.”
” பின்ன எப்படி… உனக்கு முன்னாடியே என்னை தெரியுமா….” எனக் கேட்க,
” இல்லை. உங்கள இன்னைக்கு தான் முதல் முறையா பார்த்தேன்.”
” அப்புறம் எப்படி கண்டுபிடிச்ச….” எல்லோரும் அவன் பதிலுக்கு ஆர்வமாக இருந்தனர்.
அரவிந்தும் ஆனந்தியும் சற்று அதிகமாகவே ஆர்வமாக இருந்தனர்.
” எப்பவும் அண்ணன் கழுத்துல இருக்கிற தாலியை அண்ணி கழுத்துல பார்த்ததுமே புரிஞ்சுகிட்டேன்.” என மென் சிரிப்புடன் கூறினான்.
‘ இதுக்குதான் நீ எப்பவும் கழுத்திலேயே தாலி கட்டிட்டு சுத்திக்கிட்டு இருந்தியாடா….’ என அரவிந்தை பார்க்க, அரவிந்த் காதலுடன் ஆனந்தியை ஏறிட்டான்.
” சரிண்ணே எனக்கு காலேஜ் க்கு லேட் ஆகிடும் நான் கிளம்பறேன்.” என வெற்றி கிளம்ப எத்தனிக்க,
” இருந்து சாப்பிட்டு போ வெற்றி.” என அரவிந்த் கேட்க,
” பரவாயில்ல அண்ணா. வண்டியில ஏறுனதிலிருந்து இறங்குற வரைக்கும் அண்ணி உங்கள பத்தி பேசிட்டு வந்ததுலேயே வயிறு நிறைஞ்சுருச்சு. நான் கிளம்புறேன்.” என அங்கிருந்து நகர்ந்தான்.
‘ உன்னை நம்பினேனேடா…. திரும்ப இங்க தள்ளிவிட்டது மட்டுமில்லாம. போட்டுக் கொடுத்துவிட்டு வேற போறியா. நீ எல்லாம் நல்லா வருவடா….” என்றவளை மணி கலாய்த்தான்.
” அப்படி என்ன அண்ணி அண்ணாவ பத்தி பேசினீங்க.”
‘ அண்ணி…. அண்ணி….’ என அவளை வெறுப்பேத்த,
” ஓ ஓ …. அதுவா மணி…. உன் அண்ணன் ரொம்ப நல்லவர் வல்லவர் ன்னு சொன்னேன்.” என்று அவள் அவனை பார்த்து முகம் சுளித்து விட்டு அவள் அறையை நோக்கி சென்றாள்.
அவள் என்ன பேசியிருப்பாள் என அறிந்திருந்தவன், ‘ஆனந்தி’ என அழைத்தான்.
அவள் அவனை திரும்பி பார்த்தாள்.
” நீ சாப்பிட்டு ரொம்ப நேரமாச்சு. சாப்பிட்டுட்டு மேலே போ.” எனக் கூற,
‘இதெல்லாம் எப்படி இவனுக்கு தெரியுது. ஒருவேளை சிசிடிவி வச்சு இருப்பானோ.’ என கண்களை சுழல விட,
” கேமரால்லாம் ஒன்னுமில்ல. சாப்ட்டு தெம்பா பிளான் போட்டு அதுக்கப்புறம் தப்பிச்சு போ…. ஐடியா வேணும்னா என்கிட்ட கேளு….” என அவன் கிண்டல் செய்ய அவள் அவனை முறைத்து விட்டு சாப்பிட சென்றாள்.