Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39

ரூபாவிடம் வானதி உதவியெனக் கேட்க, அவள் குழப்பமான பார்வையோடு, “நான் உதவி செய்யணுமா? சொல்லுங்க.. என்னது?” என்றாள். அத்தோடு நில்லாமல் திவாகரையும் குழப்பமாக ஏறிட்டாள்.

ஏற்கனவே இருவரும் ஹிந்தியில் பேசுவதைப் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது இவள் திரும்பி வினோதமாகப் பார்த்தவுடன் இன்னும் குழப்பமானது. வானதியிடம், “என்னாச்சு? என்ன பேசறீங்க ரெண்டு பேரும்? என்னைப் பத்தி எதாச்சும் பேசிக்கறீங்களா?” என்றான் தாழ்ந்த குரலில், கண்ணில் சந்தேகத்தோடு.

அவனைக் கிண்டலாகப் பார்த்தவள், “ஆமாமா.. உன்னைப் பத்தி தான் கேட்டுக்கிட்டு இருந்தேன்.. நியூயார்க்ல barக்கு போய் சரக்கெல்லாம் அடிச்சியாமே.. இவங்க சொல்றாங்க..?” என்றிட அவன் பதற்றமாகி, “ஹேய்.. அது எப்பவோ ஒரு தடவை பண்ணது.. அதுக்கப்பறமா அந்தப் பக்கமே தலை வைக்கல நான்.. அப்பாகிட்ட எதுவும் சொல்லிடாத மத்தாப்பூ.. ப்ளீஸ்..” எனக் கெஞ்சத் தொடங்கினான்.

“அடப்பாவி! அப்ப உண்மையிலயே சரக்கடிச்சயா?”

“ம்ம்.. என்னது? அப்ப உனக்குத் தெரியாதா? அவ அதை சொல்லலையா?”

“இல்ல.. நான் தான் போட்டு வாங்குனேன்..”

திவாகர் வாயைப் பிளந்து அவளைப் பார்க்க, கண்களால் சிரித்தவள், “இதைப் பத்தி நம்ம நிறைய பேசணுமே..” என்றுவிட்டு, சற்றே தீர்க்கமாக, “ரூபாவை நான் ஏன் பாக்கணும்னு சொன்னேன் தெரியுமா?” எனக் கேட்டாள்.

“ம்ம்.. தெரியல.. ஆனா அவளும் அதையே தான் கேட்டா.. கேர்ள்ஸுக்கு இருக்கற common phenomenonனு நினைச்சேன்..”

இருவரும் ரூபாவைப் பார்க்க, இப்போது அவள் குழப்பமாக ஏறிட்டாள். வானதி இருவருக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் விளக்கினாள்.

“ரூபா.. நீங்க ஏன் என்னைப் பாக்கக் கேட்டீங்கனு தெரியல.. ஆனா நான், இவனைப் பத்திப் பேசறதுக்கு உங்களை சந்திக்க வரல. எனக்கு வேற ஒரு காரணம் இருக்கு. உங்க அப்பா மனீஷ் மல்ஹோத்ரா.”

திவாகரைத் திரும்பிப் பார்த்த ரூபாவின் பார்வையில் ஆச்சரியமும் சற்றே பெருமிதமும் இருந்தது.

“You have an incredible, intelligent wife. வானதி, எங்க அப்பாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“எனக்கு பர்சனலா தெரியாது. ஆனா, உங்கப்பா டில்லியில பெரிய accounting firm நடத்துறார்னு தெரியும். அதுல பல எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு, மாதாந்திர, வருடாந்திர வரவு செலவு கணக்குகள் எல்லாம் தயாரிச்சுக் குடுக்கறாங்கனு தெரியும்.”

“சோ..?”

“அவரோட க்ளையண்ட்ஸ்ல, ஒரு தேசியக் கட்சியோட தலைவரும், அந்தக் கட்சியோட தமிழகப் பிரதிநிதியும் அடக்கம். எனக்கு கட்சி பத்தி எதுவும் அக்கறையில்ல. எனக்குத் தேவை அந்த செகண்ட் நாமினி தான். எக்ஸ் மினிஸ்டர் ஆதிகேசவன்.”

ஆதிகேசவனின் பெயரைக் கேட்டு திவாகர் நிமிர, ரூபா அனைத்துக்கும் பொதுவாக ஒரு தலையசைப்பு மட்டும் செய்தாள். வானதியே தொடர்ந்தாள்.

“நீங்க இங்கிருந்து டில்லி போறீங்கன்னா, எனக்காக உங்கப்பா ஆபிசுக்குப் போயி, போன வருஷத்தோட கட்சி செலவுகள், வருமான வரித் துறைக்கு கணக்குக் காட்டாத செலவுகள், இதர செலவுகள் போன்ற லிஸ்ட் எல்லாம் எடுத்துத் தரணும். It will be very helpful for me. Just so you know, I’m privately investigating my parents’ murder.”

ரூபாவுக்கு அம்மாதிரியான வார்த்தைகளே புதிதுபோலும். அவள் திடுக்கிட்டாள். மிரண்ட பார்வையோடு வானதியைப் பார்த்தவள், அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “I’m so sorry for your loss. என்னால முடிஞ்ச உதவியை செய்யறேன் நான்.. but I can’t guarantee anything. I’m too scared of things like this.” என்றாள் நடுக்கமான குரலில்.

“எனக்குப் புரியுது. உங்களால முடிஞ்ச உதவிய செஞ்சாலே போதும். நாங்க வர்றோம்”

வானதி கை குலுக்குவதற்காகக் கையை நீட்ட, ரூபா அவளது சினேகப் புன்னகையோடு, “வானதி, நீங்க கிடைச்சதுக்கு திவாகர் குடுத்து வச்சவனா, அவன் கிடைச்சதுக்கு நீங்க குடுத்து வச்சவங்களான்னு என்னால சொல்ல முடியல. உங்களை மாதிரி தைரியமான, புத்திசாலியான ஒரு பொண்ணை நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. ஏன், திவாகரும் பாத்திருப்பானான்னு தெரியல… He is a good man, a good partner. And I’ll always remember you, when I think about him.” என்று வானதியை அன்பாக அணைத்துக்கொண்டாள்.

………

எண்ணங்களில் மூழ்கியிருந்த வானதியை, சுதாகரின் குரல் உலுக்கியது.

“வானி, இன்னிக்கு நாம தேடுதல் வேட்டைய ஆரம்பிக்கறோம்ல? அதைப்பத்தி எதுவுமே சொல்லாம, இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு இருந்தா எப்படி? என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்ல.. சும்மாதான்.. சரி, பானுவும் அவசியம் உன்கூட வரணுமா? அக்காவுக்கு அந்த கேசு, ஆக்ஸிடெண்ட் விஷயமெல்லாம் வேணாமே..”

“ப்ச்.. இதை சாக்கா வச்சுத்தான் அவளை நான் வெளிய கூட்டிட்டுப் போகவே முடியும். இல்லைன்னா, அம்மாவே விட்டாலும், அவ வரமாட்டா.. உங்க அக்கா… அநியாயத்துக்கு நல்ல பொண்ணா இருந்தா நான் என்னதான் பண்றது?”

வானதி சிரித்துவிட்டாள்.

“சரி, டிபன் சாப்ட்டுட்டு கிளம்பலாம். நாங்க இன்ஸ்பெக்டரை பாக்கப் போறோம்.. நீங்க ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்குப் போயி பாருங்க. லொக்கேஷன் அனுப்பறேன். அதை சேவ் பண்ணிக்க.”

காரில் சுதாகரும் பானுவும் கிளம்ப, நமட்டுச் சிரிப்புடன் அவர்களை வழியனுப்பிவிட்டு, திவாகருடன் பைக்கில் கிளம்பினாள் அவள்.

அழகேசனை சந்திக்க அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வேறொரு வழக்கில் மும்முரமாகிவிட்டார் எனத் தெரிந்தது. இவர்கள் சென்றபோது, அதே கம்பீரமான சிரிப்போடு வரவேற்றார்.

“நானே உங்களைக் கூப்பிடணும்னு நினைச்சேன்.. எக்ஸாம்க்கு நடுவில தொல்லை பண்ணக் கூடாதுன்னு விட்டுட்டேன். அக்ரி ஆபிசுக்குப் போயிருந்தேன் நேத்து. அங்க கிடைச்ச விஷயத்தை உங்களால நம்பவே முடியாது.”

வானதியும் திவாகரும் வியப்பும் ஆர்வமுமாகப் பார்க்க, அழகேசன் சுவர் அலமாரியிலிருந்து ஒன்றிரண்டு ஃபைலை எடுத்து மேசையில் வைத்தார்.

“நிலத்தோட பரிசோதனை ரிப்போர்ட் தானே?” என்றான் திவாகர்.

“அந்த ரெண்டாவது செட் ரிப்போர்ட் நிலத்தோடது இல்ல, நிலக்கடலையோடது.”

வானதியும் திவாகரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அழகேசனே மேலும் தொடர்ந்தார்.

“சிவகங்கை மாவட்டத்துல, புன்செய் வேளாண் நிலங்கள்தான் அதிகம். அதாவது, வானம் பார்த்து விவசாயம் பண்றது. ஆனா, நிலத்துக்காரங்க தாங்களாகவே ஏரி, கால்வாய் மூலமா பாசன வசதிகள் செஞ்சு விவசாயம் பண்றதும் உண்டு. வேம்பத்தூர் வயல்கள் கூட அந்த மாதிரி கலப்பு நடவு தான்.

கவர்மெண்ட்ல இருந்து, வேளாண் துறை மூலமா, ஒவ்வொரு நிலத்துக்கும், மண் பரிசோதனை அட்டைகள் தந்திருப்பாங்க. மண்ணோட தரத்தைப் பொறுத்து, அந்த வருஷம் என்ன சாகுபடின்னு முடிவு செய்வாங்க.

நஞ்சேசன் மற்றும் அவரோட விவசாய சங்க உறுப்பினர்களோட நிலங்கள் எல்லாமே கரிசல் நிலம். சோ, நெல்லை விட தண்ணி கம்மியா தேவைப்படற நிலக்கடலையை விதைச்சாங்க. அதிலும், விக்கியோட ஆராய்ச்சியோட ஒரு கட்டமா, அந்த வருஷ நடவுல, அவங்களோட நிலத்துல மட்டும், தான் கண்டுபிடிச்ச ஒட்டுரக விதைகளை பயன்படுத்தியிருந்திருக்கார். மத்தவங்க வெளியே வாங்கின விதைகளை பயன்படுத்திருக்காங்க.

அந்த வருஷம் ஏனோ அறுவடை பொய்ச்சுப் போனது, நஞ்சேசன் வயலைத் தவிர்த்து. அதுனால, விக்னேஷ் தன்னோட ஆராய்ச்சியை மத்த வயல்கள்லயும் செஞ்சார். ஆனா, இந்தமுறை அவங்களோட ஒட்டுரக விதையை போட்டப்பக் கூட, வயல்ல விளைச்சல் இல்ல. அதனாலதான் ஏற்கனவே ஆறுமாசம்தான் ஆகியிருந்த நிலையிலும்கூட, அக்ரி ஆபிஸ்ல போராடி, மறுபடி ஒரு மண் பரிசோதனையை செஞ்சிருக்கார் விக்னேஷ். ஆபிசர்களும் அவர் ரொம்பவும் கெஞ்சிக் கேட்டதால சம்மதிச்சாங்க. ரிப்போர்ட் எல்லாத்தையும் தன்னோட மொபைல்ல வச்சிருந்தார் அவர்.

மறுபடி, பொய்ச்சுப் போன அந்த நடவு விதைகளையும் எடுத்துட்டு வந்து, தன்னோட ஆராய்ச்சியிலும், வேளாண் ஆபிசிலயும் குடுத்து சோதனை பண்ணியிருக்கார். அந்த ரிப்போர்ட்ஸ் வர்றதுக்குள்ள விபத்து நடந்திருச்சு. நான் இப்ப அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டேன். மொபைல்ல இருக்கற மண் பரிசோதனை ரிசல்டையும், விதைகளோட பரிசோதனை ரிசல்டையும் நாம கம்பேர் பண்ணனும், செய்யலாமா?”

வானதி கண்களை விரித்து ஆச்சரியமாகப் பார்த்தாள். திவாகரும், இரண்டே வாரங்களுக்குள் இவ்வளவு அலசியிருக்கிறாரே என்று அதிசயித்து, “Sir, I’m a Biochemical engineer. So, I can help” என்றான் உண்மையான தீவிரத்துடன்.

அழகேசன் தலையசைத்துவிட்டு, தாள்களை அவனிடம் நீட்டினார். விக்கியின் கைபேசியையும் திறந்து, பரிசோதனை முடிவுகளையும் காட்டினார். வானதி நடப்பதை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். திவாகர் அந்த ஃபைல்களை ஆராயத் தொடங்கினான். வரிவரியாகப் பார்த்தபடி வந்தவன், ஓரிடத்தில் திகைத்து நிற்கவும், அழகேசன் கரிசனமாக நிமிர்ந்தார். திவாகர் அவரை ஏறிட்டான்.

“சார்… இதுல ஏதோ தப்பு இருக்கு. நிச்சயமா இது நிலக்கடலையோட கெமிக்கல் காம்போஸிஷனே கிடையாது. இது முழுக்க விஷம்.”

4 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *