Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-17

தேநீர் மிடறும் இடைவெளியில்-17

அத்தியாயம்-17

  சுதர்ஷனன் அதிர்ந்தவன் தன்னை நிதானப்படுத்தி, “டாக்டர் இதை பத்தியும் சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி பேஷண்ட் தன்னுடைய பழைய நினைவுகள் வரலைன்னா, தனக்கு அறிமுகமாக சொல்லப்பட்ட பேஷண்டோட கதையை ஏற்றுக்காம தேவையில்லாம பேசுவாங்க. தன்னை தன் பழைய நினைவுகளோட ஒன்ற முடியாம, தனக்கு என்ன தோணுதோ அது போல வாய்க்கு வந்த மாதிரி உலறுவாங்களாம்.
  நீ இப்ப அப்படி தான் உலறுற ரம்யா.
  இதுக்கு நீ ஒரு அனாதை, கல்யாணமாகிடுச்சு, நான் வேற ஊரு, அதுயிதுனு சொல்லு. நீ என்ன சொன்னாலும் உன்னை விட்டு நான் விலக மாட்டேன் ரம்யா. 
  காலேஜ் படிக்கும் போது இப்படி தான் கதை அளந்த, என் காதலை ஏற்றுக்காம எனக்கு ஆஸ்துமா, தாம்பத்திய உறவுக்குள் என்னால வாழ முடியாது. டாக்டர் என்னை அன்பிட் சொன்னாங்கன்னு பொய் பொய்யா அள்ளி விட்டிருக்க. ஆனா அதெல்லாம் பொய்.
   நீ அன்கான்ஷியஸா இருந்தப்ப டாக்டரிடம் கேட்டுட்டேன். அவங்க உன்னை சோதிச்சு அதெல்லாம் இந்த பொண்ணுக்கு ஆஸ்துமா இல்லைன்னு சொல்லிட்டாங்க.
   அதுக்காக இன்னிக்கு மூச்சுதிணறல் நடிப்புன்னு சொல்லமாட்டேன். உனக்கு இருந்த பிரச்சனை எல்லாமே நான் மொத்தமா போனதா தான் பார்க்கறேன்.

  இப்ப என்ன? நீ யாருனே தெரியாத பொண்ணா இருந்தா என்ன செய்ய? அதானே…
   நான் உன்னை புது பிறவியா பார்க்கறேன் ரம்யா. நீ பழசை மறந்தா என்ன? புதுசா வேறொருத்தியா இருந்தா எனக்கென்ன? நீ தம்பி தங்கை குடும்பம்னு பொறுப்பை சுமந்தவளா இருந்தாலும், ஏன் யாருமேயில்லாத அனாதையா இருந்தாலும், கன்னிப்பொண்ணா இல்லைன்னா கூட எனக்கு நீ தான் வேணும் ரம்யா. நீ தான் வேண்டும்‌. உன்னை முதல் முதலா எந்தளவு காதலிச்சேனோ அதே அளவு இப்ப உன்னை பார்க்கும் போது புது மனுஷியா தான் காதலிக்க நினைக்கறேன். இந்த ஜென்மத்துல இனி உனக்கு நான். எனக்கு நீ ரம்யா.” என்று கூறியவன் அவளை மேற்கொண்டு பேசவிடாமல் இதழால் இதழை பூட்டினான். விபத்தில் கன்னித்தன்மை சோதித்த போது அவங்க கன்னிப்பெண் இல்லை என்றதை கூறியிருந்தார்கள். அதனால் அதையும் ஏற்க பழகிவிட்டான்.‌ காணாமல் போன அன்று அவளுக்கு என்ன நிகழ்ந்ததோ? அதெல்லாம் அவள் நினைவுப்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் முத்தங்களை அடிக்கடி பொழிந்தான். அவன் நினைப்பை மட்டும் விதைத்தான்.

    படபட பட்டாம் பூச்சியாக இமைகள் படபடத்து ஒரு கட்டத்தில் மெதுவாய் அவன் பேசிய வார்த்தைகளையும், அவன் முத்தத்தை உள்வாங்கினாள்.
 
  மெதுவாக இதழை விடுத்தவனுக்கு மனமில்லை. “ப்ப்பா.. இத்தனை நாள் கொடுத்த முத்தம் எல்லாம் ஏதோ கம்பள் பண்ணி சோறூட்டற மாதிரி இருந்தது. ஆனா இன்னிக்கு தான் லைட்டா ரெஸ்பான்ஸ் பண்ணிருக்க,  மனசுல ஏதோ பாரம் குறைந்திருக்கா ரம்யா?” என்றவனிடம் வெட்கம் கொண்டாள்.

  “ஐய்ய்ய்யோ.. வெட்கப்படற?! ஏய்.. இது வெட்கம் தானே? எங்கம்மா சாராதாவிடம் உடனடியா கல்யாணத்துக்கு தேதி பார்க்க செல்லறேன். ரம்யா.. உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே. ஒரு தடவை ஒரே தடவை வார்த்தையால சொல்லு” என்று மணற்பரப்பில் மண்டியிட்டான்.‌

   ரீனாவுக்கு அவனது செய்கையில் காதலிப்பதாக கூறிவிடேன் என்று மனசாட்சி பதில் தந்தது. அவனுக்கு இணையாக மண்டியிட்டு “இன்னிலயிருந்து உங்களோட ரம்யாவா வாழ ஆசைப்படறேன். பழைய குப்பைகளை நான் மறந்தது, மறக்கறதாவே போகட்டும். புதுசா என் நினைவு பெட்டகத்துல நீங்க மட்டும் இதயத்துல வாழ்ந்தா போதும். நாம கல்யாணம் பண்ணிக்கலாம். இனி கடவுளே வந்தாலும் நான் உங்களை விட்டுத்தருவதா இல்லை.” என்றாள்‌. அவளை கட்டிப்பிடித்து அவள் சங்கு கழுத்தில் சாய்ந்து ஆனந்தம் கொண்டான் சுதர்ஷனன்.

  ரீனாவோ ‘எனக்கு இந்த வாழ்க்கையை தந்த கடவுள் ரம்யா. இனி அந்த ரம்யாவே வந்தாலும் உங்களை அவளுக்காக விட்டு தரமாட்டேன் சுதர்ஷனன்.
    அவ வந்து நான் தான் ரம்யானு சொல்லி நின்றாலும். நானும் ரம்யானு சொல்லி அழுத்தமா நிற்பேன். கடவுள் முதலாவதா கொடுத்த வாழ்க்கையை நான் சலிச்சுக்கிட்டு வாழ்ந்தேன். இப்ப இரண்டாவதா அமைச்சி தர்ற வாழ்க்கையை நான் காதலிச்சு வாழ்வேன்’ என்று ஆனந்தக்கண்ணீர் துளிர்க்க, முடிவெடுத்தாள்.

   அதன்பின் தனியாக இங்கே இருக்க வேண்டாம் அது தங்கள் இளமை என்னும் அரக்கன் ஏடாகூடமாய் சிந்தித்து நம்பியார் வேலையை ஏவிடும் என்று சமர்த்தாய் வீட்டுக்கு வண்டியில் புறப்பட்டார்கள்.

  வீட்டுக்கு வந்ததும் சாரதாவிடம் சொல்லி நேரடியாக திருமணத்தை பற்றி பேசுவதாக உரைத்தான்.

  ஆனந்தியோ ‘நாளை தள்ளிப்போடாம கல்யாணத்தை பண்ணிடலாம்’ என்று ரம்யாவிடம் உரைத்தார்.

  “உங்க இஷ்டம்மா. என்னால ப்யூட்டி பார்லரை மேனேஜ் பண்ண முடியலை. பழசை மறந்ததால் கத்திரிக்கோலை கூட நடுக்கமா பிடிக்கறேன். அது வர்ற கஷ்டமருக்கு ஆபத்து. கவிதா ப்யூட்டிஷன் கோர்ஸ் போற. அவ அந்த கோர்ஸ் முடிச்சி அவளே அந்த அழகு நிலையத்தை டேக் ஓவர் பண்ணட்டும். அதுக்குள்ள நான் புதுசா ஏதாவது கற்றுக்க முயற்சி பண்ணறேன். ப்ளீஸ்” என்றாள்‌.

  “அட.. அதுக்கென்ன. இத்தனை நாள் உன்னோட உழைப்புல வளர்ந்தோம்‌. இப்ப விபத்துல உயிர்பிழைச்சு வந்ததே போதும். நீ கல்யாண பொண்ணா வீட்டோட இரு” என்று ஆனந்தி உரைத்துவிட்டார்.

  சாரதாவுமே அதை தான் எதிர்பார்த்தார். மகனோடு குடும்பப் பொறுப்பில் மூழ்கட்டும்‌.’ என்றதே.

  சுதர்ஷனன் சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக எளிமையாக தி.நகரில் உள்ள திருமலை தேவஸ்தானத்தில் திருமணம் செய்துக்கொண்டான்.

  கடவுளை சேவிச்சிக்கோ மா” என்றதும் எதார்த்தமாய் சிலுவை போட சென்றது ரீனா கைகள்.
 
  அந்த நேரம் நெத்தி சுட்டியை சரிசெய்வதாக மற்றவர் எண்ணிக் கொண்டனர்.
  ஆனால் ரம்யா இடத்தில் யாரோ ஒருத்தி சுதர்ஷனனை மணப்பதை கூர்ந்தாராயும் பைரவிற்கு சிலுவை போடுவது கண்ணில்பட்டது.

  ‘இவ வேற மதம். இவளுக்கு நினைவு வந்துடுச்சா? இல்லையா?’ என்று குழம்பினான்.
அடுத்த நிமிடமே, உன்னை பொறுத்தவரை ரம்யா உன் வீட்டில் இறந்தாள். எங்கே உண்மையை கூறினால் பழி தன் மீது விழுமென்று மறைத்தது. இன்று ரம்யா இடத்தில் வேறு பெண். இனி ரம்யாவை பற்றி ஏன் பதட்டமும் பயமும் கொள்ள வேண்டும்.

  ரம்யாவின் வாழ்வு இப்படி தான் முடிய வேண்டுமென்றது அவள் தலைவிதி. இந்த பெண் வாழ்வு இனிதாக ஆரம்பமாகட்டும் என்று கையில் உள்ள மலர்களை தூவினான் பைரவ். சுவாதி லேசாக தலைசுற்றல் வருகின்றது என்று கூற, அவன் ஏற்கனவே கன்சீவானது அறிந்ததால் அவளை இளைப்பார அமர வைத்து தாங்கினான் பைரவ்.

தீப்சரணும் சஞ்சனாவும் தான், “ஏய்.. நம்ம கல்யாணத்துக்கு முன்ன மாப்பிள்ளை கல்யாணத்தை முடிச்சிட்டான் சஞ்சனா. ஆனா இரண்டு வாரம் கழிச்சு நம்ம கல்யாணம் முடிந்தாலும் மத்ததுல நாம முந்திக்கணும்” என்று கண்சிமிட்ட, சஞ்சனாவோ “போலீஸ்கார்.. உங்க வாயை கொஞ்ச நேரம் பொத்துங்க” என்று சின்ன பெண் கவிதா இருப்பதை சுட்டிக்காட்டினாள்.

கவிதாவோ அக்காவின் சிகைக்குள் மாலை மொத்தமாய் அழுத்த, சிகையிலிருந்து மாலையை பிரித்து சரியாக அடுக்கடுக்காய் அணியும்படி வைத்தாள்.

   விஷாலோ “மாமா” என்று சுதர்ஷனன் பந்தத்தில் ஊறிவிட்டான்.
  அந்தளவு பாசை வழக்கும் விதமாக இருந்தது அவர்கள் பாசம்.

  ரம்யா விலாஸ் என்ற வீட்டிற்கு அழைத்து வந்தான். அங்கே விளக்கேற்றியதும், வீட்டு சாவிக்கொத்தை சாரதா கையில் வைத்து மகிழ்ந்தார்.

     ரம்யாவின் அன்னை ஆனந்தியோ “எம்மக இந்த வாழ்க்கையை வாழ தான் எத்தனை கஷ்டப்பட்டா.” என்று பூரிக்க மதுகிருஷ்ணனோ ”ஒரு அப்பா ஸ்தானத்தில் நானே தேடி மாப்பிள்ளை பார்த்தாலும் நல்லவனா கிடைச்சிருக்க மாட்டார். உன் நல்ல மனசுக்கு தான் சுதர்ஷனன் மாப்பிள்ளையா அமைந்தார்” என்று வாழ்த்தா, ரீனாவுக்கு பாதர் பார்த்த வரன் கெவின். அவன் நல்லவனே இல்லை. உண்மையில் இந்த வாழ்வு சொர்க்கமாய் மாற வேண்டும். ரம்யா எங்கிருந்தாலும் நீ வந்துடாத” என்ற வேண்டுதலோடு கண்ணாடியை தொட்டு வணங்கினாள். ஆம் அங்கே சாரதா வீட்டில் கடவுள் இருக்கும் புகைப்படங்களில் வரிசையாக கண்ணாடியும் இருந்தது. ரீனாவை பொறுத்தவரை அந்த கண்ணாடியில் தெரியும் உருவம் அவளுடையது அல்ல. அது ரம்யா உருவம். அப்படி தான் அவள் எண்ணுவதே.

   தோழிகள் கிசுகிசுத்து வீட்டிற்கு சென்றப்பின், ரம்யா வீட்டு ஆட்களும் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். சுதர்ஷனன் வீட்டில் முதலிரவு அறைக்கு அவனே எளிமையாக அலங்காரம் செய்திருந்தான்.

  சாரதா பூஜை அறையில் கடவுள் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்து அறைக்கு போக சொல்லவும் நாணியபடி சரியென்றாள்.

  அறைக்குள் வந்து சேர சுதர்ஷனனோ, ஸ்டெப்லைசர் வாங்கி வைத்திருந்தவன் அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

  அதுயென்ன கருவி என்று ரீனா வரும்பொழுதே ஆராய்ந்தாள்.
 
  “வந்துட்டியா? உனக்கு ஆஸ்துமா இப்ப இல்லை என்றதா டாக்டர் சொன்னாங்க‌. இருந்தாலும் நான் வாங்கி வச்சியிருக்கேன். உன்னோட இன்ஹேலர் காணோம்னு ஆனந்தி அத்தை சொன்னாங்க. நான் இன்னொன்னு வாங்கி வச்சியிருக்கேன். மூச்சு திணறல் வராது இருந்தாலும் பாதுகாப்பா வச்சியிருப்பதில் தப்பில்லை‌” என்று கூறினான்‌.

   அந்த நேரம் ரம்யாவுக்கு ஆஸ்துமா உள்ளது. மூச்சுதிணறல் வந்து இறந்திருப்பாளோ? என்று சிந்தித்தாள்‌. அதற்கேற்ற விதமாக பல்லி உச்சுக்கொட்டியது.

   பல்வியை பார்த்து அப்படியே இறந்திருந்தா உடல் இருக்கணுமே?’ என்று யோசித்தவளின் கையிலிருந்த பாலை வாங்கி மேஜையில் வைத்து, அருகில் வந்திருந்தான் சுதர்ஷனன்.

   ”ரம்யா குட்டி என்ன யோசனையில் இருக்கா?” என்று கட்டியணைத்தான்.

  “அ..அது. ஒ..ஒன்னுமில்லை” என்று பதிலை திக்கி திணற, “ரிலாக்ஸ் ரம்யா.” என்றவன் எப்பொழுதும் போல முத்தத்தில் முன்னுரை இயற்றினான்.‌

   இத்தனை மென்மை, மேன்மை கொண்ட ஒருவனோடு இணைவதில் ரீனாவுக்குள் குற்றவுணர்ச்சி வந்தது.

   ஆனால் சுதர்ஷனன் அணைப்பை தடையிட, அவளால் இயலவில்லை.

   ரீனா என்ற பெண்ணாக மனதில் தோன்றினால் தள்ளி விட்டிருப்பாளோ என்னவோ. அவள் ரம்யாவாக மனதால் உடலால் இணைந்துக் கொண்டிருந்தாள்.

-தொடரும்.‌

5 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-17”

    1. சுதர்சன் செம😃👏👏
      இவ்ளோ ஸ்பீடா கதை நகர்கிறது அடுத்து ஏதோ பிரச்சனை வரப் போகுதோ 🧐
      சூப்பர் சிஸ் கதை வித்தியாசமாக நகர்கிறது அடுத்த பகுதிக்கு மிக மிக மிக மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *