Skip to content
Home » Forum

Forum

நித்யா மாரியப்பன்-க...
 
Notifications
Clear all

நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு

1 Posts
1 Users
0 Reactions
28 Views
Site-Admin
(@veenaraj)
Reputable Member
Joined: 7 months ago
Posts: 160
Topic starter  

💝நித்யா மாரியப்பனின்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு💝

Nila Praakash review

Nithya Mariappan க-னல் பொய்கை

அப்படி ஒரு Awareness novel.

ஒரு கதையின் நூலிழைகளில் மிக நுணுக்கமாக பின்னப்பட்ட விழிப்புணர்வு . மனிதரின் உணர்வுகளை அழகாக பேசுகிறது கதை. விழிப்புணர்வு பற்றி வாசியுங்கள் கதையின் சுவாரஸ்யம் போயிடும் என்று குறிப்பிடவில்லை.

தவறு செய்தப் பின் உழலும் குற்ற உணர்ச்சியை காட்சிகளில் நிறுத்தி ❤️❤️❤️ தவறுகளுக்கான தண்டனை பெறும் போது ஏற்படும் மன உளைச்சலில் மனித மனம் படும் பாட்டை மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கீங்க. 

 ஹீரோவின் மியா காலிபா வீடியோ பேச்சு

அந்த காட்சி வரை பெண்ணின் மீது எப்போதும் பெண் என்றால் சரியாக தான் இருக்க வேண்டும் ஆணின் மீது மட்டும் இருக்கும் அந்த விதிவிலக்குகள் வாசகியாக எல்லோருக்கும் இருக்கும்

ச்சே அவள் தவறுக்குத் தான் அனுபவிக்கிறாள் இவளை எல்லாம் ..என்று ஹீரோவின் மனநிலையை சரியென்று நினைப்பது

அந்த காட்சியில்

அட ஆமால சரி தவறுக்கு ஆண் என்ன? பெண் என்ன? இவனது செயலுக்கு..

என்று நினைக்க வைப்பதில் உங்க எழுத்து உயர்ந்து நிற்கிறது. பெண்ணியம் பேசுகிறது.

நான் அதிகம் வாசிப்பதில்லை. நேரம் கிடைப்பது அரிது. ஆனால் என் செலவிடப்பட்ட நிமிடங்கள் அழகாக அர்த்தம் பெற்றது.

நான் மிகவும் ரசித்த வரிகள்

அலைபாயும் மனதை அமைதலாக்கி இதமாக்கும் முத்தம்

முட்டாள்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனினும் மன்னிப்புக்கு தகுதியானவர்கள்

வாழ்த்துக்கள் நித்யா மாரியப்பன் நாவல்கள் 

-----------------------------------

Prema kamesawaran

கானல் பொய்கை..Nithya Mariappan 

அசாத்தியமான கதைக்கரு.. 

ஆடிய களம் சுனாமி பேரலைகளுக்கு நடுவே.

எழுத்தை சுவாசிக்கும் பெண்

தேவையினால் தடுமாறும் நேரம் 

தடம் மாறி வைக்கும் ஒரு அடி...

தலைகுப்புற தள்ளி விடும் அவலம்.. 

கட்டியவன் துணை நின்றதால் 

காயம் காய்ந்தது வெகு விரைவில்.. 

துணை கிட்டாவிடின்???

வேற லெவல் எழுத்து டா.. ஒவ்வொரு வரியும் செதுக்கி இருக்க👏👏👏👏 எழுத்துக்கள், வாசிப்புகள் பின்னாடி இருக்குற சில கருப்பு பக்கங்கள், அதுனால ஏற்படும் விளைவுகள் அம்மாடின்னு இருந்தது. இன்னும் அதுல இருந்து வெளி வர முடியல. 

இதுவே கொடுரம்னு நினைச்சா அதுனால பாதிக்கப்படும் பொண்ணோட நிலமை.. கொடூரத்தொட உச்சம். அதுல இருந்து விடுபட அவளோட போராட்டம், அதுல அவ தெரிஞ்சுக்குற விஷயமான படிச்ச படிப்பு மூலமா கிடைக்குற வேலையும் வருமானமும் எவ்வளவு முக்கியம் ஒரு பொண்ணுக்குண்ணு அப்படின்ற விசயம்.. 

பாலா போல இருக்காங்களா? இருந்தா நல்லா இருக்கும்.. இருக்கணும்னு அடுத்த தலைமுறையை வளர்க்கணும்.. 

திரும்ப க்ளைமேக்ஸ்ல வந்த எழுத்துலக அரசியல் வேற லெவல்👏👏👏👏

கிடைக்குற இடங்களில் எல்லாம் பெண்ணியம்💐💐💐💐.. தப்பு பண்ணா முதல்ல அத உணரணும்.. திருத்திக்கணும்.. திருந்தனும்.. அதுக்கு தற்கொலையும், தன்னைத்தானே தண்டிக்குறதும் தேவை இல்ல. 

"ஒழுக்க விழுமியங்கள்" இந்த வார்த்தை ரொம்ப பிடிச்சது..  

சின்ன கதை தான்.. ஆனா எனக்குள்ள அதிகமான பாதிப்பை குடுத்து இருக்கு.. வெளிய வர எத்தனை நாள் ஆகும்னு தெரியல... 

வாழ்த்துக்கள் டா... இன்னும் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்..💐💐💐💐

------------------------------

Narmadha Subramaniyam 

#narmsreads2024 

கானல் பொய்கை - Nithya Mariappan 

இளம் பெண் குடும்ப நாவல் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை!

நிறைய கொட்டிக் கிடப்பதில் அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் படிக்கிறார்கள்! அதற்கு நாம் ஏன் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், தடை சொல்ல வேண்டுமென அதீத ரொமேன்ஸ் கதைகளை வாசிப்பவர்களை ஆதரிக்கும் வகையில் பேசுகிறோம் என்று தெரியாமலேயே குரல் கொடுக்கும் வாசகர்களும் எழுத்தாளர்களும் கூட இக்கதையை வாசிக்க வேண்டும். 

இதை வாசித்து முடிக்கும் போது பின்னொரு நாளில் எங்கேனும் இம்மாதிரியான வாசிப்பாளர்களை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை மனசிதைவுகளை உள்மனச்சிக்கல்களை உங்களால் எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த இக்கதை உங்களுக்கு உதவும்.

ஆபாச கதைகளை எழுதுவது சட்டப்படி குற்றமாகும்! அவை குறித்த விஷயங்களை கூட இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் படித்து விட்டு இக்கதை என்னவோ சமூக நாவல் என்று நினைத்தால் அது தான் இல்லை.

இக்கதை பக்கா குடும்ப நாவல்! 

கதையின் ஆரம்பமே மணமாகி சில நாட்களே ஆன புதுமணத் தம்பதிகள் மனநிலை மருத்துவரைச் சந்திப்பதில் தொடங்குகிறது. 

நாம் குடும்ப நாவலில் காணும் அன்பான பண்பான கதாநாயகனும், நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் ஊடலும் கூடலுமெனத் தான் நகர்கிறது கதை. ஆனால் அந்த ஊடலுக்கான காரணியாக பேசப்படும் விஷயம் தான்‌ இங்கே இக்கதையை தனித்துவமாக்கி சமூக விழிப்புணர்வு நாவலாய் நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.

கதை நெடுகிலும் சொல்லியிருக்கும் பெண்ணிய சிந்தனைகளும் அதனூடாக ஆண்களின் தவறுகளை நார்மலைஸ் செய்திருப்பதை குட்டியிருப்பதும் அருமை. 

தவறானவை ஒழுக்கமற்றவை என்று பெண்களுக்கு அறிவுறுத்தப்படும் செயல்களையும் விஷயங்களையும் ஆண்கள் செய்தாலும் தவறு என்று தான் கூற வேண்டுமென அழுத்தமாக பதிவு செய்திருப்பதற்கு பாராட்டுகள் 👏👏👏👏👏👏👏

இக்கதையை இவ்வாறு கமர்சியல் ப்ளஸ் சமூக நாவலாய் சிந்தித்து எங்கும் தொய்வில்லாமல் பதினேழே அத்தியாயத்திற்குள் முழுமையாய் நிறைவு செய்திருக்கும் நித்யாவின் எழுத்தும் சிந்தனையும் நிச்சயமாக என்னை வியக்க வைத்தது. மனம் நிறைந்த பாராட்டுகள் சிஸ் 👏👏👏👏

எனக்கு மிகவும் பிடித்த திருமணத்திற்கு பின்பான காதலும் கூடவே சமூகத்திற்கான முக்கிய கருத்துமென அருமையான கதை வாசித்த மன நிறைவை அளித்தது இந்நாவல்!

வாழ்த்துகள் சிஸ் 💐🎊🎉

----------------------------------------

Agniga ram

Nithya Mariappan னின் கானல் பொய்கை. முதலில் உங்களுக்கு பெரிய கைதட்டல் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 மிக அருமையான கதை. தோழியின் பேச்சைக் கேட்டு தன் கற்பனையை வேறு திசையில் கதை எழுதும் பெண் அதனால் அவள் என்ன விளைவுகளை சந்திக்கிறாள் என்பதே கதை. உளவியல் ரீதியாக நிறைய தகவல்களை குடும்ப நாவலிலும் தரமுடியும் என்று நிருபித்து விட்டீர்கள். அருமையான கதைக்களம். பாலாவின் கேரக்டர் எழுதி இருந்த விதம் அருமை சராசரி ஆணாக அவனது நடவடிக்கை இருந்தாலும் மனைவியை புரிந்தவன்

----------------------------------------------

Selvarani selvarani

நித்யா மாரியப்பனின் கானல் பொய்கை.

எனக்கு சமீபத்தில் தான் அதிக காம உணர்வு ஒரு மனநோய் என்று தெரியும்.ஒரு படம் பார்த்தேன்.பிரைமா என்று நினைவில்லை.நாயகி உணர்வுகள் தூண்டப்படும் போது மணிக்கட்டில் ஒரு ரப்பர் பேண்ட் இறுக கட்டி இழுத்து விடுவாள்.காயங்கள் நிறைய இருக்கும்.தாங்க முடியாத நிலையில் தெரியாதவர்களிடம் கூட உறவு வைத்துக் கொள்வாள் 

ஊரே விபசாரி என்று ஒதுக்கி வைப்பார்கள்.ஒரு மனநல மருத்துவர் அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பார்.அப்போது இந்த மனநோய் பற்றி சொல்வார்.

இந்தக் கதையும் எனக்கு அந்த படத்தை நினைவு படுத்தியது.இன்னும் விழிப்புணர்வு தேவைப்படும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.நிறைய விவாதங்கள் பார்த்து இருக்கிறோம்.யாரோ எதையோ எழுத யாருக்கோ பாதிப்பு வருகிறது என்று சும்மா இருக்கலாமா??எழுத்தின் பொறுப்பு வேண்டாமா எழுத்தாளர்களுக்கு??மாரல் பொலிஸிங் என்று நக்கலுடன் கடந்து செல்பவர்கள் இந்த கதையை படிங்க. சும்மாவே இந்த தலைமுறை பிள்ளைகள் ஸ்ட்ரெஸ் என்று புலம்புகிறார்கள்,தானாக இழுத்து விட்டுக் கொள்வானேன்?

கதையில் வரும் பாலா போல் எல்லா கணவர்களும் இருக்க மாட்டாங்க.ஆண் காம உணர்வுக்கு ஆளானால் அது வயதுக் கோளாறு.அதே பெண் என்றால் துரத்தி துரத்தி அடிப்பார்கள்.காமமும் ஒரு சுவை தான்.அளவோடு இருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது..

கதையோடு குறிப்பிட்ட எழுத்து அரசியல், சைட் அக்கப்போர்கள், புது எழுத்தாளர்கள் தடுமாறி விழும் இடங்கள் என்று எல்லாப் பக்கமும் அலசி எழுதி இருக்காங்க.புதிய எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும்.

------------------------------------------

Vidhya venkatesh 

ஓம் ஸ்ரீ சாயிராம்

#வித்யா_விமர்சனங்கள்

💞எழுத்தாளர் நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய கானல் பொய்கை 💞

(இதுவரை நான் எழுதியதிலேயே LonGGGGGGGG விமர்சனம் இது தான். பொறுமை இருந்தால் முழுவதையும் படியுங்கள்🫣 🫣)

இணையத்தில் வெளிவரும் குடும்ப நாவல்கள்களை படைப்பவர், அதைப் படிப்பவர் இருவரின் மனநிலையிலும் எத்தனை ஆழமான தாக்கங்கள் ஏற்படுகின்றன என நிதர்சனங்களைப் புட்டு புட்டு வைத்து அசத்திவிட்டீர்கள் நித்யா.

எழுத்தாளர்கள், வாசகர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய விழிப்புணர்வூட்டும் கதை இது.

இக்கதைக்கு இரண்டு பிரிவகளில் என் உணர்வுகளைப் பகிர நினைக்கிறேன்.

1. சக எழுத்தாளராக…

என் மனத்தில் நெடுநாளாக ஓடிக்கொண்டிருந்த விஷயங்களுக்குப் பதில் சொல்வதுபோல அமைந்திருந்தது இந்தக் கதை. 

கதைகளை இணையத்தில் படிக்கலாம் என்பதையே நான்கு வருடங்களுக்கு முன்தான் அறிந்தேன்.

தளங்களில், முகநூல் பக்கங்களில் எனத் திரும்பும் திசை எல்லாம் நூற்றுக்கணக்கான வாசகர்கள் படிப்பதும், கருத்து பரிமாறிக்கொள்வதும், எழுத்தாளர்களிடமே நேரடியாகப் பேசிக்கொள்வதும் என அனைத்தையும் கண்டு பிரமித்தேன். எத்தனை அழகான உலகம் இது எனத் தோன்றியது.

ஆனால் இதில் பெரும்பாலானவர்கள் 18-24ல் உள்ள திருமணமாகாத இளம்பெண்கள் என்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது.

காரணம், குடும்ப நாவல்களோ, வாரயிதழ்களில் வரும் தொடர் கதைகளோ, திருமணத்திற்குப் பின்தான் படிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இட்ட சூழலில் வளர்ந்தவள் நான்.

சரி! மாறிவரும் காலத்தில் இதுவும் ஒன்று என ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் அவர்கள் விரும்பி எழுதும்/படிக்கும் கதைக்களங்கள் கண்டு திடுக்கிட்டேன்.

✒️ஆன்ட்டி ஹீரோ என்ற பெயரில் அத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு, கடைசி அத்தியாயத்தில் திருந்தும் ஒருவனை இவர்களால் ரசிக்க முடியுமா?

✒️ஆறடி உயரம், அடர் மீசை, அலை அலையாய் கேசம், ஆடம்பரம் என்ற வர்ணனைகள் மட்டும்போதுமா, ஒருவன் மீது காதல் வருவதற்கு?

✒️காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், பக்கம் பக்கமாக விவரிக்கப்படும் அந்தரங்க காட்சிகளை க்யூட் ரொமான்ஸ் என்று கொண்டாடுவது தான் இல்லறமா?

கற்பனைக்கு எல்லையில்ல; கதை என்பதே நிஜத்திலிருந்து கொஞ்சம் தள்ளிச்சென்று கற்பனை உலகில் ஆசுவாசப்படுவதற்குத் தானே என்றெல்லாம் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்.

கற்பனைக்கோ காதல் காட்சிகளுக்கோ நான் எதிரி இல்லை. கதைக்குத் தேவையான அளவு இருந்தால் போதுமென்பது என் எண்ணம்.  

💞ஆக சக எழுத்தாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:💞

✒️அந்த நாட்களில், சமுதாயம் சார்ந்த விஷயங்களை மக்களிடம் சேர்ப்பதற்கு, பேனா முனையை விடச் சிறந்த ஆயுதம் இல்லையென கூறினார்கள். 

அது இந்தக் காலகட்டத்தின் குடும்ப நாவல்களுக்கு பொருந்தும் என்பதே என் தாழ்மையான கருத்து. 

✒️நாம் எழுதும் கதைகள் வாசகர்களின் மனத்தில் எப்பேர்ப்பட்ட தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, சமுதாய அக்கறையுடன் எழுதவேண்டும். 

✒️18+ என்று Disclaimer போட்டாலும், எத்தனை எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய கதையை தங்கள் வீட்டிலுள்ள 18+ நபர்களிடம் காட்டிப் படிக்கச் சொல்கிறீர்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள். 

அப்படியிருக்க, நம் எழுத்தின் மேலுள்ள நம்பிக்கையில் வந்து படிக்கும் வாசகர்களின் மனம் சஞ்சலம் கொள்ளுமாறு எழுதி அவர்கள் உணர்ச்சிகளுடன் விளையாடுவது சரியா?

✒️ஒரு காட்சியையோ அல்லது AI படத்தையோ நாம் நம் கதையில் இணைக்கும்போது, நாம் கருத்தில் கொள்ளவேண்டியது இது மட்டுமே. என் குடும்பத்தினரிடம் என்னால் எந்தவித தயக்கமும் இன்றி இதைப் படிக்கச் சொல்லமுடியும்; இப்படத்தைக் காட்ட முடியும் என்று தோன்றினால் மட்டும்போதும். நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்று நிம்மதி பிறக்கும்.

💞அதே மாதிரி சக வாசகர்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள் முன்வைக்கிறேன்.💞

✒️We are the books we read என்ற பழமொழி உண்டு. 

கதையில் உள்ள நற்சிந்தனைகளை பாராட்டிச் சொல்லி, தவறுகளை நிமிர்வாகச் சுட்டிக்காட்டி நீங்கள் தரும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான விமர்சனமும், எழுத்தாளர்களை நல்வழியில் ஊக்குவிக்கும் வல்லமை கொண்டது.

✒️அந்தக் காலத்தைப் போல, நீங்கள் சிறுக சிறுக சேமித்து, இந்தக் கதை புத்தகத்தை வாங்கினால், மற்றொன்றை அடுத்த மாதம் தான் வாங்கவேண்டும் என்று பட்ஜெட் போட அவசியமில்லை. தடுக்கிவிழுந்தாள் தளங்கள் ஆயிரம் உண்டு இலவசமாகப் படிக்க; 

நீங்கள் பத்து-பதினைந்து நிமிடத்தில் படித்த அந்த அத்தியாயத்தை எழுத, கதையாசிரியர் எவ்வளவு நேரத்தைச் செலவழித்திருப்பார் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு சில வார்த்தைகளில், படிக்கும் அத்தனை கதைகளுக்கும் பாரபட்சமின்றி கருத்துக்களைப் பகிருங்கள்.

ராயல்டி, வருமானம் என்று எந்தவித பெரிய எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய சன்மானம் இதுவே என்பதை மறந்துவிடாதீர்கள்.

💞💞💞💞💞💞💞💞💞

ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம். சரித்திரம் பேசும் சிறந்த கதைகளைப் ப(டை)டிப்போம்.

இதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்; அல்லது பின்பற்றியே ஆக வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

உங்களுக்கு நான் சொல்வது சரியெனப்பட்டால் கடைபிடியுங்கள்; அல்லது கடந்து செல்லுங்கள்; அவ்வளவே தான்.

💞💞💞💞💞💞💞💞💞

2. சக வாசகராக:

📖ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என யார் சொன்னது என்று கேட்பதுபோல திருமணமான ஒரு சில நாட்களிலேயே மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள்; கணவன் அவளை மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வருகிறான் என ஆரம்பமே இடியாப்ப சிக்கலாக, அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என்று மேலும் படிக்கத் தூண்டும் விதமாக விறுவிறுவென இருந்தது நித்யா.

📖பாலா: 

பாலா முன்கோபி என அவன் அம்மா அஞ்சிய இடத்தில் என்னால் நம்பவே முடியவில்லை. காரணம், கிறுக்குத்தனமாக மனைவி செய்த காரியங்களை எல்லாம் பொறுமையாகச் சகித்துக்கொண்ட பொறுமையின் சிகரமாச்சே இவன் எனத் தோன்றியது. 

ஆனால், பாரதி தன் பிரச்சனையை மனம்விட்டு ஒப்புக்கொண்ட பின், அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளும்; கோபத்தில் அவன் நடந்துகொண்ட விதமும்….அப்பப்பா! சொல்ல வார்த்தையில்லை. நீயும் சராசரி மனிதன் என நிரூபித்துவிட்டாயே என அவன்மேல் அத்தனை வெறுப்பு வந்தது.

கோபம் வந்த வேகத்தில் புத்தி தெளிந்து நிதானித்து, அவளுக்கான ஸ்பேஸ் தந்த பாலாவின் அணுகுமுறையில், அவன்மேல் வந்த வெறுப்பு வந்த வேகத்திலேயே மறைந்தது. 

பொண்டாட்டியை ஒரு போண்டா, டீயுடன் சமாதானம் செய்து மன்னிப்பை யாசித்த பாலாவின் காதல் மிகவும் ரசனையாக இருந்தது.

📖பாரதி: 

யாரை விட்டுத் தள்ளிப்போக துணிகிறாளோ அவனிடமே தஞ்சம் புகுவது, மனவுளைச்சலில் செய்யும் விபரீதமான செயல்கள் என இடியாப்ப சிக்கலின் மொத்த உருவம் அவள். 

அவள் பிரச்சனை என்னவென்று நான் சீக்கிரமே யூகித்துவிட்டேன். ஆனால் அது அவள் எழுத்துப்பயணத்தின் பின்விளைவு என்று கண்டதில் பேரதிர்ச்சி கொண்டேன். (அது என்னவென்று விவரித்துக் கூறி, உங்கள் கதையின் சஸ்பென்ஸ் உடைக்க விரும்பவில்லை. )

தவறு என உணர்ந்தும் உணராமலும், உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்து, அவள் தனக்குத்தானே தந்துகொண்ட தண்டனைகளைப் படிப்பதற்கே திகிலாக இருந்தது.

இத்ததனை மென்மையானவள், பாலவின் விலகலையும் அருவருப்பான பார்வையையும் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள் என்ற பதற்றத்திலேயே அவர்கள் ஊடல் காட்சிகளைப் படித்தேன். 

There is no use crying over spilled milk என்ற ரீதியில் அவள் எடுத்த நிமிர்வான முடிவுகள் அனைத்தும் வாவ். அவளின் ஒவ்வொரு செயலும் பிரம்மிக்க வைத்தது.  

இதைப் பற்றிய முன் அனுபவம் இல்லாமல் எப்படி எழுத முடியும் என்ற பாரதியின் வெள்ளந்தி மனமும், இந்த நோய் அடுத்த சந்ததிக்கும் வந்துவிடுமோ என்ற அவள் தவிப்பும் அவள் கள்ளம் கபடமில்லாத குணத்தை எடுத்துரைத்தது.

📖பாலா-பாரதி ஜோடி:

என்னதான் இருந்தாலும், இது விட்டுப்போகும் பந்தம் அல்லவே எனச் சுதாரித்து செயல்பட்ட இருவரின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அழகோ அழகு.

மனஸ்தாபங்கள் பெற்றவர்கள் காதுகளுக்கு எட்டாதபடி பாதுகாத்ததில் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

நிச்சயதார்த்த நிகழ்வு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பாரதி, பாலாவிடம் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடி. அதைச் சரியான கோணத்தில் புரிந்துகொண்ட பாலாவின் குணமும் உயர்ந்தது.

📖மனோதத்துவ மருத்துவர், ப்ரியம்வதாவின் காட்சிகள் அனைத்தும் பிரமாதம். 

📖உற்ற தோழியாக கல்பானாவின் கதாபாத்திரமும் வெகு அழகு.

📖நீங்கள் எந்தவொரு கதையாக இருந்தாலும், அதற்கான ஆழமான Background Research செய்வீர்கள் என்பதை உங்கள் அனைத்து கதைகளிலும் கவனித்திருக்கிறேன். 

எழுத்துலக அரசியல், எழுத்தாளர்களின் மனவுளைச்சல், மனரீதியான நோய்கள், அதற்கான சிகிச்சைகள், அதற்கான மறுவாழ்வு குழுக்கள் என நீங்கள் இணைத்த காட்சிகள் அத்தனையிலும் உங்கள் உழைப்பை உணர்ந்தேன். Hats off to your Efforts Nithya.

“முகத்தில் அறையும் ரியாலிட்டி” என்ற போட்டியின் தலைப்பிற்கு ஏற்ற வகையிலும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான விழிப்புணர்வூட்டும் வகையிலும் கதை எழுதிய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

கதைக்கான லிங்க்:

https://praveenathangarajnovels.com/community/mark-4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%88/

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்

-----------------------------------------------

Vidya Guru Arjun

நித்யா மாரியப்பன் அவர்களின் "கானல் பொய்கை"

இந்த கருவில் எழுத முயன்றமைக்கு முதலில் வணக்கங்கள்.

ஆயிரம் விதமான மனவியல் கோளாறுகள் உள்ளன. அதைப் பற்றி எழுதவே தயங்கி நிற்கும் சூழலில் பாலியல் ரீதியான ஒரு மனவியல் கோளாறினை மையக்கருவாக வைத்தது துணிச்சலான முயற்சி. அதிலும் அந்த கோளாறோடு இருப்பது ஒரு பெண் என்றும் அவளே நாயகி என்றும் எழுத எத்தனை துணிவும் தெளிவும் வேண்டும் என்பதை நினைத்து பிரம்மித்துப்போகிறேன்‌‌. 

Sexual behavioural disorders பல விதம். இது பழைய காலத்திலிருந்தே இருப்பது தான். பாலியல் இலைமறைக் காயாக அணுகப்படும் நம் சமூக அமைப்பில் தான் இது பரவல் என்று நினைத்தால் அது தவறு. 3 வயதிலேயே ஆணுறை அணிவிக்கக் கற்றுத்தரும் அளவுக்கு பாலியல் கல்வியில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கும் சில மேலை நாடுகளில் கூட பாலியல் ரீதியான மனவியல் கோளாறுகள் சகஜம் தான். 

ஆனால் நம் சமுதாய அமைப்பில் இதை வெளிப்படையாக பேசுவதிலும் இதற்காக சிகிச்சை பெறுவதிலும் ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது. நடத்தை கோளாறை ஒழுக்கக் கோளாறாக எடுத்துக் கொள்வது தான் அந்த சிக்கல்.. கொலையைப் பார்த்தவன் கொலைகாரன் இல்லை என்ற தெளிவை இக்கதையில் பல இடங்களில் எடுத்தாண்டிருப்பது பாராட்டத்தக்கது. 

இதிலும் கூட பாலினப் பாகுபாடு விளையாடுகிறது என்ற நிஜத்தை முகத்தில் அறைந்தது போல் சொல்லியிருப்பது வாவ்..

இக்கதையில் பிரச்சினை மட்டும் பேசப்படாமல் அதற்கான தீர்வும் வழிகாட்டலும் இருப்பது மிகவும் அருமை..

எழுத்துலக அரசியலைக் களத்தோடு கோர்த்திருப்பது க்ளெவர்..

பாரதியை விட பாலாவை நான் மதிக்கிறேன்.

ஆண் ஈகோவைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் பாரதியைப் புரிந்துகொண்டு அவளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் இடத்தில் அவன் மனிதனாக மிளிர்கிறான்.

பாரதி.... இப்படி தவறிவிழும் பெண்கள் தெளிவோடு இருந்துவிட்டால் எத்தனையோ உயிர்கள் தற்கொலையிலிருந்து தப்பிக்கும்.

பிரியம்வதா.. செதுக்கியிருக்கிறீர்கள் ஆசிரியரே.. இந்த பாத்திரத்தை..

தேவையற்ற ஒரு எழுத்தும் இல்லை.. வளவள வசனங்கள் இல்லை. உணர்வுப் போராட்டங்களை வார்த்தைப்படுத்திய விதம் முதிர்வு.. எனக்கும் நறுக் சுறுக் அத்தியாயங்கள் தான் எழுத வரும் என்பதால் இக்கதை எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது. 

எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை அருமை.. வணக்கங்கள் நித்யா மாரியப்பன் அவர்களே..

-----------------------------------------


   
ReplyQuote