கடந்து போக வேண்டுமா?
கடந்து போக வேண்டுமா?
அந்தி சாய்ந்தப் பொழுது…
அது விடுமுறை சமயம். ஆதலால் பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். இன்னும் விடுமுறை நாள்கள் மீதமிருப்பதால் அவர்களைத் தாய் வீட்டிலேயே விட்டு விட்டு, தான் மட்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் ஸ்ருதி.
மகளிருக்கு இலவசப் பயணம் என்பதைச் சொல்லும் வகையில் பிங்க் நிற பேருந்து வருகை தர, அவள் ஏறியதும், இறங்க வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்காது டிக்கெட்டைக் கையில் திணித்தார் நடத்துனர்.
இடம் காலியாவே இருந்ததால் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
மாலை நேர இதமானக் காற்று குபுகுபுவென அவளின் முகத்தில் பட்டு, அவளின் சிகை அலங்காரத்தைப் பங்கம் செய்ய, முழுமையாகத் திறந்திருந்த ஜன்னல் கண்ணாடியைப் பாதி சாத்தி வைத்தாள்.
வேகமாகத் தன் அலைபேசியை எடுத்தவள், தன் கணவன் பாபுவிற்கு அழைத்து, “பஸ் ஏறிட்டேன்.” என்றாள்.
“முந்தின ஸ்டாப் வரவும் மறுபடியும் கால் பண்ணு. நான் வெயிட் பண்றேன். கூட்டமா இருக்கா?”
“இல்ல. நான் உக்காந்திட்டுத் தான் வாறேன்.” என்றவளின் குரலில் சுரத்தைக் குறைந்திருக்க,
“ஸ்ருதி!! இன்னுமா நீ கோபமா இருக்க?”
“...” பதில் சொல்லாது இதழ் கடித்தப் போது, கண்கள் கலங்கிப் போயின.
“தயவுசெய்து கண்டத நினைச்சி உன்னை நீயே காயப்படுத்திக்காத டி. அத மறந்திடு.” என்றபோது அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
இதே வசனத்தைப் பலமுறை அவளிடம் கூறி விட்டான். ஆனால் அவளோ?
“ஸ்டாப் வந்ததும் கால் பண்றேன்.” என்று விட்டு இணைப்பைத் துண்டித்துத் தன் கைப் பையில் வைத்தாள்.
அவளுக்குப் பேருந்தில் பயணம் செய்யும் போது வேடிக்கைப் பார்க்க மட்டுமே பிடிக்கும். அலைபேசி நோண்டவோ, புத்தகம் படிப்பதோ, ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்பதோ ஆகாது. தலை சுற்றல் வரும். ஆனால் பேருந்தில் போடப்படும் பாடல்களை ரசித்துக் கேட்பாள்.
“ஒன்னப்பு தட்டு புல்லாக்கு
வாங்கித்தரேன் ராசையா
காதுல ஒன்னு
மூக்குல ஒன்னு மாட்டையா
அதை அப்படிக் கொஞ்சம்
இப்படிக் கொஞ்சம் ஆட்டையா…” என்று டவுன் பஸ் கானம் இசைக்க, மெல்லிதான தலையசைப்புடன் ரசனையில் முழ்கிப் போனாள். ஆனால் சற்று நேரத்திற்குப் பிறகு மனம் அதில் லயிக்கவில்லை.
அது பொது இடம் என்பதால் ஓட்டுனர் சத்ததைக் குறைந்து வைத்திருந்தார் தான். அவளின் காதில் அது விழுந்தது தான். ஆனால் அதையும் தாண்டி வேறு ஒருவரின் குரலும் கேட்டது.
தலை தூக்கிப் பார்த்தாள். யாரோ ஒரு வியாபாரி தன் வியாபாரம் தொடர்பாக ஃபோனில் யாரையோ பிடித்து கத்திக் கொண்டிருந்தார்.
அவரின் காட்டு கத்தலில் ஒன்றிரண்டு வார்த்தைகள் ஸ்ருதியின் காதிலும் விழ, முகத்தைச் சுருக்கிக் கொண்டு, கைப் பேசியில் போட்டத் தன் செல்ஃபோனை எடுத்துக் கொண்டாள்.
முகநூலில் சில பதிவுகளை விரல்களால் தட்டி விட்டுக் கொண்டே கடந்து சென்றவள், ஒரு பதிவில் நிறுத்தி அதை வாசித்தாள். பின், அதன் கருத்துப் பக்கத்திற்குள் சென்றாள். அதுவும் அவளுக்குச் சொல்ல முடியாத வேதனையைத் தர, அண்புவனியின் உதவியுடன் யூட்யூப்பில் காணொளிகளை ஓட விட்டாள்.
பாவம். அதுவும் அவளுக்கு வேதனைகளையே வாரிக் கொடுத்தது.
கண்கள் நீரிட, காதை மூடிக் கொண்டு பயணம் செய்தாள்.
ஏன் இந்தச் சமூகம் இப்படி மாறிக் கொண்டே வருகிறது? இது தான் நவீன நாகரீகமா? மதிப்பும், மரியாதையும் அற்ற சுயநல நாகரீகத்தின் பயன் தான் என்ன? இவர்கள் கூறும் நாகரீகம், ஒரு சுழலை உண்டாக்கி ஒட்டு மொத்த மனிதனும் சிக்கிச் சாகும் அளவிற்கும் பெரும்புயலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை எப்பொழுது, யார் தான் உணர்த்துவது? என்ன செய்தால் இதை நெறிப் படுத்த முடியும்? என்று விடை தெரியாத கேள்வியைக் கேட்டுக் கேட்டே மறுகிப் போனாள் பெண்.
முப்பத்து நான்கு வயதான ஸ்ருதி மிகவும் அமைதியான பெண். அதிர்ந்து கூடப் பேசாது, தான் உண்டு தன் வேலை உண்டு என்று நிம்மதியுடன் வாழ நினைப்பவள்.
பாபு, அவளின் கணவன். அரிசி ஆலை ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறான். இரு மகவுகள். தோளைத் தொட்டு நிற்கும் அளவிற்குப் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, பிள்ளை வளர்ப்பு, வீட்டு வேலை என வெளி வேலைக்குச் செல்லாத பக்கா ஹோம் மேக்கர் அவள்.
எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அவளுக்குக் கடந்த சில மாதங்களாக மன உளைச்சல். அது அவளின் கணவனால் வந்தது அல்ல.
கணவன் மனைவி ஊடல் என்று வந்திருந்தால், பாபு அவளை வெகு எளிதாகச் சமாதானம் செய்து விட்டிருப்பான்.
அவளின் உளைச்சலுக்கு அவன் காரணமல்ல.
அவளின் பிரச்சினைகளை வெளியே சொன்னால், “இதெல்லாம் இப்ப கேஷவல். ரொம்ப சாதாரணமா எல்லா இடத்துலயும் நடக்குறது. பழகிக்க. அப்பத்தா நீ இந்த ட்ரெண்டுக்குள்ள இருக்க முடியும். இல்லன்னா உன்னை பூமர்னு சொல்லி ஒதுக்கி வச்சிடும் உலகம். கடந்து போ… “ என்று பலர் கூறினாலும்,
“இதையும் கடந்து போக வேண்டுமா? எப்படி முடியும்?” என்று மனம் அருவருத்தது.
அந்த வியாபாரியின், “அந்த மகனுக்கு என்னத்தச் சொன்னாலும் புரியாது. கிறுக்கு மாதிரியே பேசுவான். அந்த *** மகவனுக்கு ஒரு நாள் இருக்கு.” என்று பொது இடத்தில் ஆபாசமாகக் கத்தியதைக் கடந்து போக முடியாமல் தான் முகநூலை நாடினாள்.
ஆனால் அதுவோ…
“இன்றிலிருந்து மதுரை டூ தென்காசிக்குக் கூடுதல் இரயில்கள் இயக்கப்படும்.” என்று கால அட்டவணையோடு, “உபயோகித்துக் கொள்ளுங்கள் இதை.” என்று பதிவிட்டிருந்தப் பதிவிற்குக் கீழ், பலர் பலரது கருத்தைக் கொட்டியிருந்தனர்.
“இந்த தாயா** அரசு இன்னும் என்னென்னத்தான் நம்மலச் செய்யப் போதோ. ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்த எவனும் இவனுக்கு ஒட்டு போட மாட்டான். போட்டவெ அத்தன பேரும் மகனுங்க தே.” என்றிருக்க, அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அதே ஆபாச வார்த்தைகளின் சாடல்கள் அதில் நிறைந்திருந்தன. அதையும் கடந்து போக முடியாது, யூட்யூப்பிற்குள் நுழைந்தாள்.
இதில், “நான் எம்ஃப்ரெண்ட போட மவன்னு திட்டுவேன். அவனுக்குத் தெரியும் நான் அவனோட அம்மாவ திட்டலன்னு. உன்னைய மாதிரி ஆளுக்குத் தான் அது கெட்ட வார்த்தையாத் தெரியும்.” என்று உணர்ச்சி பொங்க பேசி கொண்டிருந்தான் நாயகன். அந்தச் சினிமா வசனத்தைப் பார்த்து மொத்தமாக மூடி வைத்துவிட்டாள்.
ஃபோனை மட்டும் தான் அவளால் அணைக்க முடிந்தது. கொதிக்கும் உள்ளத்தை அணைக்கவே முடியவில்லை.
என்ன சொல்ல வருகிறான் இந்தப் படத்தில்? அவையெல்லாம் கெட்ட வார்த்தைகள் அல்ல. சாதாரண வார்த்தைகள் தான் என்று கடந்து போக வேண்டுமா?
எப்போதிருந்து கெட்ட வார்த்தை அனைத்தும் சாதாரண வார்த்தைகளாக மாறின.
முதலில் கெட்ட வார்த்தைகளுக்குள் ஆபாச வார்த்தைகளுக்கு இடம் கொடுத்தது யார்?
ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், கோபம் வரும் போது திட்டுவதுண்டு. அதில் கடுமையான வார்த்தைச் சாடல்களும் உண்டு. அந்தச் சாடல்கள் எதிரில் இருப்பர்களைக் காயப்படுத்துவதும் உண்டு.
அதில் ஆபாச வார்த்தைகளையும் வசைபாட உடன் சேர்த்தது தான் கொடுமை.
இதில் வருத்ததிற்கு உரிய செய்தி என்னவென்றால் அந்த ஒட்டு மொத்த ஆபாச வார்த்தைக்களும் பெண்களைப் பற்றியதாகவே இருந்தது! ஏன்?
ஆணைக் குறிக்கும் சொற்களுக்குத் தமிழிலேயே பஞ்சம் வந்து விட்டதோ!
அந்த ஆபாச வார்த்தைகள் வயசு வித்தியாசம் பாலின பாகுபாடு இல்லாது அனைவரும் உபயோகிக்கத் தொடங்கியதால், அதைச் சாதாரணமாகக் கடந்து போ என்று சொல்கின்றனரே!
எப்பொழுது ஆபாச வார்த்தைகள், கெட்ட வார்த்தைகளாகி சகஜமாகப் புழக்கத்திற்கு வந்தன.
முப்பது பேர் கூடியிருக்கும் இடத்தில் ஒருவர், (அந்த ஒருவர் ஆணாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை) உபயோகிப்பதால் அது சரி என்றாகிவிடுமா?
பல லட்சம் பேர் வந்து செல்லும் இணையத்தில் உளவுவதால் சரி என்றாகிவிடுமா?
அல்லது பலகோடி மக்களால் பார்க்கப்பட்டு, ஆட்சியையும் தலையெழுத்தையும் மாற்றி விடும் என்று வர்ணிக்கப்படும் திரைப்படத்தில் வந்து, கைத் தட்டி மக்களால் கொண்டாடப்பட்டால், சரி என்றாகி விடுமா?
வீட்டின் கடைக்குட்டி அவள். தந்தை கூட அவளை அம்மா, பாப்பா என்று தான் அழைப்பார். அவளின் அண்ணன், கோபத்தில் வாடி போடி என்றாலே அடக்க மாட்டாமல் கோபத்தில் குதிப்பவள்.
மரியாதை தரவில்லை என்றாலும் அவமதிக்க கூடாது என்று எண்ணுபவள்.
அப்படிப்பட்டவளுக்கு இது போன்ற வார்த்தைகள் புதிது. அர்த்தங்களும் தெரியாது.
அந்த அர்த்தங்களை அறிந்தது திருமணத்திற்குப் பிறகு தான். அறிந்த போது அதீத அருவருப்புத் தான் வந்தது.
அதை
அறிமுகப்படுத்தியவர் அவளின் மாமனார்.
இன்றும் பல வீடுகளில் கணவன்மார்கள், மனைவிகளை அழைப்பதே இது போன்ற ஆபாச வார்த்தைகளால் தான்.
அவரின் மாமியாரை அதாவது அவரின் மனைவியை, அது போன்ற வார்த்தைகளால் தான் அழைப்பார்.
“ஏய் தண்ணி கொண்டுவாடி ** மவளு.” என்று தான் ஏவுவார்.
அவரும் அதற்கு பல்லைக் காட்டிக் கொண்டு வந்து நிற்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“எப்படி அத்தை? மாமா இப்படி அசிங்கமா பேசுறாரு. நீங்களும் சிரிக்கிறீங்க? கோபம் வரல?” என்று பொறுக்காது திருமணமானப் புதிதிலேயே கேட்டு விட்டாள்.
ஆனால் அவரோ, “எதுக்குக் கோபப்படணும். அவரு ஆசையாக் கூப்பிடுறாரும்மா. அதப் போய் ஏன் அப்படி நினைக்கிற!” என்று சொல்லி விட்டுச் சென்றார்.
எப்படி ஆபாச வார்த்தைகள் ஆசை வார்த்தைகளாகிப் போனது. அந்தரங்கமாக அல்லாது அனைவர் முன்னிலையில் இப்படித்தான் ஆசையாகக் கொஞ்சிக் கொள்வார்களா? என்று வினா எழுப்பியது உள்ளம்.
சென்று கணவனிடம் புலம்பினாள். வழக்கமாக அனைவரிடமிருந்தும் வரும் வசனம் தான்.
“உன்னைய யாரும் அப்படிச் சொல்லலேல. கம்முன்னு இரு.” என்று அலட்சியமாகச் சொன்னவனிடம்,
“என்னை மட்டும் அந்த மாதிரி செல்லமாக் கூப்பிட்டா… கடைசி வரைக்கும் கால்ல விழுந்து கூப்பிட்டாலும் குடும்பம் நடத்த வரமாட்டேன். ஜாக்கிரதை.” என்று எச்சரித்தாள்.
அதையும் மீறி ஒன்றிரண்டு முறை அப்படி ஏசினான் என்று தாய் வீட்டிற்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.
கஷ்டப்பட்டு சமாதானம் செய்து அழைத்து வந்திருந்தான்.
தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பான வேலி இருக்க, அதில் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு உலகம் இது தான் என்று காட்டுவது போல் அமைந்தது அவளின் தனிக்குடித்தனம்.
இரு குழந்தை என்று ஆனபின் மாமியாரின் செயல்களில் வெறுப்பு கொண்டவள், தனியாக வந்தே தீரவேண்டும் என்று சண்டையிட்டு தனிக்குடித்தனம் சென்றாள்.
மாமியாரின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு காம்பவுண்ட் வீட்டில் குடியேறினர்.
விடாது கருப்பு போல் அந்த வார்த்தைகள் அவளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன.
அங்கும் ஒரு கணவன் மனைவியை அப்படித்தான் செல்லாம அழைக்க, அவரும் விளக்கமாற்றால் அடிக்க என நித்தமும் காதுகளில் அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன. இதில் கொடுமை அந்த மனைவியும் அதே வார்த்தைகளைப் பிரயோகிப்பது தான்.
“வேற நல்ல ஏரியால வீடு பாக்கலாம்லங்க?” என்றதற்கு,
“அம்மா அப்பா பக்கத்துல இருக்குறது தான் நல்லது. கூட இருக்க நீ ஒத்துக்கல. சண்ட போட்டு வந்தேல. அனுபவி.” என்பது போல் பேசினான்.
அவனே ஒரு நாள், “என்னடி இது? இப்படிச் சண்ட போட்டுக்கிதுங்க. இதப்பாத்து வளர்ற நம்ம பிள்ளைங்க கொடுமேடி.” என்று புலம்பினான்.
காரணம் அவர்களின் நான்கு வயது மகன் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டும், தன் உடன்பிறப்பை அது போல் திட்டியும் வைத்தது.
அவனை ஏற இறங்க பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
பின் வந்த நாள்கள் காலத்தால் குடிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன் அவளின் வீட்டிற்கு அருகில் இருந்த ஃபோர்ஷனுக்கு ஒரு குடி வாடகைக்கு வந்தது. நடுத்தர வயது கணவன், மனைவி, கல்லூரி படிக்கும் மகள். மூவர் மட்டுமே.
சரியாக எட்டு மணி இருக்கும்.
இன்னும் வீடு வந்து சேரவில்லை பாபு.
கதவைச் சாத்தி விட்டு, பிள்ளைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தவளின் காதில் அந்த வார்த்தைகள்.
அதுவும் வெகு அருகாமையில் கேட்கவும், நம் வீட்டு வாசலில் இருந்து தான் யாரோ கத்துகின்றனர் என்று, கதவைத் திறந்து, தலை மட்டும் வெளியே நீட்டி இடப் புறம் பார்க்க,
“வாடி எம் மவளே.” என்ற வார்த்தை வலப் புறம் இருந்து வந்தது.
அந்த வார்த்தையில் உடல் விறைந்துப் போக, யாரோ யாரையோ திட்டுகின்றனர் என்று நினைத்து, யார் என்று திரும்பிக் கூடப் பார்க்காது கதவை ஓங்கிச் சாத்திப் பூட்டிக் கொண்டாள்.
ஆனால், “கதவ ஏன்டி பூட்டுற . உன்னிய….” என வரிசையாக வந்ததும். தன்னைத் தானோ என்று அதிர்ந்து போனவள், உடனடியாக கீழே இருக்கும் வீட்டு உரிமையாளருக்கு ஃபோன் செய்து,
“ம்மா… எவனோ குடிகாரெ நம்ம காம்பவுண்ட்க்குள்ள வந்திட்டான் போலம்மா. எங்க வீட்டு வாசல்ல நின்னு அசிங்கசிங்கமா திட்டீட்டு இருக்கான். எனக்குப் பயம்மா இருக்கும்மா!” என்று அழ,
“யாரு டா அது?…” என்று வெங்கலத் தொண்டையிலிருந்து கணீரென்ற குரலில் ஹவுஸ் ஓனரின் மனைவி தமிழரசி கத்தியது, வீட்டிற்குள் இருக்கும் அவளுக்கு நன்கு கேட்டது.
அவர் வெளியே வந்து விட்டார் என்ற தைரியத்தில், “என்ன நடந்தாலும் வெளில எட்டிப் பாக்காதீங்க. கதவப் பூட்டிக்கங்க.” என்று இரு பிள்ளைகளுக்கும் அறிவுறுத்தி விட்டு, வெளியே சென்றாள்.
யாருமே இல்லை. வீட்டு உரிமையாளரின் கணவனான முதியவர் முனியாண்டி மேலே வந்தார்.
“யாரும்மா அது?” என்று இவளிடம் வினவ,
“தெரியலப்பா… ஆனா ஜன்னல் பக்கத்துல இருந்து குரல் கேட்டதுப்பா.” என்றபோது நடுங்கியது குரல்.
அவரும் சுற்றம் பார்த்து விட்டு, அவளின் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்ட, அந்தக் கணவன் சுந்தரம் வெளியே வந்தான்.
முழுப் போதை…
“நான் தான் ண்ணே… வீட்டுல பிரச்சனை… மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதான் கத்திட்டேன்.” என்க, முனியாண்டி அவரை எச்சரித்து விட்டு அனுப்பினார்.
“இது குடும்பம் இருக்குற இடம். பொம்பளைங்க, வயசுப் பிள்ளைங்க எல்லாம் இருக்கு. குடிச்சிட்டு வர்றதா இருந்தா வீட்டைக் காலி பண்ணிடு.” என்று விட்டுச் சென்றார்.
பிரச்சினை முடிந்தது என்று அவரவர் வீட்டிற்குள் சென்றுவிட, ஸ்ருதிக்குத் தான் நடுக்கம் குறையவே இல்லை.
‘நான் தான் அது.’ என்று போதையிலும் சொன்னவன், அந்த வார்த்தைகளைப் போதையில் ஆள் அடையாளம் தெரியாது உலறவில்லை. தெரிந்தே தான் பேசியிருக்கிறான், என்றது அவளின் மனம்.
காதும் உடலும் கூசி, கண்ணீரைக் கொட்டித் தீர்க்க, இரு பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தன் நடுக்கத்தைக் குறைத்தாள்.
குழந்தைகள் உறங்கி விட்டன.
சற்று நேரத்தில் எல்லாம் பாபுவும் வந்து சேர, அழுது கரைந்தாள் ஸ்ருதி.
“உங்கம்மாவ விட்டுத் தனியா உங்களக் கூட்டீட்டு வந்திட்டேன்ல. எனக்கு இது தேவை தான். நான்… அந்த மாதிரி மவ தான். அவெ என்னென்ன சொன்னானு தெரியுமா?” என்று சுந்தரம் கூறியதை அச்சுப் பிசகாமல் பேசிக் காட்டிப் புலம்பி அழ மட்டும் தான் முடிந்தது அவளால்.
அவனும் இந்நேரம், தான் சென்று பேசுவது பிரச்சினையை வளர்க்கும் என்று அமைதியாகி விட, நெஞ்சு பொறுக்கவில்லை அவளுக்கு.
இரவு முழுவதும், தன்னை நோக்கி வந்த அம்பாய் அதைப் பாவித்து அழுது அழுது கரைந்தாள்.
“குடிகாரென் பேச்சு. அதுக்கு எதுக்கு டி இப்படி முக்கியத்துவம் குடுத்து அழற. பைத்தியக்காரென் அவெ.” என்று சமாதானம் சொன்னான் பாபு.
“குடிச்சா… யாரனாலும் என்னன்னாலும் பேசச் சொல்லுமா!. அந்தாளு யாரு என்னைப் பேச? போதைலன்னாலும் நான் அதைக் கேட்டுட்டு இருக்கணுமா? நாளைக்கி வீட்டுக்குள்ள வந்து நிப்பான். அதே குடிகாரன்னு கைக் கட்டீட்டு சும்மா இருக்கணுமா?” என்றவளின் பேச்சு நியாயம் தான்.
அதனால் வீட்டு உரிமையாளரிடம் சென்று, இத்தனை ஆண்டுகளாக இல்லாது இப்பொழுது இந்தப் பிரச்சினை வந்துள்ளது. ஏன் இது போன்ற ஆள்களுக்கு வாடகைக்கு விடுகிறீர்கள்? என்றும், வாடகைக்கு விடும் ஆள்களைப் பார்த்து விடுங்கள் என்றும் சொல்ல, அது தமிழரசிக்குக் கோபத்தைத் தந்தது.
“நான் யார வேண்ணாலும் வைப்பேன். அதக் கேக்க நீ யாரு? உங்கிட்ட அனுமதி கேட்டுட்டுத் தான் வைக்கணுமா?” என்று அவர் கத்த, பாபுவும் கத்த, இரவு அவளிடம் சொன்ன வார்த்தையை முனியாண்டி அவனிடம் கூறினார்.
“எதோ குடி போதைல பண்ணிட்டாப்பா. இனி பண்ண மாட்டான்.” என்க,
“ஐயா எல்லாரும் தான் குடிக்கிறாங்க. இந்தக் காலத்துல குடிக்காத ஆம்பளையே கிடையாது. அப்படிக் குடிச்சாச் சத்தம் போடாம வீட்டுக்குள்ள போய்டணும். வாசல்ல நின்னு அசிங்கமாப் பேசுறதெல்லாம் தப்புய்யா. நாளைக்கி நானும் குடிச்சிட்டு வந்து எல்லார் வீட்டுக் கதவையும் தட்டுனாச் சும்மா இருப்பீங்களா?” என்று சத்தமிட்டு விட்டுச் சென்றான்.
அதைக் கேட்டுக் கொண்டே இருந்தவள், பகல் வேளையில் சுந்தரத்தின் மனைவி சாந்தி வேலைக்குச் செல்லும் போது, “அக்கா நேத்து நடந்தது உங்களுக்கு தெரியுமா?” என்று வந்து நின்றாள் அவரின் முன்.
“என்னப்பா ஆச்சி? நான் நேத்து லேட்டாத்தான் வந்தேன்.” என்றார் ஏதும் அறியாதது போல்.
அதுவே அவளுக்குச் சற்று கடுப்பாக இருந்தது. இருந்தும் அதை மறைத்தவள், நேற்று சுந்தரம் பேசியதை மறைமுகமாகக் கூறி, “நான் இந்த காம்பவுண்ட் வீட்டுல அஞ்சி வர்ஷமா இருக்கேன். இதுவரை எந்த ஆம்பளையும் என்னை நிமிந்து கூட பாக்காம மரியாத குடுத்து கடந்து போய்டுவாங்க. நேத்து உங்க வீட்டுக்காரர் பேசுனாது தப்பு. அடுத்து இந்த மாதிரி நடந்தா நான் போலீஸ்க்கு போவேங்கா.” என்று சற்று அழுத்தமாக, மிரட்டல் தோணியில்.
‘நான் சொல்லி வைக்கிறேன்ப்பா. இனி வீட்டு வாசல்ல வந்து அந்த மாதிரி அசிங்கமா கத்த மாட்டாரு.’ என்று கூறுவார் என ஸ்ருதி எதிர் பார்த்து நிற்க,
“அப்படியாப்பா சொன்னாரு!!… அவரு உன்னை ஒன்னும் சொல்லிருக்க மாட்டாருப்பா. பொதுவா சொல்லிருப்பாரு.”
“எது! பொதுவா இந்த மாதிரி அசிங்கமா பேசுவாங்களா?”
“இல்லப்பா… எம்புருஷங்கிறதுக்காகச் சொல்லல, நீயே சொல்லு அவர்ட்ட, ஏன் ண்ணே அப்படிப் பேசுனீங்கன்னு கேளு. எதுக்குண்ணே தண்ணியடிச்சிட்டு வந்து இப்படி பேசுறீங்கன்னு அவர்கிட்டயே உரிமையா கேளு.” என்றதும் ஸ்ருதிக்கு விருமுக்தி அடித்தது.
என்ன நான் அவனிடம் பேச வேண்டுமா!. அதுவும் அண்ணா என்று உரிமையுடன் பேச வேண்டுமா!. பொதுவாகவே பீப் சத்தத்துடன் பேச வேண்டியதைத் தான் பேசுவானா அவன். அவனிடம் சென்று விளக்கம் கேட்க வேண்டுமா! என்று உள்ளம் கனலாய் எரிய, சாந்தியை அருவருப்புடன் பார்த்தபடி நகர்ந்து சென்றாள் ஸ்ருதி.
பாபுவிடம் சொல்லிச் சொல்லி அழுதாள். பலன் தான் இல்லை.
கணவனின் பேச்சிற்குச் சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டு வரும் மனைவியைப் பார்க்கையில் ஆத்திரம் தான் வந்தது.
ஆனாலும் எதுவும் செய்ய முடியாதே. வாடையை வீடு என்று அண்டி வாழும் போது சிலவற்றைப் பொருத்து தான் ஆகவேண்டும்.
அன்றிலிருந்து கண்டும் காணாதது போல் அந்தக் குடும்பத்தையே விலகிச் சென்றாள்.
இரு வீடுகளும் பகையாளி போல் முறைத்துக் கொண்டு கடந்து சென்றனர்.
மேலும் சில நாள்கள் கடந்திருக்கும்.
இரவு நேரம் தான்.
இம்முறை ஸ்ருதியின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
பாபு தான் வந்திருக்கிறான் என்று எண்ணிக் கதவைத் திறக்க,
அவன் தான் சுந்தரம். அலட்சியப் பாவனையுடன் அவள் நின்று கொண்டு “என்ன?” என்றாள்.
அதுவும் சுந்தரத்திடம் அல்ல. அவனின் மகளிடம்.
“சத்தம் கேக்குது.” என்றவன் குரலிலேயே போதை வாடை.
பதில் சொல்லாது, “ம்ச்…” என்றபடி கதவை அடைக்கத்தான் நினைத்தாள், ஆனால் அவனோ…
“எதுக்குப் பந்து விளையாடுறான். என்னோடு வீட்டுல சத்தம் கேக்குது. அதெல்லாம் விளையாடக் கூடாது.” என்று வீட்டிற்குள் பந்து விளையாடிய அவளின் மகனைக் குறித்து பேச, ஸ்ருதிக்குக் கோபம் வந்தது.
என் வீட்டிற்குள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது எனக் கட்டளை போட இவன் யார்? என்ற ஆத்திரத்தில் இவள் பேச, அவன் பதிலுக்கு ஆபாசமாய்ப் பேச, சுந்தரத்தின் மகள் தான் இழுத்துச் சென்றாள்.
மனம் வெதும்ப, பாபுவிற்கு அழைத்து, “உங்களக் கட்டீட்டு வந்ததுக்கு இன்னும் எனக்கு என்னென்ன பட்டம் தான் வாங்கிக் குடுக்கப் போறீங்க?” என்று நடந்ததைச் சொல்லிக் கத்த, அவன் வந்ததும் நேராக வீட்டு உரிமையாளரிடம் தான் சென்றான்.
“அன்னைக்கி என்னமோ சொன்னீங்க. நாங்க வச்ச குடி நல்ல குடின்னு. இன்னைக்கி என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியுமா?.” என்க, முனியாண்டி மேலே ஏறி வந்து சுந்தரத்தின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
“என்னப்பா இது? ஓயாம உனக்குப் பஞ்சாயத்து வைக்கணும்? எதுக்கு அந்தப் பிள்ளை வீட்டுக் கதவ தட்டின?” என்க,
“சத்தம் கேட்டதுண்ணே. அவங்க பையன் பந்தத் தூக்கிப் போட்டு விளையாடுற சத்ததுல எங்களால இருக்கவே முடியலண்ணே. அதான்ண்ணே சும்மா சொல்லிருக்காரு. வேற ஒன்னுமில்லை” என்று சாந்தி கணவனுக்காகப் பேசினார்.
“சத்தம் கேட்டா எங்க கிட்ட சொல்ல வேண்டியது தான. நைட் நேரத்துலயா ஒருத்தர் வீட்டுக் கதவ, போதைல தட்டுவாங்களா?” என்றார் தமிழரசி.
“இல்லக்கா அவரு சும்மா சொல்ல மட்டும் தான் செஞ்சாரு…” என்று அவன் பதமாய்த் தான் பேசியதாகவும், ஸ்ருதி தான் அவனை ஆபாச வார்த்தைகளால் ஏசியதாகவும் போதையில் கத்த, பாபு மல்லுக்கு நின்றான்.
சுந்தரம் இன்னும் பயங்கராமான வார்த்தைகளால் பாபுவையும் முனியாண்டியையும் பேச, இரவு பதினோரு மணிக்கு ஊரே அடங்கிய நேரத்தில் பெருங்கூச்சலுடன் சண்டை நடந்தது.
பல நிமிடங்கள் நீடித்தது அது. சுந்தரத்தின் மனைவி அவனின் அக்கா செண்பகத்திற்கு அழைத்தார்.
பாபு வேலை பார்க்கும் அரிசி ஆலையில் வேலைக்கு வரும் செண்பகம், பாபுவை யார் என்று அடையாளம் கண்டு, மன்னிப்பை வேண்டிச் சென்றார்.
அதற்கு மேலும் அந்தச் சண்டை நீடிக்காது முடிவுக்கு வந்தது.
வழக்கம் போல் சுந்தரத்திற்கு எச்சரிக்கை மட்டுமே செய்யப்பட்டது. ஸ்ருதி கிளம்பி தாய் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
பாபு வேறு வீடு பார்த்திருப்பதாகவும், ஜாமான்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலும் தான் திரும்பி வருகிறாள்.
“நீ எல்லாத்தையும் பொட்டில போட்டு எடுத்து வை. நான் டெம்போவ கூட்டீட்டு வர்றேன்.” என்று பேருந்தில் இருந்து இறங்கியவளை பிக்கப் செய்து, காம்பவுண்ட்டில் விட்டு விட்டுச் சென்றான்.
கணத்த மனத்துடன் மாடி ஏறினாள் ஸ்ருதி.
அட்டைப் பெட்டியில் வீட்டுப் பொருள்களை அடுக்கிக் கொண்டிருக்கும் போது, வெளியே சண்டை போடும் சத்தம் கேட்டது.
ஆசையாக விளக்கமாற்றுடன் ஆபாச வார்த்தைகளால் கொஞ்சிக் கொள்ளும், அந்தக் கணவன் மனைவி தான்.
மனைவியைப் பிடித்து அதீத ஆபாச வார்த்தைகளால் கணவன் திட்ட, திருந்தவே திருந்தது இந்தச் சமூகம் என்று நினைத்துக் கொண்டே இருக்கையில், பல பெண்களின் குரல் கேட்டது.
என்னவென்று எட்டிப் பார்க்க, “இந்தாருண்ணே இனி உன் வாசலா இருந்தாலும் இப்படிக் கண்றாவியா பேசாத. அப்படிப் பேசணும்னா வீட்டுக்குள்ளப் போய்ப் பூட்டிக்கிட்டுப் பேசு. உன்னியப் பார்த்து எம்பிள்ளையும் அதப் பேசுது.” என்று அந்தக் கணவனிடம் மற்ற பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அதற்கு அந்தக் கணவனும், சரி சரியென தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தான்.
சின்னச் சிரிப்பு ஸ்ருதியின் இதழில் படர்ந்தது.
ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் இருந்து விலகிச் செல்லலாம். ஆனால் இனி இருக்கப் போகும் இடமும் ஆரோக்கியமற்றதாகவே இருந்தால் என் செய்வது என்று மனம் அவளிடம் கேள்வி எழுப்பாமல் இல்லை.
அதற்கு, “தானும் அது போல் பேச மாட்டேன். தன்னிடமும் அது போல் பேச அனுமதிக்க மாட்டேன்.” என்ற உறுதி மொழியை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு, அந்தப் பெண்களின் கண்டனப் பேச்சு இதமாகத் தான் இருந்தது.
சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் தன்னைப் போன்ற இல்லாள்கள் தங்களைச் சுற்றிக் கேடயம் போல் உறுதியாக, தானும் பேச மாட்டேன்; தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் பேச அனுமதிக்க மாட்டேன் என்றிருந்தாலே பல இல்லங்கள் ஆரோக்கியமானதாக மாறி விடும்.
குடும்பம் தான் சமூகம் என்ற கட்டமைப்பின் செங்கல். அந்தக் குடும்பத்தில் கற்பி
க்கப் படும் பாடமும், சுய ஒழுக்கமும் தான் நல்ல சமூகத்தை உண்டாக்கும்.
எதையும் கடந்து போக வேண்டாம். சின்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றால் கூடப் போதும் தான்.
ஸ்ருதி செய்ததைப் போல்.
முழுமையாக மாறுமா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால் இதையும் கடந்து போகாது சிறு மாற்றத்தை உண்டாகலாம்…
நன்றி…
சுபம்…
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 0 Online
- 1,938 Members