Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 5

1 Posts
1 Users
0 Reactions
111 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

       தடாகத்தின் நடுவில் திடீரென்று தோன்றிய ஆடவனை கண்டு ஏதோ ஆபத்து என்று தங்களை காக்க ஆயுதங்கள் எடுத்து தயாராக, அவர்களை நோக்கி திருப்பியவனை கண்டு அதிர்ந்து எழுந்தாள் ருத்ரா. 

 

      ஆம் கனவு தான். கனவில் அவள் கண்ட அந்த முகம் எங்கோ பார்த்தது போல் இருந்தது. யார்? யார்? என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

 

      ருத்ராவை எழுப்புவதற்காக அவளின் அறைக்கு வந்த மகாதேவி கட்டிலில் யோசனையுடன் அமர்ந்திருக்கும் தன் மகளை கண்டாள்.  

 

    "ஏய் ருத்ரா என்ன யோசனை. எழுந்து கிளம்பு. கலைச்செல்வி கிளம்பி ஹாஸ்டல் சென்று விட்டாள். மணி ஏழு ஆகிவிட்டது பார்" என்றார்.

 

அவர் அவ்வளவு பேசியும் அசையாமல் அமர்ந்திருந்த தன் மகளின் அருகே வந்து அவளை உலுக்கி "ஏ ருத்ரா" என்றார். 

 

ஙே என விழித்த ருத்ரா, சுய நினைவுக்கு வந்து அம்மாவை பார்த்தாள். 

"என்னடி இப்படி முழிக்கிற?" என்ற அம்மாவின் கேள்வியில், தன்னிலை உணர்ந்து, "அம்மா கனவுமா" என்றாள். 

 

கனவு என்றதும் நேற்று போல் ஏதாவது கெட்ட கனவோ என்று பயந்து, "என்ன கனவு ஏதும் கெட்ட கனவா?" என்றார் பதட்டத்துடன். 

 

அம்மாவின் பதட்டத்தை கண்டு, "ஐயோ அம்மா அப்படி எல்லாம் இல்லைமா. கனவுல ஒருத்தரை பார்த்தேன். எங்கோ பார்த்தது போல் இருந்தது. அதான் யோசித்து கொண்டு இருந்தேன்" என்றாள்.

 

நல்ல வேளை என்று பெருமூச்சு விட்டபடி, என்ன கனவு என்று கேட்டார். அவளும் கனவில் கண்டதை கூற, இப்போது யோசிப்பது அவளின் தாயின் முறையானது. 

 

நேற்று போரில் தன்னை கொன்றதாக கனவு கண்டாள். இன்று இப்படி. ஏன் இவளுக்கு இப்படி கனவு வருகிறது என்று யோசித்தாள். 

 

ருத்ரா தன் காலை வேலைகளை முடித்து, ஐஸ்வர்யாவுடன் கல்லூரி கிளம்பினாள். 

 

அவள் கல்லூரி சென்ற பிறகு, தன் அறைக்கு வந்து, கணவனின் முன் தயங்கியவாறே நின்றார் மகாதேவி.  

 

"என்ன மகா என்ன பேசனும் எதுக்கு தயங்குற" என்றார் சதாசிவம்.

 

அவரும் தயங்கியவாறே இல்லைங்க நேற்று நம்ம ருத்ரா கனவு கண்டு பயந்து எழுந்தானு சொன்னேன்ல அதே போல இன்றும் கனவு கண்டு குழம்பி உட்கார்ந்து இருந்தாள் என்று நேற்றைய கனவையும்,  இன்றைய கனவையும் பற்றி கூறி, இன்று காலையில் நடந்ததை பற்றி கூறினார்.

 

இதில் என்னம்மா இருக்கு. கனவு தானே. ஏதோ பார்த்த முகம் போல இருந்துருக்கும். அதான் யோசித்து கொண்டு இருந்துருப்பா. நீ ஏன் அதை நினைத்து கவலை படுற என்றார்.

 

ஏங்க நீங்க மறந்துட்டீங்களா அவள் பிறந்ததும் ஜாதகம் எழுதினோம்ல. அப்ப ஜோதிடர் சொன்னதை என்றார் சோகமாக.

 

சதாசிவத்திற்கு ஜோதிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஆனால் மகாதேவி ஜோதிடத்தை மிகவும் நம்புவார். ஆகையால் ருத்ரா பிறந்ததும் ஜாதகம் எழுத சதாசிவத்தினை வற்புறுத்தி வந்தார். 

 

ஆனால் அவர் காலம் கடத்திக் கொண்டே இருக்க, முதல் பிறந்தநாளுக்கு முந்தி கண்டிப்பாக ஜாதகம் எழுத வேண்டும் என்று பிடிவாதமாக கூறிவிட்டார் மகாதேவி. அப்போது அவர்கள் சேலத்தில் இருந்தார்கள்.  சரி என்று சேலத்தில் மிக பிரபலமான ஒரு ஜோதிடரிடம் சென்றார்கள். 

 

அவர் ருத்ராவின் பிறந்த தேதி நேரம் கேட்டு ஜாதகம் கணித்து கூறினார். இந்த குழந்தை வளர வளர இவர்கள் குடும்ப செல்வ நிலையும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் மேலும் இவர்கள் இருவரது குடும்பமும் இவளின் இருபத்தியோராம் வயதில் ஒன்று சேரும் என்று ( இவர்கள் திருமணம் காதல் திருமணம். இருவரும் அவரவர் குடும்பத்தை பிரிந்து தான் உள்ளனர் ) இன்னும் பல நல்ல விசயங்களை  கூறிக் கொண்டே வந்தவர் திடீரென்று மௌனமானார். 

 

பின்னர் ஒரு ஜோதிடரின் கடமை நல்லது கெட்டது எது அவர்கள் அறிந்து கொண்டாலும் அவற்றை கூறி விட வேண்டும். இந்த குழந்தையின் ஜாதகத்தில் அவளின் இருபத்தியோராம் வயதில் ஒரு கண்டம் இருக்கிறது. 

 

அதில் இவள் உயிர் பிழைத்தால் அதன் பிறகு அவளின் வாழ்வில் என்றும் ஏறு முகம் தான் என்று கூற மகாதேவி மிகவும் கலங்கிவிட்டார். 

 

சதாசிவத்திற்கு ஜாதகத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் ஒரு சிறிய புன்னகையுடன் ஜாதகத்தை கையில் வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்தார். 

 

ஆனால் மகாதேவி ஜோதிடரிடம் இதற்கு பரிகாரம் ஏதும் உண்டா என்று கேட்டார். 

 

பரிகாரம் உண்மை தான். குழந்தையை எந்த ஒரு சிறிய விசயம் என்றாலும் உங்களிடம் மறைக்காமல் இருக்க பழக்குங்கள். இருபதாவது வயதில் இன்னும் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் இருபத்தியோராம் வயதுக்கு முன்னர் திருமணம் செய்யாதீர்கள். 

 

ஏன் என்றால் இப்பெண் அவளது இருபத்தோர் வயது வரை கன்னிப் பெண்ணாக இருந்தால் மட்டுமே இவளின் தலை தப்பும் என்று கூறினார். 

 

சதாசிவத்தின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டு இருந்தது. அவர் முடித்ததும், கோவமாக தன் மனைவியிடம் கிளம்பலாம் என்று  சொல்லிவிட்டு, ஜோதிடரை கண்டு மிகவும் நன்றி என்று கூறிவிட்டு கிளம்பினார். 

 

கோபத்தை உணர்ந்த மகாதேவி கிளம்ப முயல, அவரை கண்ட ஜோதிடர், விதி வலியது. கவனமாக இருங்கள் என்று கூறினார். 

 

இவை அனைத்தையும் ஞாபக படுத்திய மகாதேவி, தன் கணவனை கவலையாக பார்த்தார். 

 

அவரும் ஏதோ யோசனையில் இருக்க, "என்னங்க நீங்களே இவ்வளவு யோசிக்கிறீர்களே?" என்றார் சோகமாக. 

 

இல்லை மகா நம் மகள் இதுவரை நம்மிடம் எதையும் மறைத்ததில்லை ஆகையால் எனக்கு நீ கவலைப்படுவது வீண் என்றே தோன்றுகிறது என்றார். 

 

ஆனால் ஜோதிடரோ இருபது  வயதிலிருந்தே மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார் அல்லவா. சரியாக இருபதாவது வயது பிறந்த நாளில் அவளுக்கும் கனவு வருகிறது. அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது என்றார். 

 

சரி நாம் யாருக்கும் எந்த தீங்கும் இதுவரை நமக்குத் தெரிந்து செய்ததில்லை. ஆகையால் நம் பிள்ளை நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம். எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதே. 

 

நேற்று அவளின் பிறந்தநாள் கொண்டாட நீ விடுப்பு எடுத்து இருந்தால் இன்று நீ பள்ளி செல்ல வேண்டும் என்றாயே? நீ கிளம்பு  என்று கூறி அவரும் அலுவலகம் கிளம்பி சென்றார்.

 

ஐஸ்வர்யா உடன் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு வந்து ருத்ராவிற்கு,  அப்பொழுதுதான் நேற்றைய நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஞாபகத்திற்கு வந்தது. 'அச்சோ அந்த வாத்தி இன்னைக்கும் நம்மகிட்ட எதுனா கலாட்டா பண்ணுவாரா?" என்று யோசனையுடனே அமர்ந்திருந்தாள். 

 

வண்டி நின்றும் இன்னும் இறங்காமல் இருக்கும் ருத்ராவை ஐஸ்வர்யா, "ருத்ரா ருத்ரா" என்று அவளை வண்டியோடு உலுக்கி, "என்னடி இப்படி உட்கார்ந்து கொண்டே தூங்குற, இறங்குடி" என்றாள். 

 

ருத்ரா இதுநாள் வரை தன் பெற்றோரிடம் சிறு விசயத்தை கூட மறைத்தது இல்லை. ஆனால் நேற்று நடந்த அவ்வளவு பெரிய விசயத்தை எப்படி மறந்தாள்.

 

இதை தான் விதி என்பார்களோ?.

 

தொடரும்....

 

- அருள்மொழி மணவாளன்...

 


 
Posted : November 20, 2025 11:10 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved