Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 6

1 Posts
1 Users
0 Reactions
103 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

      உட்கார்ந்து கொண்டே தூங்காமல் இறங்கு ருத்ரா என்ற ஐஸ்வர்யாவின் குரலில் வண்டியில் இருந்து இறங்கிய ருத்ரா, யோசித்தவாறே நடந்தாள். 

 

      வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் வேகமாக சென்ற ஐஸ்வர்யா, ருத்ராவை பிடித்து இழுத்து, ஏ என்னடி என்னை விட்டுட்டு  நடக்குற என்று கேட்க, அதன் பிறகே தன்னிலைக்கு வந்த ருத்ரா, தான் கல்லூரிக்கு வந்திருப்பதை உணர்ந்தாள். 

 

      திருதிருவென முழித்துக் கொண்டு ஈ என்று அசட்டு சிரிப்பு சிரித்து, "ஒன்னும் இல்லைடி சும்மா சீக்கிரம் க்ளாஸ்க்கு போகலாம்னு தான்" என்றாள். 

 

    "ம்ம்ம் ஏதோ மார்க்கமாக தான் இருக்க" என்று தலை ஆட்டி கூறியவாறு வகுப்பை நோக்கி நடந்தாள். 

 

       அங்கு அவளுக்காக கலைச்செல்வி காத்திருக்க, இருவரும் அவளுடன் பேசி ஐக்கியமாகினர். 

 

     இன்று முதல் வகுப்பே கம்யூட்டர் சயின்ஸ். என்ன நடக்குமோ என்று ஒரு சிறிய பதட்டத்துடனே இருந்தாள் ருத்ரா. 

 

      மணி அடித்ததும் குட் மார்னிங் என்றவாறே உள்ளே நுழைந்தான் தமிழ் வேந்தன். அனைவரும் குட்மார்னிங் சார் என்று கூறி அமர்ந்தனர்.

 

அனைவரும் அமர்ந்ததும் நேற்றைய பாடத்தில் எதுவும் சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டு விளக்கிவிட்டு இன்றைய பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டான். 

 

அவனை பார்க்க கூடாது என்ற முடிவுடன் தலையை நிமிர்த்தாமல் புத்தகத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள் ருத்ரா. 

 

ஐந்து நிமிடத்தில் புரிந்ததா என்று கேள்வி கேட்க தொடங்கினான். முதல் கேள்வியே ருத்ராவிடம் தான். 

 

ப்பே ப்பே என்று ஏதோ சொல்லிவிட்டு அமர்ந்தாள். பின் பாடம் எடுக்க ஆரம்பித்து இடையிடையே கேள்வியும் கேட்டு விளக்கம் கொடுத்தாலும், அவனின் கேள்விகள் ருத்ராவிடம் மட்டுமே இருந்தது. 

 

எப்போது இந்த வகுப்பு முடியும் என்று மனதினுள் புலம்ப ஆரம்பித்தாள் ருத்ரா. அவனை பார்க்க கூடாது என்று அவள் நினைத்தாலும், அவனின் பார்வை முழுவதும் அவளின் மேலே இருந்ததில் கொஞ்சம் எரிச்சல் அடைந்தாள். 

 

ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக மணி அடித்ததும் நிம்மதி மூச்சு விட,  சிறிதும் நிறுத்தாமல் பாடத்தை தொடர்ந்தான் தமிழ் வேந்தன். 

 

ருத்ரா பக்கத்தில் இருந்த பெண்ணிடம், "என்னடி இவர் க்ளாஸ் முடிக்க மாட்டுறார்" என்க, அவளும், "தெரியலையேடி" என்றாள். இவர்களின் பேச்சு சத்தம் வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்த, 

 

அவன் டேபிளை தட்டி என்ன சத்தம் என்று ருத்ரா பக்கம் பார்த்து கேட்க, அவள் ஏன் நிமிர்ந்து பார்த்தாள். 

 

சிறிது நேரம் வகுப்பு அமைதியாகி விட, அவனே தொடர்ந்தான். இன்று செகன்ட் ஹவர் க்ளாஸும் என்னோடது தான். சோ லிசன், என்று பாடத்தை தொடர்ந்தான். 

 

ச்சே இனி இவனிடம் இருந்து தப்பிக்க முடியாது. நம்மிடம் தான் திருப்ப திரும்ப கேள்வி கேட்பான். ஒழுங்கா கவனிப்போம் என்று பாடத்தை கவனித்தாள். 

 

அவள் நினைத்தது போலவே தமிழ் வேந்தனும் அவளிடமே கேள்விகள் கேட்டுக் கொண்டே தான் இருந்தான். 

 

அவன் கேள்வி கேட்டாலே வகுப்பு முழுவதும் ருத்ராவை பார்க்கும். அந்த அளவுக்கு அவனின் அன்றைய செயல் இருந்தது. 

 

ஒரு வழியாக அந்த வகுப்பும் முடிய, அவன் வகுப்பில் இருந்து வெளியேறியதும் தான் நிம்மதி அடைந்தாள் ருத்ரா. 

 

"ஸ்ஸப்பா" என்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள். வகுப்பில் எல்லோரும் அவளை சுத்து போட்டனர். 

 

ஏன் உன்னிடம் மட்டும் தமிழ் சார் கேள்வி கேட்குறார்?. நீ அவருக்கு தெரிந்தவளா? உங்க சொந்தமா? என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கேள்வியா கேட்டனர். 

 

ஐயோ எல்லோரும் சும்மா இருக்கீங்களா என்று கோவமாக கத்தியே விட்டாள் ருத்ரா. 

 

ஐஸ்வர்யாவும் கலைச்செல்வியும் தான் அனைவரையும் சமாளித்து அனுப்பினர். ருத்ராவை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே நகர்ந்தார்கள். 

 

அவளுக்கு தலை வலியே வந்து விட்டது. மேஜையில் தலை கவிழ்ந்து அமர்ந்து விட்டாள். மற்றவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு தோழிகள் இருவரும் ருத்ராவின் அருகில் வந்து அவளை கேன்டின் வருமாறு அழைத்துச் சென்றனர்.  

 

சூடாக டீ வாங்கி அவளுக்கு கொடுத்துவிட்டு, அன்பரசுக்கு கால் செய்தாள் கலைச்செல்வி. 

 

அவன் வந்ததும் நடந்தவற்றை கூற அவன் அமைதியாக ருத்ராவிடம் அந்த போட்டோ அனைத்தும் உண்மைதான் என்றான். 

 

அப்படி என்றால்  என்னை அவருக்கு வெகு காலம் முன்பே தெரிந்து இருக்கிறது. அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை தொடந்து கொண்டு இருக்கிறார். 

 

அது என்ன என்று அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றாள் ருத்ரா.

 

"யாரிடம் என்ன கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கேட்டவாறே அன்பரசுவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் தமிழ் வேந்தன். 

 

அவனின் திடீர் வருகையை சற்றும் எதிர்பார்க்காத நண்பர் குழு அதிர்ந்து திருதிருவென முழித்தனர். 

 

இதற்கு மேல் பொறுமை இல்லாத ருத்ரா, "உங்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்" என்று சத்தமாக பேசினாள். 

 

உடனே தமிழ்வேந்தன் அன்பரசுவை பார்த்து, "என்ன போட்டோ எல்லாம் செக் பண்ணியாச்சா? அது உண்மைன்னு தெரிஞ்சிருச்சா?" என்று நமட்டு சிரிப்பு சிரித்தவாறு கேட்டான்‌.  

 

"அப்புறம் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க" என்று ருத்ராவை பார்க்க, அவளோ "அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் எதற்காக என்னை தொடர்கிறீர்கள் என்று" என்றாள். 

 

அவன் எந்த பதிலும் கூறாமல் டீயை ரசித்து குடித்துக் கொண்டிருந்தான். அவனின் அமைதியில் வெறுப்படைந்த ருத்ரா,  "உங்கள் அப்பாவையோ அம்மாவையோ இல்லை குடும்பத்தில் யாரையாவது எங்கள் அப்பா கொன்று விட்டதாக உங்களிடம் யாரும் சொல்லி இருக்கிறார்களா?. அதனால் என்னை காதலித்து ஏமாற்றி என் அப்பாவை பழி வாங்குவதற்காக வந்திருக்கிறீர்களா?" என்றாள்‌. 

 

தொடர்ந்து அவள், "அப்படி யாராவது உங்களிடம் சொல்லி இருந்தால், தயவு செய்து அதை நம்பாதீர்கள். என் அப்பா யாருக்கும் எந்த தீங்கும் இதுவரை செய்தது இல்லை. 

 

ஆகையால் உங்களிடம் சொல்லியவர் பொய் சொல்லி இருக்கிறார்கள். தயவுசெய்து என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள்" என்று அவன் முன் கைகூப்பி நின்றாள். 

 

அவளின் கூற்றில் தோழிகள் இருவரும் அவளை வகுப்பில் அவர் கேள்வி கேட்டதில் கொஞ்சம் மூளை குழம்பி விட்டதா என்று மிரண்டு பார்த்தனர். அவள் கேட்ட விதத்தில் அன்பரசுக்கு சிரிப்பே வந்துவிட கையை தலைக்கு முட்டு கொடுப்பது போல வாயை மூடி சிரிப்பை மறைந்தான்.

 

அவளின் செய்கையில் சுற்றி இருந்தவர்கள் அவர்களை காண, "முதலில் உட்கார்" என்று அதட்டினான். 

 

அவனின் அதட்டலில் அமைதியாக அமர்ந்த ருத்ராவை பார்த்து உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவாறு, "நிறைய சினிமா பார்ப்பாயோ நல்ல கதை சொல்கின்றாய்" என்றான்.

 

தொடரும்....

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : November 21, 2025 10:46 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved